Popular Posts

Wednesday, 23 March 2016

தலித்தியம் கற்பிப்பது தான் என்ன?



"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், 'அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்", எனக் கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று சொன்னார் தோழர் பகத்சிங்

 
திருத்தங்களுடன் நூல்வடிவில் வந்துவிட்டது 
 
தலித்தியம்

 

  1. றிமுகம்!!!

 நூல் வடிவில் வந்துள்ளது. - சீர்திருத்தமா மார்க்சியமா என்ற தலைப்பில் திருத்திய உள்ளடக்கத்துடன் வந்துள்ளது.

சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சிக்கு அப்பால் பால், சாதி, மத, பிரதேச, நிற அடையாளங்களைக் கொண்ட அரசியல் போக்கு 1980இன் பின்னர் வீரியமாக வளர்ச்சியடைந்தது. சியோனிச, சோவனிச, நிறவெறி என்பன அடையாள அரசியலுக்கு முன்னரே இருந்துள்ள. அடையாள அரசியல் என்பது சமூகத்தை மொத்தத்துவமாக அணுகாது குறிப்பானவற்றினை பக்கச் சார்பாக அணுகுவதாக இருந்துள்ளது. இதன் வளர்ச்சிப் போக்கின் பிற்போக்கு அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கின்ற போது சாதிவெறியர்களாகவும், ஆணாதிக்கவாதிகளாகவும், மதச் சார்பானவர்களாகவும் முத்திரை குத்துவதை கவனிக்கலாம். ஒரு வகையில் அரசியலில் சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கப்படுகின்றனர். இதனால் பொதுவுடமைக் கட்சிகள் கூட தமது சொந்தக் கொள்கையை விட்டு அடையாள அரசியல் அமைப்புக்குள் சென்று கலந்து விடுகின்றன. அடையாள அரசியல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினை அறிவதன் ஊடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

கட்டற்ற சுதந்திரம் என தாராளவாதப் போக்கும், தலித்தியம், பெண்ணியம் (வர்க்கமற்ற பெண்கள்) பண்பாட்டு நீலப்புரட்சி, கட்டமைப்புவாதம் எனவும் பின்னவீனத்துவம் என்பது நுண்முரணை வெளிப்படுத்துகின்றது என்றும், மார்க்சியத்தை பெருங்கதையாடல் என்று ஒதுக்கிய போக்கு 1980களில் முன்னிறுத்தி வளர்ந்தது. இந்தப் போக்கு மூலம் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் தலித்து படைப்பாளிகளாலே தான் முழுமையாக வலியை கொண்டுவர முடியும் என்று கற்பிக்கப்பட்டது. வர்க்கமற்ற இலக்கியம், மேடைகளை பகிர்ந்து கொள்வது என்பது வளர்ந்து வந்தது. ஆனால் 1990 முன்னர் வர்க்க முகாம்களாக இருந்தே படைப்புகள் வந்தன. நுண்முரண்பாடுகளை பின்னவீனத்துவத்திற்கு முன்னராகவே தோழர் டானியல் படைப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார். பின்னவீனத்துவக் கோட்பாடுகளின் குழம்பல் நிலையை  விஞ்ஞான- பொருளாதார- வர்க்கப் போராட்டத்தில் இருந்தே ஆராய முடியும். எனவே சமூகத்தை ஆய்வு செய்வதற்கான உலகக் கண்ணோட்டத்துடன் திறனாய்முறையும் அவசியமானதாகும்.

 

இந்தியாவில் தலித்தியம் என்றும் இலங்கையில் இரட்டைத் தேசியம் என்றும் அறிமுகமாகின்ற கோட்பாட்டினைப் பற்றிய அறிதலானது சமூக மாற்றத்தை வேண்டுபவர்களுக்கு அவசியமாகின்றது.  இங்கு பின்னவீனத்துவத்தின் பாதிப்பு என்பது  தன்னியல்பு சார்ந்த அரசியல் வழிமுறைகள் வெவ்வேறு பெயர்களில் புகுத்தப்படுகின்றது. இவ்வாறான புதிய கோட்பாடுகள் வெவ்வேறு விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திக் கொள்கின்றன. தலித்தியம் பற்றிய விடயத்தை அறிந்து கொள்ள தமிழகத்தின் வரலாற்றுப் போக்கோடு பொருத்தி நின்று தான் ஆராயவேண்டிள்ளது. ஆனால் தமிழகத்தின் தலித்தியப் போக்குடன் இலங்கையை பொருத்தி விடவும் முடியாது. புலம்பெயர் நாடுகளில் இருந்த புலியெதிர்ப்பாளர்கள்,  இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை உருவாக்கி தமிழக தலித்தியவாதிகளை வைத்து ஆய்வுக் கூட்டங்கள் என நடத்தி வந்தார்கள். இதன் வளர்ச்சியாக தலித்திய செயற்பாட்டாளர்கள் 2009இன் பின்னரான காலத்தில் இலங்கைக்கு அடையாள அரசியலை கொண்டு செல்கின்றனர். ஆனாலும் அவை கருநிலையிலேயே முடங்கியது எனலாம்.

சமூகப் பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன்வைக்கும் போது அப்பிரச்சினையின் மூலக்காரணியை கண்டடைய வேண்டும். மூலகாரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்து அறிந்து, அப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் போது தான் அப்பிரச்சினையை சரியாகக் கையாள முடியும். அதனை விடுத்து மேல் எழுந்த வாரியாக சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு பொதுப்புத்தி கொண்டு ஒரு முடிவுக்கு வருவது என்பது விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகாது. அணுகுமுறை வெறும் உணர்வுக்கு அடிமைப்பட்ட கதம்பமான நிலையினைத் தான்  தோற்றுவிக்கும்.

மனித வாழ்க்கையில் காணப்படுகின்ற  பிரச்சினையை (மொத்தத்துவ அணுகுமுறை holistic approach) மொத்தத்துவ அணுகுறையில் ஆராய்ந்திட வேண்டும். எனினும் இரண்டு பெரும் பிரிவாக பிரித்துப் பார்க்க முடியும். அன்றாட வாழ்வியலில் காணப்படும் சிந்தனையைக் கொண்டு அதாவது எமது சமூக அமைப்பில் காணப்படுகின்ற தன்மைகளைக் கொண்டு அவற்றிற்கு விளக்கம் கொடுக்க முடியும். இதற்கு மாற்றாக விஞ்ஞான ரீதியாக சிந்திக்கின்ற வழிமுறைகள் அறிவுப் பார்வை என்பதாகும். இந்தப் பார்வை என்பது அறிவு வளர்ச்சியின் மையப் புள்ளியாகும்.   புறநிலை சார்ந்த சிந்தனைப் போக்கில் அமைந்த சமூகப் பார்வையே இங்கே கூறப்படுகின்றது.

 

இரண்டு விதமான (அகநிலை- ஆன்மா- சாத்திரம் சம்பிரதாயம், மாற்றாக விஞ்ஞான - புற) சிந்தனையோட்டத்தைக் கொண்ட கேள்விகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த மாறுபாடுகளை இலகுவில் தீர்ப்பதோ அல்லது ஒன்றை ஒன்று மேவுவதோ இலகுவானது அல்ல. அகநிலைச் சிந்தனையானது பரந்த அளவில் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. அகநிலை சார்ந்த சிந்தனை ஆதிக்கத்தில் இருப்பதனால் பல பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடிவதில்லை. மாறாக பிரச்சினையானது வளர்ந்து பேரழிவிற்கே சென்று விடுகின்றது. இதுவே சமூகத்தின் அனைத்து அலகுகளிலும் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.

ஆனால் விஞ்ஞான ரீதியில் எல்லாவற்றையும் அணுகி ஆராய்கின்ற போது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். அவற்றை விடுத்து வெறும் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது என்ற சமூக அடக்கத்திலும். தாம் தமது உறவு அல்லது சாதி என்ற வகுப்புவாதச் சகதிக்குள் எல்லா பிரச்சினைகளையும் அடக்கி விடுவதனால் எந்தப் பிரச்சினைகளும் மறைந்து விடுவதில்லை. பொதுப் புத்தியில் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள் மட்டும் தான் பொது வெளியில் இருக்கின்றார்கள் என்பது இல்லை. மாறாக அரசியல் செயற்பாட்டாளர்களும் முடிந்த முடிவான போக்கு, அகநிலைப் போக்கினுள் மூழ்கி சிதைந்துள்ளதே நிதர்சனமாக இருக்கின்றது. ஏனெனில் இவை விஞ்ஞானப் போக்காக அமைந்து விடுவதில்லை. இந்தப் போக்கை பரந்துபட்ட மக்களிடத்தில் எதிர்பார்ப்பது சிரமமானதே.

 

மார்க்சியம் - லெனினியம் கற்பிக்கும் பொருளாதார, வர்க்கப்போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை போன்று மூன்று அம்சத்தை விளங்கிக் கொள்வதற்கு இடையே புகுத்தப்படும் சிந்தனை மாறுபாடுகள் பற்றிய விரிவான போதனையை ஜேர்மன் சித்தாந்தம்,  டூரிங்குக்கு மறுப்பு, மார்க்சீயத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள், முரண்பாடு பற்றி, நடைமுறைபற்றி போன்ற படைப்புகள் மூலம் மூலவர்கள். ”பொருளுற்பத்திக்கான நடவடிக்கையே மிகவும் அடிப்படையான நடைமுறைச் செயல், அதுதான் அவர்களுடைய பிறநடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயல் என நிரூபித்தனர். இந்தப் பகுதியில் புலனறிவின் ஊடாகப் பெறப்படும் அறிவு என்பது புறநிலையான பொருட்களின் உள்முரண்பாடுகளை விரிவாகவும், படிப்படியாகவும் அறிந்து கொள்வது, அதன் விதிகளையும், அதன் நிகழ்ச்சிப் போக்கிற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான உறவுகளை அறிந்து கொள்வதுமாகும்.  

ஆளும் வர்க்கத்தினாலும், சமூக அமைப்பின் சிந்தனைக் கட்டமைப்பினாலும் போராடுவது பயங்கரவாதம், வீண்வேலை, நமக்கேன் தேவையில்லாத காரியம் என்று கருத்தமைக்கப்பட்டது.   இணைந்து போக வழிநடத்துவம், இன்றைய பொருளியல் வாழ்வை எண்ணி அலையாதே, விண்ணுலக வாழ்வில் அனைத்தும் கிடைக்கும் என்றும், இறையரசு வாழ்வில் நித்திய இளைப்பாறல் கிடைக்கும் என்றும் மதங்களால் போதிக்க முடிகின்றது.  இவ்வாறாக இணக்க அரசியல் போக்கு கற்பிக்கப்படுகின்றது.

 

சனநாயக உரிமை பற்றிய விழிப்பும், விஞ்ஞானமுமே மாற்றீடாகாகும். சமூக வளர்ச்சிப் போக்கில் முன்னைய சிந்தனையில் இருந்து பெற்ற அறிவு முதிர்ச்சியானது நமக்கு கற்றுத் தருகின்றது. மார்க்சியம் மனிதர் தன்னிலையை அறிந்து கொள்ளவும், இந்தச் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் கற்பிக்கின்றது. ஒவ்வொருவரையும் உறுதியான முதுகெலும்பைக் கொண்ட மக்களாக உருவாக்குகின்றது. மற்றைய தத்துவங்கள் மனிதர்களின் மேல் ஏறி சவாரி செய்ய நித்தம் முயற்சிக்கின்றன. இதுவே மற்றைய தத்துவங்களுக்கும் மார்க்சீயத்திற்கும் உள்ள வித்தியாசமாகும்.

பொருள்முதல்வாதம் அனைத்து விதமான கருத்துமுதல்வாத குப்பைகளையும், மதம் கற்பிக்கும் புரட்டுகளையும் எதிர்த்து நிற்கும் ஒரே தத்துவம். மூடநம்பிக்கைளை எதிர்த்து நிற்பது பொருள்முதல்வாதம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மார்க்சியத்தின் தத்துவத்தினை நிரூபிக்கின்றன. இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியுற்ற ண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார்.

இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையே மனித அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன. இவை ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இந்த விஞ்ஞானமே பொருள்முதல்வாதமாகும்.

 

அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்டுள்ள பொருளாதார அமைப்பினை பற்றிய போதிய முன்னறிவு அவசியமானதாகும்.  பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது.

பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை  வெளிக்கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதாக விளக்கினார் என்கின்றார் லெனின்.  பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார்.  பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது.  மூலதனம் இந்த பிணைப்பு வளர்ச்சியுறுவதைக் குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார்.

தொழிலாளிகள் உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது.  மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய்.  உபரி பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சியத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று லெனின் நிரூபித்தார். இதுவே பொருளாதார நிர்ணயவாதம் என்று வாதிடப்படுவதுண்டு.

” ... வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோலின் படி, மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத,  சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றி விடுகிறார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை; ஆனால் மேற்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள்- வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைவுகளும்: வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள். பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட. அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் — வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கில் மீது தாக்கம் செலுத்துகின்றன.” (ப208 மா.ஏ 12) இங்கு ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுக் காட்டும் விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.  வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோலின் படிஎன்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

“இளைனைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நானும் பகுதியளவுக்குப் பொறுப்பாகும். முக்கியமான கொள்கையை மறுத்த எதிரிகளுக்கு எதிராக நாங்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது; இந்த இடைச்செயலில் பங்கெடுக்கின்ற மற்ற கூறுகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதற்கு அவசியமான காலம், இடம் அல்லது சந்தர்ப்பம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கவில்லை.“ (211- 12 மா.ஏ) வரலாற்றுக் கட்டத்தின் செய்யப்படும் ஆய்வில் தவறு செய்யக் கூடாது என்கின்றார். ” பொருளாதாரத் தரப்பின்” முக்கியத்துவத்தை மாத்திரம் பேசப்படுகின்றது.  மூலவர்களின் காலத்தில் இருந்த நிலை என்பது இன்றும் ஏதோ ஒரு முனைகளில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. "இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன;" இங்கு பொருள்முதல்வாதம் (மூன்று தத்துவக்கூறுகள்), மேற்கட்டுமானம் என்பவற்றை விளங்கிக் கொண்டால் மாத்திரமே மார்க்சியத்தை விளங்கிட முடியும். இதை மறுத்து இயங்குபவர்கள் தான் மார்க்சியம் அல்லாதவைகளை மார்க்சியமாக ஒப்பிக்கின்றார்கள்.

.சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே வந்திருக்கின்றது. வர்க்கங்களை உள்ளடக்கியதே சாதியச் சிந்தனையும், அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்புமாகும்.

வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டே தலித்தியம் பற்றி பார்க்கப்படுகின்றது. தலித்தியம் என்பது சாதியை முன்னிறுத்துகின்றதேயன்றி வர்க்கத்தை முன்னிறுத்துவது இல்லை. ஒரு நேர் எதிர்மாறான கண்ணோட்டத்திற்கு பதிலாக இன்னொரு மாற்றுக் கண்ணோட்டம் கொண்டே தலித்தியம் பற்றி ஆராயப்படுகின்றது. இதுவரை நடைபெற்ற வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறேயாகும்.

  

அகநிலைவாதம்

ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஒடுக்கப்படுவர்களால் தான் உணர முடியும் என்ற வாதம் உள்ளது. இது பால், சமய, சாதி என்ற அடையாளத்தினை முன்னிறுத்துவது ஆகும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு உணர்வின் அடிப்படையில் இருந்து ஆய்வை முன்வைக்க முடியாது. அகவுணர்வின் அடிப்படையில் ஆய்வை முன்வைப்பது இயங்கியல் பொருள்முதல்வாத வகைப்பட்ட ஆய்வுமுறையில்லை. சாதியப் பற்று, மதப்பற்று போன்ற மனிதர்களின் உள்மனநிலையை மையமாகக் கொண்டே பொதுப்புத்தி வளர்கின்றது.

பல ஆய்வு முறைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தாந்தத்திற்குச் சேவகம் செய்கின்றன. இதற்குள் எவ்வகையான உள்ளடக்கக் கூறுகள் உள்ளடங்கி இருக்கின்ற என்பதைப் பார்ப்போம். இவற்றின் மூலமாக சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் சரியான பாதைக்கு வரவும் இவை துணை செய்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைப் பொருளாதார உற்பத்தி முறைகளில் இருந்து  புரிந்து கொள்ளும் படி மார்க்சியம் வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் சமூக அமைப்பிலிருந்து தான் பார்க்கக் கோருகின்றது. ஒரு குறிப்பிட்ட முடிவிலிருந்து அதனை பொதுமைப்படுத்துவது முடியாததாகும்.

இதற்கு நம்மூர் பழமொழியை இங்கு பார்ப்பது பொருந்தும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எவ்வகையிலும் பொருந்தாது. இது ஒரு குறிப்பிட்ட ஒரு தேற்றத்தில் இருந்து ஒரு கணித விடை எடுப்பது போன்றதாகும். ஆனால் ஒரு தேற்றத்திலிருந்து ஒரு விடைபெற முயல்வது சமூக விஞ்ஞானத்திற்குப் பொருந்தாது. புறத்திலிருந்து அகத்தை நோக்கிச் செல்லல் வேண்டும் மாறாக அகத்திலிருந்து புறத்தை நோக்கியல்ல என்று மார்க்சியம் அணுமுறை வலியுறுத்துகின்றது. சமூகம் எவ்வாறு உள்ளதோ, அதற்கு ஏற்றவாறாகவே தனிமனிதர்களும் படைக்கப்படுகின்றார்கள். மார்க்சிய ஆய்வாளர்களின் அணுகுமுறையானது புறவயத்தை அடிப்படையாகக் கொண்டே ஆய்வினை மேற்கொள்வதாகும், அதாவது பொதுமையான -பொருளில் இருந்து ஆகும்.

சாதிய உணர்வும், சாதியை வைத்து அரசியல் செய்யும் போக்கும் சாதிய அடையாளத்தைக் கொண்ட கட்சிகளை உருவாக்கிவிடுகின்றது. இன்றைய சாதிகளான தேவர், நாடார், வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, ரெட்டி, முதலியார், நாட்டுக்கோட்டை செட்டி, பிள்ளை, கோனார் முதலியனவும் இன்ன பிற சாதிகளும் தாம் ”ஆண்ட பரம்பரை’ கனவில்  மிதக்கின்றார்கள். இந்தச் சாதிகள் அனைத்தும் ஆண்ட பரம்பரையாக நிறுவ எண்ணுவது சமூக விஞ்ஞானப் பார்வைக்கு முரணானது. காரணம் சாதிகளாக இருக்கின்ற போதிலும் வர்க்க ரீதியாக பிரிந்தே உள்ளார்கள். சாதிகளாக இருக்கின்ற போதிலும் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வாகவும், வர்க்கங்களாகவும் பிரிந்தே இருக்கின்றார்கள். சமூக உயர்வாக்கம் பெற்றவர்கள் என்ற பொழுதிலும் அவர்களின் தாழ்வு நிலை மாறிட முடியாது. கடந்த காலத்தைப் போல் அல்லாது இன்று சீர்திருத்தத்தின் விளைவாக எளிய மக்கள் முன்னே வருகின்றார்கள். அதிலும் உருவாகும் வர்க்கப் பிரிவு மீளவும் குறுங்குழுவாதத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். ஒடுக்கப்படும் சமூகத்தில் இருந்து உருவாகும் குட்டி முதலாளிய வர்க்கமானது. தன் சமூகத்தை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வேலையைச் செய்கின்றது. இதன் வேர் என்ன என்பதையே இங்கு ஆராயப்படுகின்றது.

குறிப்பான பின்நவீனத்துவ அரசியலானது 1980களின் பின்னரும், சோவியத் வீழ்ச்சியின் பின்னாரான காலத்திலும் சமூக விஞ்ஞான அறிவை படுபிற்கோக்குத் தனமா நிலைக்குத் கொண்டு சென்றுள்ளது. சமூக ஆய்வில் புதிய புதிய கண்ணோட்டங்கள், ஆய்வுக் கண்ணோட்டங்கள் என்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலாதிக்கத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்ற போது அடையாளங்கள் புதுப்பிக்கப்படுகின்றதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயரை வைத்துப் பெருமைப்படுகின்றவர்களும் உள்ளார்கள். ஏன் இன்று வ.உ சிதம்பரம், காமராசர், சிங்காரவேலர் போன்றவர்களைத் தமது சாதிகளுடன் இணைப்பதில் பெருமை கொள்கின்றார்கள். இதே போல செய்தி ”பகத்சிங் உடன் தூக்கிலிடப்பட்ட அஸ்வகுல்லா கானை எத்தனை பேருக்குத் தெரியும்? இசுலாமியர்களின் தியாகங்கள் மறைக்கப்படுவதையும், மறக்கடிக்கப்படுவதையும் நினைவுகூர்வோம்” ஆனால் முன்னர் இந்திய தேசியவாதியாகவும், வேறொரு தேசிய மொழி பேசுகின்ற தேசிய இனத்தைச் சேர்ந்தவரான அஸ்வகுல்லாவை இஸ்லாமியர் என்ற அடையாளத்தினுள் புகுத்திப் பெருமைப்படுகின்றார்கள். அவர்களின் வரலாறுகள் பொது இலட்சியத்தின் அடிப்படையிலான தியாகப் போராட்ட வாழ்வாக இருந்தது. ஆனால் பின்னால் உருவாகிபிரித்துப் பார்க்கின்ற சிந்தனை தத்தம் அடையாளங்களுடன் இணைத்துக் கொள்வதாகும். மனிதர்களின் சிந்தனைகளை வரலாற்றோட்டத்துடன் இணைத்துப் பார்க்காத விளைவுகளின் வெளிப்பாடாவும் இதைக் கொள்ள முடியும். இந்துத்துவாவின் செயற்பாடுகளும் மேற்கண்ட போக்கிற்கும் குறைந்தது இல்லை. தேர்தல் அரசியல் சிறுபான்மை மதத்தவர்களின் மீது மென்மையான அணுகுமுறையை கையாள்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் அரசியலுக்காக சிறுபான்மை மதத்தவர்களின் மீதான மென்மைப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு தேசத்தில் உள்ளவர்களை மதரீதியாக சலுகை கொடுத்து தனியாக அடையாளப்படுத்துவதில் வந்து முடிந்துள்ளது. இது பற்றி பொது வெளியில் குறிப்பாக இந்துத்துவா அரசியலை பின்பற்றுபவர்கள் விமர்சித்து வந்துள்ளார்கள். சிறுபான்மை என்ற கருத்தாக்கம் சமூகத்தை பிளக்க ஆளும் வர்க்கம் பயன்படுத்தியது. ஆளும் வர்க்கமும் அடையாள ரீதியாக சமூகம் பிளந்திருப்பதை விரும்புகின்றது. அப்போது தான் தேர்தல் அரசியலில் வாக்குகளை பெற முடியும் என்ற போக்காகும்.

ஸ்லாமியர்கள் என்றால் பயங்கரவாதி என்ற பொதுப்புத்தி சமூகத்தில் திட்டமிட்டு ஊட்டப்படுகின்றது. இது குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரா அரசியல் போக்காக இருந்து வருகின்றது. சமூகத்தில் விதைக்கப்படும் பொதுப்புத்தியில் இயங்கும் நபர்களும், ஆளும் வர்க்கத்தின் தொடர்புசாதனங்களும் கருத்துருவாக்கம் செய்கின்றன.

இந்தியா இந்துக்களின் நாடு என்பது இந்துக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்றும் பிராமணியப் பின்புலத்தைக் கொண்ட கருத்தும் உருவாக்கப்படுகின்றது.  இந்து என்று இந்திய அரசமைப்புச் சாசனத்தின் ஊடாக அனைவரையும் அழைக்கின்றது.

மகாகவி பாரதியின் படைப்புகளையும், அவரின் வெளிப்பாடுகளையும் சாதியே  தீர்மானித்ததாக நிறுவப்பட்டுள்ளது. பாரதியின் வர்க்கப் பின்புலம், அவருக்கிருந்து அறச்சீற்றம், கொலனித்துவ ஆதிக்கம் பற்றிய நிலைப்பாடு, சமூகம், பெண்விடுதலை சார்ந்து வியாபகமாக அணுகப்பட வேண்டும். ஆனால் அவரின் மதநம்பிக்கை சார்ந்தும், சாதிய பின்புலம் சார்ந்த நிலை தான் அவரின் சிந்தனை தீர்மானித்ததாக கருத்தாக்கம் செய்யப்பட்டது. சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரசம் (குணம் குலத்தளவே) என்ற அடிப்படையில் கருத்தாக்கம் வந்தடைந்தது இடதுசாரி என்பவர்களிடம் வெளிப்பட்டதை அவதானிக்க முடிந்தது. பாரதியின் சிந்தனைப் போக்கு முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கருத்துகளை கொண்டதே. மதத்தில் இருந்து பெறப்பட்ட சிந்தனையை முறித்துக் கொண்டவர் அல்லர். ஆனால் அவரின் அரசியல் எண்ண ஓட்டமும், கருத்துக்களும் சமூகத்தை முன்னேற்றமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைந்திருந்து. இங்கு இயங்கியல் பொருள்முதல்வாதம் நுண்ணிய ரீதியில் அகற்றப்பட்டது. இன்று பெரும் பேச்சாளப் பெருமக்களாக முற்போக்கு முகமூடி அணிந்து வலம் வருபவர்களின் போக்கு இவ்வாறு இருக்கின்றது. அனைத்தையும் சாதிய அடிப்படையில் விளங்கிக் கொள்ள வைப்பதற்கான ஆழக்கிடங்கை உருவாக்கியமைக்கு இவர்களும் பொறுப்பானவர்கள் தான்.

 

அதுபோல வாஞ்சிநாதனின் பிராமணிய சிந்தனையே கொலனிய ஆட்சி அதிகாரி ஆஸை கொல்ல துணைநின்றதாக முன்னிறுத்துவதன் மூலம் சாதியை பிரேதப் பரிசோதனை செய்கின்றனர். வாழ்நிலை தான் உணர்வுகளைத் தீர்மானிப்பது என்பதை மறுத்து உணர்வு- பிறப்புத் தான் சிந்தனையை தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய எதிர்நிலைக் கருத்து முன்னிறுத்தப்பட்டது. கொலனித்துவத்திற்கு எதிரான போராட்டம் வெளிப்பாடாகும் என்பது அடிப்படையில் முற்போக்கானதே.  அன்றைய காலத்தில் உருவாகிய கொலனித்துவத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பல்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டவர்களாகும்.  கொலனித்துவத்திற்கு எதிராக போராடிய வர்க்கக் கூறுகள் முதலாளித்துவ சீர்திருத்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்” ஆகும். அன்றைய வரலாற்றுப் போக்கு அவ்வாறு இருந்தது. இப்பெரிய உபகண்டத்தில் வெவ்வேறு சாதிய, வர்க்கப் பின்புலத்தவர்களின் தேசிய உணர்வாக இருந்திருக்கின்றார்கள்.

 தனிநபர்களின் கடவுள் நம்பிக்கை, சாதிய உணர்வு, அதிகார வர்க்க உடை, ஊதாரித்தனம், உணர்வு போன்ற தனிமனித பலவீனங்கள் அந்த சமூக உற்பத்தியின் பலவீனமாகும். இவ்வாறுதான் வெவ்வேறு தேசியவெறிப் போக்குள் உள்ளன. பிராமணியம், சியோனிசம் (பேரகங்காரம்) நாசீசம், சோவனிசம், நிறவெறி என இருக்கின்றது. இவையும் தேசவிடுதலை, கொலனித்துவ விடுதலை நோக்கிய போராட்டங்களின் நியாயமும் ஒன்றல்ல.

இந்திய நாட்டின் விடுதலைக்காக எழுந்த தேசியத்தை முன்னிறுத்தியவர்கள் வெவ்வேறு பிரிவினராக இருந்துள்ளார்கள். இந்திய தேசியத்தை முன்னிறுத்தும் மதவாத தேசியம் இருந்துள்ளது. முதலாளித்துவப் போக்கைக் கொண்ட தேசியவாதிகள் இருந்திருக்கின்றார்கள். இதேபோல கொலனித்துவ விடுதலையுடன் கூடிய வர்க்கப் புரட்சியை முன்னெடுத்த சர்வதேசியவாதிகளும் இருந்தார்கள்.

மதச் தேசியமாக இஸ்லாமியமும், சனாதனமும் தேசியமாகக் கட்டமைக்கப்பட்டது. இஸ்லாமிய தேசியம் என்று பிரிந்து போன மேற்கு, கிழக்கு பாக்கிஸ்தான் வெவ்வேறு தேசம் என்ற அடிப்படையில் 1970களில் வெவ்வேறு தேசங்களாப் பிரிந்து சென்றன. பலவேறான தேசியப் போக்கு இருந்ததை ஏற்றுக் கொள்ளாது, சாதியை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பது விஞ்ஞானப் போக்கல்ல.   

அன்றைய கொலனித்துவ அதிகாரியாக இருந்த ஆஸ் என்பவர் முதலாளித்துவ சமூக பொருளாதார உற்பத்திற்கேற்ப முதலாளித்துவ ஜனநாயகத்தை நிலைநிறுத்தியிருப்பார், ஆஸ் ஆக்கிரமிப்புச் செய்திருந்த கொலனித்துவத்தின் அதிகார வர்க்கத்தை சார்ந்தவர் என்பதை மறுத்து விட்டு தியாகியாக்குவது அபத்தமான பார்வையாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை சுதந்திர ஊழியர்களை உருவாக்கும். இதன் பொருள் குறிப்பிட்ட அதிகார வர்க்கப் பிரதிநிதி ஒடுக்கப்பட்டவர்கள் சார்பான மனிதர் என்பதல்ல. அவரை சமூகப் போராளியாக பார்ப்பது சமூக விஞ்ஞானப் பார்வை அற்றதாகும். சாதியமே நிர்ணயிக்கும் காரணியாகக் கொள்வது சாதியவாதத்திற்கு உட்பட்டதேயாகும்.

இவர்களிடம்  நவீன தேசிய இனங்கள், நவீன தேசங்கள் பற்றிய விஞ்ஞானப் பார்வை இல்லாத அவலத்தை அவதானிக்க முடிகின்றது. இந்த அவலமானது தேசிய இனங்கள், தேசங்களாக வளரும் என்ற சிந்தனைப் போக்கினையும் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்கள் வளரும் என்ற புரிதலை கொண்டவர்களாக இல்லை. இன்றைய தூயதமிழ் சாதி தேசியவாதிகள் (குடித் தேசியம்) தந்தை  பெரியார், மு.கருணாநிதி போன்றோரின் சாதிப் பின்புலத்தைக் கிளறி எடுத்து, தமிழரை வேற்று மாநிலத்தவர்கள் ஆள்கின்றார்கள். தமிழர்கள் தான் தமிழர் ஆள வேண்டும் என்கின்றார்கள். தமிழ் தேசிய இனத்தினுள் தூய தமிழ் சாதிகளைத் தேடுகின்றார்கள். தூய தமிழ்த் தேசியம் என்பதை தமிழ் சாதிகளைக் கொண்டு கட்டமைக்க முற்படுகின்றார்கள். சமூக ஒழுங்கமைவு என்பது பல இனக்குழுமங்கள், மொழியை இயல்பாகவும், அழுத்தம் காரணமாகவும் தாய்மொழி மறக்கப்படுகின்றது. அவ்வாறு தாய் மொழியை மறந்த தேசிய இனங்களின் கூட்டாகும். கலப்புச் சமூகம் ஏற்படும் இதேவேளை ஒரு எல்லையில் சிறுபான்மைத் தேசிய இனம் இருக்கவும் முடியும்.

திராவிடம் (australoid race) என்பது இனவரைவு என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். 8000 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்கள் வேறு கலப்பில்லாத இனம் (race) என்றும், சுமார் 4000-3000 பொது ஆண்டிற்கு பின்னரே வேறு மக்கள் கூட்டத்துடன் கலப்பு ஏற்பட்டதாக தற்கால ஆய்வு வெளிவருகின்றது. பன்நெடுங்காலமாகக் கலப்பற்ற மக்கள் கூட்டம் தனக்கான பண்பாட்டை  உருவாக்கி வாழ்ந்திருக்கின்றார்கள். சுவாமி ஞானப்பிரகாசர் Thamillan- proto dravidian என்பார். இதனை இன்று தமிழ் எழுத்தை தமிழி என்று அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. திராவிடன் என்றால் வடுக வந்தேறிகளான தெலுங்கர்கள் என்கின்றனர். திராவிடம் என்றாலே தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஒரு கவசம் என்கின்றார்கள்.  ஆனால் தெலுங்கு மொழி என்பதே பிற்காலத்தில் தான் தோற்றம் பெற்றது. இங்கு பேசப்படுவது வரலாறுகளுக்கு முன்னைய காலத்தைப் பற்றியதாகும். கலாசாலை வரையறையான திராவிட குடும்பமென்பது மொழிவழித் தேசிய இனங்களாகவும், தேசமாகவும் இருக்கின்றது. எனவே பொதுவான திராவிடம் என்ற இனவரையறை என ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் தேச வரையறைக்கு திராவிடம் என்பது காலப்பொருத்தமற்றதாகும். ஏனெனில் திராவிட இனம் என்பது தேசமாக முடியாது.

திராவிடம் என்பது கலாசாலை வரையறையாக உலகப் பரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வரையறையாகும். அந்தவரையறை மாற்ற வேண்டுமென்றால், அது கலாசாலைப் பரப்பில் முதலில் மாற்றம் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு திராவிடம் என்ற அரசியல் கருத்தியல் முரண்பட்டுக் கொள்கின்றது. தமிழ் தேசத்தின் ஆட்சி உரிமை என்பது இந்தியத்திடம் உள்ளது. இந்தியத்திடம் தமிழ் தேசத்தின் ஆட்சியுரிமையை பெற போராடாது. சிறுபான்மை தேசிய இனத்தினை கைகாட்டிவிடப்படுகின்றது. இது தான் தவறான அரசியலாகும். கட்சிகளின் தலைமையில் இருப்பவர்கள் பண்ணையார்களின் வாரிசுகளும், புதிய முதலாளிகளும் ஆகும். அந்த வர்க்கத்தின் அரசியல் எதிர்க்க கொள்ளப்பட வேண்டும். சொத்துடமை வர்க்கத்தை எதிர்ப்பதற்காக சிறுபான்மை தேசிய இனத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை பதைத்து ஒதுகிக்கிட முடியாது.  தமிழர் தமிழர் ஆள வேண்டும் என்ற முழக்கமானது சிறுபான்மை தேசிய இனத்தவர்களிடையே சந்தேகத்தையும், பிளவையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது.

தலித்தாக இருந்தால் தான் தலித்துகளின் உணர்வை அறியமுடியும், ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால் தான் ஒடுக்கப்பட்ட சாதியின் வலியைப் புரிந்து கொள்ள முடியும் என எதற்கும் சாதியமே அளவு கோளாக நிறுத்தப்பட்டது. சாதியத்திலும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் தான் முழுமையான இலக்கியம் படைக்க முடியும் என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு நுண்முரணைப் பேசுவதாக பிரகடனப்படுத்திக் கொண்டே சமூகப் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பெருங்கதையாடல் சாதியத்தை முழுமையாக பேசமுடியவில்லை என்றனர்.

 

தனிமனிதர்கள் மாறிவிட்டால் சமூகம் மாறிவிடும் என்று 'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வேளானும் சாதி வெறியனே' என்பதாகும்.  இது தலித்தியவாதத்தின் உச்சமான அடையாளக் கோட்பாடாக முன்னிறுத்தப்படுகின்றது. பிராமணியம், யாழ்சைவவேளாளம் என்ற நிலமானிய சிந்தனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மாத்திரம் உரித்தானதாக சித்தரிக்கப்படுகின்றது. தன்னார்வ, கவர்ச்சிவாத, தனிமனித முனைப்புகளை எதிர்க்கின்ற போது சாதியை அடையாளப்படுத்தி தம்மை பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

தமிழகத்தில் பொதுவுடமைக்கட்சிக்கான மத்திய குழுவிற்கு இடவொதுக்கீட்டின் படி பதவி கொடுக்க வேண்டும் என்கின்றார்கள். இந்த அவலம் என்பது தமிழகத்தில் அடையாள அரசியலின் விளைவாகும். பொதுவுடமைக் கட்சியில் சேர்வதற்கும், அடிப்படை உறுப்பினராக சேர்வதற்கும் விதிகள் உண்டு. ஊழியர்களின் பயிற்சிக் காலம் எவ்வளவு முக்கியமோ, அதே போல உறுப்பினரின் (பால், சாதி அப்பால்) அரசியல் முதிர்ச்சியும், அரசியல்மயப்படுத்தப்பட்ட நிலை என்பதும் முக்கியமானதாகும். இங்கு ஒரு உறுப்பினர் போதிய அரசியல் அறிவைப் பெருக்கும் வகையில் கட்சி துணை நிற்க வேண்டும். ஒவ்வொரு தோழர்களையும் உயர்ந்த சிந்தனை தளத்திற்கு வளர்த்து விடுவது கட்சியின் கடமையாகும். ஒருவர் சாதாரண எழுத்தறிவு மட்டுமே போதுமானதல்ல. ஆழ்ந்து கற்க வேண்டும். தத்துவநூல்களை படிப்பதும், படிப்பதை படைப்பாற்றலுடன் படிக்க வேண்டும். ஒருவர் படித்ததை ஆழ்ந்து உள்வாங்க வேண்டும். அனைத்து இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்பார் லெனின். அரசியல்மயப்படுத்தல் ஊடாக கட்சியில் பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. இங்கு அரசியல் உள்ளடக்கத்தை மறுத்து கட்சிகளுக்கு வெளியே இருந்து கட்டளையிடுகின்றார்கள். முதலாளித்துவ தாராளவாதத்தை ஜனநாயகம் என்ற பெயரில் முன்வைக்கப்படுகின்றது. முதலாளித்துவ அமைப்பு விதியை திணிக்கவும், அதுவே முன்மாதிரி என கருத்தாக்கம் செய்யப்படுகின்றது.

கருத்தியல் மேலாண்மை கொண்ட சமூகமே தன்னைச் சுற்றி வரலாற்றை எழுதியுள்ளது.  தாழ்ந்தவர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்)  உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் கொடுப்பவர்கள் யார்? சாதியச் சிந்தனையை மறுவுற்பத்தி செய்யும் இடமாக பொருளாதார அமைப்பும் அதுசார்ந்த நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சாதனம், கலாசாலையும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. கலாசாலை ஆய்வுமுறை மற்றும் அது கற்பிக்கும் வரலாறு பற்றி ஒரு மாற்றுச் சிந்தனை, ஆய்வு மரபை கொண்டு வரவேண்டும். 

ஈழத்தில் 1980இற்கு முற்பட்ட சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனநாயக முற்போக்கு சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டவையாகும். சனநாயக முற்போக்கு சக்திகள் வர்க்க ரீதியாகவே அணிதிரண்டனர். தீண்டாமை வெகுசன இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதிய அமைப்புகளால் அல்லது தலித்திய அமைப்புகளால் நடத்தப்படவில்லை. ஆனால் இன்று தலித்துகளின் போராட்டமாக அடையாள அரசியலுக்குள் வரலாற்றைப் புதைக்கின்றார்கள்.  ஈழத்தில் தீண்டாமை எதிர்ப்பு முன்னணி வர்க்கப் போராட்ட செயற்தந்திரத்திற்கு உட்பட்டதேயாகும். சிந்தனை முறைமை என்பது அகநிலை விருப்பும், பொதுப் புத்திக்கும் அப்பால் ஆய்வதே விஞ்ஞானமாகும்.  

               

கருப்பொருள் பற்றி

இந்த சமூக அமைப்பில் ஒடுக்கப்படும் மக்களானவர்களை தீண்டத்தகாதவர்கள் என்ற ரீதியில் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினுள் பல சாதியங்களும் உள்ளடக்கியதே. ஒடுக்கப்பட்டவர்கள் நலிந்த வர்க்கமாகவும் சுரண்ப்படுகின்றார்கள். அதேவேளை தம்மை உயர்சாதி என்பவர்களிடையேயும் நலிந்த வர்க்கத்தினர் உள்ளார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிப்பது இரட்டை ஒடுக்குமுறையாகும். ஒடுக்கப்படுவர்களால் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புகள் காட்டப்பட்டாலும் அவை மிருகத்தனமாக அடக்கப்பட்டன. பல வேளைகளில் அவர்கள் எதிர்ப்புக் காட்டுவதைத் தவிர்த்து பணிந்து சென்றிருக்கின்றனர். இந்தப் போக்கு பல்நெடுங்காலமாக நடைபெற்று வந்திருக்கின்றது.

சமூகத்தின் பிரிவுகளுள் பலநுண்முரண்களைக் கொண்டதாக இருக்கின்றது. இந்தப் போக்குகளே பல்வேறு போக்குகளை தீர்மானிக்கின்றது.

ஒடுக்கப்படும் சாதிக்குள் இருக்கின்ற உழைக்கும் வர்க்கம்

உயர் சாதியினர் எனப்படுபவர்களுக்குள் இருக்கின்ற உழைக்கும் வர்க்கம்

இந்த மக்களின் வாழ்வியல் பற்றி ஆராயப்பட வேண்டும்.  சமூகத்தின் படிமுறை வளர்ச்சிப் போக்கை பார்ப்போம். “நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பொருளாதார வல்லமை சரிந்தது. புதிய வர்க்கத்தின் - மூலதனப் பிரதிநிதிகளின் – வல்லமை வளர்ச்சி வெற்றது. சமுதாய அமைப்பில் உண்டான மாற்றத்தின் படி எல்லாக் குடிமக்களும் சமம் என்று பெயரளவில் ஏற்பட்டது. ஆண்டைகளும் அடிமைகளுமாக இருந்த பழம் பிரிவினை மறைந்தது. ஒவ்வொருவரிடமும் உள்ள மூலதனம் எதுவாக இருப்பினும், சட்டத்தின்படி எல்லோரும் சரிநிகராக மதிக்கப்பட்டனர். அதாவது, நிலத்தை தமது தனியுடைமையாகக் கொண்டிருப்பவரும் சரி, அல்லது தமது உழைப்புச் சக்தியைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லாத பஞ்சையும் சரி, சட்டத்தின் படி சரிநிகரானவர் எனக் கருதப்பட்டனர். சட்டம் ஒவ்வொருவரையும் சமமாகப் பாதுகாக்கிறதாம். அது சொத்துடமையோரின் சொத்துக்களை சொத்தில்லாத மக்கள் திரள் தாக்குதவதினின்றும் காத்தளிக்கிறது -சொத்தில்லாத அந்த மக்களே, தமது உழைப்புச் சக்தியைத் தவிர வேறு உடைமை எதுவும் இல்லாதவராய், நாளுக்கு நாள் மென்மேலும் வறுமைப்பட்டு நிலைகுலைந்து பாட்டாளிகளாக  மாற்றப் பெறுகின்றனர். இதுதான் முதலாளித்துவச் சமுதாயம்.” (30 லெ.நூ 10)

வர்க்கங்களின் அசைவியக்கம் பற்றிய புரிதல் இல்லாவிடின் சமூகப் போக்கை விளங்கிட முடியாது. நிலத்துடன் பிணைக்கப்பட்ட மக்கள் உற்பத்தி சக்தியை (கூலி) மட்டும் விற்கும் நிலைக்கு வந்தனர்.  இன்னொரு பிரிவு குறைவிருத்தி முதலாளித்துவத்தில் புதிய வர்க்கங்களாக மாற்றமடைகின்றனர்.  வர்க்கப் பிரிவுகள் சாதிகளுக்குள்ளும் இருக்கின்றது. இந்த வளர்ச்சிப் போக்கு முதலாளித்துவ கட்டத்தில் தவிர்க்க முடியாது. சாதியம் சமூகத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியை முதலாளித்துவத்தில் பெற முடிகின்றது. ஏனெனில் பழைய மரபுகளும், கட்டுப்பாடுகளும் தகர்க்கப்படுதல், சிறுமுயற்சியாளர்கள் உருவாக்கம், அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் மாறாவாதிகள் இவ்வாறான மாற்றங்கள் சாதியத்தை உடைக்கவில்லை என்கின்றார்கள். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு வர்க்கங்களின் பிளவுகள் உதவுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு வர்க்கமும் நலன்களின் பொருட்டு போராடும். ஆனால் சாதிகளில் உள்ள உயர் வர்க்கம் சுயசாதியை அணிதிரட்டி மற்றைய சமூகத்தில் இருந்து தனித்து வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள மேட்டுக்குடி வர்க்கமும், ஆதிக்க சாதி எனப்படுபவர்களில் உள்ள மேட்டுக்குடி வர்க்க உறவும் ஆராயப்பட வேண்டும். அதாவது திரு தொல் திருமாவளவன், Dr இராமதாசு, Dr கிருட்ணசாமி, இம்மானுவல் பேரவை, தேவர் பேரவை, கொங்கு அமைப்புகள் என உள்ளார்கள்.  இவர்கள் சமூகத்தில் உயர் வர்க்கக் குழாமாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். இந்த வர்க்கப் பிரிவினர் தமது சமூகத்திற்காக உழைப்பதில் இருந்து அகன்று விட்டார்கள். அதன் வளர்ச்சிப் போக்கானது சமூக இருப்பை நோக்கியதாக அமைந்துள்ளது. கட்சிகளில் இருக்கின்ற மேட்டுக்குடிப் போக்கு கொண்டவர்கள், புதிய பணக்காரர்களாக உருவாகியவர்களே அமைப்பினை வழிநடத்திச் செல்கின்றார்கள். கட்சித் தலைமையின் போக்கே கட்சியின் பாதையை தீர்மானிக்கின்றது.

உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்குரிய தத்துவத்தையும், அவர்களை அடக்கிக் கொள்ள படை பலத்தைக் கொண்ட அதிகாரத்தையும் முன்னைய சமூகத்தில் கொண்டுள்ளனர். ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தாம் ஏன் சாதியாக ஒடுக்கப்படுகின்றோம் என்பதற்கு முழுமையான விளக்கம் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம் அவர் பெற்றோர் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர், பாட்டன், முப்பாட்டன்களும் அவ்வாறே இருந்திருக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக ஐதீகத்தின் அடிப்படையில் என விளக்கம் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கோவிலில் பூசை செய்வது, பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், ஒடுக்கப்பட்டவர்கள்  ஆலயங்களுக்கு நுழைவது தடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஒடுக்கப்பட்டோர் என்போர் முற்பிறப்பில் செய்த பாவத்திற்காக உயர் சாதியினருக்கு ஊழியம் செய்து, முற்பிறப்பின் பாவங்களை போக்க வேண்டும் என்கின்றனர். குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் சமூக நடவடிக்கைகளில் இருந்து அகற்றப்பட்டனர். ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டவர்களை  ஒதுக்கி வைப்பதற்குப் பல தந்திரங்கள் கையாளப்பட்டன. தீட்டு- தவிர்த்தல் (Taboo) என்பது பல சமூக அம்சங்களில் பார்க்கப்படுகின்றது எனினும் இதில் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களே. இந்த விடயத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் (சூத்திரரும்),  பெண்களும் ஒரே வகையென பகவத் கீதை போதிக்கின்றது.

தவிர்த்தல் (Taboo) என்பது துடக்காக சமூக வழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றது. தவிர்த்தல் என்பது இயற்கையை ஒட்டிய நிலையில் இருந்த பொழுது அதாவது, அவை இயற்கை விதிகளுக்குள் அடங்கியிருந்த வரைக்கும், அவை அடக்குமுறைக்கு உரியதாக இருக்கவில்லை. தவிர்த்தலுக்கு பொருளாதார நலனுக்காக தெய்வத் தன்மை (புனித -சனாதன வடிவம்) கொடுக்கின்ற போது ஒடுக்குமுறைக்குரிய ஒன்றாக மாற்றம் பெறுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் நாளாந்த வாழ்வில் இருந்து ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அரைமுதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டத்தில் உணவு விடுதிகளில் உணவு உண்ண, கோவில்களில் நுழைவதற்கு, பொதுப் பாதையை பயன்படுத்துவதற்கு, தண்ணீர் கிணறுகளை பயன்படுத்துவதற்கு உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. கிழக்கு இலங்கை நிலைவரத்தைப் பொறுத்தவரை ஒப்பீட்டு ரீதியாக தீண்டாமை கடுமையானதாகவும், இறுக்கமானதாகவும் இருந்திருக்கவில்லை. இலங்கையில் பிராமணிய ஆதிக்கம் இல்லை. ஆனால் வடக்கில் வேளாளர் ஆதிக்கமும் கிழக்கு இலங்கையில் முக்குவர்களின் ஆதிக்கமும் இருந்திருக்கின்றது. நிலப்பிரபுத்துவச் (முதலாளித்துவ ஜனநாயகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை அரைநிலமானியம் எனலாம்) சிந்தனையான பிராமணியம், சைவவேளாளம் (சைவம்- தமிழ்- வேளாளம்)  என நிலமானியச் சிந்தனை அழைக்கப்படுகின்றது.

பிராமணர்- பிராமணியம் இரண்டும் வேறானவை. ஒன்று மக்கள் கூட்டத்தை குறிப்பதுடன் தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்வது. இதன் ஊடாக மேலாண்மை குடிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்கள். இங்கு பிராமணியம் என்பது தன்னை உயர் குடியாக வைத்திருப்பது மாத்திரம் அல்ல. சமூகத்தை வர்ணங்களாக பிரித்து வைத்து தாழ்ந்த உற்பத்தி சக்தியாக தொடர்ந்து வைத்திருப்பதன் ஊடாக தன்இருப்பை நிலைகொள்ள வைக்கின்றனர். இவ்வாறான சிந்தனையை அனைத்து சமூகத்தின் படிமுறை எங்கும் விதைத்துள்ளது. ஆனால் பலவேளைகளில் தனியே பிராமண சமூக எதிர்ப்பாக சுருக்கிவிடும் போக்கு உள்ளது.  நிலமானியத்திற்கு உட்பட்டதே ஆசியகொடுங்கோண்மை ( லெனின் சொல்லில்) சனாதனமாகும். 

 

சைவவேளாளம் (சைவம்- தமிழ்- வேளாளம்). பிராமணியம் என்ற சிந்தனை நிலமானியத்தின் வக்கிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது. மற்றைய நாடுகளில் இருந்த சனாதனமற்ற நிலப்பிரபுத்துவம் உழைப்பை வழங்குவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருந்தது. பண்ணை அடிமை முறையை சனாதனம் சார்ந்து தீர்மானிக்கப்படவில்லை. பல வேளைகளில் வேலைப் பிரிவினையையும், சனாதன சமூகப் பிரிப்பையும் ஒன்றாக போட்டுக் குழப்பும் போக்கும் இருக்கின்றது. உபகண்டனத்தில் வக்கிர மத்திய காலச் சிந்தனை தொடர்கின்றது. இது மதபீடங்களின் மையமாக கொண்டு சமூகம் ஒழுங்கமைக்கப்படுகின்றுது. இந்தச் சிந்தனையின் உதவியுடன் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தினர் திட்டமிட்ட வகையில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் காலங்காலமாக சமூக மயப்பட்டு வந்துள்ளார்கள்.

வரலாற்றில் பார்ப்பான் என்பது பிராமணர்களைக் குறித்து நிற்கவில்லை. சங்க காலத்தில் சங்கறுக்கும் பார்ப்பான் என்று வருகின்றது. பார்ப்பான் என்பது Shaman (Shamanism ) வள்ளுவர், பேயோட்டுபவர், கோடாங்கி, பரியாரி, வைத்தியர், குரு என்ற குலத் தலைவனுடன் சம்பந்தப்பட்டது. இங்கு பிராமணியத்தினையும், சாதியைக் கட்டமைப்பையும் தொன்மையாக்க புனையப்பட்டவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

நிலப்பிரபுத்துவ கால சமூகச் சிந்தனை வடிவத்தை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மத்திய காலத்திய மீதமிச்சங்கள், ஆசியக் கொடுங்கோன்மை என மார்க்சியர்கள் வரையறுக்கின்றார்கள். பின்னவீனத்துவம் சைவ வேளாளம், யாழ் மையவாதம், பிராமணியம் என்று வரையறுக்கின்றார்கள்.  

இங்கு சைவவேளாளம், பிராமணியம் என்பதற்குப் பதிலாக நிலமானியம் என்பது தான் பொருத்தமானதாக இருக்கின்றது. காரணம் பிறப்பின் அடிப்படையில் இருந்து  மனிதர்களின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை. சமூகத்தின் வெளிப்பாடுகளில் இருந்து தான் சிந்தனைகள் தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு இலங்கையில் முக்குவர் சமூகத்தவர்களது ஆதிக்கமாக  இருந்திருக்கின்றனர். முக்குவ சமூகத்தின் சிந்தனையை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது? தமிழ் பேசும் மக்கள் இலங்கை முழுவதும் வாழ்கின்றார்கள். ஒரு சாதியச் சிந்தனை என்றால் எவ்வாறு அனைத்து மக்களும் ஒருவாறு தான் சிந்திப்பதாக வரையறுத்துக் கொள்ள முடியும்? முதலாளித்துவ முன்னைய சிந்தனைப் போக்கானது மக்கள் கூட்டத்தில் இருக்கின்றது. மலையகத்தில் வாழும் உழைப்பாளிகளில் பெரும்பான்மையினர் எவ்வகையாக சிந்தனைக் கட்டமைப்புக்குள் வாழ்கின்றார்கள்? அந்த மக்கள் 200 வருட கால வரலாறு கொண்டவர்கள் என்ற போதிலும் அவர்களின் சிந்தனை என்பது தமிழக, ஈழ சிந்தனைப் பரப்பில் இருந்து அதிவேறுபாடு (நிலமானிய) கொண்ட இருக்க முடியாது. அந்த மக்களின் வாழ்க்கை பின்தங்கிய நிலையில் தான் இன்றும் உள்ளது. அதில் சுதந்திரமாக தென்பகுதியில் வாழ்பவர்களின் முன்னேற்றமானது தோட்டத் தொழிலாளர்களை விட மாறுபட்டுள்ளது. அதனை எவ்வாறு அழைத்துக் கொள்வது?

 

மார்க்சியப் பார்வையில் சமூக ஒழுங்கமைவில் நிலப்பிரபுத்துவத்தின் சிதைவு, முதலாளித்துவம் தோற்றுவிக்கின்ற சமூகப் பொருளாதார உறவுமுறை, சிந்தனை முறைமை. பொருளாதார அமைப்பின் சிந்தனை வடிவத்தை வரையறுப்பது விஞ்ஞானப் பார்வைக்கு உட்பட்டிருக்க வேண்டும். சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது அரைநிலமானிய  சிந்தனைக் கட்டமைப்பினுள் இருக்கின்ற போதும் வலிந்தெடுத்த முதலாளித்துவ உற்பத்தி கூறுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பழைய சிந்தனை உறவே தொடர்ந்து நீடிக்கின்றது. எனவே பழைய சிந்தனை உறவின் வடிவமானது விஞ்ஞான பகுப்பாய்வுக்குட்பட்டதேயாகும். இதனால் சாதியின் பெயரால் அழைப்பது தன்னியல்பான ஆய்வு முறைக்கு உட்பட்டதாகும். பிராமணியம், சைவவேளாளம் என்ப நிலமானிச் சிந்தனையே. எனவே அரைநிலமானியச் சிந்தனை என்று அழைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

 

சமூக ஏற்றத் தாழ்வுகளும், பொருளாதார வளர்ச்சியும், மாற்றங்களும் ஏற்படுகின்றது. இந்த மாற்றம் என்பது சில மாதங்களில், வருடங்களில் நடைபெறுவதில்லை. இது ஒரு நீண்ட கால சமூகப் போக்காகும். சமூக அசைவியத்தின் வளர்ச்சி வடிவம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். சமூக வளர்ச்சிப் போக்கின் மாற்றத்தை திடீரென மாற்றிவிட முடியாது. இன்றை ஆதிக்க சாதிகள் என்பவர்கள் வரலாற்று ஓட்டத்தில் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக ஆதிக்கத்திற்கு வந்தவர்கள். இன்னுமொரு வர்க்கத்தின் கீழ் உழைப்பை விற்றவர்கள். இவ்வாறு தான் வரலாறு எங்கும் நடைபெற்று வந்துள்ளது. நிலமானிய பொருளாதார அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாகப் பங்கெடுத்த  உற்பத்தியை விட்டு வெளியேறிய, வெளியேற்றப்பட்ட மக்கள் ஆவர். அந்த மக்களின் நலிந்த நிலை தொடரவே செய்கின்றது. ஈழத்தில் பெரும் நிலப்பரப்புக் கொண்ட பண்ணையார்கள் மிகக் குறைவு. அதிலும் யாழ் குடாநாட்டில் அவ்வாறு இல்லை. குறுகிய நிலப்பரப்பில் உள்ள நிலையில் வளங்கள் பற்றாக்குறை கொண்ட நிலை இருந்தது. சிறிய நிலப்பரப்பில் விவசாயம், தொழிலாளிகளின் உபரி உழைப்பே அவசியமாக இருந்தது. இந்த தொழிலாளர்கள் ஆண்டை கொடுக்கும் ஊதியம், சிறு உணவுப் பொருள், சுயமான தேடலைக் கொண்டே அவர்கள் வாழ்வை நடத்தினர். குறிப்பாக பனை வளத்தின் பயன் அந்த மக்களை காப்பாற்றியிருக்கும். ஆனால் கிழக்கு இலங்கை மட்டக்களப்பில் அவ்வாறு பெரிய நிலப்பரப்பை கொண்டவர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அங்கு சாதியக் கட்டமைப்பில் இறுக்கம் இருந்ததில்லை. அங்கு கூலிகளாக உற்றார் உறவினர்களே இருந்துள்ளார்கள். சாதிய எதிர்ப்புப் போராட்டம் அங்கு நடைபெற்றதில்லை. சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் யாழ் குடாநாட்டில் தான் நடைபெற்றது.

ஈழத்தில் உற்பத்தியில் சாதியத்தை உடைத்த போதிலும், சிந்தனை சமூகத்தின் அனைத்து தளத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. சாதிய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற தலித்தியம் என்ற கோட்பாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்த முனைகின்றனர். தலித்தியவாதிகள் சமூக பொருளாதார அமைப்பினை விளங்கிக் கொண்டுள்ளார்களா என்று கீழே பார்க்கப்பட இருக்கின்றது.

சமூகத்தின் உற்பத்தியான பிற்போக்குக் கருத்தியலே மக்களை அடிமை கொள்கின்றது. சாதியக் கருத்தியல் தொடர்ச்சியாக உயிர்வாழ்வதில் மதம், சாதி, குடும்ப உறவுகள், சமூகவாழ்வு என்பன முக்கிய பாத்திரம் வகிக்கின்ற. முதலாளித்துவ பொருளுற்பத்திக்கான கருத்தியல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வருவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறை  தமக்குத் தேவையான ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கிறது.

 

ஆளும், அதிகார, உயர்வர்க்கத்தினர் எப்போதுமே குறிப்பிட்டளவு விகிதத்தினரே இருப்பார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளில் அரசபரம்பரைகள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும் பகுதியினர் தம்மை அரசவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்துக் கொள்வதில்லை. அரச வம்சத்தில் இருப்பவர்கள் (பிரித்தானியா உதாரணமாக) பிரபுவம்சத்தில் திருமண உறவு ஏற்படுகின்றது. ஆனாலும் அவர்கள் தாம் அரசவம்சம் என்று கருதிக் கொள்வதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசவம்சத்தினர் இரத்த உறவினராக  இருக்கின்றனர். மரபுமாறாது (விதிவிலக்காக சிலவை தவிர) இருப்பதற்காக அரச வம்சத்தில் திருமணவுறவுகள் நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கின்றது. இன்று அரச வம்சத்திற்கு அப்பால் மேட்டுக்குடிகளில் கூட திருமணங்கள் நடைபெறுகின்றது. குடியானவர்களில் இருந்துதான் போர்வீரர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். போர்வீரர் என்ற காரணத்தினால் சத்திரியவம்சம் என்று கூறிக் கொள்வது இந்திய- தமிழக சாதியக் கண்ணோட்டத்தில் உண்டு.  வலங்கை, இடங்கை என்பது இரண்டு உற்பத்தி முறையைச் சார்ந்ததாக இருந்திருக்கின்றது. தொழில்துறை உற்பத்தியில் இவர்கள் யுத்த  ஆயுதங்கள், விவசாயத்திற்கான கருவிகள் என தேவையான உற்பத்தியை மேற்கொண்டனர். இன்னொரு பகுதி விவசாய உற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் யுத்தம் என்கின்ற போது போர்வீரர்கள் இரண்டு பகுதியில் இருந்து தான் பெறப்பட்டுள்ளார்கள்.

வரலாறு இவ்வாறிருக்கையில் போர்க்குடிகள் என்று பிரகடனப்படுத்துவதும், தம்மை ஆண்ட பரம்பரையாகவும்  முன்னிறுத்துகின்றனர். சத்திரிய வம்சம் என்று ஆண்ட பரம்பரைக் கோசம் போடப்படுகின்றது. ஈழத்தில் ஆண்டபரம்பரை என்பது தேசிய எழுச்சியில் மொழி வழித் தேசியத்தைக் குறித்து நின்றது. ஈழத்தில் தமிழ் அரசு, சிங்கள அரசு என்று இருந்திருக்கின்றது. இரண்டு அரசுகள்  இருந்திருக்கும் வரலாற்றை இலகுபடுத்துகின்ற போது தேசிய வெறி என்று தவறாக திரிக்கப்படுகின்றது. ஆனால் வரலாற்றில் வேளாளர்களின் பாத்திரம் பற்றி முழுமையான வரலாற்று ஆய்வின்றி ஈழத்தில் ஆண்டபரம்பரை என்பதை வேளாளமாகத் திரிப்பதும் நடந்து தான் உள்ளது. யாழ்ப்பாண இராச்சியம் என்பது பாண்டிய தளபதிகளினால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. திருமண உறவில் வேளாளர்கள் சம்பந்தம் செய்திருக்கலாம். ஆனால் வடக்கு, கிழக்கு இலங்கைத் தமிழ் அரசுகள் வேளாளர்களால் ஆட்சி செய்யப்பட்டது என்பது கேள்விக்குறியே.

பண்டார வன்னியனின் பெயரைக் என்ன அடிப்படையில் வந்தது என்ன புரிதல் இல்லை. வன்னியர் என்பதை தமிழகத்தின் சாதியுடன் இணைத்துப் பேசப்பட்டும் உள்ளது. சோழர் காலத்தில் இருந்த கூட்டாட்சி (சமஸ்ரி) வன்னிமத்தை பரிபாலனம் செய்த முறைமையை வன்னிமம் என்றழைக்கப்பட்டது. மட்டக்களப்பு, குருணாகலை போன்ற இடங்களிலும் வன்னிமம் இருந்துள்ளது. இதளை ஒரு சாதிக்குள் குறிக்கிட முடியாது.

 

தமிழகத்தில் பற்பல சாதினர் தம்மை ஆண்டபரம்பரை எனநிலைநிறுத்த பிரயத்தனம் செய்கின்றனர். அரச, அல்லது குலச்சமுதாய காலத்து தேவராளர், வேலன்,  கோடாங்கி, வள்ளுவர் (Shaman) விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. இது பெரும் தொகையாக இருக்க மாட்டாது. தொல்பழங்குடி வாழ்வியலில் எச்சங்கள் தமிழ் சமூகத்தின் தொடர்வதின் வெளிபாடுகளே இவைகளாகும். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும் மன்னர்களான பல்லவ, சேர, சோழ,  பாண்டியர்கள் என்போரின் கொடிகளில் உள்ள சின்னங்களை தங்கள் சாதிக்குரியவர்களின் சின்னங்கள் என்று உரிமை கொண்டாடும் நிலை இருக்கின்றது. ஆளும் அரச வர்க்கமும் விவசாய கூலித் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கடல்தொழிலாளர்களும் ஒன்றல்ல.  வரலாறு எங்கும் ஆளும் ஆட்சியாளர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே.

இதே போல இலக்கியத்திற்குள் தமது குலத்தினைக் குறிக்கின்ற சொல்லாடால் இருக்கின்றதா என்பதையும், தமது பின்னணியைப் பற்றிய கருத்துகளைப் புனைகின்றனர். இவ்வாறான புனைதல்கள் சாதியப் பிளவற்ற தமிழ் (nation) தேசமாக சிந்திக்க தடையாக இருக்கின்றது. ஆனால் இலங்கையில் தேசம் உருவாக்கம் பெற்றிருக்கின்ற போதிலும், அதில் இருந்து பின்னோக்கிய வளர்ச்சி கொண்ட கோட்பாடான தலித்தியமும், இரட்டைத் தேசியம் என்று சாதியவாதமும் முன்வைக்கப்படுகின்றது. வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தும் வேலையைச் செய்கின்றார்கள். வரலாற்றை நிலையாக பின்னோக்கிச் கொண்டு சென்றிட முடியாது. இனக்குழுமங்கள் தேசிய இனமாகப் பரிணமிப்பது இயல்பான வளர்ச்சியாகும். இந்த சமூக வளர்ச்சிப் போக்கினை மறுப்பது கருத்தியல்வாதம்  ஆகும். இனக்குழுமங்கள் வர்ணாசிரம சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாகும். ஆனால் வளர்ச்சிப் போக்கில் இனக்குழுமங்களும் பலியாகியே உள்ள. 

தமிழகத்தில் தூய தமிழ் சாதிகளில் இருந்து தமிழ் தேசியம் உருவாக்க முடியும் என்று கற்பனாவாத, பிற்போக்குச் சிந்தனை முன்னிறுத்தப்படுகின்றது. ஒரு நாட்டு எல்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், இனக்குழுமங்கள் இருக்க முடியும். அந்த எல்லைப் பிரதேசத்தில் உள்ளவர்கள்  ஒன்றுகலக்க முடியும். பல நூற்றாண்டுகளாக வாழும் மக்கள் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய இனத்துடன் பின்னிப் பிணைந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் சாதிய அடையாளத்தைத் தோண்டியெடுத்து அவர்களை  நீங்கள் மற்றவர்கள், தாம் தூய தமிழர் என்று பிரிவினை உண்டாக்கப்படுகின்றது.  பெரும்பான்மை மக்களிடையே சிறுபான்மை மொழியினர் வாழ முடியும். அவர்கள் வீட்டில் தாய்மொழியை பேசிக் கொண்டு, மொழியை மறக்காமல் வாழ முடியும். அவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் மொழிச் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள். இது புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமையைப் பெற்று வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே தமிழகத்தில் தமிழ்த் தேசிய இனத்தினுள் உள்ளவாங்க முடியாதவர்கள் மொழிச் சிறுபான்மையினராக இருக்க முடியும் என்பதை மறுக்கின்றனர். அவர்களை சாதியாகவே  அடையாளப்படுத்துகின்றனர். சனநாயகப் போக்கை சாதிய- தேசியம் பேசுபவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு தேசத்தின் பெருந்தேசியப் பெருமையைக் கொண்டு ஒடுக்கினால் அது பிற்போக்கானதாகும். இதனை குறுந்தேசியவாதம் என்று அழைக்கப்படுகின்றது. தமிழகத்திலும், ஈழத்திலும் குறுந்தேசியவாதம் உருவாகினால் அது ஆபத்தானதும், பிற்போக்குமாகும்.

 

கல்லூரி பாடப்பிரிவுகள்

முதலாளித்துவ உச்சி வளர்ச்சியின் விளைவாக மிகவிரைவாகவே பல்கலைக்கழகங்களில் கல்வித் திட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ள. மேற்கு நாடுகளில் உள்ள மானிடவியல், தொல்லியல், சமூகவியல் எனும் துறைகளைப் போன்று உலகின் பல பாகங்களிலும் வெவ்வேறு பாடநெறிப்பிரிவுகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்பட்டது. கல்விசார் உலகில் மானிடவியல், சமூகவியல், உளவியல், வரலாறு போன்ற  பாடநெறிகளை கற்றுக் கொள்ள முடியும். அங்கே அணுமுறைகள் குறித்த பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாக பாடநெறியானது கற்றுக் கொடுக்கப்படுகின்றது. (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்து இருக்கின்றமை ஒரு புறமிருக்க) அணுகுமுறையாக Sturcturalism, functionalism (Emil Durkheim), sturctural functionlism (Levi Struss,  contradictions perspective, Marxism,  (interactional perspective of social anthropology on the level of the persons involved instead of on a socio-structural level. Ethnic identity becomes and is maintained through relational processes of inclusion and exclusion. -Fredrik Barth) நவமார்க்சியம் (அகநிலைவாத) என்று புதிய பன்முக ஆய்வு முறைகளை புகுத்துவது இன்றைய கலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம்.

அறிவுசார் ஊழியர்களாக மறுவுற்பத்தி செய்யப்படும் பிரிவினர்கள் சமூகத்தளத்தில் தமது புலமைகளை வெளிப்படுத்த நுழைகின்றனர். இவர்களின் கல்வித் தகமை (புத்திஜீவித்தனம் வேறு) எல்லோரிடமும் இருப்பதில்லை. இவர்கள் கொண்டுள்ள பல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விட மேலாண்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள். இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துகளினால் ஏற்படுகின்றது. மார்க்சியம் அல்லாத போக்கையும் மார்க்சியமாக முன்னிறுத்தப்படுகின்றது. இவைகள் மாற்றுக் கருத்து என்ற அடிப்படையில் சமூகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த அறிவுசார் பிரிவினர்களின் செயற்பாடு உண்மையான மக்கள் நலம் கொண்டவர்களிடையே, ஆளுமைகளிடையே மயக்கத்தை ற்படுத்தி விடுகின்றனர். இடதுசாரிக் கட்சிகளிடையேயும் திரிபுவாதக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. இந்தப் பிரிவினரால் பல்வேறு படைப்புக்கள், கோட்பாடுகள் சமூகத்தில் தாராளமாக அறிமுகப்படுத்தப்பட்டன. பல மொழிபெயர்ப்புக்களும் வந்து குவிகின்றன. குறிப்பான நாட்டுச் சூழலை அறிந்து கொள்ள முடியாது. புதிய கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது.

 

ஐரோப்பிய சூழலில் பல்கலைக்கழக கல்வியினால் தன்னார்வ நிலையில் உந்தப்பட்ட மாணவர்கள் வெவ்வேறு விடயங்களில் ஆர்வம் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் ஆர்வத்தை தேடல் மூலம்  பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். இந்தியச் சூழலில் புதிய விடயங்களையும், தத்துவ விசாரணை, ஆர்வமான விடயங்களைத் செயற்படுத்தல், அறிந்து கொள்ளல் அன்றாட நிகழ்வாகும். இவ்வாறான ஒரு அறிதல், கலாச்சாரச் சூழல் இருந்து கொண்டு வருகின்றது. இவ்வாறே தமிழகத்தில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடாக உயர்கல்வி பெற்றவர்கள். கற்ற கல்வியை, புதிய விடயத்தை ஆலையில்லா ஊரில் இலுப்பங்காய் சக்கரை போல புதிய ஜாம்பவான்கள் முளைத்தனர்  எனலாம். ”கல்லூரி, பல்கலைக்கழக மட்டங்களில் நடைபெறும் இத்தகைய விவாதங்கள் போக, பல தன்னார்வக் குழுக்கள் பின்நவீனத்துவக் கருத்துக்களை பரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றன. சென்னையிலும், மதுரையிலும் உள்ள இறையியல் கழகங்கள் பல்வேறு தரப்பு அறிவுஜீவிகளைக் கூட்டி இது குறித்து கருத்தரங்குகள் நடத்துகின்றன. (பக் 45 வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வுவட்ட கட்டுரைகள் 5) எனது பல்கலைக்கழக காலங்களில் இவ்வாறான சொற்பொழிவுகள், ஆய்வு உரைகள் நடத்தப்படுவது இயல்பாக இருந்துள்ளது. மேற்கில் நடைபெற்ற உரையாடல் பல நாடுகளில் நடைபெற்றன. இதனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்தினர்.

 

அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து வெளியே வந்த கல்வியாளர்கள் தாம் படிக்கும் நாட்டில் கல்விக்கான ஆலோசனை குழுவில், மாணவர் அமைப்பில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டால் பத்திரிகைகளில் விளம்பரம் இடுபவர்கள். இவர்கள் புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் இடத்தில் தம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை, தாம் சொல்வது தான் உண்மையானது, தமது சிந்தனையை மீற எவருமில்லை, இவர்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல விடயங்களை முன்னிறுத்திவிட்டுச் சென்றிடுவர். இவ்வாறான (குட்டிமுதலாளிய) சிந்தனை கொண்ட படைப்பாளிகளின் புதிய கோட்பாட்டு உருவாக்கத்தின் பின்னால் உலகின் மிகவும் வெற்றி கொண்ட தத்துவமாகிய மார்க்சித்தை தமது சிந்தனை வளர்ச்சித் தரத்திற்கு கீழ் இறங்க வரவேண்டும் என்று கருதுவதே தன்னிலை-மையவாதமாகும். தன்னிலைமையவாதம் தனிமனிதனின் இருப்பையும், சுய சிந்தனை, சுயசெயற்பாடு, சுயதேவை என்பனவற்றை முதன்மை கொண்டு செயற்படும் போக்காகும். இவ்வாறான தனித்துவாத, தன்னார்வ, சுயவிளம்பர விரும்பிகளால் முன்கொண்டு வரப்படும் சிந்தனைகள், கோட்பாடுகள், அணுகுமுறைகள் சமூகத் தளத்தில் பெரும் எதிர்ப்புரட்சிகர சூழலை ஏற்படுத்துகின்றது.

 

இவர்களுக்கு மாற்றாக தமிழிற்கு மார்க்சிய அணுகுமுறையை, நடைமுறைத் தளத்தில் இருந்து செயற்பட்ட பேராசிரியர்கள் திரு க. கைலாபதி, திரு கா. சிவத்தம்பி, திரு நா.வானமாமலை, திரு கோ. கேசவன் போன்றவர்கள் கிடைத்தார்கள். இவர்களின் அணுகுமுறை இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படை அமைந்தது. அனைத்து கூறுகளின் இடைச் செயற்பாட்டை துல்லியமாக ஆராயும் திறனாய்வு முறையை வளர்த்துக் கொண்டார்கள். இவர்களுக்கு சமூக மாற்றம் பற்றிய தூண்டுதல் இருந்த காரணத்தினால் புரட்சிகர அமைப்புகளிலும் தாக்கத்தைச் செலுத்த முடிந்தது. தொழில் முறை அணுகுமுறை, பின்மார்க்சியர்கள் (பின்னவீனத்துவ) அவ்வாறு அல்ல. அவர்கள் சமூக தளத்தில் பிழைப்பிற்கான ஆய்வுத் தளத்தில் செயற்படுகின்றார்கள். இந்த நபர்களின் செயற்பாடுகள் சமூகத்தின் எதிர்விளைகளை ஏற்படுத்தியிருக்கின்ற. மேற்கின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டலில் சமூகத்தில் இறக்கிவிடப்பட்ட கருத்துருவாக்கிகளே அடையாள அரசியலை அறிமுகப்படுத்தினர்.

புரட்சிகர மார்க்சியம் சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்களின் கைகளில் இருக்கின்றது. சமூக மாற்றத்திற்காக அமைப்பு ரீதியாக உழைக்கின்றனர். இதற்கு வெளியே சமூக ஆவலர்கள்,  புத்திஜீவிகள் என்ற போர்வையில் மார்க்சியத்தை பயன்படுத்துகின்ற போது, அவர்களையும் மார்க்சியர்களாக (கம்யூனிஸ்டுகளாக) கணிப்பிடும் நிலை எமது சமூகத்தில் இருக்கின்றது. இவ்வாறான ஆய்வாளர்களுக்குப் பின்னால் குறிப்பிட்ட தலைமுறையினர்  சென்று விட்டனர். குறிப்பாக மேற்கத்தை ஆய்வுகள் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட நாட்டின் சூழலை மதிப்பிட முடியாதவர்கள். மேற்கத்தைய ஆய்வுகளை கண்ணை மூடிக் கொண்டு ஒப்பிக்கின்றனர். கட்சிக்கும் அறிவுஜீவிகளுக்குமான உறவு பின்னவீனத்தினால் சிக்கலுக்கு உள்ளாகியது.  கட்சிக்கு அப்பால் தன்னியல்பை வேகமாக வளர்த்துவிட்டது.

அணுகுமுறை மார்க்சியத்தால், புரட்சிகர மார்க்சியம் போல் நடைமுறை ரீதியாக புரட்சிக்கு பங்களிக்க முடியாது. ஆனால் ஒரு கட்சியிடம் அறிவாளிளை  எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செயற்திட்டம் இருக்க வேண்டும். மேலை நாடுகளில் அணுகுமுறை மார்க்சியம் கற்பிக்கப்படுவதும், அது வளர்ந்த நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே வெவ்வேறு அணுகுமுறை கோட்பாடுகளும் மேலைத்தேய நாடுகளில் இருக்கின்றது. இந்த வகையில் மேற்கு நாடுகளில் கல்வி கற்ற இந்திய புத்திஜீவிகள் தாம் படித்தவற்றை இந்தியாவில் விதைத்துள்ளார்கள். மேற்கத்தைய நாடுகளின் பாடத்திட்டத்திற்கமைய கல்விகற்றவர்கள் புதுமையான சொல்லாடலாகவும், புதுக்கண்டுபிடிப்பாகவும் சமூகத்தின் முன் வைத்துள்ளனர்.

 

சமூகத்தளத்தில்

இலங்கை, இந்திய பரப்பில் வெவ்வேறு முகத்தைக் கொண்டு வருகின்றார்கள். அவர்களின் பின்புலம் அவர்களுக்கான மூலதனமாக அமைகின்றது. தமக்கு இருக்கின்ற சமூக அந்தஸ்து, வலைப் பின்னலை கொண்டு செயற்படுகின்றார்கள். இந்த வலையமைப்பு என்பது மார்க்சியம் அல்லாத விடயங்களை முன்வைக்கின்றது. குறிப்பாக அகநிலை உணர்வை முன்னிறுத்திக் கொள்கின்றது. குறிப்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு என்பதும் காலாவதியாகி ஆக்கப்பட்டது, அமைதிவாதத்தை முதன்மையான கருத்தாக்கமாக கொள்ளப்படுகின்றது.

பல்கலைக்கழக ஆய்வுகளைப் பொதுதளத்திற்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை விளங்கிக் கொள்பவர்கள் என்றில்லை. பல்கலைக்கழங்களில் பயில்பவர்களும் சரி, படித்து வெளியேறியவர்களும் சரி பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியே. இந்தக் கல்வி முறையான சமூக அமைப்பிற்கு ஏற்றவர்களாக வசப்படுத்தக் (domesticating) அமைந்திருக்கின்றது. காட்டு மிருகங்களை பழக்கி எடுத்து வீட்டு வளர்ப்பு மிருகமாக்கும் முறையாகும். இந்தக் கல்வி முறை சுயவளர்ச்சியையும், பொருளாதாரக் கட்டமைப்பை சார்ந்தே அமைகின்றது.  இந்த சமூக அமைப்பை மாற்றக் கூடிய அல்லது விடுதலைக்கான கல்வி முறை இல்லை. இன்றைய தாராளவாதம் எனினும் வர்க்கச் சிந்தனையை விதைப்பதற்கு என்று உருவாக்கப்படுபவர்கள் பலர் மார்க்சியர் என்கின்றனர். மனிதர்களிடையே வர்க்க உணர்வைச் சிதைக்கும் வகையான செயற்பாடுகளும்,  முதலாளித்துவ அமைப்பு தன்னை அம்பலப்படுத்துவதை தடுப்பதற்கு தன்னியல்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அதனை சமூகப் போக்காக  மாற்றுகின்றது. தொழில் முறைக் கல்வி என்பது தமது உழைப்பை விற்பது என்ற நிலையில் அமைவது.

 விடுதலை அரசியல் என்பது மக்களின் நலனுடன் தொடர்புடையது. சிந்தனை செயற்பாடுகள் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் சார்ந்து இருக்க வேண்டும். தொழில் முறை போன்று செயற்பட முடியாது. அவ்வாறு அமையவும் முடியாது. கட்சியின் வழிகாட்டல் என்பது இலக்குச் சார்ந்ததாக இருக்கும். தனிமனிதர்கள் தாம் விரும்பியவாறு பேசவோ செயற்படவோ முடியாது.

இந்தப் வளர்ச்சிப் போக்கில் மார்க்சிய பின்புலத்தைக் கொண்ட அமைப்புக்களும் விளிம்புநிலை என்ற சொல்லாடலுக்குள் பலியாகியிருக்கின்றது. இலங்கை தலித்தியவாதிகள் எவ்வித தத்துவ விசாரணையின்றி தலித்தியம், விளிம்புநிலை என்று இந்தியச் சிந்தனையை இலங்கைக்கு இறக்குமதி செய்கின்றனர்.  இலங்கை தலித்தியவாதிகளுக்கு தத்துவ விசாரணை பற்றி எவ்வித அக்கறையும் இல்லை. இவர்களிடம் தலித்தியம், விளிம்பு நிலை என்று கேட்டால் 15 வருடங்களுக்கு முன்னரே கோட்பாட்டுப் பிரச்சனை பற்றி ஆராய்ந்து தீர்த்துவிட்டதாகக் கூறுகின்றனர். இற்றைவரைக்கும் ஒப்பித்ததை திரும்பவும் ஒப்பித்துக் கொள்கின்றார்கள். இவர்களிடத்தில் அனுபவவாதம், வாய்ப்பாட்டுவாதம், அறிவொணாவாதம், இயங்கியல் மறுப்பு, பொதுப்புத்தி இவற்றிற்கு உட்பட்டவர்களாக உள்ளார்கள். மாறிவருகின்ற  சமூக பொருளாதார உறவில் இன்றைக்கு மக்கள் வந்திருக்கும் நிலை பற்றிய போதிய புரிதல் இவர்களிடம் இல்லையெனலாம்.

கலாசாலை ஆய்வுகள், கலைச்சொற்கள் என்பவற்றை பொதுவெளிக்குக் கொண்டு வருவது இன்றைய காலத்தில் சாத்தியமானது. கலாசாலை ஆய்வுகள் நடைபெற்று பரிசோதனை செய்யப்பட முன்னரே பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. பொதுப்பரப்ல் அனைவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட, கல்விச் சமூகம் அல்ல. பொதுவெளியானது பொதுப்புத்தியில் அமைந்ததாக இருக்ககின்றது. எவரும் தமது கருத்தை எழுதிவிட முடியும் ஏனெனில் அது அவர்களின் கருத்துரிமை. தமது கருத்துரிமை அடிப்படையில் பொருள்முதல்வாத சிந்தனைக்கு அப்பாலும் கருத்திட முடியும், அவ்வாறான கருத்துரிமையை மறுப்பதே மனித, தனிமனித மீறலாகக் கட்டமைக்கப்படுகின்றது.

பொதுப்புத்தியில் அமைந்த விவாதங்களை அணுகுவோம்.  கருத்தியல்வாதம் செய்வதற்காகவே நிலையில் தன்முனைப்புடன் கருத்துவிடுவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய வேளையில்  கல்தோன்றி மண்தோற்றாக் காலத்து மூத்தகுடி என்று தமிழர் (கல் -மலை என்ற பொருளும் உண்டு! கல் உயர் தோள் கிள்ளி - மலை போன்ற உயரமான தோள் உடைய சோழ மன்னன் கிள்ளிவளவன் கல் இயங்கு கருங் குற மங்கையர்- மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள் மண் - வயல் என்ற பொருளும் உண்டு! மணிநீரும் ”மண்ணும்” மலையும் அணிநீழற் காடும் உடையது அரண் (குறள்) மண் வளம் என்று சொல்கிறோமே விவசாய நிலத்தை கல் தோன்றி  - மலை தோன்றி மண் தோன்றா வயல் தோன்றா“ இதனை தேசிய வெறியாக கட்டமைக்கப்படுவதும் உண்டு. இதன் பொருள் என்பது படிமுறை வளர்ச்சி என்பதை குறிப்பதாகும். இன்னொரு பகுதியினர் தேசியஇனப் பெருமையை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது. தேசியபெருமிதத்தை வெளிக்கொண்டு வருவதற்கும் கல்வெட்டுகள், ஆய்வுத் தகவல்களை வெளியிடுகின்றார்கள்.  ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இன்னும் ஆழமாகச் செய்யவேண்டிய ஆய்வுகளும், முழுமைபெறாத ஆய்வுகளையும் முடிந்த முடிவாக  முன்வைக்கின்றார்கள். 

க்காலத்தில் மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் பல அங்கு உற்பத்தி செய்யப்டவில்லை. மாறாக அவை வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டவதை வாங்கும் திறன் கொண்ட மக்கள் கூட்டம் வாழ்ந்திருக்கின்றதை இன்றைய ஆய்வு வெளிப்படுத்துகின்றது. இன்றும் செய்யப்படவேண்டிய ஆய்வுகள் இருக்க நாம் தான்தோன்றித் தனமாக எதனையும் அறுதியிட்டுக் கூற முடியாது. தொல்பழங்குடி வாழ்வியலில் உள்ள வழிபாட்டு முறை நிறுவனமயப்பட்ட மதங்களாகவும், வர்ணாசிரம சிந்தனை கொண்டதாக இருந்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை. பல ஆய்வுகள் கலாசாலைகளில், நிறுவனங்களில் செய்யப்பட வேண்டியவையாகும். ஆனால் பொதுவெளியில் தமது புலமையை வெளிப்படுத்த எதனையும் எழுதமுடிகின்றது.

இதே போன்ற பிரச்சனை சாதியைப் பெருமையை நிலைநிறுத்துவதற்காக இலக்கியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகின்றார்கள். இவர்கள் ஆண்டாண்டு காலமாக கீழ் நிலை கொண்டு வஞ்சித்த நிலைக்கு பரிகாரம் காண்பதற்காக துடிப்பது புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இலக்கியங்களில் கூறப்படும் வேளீர், பரதவர், மறவர் போன்ற இனக்குழுமங்களில் இன்றைய தோற்றம் தூய்மையானதாக இருக்கமுடியாது. இனக்குழுமங்களின் வாழ்வியல் பின்னர் இணைந்து புதியதாக மருவியிருக்கும். இனக்குழுவில் வந்தவர்கள், அரசர்களாகவும், பிரபுக்களாகவும், தொழிலாளர்களாக மாற்றம் கொண்டு சமூகம் பிரிகின்றது. அரசர்களும், பிரபுகுலத்தவர்களும், சமயகுரவர்களும் ஆளும் வர்க்கமாக இருக்க பெரும்பான்மையானவர்கள் உழைக்கும் வர்க்கமாக மாற்றம் பெறுகின்றார்கள். இந்த பெரும்பான்மை மக்களின் வரலாறை எழுத்தில் உள்ள உயர் வர்க்கத்தின் வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.

இலக்கியத்தையும், அரசவம்சத்தின் வரலாற்றையும் வைத்துக் கொண்டு இன்றைய காலத்தில் வாழும் சாதிகளை இணைத்துப் பேசுவது ஒரு வகை தூய்மைவாதமே. ஒரு ஆய்வாளரின் அகத்தேவை ஒரு ஆய்வின் முடிவைத் தீர்மானிக்கின்றது. சிலவருடங்களுக்கு முன்னர் மேற்கு இந்திய கடல் பிரதேசத்தில் கடலடி குடியிருப்பை கண்டடைந்த ஆய்வாளர்கள், அது கிருஸ்ணின் பிறப்பிடமான துவாரகாவைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். இது இந்துத்துவா சிந்தனையின் தேவையில் அமைத்துக் கொண்ட இலக்காகும். 7000 வருடங்களுக்கு முன்னர் கிருஸ்ண வழிபாடு இருந்ததாகக் காட்டும் ஆவல். ஆகவே ஒரு ஆய்வாளின் அகமுடிவில் இருந்து ஆய்வினை மேற்கொள்ள முடியாது.

வரலாற்றுத் தடயங்கள், எழுத்துகள், சமூகத்தில் வழங்கும் ஐதீகங்கள் இவற்றை பன்முகப்பட்ட ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அதாவது மானிடவியல், சமூகவியல், தொல்லியல், சமூக உளவியல், வரலாறு என பன்முகப்பட்ட ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய ஆய்வுகளைப் பொறுத்தவரையில் முழுமையான வளர்ச்சியடைந்த நிலையில் தானா தமிழர் சார்ந்த ஆய்வுகள் இருக்கின்றது? ஆளும் வர்க்கங்களும், பிற்போக்குவாதிகளும், திரிபுவாதிகளும் முன்வைக்கும் கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது. அதிலும் இன்றைய நவீன ஊடாகம் என்பது வெகுமக்கள் யார் என்றாலும் கருத்துக்களை வெளியிட, அறிந்திட இலகுவாக முடிகின்றது. இந்த ஊடகப் பரப்பு என்பது அராஜகப் போக்குக் கொண்டதாகவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதாகவும் இருக்கின்றது.

 

விளிம்பு நிலை  (Liminal stage)  

பின்னவீனத்துவத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வரையறையாகும். இது Rites de passage என்ற கோட்பாட்டில் இருந்து உருவாகியதாகும். Rites de passageஇன் உள்ளடக்கத்தை முழமையாக விளக்கிக் கொள்ள வேண்டும்.   விளிம்பு நிலை என்பதன் அர்த்தத்தினை கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தச் சொற்பதம் என்பது பல மயக்கத்தைக் கொடுத்துள்ளது. இங்கு (marginalization) தரப்படுத்துதல் அல்லது ஒதுக்குதல், ஒடுக்கப்படுத்தல் (oppressed, exploited) என்று சுரண்டப்படும் மக்கள் தொகுதியை கூற பயன்படுத்தப்படும் பொது சொற்பதங்களாகும். ஆனால் ஒடுக்கப்படும், சுரண்டலுக்கு உள்ளாகும் விளிம்பு நிலை என மக்கள் கூட்டத்தினை விழிப்பதற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. இங்கு மேற்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் அரசியல் சொற்பதங்களைக் தமிழ்படுத்துவது இலகுவானது அல்ல. உதாரணத்திற்கு லும்பன் (உதிரிப்பாட்டாளி)  குட்டி பூர்சுவா (குட்டி முதலாளித்துவ) வர்க்கம்  என்ற சொற்தொடர்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும் அதற்கு நிகரான சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் இருக்கின்றது. மேற்கண்ட சொற்கள் அரசியல் அரங்கில் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனால் விளிம்பு நிலை என்ற சொற்பொருள் குறித்து அரசியல் உலகில் பரீட்சையம் உள்ளவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. ஆனால் இணைய விவாதங்களை நோக்குகின்ற போது இந்தச் சொல்லாடல் பின்னவீனத்துவாதிகளினால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என அறிய முடிகின்றது. கலாசாலை வரையறுப்பு என்பது முக்கியமானதாகும். எதுவும் முற்றாக தனிதனிதர்களின் பொதுப்புத்தியின் அடிப்படையில் இருக்க முடியாது. சில பொதுபுத்தியின் கருத்துக்களை பார்ப்போம்.

விளிம்பு நிலை என்றால் என்னவென சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டும் போது பல பதில்கள் பெறப்பட்டது. இதிலும் விக்கிபீடியா என்ற தளத்தில் உள்ளது. இதோ. அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடிபோதை போன்ற தீயபழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும்.  ஆங்கிலத்தில்; working class, underclass  என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் உழைப்பாளிகள்,  விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு. (wikipedia -tamil)

நபர்களின் கருத்துக்கள் சில.......

1.“Marginal என்பதை இங்கு விளிம்பு நிலை என்றே அழைத்து வருகிறார்கள், அதற்கு கீழறு நிலை என்றும் ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம், ஆனால் சில சொற்கள் பொது வழக்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அதையே நாம் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.”

2.“விளிம்பு நிலை மனிதர்கள் என்பவை மிகவும் ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு, பொருளீய, பண்பாட்டு, சமூக பிரிவினரைக் குறிக்கிறது. இது ஒரு பின் நவீனத்துவ அணுகுமுறை. வர்க்கமற்ற சமூக வகையினம் இருக்கிறது பார் என்று சொல்வதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வர்க்கப் பார்வையைத் தவிர்ப்பதற்கான இந்த முயற்சி வரவேற்கத்தக்கதல்ல. அனைத்து சமூக, பண்பாட்டு, மன ரீதியான ஒடுங்கிய நிலையையும் வர்க்கப் போராட்டத்தின் மூலமே ஒழிக்க முடியும் என்பது என் கருத்து.”

3.“ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தைத் தாண்டி ஒருங்கிணைக்கப்படாத, முடியாத உதிரிப்பாட்டாளிகள் வர்க்க ரீதியிலும் சமூக ரீதியிலும் வாழ்கையின் சமூக வரலாற்று அடுக்குகளின் அடித்தளத்தில் அழுத்தப்பட்டு துன்பத்தில் வாழ்பவர்களே விளிம்பு நிலை மனிதர்கள்.”

4.“விளிம்பு நிலை என மார்க்சிய வரையறை ஏதும் இல்லை தோழர். ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனம் என இரண்டு மட்டும்தான் உண்டு தோழர். மனித உரிமை விளிம்பு நிலை என்ற வார்த்தைகள் ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிறுவனங்களும், பின் நவீனத்துவ கும்பலும் புதிய இடது கும்பலும் பயன்படுத்தும் வார்த்தைகள்..”

 

விளிம்பு நிலை என்ற சொல்லாடல் தனித்தே வெறும் சொல்லாக தமிழ் பரப்பில் ஒடுக்கப்பட்ட -தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் கூட்டத்தினை வரையறுக்கின்றனர். கலாசாலை வரையறையும், அரசியல் வரையறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விளிம்பு நிலை என்ற சொல்லாடல் மானிடவியல் பாடநெறிக்கு உட்பட்டதாகும். மானிடவியல் பாடநெறி எடுத்துச் சொல்லும் விளக்கத்தினை விளிம்பு (marginal -Victor Turner) என்று பார்க்கின்ற போது பின்வருமாறு வரையறுக்கின்றது. முன்னோர்களுக்கு ஏன் அவர்கள் சடங்குகளைச் செய்கின்றார்கள்? பழங்குடியினர் ஏன் அவ்வாறு சிந்திக்கின்றார்கள்? அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை மார்க்சிய நோக்கில் இருந்து பார்ப்பதற்கு அப்பால் உருவாக்கப்பட்ட பலகோட்பாடுகளைப் போலவே விக்ரர் ரேர்னர்  (Victor Turner)  சடங்கியல் தளத்தில்  மூன்று நிலைகளைக் கூறுகின்றார். ஏன் மனித சமூகத்தில் அவ்வாறான பழக்கங்கள் இருக்கின்றது என்பதையும், மனித கூட்டம் இந்தக் கட்டங்களை தாண்டிச் எவ்வாறு செல்கின்றது என்பதையும் விளக்குகின்றனர்.

சமூகத்தில் விளிம்பு நிலையினர் (Marginals) என்றும் தனித்த பிரிவினரையும் விக்ரர் ரேர்னர் இனங்காண்கிறார். இவர்கள் மேற்கூறிய புறவயத்தாரிடமிருந்து வேறுபட்டவர்கள் விளிம்பு மக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவின் பேராளர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூகம், பண்பாட்டு நிலைகளில் தனித்தன்மையுடன் விளங்குவர். சில சமயங்களில் ஒரு குழுவினர் மற்றுறொரு குழுவினருக்கு எதிர்நிலையினராகக் கூட இருப்பர். தாங்கள் தாழ்ந்த பிரிவிலிருந்து தோன்றியவர்கள் என்ற நிலை, நடைமுறையில் அமைப்புக்கு எதிராக மீசமூகம்” கட்டமைக்கின்ற பண்பைக் கொண்டிருப்பதன் மூலம் தங்களை உயர்ந்த குழுவினராகக்  கருதிக் கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் அமைப்பு” குறித்து விமர்சனம் செய்பவர்களாகவும், எதிர் - அமைப்பைக் கட்டமைத்து மீசமூகம் ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள், ஆகியோர் விளிம்பு நிலையினராக அமைகின்றனர் (225 பண்பாட்டு மானிடவியல் - பக்தவத்சலபாரதி)

இயற்கையை எதிர்த்துப் போராடி மனிதக் குரங்கிலிருந்து மனிதராக மாறிய சமூக வளர்சி 100 000 - 80 000 வருடங்களாக இருக்க முடிகும். அந்த மனிதர்கள் இயற்கையை அடக்குவதற்கே போராட வேண்டியிருந்தது. இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்த மனிதர்கள் தான் இருந்தனர். நெருப்பை கண்டுபிடித்ததே முதல் கண்டுபிடிப்பாகும். அதன் பின்னரே மொழியைக் பேசிப் பழகியிருக்க முடியும். இயற்கையை வசப்படுத்த கூட்டாக போராட வேண்டியிருந்தது. உழைப்புகள் அனைத்துவம் சமூகத்திற்கானதாக இருந்தது. அந்த மக்கள் தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.  புராதனகாலச் சமுதாயத்தில், அறிவியலும் கிடையாது, கலையும் கிடையாது, மந்திரம் (magic) மட்டுமே இருந்தது.’’ (ப. 16 ஜோர்ஜ் தோம்சன் -மனித சாரம்) உற்பத்திமுறை வளர்ச்சியின் பின்னரான காலத்தில் தான் மாற்றங்கள் ஏற்படுகின்றது.

இனக்குழுமங்களாக வாழ்ந்த சமுதாயத்தில் மனிதர்கள் செய்யும் சடங்குகளுக்கும்,  வழிபாடுகளுக்கும் விளக்கங்களை தேடிச் செல்லும் மானிடவியாளர்கள். அந்த இனக்குழுமத்தின் சின்னங்களின் குறியீடுகளுக்கு வியாக்கியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இனக்குழுமம் என்ற நிலையில் இருந்து தேசிய இனங்களாக உருவான பின்னரும், பழமைகள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்ற. மனிதர்கள் பண்பாட்டு நகரங்களைப் படைத்தது கடந்த 9000- 7000 வரையில் தான் சாத்தியமானது. சமூக வளர்ச்சிப் போக்கு இடையறாத போராட்டங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றது.  ஆதிப் பொதுவுடமை, அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூகம் என வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. தொல்பழங்குடி வாழ்வியல் சடங்குள் என்பது தொன்மையானது. இது இன்றைய சமூகத்திலும் சிதைந்த நிலையில் தொடர்கின்றது.

 கிறிஸ்தவ மதத்தில் இறைவனின் மகனான கிறிஸ்து மக்கள் செய்த பாவங்களைப் போக்கவே தன்னை பலியாக்கினார் என்கின்றது. இதன் தொடர்ச்சியாக கிறிஸ்தவத்தில் பிறக்கும் பிள்ளைகள் பாவத்துடன் சேர்ந்தே பிறப்பதாகவும், சாத்தான் குடியிருப்பதாகவும் கூறுகின்றது. கடவுளைப் பெறுவதன் மூலமே பாவத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள், நரகத்திற்கு செல்வதில் இருந்து தப்பிக்க முடியும் எனக் கருதுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை திருமுழுக்கு பெறாதவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்து விடுதலை பெறமுடியாது. இவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகத் தான் இருக்க முடியும் எனக் கருதுகின்றது. திருமுழுக்கு, முதல் நற்கருணை மற்றும் உறுதி பூசுதல் (BaptismFirst Holy Communion, and Confirmation.) இதனை மூன்று திருவருட்சாதனம் என அழைக்கின்றார்கள். இந்த சடங்கும் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலையை அடைவதாகும்.

இதனை ஒரு நிலை அதாவது மனிதர்கள் பாவத்திற்கு உட்பட்டிருக்கும் நிலை. இதில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும் காலம் ஒன்றிருக்கின்றது. அங்கு திருமுழுக்கு சடங்கினை பெறும் வரையில் அவர் ஒரு கிறிஸ்தவராக ஆக முடியாது. இதற்காக சடங்கினை ஏற்படுத்தும் காலம் ஒன்றிருக்கின்றது. இந்தக் காலம் 30 நாட்கள் அல்லது விரைவாக சடங்கினை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். இவ்வாறே பழங்காலத்திலிருந்து தைப்பொங்கல், ஆடிக்கூழ் போன்ற நன்றிக்கடன் செலுத்தும் விழாக்களும், இறந்தவர்களின் ஆவியைச் சாந்தப்படுத்த நிகழ்த்தும் சடங்குகளும் அடங்கும்.

கன்னிப்பெண்கள் (திருமணமாகாத) இறந்தால், கற்பிணிப்பெண் இறந்தால் அதற்கான சடங்குகளைச் செய்கின்றனர். கர்ப்பிணிப்பெண், திருமணமாகாத பெண் இறந்தால்  அவர்களின் ஆவிக்கு சடங்கு செய்ய வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. இறந்தபின்னர் சமாதானமற்று, நிம்மதியற்று அலையும் ஆவி, (ஆன்மா) என்பது முதல்நிலை (புறவய மனிதர்கள் நிலை - Outsuderhood) அந்த ஆவிக்கு (ஆன்மா) சடங்கிற்கான தயாரிப்புக்களும், சடங்குமுறைகளும், சாந்தப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் இரண்டாம் நிலை (விளிம்பு நிலை (Marginality- Liminal stage) இறந்த மனிதர் இங்குமில்லை அங்குமில்லை என்ற நிலையைக் குறிக்கின்றது. இதனை தான் மானிடவியலில் இடைநிலை விளிம்பு நிலை என்று வரையறுக்கப்படுகின்றது. அங்குமில்லை இங்குமில்லாத நிலையில் இருக்கின்ற இறந்தவரின் ஆன்மாவின் சாந்திக்காக செய்யப்படும் சடங்குகள் ஊடாக (அமைப்பு தாழ்வு நிலை (Structural inferiority) இறந்த ஆன்மாவுக்கு சாந்தியையும் சமாதானத்தை ஏற்படுத்துவதுதாகும்.

இதற்கு இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போமானால் யாத்திரைக்கு செல்லும் முன் சகல பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுகள் எல்லாவற்றை ஒதுங்கி வாழ்கின்றார். மனிதர்கள் “தூய்மைஎன்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலானது. யாத்திரையை தரிசனம் செய்கின்ற போது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் நிறுத்திவிட்டு யாத்திரையை மேற்கொள்கின்றார். ஆனால் யாத்திரை முடிந்த பிற்பாடு (விளிம்பு நிலை) வழமையான வாழ்க்கையில் ஈடுபடுகின்றார். இவரின் யாத்திரை பூரணம் அடைவதற்கு யாத்திரையினால் ஏற்படும் மனஅமைதியும்  திருப்தியுமாகும்.  யாத்திரை சடங்கு ஒரு நிலையில் இருந்து இன்னொரு (transformational) நிலைமாறும் காலம் விளிம்பு நிலையாகும். அது இங்குமில்லை அங்குமில்லை என்ற இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றது. ஆன்மா- அகவுணர்வின் வெளிப்பாடுகளாக சடங்குகள், வழக்குகளை  வியாக்கியானம் செய்யும் கோட்பாட்டை மக்கள் கூட்டத்தினை பற்றி ஆராய இவ்வரைவை பிரதியிடுகின்றார்கள்.

 

விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல. மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விளிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும் இதுதான் இங்கு எழும் கேள்வி. பிச்சை எடுப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களும் விளிம்பு நிலையினர் என்று அழைக்கப்படுகின்றார்கள். மனித குலத்தின் அங்கத்தவர்களை அங்கீகரிக்காத நிலையைத் தான் கருத்துருவாக்கிவாக்கிகள் மேற்கொள்கின்றார்கள். மார்க்சியம் உதிரிப் பாட்டாளிகள் (உழைப்பை நல்காது பிச்சை எடுப்பவர்கள், லும்பன்- களவு, ஏமாற்று வேலைகளிலும் ஈடுபடுபவர்களை குறிப்பதாகும்.) என்று பொருளாதாரத்தில் ஸ்திரம் அற்ற சமூக உறுப்பினர்களை வரையறுக்கின்றது.   

ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்பு வாசனை அற்று, உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிக்கப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிப்பாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். ஆனால் இவர்களை எந்த சடங்கு செய்து மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள். இவர்கள் என்ன தீட்டுப் பட்டா இருக்கின்றனர் அல்லது உடலை விட்டுப்பிரிந்த ஆவியாகவா உலாவுகின்றார்கள், அல்லது பாவத்துடன் பிறந்து பின்னர் ஞானஸ்தானம் என்ற சடங்கின் மூலம் பாவத்தில் இருந்து மீள்வது போல இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? . 

சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களை அங்குமில்லை இங்குமில்லை என்று புதிய கோட்பாட்டு வடிவம் கொடுத்தனர். இங்கு பெறுமதியான மனிதர் உயிர்களைக் கூட அறிவியல் துறை வெவ்வேறு வடிவம் கொடுத்து தனது ஆய்வுப் புலமையை நிறுத்துகின்றது.இந்த ஆய்வுகள் மனிதகுல விடுதலைக்கு என்ன செய்துள்ளது என்பது தான் கேள்வி.

 

சமூக உயர்வாக்கம்

ஒரு சமூக நிலையில் இருந்து இன்னொரு சமூக நிலைக்கு மாற்றம் பெறுவது நடைபெற்று வந்துள்ளது. ஒரு வர்க்க நிலையில் இருந்து இன்னொரு வர்க்க நிலைக்கு மாற்றம் பெறுகின்றது. நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்கள் அதில் இருந்து வீசப்படுகின்ற போது உழைப்பை விற்பதைத் தவிர விற்பதற்கு ஏதும் அற்றவர்களாக வருகின்றார்கள். அங்கு பட்டினி, வறுமை, தெரிவுச் சுதந்திரம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கும் உள்ளாகும் மனிதர்களாக வாழ்பவர்கள். இன்னொன்று சாதியப் பெயர்களை மாற்றுவதும், பார்த்தொழுகுதல் என நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

சமூக வளர்ச்சிப் போக்கானது முன்னைய சமூகப் போக்கினை மறுத்து புதிய நிலை மாற்றம் கொள்வதாகும். ஆனால் பழைய போக்கை சமரசம் செய்வதும், புதியவற்றிற்கு இசைந்து செல்வதும் உண்டு. ஒரு வளர்ச்சிப் போக்கின் அநாகரிகம் என்பது அந்தக் கட்டத்தில் நாகரீகம். அது வளர்ந்து வரும். அவ்வாறு பழைய அநாகரீக வளர்ச்சியை இன்று முன்னிறுத்தும் போக்கும் உள்ளது. இதனை மத அடிப்படைவாத போக்காக இன்று அறிந்து கொள்ள முடியும். அநாகரிக காலத்தின் நாகரீகமாக அமைந்திருந்தது.  இன்று அநாகரீகத்தின் போக்கை பிரதியீடாக கொள்ள முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது.

ஒரு அடையாளத்தை மாற்றியமைக்கவும், இது தான் உயர்ந்தது என்ற போக்கை ஆதிக்க சக்தியாக இருப்பவர்கள் முன்மொழிகின்றார்கள். சமூகத்தில் உள்ள உயர் வர்க்கங்களின் இருப்பையும், பிற்போக்குச் சிந்தனை வடிவத்தை நியாயம் கற்பிப்பதும் நடைபெற்றுள்ளது. இதிலும் குறிப்பாக காந்தியின் அரசியல் சிக்கலுக்குரியதாகும். கொலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஓரு முகமும், விடுதலைப் போராட்டத்தில் இன்னொரு முகத்தையும் காட்டிய மனிதர். இந்தியா என்ற நாட்டின் ஒன்றிய கட்டமைப்பின் மூலகர்த்தாக்களின் அரசியல் நிலைப்பாட்டில் ஆளுமை செலுத்தும். இந்த வகையில் சனாதனத்திற்கு சமரசம் செய்த போக்கில் தான் அரிசனர் என்ற கருத்தாக்கம் செலுத்தியது.

ஆயிரம் காலம் அடிமையென்றாயே அரிசனன் என்று பெயரு வைக்க யாரடா நாயே” என்ற பாடலை ம.க.இ. வினர் ஒலிப்பேழை வெளியிட்டார்கள். இந்த பாடலில் உள்ள அர்த்தம் மக்கள் தளத்தில் மாத்திரம் இல்லை. ஆய்வுத் தளத்தில் கூட சிந்தனையை தூண்டாத ஒரு அவலம் இன்றும் நீடிக்கின்றது. ஏனெனில் இந்தப் பாட்டு கூறும் மார்க்சிய அரசியலை முன்னிறுத்தும் போது தலித்தியம் என்ற திருத்தல்வாத முழக்கத்தையும், பின்நவீனத்துவ குப்பைகளையும் ஆய்வுலகில் அம்பலப்படுத்துகின்றது.. 

தமிழர்களை வரலாற்றில் அசுரர்கள் என்று மனுதர்மம் போன்ற நூல்கள் இழிவாக கருதுகின்றது. ஆனால் வரலாற்றில் புத்தரின் சிந்தனை பிராமணியத்திற்கு எதிரானது என்றும் அறிவித்துக் கொண்டது சரியானதாக இருப்பினும், இலங்கையில் சாதியம் பௌத்தத்தின் ஊடாகவே உயிர்ப்புடன் இருக்கின்றது..  மனிதர்களில் ஏற்றத்தாழ்வான மனிதர்கள் என்று யக்சர், அனுமானிச என்றும் பழங்குடி வாழ்க்கை முறையை வரையறுத்தோ அல்லது விழித்து கூறும் செயற்பாட்டின் ஊடாகவே ஆரம்பமாகின்றது. பக்தி இலக்கியத்திற்கு முற்பட்ட பாளி மொழி இலக்கியத்தில் பௌத்த துறவிகள் பிராமணியச் சிந்தனையின் தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்துள்ளார்கள் என்பதை அறிமுடிகின்றது. இலங்கை வரலாற்றை பதியும் பாளி நூல்களில் யக்சர், அனுமானுசர் என்று அழைத்துள்ளனர். மனிதர்களில் வேற்றுமை காட்டும் கருத்தியல் வெளிப்படுகின்றது.

 

மனித வர்க்கத்தினை உடலுழைப்பை விற்பவர்கள், வாங்குபவர்கள் என்ற இரண்டு வர்க்க முகாம் இருக்கின்றது. இதற்கு அப்பால் மனிதர்களை (வர்க்க உணர்வு பெறாத நிலையில் உள்ளனர்) பிரிப்பது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இங்கு தத்தம் தேவைக்காக மனிதர்களை மத, சாதி, பிரதேசமென பிரிக்கின்றார்கள். இவையிருக்க குறிப்பாக தமிழ் அரசியல் உலகில் மனிதர்களுக்குப் புதிய நாமம் சூட்டுவது ஒரு போக்காகவே இருக்கின்றது. ஒடுக்கப்படும் சமூகம் தனது விடுதலைக்காகப் போராடுகின்ற வேளையில் புதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி திசைதிருப்பும் காரியம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. காந்தி அன்றைய காலத்தில் எழுந்த எழுச்சியை மதத்தினுள் அடக்கும் முகமாக காந்தி அரியின் புதல்வர் என்று அழைத்துக் கொண்டார். ஒடுக்கப்படும் மக்கள் தமது விடுதலைக்கான தத்துவத்தை தெரிவு செய்கின்ற போது ஒடுக்குமுறைக்கு காரணமான பொருளாதார அமைப்பைச் சிதைக்காது, சிந்திக்கும் முறையை அறிமுகப்படுத்துவது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. சீர்திருத்தவாத முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. கொலனி நாடுகளில் தீர்திருத்தவாதக் கட்சிகள் ஏற்கனவே இருந்து வருகின்றன. இவற்றின் பிரதிநிதிகள் சில சமயம் தம்மை சமூக- ஜனநாயகவாதிகள் என்றும் சோசலிஸ்டுகள் என்றும் அழைத்துக் கொள்கினறார்கள். இங்கு வர்க்க பிரதிநிதிகளின் அரசியல் முதிர்ச்சியும், அரசியல் போக்கும் புரட்சியின் மனநிலையை தீர்மானிக்கின்றது. அன்றையக் 1925-48களில் மார்க்சியம் முழுயாக உள்வாங்கப்பட்டதா என்பது ஆய்விற்குரியதாகும். கம்யூனிஸ்டுக்கள் தலைமை தாங்காது கொங்கிரசிற்கு பதாதைக்குள் செயற்பட்டார்கள்.  எனினும் அன்றையக் காலத்தில் சீர்திருத்தவாத முதலாளித்துவ வர்க்கத்தின்  போக்கை காந்தியின் வரலாற்றில் இருந்து அறிய முடியும்

அரசியல் போக்கை கறாராக முன்வைப்பது கூட பழமைவாதிகளால் எதிர்ப்புக்கும் உள்ளாக வேண்டியிருந்தது. காந்தி ஒடுக்கப்படும் மக்களை மதத்தின் பெயரால் சமரசம் செய்ய முற்பட்டுள்ளார். மதம் ஒரு அபினி என்பதனால் உற்பத்தி மாற்றம் இல்லாது மாற்றத்திற்கு உள்ளாக முடியாது. பழைய கடவுளுக்குப் பதிலாக புதிய கடவுகள்கள் விடுதலை கொடுக்கப்போவதில்லை. இது மீளவும் அந்த மக்கள் கூட்டதின் அடையாளத்தை பாதுகாத்து விடும். இதனை கடந்த காலத்தைய சீர்திருத்தவாத இயக்கம் தொடங்கி, இன்றைய காலம் வரை அறிந்து கொள்ள முடியும்.

ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு, ஆதிக்கம் செய்யும் சமூகப் பிரிவு என்ற பதங்களில் அழைக்கலாம். ஆனால் உயர்சாதி என்று அழைப்பதே பொதுவிதியாக உள்ளது. உயர்சாதி என்று விழித்துக் கொள்ளும் கருத்தியலை மாற்றத் துணைசெய்யாது. ஒடுக்கப்பட்ட சாதிகளை நிந்தித்து அவர்களுக்கு ஆதிதிராவிடர், தலித் (நொறுக்கப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர்- மராட்டிய மொழியில்), பஞ்சமர், விளிம்பு நிலை, அரியின் புதல்வர்கள் என்ற அடைமொழி சூட்டினர். ஒடுக்கப்பட்டு வரும் மக்களை நிந்திக்கும் முறையை மாற்ற முடியாது. புதிய பெயர்களைக் கொண்டு சமூகத்தில் இருக்கும் ஒடுக்குமுறையை தீர்த்து விடுவதில்லை. இவ்வாறான பெயர்களை சூட்டிக் கொள்ள யார் உரிமை கொடுத்தது? ஆனால் இன்றைய அரசியல் கட்சிகள், சாதிய அமைப்புகளை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சமூக உளவியலை இறுக்கமாக மீளவும் கட்டமைக்கின்றது. இந்த சமூக மனப்பான்மைக்கு எதிராக போராட வேண்டியிருக்கின்றது. 

பல்வேறு வகைப்பட்ட புதிய பெயர் சூட்டும் சமூக மனப்பாங்கு திணிப்பிற்கு எதிராக சாதிய வட்டத்தினுள் இருந்து எதிர்ப்புக் குரல் வந்து கொண்டு தான் இருக்கின்றது. சுயசாதிய வட்டத்தினுள் எழும் எதிர்ப்புக் குரலால் புதிய சிந்தனை வட்டத்தினை ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் அரச பரம்பரையுடன் தம்மை இணைத்து பெருமை கொள்கின்றனர்.  ஒடுக்கப்படும் சாதிகளில் சில தங்களை அரச பரம்பரையுடன் தொடர்படுத்தி ஆய்வுகளை வெளிக்கொணர்கின்றன. ஆய்வுகளை கொண்டு வந்து தம்மை தாழ்ந்தவர்கள் இல்லை என்று நிரூபிப்பதன் ஊடாக தம்மை தாழ்வு நிலையில் இருந்து விடுவிக்க முயல்கிறார்கள். அவ்வாறு விடுதலை பெறமுடியும் என்று நம்ப வைக்கப்படுகின்றார்கள்.  பொருளாதார உற்பத்தி முறையில் மாற்றமும், சமூக சிந்தனை மாற்றத்தால் தான்  சாதியச் சகதியை தூக்கியெறிய முடியும்.  ஆனால் அடையாள அரசியல் என்பது சாதியச் சகதிக்குள் இருந்து விடையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை ஒடுக்கப்படும் சாதிகளில் உள்ள உயர்வர்க்கத்தவர்கள் தவறாக வழிகாட்டுகின்றார்கள்.

பள்ளர் என்கின்ற மள்ளர் சாதியினர் தம்மை தலித்துக்களாக வரையறுத்துக் கொள்வதை எதிர்க்கின்றார்கள்.  ”வரலாற்று பெருமையும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன், ஆதி திராவிடன், தாழ்த்தப்பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர்.” (http://devendrakulavelalar.wordpress.com/author/devendrakulavelalar/) பள்ளர் தம்மை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று தம்மை அழைக்க வேண்டும் என கோரிக்கை விட்டிருந்தார்கள். அதற்காக நீண்ட காலமாக போராட்டத்தை நடத்தியும் வந்தார்கள்.  இந்துத்துவாவின் எழுச்சியும், தேர்தல் நலனும் ஒன்றிணைந்த காலத்தில் சட்ட ரீதியாக ஏற்க வைக்க முடிந்தது.

ஈழத்தில் தம்மை சாதிய ரீதியாக அடையாளப்படும் போக்கு இல்லை. ஆனால் தலித்தியத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முயல்வோர் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டார்களாக என தெரியவில்லை. தம்மை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பட்டியிலிருந்து நீக்க வேண்டுமென மேட்டுக்குடியைச் சேர்ந்த அரசியல் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கைவிடுகின்றனர். முன்னர் இடவொதுக்கீடு போன்றவற்றால் முன்னேறிய மேட்டுக்குடியினர் இடவொதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதில் நியாயம் உள்ளது. ஆனால் தொடர்ந்தும் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு இடவொதுக்கீடு தேவையானதாகும்..

ஈழத்தில் ஆறுமுகநாவரில் இருந்து பண்பாட்டை ஆராய முடியாது. கடந்த 150 வருட வளர்ச்சியைத் தான் சமூகத்தினை அளவிடும் பண்பாட்டு அளவீடாக கொள்ளப்படுகின்றது.  ஈழத்தைப் பொறுத்தவரையில் திட்டமிட்ட வகையில் ஆறுமுகநாவலரின் சனாதனத்தினை வைத்து  சமூக அசைவியக்கப் போக்கு மிகைப்படுத்தப்படுகின்றது.

ஆறுமுகநாவலரின் சைவம்- தமிழ் - வேளாளம் என்பது சற்சூத்திராக பிரகடனப்படுத்தப்பட்ட உயர்குடியாக்கமாகும். இங்கு உயர் வேளாளர்கள் மாத்திரம் தான் சைவசமயத்திற்கான பெரும் நீரோட்ட அடையாளமாகக் கொள்ள முடியாது. சைவ நம்பிக்கை கொண்ட பெரும் நீரோட்ட சைவர்களுக்கு நாவலர் மாத்திரம் சமய வழிகாட்டியாக இருக்க முடியாது. கிழக்கு இலங்கைச் சமூக அமைப்பு குடாநாட்டில் இருந்து மாறுபட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குடாநாட்டிற்கு வெளியே தொல்பழங்குடி வழிபாட்டு முறைகள், கண்ணகி வழிபாடுகள் என மாறுபட்டிருக்கின்றது..

சமூக உயர்வாக்கத்தின் (சமஸ்கிருதமயமாதல்) வெளிப்பாடும், 1850ளில் ஏற்பட்ட மதச் சீர்திருத்தங்களின் தாக்கமும் ஆறுமுகநாவலர் தன்னை சற்சூத்திர வேளாளராக அடையாளப்படுத்த காரணமாகியது. சாதிய உயர்வாக்கத்தின் தாக்கமும் புதிய பண்பாடும் ஒன்றல்ல. (சுவாமி விபுலானந்தரின் சமயத் தொண்டு, தமிழ் ஆய்வு குறிப்பிடத்தக்கதாகும்.)

சமூக அமைப்பில் இயற்கைக்கும் மனிதருக்கும் இடையேயான நன்றி நவிலல் பண்பாடே இருந்து வந்துள்ளது. இதில் நேரடியாக இடையில் (நிறுவனமயப்பட்ட சமய குருக்கள்) எவரும் இல்லை. அங்கு மனிதரும் இயற்கையும் தான் இருந்துள்ளது. இந்த வாழ்வியல் தொல்பழங்குடியைச் சார்ந்ததாகும். தொல்பழங்குடி வாழ்வியல் எச்சங்கள் நாட்டாரியல் வழக்கில் இன்றும் இருக்கின்றன. பொது ஆண்டு 2ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு வரையில் தென்கிழக்காசியாவில் பல்லவ, சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு வந்துள்ளது. சைவ, வைணவக் கடவுகள் அவர்கள் கட்டிய கோயில்களில் இருந்தாலும் பிராமணிய வழிபாட்டு (கம்போடியா, வியட்னாம், லாவோஸ் எச்சங்கள் உள்ளன) முறை என்பது இன்றில்லை.  இன்று அவைகள் பௌத்த சின்னங்களையும், பௌத்த வழிபாடுகளையும் தான் காண முடியும். சைவ, வைணவ முறைகள் நிறுவனமயப்பட்டிருந்த வேளை அங்கே அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் சனாதன- பிராமணியச் சாயல்களை இன்றும் காணமுடிந்திருக்கும். பண்டைய கோயில்களில் தொல்பழங்குடி எச்சமாகிய பால், பழம், சந்தனக்குச்சி கொழுத்துதல், (நவீன) குளிர்பானம் வைத்தல் என்பனவே (Shamanism- பண்பாட்டு எச்சங்கள்) பண்பாடாக இருக்கின்றது.

நிலப்பிரபுத்துவக் கட்டத்தில் சனாதன சமூகப் பண்பாடு, சிந்தனை வடிவத்திற்கு அப்பால் புதிய பண்பாட்டைப் படைத்திட முடியும். தொல்பழங்குடி வாழ்வியல், பின்னர் ஆசீவகம் என்ற கொச்சைப் பொருள்முதல்வாதம் பற்றிய புரிதல் அவசியமாகும்.  புதிய பண்பாட்டை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சங்ககாலம், பல்லவர் காலம், பக்தி இலக்கிய காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் எனவும் அன்னியர் ஆக்கிரமிப்புக் காலம் என்று தான்  வரலாறு ஆராயப்பட வேண்டும்.

இந்தக் காலத்தில் தமிழகத்திலும் தம் சாதியை உயர்ந்தது என நிலைநிறுத்த புராணக் கதைகளுடன் இணைத்து சுயசாதிப் பெருமையைப் பற்றி எழுதினார்கள். சுயசாதிப் பெருமையும், சாதிய உயர்வாக்க கருத்தாக்கமும் இன்றும் புராணங்களில் இருந்து பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் தமிழ் சமூகம் ஒற்றைப் போக்கைக் கொண்டதாக கொள்ள முடியாது. இவ்வாறு எந்தக் காலத்திலும் ஒற்றைத் தன்மை கொண்டதாக இருந்ததில்லை. நாவலர் என்பது தமிழ் சமூகத்தின் அடையாளம் அல்ல. புதிய பண்பாட்டை படைக்கின்ற போது அம்சங்களை விரிவாக பார்க்கப்பட வேண்டும். அந்தக் காலத்தைய பொருள் உற்பத்தி உற்பத்தி முறை தீர்மானிக்கும் சிந்தனைக் கூறுகளைப் பற்றிய தெளிவு இருக்கின்ற போது மதச் சார்பற்ற பண்பாட்டை அடைய முடியும். இது புதிய  பண்பாட்டைப் படைப்பதற்கான வழிகாட்டுதலாக இருக்க முடியும்.

 

இலங்கையில் சீவல் தொழிலை மேற்கொண்டவர்கள் சாணார். பின்னர் அதனை விடுத்து எண்ணை வடிக்கும் தொழிலை மேற்கொண்டனர். இவர்கள் எவ்வாறு தொழிலை மாற்றிக் கொண்டார்கள் என்பது பற்றி பல ஐதீகங்கள் உள்ளது. சீவல்தொழில் செய்கின்ற  மக்களை கேரளத்தில் ஈழவர் என்றும், தமிழ்நாட்டில் சாணார் -சாமுண்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இலங்கையில் நளவர் என்று அழைக்கப்படுகின்றார்கள். கள்ளுச் சீவல் தொழில் தரக் குறைவானது என்பது தொழில் ரீதியான வேலைப்பிரிவினையில் பாகுபடுத்தியது எங்ஙனம்;? பனையின் பயன்பாடு என்பது தொன்மையானது. உணவு (பனாட்டு, ஒடியல், ஒடியல்மா, பனங்கருப்பட்டி இதரபல), எழுத்தோலையாக, பாய், விசிறி, மரம் தீராந்திச் சட்டங்களாக வீடு கட்டபயன்படும் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் பல்வேறு அடையாளங்கள் அழிக்கப்பட்டு முன்னேறி வருவது தான் இயல்பானது. அடையாளத்தினை தோண்டி எடுத்து சமூகத்தைச் சிதைப்பவர்களின் செயற்பாடுகள் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. தூயதமிழ் சாதிய அடையாத்தை கண்டறிய முற்படும் போக்கு வளர்ந்து வந்துள்ளது. தேசிய இனம் என்பது தன்னுடைய அகஅடையாளங்களை புறகணித்துக் கொண்டு தான் முன்னகர்கின்றது. பிற்போக்கான, ழைமையான அடையாளங்கனைப் புறக்காரணிகளே மாற்றம் கொள்ள வைக்கின்றது.  இந்த இரண்டு போக்கும் முரண்பாடும், கோட்பாட்டுப் பிரச்சனை சார்ந்தும் உள்ளது.

இனக்குழுமங்கள் மற்றைய இனங்களுடன் இணைகின்ற போது இனக்குழுமத்தின் பெயர் நிலை 1000 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்டுள்ளது. 1000 ஆண்டு முன்னைய சிந்தனைக் கட்டமைப்பும் வர்ணாசிரமக் கோட்பாட்டிற்று உட்பட்டதுதான். சோழர் கால சிந்தனைக் கட்டமைப்பு இறுக்கமானதாக இருந்திருக்குமா என்பது ஆய்வுக்குட்பட்டதாகும். ஆக்கிரமிப்பு, வணிகம் உச்சத்தினை சோழன் காலத்தில் அடைந்தது. சோழ இராச்சியத்தின் வளர்ச்சிப் போக்கில் பெரும் பொருளுற்பத்தியும், போர்வீரர்களின் தேவையையும் அதிகரித்திருந்தது. உற்பத்தியும், போர்வீரர்களும் தேவையென்றால் புதிய உற்பத்திச் சக்தி (மனிதவலு) அவசியமானதாகும். இந்த நிலையில் இராச்சியம் தனது மேலதிக வலுவை பயன்படுத்திக் கொள்ள வேலைப் பிரிவினையை மிகக்கடுமையாக அறிமுகப்படுத்துகின்றது.  சோழன் ஒரு ஆக்கிரமிப்பாளராகக் கொள்ளப்பட வேண்டும். அவன் நாடுகளைப் பிடிக்கும் நிலையில் தனக்குத் தேவையான வங்கியாக கோவிலையும், மூலப் பொருட்களின் சேமிப்பு இடமாக கோவிலும், பொருள் உற்பத்தி முறைக்குள் கொண்டு வந்து மூலதனத் திரட்சியை ஏற்படுத்தியபடியால் தான் வெற்றிகரமாக ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முடிந்தது.

மூலதனத் திரட்சிக்கு தேவைக்காக சுதந்திரமாக (குடி வாழ்வில் என்பது சாதி அல்ல. மாறாக ஒரே உறவைக் கொண்ட பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்வது) வாழ்ந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம், அழுத்தம் ஏற்பட்டிருக்க முடியும். இதேவேளை வளர்ச்சியடைந்து வந்த வேறு குடிகளும் இணைந்திருக்க முடியும். வேலைப்  பிரிவினைக்கு வசதியாக இடங்கை வலங்கை என்ற பிரிவினை உருவாக்கி அதன் ஊடாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஊழியர்களையும், படையையும் சோழராச்சியம் உருவாக்கிக் கொண்டது. இதனை வேலைப் பிரிவினையாகப் பார்க்கின்ற போது இராச்சியம் உடைந்து சிறு ஆட்சிக்குழு உருவாகின்ற போது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகள் சாதியக் கட்டமைப்பிற்குள் அமிழ்ந்து விட்டனர். வேலைப்பிரிவினையை வகுத்த போது சிற்பிகள் தொழில் நுட்பவியலாளர், வைத்தியர், கைவினைஞர்கள், விவசாயிகள், போர்வீரர்கள்,  உபரி உற்பத்தியாளர்கள் என பிரிவினை ஏற்பட்டது. வைத்தியர், சிற்பிகள் தொழில் நுட்பவியலாளர் என்ற தகமையைக் கொண்டவர்களின் வாரிசுகள் அனைவரும் அதே தகமையைக் கொண்டிருப்பதில்லை.  ஆனால் சாதியச் சிந்தனை என்ற மேலாதிக்கக் கருத்தியல் சாதி” என்ற அடைமொழிக்குள் சமூகத்தினை பிரிந்து விட்டது.

அதிகார பலமுடையவர்களால் உழைக்கும் வர்க்கத்தின் அடையாளம் வரையறுக்கப்பட்ட நிலை இருந்திருக்கின்றது. இங்கு ஒரு மனித கூட்டத்தின் அடையாளமானது யார் மூலம் வெளிப்படுகிறது என்பதில் அடங்கியிருக்கின்றது. இது குறிப்பாக இலங்கை சாதிய அமைப்பையும், வரலாற்றையும் எழுதுகின்ற போது ஏற்படுகின்ற குறைபாடுகள் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்துகின்ற.

கள்ளர் மறவர் அகம்படியர் மெல்ல மெல்ல வேளாளர் ஆகினர். இது சமூக உயர்வாக்கத்தினுள் அடங்கிவிட முடியாது.  இந்தக் காலம் ஒவ்வொரு சமூகங்களும் குறிப்பான உழைப்பின் ஊடாக ஒன்று கலக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இருக்க முடியும். ஓரு ஆட்சியமைப்பின் முறைமை என்பது சமூகத்தின் உற்பத்தி நிபந்தனைகளில் மாற்றத்தை கொடுத்திருக்க முடியும். முன்னர் போர், விவசாய உற்பத்தியின் தேவை மாற்றம் சமூகத்தின் சமூக உறவும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய வடிவங்களும், அதிகாரி வர்க்கங்களின் பெயர்களும் சாதிகளாக வந்துள்ளது. அந்த அதிகாரம் வர்க்கம் சமூக உயர்வாக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது.

அரசிறை உத்தியோகங்களும் நீதிபரிபாலன உத்தியோகங்களும் சுதேசிகளுள் உயர்ந்த சாதியினருக்கே கொடுக்கப்பட வேண்டுமென, 1658ம் ஆண்டு ஒக்டோபர் மாசம் 31 ந் தேதி வரைந்து வைத்த அறிக்கையிற் கண்டபடியே, வேளாளருக்கு அதிகமாகவும் மடப்பளியாருக்குக் குறைவாகவுமளிக்கப் பட்டுவந்தது. பட்டங் கட்டியென்னுமுத்தியோகம் கரையாருக்கும்,  முக்குவருக்குமேயுரியன. கி.பி 1694ம் ஆண்டில் மற்றைய சாதியாருக்கும் உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டபடியால், இதையிட்டு அவ்வருடத்து ஜூலை மாதத்தில் வேளாளரும் வன்னியருஞ் சேர்ந்து பெருங்கலகம் விளைவித்தனர். (175 யாழ்பாணச் சரித்திரம், மு. செ. இராசநாயகம்.) சுதேசிகள் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது மடப்பள்ளியர் என்ற புதிய ஆதிக்க வர்க்கம் உருவாகியிருந்தது. அது எவ்வாறு புதிய நிலை உருவாகியது என்பது ஆராயப்பட வேண்டும்.

பட்டங்களையும், பதவிகளையும் பெறும் போக்கில் போட்டிகள் உருவாகியிருக்க முடியும். பொருளாதார வலிமையானது முதன்மைப் பாத்திரம் கொடுக்கின்றது. கருத்தியல் மேலாண்மை என்பது ஒரு வர்க்கம் சார்ந்ததாக இருக்கின்றது. பொருளாதார நலன்பால் அமைக்கப்படும் சிந்தனைகள் அந்த பொருளாதார அமைப்பைப் பாதுகாத்துக் கொள்கின்றது. சிந்தனை என்பது தனித்தே இயங்குவதில்லை. அவை ஒரு தீர்க்கமான பொருளாதரா அமைப்பால் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பைப் பாதுகாத்தக் கொள்ள அதன் வர்க்கம் சார்ந்தவர்கள் எதிர்வினையாற்றுகின்றார்கள். 

வர்ண சிந்தனைக்கு ஏற்ப வரலாற்றுப் பாத்திரத்துடன் நிறுவுவது, மற்றவர்கள் போல் ஒப்பனை, பார்த்தொழுகுவது என்ற உயர்வாக்கம் செய்வதை சமஸ்கிருதமயமாதல் என்று அழைக்கின்றனர். இது கூட சமூகத்தின் உறுப்பினர்கள் இந்தச் சமூகத்துடன் ஒத்துழைத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தியலே காரணமாகின்றது.

சமூகத்தில் பார்த்தொழுகுதல் புலால் உண்ணாமை என்பனவும், சண்டை சச்சரவிற்கு செல்லாமை என்பது போன்றவைகள் எல்லாம் உயர்ந்த குலத்தவர் பண்பாடு என வரைவிலக்கணம் மேட்டுக்குடிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.  வர்ணாசிரமச் சிந்தனை வடிவத்தை தொடர்ந்து கொள்வது நியாயப்படுத்தப்படுகின்றது.

மக்கள் பிரிவுகள் போட்டி போட்டுக் கொண்டு தம்மை மேன்மக்கள் எனக் கொள்ள வைக்கவும், மற்றவர்கள் தமது அந்தஸ்தை உயர்வாக கருதிக் கொள்ளவும் வழிவகுக்கப்பட்டிருக்கும். இதன் காரணத்தால் ஒவ்வொருவரும் தம்மை இன்னார் என சுயபிரச்சாரம் மேற்கொண்டிருக்கலாம். அத்துடன் முன்னர் கூறியது போல் புதிய சிந்தாந்தத்தை உள்வாங்கி தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவற்றை தமது புரிதலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியிருக்கலாம். இங்கு சர்வதேசத்தில் நடைபெற்ற ஒரு இயக்கத்தை இங்கு உதாரணம் காட்டுவது மிகப்பொருத்தமாக இருக்கும்.

65-70 களில் வியட்னாம் யுத்த எதிர்ப்பு, தத்தமது நாட்டு பழைமைப் போக்கிற்கு எதிர்ப்பு, ஆட்சி முறைக்கு எதிர்ப்பு போன்ற வற்றை மையமாக வைத்து எதிர்ப்பு அலையுடன் உபபண்பாடு (உதிரிப் பண்பாடு) (subculture) என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. போதைவஸ்து (ஆட்சியாளர்களே இதனை வழங்கியிருக்கின்றனர்), துள்(பொப்)இசை, கலாசாலைகளில் பகடிவதை (ராங்கிங்), கிழிந்த உடைகளை அணிவது, கிருஸ்ணா பக்தி அலை போன்றவற்றுடன் சமாதான இயக்கங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தத் துள்ளிசை (பொப்)  பாரம்பரியத்திற்கு எதிராக கொள்ளப்பட்டது. இந்தப் போக்கை எமது நாடுகளும் உள்வாங்கிக் கொண்டன. ஆதனால் எம்மவர்கள் அவற்றை வாங்கிக் கொண்ட பிற்பாடு அவற்றிற்கு கொடுக்கப்பட்ட கருத்துருவம் என்பது மேலைநாட்டவர் கொடுத்த கருத்துருவத்திலும் பார்க்க வித்தியாசமாக இருந்தது எனலாம். துள் (பொப்) இசையை மக்கள் ரசித்தனர், தலைமுடி வளர்ப்பதை ஒரு போக்காகவும் (social trend- Fashion) நாகரீகமென  கொண்டனர். ஒரு நாட்டுக் கலாச்சாரம், அல்லது சிந்தனைப் போக்கு என்பது என்ன நிலையை உணர்த்தி நிற்கின்றது என்ற சரியான பார்வை என்பது எல்லாக் காலத்திலும், எல்லாச் சமூகத்திலும்  முழுமையான அர்த்தத்தோடு விளங்கப்பட்டிருக்கும் எனக் கொள்ள முடியாது. தொழில் நுட்ப வளர்ச்சியில் பண்பாட்டுக் கூறுகளை சமூகத்திடம் கொண்டு செல்வது இலகுவாக இருக்கின்றது. அந்நியப்பட்ட பண்பாட்டுக் கூறுகளை வேறு புதிய சமூகமானது அதன் உள்ளார்ந்த அடிப்படையின் படி வியாக்கியானம் செய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்த நிலையில் ஏகாதிபத்திய வளர்ச்சிக் கட்டத்தில் வாழ்கின்ற எம்மவரால் இந்த இயக்கப் போக்கை பகுத்தாய்வு செய்து நடக்க முடியவில்லை.

 

மொழிக் குறியீடுகள்

சாதியச் சிந்தனைக்குள் சமூகமயப்படுத்தப்பட்டிருக்கின்ற அன்றாட வாழ்வியலில், சமூக உறவில் சாதிய உணர்வு- சிந்தனை வெளிப்படவே செய்கின்றது. சாதியச்சிந்தனை சமுதாயத்தில்  பலவிடயங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. சாதி பற்றி வரலாற்று அறிவின்மை காரணமாக பல சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சிரமமாக உள்ளது. சாதியச் சிந்தனையில் வாழ்ந்து வருகின்ற சமூக உறுப்பினர்கள் தமது செயற்பாட்டை சாதியத்தை பாதுகாக்கும் நோக்கிலும், வரட்டுக் கௌரவத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும் முனைகின்றனர். சாதியத்தில் இருந்து வெளியேற  வேண்டும் என எண்ணுபவர்கள் சாதியச் சகதிக்குள்ளேயே மீளவும் சரணாகதியாவதும் வரலாற்றில் இடம் பெற்று வந்துள்ளது. பொருளாதார நிலையில் ஏற்படுகின்ற நிச்சயமின்மையை காரணம் காட்டி சாதிய அமைப்பை பாதுகாத்து வந்துள்ளனர்.

ஆயுதப் போராட்ட வீழ்ச்சியின் பின்னான காலத்தில் சமூகத்தை பலகோணங்களில் பார்க்க வேண்டிய நிலை இருக்கின்றது. போராட்ட காலத்தில் கணிசமானளவு கலப்புத் திருமணங்கள், பாரம்பரிய கிராம வாழ்க்கை முறையின் சிதைவு, பண்பாட்டு தளத்திலும் சமூக உறவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஏனெனில் ஒடுக்கும் சக்தியாக வேளாளர்கள், கரையார், முக்குவர், திமிலர் இருந்தார்கள். ஈழத்தில் கமத்தொழில், கடல்தொழில், உடலுழைப்பை வழங்கும் தொழிலாளர்கள் இருந்துள்ளார்கள். இந்த தொழில் பிரிவுகளைச் செய்தது தனியான சாதியில்லை. இதுவே கொலனித்துவத்திற்கு முற்பட்ட சமூகமும், உற்பத்தி சார்ந்ததாகும். இது 1966 இன் பின்னரும், போராட்ட காலத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.  ஆனால் வேளாளர்கள் 1966களைப் போன்று  ஆதிக்கத்தில் இல்லை. மாறாக இடைநிலைச் சமூகம், ஒடுக்கப்பட்ட சமூகமே இன்று அதிகார வர்க்கமாக இருக்கின்றது என்பது தொடர்பாக தனியான களஆய்வு என்பது அவசியமானதாகும். புலிகளின் பின்னான காலத்தின் சமூக உறவு தனியே ஆராயப்படவேண்டும்.

இன்றைய காலத்தில் தகவல் தொடர் சாதனத்தின் வளர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் இருக்கின்ற சொல்லாடல்கள் ஈழத்தில் கலந்திருக்கின்றது. முன்னர் இலங்கைத் தமிழ் மொழியாடல்களில் ஒரளவிற்கு சாதியக் குறியீடுகள் அற்ற மொழி வழக்கு இருந்துள்ளது. சாதிய குறியீடு அற்ற மொழி வழமையை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. முன்னர் மொழியாடலில் விவசாயிகளை - கமத்தொழில் என்றும் மீனவர்களை- கடல்தொழிலாளர்கள் என்றும் அழைத்திருந்தோம். மீனவர்கள் என்பதே சாதியை அடையாளப்படுத்தியே தமிழகத்தில் இருந்திருக்கின்றது. இவ்வாறான பல சொற்பதங்கள் பயன்பாட்டினுள் வந்து இருந்த சாதிய சார்பற்ற மொழியாடல்களை சிதைத்துள்ளது.

இவ்வாறாக மொழியில் சமத்துவமின்மையால் பொதுவிடத்தில் சாதியை விளித்து இன்னொரு மனிதனைத் தாழ்த்திப் பேசும் பொருட்டு சாதி பயன்படுத்தப்படுகின்றது. அன்றாட வாழ்க்கையில் சமூக, குடும்ப உறவுகளிலும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகார வர்க்கத்தவர்களிடமும் சாதியம் தொடர்ந்து உயிர்வாழ்கின்றது.

சொற்களஞ்சியத்தில் சாதிகளை விளக்கியும் உள்ளார்கள். இதில் பறையா என்ற சொல்லாடல் மற்றைவர்களை  திட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பறையா என்ற சொல் மொழிகள், நாடுகள் கடந்தும் இன்று பயன்படுத்தப்படுகின்றது. பலவேளைகைளில் கீழான போக்கை வர்ணிக்க பயன்படுத்தப்படுகின்றது. இதேபோல கடல்தொழில் செய்கின்ற சமூகத்தில் உள்ள சாதிகளை குறிப்பிடும் போதும் இவ்வாறு கீழானவர்களாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் - தமிழ் சொற்களஞ்சியத்தில் (அகராதி) யில் எழுதப்பட்டுள்ளது.  இது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல. மேட்டுக்குடியில் இருந்து உருவாகிய  அதிகார வர்க்கமாக, கல்வியாளர்களாக இருப்பவர்களின் சிந்தனையே எழுத்திலும் வெளிப்படுகின்றது.  

 

தமிழ் அரசியல்வாதிகள் சாதியின் குறியீட்டைக் கொண்டு இன்னொரு எதிராளியை சொல்லாடலின் மூலம் தாக்குவதற்கு பலரால் பல கோணங்களில் கருத்தியல் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு அதிகார வர்க்க மனப்பான்மை,அரச நிர்வாகத்தில்

சாதிய வெறி அல்லது சாதிய மனப்பான்மை

தனிமனித வெறுப்பில் உழிழ்வது

மொழிப் பயன்பாட்டில் சாதியம் படிந்துள்ளது.

தூசனவார்த்தைகளில் சாதி

சிறுவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் சாதிய பெயர்களை சொல்லி மற்றவர்களை விளிப்பது

மற்றைய பொதுத்தளங்களில் 

சாதியத் திமிர் அதிகார வர்க்கத்தவர்களிடையே காணப்படுகின்றது.

சாதியை குறிப்பிட்டு மற்றவர்களை தாழ்த்திப் பேசுவோர் மனவுளைச்சலை ஏற்படுத்தும் நோக்குடனோ அல்லது பகையை தீர்த்துக் கொள்ளவோ பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றத.

மொழியாடல்களில் மாற்றம் என்பது தொடர்ச்சியானது ஒன்றாகும். “புதிய சோசலிச உற்பத்தி முறையின் எழுச்சி, புதிய அரசின் தோற்றம், புதிய சோசலிசக் கலாச்சாரம், புதிய சமூக உறவுகள் மற்றம் நீதிகள், கடையாக விஞ்ஞானம் மற்றம் தொழில் நுட்ப வளர்ச்சியோடுதொடர்புடையதாக இருந்தது. பல சொற்தொடர்களின் அர்த்தம் மாறி புதிய முக்கியத்துவத்தை அடைந்தது தேவையற்ற சில சொற்கள் சொற்தொகுதிகளிலிருந்து மறைந்து போயின. குறிப்பிட்ட ஒரு மொழியின் அஸ்திவாரமாக அமைகின்ற அடிப்படை சொற்தொகுதியும் இலக்கண அமைப்பும், முதலாளித்துவ அமைப்பு தூக்கியெறியப்பட்ட பிறகு, ஒரு புதிய அடிப்படை சொற் தொகுதியாலும், புதிய இலக்கண அமைப்பாலும் முற்றாக அகற்றப்படுவதற்கு மாறாக ருசிய மொழ்யில் முழுமையாகப் பேணப்பட்டதோடு, கடுமையான மாற்றங்களுக்கு உட்படவும் இல்லை. அவையே புதிய ருசிய மொழியின் அஸ்திவாரமாகவுலும் பேணி காக்கப்பட்டு வருகின்றன" (25 ஸ்ராலனின் மா.மொழி) இது மேற்கட்டுமான அமைப்பு அடித்தள அமைப்பின் உற்பத்தியாகும்“ ஒரு மொழியை காட்டு மிராண்டி என்பதோ, கணணிக்கு உதவாது, புதிய சொற்கள் உருவாக்க முடியாது என்பது எல்லாம் ஓரு கற்பனை வாதமாகும்.

சமூகத்தில் கருத்தியல் ரீதியாக ஆளுமை செலுத்தும் சொற்கள் பல இருக்கின்றன.  வடுச் சொற்கள் என்பது சாதியத்தைக் குறிக்கின்றது என மட்டுப்படுத்த தேவையில்லை. சாதிக்குள் மட்டுப்படுத்தி அணுகும் பார்வை வண்ணாசிரம, சாதிய மையவாத நிலையில் இருந்து அணுகுவதாகும்.  வடுச்சொற்கள், குறியீடுகள் சாதிக்குரியது அல்ல என்று குறிப்பாக சாதியச் சமூகத்தில் வாழும் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் அறிந்திருப்பதில்லை. குறியீடு அல்லது குலக்குறியீடுகள் (totem, symbol) வடுச் சொற்கள் சர்வம் தழுவியது என்பதை மானிடவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

வசைசொல்லி அழைப்பது பல உலக நாடுகளில் பலவற்றில் உண்டு. இதன் பொருள் தமிழ் மக்களிடையே இருக்கும் வசைச் சொற்கனை இயல்பாக்கம் செய்வது அல்ல. மேற்கில் உள்ள ஆசிய நாட்டவரை “பாக்கி" என்று அழைப்பார்கள். பிரான்சில் வாழும் தமிழர்கள் அராபியர்களை அழைக்க “அடையான்" என்பார்கள். இவ்வாறே ஆபீரிக்க அடிமைகளை அமெரிக்காவில் நீக்கிரோ என்றழைத்தார்கள். இந்தச் சொல்லாடல் இன்று மேற்கு நாடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்கின்றார்கள். கியூபாவில் பால் இல்லாத கோப்பி, தேனீரை நீக்கிரோ என்று அழைப்பார்கள். நீக்கிரோ என்று அழைப்பது பற்றிக் கேட்ட போது கியூபாவில் அவ்வகையான நிறவாதப் பார்வை இல்லை என்றார்கள். தாம் கியூபா நாட்டவர்கள் என்றும், தம்மிடையே நிறபேதம் இல்லை என்றும் கூறினார்கள். கறுப்பு நிற ஊழியரே உங்களுக்கு நீக்கிரோ கோப்பி, தேனீர் தேவையா என கேட்பார்கள். அந்தச் சொல் கியூபாவில் பாரபட்சம் காட்டும் சொல்லாக இல்லாமல் அகன்று விட்டது. கியூபாவின் இந்த மாற்றம் என்பதை தோழர் ஸ்ராலின் மொழி பற்றிய கருதுகோளை பொருத்திப் பார்ப்பது தகும்.

மனிதர்கள் கண்டம் விட்டு கண்டம் மாறலாம்.  கொலனித்துவ ஆட்சியாளர்களின் பௌதீக நிறம் என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டவர்களின் நிறமும் மாற்றம் உள்ளது. கறுப்பு மனிதர்கள் வெள்ளை முகமூடி அல்லது தேங்காய் என்று பேசுவது உண்டு. “Black skin and white mask' - “coconut” இங்கு இரண்டு விடயத்தை கவனிக்க வேண்டும். ஏவலாளிகளான ஆட்சிகள் மேற்கின் நலனுக்கு ஆதரவாகத் தான் இருப்பார்கள். இதனை வசைமொழியில் புரிந்தால் அதன் வர்க்க நலன் மறைக்கப்படும். தரகு வர்க்கம் (விதேசிய) ஆக்கிரமிப்பாளர்கள் அகலும் முன்னரே தயார்படுத்தப்பட்டவர்கள். இந்த வர்க்கப் பிரிவே கொலனித்துவம் அகன்ற பின்னர் ஆட்சிக்கு வருகின்றார்கள். இந்தப் பிரிவு வரலாறு எங்கும் ஏகாதிபத்தியங்களின் நலனுக்காகவே செயற்படுகின்றன. எனவே தேங்காய் என்பது கறுப்பர்களையும், ஆசியர்களை குறிப்பதாக கூறிக் கொண்டாலும் அவர்களின் பிறவிக் குணம் என்று கூறிவிட முடியாது. மேற்குலகமயமாக்கம் என்பது மத, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக நடைபெறுகின்றது. மேற்கத்தை பண்பாட்டை, வாழ்வியலை பின்பற்றும் கூட்டமும் உள்ளது. பூர்சுவா வர்க்கத்தின் நிலை என்பது தம்மை மேற்குடன் இணைப்பதிலும், சிந்தனைப் பரப்பில் மேற்கின் வாழ்வியல், ஆட்சிமுறை, வளர்ச்சியை முன்னுதாரணமாக காட்டப்படும்.

 மானிடவியலாளர்கள் ஆபீரிக்க நாடு ஒன்றில் உள்ள வளர்ந்து வந்த மேட்டுக்குடியினரின் ஆடைகளின் நிறம் பற்றிய தெரிவும், வெளிப்பாடுகள் பற்றி ஆராய்ந்துள்ளார்கள். தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆடைத் தெரிவு, அவர்களின் வாழ்வியல் பற்றியும் எழுதியுள்ளார்கள். அது ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தவறான புரிதலை ஏற்படுத்தியது என்ற விமர்சனம் எழுந்தது. பின்னவீனத்துவ ஆய்வாளர்கள் உளசம்பந்தப்பட்ட ஆய்வுகளை அரசியல் பொருளாதாரத்தினுள் பேசுபொருளாக மாற்றியிருக்கின்றார்கள். உளவியல் ஆய்வு முறைமை என்பது அரசியல் பொருளாதார ஆய்வு முறைக்கு நேர் எதிரானதாகும்.

இருசிய புரட்சிக்கு முன்னர் இருந்த சமூக அமைப்பில் இருந்த வசைபாடல்களையும் அவதானிக்க முடியும். “நமது நாட்டில் ருஷ்யரல்லாதார் எப்படி நடத்தப்படுகிறார்கள், போலந்து நாட்டவர் எப்படி “பலியாச்சிஷ்கா" என்பது தவிர வேறு பெயரில் அழைக்கப்படுவதில்லை, எப்படி தாத்தாரியருக்கு “இளவரசர்" பெயர் சூட்டப்படுகிறது, எப்படி உக்ரேனியர் எப்போதும் “கோகோல்" என்று அழைக்கப்படுகிறார், ஜார்ஜியரும் இதர காக்கேசிய தேசிய இனத்தவரும் எப்படி “கப்காசியர்" எனப்படுகின்றார்கள்." (271 தே.இ.பி.பா.வ.ச) தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் புண்படுத்தப்பட்டுள்ளார்கள். இவற்றை அலட்சியம் செய்யக் கூடாது என்கின்றார் தோழர் லெனின். இவ்வாறான வசை பாடுகளைக் கொண்ட சமூகத்திற்கு என்ன உரிமை வேண்டும். இந்த விதமான பிற்போக்குத் தனத்தைக் கொண்டதாகவே ஈழ தேச அரசியல் இருக்கும். இவ்வாறான பேச்சுக்கள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈழ, தமிழக சமூகம் என்பதே இன்னும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் இன்னும் முழுமையாக நுழைந்து விடவில்லை. அவ்வாறான சமூகத்தில் எதனை எதிர்பார்க்கப் போகின்றார்கள்?

தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் பிற சமூகத்தவரை முத்திரை குத்தும் போக்கு இருந்துள்ளது. பிரதேசம், மதத்தவரை, சாதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுவது நாம் வாழ்கின்ற சமூகத்தின் உற்பத்திப் பொருள்கள் தாம். மற்றவர்களை உளரீதியாக நோகடிக்கப் பயன்படும் சொற்களாக

.. கிணறு காவியது

 .. திண்னையிலே தூங்கிடுவான் தின்ற கோப்பையிலே பேண்டுவிடுவான்

 .. தொப்பி பிரட்டி

 .. மஞ்சல் கயிற்றுக்கு கழுத்து அறுத்தவன்          

 .. பனங்கொட்டை சூப்பி

 .. தோட்டக்காட்டான்

 பிரதேசங்களை குறித்து நிற்கும் சொற்களும் இருக்கின்றன இவைகள் சில

 --யாழ்ப்பாணத்தான்

 --தீவான்

 --மட்டக்களப்பான்

 --வடக்கத்தையான்

இவ்வாறு ஊர்ப்பெயர் சொல்லி அழைப்பது வெவ்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சொற்கள் மற்றவர்களைத் தரந்தாழ்த்தி அழைக்க பயன்படுத்தப்படுகின்றது. இவை இன்றைக்கும் எமது சமுதாயத்தில் இருந்து கொண்டு வருபவை. ஆனால் இவை நிலப்பிரபுத்துவச் சிந்தனையில் இருந்து வெளியானவைகளாகும். இவைகள் சந்தர்ப்பவாதம் கொண்ட வசைமொழிகளாக இருந்திருக்கின்றன. மற்றவர்களை நோகடிக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டவையாகும்.

மொழியின் பயன்பாட்டில் சாதிய சிந்தனை வெளிப்படுகின்ற சமூக அமைப்பில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். மொழிப் பயன்பாட்டின் போது சாதிய வெளிப்பாட்டைத் தவிர்த்துப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் மனிதர்கள் தம்மை  (ஆழ்மனது) அறியாமலே பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இங்கு மனிதர்களே எல்லோரும் மாறுங்கள் என்று கோரிக்கை விட்டுவிட்டுச் செல்வதோ அல்லது தனிமனிதர்கள் மாறினால் அதுவே மாற்றத்திற்கு அறிகுறி என்று கருதும் கருதுகோள் ஒரு வகை சமய போதனைக்கு உட்பட்டவையாகும்.

விண்ணகத்தில் கடவுளிடம் இடம் கிடைக்கும் படியாக சமயபோதனையானது தனிமனித தூய்மையை வலியுறுத்துகின்றது. ஆனால் அன்றாட வாழ்வில் மனிதர்கள் மேல் தொடுக்கப்படும் புறநிலை அழுத்தம் இருந்து கொண்டே இருக்கின்றது. தனிமனிதர் சமூகத்தில் இருந்து தனித்திருக்க முடியாது. மனிதர்களைச் சுற்றி குடும்பம், சமூகம், கிராமம் என்று அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கின்றது. இவ்வாறான சமூக அழுத்தங்களும்,  பொருளாதாரத்திற்கு ஏற்ப புதிய சிந்தனையை தொடர்வது குறைவிருத்தி முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கிலும் சாதியச் சிந்தனை தொடர்கின்றது.

நிலபிரபுத்துவச் சிந்தனையான யாழ் சைவ வேளாள, பிராமணியம்” என எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்றது. இவை இந்தச் சமுதாயத்தை எவ்வாறு அடக்கியாள்வது என்பது பற்றிப் புடம் போட்ட சிந்தனை வடிவங்களாகும். ஆணவம், அகம்பாவம், ஆதிக்கத்திமிர்,  ஆண்டான் அடிமைச் சிந்தனையானது ஒடுக்கப்பட்டவர்கள் தம்மிலும் விட மற்றவர்கள் கீழானவர்கள் என்ற மனப் போக்கை உள்ளடக்கியே இருந்திருக்கின்றது. வர்ணாசிரமச் சிந்தனை என்பது  மக்களைப் பிரித்துவிடும் வக்கிரம் கொண்டதாகும்.

இவை மூலமாக ஒரு சமூகத்தை மாத்திரம் அல்ல, உற்பத்திச் சாதனங்களைத் தமதாக்கிக் கொள்ளும் தந்திரங்களை கொண்டதாக இருந்து வந்துள்ளது. மூளையுழைப்பைப் கொண்டு சுரண்டும் வர்க்கத்தின் பரிமாணங்கள் இன்றைய சமூக அமைப்பில் கவனிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுத்துவ சிந்தனை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அல்லது சாதிக்கு மாத்திரம் உரித்தானதல்ல. அனைத்து பெரும் மதப்பிரிவுகளிலும் இதன் எச்சங்கள் அதிகமாகவோ குறைந்தளவிலோ உள்ள. உற்பத்தி (உழைப்பாளர்களை)யை தாழ்ந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்திருப்பதன் ஊடாக மலிந்த கூலியைப் பெறும் நோக்குக் கொண்டதாக உள்ள நிலப்பிரபுத்துவம் சிதைவிற்கு உள்ளாக்கப்பட வேளையிலும் தொடர்கின்றது.

குறைவளர்ச்சி கொண்ட முதலாளித்துவ சமூகத்தில் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மற்றைய மனிதர்களை மற்றவர்களிலும் கீழாக நடத்துவதைக் காணமுடிகின்றது. மூளை உழைப்பைக் கொண்டு சமூக பொது நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மற்றவர்களைத் தாழ்த்துகின்றனர். இவர்கள் ஒடுக்கும் சாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இவ்வாறான வேளையில் இரட்டைப் பாகுபாட்டை மனிதர்கள் எதிர்க்கொள்கின்றார்கள்.

முன்னர் குறிப்பிட்டது போன்று சமூகத்தின் உறுப்பினரை உளரீதியாக பலவீனப்படுத்துவது. ஏன் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளின் போது கணவன் அல்லது மனைவியே ஒரு சாதியை அல்லது ஒரு மிருகத்தின் பெயரை குறித்து அழைப்பது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இங்கு தனிநபர்களின் ஆத்திரம் இவ்வாறான சொற்தொடர்களைப் பயன்படுத்தும் போது அதற்கான தாக்கம்  ஒன்றே. அவ்வாறு தாழ்த்தும் நோக்கோடு அல்லது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு பயன்படுத்தும் சொற்களின் விளைவுகள் விருப்பத்திற்குரியது அல்ல.

அன்றாடம் சிறுவர்கள் தம்மிடையே சண்டை சச்சரவுகள்   ஏற்படும் போது மற்றைய சக சிறுவனை அல்லது சக மாணவனை சாதி கூறி அழைப்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆக சாதிய அல்லது மற்றைய மனிதனைத் தாங்கும் நோக்கோடு மொழியில் சாதி பயன்படுத்தப்படுவது எல்லா சமூக மட்டத்திலும் இருக்கின்றது.

இந்திய, இலங்கைச் சூழலில் சாதிய வெறியை குறிப்பிட்ட சாதிக்குரியதாகக் கொள்ள முடியாது. தம்மை உயர் சாதியாகவும், இடைநிலைச் சாதிகளாகவும் கொண்டவர்களிடையேயும் அது புரையோடிப்போயுள்ளது. ஆனால் நடைமுறையில் ”பிராமணியம், சைவவேளாளியம்” என்ற நிலமானியச் சிந்தனை என்று சாதிகளின் ஆதிக்கத்தைக் குறித்து வசைபாடுவதில் திருப்தி  கொள்ளும் எழுத்தாளர்கள் நிறையவே உண்டு. இதில் ஈழ விடயங்களைப் பேசுகின்ற போது அனைத்தும் யாழ்சைவ வேளாளத்திற்கு உட்பட்டதாகக் கொள்ளுகின்ற போக்குப் புரையோடிப் போயுள்ளது.

 

பல நாடுகள் நிலப்பிரபுத்துவ முறை முழுமையாக சிதைவடையவில்லை. அதே போல முதலாளித்துவ பொருளாதாரம், பண்பாடு, சமூக உறவு முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இன்றைய அரைநிலபிரபுத்துவ, குறைவிருத்தி கொண்ட முதலாளித்துவ சமூக உறவில் மேற்கொள்ளப்படுகின்றது. இன்றையச் சமூக அமைப்பில் ஒரு பிரதேசத்தில் இருக்கின்ற ஆதிக்கச் சாதியின் தொகையினை இட்டு அதன் பரிமாணங்கள் மாற்றமடைகின்ற. இங்கு ஒரு சாதிக்கு கீழ் அல்லது படிமுறையில் இருக்கின்ற ஒடுக்கும் சாதிகள் இன்னொரு சாதியின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துபவர்களாகவே இருக்கின்றார்கள். யுத்தம் தொடங்கிய பின்னால் அதன் வேகம் தளர்த்தப்பட்டது. குறிப்பாக (2003-4) யுத்த நிறுத்த காலத்தில் சாதி மோதல்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் முரண்பாடுகளே சாதி மோதல்களாக உருவாகின்றது. எனது அனுபவத்தில் படி 1976 இல் இருந்து 1985 வரைகாலங்களில் ஏற்பட்ட மோதல்கள் உதைப்பந்தாட்டப் போட்டிகளை இட்டே நடபெற்றுள்ளது. முஸ்லீம் லீக்கிற்கு இடையில் இரண்டு மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் தொடக்கம் உதைப்பந்தாட்டத்தில் தொடங்கியதே. அன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை முஸ்லீம்கள் இன்னொரு சாதியே. அவ்வாறு அன்றையக் காலம் இருந்தது. அன்றைக்கு மதமோதலாக பார்க்கப்படவில்லை. ஏன் அவ்வாறு இருந்தது என்பதற்கு இன்று வரையில் எவரிடமும் பதில் இல்லை. 2009 பின்னரும் பல மோதல்கள் உருவாகியிருக்கின்றன. அவை சாதிய மோதலாக வளரவில்லை. யாழ்ப்பாண நகர்ப்புறத்தில் உள்ள அனுபவங்களாகும். இலங்கை தமிழ்ப்பகுதிகளில் கலப்புச் சாதிகளைக் கொண்ட குடியிருப்புகள் முழுமையடையவில்லை. இதே வேளை நகர்ப்புறத்தினை எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட இடப்பெயர் குறிப்பிடும் போது சாதியின் பெயரை அறிந்து கொள்ள முடியும்.  தொழிலில் ஈடுபடுவது, பரிவர்த்தனைகள் அமைதியாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.  

முன்னர் குறிப்பிட்டதைப் போன்று தேசியப் போராட்டத்தின் போது சாதி  உணர்வு (உற்பத்தியை, தொழிலை தீர்மானிப்பது வேறு) உறக்க நிலையில் இருந்துள்ளது. எத்தனையோ இழப்புக்களையும், அன்பானவர்களின் உதிரத்தையும் சந்தித்த ஈழ சமூகம், அதன் சாதிய உணர்வை  மறைத்துக் கொண்டுதான் இழப்புகளையும் சந்தித்திருக்கின்றது. அங்கு மரண அவலம் என்பது ஒற்றுமையை உணர வைத்திருந்தாலும் மனிதர்களின் அகவுணர்வின் தாக்கம் அமைதியின் பின்னால் வெளிப்படுகின்றது. ஓரு உயர்ந்த இலட்சியம் இருந்தால் மாத்திரம் போதாது உயர்ந்த சிந்தாந்தமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் உயர்ந்த சிந்தாந்த வழிநடத்தல் என்பதும், இந்தச் சமூகத்தை கறாராக கேள்விக்கு உட்படுத்தும் சித்தாந்த வழிகாட்டல் இல்லாமை சாதிய விழுமியங்களை தொடர்ந்தும் உயிர்வாழ வைக்கின்றது. மக்களை தலைமை தாங்க வேண்டிய கட்சி செயலூக்கம் இன்றி இருக்கின்றன. கோட்பாடற்ற கதம்பவாதப் போக்கு முன்போலத் தற்பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது. இந்தக் கதம்பவாதம் ஒவ்வொரு புதிய “போக்கும்“ உகந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இவ்வாறான குறைபாடுகளைக் கொண்ட போதிலும் சாதியக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவேயில்லை என்பது தவறான பார்வையாகும். மாறாவாதிகள் எங்கும் இருப்பார்கள். பல தவறுகள், குறைபாடுகள்  இருந்த போதிலும் மாற்றத்திற்கு உள்ளாயிருக்கின்ற. சாதியம் தொழில் செய்யும் உரிமையை மறுக்கின்ற போக்கு சிதைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அரைகுறையாக சாதியம் பற்றிய பொதுப்புத்தி நிலவுகின்றது.

மனிதர்களின் அகவுணர்வில் மாற்றங்களானவை புறநிலை யதார்த்தங்களை மாற்றுவதன் ஊடாகவே சாத்தியமாகும். புறநிலை யதார்த்தம் கல்வி, புதிய பண்பாட்டுத் தேடல், பொருளாதார நிலைகளில் சமமான வேலைவாய்ப்புகளை நவீன மயப்படுத்தலின் ஊடாக செயற்படுத்தல் வேண்டும். இவற்றை நிவர்த்தி செய்வது இந்த பொருளாதார அமைப்பில் சாத்தியம் இல்லை.  இந்தப் பொருளாதார அமைப்பு முழுமையாக மாற்றத்தினை செய்து கொள்ள அனுமதிக்கப் போவதில்லை. சமூகத்தில் மாற்றங்களைத் தடுப்பதற்கு நிறுவனமயப்பட்ட சட்டம், குடும்பம், தொழிற்துறை அமைப்புக்கள் துணை நிற்கின்ற.

தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை தொடர்பான எதிர்வினையை செய்கின்ற போது ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற முழக்கமானது முன்வைக்கப்பட்டது. அதாவது 'நான் உயர்சாதியைச் சேர்ந்தவர்- ”நான் ஆதிக்கச் சாதி' ஆணவக் கொலைகளை எதிர்ப்பவள்”  அல்லது எதிர்ப்பவன்' இது தவறான முன்மாதிரியான முழக்கம் என பலர் சுட்டிக் காட்டினார்கள். அவர் வைத்த முழக்கம் அடையாள அரசியலின் வெளிப்பாட்டில் அமைந்தது. அது கூட அவரின் தனிமனிதப் பிரச்சனை அல்ல. மாறாக அவ்வாறு சமூகமையப்படுத்தப்பட்ட நிலையில் எழுந்ததாகும். அதாவது ஒடுக்கப்படும் மக்கள் மீது ஒடுக்கும் சாதியச் சமூகத்தவர்களின் ஜீவகாரூண்ய சிந்தனைப் பார்வையாகும்.

முகப் புத்தகத்  ஒருவர் பின்வருமாறு எழுதியிருந்தார். நான் சாதி அற்றவர்- அனைத்து சாதி; - வன்முறை- ஆணவக் கொலைகளை எதிர்க்கின்றேன். - இதுதான் ஒரு ஜனநாயக வடிவமான கோசமாக இருக்க முடியும் மாறாக நான் உயர்சாதி (?) இங்கு உயர் என்பதே அபத்தமானது தான். ஏனெனில் சாதியப் படிமுறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக உள்ளார்கள் கீழ் அல்லது மேல் என்ற கருத்தியல் தளம் தான் இருக்கின்றது. நான் உயர்ந்த சாதி என்பது அடிப்படையில் தலித்தியவாதத்தின் அடையாள அரசியலின் தோல்வியை சுட்டிக் காட்டுகின்றது.

ஈழத்தைப் பொறுத்த வரையில் 2009 பின்னரான காலத்தில் கோட்பாட்டுப் பிரச்சனைகள், சமூகம் பற்றிய ஆய்வுகள் ஏன் இன்றுவரை அறிவார்ந்த விவாதத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் சில நபர்கள் சமூக விஞ்ஞானப் பார்வையை வெளிப்படுத்துவதை தவிர்த்து விட்டு தமது புலமையை வைத்து முத்திரை குத்திவிட்டுச் செல்கின்றார்கள். ஆனால் சமூகத்தை அறிவார்ந்த ரீதியாக ஆராய ஊக்குவிக்கப்படவில்லை அல்லது அவை திருப்தி கொள்ளும்படியாக இருந்தது இல்லை. இதனை மாற்ற வேண்டும்  என்ற சிந்தனையில் செயற்படவில்லை. ஒரு கோட்பாட்டுத் தளத்திற்கு நகர்த்தி விவாதித்தால் நிறையப் படிப்பினைகள் பெற முடியும்.

சாதிய- மத அமைப்பில் பிறக்கின்ற போதே அந்தச் சாதியின் அங்கமாகத் தான் பிறக்க முடியும் அதற்கு வேறு எந்த தேர்வும் நம்முன் இருக்க முடியாது. சமூகத்தின் முன்னேறிய பிரிவு அறிவார்ந்த ரீதியாக சிந்திக்கின்ற போது அதில் இருந்து குறிப்பிட்ட அளவுதான் வெளிவர முடியும். அந்த வட்டத்தில் இருந்து வெளிவர நாளாகும். ஆனால் அதனை விரைவுபடுத்துவது புரட்சிகர தத்துவம் மாத்திரமே. ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட விழுமியங்களில் இருந்து இலகுவாக வெளிவர முடியாது. அவ்வாறு உடனடியாகவே வெளிவர முடியும் என்பதே கற்பனை வாதமாகும். சமூகத்தில் இருந்து வெளிப்படும் அனைத்தும் சமூகத்தின் உற்பத்தியாகும். இது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கப்பால் நிகழ்வதாகும். மொழியாடல்கள் என்ப அரசியல் சிந்தனையில் முதிர்ச்சியைக் கொள்கின்ற போது அரசியல் தளத்திலும் தாக்கத்தைக் கொடுக்க முடியும். ஈழத்தின் சாதியமைப்புப் பற்றிய போதிய புரிதலற்றவர்கள் தமிழகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ளார்கள். அடையாள அரசியல் செய்பவர்கள் தமிழகச் சூழலைக் கொண்டே அளவிடுகின்றார்கள். ஈழத்திற்கான கோட்பாடு என்பது தமிழகத்தின் நிலையில் இருந்து மாறுபட்டதாகும்.

 

அதிகாரத் திமிர்

சமூக உறுப்பினர் படித்து உத்யோகம் எடுத்த பின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்துவது பொதுவான போக்காகும். பதவியை பயன்படுத்த ஒடுக்கும் சாதியைக் சார்ந்தவராக இருக்க வேண்டிய நிபந்தனை இல்லை. ஈழச் சூழல் மாறி வந்துள்ளது. முன்னர் பஞ்சமர்கள் என்றழைக்கப்பட்டவர்கள் இன்று பல்வேறு பதவிகளில் உள்ளார்கள். ஒரு ”தலித்” அதிகாரி இருப்பாராகின்,  அவர் மற்றைய மனிதர்களை தாழ்த்தி நடத்துவது உண்டு. இவை நிலமானிய மேட்டுக்குடியாக்கத்தின் விளைவாகும்.  இதனைத் கடந்து சென்று விட முடியாது. சாதியால் தானும் ஒடுக்கப்பட்டிருக்கின்றேன் என உணர வேண்டும். இந்த நிலைமாற்றம் என்பது வர்க்கத்தின் குணத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. சாதிய மனப்பான்மை போலவே வர்க்கப் மனப்பான்மையும் உருவாக்கப்படுகின்றது. வர்க்கத்தின் அசைவியக்கம் இடம் பெறும் போது சமூக உறுப்பினர்களின் போக்கும் மாற்றம் அடைகின்றது.

தனிமனிதர் வகிக்கும் பதவியொன்றே போதுமானதாக இருக்கின்றது என எண்ணிக் கொள்ள முடியும்.  மனிதர்களின் அதிகாரத்திமிர் என்பது அரைநிலபிரபுத்துவ எச்சசொச்சங்களில் இருந்து உருவாகும் சமூக உறவிற்கு உட்பட்டதாகும். இன்றைய அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகத்தில் பொறுப்புகள் வகிப்பவர்கள் இந்தச் சமூகத்தின் உற்பத்திதான். அவர்களின் பண்பு என்பதும் இந்தச் சமூகத்தின் தன்மையைப் பிரதிபலிக்கும். முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கேற்ற சமூக உறவினை முழுமையாகப் பின்பற்றிக் கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பம் குறைவிருத்தி முதலாளித்துவ அமைப்பில் சாத்தியம் குறைவானதாகும். குறைவிருத்தி கொண்ட முதலாளித்துவ அமைப்பில் அதிகார வர்க்கத்தில் உள்ளவரின் அதிகாரத் திமிர் என்பது சாதிய எல்லையைத் தாண்டியதாகும். இந்த வகையில் தான் முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழ்ப் பிரதேசங்களின் சாதிய அமைப்பும், அதன் வெளிப்பாடுகளும் அணுகப்படவேண்டும்.

இன்றைய ஈழத்தில் உள்ள மக்களில் சாதிய வேறுபாடுகள் தாண்டி ஒரு அதிகார வர்க்கம் வளர்ந்துள்ளது. முன்னர்  ஒடுக்கப்பட்டவர்களாக (தாழ்ந்தப்பட்டவர்களாக) கருதப்பட்டவர்கள் இன்று அதிகார வர்க்கமாக உயர்ந்துள்ளார்கள். இந்த புதிய அதிகார வர்க்கம் தம்முன்னோர் எவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டார்கள் என்பதை அறிந்து  கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறே இன்றைய நிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் அதிகாரத் திமிரைக் காட்டுவதையும் அவதானிக்க முடியும்.

சாதிய ஒடுக்குமுறையை முழுமையாக உணராத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னைய செயற்பாட்டாளர்கள் பழைய சாதியக் கட்டமைப்பே இன்றிருப்பதாக  ஒப்பித்துவிட முடியாது. ஆனால் பழைய செயற்பாட்டாளர்களின் சாதியம் பற்றிய கருத்திற்கு இளையோர் கருத்திடும் போது முரண்பாடுகளைக் காமுடிகின்றது. சாதியாகவே தமிழர்கள்  இருப்பதால் தேசமாக இல்லையென்றும், இன்னொரு பகுதியினர் சாதியம் முன்னரைப் போல இல்லை என்றும் கருதுகின்றனர். இவை  இரண்டும் தவறான சிந்தனையாகும். தொழில்முறை (professionalism) நெறிகள் முதலாளித்துவ நிறுவனங்களில் வளர்ந்து வருகின்றதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தொழில் முறை நெறிகள் கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். ஆனால் முதலாளித்துவ நிறுவனக் கட்டமைப்புகள் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. நிறுவனங்களில் நடைபெறும் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இது காவல்துறை, நீதித்துறை, அரச நிறுவனங்கள் எங்கும் சாதியப் பாகுபாடும், தொழில்துறை நெறி மீளப்படுகின்றுது.

 

தலித்தியம் எம்காலத்தில்

இலங்கையில் சாதியப் பிரச்சினைக்கு தீர்வாக தலித்தியப் பார்வையை அறிமுகப்படுத்த சிறுகுழுவினர் முனைகின்றனர். ஆனால் முன்னர் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற சமூகவியல் சொற்தொடர் பயன்படுத்தப்பட்டது. முன்னர் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதிதிராவிடர், ஹரியின் புதல்வர்கள் அரிஜனர்கள், பஞ்சமர்கள் என்று அழைத்துக் கொண்டனர். 1980களின் பின்னர் விளிம்புநிலை மாந்தர்கள், தலித்துகள் என்ற சொல்லாடல்கள் ஊடாக அழைத்துக் கொண்டார்கள். இதனைப் பயன்படுத்திய அறிவார்ந்த மேதாவிகள் ஒடுக்கப்பட்டவர்கள் மக்கள் கூட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல புதுப்புதுப் பெயர்களைச் சூட்டினர். அடையாள அரசியலானது ஒடுக்கப்பட்டவர்களை அன்னியப்படுத்தி வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் வாழும் மக்களுக்குப்  புதிய அடையாள மொழியினை சூட்டி சாதியச் சகதிக்குள் பூட்டியே வைத்துவிட்டார்கள்.  இது இந்திய நிலை என்றால் இலங்கையில் தாம் புதிதாக ஒரு கலைச்சொல்லைக் கண்டுபிடித்தது போல இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இப்புதிய கலைச்சொல்லை அறிமுகம் செய்வதன் ஊடாக அதனை ஒரு அரசியல் இயக்கமாக மாற்ற முனைகின்றனர். ஆனால் இந்திய அனுபவங்களில் இருந்து கற்கின்ற போது (தன்னியல்பு) அடையாள அரசியலாகத் தொடங்கிய இயக்கங்கள் சாதிக் கட்சிகளாகவும், சாதிவெறியை உயிர்ப்பித்த கட்சிகளாகவும் உருவாகின. இந்தியாவில் தோற்றுப் போன அரசியலை இலங்கைக்குக் கொண்டு செல்லும் பாதையில் ஒரு குழு திட்டமிட்டு இயங்குகின்றது. இலங்கையில் ”தலித்திய” கோட்பாட்டுப் போக்கிற்கு தாமே உடைமையாளர்கள் என்று அதனை கேள்வி கேட்பவர்கள் எள்ளி நகையாடப்படுகின்றார்கள்.  புதிய தலைமுறைக்கு தலித்தியம் என்றால் என்னவென்று விளங்கம் கொடுக்கக் கூடிய சுயதேடல் இருப்பது ஐயமே. இந்தியாவில் தோற்றுப் போன பழைய கோட்பாட்டை இலங்கையில் ”தலித்தியவாதிகள்” தங்கமுலாம்  பூசுகின்றார்கள். ”தலித்திய” அரசியல்பாதை சமூகத்தை மாற்றக் கோருவதில்லை. சுயகௌரவம், சலுகை, பதவி என குறிப்பிட்ட உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கான சலுகைகளை முழுச் சமுதாயத்தின் பெயரால் முன்வைக்கப்படுவதேயாகும். இந்த அமைப்பின் மூலம் ஒரு உயர் குழாமிற்கான பேரம் பேசும் அரசியலுக்கு போடும் அத்திவாரமே இதுவாகும். இவர்களின் செயல் எவ்வாறெனில் பல்கலைக்கழகம் செல்லும் தகமையுடைய மாணவரை மறுபடியும் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுது எனக் கூறுவது போலாகும். ஈழப் போராட்டமே அரசியல் அதிகாரத்திற்காக நடைபெற்ற உச்சமான போராட்டம். இன்று  ஈழம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டத்திற்கு பாதையைக் காட்டாது திசை திருப்பும் வேலையாகும். தனிமனிதர்கள் மனம் திருந்தினால் எல்லாம் மாறிவிடும், “இந்து" மதத்தை ஒழிக்க வேண்டும், பௌத்தத்திற்கு - இஸ்லாம் மதம் மாறல், பொருளாதார, வர்க்க விடுதலையை விட சாதியப் பிரச்சனையே முதன்மை என்பர்.

 

தலித்தியமா? வர்க்கமா?

சமூக ஒழுங்கமைவில் சாதிய ரீதியான ஏற்றத் தாழ்வு, பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வு. பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வு. தலித் - தலித்தியம் என்பது ஒரு அரசியல் போக்காக இந்தியாவில் உருவாகியது. இந்த உருவாக்கம் புரட்சிகர நிலைப்பாடுகளில் இருந்து தன்னியல்பான அடையாள அரசியலாக சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களாலும், புத்திஜீவிகளினாலும் முன்னிறுத்தப்பட்டது. தலித்தியம் என்றால் என்ன என்று அறியும் நோக்குடன் முகப்புத்தகத்தில் அரசியல் ரீதியாக செயற்பாட்டில் உள்ளவர்களுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். அவர்களில் பலர் தமது கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். இது பொது வெளியில் பெற்றதினால் தனிநபர்களின் பெயர்களை இடவில்லை அக் கருத்துகளைப் பார்ப்போம்.

சமூகத்தின் பொதுவான அளவுகோளில் இருந்து தலித்களின் பிரச்னையைப் பார்க்காமல், பிரத்யோகமாக தலித்துகளின் கோணத்தில் இருந்து அணுகுவது. அதாவது சமூகத்தை வர்க்கமாகப் பார்ப்பதை கறாராக மறுத்து சாதியாக பார்க்கிறது தலித்தியம். தலித் மக்களின் பிரச்னைக்கான தீர்வையும், சாதிவாதத்தை பேசியே பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை இது வழங்குகிறது. ஆதிக்க சாதியில் ஏழைகள் இருந்தபோதிலும் அவர்கள் உயர்சாதியின் பண்புகளுடனேயே இருப்பதால், வர்க்க வேறுபாடு சாதியை ஒழித்துவிடாது என்பது தலித்தியத்தின் பிரதானமான நம்பிக்கை, கோட்பாடு. இது தலித்தியம் பற்றி நான் புரிந்துகொள்வது. ஆனால் இதன் மீதான என் விமர்சனம் வேறு. அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகத்தில், சாதி வேறுபாட்டைக் களைவதே எந்த இயக்கமாக இருந்தாலும், அதனது மைய நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் தலித்தியம் என்பது சாதி வேறுபாட்டை மேலும், இறுக்கமாக் கட்டுகிறது. அதனால் மைய நோக்கத்தில் அது சிதைவுறுகிறது.

மாறாக, உழைக்கும் மக்கள் என்ற பொதுவான தளத்தில் ஒன்று சேரும் போது தான் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்க முடியும். ஆதிக்க சாதியாக இருந்தாலும், அதில் உள்ள பணக்காரன், தன் சொந்த சாதியை சேர்ந்த ஏழை மக்களைக் கசக்கிப் பிழியவே செய்கிறான்.”

தலித்மக்களின் அடையாளம், வாழ்வியல், பிரச்சினைகள், மனித உரிமை-பொருளாதார-அரசியல் போராட்டங்கள், இலக்கியம், பண்பாடு போன்ற அம்சங்களை ஆராயும் இயல் தலித்தியம் எனலாம்.  இலங்கையில் தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுவர்,  எனவே தலித்தியலை தாழ்த்தப்பட்டவர் இயல் என்று இலங்கை வழக்கப்படி குறிப்பிடலாம். ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்று குறிப்பிடப் பெற்றுள்ள தீண்டத்தகாதோர்க்கும், பழங்குடி மக்களுக்கும் (schedule tribe) தலித்துகள் என்பது பொதுப் பெயராகும்” என்று அம்போத்கரும் தலித் மனித உரிமை போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நிலையில் பிற்பட்ட பிரிவினரும் (backward classes) மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரும் தங்களை தலித்துக்கள் என்றோ அல்லது தலித்துக்களுடனோ அடையாளப்படுத்துகின்றனர். மேலும் சர்வதேச மட்டத்தில் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கும் கறுப்பின, மற்றும் முதற்குடி மக்களையும் தலித்துக்கள் என்று அடையாளப்படுவதுண்டு (ta.wikipedia.org).

பாவலரேறு பெருஞ்சித்திரனார்”இனி எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கால், தங்களை 'தலித்' என்னும் சொல்லால் கூறிக் கொள்வது தங்களை 'தமிழினத்தினர்' என்னும் மெய்மத்தையே இழந்து கொள்ளும் இழிவு சான்றதாகும். 'தலித்' (Dalith) என்னும் மராட்டியச் சொல்லுக்கு பள்ளம், பள்ளத்தாக்கு, என்பது பொருள். இச்சொல் இடவாகு பொருளாக பள்ளத்தில் வீழ்த்தப்பட்டவன், அல்லது தள்ளப்பட்டவன் அல்லது அமுக்கப்பட்டவன் என்றெல்லாம் பொருள் தரும். இதற்கு அடக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில்  Depressed   என்னும் சொல்லுக்கு 'அழுத்தப்பட்டவன்' என்னும் பொருள் கொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை Depressed  class என்று அழைப்பது போல், 'தலித்' என்னும் சொல்லால் இவர்கள் 'வீழ்த்தப்பட்டவர்கள்' 'பின் தள்ளப்பட்டவர்கள், 'அடக்கப்பட்டவர்கள்', 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்று அழைத்துக் கொள்கின்றனர். இச்சொல் இந்தியாவின் அனைத்து இனக் கூறினர்க்கும் ஒரு பொதுவான சொல்லாக வழங்கப் பெறுவது ஒரு வகையில் தக்கதே எனினும், தமிழின வரலாற்றடிபடையில் 'தாங்கள் சார்ந்த இனத்தில் மூதாதையர்' என்பதையும், பார்ப்பனரை எதிர்த்து வெளியேறியவர் என்னும் பெருமையும் குறிக்கும் பழந்தமிழர் என்னும் சொல்லைவிடச் சிறந்ததாகக் கொள்ளமுடியாது. எனவே 'தலித்' என்பதால் இன இழப்பே ஏற்படும். இன இழப்பு அச்சு அடையாளமற்ற நாடோடி ஏதிலியர் என்னும் நிலையை ஏற்படுத்தி விடலாம். மேலும் இன்றைய இனமீட்பு முயற்சிகளுக்கிடையில்  இச்சொல் பொருளும் பொருத்தமும் உடையதன்று. எனவே இறுதியாக தமிழினத்தில் 'தாழ்த்தப்பட்டவர்' 'ஆதிதிராவிடர்' 'அரிஜன்' 'தலித்' என்றெல்லாம் பிறரால் கூறப்பெறும் அல்லது தாங்களே கூறிக் கொள்ளும் சில வகுப்பினர், எந்த நிலையிலும் தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், மற்ற இலக்கிய, கலை, பண்பாடு நாகரீகங்களுக்கும் முழு உரிமையுடைய வகையில் தங்களை பழந்தமிழர் என்றே கூறி, இன நிலையில் நிலை நிறுத்திக் கொள்ளவும், பெருமைப்பட்டுக் கொள்ளவும், அரசியல், பொருளியல் நிலையில் தங்களுக்குற்ற உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளவும் பாடுபடுவார்களாக.(-பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1994ம் ஆண்டு 'தமிழ்நிலம்')

தமிழ் தேசியவாதத்திற்கு அப்பால் முதலாளித்துவ (விளிம்புநிலை பற்றிப் பகுதியையும் கவனிக்க) சமத்துவத்தினை வழங்காத  நிலையில், மக்கள் கூட்டத்தினை ஒரு வரையறைக்குள் அழுத்திவிடும் நிலையில் தான் இன்றையப் போக்கு இருக்கின்றது. பாவலரேறு பெருஞ்சித்தனார் முன்வைக்கும் ஜனநாயக உரிமையை கவனத்தில் கொள்ளுதல் தகும். ஒரு மக்கள் கூட்டம் தன்னை தாழ்ந்தவர்கள் என ஏன் பிரகடனப்படுத்த வேண்டும். தம்மை தாழ்ந்தவர்கள் என்று பிரகடனப்படுத்தி உரிமையை பிச்சையாக பெறவேண்டிய தேவை எந்தக் குடிகளுக்கும் இல்லை. இது குறைந்தபட்சம் இந்த முதலாளித்துவ உலகில் உள்ள நீதி நெறியாகும்.

ஆனால் தெய்வத்தின் பெயர் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்த அந்தஸ்துக் கொடுத்து உயர்த்த காந்தி நினைத்தார். அதனாற் போலும் ஹரியின் புதல்வர்கள் என ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டார். கடவுள் பெயரை அழைத்துக் கொள்வதும் புனிதவடிவம், ழைமைக்கு இருக்கின்ற நன்மதிப்புக் காரணமாக பழைய தத்துவங்களில் இருந்து தம்மை அழைத்துக் கொண்டதாகவும் எடுத்துக் கொள்ள முடிகின்றது. பழைமையையும், அறியாமையையும் பயன்படுத்தி உளுத்துப் போன சமூக அமைப்பை நிலை நிறுத்தப் பயன்படுத்திக் கொண்டார்.

இன்றைய வரலாற்றுப் படிப்பினையில் இருந்து சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு வறியவர்களுக்கும் பிச்சை போடுவது போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவுஜீவிகள் திருமுழுக்கு (கிறிஸ்தவச் சடங்கு பாவத்தைப் போக்குவது) கொடுத்து உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிவுஜீவிகள் (பின்நவீனத்துவ- கருத்துமுதல்வாதிகள்) கருதிக் கொண்டனர். உழைக்கும் வர்க்கத்தை வர்க்க ரீதியாக ஐக்கியப்படுத்தி சமூகத்தை மாற்றுவதற்கு பதிலாக கௌரவம், சலுகை, பதவிக்கான பாசாங்கு அரசியலை முன்னிறுத்துகின்றார்கள். இது தமிழ்த் தேசம் (Nation) என்ற கட்டமைப்பிற்கு எதிரான நிகழ்வைத் தான் தலித்தியம் கொடுக்கின்றது. தேசத்தின் உருவாக்கம் ஒரு தொடரான பண்பாடு, மொழி, பொருளாதாரம், நிலம் என்ற அமைப்பினுள் சமூகத்தினை ஒருங்கமைக்கவிடாது தடுக்கின்றது. சாதிய வெறியும், தலித்தியமும் இங்கு ஒரு நிரை கோட்டில் பயணிக்கின்றது.  மக்களின் கூட்டு மனநிலையைச் சிதைத்து  அகமுரண்பாடுகளை முன்னிறுத்தும் கயமை அரசியலை முன்னிறுத்துகின்றது.

தமிழக தலித்தியவாதிகள், சாதியக் கட்சிகள் அந்த மக்களின் சாதிய அடையாளத்தை புதுப்பித்தே வந்துள்ளனர். இவர்கள் அடையாள அரசியல் ஊடாக ஜனநாயக உரிமையை ஒப்பீட்டு ரீதியாக பெற்றுக் கொண்டாலும் சாதிய அடையாளம் மறையவில்லை. கடந்து வந்த பொருளாதார அமைப்பின் ஊடாகப் பெற்ற கருத்தியல் சமூகத்தில் சாதிய, மதச் சிந்தனை ஊடாக தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றது.  சாதிய அடையாளம் என்பது அரசியல் பதவிக்கானதாகப் பயன்படுத்தப்படுகின்றது.

ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி ஒடுக்கப்பட்ட சாதிகள் மட்டும் பேசினால் தான் ஒடுக்குமுறையின் தாற்பரியம் புரியும் என்கின்றார்கள். தலித்தியத்தைப் பற்றிப் பேசுவதற்கும், தலித்திய இலக்கியங்களைப் படைப்பதற்கும் தலித்துகளினால் மாத்திரம் தான் முடியும் என்று சட்டவரையறை வகுத்துள்ளார்கள். உழைக்கும் மக்களின் வர்க்கமானது அனைத்துச் சாதிகளிலும், தேசிய இனங்களிலும், தேசங்களிலும் உள்ளது. இந்தப் பொருளாதார அமைப்பில் இலக்கியம் படைக்க முடியாதுள்ள எத்தனையோ திறமைசாலிகளை இந்தச் சமூகம் இழந்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தில் உள்ளவர்களின் உற்பத்திச் சக்தியை உயர்வாக வளர்த்தெடுப்பதற்கான  சந்தர்ப்பம் கொடுப்பதற்கும் இசைவான சமூகப் பொருளாதார அமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

சாதியைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள் சமூகத்தளத்தில் எதிர்ரொலித்துக் கொண்டிருக்கின்றது. சாதியத்திற்கு எதிராக போராடுவதற்கான கோட்பாடு என்பது மார்க்சியர்களைப் பொறுத்தவரை எதிர்ப்புரட்சிகரக் கூறுகளை சமாளிக்க வேண்டியிருக்கின்றது. மார்க்சியம் சாதியைப் பற்றிய புரிதலை நிறைவாகவே முன்வைத்திருக்கின்றது. மார்க்சின் கோட்பாடுகளை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்ற அறிவாளிகள் தம் இருப்பிற்காக பற்பல கோட்பாடுகளையும், விளக்கங்களையும் கொடுத்து  வந்திருக்கின்றார்கள். தலித்திய அறிவாளிகள் சாதியத்தினைப் பொருளாதார அமைப்பு (உற்பத்தி) முறை தீர்மானிக்கின்றதை ஏற்க மறுக்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரை ”பிராமணியம், யாழ்சைவவேளாளம்” என்பதே இவர்களின் எதிரியாகக் கொள்கின்றார்கள்.  ஆதிக்க சாதியே அனைத்திற்கும் காரணம் என்பார்கள். இவர்களைப் பொறுத்த வரையில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கான போராட்டம் என்பது அவசியமற்றதாகின்றது. பிராமணிய, யாழ்சைவவேளாளச் (நிலப்பிரபுத்துவத்தின் பின்னரான) சிந்தனை என்பதை ஒரு பொருளாதார உற்பத்தி உறவின் மேல் உருவான ஒரு சிந்தனை என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சாதியமைப்பை நிலைபெறவைத்திருக்கும் சமூக அமைப்பை மாற்றவேண்டும் என்ற கருத்தை ஏற்க மறுப்பவர்களாகவும் உள்ளார்கள். ”பிராமணிய, யாழ்சைவவேளாளச்” சிந்தனை என்பது இன்றைய முதலாளியச் சிந்தனையை உள்வாங்கி அரைநிலமானிய சிந்தனையுடன் இசைந்து பயணிக்கின்றது. இன்றைய குறைவிருத்தி முதலாளித்துவ பொருளாதாரத்தில் சாதியம் தொடர்ச்சியாக உள்வாங்குகின்றது.

யாழ்சைவவேளாளம், பிராமணியம்” என்பது நிலப்பிரபுத்துவச் சிந்தனையாகும். இதனை ஏற்க மறுப்பவர்கள் ”சாதி அந்தன் புத்தி குலம் அந்தன் ஆசாரம்” என்ற பழமொழியை சரி என்றே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும். இதேவேளை முதலாளித்துவ பொருளாதார அமைப்பு உருப்பெற்ற பின்னரும் அது மறைந்து விடாது தொடர்ச்சியாக உயிர் வாழ்கின்றது. மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் பழைய உற்பத்தி உறவிற்கே சொந்தமான சமூக உறவுகளை பாதுகாக்கின்றது. இவ்வாறாக பழைய உற்பத்தி உறவிற்கு உரித்தான ஆட்சியலகில் அரை நிலப்பிரபுத்துவ சிந்தனை இருப்பை உறுதிசெய்து சமரசம் செய்து கொண்டுள்ளதை கவனத்தில் கொள்தல் வேண்டும்.

இவ்வாறே பிராமணிய, யாழ்சைவவேளாளச் சிந்தனை என்பது ஒடுக்குமுறை சிந்தனையோட்டம். இந்தச் சிந்தனையை உள்வாங்க பிறப்பில் வேளாளராகவோ, பிராமணராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிராமணியத்தின் மதம் சார்ந்த கூறாக சனாதனக் கட்டமைப்பு உள்ளது. இந்தக் கட்டமைப்பை இன்னொரு மதத்துடன் ஒப்பிடலாம். இது பிராமணர் சமூகத்தவர்களை நோக்கிய தாக்குதலாகவே நடைமுறையில் உள்ளது. இதே போல வோளாளியம் என்பது மக்கள் பிரிவினர் மீதான தாக்குதலாக கொள்ளப்படுகின்றது. குணம் குலத்தளவு என்ற நிலைக்கு சென்று விடுகின்றது. குணம் குலத்தளவு என்பதும் பிற்போக்குத் தனம்தான். நிலப்பிரபுத்துவச் சிந்தனை என்பது அனைத்து சமூகத்தின் உறுப்பினர்களிடையே சாதிவேறுபாடின்றி புரையோடிப்போயுள்ளது. நாம் இன்றைய பொருளாதார அமைப்பில் இருக்கும் சமூக உறவானது அரைநிலபிரபுத்துவ, குறைவிருத்தி முதலாளியச் சிந்தனையின் படிதான் இந்த சமூக உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். இன்றைய சிந்தனையை (அரைநிலமானிய) சைவவேளாளம், பிராமணியம் என்பதை சாதியாகக் கொண்டு பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. இன்றைய இந்துத்துவா போக்கினை பிராமண எதிர்ப்பாக மடைமாற்றுகின்றார்கள். கிந்து என்பதே சனாதனம், சனாதனம் என்பதே கிந்துத்துவாகும். 

உலகில் மொழி உருவாக்கம், வர்க்கப் பிரிவுகள் தோன்றாத சமூகத்தில் எவ்வித பாகுபாடும் இருக்க முடியாது. இதை பல்லாயிரம் ஆண்டு வளர்ச்சியைப் பற்றி ஆராய்கின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதித் தாயுடமைச் சமூகம் என்பது ஆண்டான் அடிமைச் சமூகத்திற்கு சமூக அமைப்பிற்கு முந்தையதாகும். இன்றைக்கும் இனக்குழும வாழ்வியலில் குலத்தலைவனைக் கொண்டாக இருக்கின்றது. இதனை பல மானிடவியல் ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. அரச நிறுவனக் கட்டமைப்பு இன்றைய காலத்தைப் போல விரிந்த, இறுக்கமான வடிவமாக இருக்கவில்லை. பிராந்திய மொழியைக் கொண்ட இனக்குழும வாழ்வியல் வீழ்ச்சியின் பின்னர் தோன்றிய ஆண்டான் அடிமைக் காலத்தில் அரசு தோன்றுகின்றது. தமிழ் அரசுகளின் தோற்றம் பற்றிப் பார்க்கப்பட வேண்டும். இனக்குழுமங்களின் சிதைவு முக்கிய நிபந்தனையாகின்றது. இரத்த உறவுகள் சிதையும் என்பதைப் பார்த்தோம். தமிழர் வரலாற்றில் ஆண்டான் அடிமைச் சமூகம் இருந்ததா என ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். சங்க இலக்கிய வரலாறு சார்ந்து ஆராயப்பட வேண்டிய விடயம். ஆண்டான் அடிமைச் சமூகம் என்பது தாய்வழிச் சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவக் கட்டத்திற்கும் இடைப்பட்டதாகும். ஆனால் அடிமைகளை ஆண்டைகள் வைத்திருப்பதும், விற்பதும் நிலப்பிரபுத்துவத்திற்கானது. ஆபீரிக்காவில் இருந்து அடிமைகளைக் கொண்டு சென்றார்கள். அங்கு கொண்டு சென்ற பின்னர் மக்களை அடிமைகளாக விற்றார்கள். ஒப்பந்தக் கூலிகளாக பலபாகங்களுக்கும் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த மக்களின் நிலை கூட முன்னேற்றகரமாக இல்லை.  மூலதனத்தின் உபரியை உருவாக்குவதில் இந்த வழிமுறை ஏற்படுத்திக் கொடுத்தது. இன்று ஏகாதிபத்தியக் கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் இடப் பெயர்வானது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உற்பத்திச் சக்திகளை பெற்றுக் கொள்கின்றது. NRI, அகதிகளாக வந்த மனிதர்களின் உழைப்புச் சக்தி சந்தைக்கு வருகின்றது. இந்தச் சக்தி எவ்வித செலவுகள் அற்றவகையில் உழைப்பாளிகளை உருவாக்கி கொள்கின்றதை மேலை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன. முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பக் காலத்திலும் சரி, வளர்ச்சி அடைந்த பின்னரும் மார்க்சின் மூலதன திரட்சி, உபரிக் கோட்பாடு முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையை வெளிப்படுத்துகின்றது. உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டுவதும் நவீன அடிமைகளாக வைத்திருப்பதை வெவ்வேறு காலங்களில் புதுமைப்படுத்தி வந்துள்ளது. இவ்வாறு அடிமை உழைப்பு, சாதி ரீதியான, நவீன நிதிநிறுவனங்கள், தொழிற்சாலையின் சுரண்டல் அமைந்திருக்கின்றது.  

 ஆண்டான் அடிமைச் சமூகத்தையும், அடிமை விற்பனையும் போட்டுக் குழப்பத் தேவையில்லை. ஆனால் நிலப்பிரபுத்துவக் கட்டத்தில் சீறூர் மன்னர், குறுநிலமன்னர், முதுகுடிமன்னன், பேரரசர்கள் என் நான்கு வகை அதிகார வரம்புகள் இருந்திருக்கின்றது. இவ்வாறான அதிகார வரம்புகளை சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. இந்தக் காலம் நிலப்பிரபுத்துவ அரசு உருவாகிய காலமாகும்.

நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பில் தான் சாதியம் உருவாக முடிகின்றது. பொருளாதார அமைப்பில் உருவானதுதான் சாதியம், மதச் சித்தாந்தங்கள். அவை திடீரென முளைக்க முடியாது. நாம் சாதியைப் பற்றி பேசுகின்ற போது பல வரலாற்றுத் தடயங்களைத் தொட்டுச் செல்ல வேண்டும். உழைப்பை வழங்காது மூளை உழைப்பைக் கொண்ட சமூக உருவாக்கமும் அவசியமாகின்றது. அதன் பின்னரே சாதியம் தோற்றம் பெற முடியும். சாதியம்  நிலப்பிரபுத்துவக் கட்டத்தில்டாக ஆழப்படுத்தப்படுகின்றது. சாதியம் என்பது ஒரு மதப்பிரிவினரான வைணவ-சைவ மனுநீதியைப் போற்றும் சிந்தனையின் ஆழப்படுத்தல் பொருளாதார வளர்ச்சின் ஊடாகவும், பண்டங்கள் பரிவர்த்தனை ஊடாகவும் உருவாக்கப்படுகின்றது.

பண்டங்களின் பரிவர்த்தனை ஊடாக பொருளிற்கான விலை  நிர்ணயம் கொடுக்கப்படுகின்றது. பண்டமாற்றத்தின் ஊடாகப் பெறும் பணத்தின் ஒரு பகுதி  உபரியை ஏற்படுத்துக் கொள்கின்றது. பண்டமாற்றில் இருந்து பெறப்படும் ஒரு பகுதியை கூலியாகக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான மேலதிக வருவாய் சொத்துகளை உருவாக்கிக் கொள்கின்றது. சாதியம் நிறுவனமயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி முக்கியமானதாகும். சொத்துடைமை வர்க்கத்தின் தயவில் உழைக்காது வாழும் சோம்பேறிகளும் உருவாக்கப்படுகின்றார்கள். இந்த மூளை உழைப்பை வழங்கும் கூட்டத்திற்கு வெகுமானம் கொடுத்து அரச சபையிலும் கோவில்களில் நிறுத்தப்படுகின்றார்கள். நிலப்பிரபுத்துவத்திற்குரிய மதியுரைஞர்களாக உருவாகும் காலம். இந்த மதியுரைஞர்களால் அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்டது தான் (சாதியச்) அந்தப் பொருளாதாரத்திற்குரிய சிந்தனையோட்டம்.

பொருளாதாரச் சமத்துவத்தால் சமுதாயப் பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதாயிருக்கலாம். மேல்நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதா பேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. (இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்).” (38.3.13)  (பெரியார்) முதலாளித்துவம் அது வகித்த முற்போக்குப் பாத்திரத்தை இழந்து விட்டது. மார்க்சியர்களே தலைமை தாங்க வேண்டும். சோவியத் புரட்சியின் பின்னர் வந்தடைந்த மார்க்சியர்களின் மாற்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 மேற்கத்திய கலாச்சாரத்தினை, மொழியை இந்தியர்கள் பின்பற்றுமாறு கேட்டிருந்தார். இங்கு  பெரியாரால் சுயேட்சையான, சுதேசக் கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை. இங்கு பெரியார் நிலமானியத்தின் பிற்போக்குக் கலாச்சாரத்தினை விட முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முன்னேறிய ஜனநாயகத்தை பின்பற்றுமாறு கோரியது அந்தக் காலகட்டத்தில் சரியான நிலைப்பாடானதே. சீர்திருத்தமானது சமூகமாற்றத்தை, உற்பத்தி மாற்றத்தை கொடுத்துவிடாது.

சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் போது எதிர்நிலைக் கருத்துகளை முன்வைக்கின்றனர். தலித்தியவாதிகள் முதலாளித்துவத்தையும்,  நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதை விட சாதியத்தை எதிர்ப்பதுதான் இங்கே முக்கியம். ஏனெனில் இங்கே சாதியத்துடன் தான் எல்லாமே பின்னிப்பிணைந்திருக்கின்றன. பெண் விடுதலைக்கு வர்க்க விடுதலையே வழிவகுக்கும் என்பது புகட்டப்பட்டுள்ள பாடம்.இவ்வாறு தலித்தியர் கருதுகின்றார்கள்.

இவர்கள் தமது ஆளுமையைப் பயன்படுத்தி ஒரு அரசியல் போக்கை நிர்ணயிக்க கோருகின்றார்கள். இவ்வாறானவர்களின் சிந்தனையை எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகின்றார். ”முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு இன்னும் மறைந்தே கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்.” (பி. ஏங்கெல்ஸ்)

இவ்வாறான சிந்தனை கொண்ட அறிவுசார் பிரிவினரின் சிந்தனையின் வெளிப்பாடாக இந்தியாவில் தலித்தியம் என்றும், விளிம்பு நிலை என்றும் மக்களை விளித்து வரையறுத்துக் கொண்டனர்.  மேற்கூறிய வரையறைக்குள் உட்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலைக்காக போராட சாதியச் சங்கங்களை, கட்சிகளை உருவாக்கிக் கொண்டனர். இந்த சாதியச் சங்கங்கள் தேர்தலுக்காக மக்களைப் பிளவுபடுத்தும் கட்சிகளாக உருமாறிக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னர் வேலைவாய்ப்பு, அமைதி, அபிவிருத்தி என்று உரிமையை சோற்றுக்கு இணையாக பொருத்திப் செயற்படும் இணக்க அரசியலுக்கு ஒப்பாகும்.

இவர்கள் சாதியம் என்பது ஒரு சாதியின் சதி என்பதும், ஒரு குறிப்பிட்ட சாதிக்கெதிரான போராட்டம் போலும் சிந்திக்கின்றார்கள். மேட்டுக்குடிக்கான அரசியல் சாதியச் சமுதாயத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களை, உழைக்கும் வர்க்கத்தை  கவனத்தில் எடுப்பதில்லை. ஏனெனில் மனுதர்ம கோட்பாட்டின் படி நான்காம் படிநிலையில் உள்ள சூத்திரரான வேளாளர்களே ஆதிக்க சாதியாக கொள்ளப்படுகின்றார்கள். இவர்களை நோக்கியே இன்றைய தலித்தியம் வெறுப்புணர்வைப் பறைசாற்றுகின்றது. சற்சூத்திர வேளாளம்” என்பதே கொலனித்துவ காலத்திலும், ஆறுமுகநாவலர் காலத்திலும் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பில் உருவானது என்பதை தலித்தியவாதிகள் புரிந்து கொண்டார்களா என்பது தெரியாது.

இலங்கையில் பிரம்மஞான  (The Theosophical Society) அமைப்பின் தாக்கத்தினால் இந்திய தத்துவத்திலும், கிரேக்க மாயக் கொள்கைகளிலும், கிறிஸ்தவத்தில் இருந்தும் தமக்கான நம்பிக்கையை பின்புலமாக கொண்டனர். இவர்கள் அறிவின் பிறப்பிடமாக எகிப்தைக் கொண்டனர். எந்த மதமும் உண்மையை விட பெரியதில்லை என்று நம்பினர். ஆனால் எல்லா மதங்களும் உண்மையை அடைவதற்கான வழி என்று ஏற்றுக் கொண்டனர்.

வாழ்க்கையின் உண்மையை ஆரிய அல்லது வெள்ளை சகோதரத்துவ அறிவெழுச்சி என்ற உயர்ந்த நிலையை அடையும் வழி என்று நம்பினர். இவர்களின் சித்தாந்தத்தின் மூலம் உயர்குலத்தை உருவாக்க முடியும் எனவும் கருதினர். இவர்களின் தத்துவ நிலைப்பாட்டை புத்தரின் முக்தி நிலைக்கு ஒப்பானதாகக் கொள்வர். இந்தச் சிந்தனையின் உற்பத்தியாகிய இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தருமபாலா என்ற புத்த துறவி இவர்களின் ஆரிய வெள்ளை சகோதரத்துவக் கருத்துப் பால் ஈர்ப்பு கொண்டு அவர்களின் ஒரு சீடராக இருந்துள்ளார்.

னகாரிக தர்மபாலா சிங்கள இயக்கத்தின் தந்தை ஆரியமே உயர்ந்தது என்ற கருத்தாக்கத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டவராவார். ஆரிய மேன்மைக் கருத்துருவாக்கத்தின் சிங்கள பெருந்தேசியவெறிக்கு உரம் போட்ட நிகழ்வாகக் கொள்ள முடியும். யூத சியோனிஸ்ட்டுக்களின் கோட்பாடும் இவ்வாறாகவே அமைந்திருக்கின்றது. மதங்களின் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படும் அடையாளங்களின் அபாயத்தை கவனம் கொள்ள வேண்டும். மதஅடையாளம் கொண்டது பிற்போக்கு கூறைக் கொண்டதாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக மத உணர்வு ஊட்டப்பட்ட சமூகத்தில் விரைவாகவே சென்றடைய முடிகின்றது.

ஆனால் பிரம்மஞான (The Theosophical Society) அமைப்பின்  அப்பால் சிந்தித்த அநாகரிக தர்மபாலாவின் சிங்கள தேசிய கருத்துருவாக்கம் என்பது ஆறுமுகநாவலரின் சைவம்- தமிழ்- வேளாளம் என்ற கருத்துருவாக்கம் நிலப்பிரபுத்துவ பிற்போக்குச் சிந்தனை சார்ந்ததாகும். இது தர்மபாலாவின் சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு எதிர்நிலை கொண்டதாகும்.  தேசிய இனப்பெருமைக்கான கருத்துருவாக்கம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் முதலில் உருவாகியிருக்கின்றது. சிங்கள தேசிய இனப்பெருமைக்கு எதிர்வினையாக தமிழ் தேசிய உருவாக்கத்தின் கருத்துருவாக்கம் மெதுவாக முன்னெழுந்தது. அதுவும் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கலே பொன். அருணாசலம், ஜிஜி பொன்னம்பலம் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டதாகும். ஆனால் அது வேகமாக வளர்ந்து கொள்ளவில்லை. இந்தக் காலத்தில் தமிழ் கட்சிகளின் ஆளுமையில் இருந்து சீர்திருத்தவாத முதலாளித்துவ வர்க்க, தரகுமுதலாளித்துவ (அன்னிய ஏவலாளர்கள், சொந்த மக்களை நம்பாதவர்கள், மக்களின் வளர்ச்சியில் எவ்விதத்திலும் நேரடித் தொடர்பு கொள்ளாதவர்கள்) அரசியல் தவறு  அரசியல் கோசங்கள் என்பது பிற்போக்குத் தன்மை கொண்டதாக இருந்துள்ளது. முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் குற்றஞ் சாட்டப்பட்ட சிங்களத் தலைவர்களுக்காக லண்டன் வந்து பொன் இராமநாதன் வாதாடினார். பொன் இராமநாதனைப் பொறுத்தவரையில் கீழ் சாதியாக இருந்து மதம் மாறியவர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இராமநாதனின் அரசியல் என்பது பிரதிநிதித்துவ நியமனத்தினால் அமைந்தது. சமூக அந்தஸ்து, பொருளாதாரம் போன்றவற்றால் தீர்மானிப்பதாகும். இவரின் செயற்பாட்டை வைத்தே முழுத்தமிழர்களும் பொன் இராமநாதனுக்குப் பின்னால் நின்றது போன்றும், முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டதாகவும் வரலாறு எழுதப்படுகின்றது. பிரதிநிதித்துவமுறை கொலனித்துவாதிகளால் உருவாக்கப்பட்ட முறைமைக்கு ஏன் தமிழ் தேசத்தவர்கள் பங்கு தாரராக வேண்டும்? இசுலாமிய வணிக, மத, மேட்டுக் குடிகளால் இசுலாமிய தனித்துவம் அறிமுகப்படுகின்றது. இந்தப் போக்கினை இந்திய மத அடையாள அரசியல் காலத்துடன் பொருத்தி ஆராய வேண்டும். மத அடையாளங்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட காலமாகும். அதன் தொடர்ச்சியை ஆராயத் தயாராக இல்லை. அரசியல் பொருளாதார நலன்களின் திரிபுவட்ட கருத்தாக்கம் சமூகத்தை வேறோர் தளத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

 

இலங்கையில் தலித்தியம்

இலங்கையில் தமிழ்  தலித்தியம், விளிம்புநிலை பேசும், தலித்தியவாதிகள் (அடையாள,  குறியீட்டு) தன்னியல்புவாதிகளாகும். இவர்களைப் பொறுத்த வரையில் முரண்பாட்டின் குறிப்பிட்ட தன்மை, அதனை எவ்வாறு போக்க முடியும் என்ற புரிதல் இல்லை. ஆனால் இவர்கள் காரியக் கிறுக்கர்களாக இருக்கின்றார்கள். இந்த வர்க்கம் அதன் நோக்கம் மக்களின் விடுதலை அல்ல. தலித்தியவாதிகள் இந்தியாவில் இருப்பது போன்றே வகுப்புவாதிகளாக இருக்கின்றார்கள். 1970 முன்னைய சமூக அமைப்பில் இருந்து மாற்றம் பெறவில்லை என்றே ஒப்பிக்கப்படுகின்றது. இந்த மாறா நிலைவாதிகளின் தாக்கம் அரசியல் தளத்தில் உள்ளது. 1966களில் நடைபெற்ற தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் தலித் சொல்லாடல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 1990களின் பின்னர் ஐரோப்பிய வாழ்நிலையில் இருந்து பெறப்பட்ட ,பின்னவீனத்துவத்திற்குப் பின்னராக போக்காக தலித்தியம் இருக்கிறது. வட இந்திய ஒரு இறக்குமதிச் சொல்லாகவே தலித்தியம் இருக்கின்றது. தேசியப் போராட்டம் காரணமாக புலம்பெயர் (ஐரோப்பா) நாடுகளுக்கு வந்த பின்னர் தமிழக அறிவுசார் பிரிவினரால் அறிமுகப்படுத்தப்பட்டதே. (புலியெதிர்ப்புவாதிகளால் சிறுவர்களை படையில் சேர்ப்பதற்கு எதிரானதும், கட்டற்ற ஜனநாயகம் இத்தியாதி) தலித்தியமாகும். இந்தப் பிரிவினர் (2023ல்) பாசீசம் பற்றி உரையாடுகின்றார்கள். அடிப்படையில் பாசிசம் பற்றிய ஆய்வு செய்வதர்கள் இல்லை. பாசீசம் பற்றிய உரையாடலில் முதலாளித்துவ தாராளவாதம் மலிந்து கிடக்கின்றது. இதன் பின்னால் மேட்டுக்குடிகளின் கருத்தாக்கம் வளமை போல மேலோங்கி நிற்கின்றது. முதலாளித்துவ தாராளவாதிகளுக்கு பின்னால் ஒரு வரலாறும் உண்டு.

முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு முன்னால் எதுவும் இல்லை என்று திமிராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் பரப்பில் அறிமுகப்படுத்தப்ட்டவர் பெனடிக்ற் அன்டசன். பின்னவீனத்துவ, அமைப்பில்வாதம், கட்டுடைப்பின் பின்னால் சென்றார்கள். மேற்கில் கலாசாலையில் கற்பிக்கும் மானிடவியல் கோட்பாடாக பாடத்திட்டத்தில் மட்டுமே இருந்தது. அது தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தும் போது அரசியல் கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. ஒரு கலாசாலை பாடத்திட்டம் அரசியல் வடிவம் பெறுகின்றது. அதன் தாக்கம் கொஞ்சம் அல்ல. இனவழிப்புக்கு துணைபோகும் கருத்தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது மாத்திரம் அல்ல. மோசடியாக கருத்துக்கள் முதலாளித்துவ சார்பு கருத்துக்களாகவே வெளிப்படும். அவ்வாறான கருத்துக்கள் இன்றைய சமூக அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு துணை புரியும். மார்க்சியம் என்ற செயலூக்கம் கொண்ட சித்தாந்த வழிகாட்டலுக்கு நேர் எதிரே நிறுத்தப்பட்டது.

இன்றும் பலர் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுகளை வெளியிடுகின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் தமது பெயரை வெளிப்படுத்துவதாகும். இவ்வாறு வெளியிடுபவர்களை தடுத்திட முடியாது. ஆய்வறிக்கை (thesis- கருதகோள்) ஏதாவது ஒரு விடயம் சார்ந்ததாக அமைகின்றது.  அது சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் உள்வாங்கியதாக இருப்பதில்லை.

கலாசாலை ஆய்வை பொதுத் தளத்தில் வைக்கின்ற போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எல்லாவித கலாசாலை ஆய்வுகள் மக்களின் நலனில் இருந்து நடைபெறுவதில்லை. கல்வி நிறுவனம் கொடுக்கும் நிதியில் இருந்து தான் ஆய்வுகள் நடைபெறுகின்றது. அதன் பின்னால் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலை அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது. முதலாளித்துவ தாராளவாதம் எங்கும் மேலோங்கியுள்ளது. இன்றைய தத்துவ வளர்ச்சி மார்க்சியம் அற்ற நிலைதான் இன்று மேலோங்கியுள்ளது.

பின்நவீனத்துவ கோட்பாட்டை மறுபடியும் ஐரோப்பாவில் இருந்து முள்ளிவாய்காலின் பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யவும், தலித்திய இலக்கியத்தினை உருவாக்கிக் கொள்ளவும் செய்கின்றார்கள். தமிழக தலித்தியவாதிகள் பின்நவீனத்துவ, மார்க்சிய எதிர்ப்பு நபர்களின் ஆளுமையின் கீழ் ஆட்பட்டனர். தமிழக தலித்தியவாதிகளை வழிகாட்டிகளாகக் கொண்டனர். ஆனால் மேற்கை மையமாகக் கொண்ட தலித்திய ஆதரவாளர்களிடம் தலித்திய அரசியலை ஒரு கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்கும் வல்லமை இருந்திருக்கின்றதா என்பது கேள்விக் குறியே.  இவர்கள் நடத்தும் பத்திரிகைகள், இணையங்கள், எழுத்துகள் என்பவற்றை அவதானிக்கின்ற போது எதுவும் இவர்களின் சொந்தச் சரக்காக இல்லை. அம்பேத்ர், பெரியார், இந்திய தலித்திய எழுத்தாளர்களின் கோட்பாட்டு உதவி என்ப இல்லாது இலங்கைத் தலித்தியவாதிகளால் தனித்து தாக்குப் பிடிக்க முடியாது. கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவோ, விவாதிக்கவோ தயாராக இருக்கின்றனர். இவர்களுடன் விவாதிக்கின்ற போது வெளிப்படும் மூர்க்கத்தனமானது அவர்களுக்குள்ள  அரசியல் வெற்றிடத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

தலித்தியவாதிகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலியெதிர்ப்பாளர்கள் என்போர். இவர்கள் சமூகத்தில் இருந்து அன்னியப்பட்ட நிலையில் இருந்து இலக்கியம், எழுத்துகள் படைக்கின்றார்கள். விடுதலைப் புலிகளில் இருந்து வெளியேறிய விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றவர்களின் ஆதரவாளர் இதில் இணைந்தனர். இவர்களின் எழுத்துகளும் படைப்பும் இந்திய எழுத்தாளர்களின் ஒப்புதலுக்கும் அங்கீகாரத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கின்றது. இதேவேளை இவர்கள் நட்பு வட்டமே எழுத்துக்கான வரவேற்பாளர்களாகவும்,  விமர்சகர்களாகவும், ஒருவரை ஒருவர் தூக்கிவிடுவோராகவும் இருக்கின்றார்கள். தலித்தியப் படைப்புகளில் வர்க்கக் கண்ணோட்டத்தை நிராகரிப்பதாகவும், தனிமனித இருப்பை முன்னிறுத்தியதாகவும் இருக்கின்ற. சாதிக்குள்ளே வர்க்கங்கள் மிக பரந்த அளவில் முன்னிலைக்கு வந்துவிட்டது. இவர்களின் எழுத்துகளை விமர்சிப்பவர்களை முழு மனிதகுல விரோதிகளாகவும், கிணற்றுத் தவளைகள் எனவும் கருதுகின்றார்கள். அவர்களின் முரண்பட்ட கருத்துகள் என்ப சமூக விஞ்ஞான ரீதியாக இருப்பதில்லை. இவர்களினால் உருவாக்கப்பட்ட தலித்திய மேம்பாட்டு முன்னணி  முளையிலேயே இறங்குமுகத்தைச் சந்தித்தது. இவர்கள் தேர்தலில் போட்டியிட்ட போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

2009 வீழ்ச்சிக்குப் பின்னர் அம்பேத்கர் முன்னணி என்று (லங்கா) உளவுத் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செயற்பாட்டை புலம்பெயர் நாடுகளில் கொண்டு செல்வதில் மறைமுகமாக இயங்குகின்றார்கள். சமூகத்திற்கா போராட்டப் பாதை முன்னேறிய (பணம், படிப்பு) பிரிவினரின் தலைமையில் இருக்க முடியாது. தன்னியல்பான வேலைமுறைகளைப் புலம்பெயர் நாடுகளில் இருந்து செயற்பட எத்தனிக்கின்றார்கள். சுருக்கமாக சொல்லப் போனால் முகவர்களின் ஒப்புறவு புதுப்பிக்கப்படுகின்றது. ஈழ தேசத்தன் நியாயத்தை முறியடிப்பதற்கான கருத்துருவாக்கம் ஜனநாயகம், பன்முகத்தன்மை, முற்போக்கு என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் பிரிவினருக்கு நேரடியான உடன்பாடு என்பது இருக்கத் தேவையில்லை. ஆனால் கருத்துருவாக்கம் என்ற புள்ளியில் இவர்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றார்கள். முற்போக்கு, இடதுசாரி என்ற போர்வையில் திரிபுவாதிகளின் கருத்தோட்டமும், புலியெதிர்ப்புவாதிகள், புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் ஒன்றாகவே இருக்கின்றது. மரபார்ந்த இடதுசாரி வலதுசாரி என்ற வரையறை இன்று பொருத்துவதில் சிக்கல் உள்ளது. இன்றையக் காலத்தில் வர்க்கங்களின் சேர்க்கை, அசைவியகம் என்பது மக்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. இவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை மறுப்பதே.

தன்னியல்பான போராட்டங்கள் ஊடாக சமூகத்தினை சிந்தனை ரீதியாக சிதறடிக்க முடியும். இவர்களின் போராட்ட வடிவங்களும் வர்க்கப் (தேசிய விடுதலையுடன் கூட) போராட்டத்திற்கு பாதகமாக அமைந்து விடுகின்றது. இந்திய தலித்திய, விளிம்புநிலை போன்ற கோட்பாட்டின் உள்ளடக்கத்தை மார்க்சியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கோட்பாட்டுத் தளத்தில் உள் விடயங்களை அறிய வேண்டும். முற்போக்கு என்ற போர்வையில் வைக்கப்படும் கோட்பாடுகளாக தலித்திய, விளிம்புநிலைக் கோட்பாடுகளை அம்பலப்படுத்துவது அவசியமாகும். இந்திய தலித்திய, பின்நவீனத்துவவாதிகள் ஒரு நிறுவனமயப்பட்ட ஒழுங்கமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகின்றார்கள்.

1917, 1945 க்குப் பின்னர் கம்யூனிச எதிர்ப்பு முனை அனைத்து தளத்திலும் முளைத்தது. ஏகாதிபத்தியங்கள் முதலாளித்துவ சார்பு கருத்துவாக்கம் பல தளங்களில் உருவாக்கப்பட்டன. அவைகள் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரில், நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற அடிப்படையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்றதையும், முதலாளித்துவ அரசு உயர்ந்ததாகவும் கட்டமைக்கப்பட்டது. இதற்கென தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.

மேற்கில் நடைபெற்ற ஆய்வுகள் அந்த சமூக (anthropometric) தன்மையின் வெளிப்பாடகவே இருக்கும். முதலாளித்துவ உற்பத்தி, சமூக உறவுகள் மாற்றமடைந்துள்ளது. அந்த ஆய்வுகளின் உண்மை அர்த்தம் என்ன என்று விளங்காமல் ஆய்வுகளை உள்வாக்கிக் கொண்ட கூட்டம் உருவாகியது. நமது பாடத்திட்டத்தில் இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக என்று ஒரு பகுதியை காலம் காலமாக வைத்து இருக்கிறார்கள். ஒரு செய்யுள் யாரால் எங்கு ஏன் சொல்லப்பட்டது என்பதையும் அந்த இடத்தில் செய்யுளின் அர்த்தம், என்ன என்று விளக்கம் தர வேண்டும். இவ்வாறான பொருள் விளக்கங்கள் கிடைப்பது இறக்குமதிப் படைப்புகளில் கிடைப்பது அரிது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தவர்களை சாதியின் பேரால் அழைப்பு விடுத்து வர்க்க பேதத்தினை மறைத்துக் கொண்டு, சாதியினை முன்னிலைப்படுத்தி சாதிவாரியாக அணிதிரட்டிக் கொள்கின்றது. இலங்கைக்கு இறக்குமதி செய்ய முற்படும் தலித்தியவாதிகள் இந்தியச் சூழலில் தலித்தியம் எவ்வகையான எதிர்வினையாற்றியது என்பது பற்றிய மறுவாசிப்பு செய்ய முயலவில்லை.

மனித இனத்தை வசதி படைத்தவர்கள் (மூலதனம்,  சர்வதேச அலகில் அடிப்படை முரண்பாடு பரந்த அணுகுமுறையில் காண்க) வசதி மறுக்கப்பட்டவர்கள் (உற்பத்தி -உழைப்பை விற்க தயாராக இருப்பவர்கள்) என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டமும் என இந்த பொருளாதார அமைப்பில் இருந்து கொண்டே இருக்கின்றது. இந்த மக்கள் கூட்டத்தை விஞ்ஞான ரீதியாக பகுத்தறிவதில் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது. இதில் ஒரு சமூகத்தில் ஒரு பிரிவினரே ஒடுக்குமுறையை, பின்னடைவை இனம் கண்டு அதற்கான தீர்வை முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவை குட்டி முதலாளிய வர்க்கம் (தோழர்கள் ஏங்கெல்ஸ், லெனின், மாவோ போன்றவர்கள் குட்டிமுதலாளிய வர்க்கத்தவர்களே) இவர்கள் சமூகத்தில் முன்னோக்கி நகரமுடியும். வர்க்கங்கள் பொருளாதார முரண்பாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அலசிப் பார்ப்பவர்கள் வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்கள்  உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் சார்ந்து நிற்பவர்களாகவும் மறுபிரிவினர் வசதியைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கோடு அதனைச் சார்ந்து நிற்பவர்களாகவும் இருக்கின்றனர். மக்களுக்காக நிற்பவர்கள் குட்டி முதலாளியப் இடது பிரிவினராக கொள்ள முடிகின்றது. கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்களிடம் கூட  மத்தியதர வர்க்கம், உயர் மத்திய வர்க்கம், சிறுமுதலாளிகள் என இருக்கின்றார்கள். முன்னைய காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களும், கல்வியும் இருந்தது. இன்று அவ்வாறில்லை அவ்வாறு இருக்கவும் முடியாது.

இந்த இரண்டு பிரிவினர்களும் சமூகத்தில் இருக்கின்ற வழிகாட்டும் சிந்தனை பற்றிய தெரிவுகள் என்பது துல்லியமாகத் தெரியக் கூடியது. ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் நலன் கொண்டு திரித்துக் கூற முடிகின்றது. இதில் வசதி மறுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து வெளிவருவதற்குப் போராடுகின்ற போது அவற்றை ஒவ்வொருவரும் சுயமாக எதனையும் செய்து முடிவதில்லை. மாறாக சமூகத்தில் இருக்கின்ற பொருளாதார அமைப்பே இவற்றை நிர்ணயிக்கின்றது.

இந்த நிலையில் பொதுவான ஒடுக்குமுறைகளை இனங்கண்டு கொள்வதில்லை. சாதிய அமைப்புகளும் தம் பங்கிற்கு இன்னொரு சமூகத்தை சுட்டிக் காட்டுகின்றனர். பொருளாதார அமைப்பின் விளைவுகளை முழுமையாக உள்வாங்க முடிவதில்லை. கட்சிகளின் ஊழியர்கள் பொதுப்புத்தியில் இயங்குபவர்களாகவும், தலைமை கூறியதை ஒப்பிப்பவர்களாக இருக்கின்றர்கள். சாதிய, தலித்தியர்கள். அடையாள கோரிக்கையாக்கி உயர்வர்க்க நலன்களின் மையத்தில் இருந்து தீர்வு நோக்கி நகர்கின்றனர். இதன் வெளிப்பாடே சாதிய அடையாளங்களை முன்வைத்து வெளிப்படும் சாதியக் கட்சிகளும்,  அமைப்புகளுமாகும். அனைத்து வித பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்ட சாதியச் சிந்தனைக்கு முண்டு கொடுக்கும் இந்தச் சமூக அமைப்பின் மீது அறக்கோபம் ஏற்பட வேண்டும். அனைத்து வகை பிற்போக்குச் சிந்தனைகளுக்கும் எதிரான போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஆனால் அடையாள அரசியல் எனும் வகுப்புவாதச் சிந்தனைக்குள் மூழ்கி விடுகின்றனர். குறுங்குழுவாதத்தை வளர்த்து விடுவதில் தலித்திய, சாதிய அமைப்புகளின் செயற்பாடு உள்ளது.

பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையேயான வர்க்க பாகுபாடும் இருக்கின்றது. வறியவர்கள் அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தமக்கு தீர்வாக முன்வைக்கப்படும் உரிமை என்பது வசதி படைத்தவர்களுக்கு இடையே பேசப்படும் பேரமாக அமைகின்றது.

இவ்வாறுதான் தலித்துகள் இன்று பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும், வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம், பிராமணியச் சிந்தனையால் விதைக்கப்பட்ட சாதி தர்மத்தை அழிப்பதாக கூறிக் கொண்டு வளர்ந்த பிரிவினர் தம்மை தலித்துக்கள் என்று  தமது நலனின் மையநிலையில் இருந்து கருத்தை முன்வைக்கின்றனர்.

இங்கு வசதி மறுக்கப்பட்டவர்கள் என்கின்ற போது ஒரு சாதியிலோ, ஒரு மதப்பிரிவிலோ, ஒரு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இவர்கள் மதம், சாதி கடந்து வசதி மறுக்கப்பட்டவர்கள்  (இது பொதுவான அடிப்படை முரண்பாடு) இருக்கத்தான் செய்கின்றனர். சுருக்கமாக சொல்வது என்றால் எளிய மக்களை ஏமாற்றுகின்ற உயர் வர்க்கப் பிரமுகர்கள் இருக்கின்றார்கள்.

ஒடுக்கப்படும் சமூகத்தவர்களில் உள்ள உயர்வர்க்கத்தவர்களின் வர்க்க படிமுறை வளர்ச்சியானது செயற்பாட்டிலும் தளர்வினை ஏற்படுத்தி விடுகின்றது. குறுங்குழுவாதம் வளர்ச்சி பெறுகின்ற போது. அங்கு முரண்பாடுகள் ஏற்படத்தான் முடியும். தமிழகத்தில் குறுங்குழுவாதம் வர்க்கமாக, தேசமாக இணைய வைப்பதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. மறுபக்கத்தே தேசிய எழுச்சியை உருவாகக் கூடாது என்பதில் அகண்ட இந்தியவாதம் கவனமாக இருக்கின்றது.

தன்னியல்பான போராட்ட வடிவங்களின் நிலையில் சிதைவை ஏற்படுத்தும். தன்னியல்பிற்கு உட்பட்ட மனிதர்களின் நிலையை அவர்களின் தலைவர் கூறுகின்றார். “என்னுடைய உழைப்பின் பலனை அனுபவித்தவர்கள் படித்தவர்கள் தான்.  அவர்கள், தாங்கள் முன்னேறியதும் தன் சமூகத்தை வழி நடத்துவார்கள் என்று நினைத்தேன்.  ஆனால், அவர்கள் அவர்களுடைய வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காகவே என்னை சுற்றி சுற்றி வந்தார்கள்  என்று என்னுடைய இறுதிக் காலத்தில் தான் நான் உணர்ந்தேன். இவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.”  (டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.)  இந்த அனுபவத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தின் பிரிவு உதவி பெற்ற பின்னர் தமது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்வது பொருளாதார நிலை சார்ந்ததாகும். ஏனெனில் அவ்வாறு சுயநலமாக நடந்து கொண்டது தனிமனிதப் பலவீனமும், நிச்சயமற்ற பொருளாதார நிலை கொடுக்கும் அழுத்தமாகும். ஆனால் அம்பேத்கர் கருதுவது போல சுயநலவாதிகள் என்றிட முடியாது. இவற்றுடன் வர்க்க அசைவியக்கம் அங்கு நடைபெறுகின்றது. எந்த மனிதர்களும் கீழ்மைப்படுத்துகின்ற அடையாளத்தை சுமந்து செல்லத் தயாராக இருக்கவும் மாட்டார்கள். தொழிலாளர்களுடைய இரத்தத்திலேயே கலந்து விட்ட இந்த முதலாளித்துவ உயர்குல மான்பான்மை (respectability).. இவர்களின் மிகச் சிறந்தவராய் நான் கருதும்  டாம் மானுங் கூட மேன்மை தங்கிய நகர மேயருடன் விருந்துண்ணப் போவதாகக் தனிமகிழ்ச்சி காண்கிறார்.“ (ஏங்கெல்ஸ்-204 திருத்தல்வாதம் எதிர்ப்போம் மார்க்சியம் காப்போம்.) சாதிக்குள் வர்க்கம் முன்னிலைக்கு வருகின்ற போலவே முன்னர் இடதுசாரி என்றவர்களே ஆட்சிகளுடன் கூடிக் குலாவினர். இது மார்க்ஸ் காலத்திலும் நடந்துள்ளது. இந்த வர்க்க நிலைமாற்றத்தை போட்டி, பொறாமை, வஞ்சகம், சுயநலம் என்று அடக்கிட முடியாது.

தலித்திய அமைப்புகள் வர்க்கம் அற்றதாக உள்ளது என கற்பிதம் செய்கின்றார்கள். சாதியை ஒழிப்பதற்கு ஒடுக்கும் சமூகத்தினுள் இருக்கும் உழைப்பாளிகளை ஒன்றிணைப்பது அவசியமாகும். அதேவேளை ஒடுக்குதலுக்கு உள்ளாகும் சமூகத்தவர்களுடன் ஜனநாயக முற்போக்குச் சக்திகளின் இணைப்பும் அவசியமானதாகும்.  ஐக்கியப்பட்ட செயற்பாட்டை தலித்தியவாதிகள் செய்யவில்லை. ஆனாலும் படிப்பினைகளில் இருந்து கற்றுக் கொள்ளாமல் இன்றைய தலித்தியவாதிகள் (அடையாள) தன்னியல்பு அரசியலைத் தூக்கிப்பிடிப்பதன் ஊடாக சாதியத்தைப் பாதுகாத்துக் கொண்டும், உழைக்கும் மக்களை சாதி ரீதியாக பிளவுகளையும் உண்டாக்குகின்றார்கள். இது தேசங்களின் உரிமையின் போது ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்கின்றது என்ற திரிபுவாதக் கருத்து முன்வைக்கப்படுகின்றது. வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்ற இயங்கியலை மறுத்து தேசிய இனத்தின் கோரிக்கை என்பதை, வர்க்கக் கோரிக்கையாக பார்க்காத நிலையாகும். ஆனால் சாதியம், மதச் சிந்தனை என்பது சமூகக் கட்டமைப்பை மாற்றத்திற்கு உள்ளாக்காமல் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளும் சிந்தனை வடிவமாகும்.

 

பர்மிய இனவெடுக்குமுறை

அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட தொழிலாளர்களுக்கான வெற்றிடத்தை ஒப்பந்தக் கூலி முறையை பயன்படுத்தினர். இதன் ஊடாக உலகின் பல பாகங்களுக்கும் தொழிலாளர்களை அழைத்துச் சென்றார்கள். தொழிலாளர்கள் செல்லும் இடமெல்லாம் பாதை அமைத்தார்கள். காடுகளை அழித்து தோட்டங்களையும், தொழிற்சாலைகளையும் அமைத்துக் கொடுத்தார்கள். வளங்களையும், சொத்துக்களை உருவாக்க தமது குருதியைக் கொடுத்தார்கள். இந்த வறிய நிலையை அடிமைகளில் வாழ்விலும் இவ்வாறாக அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட ஆபீரிக்க குடிகளையும் அவதானிக்க முடியும்.

ஒப்பந்தக் கூலிகளாக சென்ற மக்களிடத்தில் சாதியம் முற்றாக ஒழிந்ததாக கருதப்படுகின்றது. தமிழர்கள் வாழும் பர்மா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் நிலை மாறுபட்டுள்ளது. தேசிய ஒடுக்குமுறை பர்மிய தமிழர்கள் அனுபவித்து வருகின்றார்கள். தேசிய வெறி கொண்ட ஆட்சியாளருக்கு மியன்மாரும் எடுத்துக்காட்டாகும். தென் ஆபீரிக்காவில் இருந்தது போன்ற நிலைதான் பர்மிய தமிழர் நிலையும். தமிழர்கள் வாழும் சிங்கப்பூர் (முதலாளித்துவ சனநாயகத்தை அனுபவிக்கின்றார்கள்), மலேசியா (தேசிய இன ஒடுக்குமுறை உள்ளது) போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களை விட பர்மாத் தமிழர்கள் பெரும் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்றார்கள்.

பொருளாதாரத்தில் வறுமையில் வாடும் மக்களின் நிலை இன்னும் மோசமானதாகும். அவர்களுக்கு வாழ்வியலை சந்திக்கும் போராட்டத்தில் மொழியைக் கற்றுக் கொள்வது சிரமான காரியமாகும். பொருளாதாரத் தேவைக்காக நேரத்தைச் செலவிடும் போது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே அவர்களுக்கு இருப்பதில்லை. அண்மையக் காலத்தில் ஆர்வம் கூடியுள்ளது.

மியான்மார் (பர்மிய) தமிழர்கள் தமது பெயர்களுடன் பர்மிய பெயரை சேர்க்கின்றார்கள். சிலர் முழுப்பெயரையும் மியான்பெயராக மாற்றுகின்றார்கள். இன்றைக்கு 20- 35 வயதுடையவர்களில் அதிகமானவர்களுக்கு தமிழே தெரியாது.

1. வேலைக்காக

2. இலகுவாக பிறப்புசான்றிதல், உட்பட அரசாங்க ஆவணங்களை பெறுகின்ற தேவைக்காக

3. அரசின் மறைமுக அழுத்தம்

4. அதிகாரிகளின் பாகுபாடு

ஒரு மக்கள் கூட்டமானது உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற புரிதல் முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதிகளுக்கு இருப்பதில்லை. தாய்மொழியை பாடசாலைகளில் கற்கும் உரிமை அங்கில்லை. நீங்கள் பர்மிய விமானநிலையத்தில் வேலை செய்பவர்களை அவதானித்தீர்கள் என்றால் விடயத்தை உள்வாங்கிட முடியும். மற்றைய மொங்கோலிய மக்களைக் கொண்ட ஊழியர்களே எங்கும் கண்டு கொள்ள முடியும். இக்கூற்று மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம்.  இது என்னுடைய பயணத்தில் கண்டது.

மொழியை மறந்த தமிழர்களாக வாழவேண்டிய நிலைக்குச் செல்கின்றனர். இத் துயரத்திற்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக தலைநகரில் தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கி தமிழ் கற்றுக் கொடுத்து வருகின்றார்கள். ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாத நிலையிலும் தம்மால் முடிந்தவரையில் தமிழைப் படிப்பிக்கின்றார்கள். இந்தியாவில் இருந்து தமிழ் ஆர்வலர்கள் சென்று கற்பிக்கும் முறைமை பற்றி தலைநகர் யங்கோனில் வகுப்புகளை நடத்துகின்றார்கள்.

முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மொழிக் கொள்கை ஒன்றாக இருப்பதை அவதானிக்க முடியும். தமிழகத்தில் இந்தித் திணிப்பிற்கு 1967 எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியில் இருந்தால் எந்த மொழியையும் திணிக்க முடியும். ஆட்சி அதிகாரம் இருந்தால் எதனையும் பின்கதவாலும் திணிக்க முடியும். சிங்களம், தமிழ்  மொழிகளை கற்றுக் கொடுப்பது என்ற பெயரில் பின்கதவால் நுழைத்து விடுவது. இவ்வாறான செயற்பாடுகளின் விளைவுகள் காலப்போக்கில் தான் வெளிப்படும். சமூக பொருளாதார ஓட்டம் என்பது ஒரு மக்கள் கூட்டத்திற்கு சொல்லெணாத் துயரைக் கொடுத்துவிடும். சனநாயக உரிமையானது உறுதிப்படுத்தப்படாத நாடுகளில் இந்த நிலைதான் தொடர்கின்றது. இலங்கை மேற்குக் கரையோரத் தமிழர்கள்   சிங்கள மொழி பேசுபவர்களாக மாற்றப்பட்டார்கள். அநுராதபுரத்திலும் இவ்வாறு தான் மொழி மாற்றப்பட்டார்கள் அல்லது துரத்தப்பட்டார்கள். அநுராதபுரத்தில் 1900 களில் தமிழர், சிங்களவர் சரிசம அளவில் வாழ்ந்ததாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. மக்கள் தம் தாய்மொழியை பேசுவது, பாதுகாப்பது, அன்றாட பரிவர்த்தனையில் பயன்படுத்துவது அவர்களின் பிறப்புரிமை. பர்மிய மக்களின் நிலை மாறுபட்டதாகும். அந்த மக்கள் தாய் மொழி மறப்பது கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் நாடுகடந்து வாழும் மக்களிடையே சாதிய உணர்வு மீளவும் தூண்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. முக்குலத்தோர், நாடார் உறவு முறையினரின் கோவில்கள் என்று அடையாளப்படுத்துகின்ற சூழலை அவதானிக்க முடிந்தது. இந்தப் போக்கு என்பது அண்மையக் காலத்தில் எழுந்தவையாக தோன்றுகின்றது.  மலேசிய அன்பர்களுடன் பேசும் போது தமிழகத்தில் உள்ளவர்களுடன் திருமண பந்தம் செய்ய முற்படும் போது சாதிய அடையாளம் தேவை என்கின்றார்களாம். தமிழகத்தில் இருந்து மலேசியா வருபவர்களின் நோக்கத்தில் கூட அமைந்திருக்கலாம்.  அது இங்கு விடயமல்ல, ஆனால் மலேசிய மக்கள் மறந்து கொண்டிருக்கின்ற மரபை மீளவும் உயிர்ப்பிக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சனை பர்மிய, மலேசிய மக்களிடம் காணமுடிந்தது.

அந்த நாட்டின் சூழலில் இருக்கின்ற நிலைமைகளில் அரசியல் உண்மையை வலியுறுத்த முடியாது. அரசியல் கோட்பாடு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சார்ந்தே இருக்க முடியும்.

ஒடுக்குமுறை காரணமாக பர்மிய தமிழர்களிடையே கோவில் வழிபாடு, தமிழ் பள்ளி போன்றவற்றால் இணைக்கப்படுகின்றனர். தன்னார்வ செயற்பாடுகளின் ஊடாகவே

 

இடவொதுக்கீடு பற்றி

முதலாளித்துவ வளர்ச்சியும், நிறுவனக் கட்டமைப்பும் மேல் இருந்து வருவிக்கப்பட்ட ஒன்றாகவே கொலனியக் காலம் இருந்துள்ளது. உள்நாட்டு பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆட்சிமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு பிரதிநிதிகள் மதங்களின் அடிப்படையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே போல இலங்கையிலும் மதம், பொருளாதாரம், கல்வி போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதிநிதித்துவ முறை உருவாக்கப்பட்டது. இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது தேசங்களின், தேசிய இனத்தின் உரிமை என்ற அடிப்படையில் அமைந்து விடவில்லை. இது அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சியே. தேசமான உணரக் கூடாது என்ற அடிப்படையில் அமையப்பட்டது.

சாதிய, பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருந்தவர்களுக்கு இடவொதுக்கீடு கோரப்பட்டது. ஒதுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம், தொழிலில் இடவொதுக்கீடு என்பது சாதிவாரிக் கண்கெடுப்பின் பின்னர் ஏற்பட்டதாகும். இடவொதுக்கீடு பற்றிய கோரிக்கை இந்தியாவில் பல தரப்பில் இருந்து வந்ததாகும். இது பிற்பட்ட காலத்தில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது.

இதே பாணியில் இலங்கையில் 1970களில் பதவிக் காலத்தில் மாவட்ட ரீதியான புள்ளிப் அடிப்படை உருவாக்கப்பட்டது. தரப்படுத்தல் (Marginalization) என்பது நலிந்த மாவட்டங்களாகப் பிரித்து அங்கு பயிலும் மாணவர்களுக்கான பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான புள்ளியில் முறைகள் மாற்றப்பட்டது. இதனால் சிலமாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாணவர்கள் உயர் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக சிங்கள தேச அரசு தனக்குத் தேவையான உற்பத்திச் சக்தியின் வலுவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள போதிய கலாசாலைகளை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். இந்தச் செயற்பாடானது தேசிய இனங்கள்,  மாவட்டங்களின் மக்கள் என முரண்பாடுகள் ஏற்பட்டது. இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் மற்றைய தமிழ் மாவட்டங்களான மன்னார், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்றனர். (அதேவேளை வடக்கு மாணவர்கள் பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து கல்வி கற்றதுடன் பல்கலைக்கழகத்திலும் நுழைந்தனர்) இந்நிலையானது (உண்மையானது) பேரினவாத அரசின் அடக்கு முறையின் கொடுமையினால் மறைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு இருக்கையில் இது தமிழ் தேசிய இனத்தின் மீதான தாக்குதல் என்பதை ஈழப் போராளிகள் கவனத்தில் கொண்டார்கள். தமிழ்தேசத்தின் உற்பத்திச் சக்தியை வளர்ச்சியடையவிடக் கூடாததென்ற சிங்கள தேசத்தின் அரசியலாகவே இது இருந்தது. ஒரு தேசத்தின் உற்பத்தி சக்தி சம்பந்தப்பட்ட விடயம் என அதன் ஆதரவாளர்கள் இன்றுவரையில் ஏற்கவில்லை. இன்றும் தமிழ் மொழி பேசும் வேலையில்லாப் பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்களை நியமிக்காமல் சிங்கள மொழி பேசுகின்ற ஊழியர்கள் தமிழர் பகுதியின் நியமனம் பெறுகின்றார்கள்.

1972 ஆட்சிக் காலத்தை தேசிய முதலாளியமாக வரையறுத்த தமிழ் இடதுசாரிகள் உண்டு. ஆனால் யாப்புருவாக்கத்தில் சிங்களவர் தவிர்ந்த மற்றைய மக்களின் உரிமையை உறுதிப்படுத்தியிருந்த சோல்பரியாப்பின் பகுதியை அகற்றினர், சிறிலங்கா என்று பெயரையும்  மாற்றிக் கொண்டார்கள். இது 1948 ஆண்டுகளின் பின்னரான அரசியல் போக்கின் உச்ச நிலையாகும்.

தரப்படுத்தலை பலமாதிரி வியாக்கியானம் (interpret) செய்யலாம். அது Michigan பல்கலைக் கழகத்தில் அல்லது தமிழகத்தில் இருப்பது போன்ற இடவொதுக்கீட்டு அரசியலாக இலங்கையில் அமையவில்லை. அது தமிழ் தேசத்தின் எழுச்சியை சிதைப்பதற்கான அரசியலைக் கொண்டதாகும்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற சலுகைகள் (ஜனநாயக உரிமை) மிகவும் கீழ் நிலையில் உள்ள மக்களுக்குக் கிடைப்பதில்லை. உரிமைகள் சலுகைகள் இருக்கின்றது என்பதை அறியாமலே பல லட்சக்கணக்காவர்கள் உள்ளார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான இடவொதுக்கீடு என்பது இந்தியாவில் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள உயர்வர்க்கத்தவர்கள் தமது உயர்விற்காக அமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் பாட்டாளிமக்கள் கட்சி (மருத்துவர் இராமதாஸ்) புதியதமிழகம் (மருத்துவர் கிருஸ்ணசாமி) கொங்கு, முக்குலத்தோர் அமைப்புகள் ஆகியோர் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் வெவ்வேறு சமூகப் பிரிவைத் தலைமை தாங்கினாலும் அவர்களுடைய அரசியல் என்பது சாதியச் சிந்தனையை, சாதிய வட்டத்திலான சமூக வட்டத்தில் இருந்து வெளிவராது மக்களைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றனர். எனவே இவர்கள் வித்தியாசமானவர்கள், வர்க்க எதிரிகள் இல்லை என்று கருத முடியாது. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தவர்களாக (அருந்ததியர், பறையர், பள்ளர் -மள்ளர்) பிற்படுத்தப்பட்ட (வன்னியர், கள்ளர், தேவர்) சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களின் ஆதிக்கமே இன்றுள்ளது. இவர்கள் சாதியைக் காட்டி உழைக்கும் மக்களைக் கூறுபோட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.  தமிழ்த் தேசிய இனமாக ஒன்றிணைவதைத் தடுப்பதிலும் காரியமாற்றுகின்றார்கள்.

இந்தியாவில் ஆட்சிக்கு வந்து மோடி அரசு முற்படுத்தப்பட்டோரில் உள்ளவர்களுக்கு 10 வீத இடவொதுக்கீடு என்று கீழ் நிலையில் உள்ளவர்களுக்கான சந்தர்ப்பத்தைப் பறித்துவிட்டுள்ளது. முற்படுத்தப்பட்ட சாதிக்குள்  இருக்கும் மக்களின் பொருளாதார வரம்பும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. பொருளாதார வரம்பு நிர்ணயமே அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் மீதான அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும். முற்பட்ட பிரிவினரில் வாங்கும் சக்தியைக் கொண்டவர்கள் அடங்கியிருக்கின்றார்கள். இரண்டு விதமான தாக்குதல் ஒன்று ஒடுக்கப்பட்டவர்கள், பொருளாதார நலிந்துள்ளார்கள் இவை இரண்டையும் மீறி இன்னொரு பிரிவிற்கு சலுகை வழங்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாட்டிற்கு ஒடுக்கப்படும் சமூகத்தைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கூட ஆதரித்து வாக்களித்தார்கள்.  

ஒடுக்கப்பட்ட சமூகமாகிய அருந்ததியினருக்கு இடவொதுக்கீட்டை விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பதாக விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் தொல் திருமாவளவன் இதனை மறுக்கின்றார்.  அருந்ததியச் சமூகத்தை தமிழர்கள் அல்லர் என்று கூறும் சாதிய தேசியவாதம் பேசுபவர்களும் உண்டு. ஏனெனில் இவர்கள் வீட்டில் தெலுங்கைப் பேசுகின்றார்கள் என்பதே காரணமென்கின்றனர்.

சீர்திருத்தத்தின் ஊடாக உரிமையைப் பெற்றுக் கொள்வதும் மக்களுக்கான ஜனநாயக உரிமை என்பதை கவனத்தில் எடுத்தல் வேண்டும். ஆனால் மானியம், இலவசம் என்றே மக்களை சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  மக்கள் நலன்புரி அரசு  (welfare state) உறுதி செய்யப்பட வேண்டிய முதலாளித்துவ ஜனநாயகம் என்பதை மக்களுக்கு கொண்டு செல்ல எவரும் தயாராக இல்லை. முதலாளித்து நிறுவனக் கட்டமைப்பில் இரகசியக் காப்பு (Confidential)   தனிமனிதவுரிமை பாதுகாப்பு, தனியுரிமை (right to privacy) தனிமனித அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம், தனிமனிதர்களின் அடையாளத்தை பேணும் சட்டம். தனிமனித ரகசிய - அடையாளப் பாதுகாப்பு- (privacy protection) போன்றவை நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும். நிறுவனக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவது பற்றி அரசியல் மட்டத்தில் மாத்திரம் அல்ல, அரசியல் தளத்திலும் விவாதிக்கப்பட வேண்டும். இரகசியக் காப்பு, தனியுரிமை போன்றவற்றை உறுதி செய்யும் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதன் ஊடாக சாதிய அடையாளங்களை நீண்ட காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை கொள்ள முடியும். கொலனித்துவ காலத்தில் தேசமாக உருவாகக் கூடாது என்ற நுண்அரசியலில் அடிப்படையில் இடவொதுக்கீடு, சாதியக் கணக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அடையாள அரசியலின் தொடக்கம் அங்கிருந்து தொடர்கின்றது. மதவாதிகளின் அடையாளம் முன்னிறுத்தப்பட்ட அரசியல் எழுந்த காலத்தில் இருந்து ஆய்வு தொடங்க வேண்டும். தேசிய எழுச்சி என்ற பிரச்சனையில் ஆராயப்பட வேண்டியவை. ஆனால் இன்று சாதியக் கணக்கெடுப்புக் கோருவது என்பது கூட சாதிய அடையாளத்தை ஊக்குவிக்கவே ஆகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை புதிய வகையில் ஏற்பாடு செய்ய முடியும். இந்தப் புள்ளியில் ஆளும் வர்க்கமும் அடையாள அரசியலும் சேர்ந்து பயணிக்கின்றது. சாதிக் கணக்கெடுப்புப் கூட ஆளும் வர்க்கத்தின் தேவையிலும், தேர்தல் அரசியலுக்கும் உட்பட்டதாகும். இவ்வாறு சாதிக்கண்கெடுப்பை விமர்சிக்கின்ற போது எம்மை சாதிவெறியர் என்பர். ஆனால் ஆளும்வர்க்கம் புரட்சிக்கு தடையாக அனைத்து தளங்களில் வேலை செய்யும். இதற்கு பூர்சுவா கட்சிகளும் துணை நிற்கும். முதலாளித்துவ சீர்திருத்தை மேற்கத்தைய நிறுனங்களின் அனுபவத்தில் இருந்து செயற்படுத்த முனைவதில்லை.

இன்றைய குறைமுதலாளித்துவ நிறுவனக் கட்டமைப்பில் சாதிகளின் அடையாளம் என்பது தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருகின்றது. இவ்வாறாக இருக்கின்ற வாய்ப்புகளைக் கூட சமூக அமைப்பினால் மாற்றத்திற்கு கொண்டு வர முடியாது. இடவொதுக்கீடு, நலிந்தவர்களுக்கான மானியம், கொடுப்பனவுகள் என்ப சாதியக் கட்டமைப்பைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டு இயங்குவது என்பது முதலாளித்துவ ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.

உற்பத்தி சக்தி (உழைப்பாளிகள்) யின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்றால் அதிகாரம் என்பது அவசியமானதாகும். அந்த அதிகாரம் என்பது  உழைப்புச் சக்திகளிடம் இல்லை. முதலாளித்துவம் எப்போதும் மிகை உழைப்பாளிகளை (வேலையில்லாதவர்கள்) வைத்திருக்கவே விரும்புகின்றது. மிகை உழைப்பாளிகளை வைத்திருப்பதன் ஊடாக கூலி நிர்ணயம், உறுதியான ஊழியர்களின் நடத்தை (தொழிற்சங்க உறுப்பினராவதை மட்டுப்படுத்துவது),  போட்டிச் சந்தை போன்றவற்றை உற்பத்தி சாதனத்தை (முதலாளி) உடமையாகக் கொண்டவர்கள் வைத்துள்ளார்கள். இதனால் பெரும்பான்மை உற்பத்தி சக்தியின் வளர்ச்சி என்பது தரப்படுத்தலுக்கு உட்பட்டே இருக்கும். சீர்திருத்தத்தின் (இடவெதுக்கீடு உட்பட)  பின்னால் இருக்கும் கயமைத்தனம் சமூகத்தின் (உற்பத்தி சக்திகள்) வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. இதனால் வறியவர்கள் வறியவர்களாகவும், வசதிபடைத்தவர்கள மேலும் வசதிபடைத்தவர்களாகும் நிலையே இருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர்கள் சலுகைகளை மேலும் அனுபவிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

அரசினால் உறுதிப்படுத்தப்பட்ட (இடவொதுக்கீடு) முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கூட முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாது ஒதுக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இதற்கு அரச நிறுவனங்கள் (institutions)  போதியளவு முதலாளித்துவ தரத்திற்கு வளர்ச்சிடையாத நிலையும் ஒரு காரணமாகும். சமூகக் கொடுப்பனவுகளை  கொடுப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியிலும் அரசுகள் கொள்கை வகுக்கின்றன. அதாவது அரசிற்கு தனது குடிகளைப் பாதுகாக்கும் கடமை இல்லை என்பதும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் செய்கின்ற போது அங்கு தனியார் நிறுவனங்களின் லாபவெறியே முன்னோக்கியிருக்கும்.

இடவொதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைத் தீர்க்க முடியாத நிலையில் தான் குறைவிருத்தி முதலாளித்துவ அரசு இயந்திரம் உள்ளது. இடவொதுக்கீட்டின் மூலமாக உழைப்பாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்கவும், உடை, உறையுள் பெற்று உயர் நிலைக்கு செல்ல முடியும். இடவொதுக்கீட்டின் ஊடாக முதல்தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கப்பட்டுள்ளனர். இவை சீர்திருத்தம் என்ற போதிலும் அவற்றை ஆதரிக்க வேண்டியிருக்கின்றது.

 

சாதியெதிர்ப்புப் போராட்டம்

பழைய உற்பத்தி முறையைப் பாதுகாக்கும் சமூக உறவுகளில் உள்ள ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக இயக்கம் உருவாக்கம் பெறுகின்றது. இதில் சாதியத்திற்கு எதிரான கருத்துகளை கேரளாவில் நாராயணகுரு, பெரியார், அம்பேத்கார், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா,  இரட்டைமலை சீனிவாசன் போன்ற பலதலைவர்கள் கொலனித்துவ காலத்தில் குரல் கொடுத்து வந்துள்ளனர். நாட்டில் வளர்ந்து வந்த பொருளாதார அமைப்பில் சாதாரண சட்ட, ஜனநாயக உரிமைகள் கிடைக்காத நிலையில் எழுந்த குரல்களே இவை.  இவர்களின் குரல்கள் வர்க்க ஒற்றுமை, வர்க்க முரண்பாடு, வர்க்கப் போராட்டம் பற்றிய புரிதல்கள் மார்க்சியத்தினை கொண்டதாக இருந்திருக்க முடியாது.  இதனால் சமூக மாற்றத்தின் மூலமே முடியும் என்ற மார்க்சிய அறிவியல் போதனை அவர்களிடம் இருக்கவில்லை.

ஈழத்தில் வடக்கில் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை இளைஞர் கொங்கிரஸ் நடத்தி வந்துள்ளது. இவர்களின் தொடர்ச்சியாக தனிப்பட்ட மனிதர்களாகவும், பல சமூகத்தவர்களும் அடக்குமுறைக்கு எதிரான தன்னியல்பாக பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.  வடக்கில் இருந்து இளைஞர் கொங்கிரசின் கோரிக்கைகள், முன்னெடுப்புகள் என்ப முதலாளித்துவ ஜனநாயக வடிவத்திற்கு அப்பால் இருந்திருக்கப் போவதில்லை. ஏனெனில் ஒரு கட்டத்திற்கான பொருளாதார அமைப்பு வளர்ந்தே அல்லது முற்றாக மாற்றத்திற்கு உள்ளாகியோ இருந்திருக்கவில்லை.  இங்கு இவர்களிடம் தேசிய இனப்பிரச்சனை பற்றிய புரிதல் என்பது இருந்திருக்கவில்லை. இவர்கள் லெனின் கூறுகின்ற தேசிய இயக்கங்கள்  உருவாகும் என்பது ஏகாதிபத்திய காலத்திற்கானது.  'In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed." (இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.) 1916களில் லெனின் எழுதினாலும் இங்கு தேசியஇனங்கள் தேசங்களாக வளரும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.  அதாவது முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது என்கின்றார். இதனால் இளைஞர் கொங்கிரசின் கோரிக்கைகள் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு அப்பால் இருந்திருக்கமுடியாது. இவர்களிடம் ரொட்ஸ்கிய பாதிப்பு இருந்ததாக வரலாறு வெளிப்படுத்துகின்றது. எனவே அகிலத்தில் வழிகாட்டல் அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்காமல் இருந்திருக்கும். இதனால் தேசிய புரட்சி பற்றிய புரிதல் பெற்றிருக்கவில்லை.

சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் சாதிச்சண்டை என்ற வரையறைக்குள் நிகழ்ந்தும் உள்ளது.  இந்தக்காலத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்த சம்பவங்கள் உண்டு. இவ்வாறான நிகழ்வுகள் பற்றி முழுமையான ஆவணப்படுத்தல்கள் இல்லை எனலாம்.  சாதிய எதிர்ப்புப் போராட்டமும், 1966களின் பின்னான காலத்தில் தேசிய எழுச்சி அமைப்பு எடுத்தது.

பல வர்க்கங்களை உள்ளடக்கியே சாதிய எதிர்ப்புப் போராட்டம் நடை பெறவேண்டும். சாதிய எதிர்ப்புப் போராட்ட காலத்தில் சாதிய எதிர்ப்புப் போராட்டமென ஆதிக்கச் சாதிகளுக்கு எதிரானதாக காட்டி சாதியச்சக்திகள் போராட்டத்தில் அனைத்து வர்க்கங்களின் ஒற்றுமையை உடைத்தனர். இவ்வகையான பிரிவினை முயற்சிகள் நடைபெறவே தான் செய்த. ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஆதிக்ககருத்தியலுக்கும், அது அமைத்துக் கொண்டுள்ள சுரண்டும் பொருளாதாரச் சிந்தாந்தத்திற்கும் எதிரானதாகும். இன்றைக்கு உயர்சாதிகள் எனப்படுபவை எல்லோரும் சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கொள்ள முடியாது. எனவே சுரண்டும் வர்க்கத்தையும், சுரண்டும் வர்க்கத்தின் சந்தர்ப்பவாத சாதியப் பற்றையும் அம்பலப்படுத்தி அனைத்துச் சாதிகளின் ஒடுக்கும் வர்க்கங்களையும் ஒன்று சேர்ந்து சாதியஎதிர்ப்புப் போராட்டங்களை கொண்டு நடத்துதல் வேண்டும்.

பற்பல வர்க்கப்பிரிவினரும் இணைந்து கொண்ட சாதியெதிர்ப்புப் போராட்டம் இலங்கை வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய காலமது.

தீண்டாமை எதிர்ப்பியத்தில் இருந்து விலகியவர்கள் இலங்கை பொதுவுடமைக்கட்சியில் செயற்பட்டவர்கள். அவர்களே புத்த மதத்திற்கு மாறுவதன் ஊடாக சாதியைத் துடைத்தெறியலாம் என்று நம்பியவர்கள். இன்று வரலாறு எழுதுபவர்கள் திரிபுவாத கட்சியின் நிலைப்பாட்டில் செயற்பட்டவர்கள் என்பதை வசதி கருதி மறந்துவிடுகின்றனர். மாற்றாக அன்றே ஒடுக்கப்பட்டவர்கள் மதம் மாற முற்பட்டார்கள் என்கின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் தோழர் சண்முகதாசன் தலைமையில் இருந்த தீண்டாமை எதிர்ப்பியக்கத்தின் பின்னாலேயே இருந்தார்கள். இந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தினை 1966களில் உயர்ந்த சித்தாந்தம் வழிநடத்தியது.

1966களில் ஆலய நுழைவு, இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டம், பொதுக்கிணறு போன்ற பிரச்சனையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இது அடிப்படையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டங்கள். குறிப்பாக வட இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் வர்க்கப் பார்வையுடன் வெகுஜன முன்னணி அமைக்கப்பட்டு தொழிலாளர்கள், ஜனநாயக முற்போக்குச் சக்திகள் இணைக்கப்பட்டே நடைபெற்றது. அன்றைய காலத்தில் அடிப்படை ஜனநாயகத்தை வழங்க மறுத்த நிலையில் அன்றைய சமூகம் இருந்தது. ஜனநாயக உரிமைக்காக போராட வேண்டிய தேவையும் இருந்தது. இதனை கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்தியது. முற்போக்காளர்கள் முன்னணி வகிக்கின்ற போது மற்றைய மக்களும் இலகுவாக ஒன்று கலக்க முடியும். இவ்வாறான ஒன்று கலத்தல் உரையாடலுக்கான சூழலை உருவாக்கி விடுகின்றன. குறுங்குழுவாத மன இறுக்கம் என்பது தளர முடியும்.  குறுங்குழுவாத மனப்பாங்கு அரசியல் சார்ந்ததாக இருக்கின்ற போது முன்னேற்றம் ஏற்பட முடியும். கட்சியில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிறையவே மாறுபாடுகள் உண்டு. கட்சிகள் தனியே போராடுவதால் மாற்றம் வரப் போவதில்லை.  ஈழத்தில் குறிப்பிட்ட அளவு சாதியத்தில் மாற்றத்தை கொண்டு வரமுடிந்தது.

படுமோசமாக சாதியம் நிறுவனமயப்பட்டிருந்த நிலையில் உழைப்பாளிகளின் ஜனநாயக உரிமைக்காக அமைப்பு ரீதியாக போராடினார்கள். சாதியெதிர்ப்புக்காக போராடியவர்கள் நிலத்தை கைப்பற்றி நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

ஆண்டாண்டு காலமாக சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்கள்  ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடினர். ஈழத்தில் இப்போராட்டம் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் குறைவிருத்தி கொண்ட முதலாளித்துவ அமைப்பினுள் இடம்பெற்ற இப்போராட்டமானது முழுமையான வெற்றிக்கு இடமளிக்காது போய்விட்டது. 1966களில் சாதியெதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற வேளையில் தமிழ் (தரகு) பூர்சுவாக்கட்சிகள் ஆமை தலையைச் சுருக்கிக்கொள்வது போல் சுருக்கிக்கொண்டனர். (சிலர் தனிநபர்களாகப் பங்கு கொண்டனர்) தமிழ்பூர்சுவாக் கட்சிகள் முழுமையான சாதியஎதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது தமது வர்க்கநிலையைப் பாதுகாத்துக் கொண்டனர். தமிழ்க்கட்சிகளில் தலைமை வகித்தவர்களில் அதிகமானவர்கள் ஒடுக்கும் சாதி எனக்கருதப்பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பங்களில் இருந்தவர்களே. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் உயர்கல்வி பெற்றவர்கள், அதிலும் இவர்கள் வக்கீல்களே. தமிழ் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் வக்கீல் அரசியல் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒடுக்கும் சாதியத்தின் ஆளும் வர்க்கம் தன்மை சாதியெதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்பதில் இருந்து தவிர்த்துக் கொண்டது. ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை சில மாற்றங்கள் செய்யப்படுவதை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஆளும் வர்க்கத்திற்கு பாதகமானதே.

 திரு. இராசலிங்கம், மன்னார் திரு. சூசைதாசன் ஆகியோரைக் கண்துடைப்புக்காக தேர்தலில் நிறுத்தினர். 1980களில் திரு. கரிகாலன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் போட்டியில் திரு. நீலன் திருச்செல்வத்திடம் தோற்றார். அன்றைய தலைமை தேசியம் பேசிக் கொண்டாலும் குறுங்குழுவாதிகளாகவே தேர்தல் காலங்களில் செயற்பட்டார்கள். குறிப்பாக மட்டக்களப்பு தொகுதியில் சொந்த வேட்பாளரை எதிர்த்து வேறொருவரை முதன்மைப்படுத்தினார்கள். இவ்வகையான பிரச்சனை முதலாளித்துவ கட்சிக் கட்டமைப்புகளில் ஏற்படும்.

2013இல் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலை நோக்குமிடத்தில் பிரதேசவாரியாக தெரிவு செய்யப்பட்டவர்களில் சாதி, மதம் என்பன வேட்பாளர்களை தெரிவு செய்வதில் நிகழ்ந்தது என்பதை மறுக்கமுடியாது. தமிழ் தேசத்தின் போராட்டத்திற்கு நியாயமாக செயற்படாத தரகுவர்க்கத்தின் (விதேசிய) தலைமையிடம் புரட்சிகர நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் நியமனத்தில், கட்சியின் பதவியில் சாதியம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்தப் பிரச்சனை தேசிய முதலாளித்துவ தலைமை இருந்த போது ஏற்பட வில்லை.  தேசிய முதலாளித்துவ சக்தியின் வீழ்ச்சிக்குப் பின்னர் இடவொதுக்கீடு கேட்கப்படுகின்றது. அடிப்படையில் இந்தக் கோரிக்கை நியாயமானது. ஆனால் இவர்கள் எந்தச் சக்தியிடம் முன்வைக்கின்றார்கள்.  தமிழ் தேசியப் போராட்டத்தைக் கட்டமைக்கவே முடியாத நிலையில் உள்ளது. தேர்தல் என்பதே திருடர்களின் கூடாம். அங்கு பதவி, பணம், சமூக இருப்பு என்பதைச் சுற்றியே கட்டமைக்கப்படுகின்றது. இங்கு வலதுசாரிகளின் வயிறு வளர்ப்பதற்கு முற்போக்காளர்கள் பின்னால் செல்ல வேண்டியதில்லை.  

1966களில் பொதுவுடமைவாதிகள், முற்போக்கு சனநாயக சக்திகள், ஒடுக்கப்பட்டவர்கள் என அணிதிரண்டு போராட்டத்தினை நடத்தினார்கள். அதன் தாக்கம் தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் ஈழத்திற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிழல் அரசு என்ற வகையில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய முடியும். ஆனால் யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது சாதியம் முதன்மை முரண்பாடாக எழுந்திருக்க முடியாது. ஆக்காங்கே சில சம்பவங்கள் நடந்த போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

போராட்ட தலைமைகளின் வெற்றிட காலத்தில் மக்களின் அகநிலை உணர்வுகளை மாற்றத்தைக் கோரி போராடுகின்ற போது புறநிலையை மாற்றும் (உற்பத்தி முறை) சக்தியை நோக்கியதாக இருக்க வேண்டும்.  ஏனெனில் அடிக்கட்டுமானம் தீர்க்கமானதாக இருக்கின்றது. சாதியப் போராட்ட வழிமுறையானது மக்களின் உணர்வையும், வாழ்க்கை முறையையையும் மாற்றக்கோரி போராடப்பட்டது. இவை ஒரு எல்லைக்கு அப்பால் செல்லமுடிவதில்லை. இங்கு தனிமனிதர்கள் மாறவேண்டும் என்று கோருவது கூட நகைப்பிற்கு இடமானதாகும். ஒரு கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் அந்த அமைப்பு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள். ஆனால் அதேபோல மக்களின் சிந்தனையில் இருந்து அகற்ற வேண்டுமானால் சிந்தனைத் தளத்தில் போராட்டம் இடம்பெறவேண்டும். புரட்சிகர அமைப்பியலாக்கம் என்பது சிந்தனையில் சனநாயக வடிவத்தை ஏற்படுத்தும் என்பதை மறுத்துவிட முடியாது.

பழைய சிந்தனையை கடன் தீர்த்துக் கொள்ளவும், வர்க்க உணர்வை ஊட்டி வர்க்கப் போராட்டத்தை ஒழுங்குபடுத்து முகமான வேலை முறைகளையும், நடைமுறை வேலைத் திட்டத்தையும் அமைத்துக் கொள்ளுதல் அவசியமானதாகும். ஆனால் இன்றைய காலத்தில் இந்தியாவில் தோல்விகண்ட தலித்திய, விளிம்புநிலைக் கோட்பாடுகள் திணிக்கப்படுகின்றது. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில நபர்களுக்காக ஒரு பாழடைந்த கோட்பாட்டுச் சமரசம் செய்யப்படுகின்றது. சாதியெதிர்ப்புப் போராட்டம் என்பது 1966களின் படிப்பினையைக் கொண்டு கட்டியமைப்பது தான் புரட்சிகரமான சாதிய எதிர்ப்புப் போராட்டமாக அமையும். ஒடுக்கப்பட்டவர்கள், ஜனநாயகசக்திகள், புரட்சிகரசக்திகள் இணைந்த போராட்டமே சிறந்த வழியாகும்.

 

தன்னியல்பும்  மேற்கின் நிகழ்ச்சி நிரல்

இனவாதம் தொடர்பான மாநாடு  (Durban 2001) தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போது 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிக் கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களாக பிடல் காஸ்ரோ, ஜெசி ஜக்சன், கோபி அன்னன், றோபட் மக்காபே போன்றோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இறுதி அறிக்கை தொடர்பாக இழுபறிப்பட்டிருந்த வேளையிலும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்திருந்த பிரேரனை  பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநாடும் முடிவுற்றது. இந்த மாநாடு பற்றிய உள்ளடக்கத்தினை அறிந்து கொள்வது முக்கியமானதாக அமைந்துள்ளது.

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசை உருவாக்குவது என்ற யூதக் கொள்கையை இனவாதத்திற்கு ஈடான சிந்தனை என்று தீர்மானத்தில் நிறைவேற்றியிருந்தனர். 1990ம் ஆண்டு ஐ. நாவின் சாசனத்தில் இருந்து மேற்கூறிய தீர்மானமானது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் இருக்கும் சாதியானது இனவாதத்திற்குச் சமமானது என தீர்மானம் கொண்டு வரும்படி கோரிக்கை விடப்பட்டன. அதனை இந்தியப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சியோனிசத்தை இனவாதத்திற்கு சமமாக இணைத்துப் பார்ப்பதை எதிர்த்தும், இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான பிரேரனை நிறைவேற்றப்படுதை எதிர்த்தும் இஸ்ரேல் வெளியேறியது. இந்த வெளியேற்றத்திற்கு ஒரு வரலாற்று ரீதியான விளக்கம் இருக்கின்றது. அதுதான் ஏகாதிபத்தியக் கூட்டாகும். அமெரிக்காவின் அடியாளாகவே அது செயற்பட்டு வருகின்றது. அந்த நாட்டிற்று . நா, மனிதவுரிமை அமைப்புகள், ஊடகங்கள், சர்வதேச சமூகம், அரபு நாடுகள் என்பதே ஒரு பொருட்டே அல்ல. ஏகாதிபத்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் இசுரேலின் பின்னால் நிற்கின்றார்கள். அமெரிக்கா ஆண்டு தோறும் பல பில்லியன் டொலர்களை கொடுக்கின்றது. அமெரிக்க மதச்சார்பற்ற நாடு என்றாலும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்களுக்கு விலிலியம் ஒரு புனித நூலாகும். இதனால் அதில் உள்ளவை எல்லாம் முற்றுண்மை என்று நம்பும் மேட்டுக்குடிகளின் அரசியல் ஆதிக்கமே அங்குள்ளது. விவிலியத்தின் அடிப்படையைக் கொண்ட உலகக் கண்ணோட்டம் என்பது ஆளும்வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டமாக அமைந்து கொண்டதினால் தமது உலகக் கண்ணோட்டத்தையே எதிர்த்துக் கொள்வார்களா?

 

2001 இல்நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் சாதியானது 'இனவாதத்திற்கு' சமமானது என தீர்மானம் கொண்டு வரும்படி கோரிக்கை விடப்பட்டன. இந்தக் கோரிக்கை இந்தியாவினால் எதிர்க்கப்பட்டது. சாதியத்தினை இனவாதம் என்ற வரையறுப்பே மென்மையான போக்காகும். சாதியமானது ஒதுக்குதல் (apartheid) என்றே கொள்ளப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக மனிதவுரிமை என்ற நிலைப்பாட்டில் ஊக்குவிக்கப்படுகிறது. இத்தகைய கருத்தை முன்னிறுத்தி; 2013 லண்டனின் சாதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இங்கு கவனத்தில் எடுத்தல் நன்று. (இவர்களை குற்றம் சுமத்தவில்லை, ஆனால் இவ்வாறே தன்னியல்பான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. முதலாளித்துவ பொருள் உற்பத்தியானது தனது நலனுக்காக நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றது. தனக்குத் தேவையானதை நேரடியாக செய்ய முடியாத நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊடாக செய்கின்றது. உதாரணத்திற்கு world vision என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை எடுத்துக் கொள்ள முடியும். world vision தென்கிழக்காசியா எங்கும் பரந்து செயற்படுகின்றது. இதற்கு மாற்றாக ருசிய, சீன, கியூபா புரட்சிகளின் ஊடாகவே பலமாற்றங்களை செய்து வந்தார்கள். புரட்சிகர பண்பாட்டுத் தொடர்ச்சி கியூபா, வியட்னாமில் தொடர்கின்றது. அதாவது ஒரு சமூகத்தை நீதிநெறி, சிந்தனை வடிவம் என்ற முனைப்பில் செயற்படுத்தப்படுகின்றது. அங்கு முன்னெடுத்துச் செல்வதில் குறைபாடுகள் இருக்கத் தான் செய்யும். ஏனெனில் வியட்னாம் என்ற நாட்டில் முழுமையான முதலாளித்துவப் புரட்சி முற்றுப் பெற முடியவில்லை.  ஆனால் அங்கு பொதுவுடமை  சிந்தனை முறையின் கீழ் செயல்படுத்த முயற்சி செய்கின்றார்கள் அவ்வளவே.

அரசியல் நகர்வுகள் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs)   நிகழ்ச்சிக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றது. இங்கு கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs - NGO'S WORK) நிகழ்ச்சிக்கு ஏற்ப குறைந்த வட்டியில்  கடன் கொடுப்பது,  வறுமைக் கோட்டைக் குறைப்பது, சந்தைப் பொருளாதாரம், சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மாத்திரம் அல்ல. நிதிநிறுவனங்கள் போடும் நிபந்தனைகளை ஏற்று சட்டமாக இயற்றுவார்கள். சிந்தனை ஓட்டத்தினை அதற்கொப்ப வளர்த்தெடுப்பதும் ஆகும். இவ்வாறான மனித உரிமை மீறல் தொடர்பான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அரசியல் எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் வேலைகளையே வல்லரசுகள் செய்கின்ற.

முதலாளித்துவத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு உலக வர்த்தக வலையத்தினால் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு ஒப்ப வேலைப்பிரிவினையில் செயற்படுவதே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகும். அதாவது முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பற்பல நிறுவனங்கள் பல்வேறு வகையான வேலைப்பிரிவினையைக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடிய புரட்சிகள் வெடிப்பதைத் தவிர்ப்பதும் அதன் நிபந்தனையில் இருந்து பல வழிகளிலும் செயற்பட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே சமூகமாற்றத்தையும், வர்க்கவிடுதலையையும் வேண்டிநிற்பவர்கள் வெகுநிதானமாக கற்பதும் கற்பித்தலில் ஈடுபடுதலும் அவசியமானதாகும். இலங்கையில் தொலைக்காட்சியில் ”உரிமைகளும் வளங்களும் அனைத்து இனங்களுக்கும் சமமாக கிடைப்பதை உறுதிப்படுத்தப்படுவதே சகவாழ்விற்கு அடித்தளமிடும்.” சமரசம் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் நடைபெற்றது. இது கூட ஒரு பயிற்சிப் பட்டறை தான். இவ்வாறான செயற்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அதன் பங்கிற்கு செய்கின்றன.

இது அரசியல் நீக்கம் செய்யப்படும் ஒரு வேலைமுறையின் கீழ் நடத்தப்படும் ஒரு சிந்தனையின் வெளிப்பாடு. இங்குதான் ஏகபோக முதலாளித்துவத்தையும், வளங்களையும், சந்தையையும் பாதுகாத்துக் கொள்ள நேரடி ஆக்கிரமிப்பு, மென்மை தன்மை என இரண்டு வழிகளிலும் செயற்படுகின்றது. மென்மைப் போக்கினை தன்னுடைய சர்வதேச நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்துகின்றது.

வரலாற்றில் சமயம் கூட பொருளாதார உற்பத்தி முறைக்குத் துணைபுரிந்துள்ளதை இங்கு கவனிப்போம். 'ஆனால் ஒப்ந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடைமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ”சுதந்திரமான” 'சமத்துவமான” மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில்,  மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.” தனித்துவவாதம், தாரளாவாத அரசியல் என்பது இந்த சிந்தனையுடன் ஆரம்பம் பெறுகின்றது. இதனை ஆட்சியாளர்களும் கூட்டுரிமைக்கு மாற்றாக தனிமனிதர்களின் நலனை முதன்மை கொள்ள வேண்டும் என்கின்றார்கள்.

கட்டமைப்பில் மாற்றங்களை சட்டரீதியாக செய்வது, மற்றையது சிறுவர் உரிமை, பெண்கள், முன்பள்ளி மேற்கத்தை பண்பாட்டியலை சமூகத்திற்கு கொண்டு செல்வதாகும். இதே வேளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கிக் கொள்கின்றது. நிறுவனத்தை உருவாக்கிக் கொள்ளவது, இலக்கு, செய்முறை, பயனாளிகள், எவ்வளவு கால எல்லை என்ற விபரங்கள் அடங்கி வரைவு (draft) கொடுக்கப்பட வேண்டும். அந்த வரைவு ஏற்கும் நிலையில் உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு தான் பல தொண்டு நிறுவனங்கள் உருவாகிக் கொள்கின்றன. இவர்களின் வேலை என்பதே சமூக அமைப்பில் தன்னார்வ, அடையாளப் போராட்டம், மனித உரிமைப் போராட்டம் என்று தன்னியல்பு சார்ந்த அமைப்புகள் குறிப்பிட்ட விடயங்களில் ஆர்வம் கொள்ளும் அமைப்புகள் உருவாக்கப்படுகின்ற. குறிப்பாக வெளிநாடுகளின் உதவியைப் பெற்று உருவாகும் அமைப்புகளும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தினை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இலகுவில் பயன்படுத்திக் கொள்ளமுடிகின்றது. பிரமுகர்கள் வர்க்க பேதத்தினை மறைத்துக் கொண்டு சாதிவாரியாக அணிதிரட்டிக் கொள்கின்றனர். தேசமாக திரள்வது, அமைப்பாக்கி வேலை செய்வதை தடுக்கம் வகையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. ஏகாதிபத்தியங்களின், . நாவும் அதன் உப அமைப்புகளும் ஊக்குவிக்கின்றன. தனிநபர்களை முன்னுதாரணமாக நிறுத்துவ    இளவரசி டயானா கண்ணி வெடிக்கு எதிரான செயற்பாட்டிற்கு முன்னிறுத்தப்பட்டார், .நாவின் காநிலை மாற்றத்திற்கான தூதுவராக நடிகர் டிகாப்பிரியோ, Greta Thunburg இயற்கை பாதுகாவராக முன்னிறுத்தப்படுகின்றது. சச்சின் (Sachin Tendulkar) UNICEF தூதுவராக நியமிக்கப்பட்டார். தனிமனித விம்பம் கட்டமைக்கப்படுகின்றது. விம்ப அடையாளத்தை கொண்டு அமைதிவாதம் விதைக்கப்படுகின்றது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மேற்கு நாடுகளில் இருந்து நிதி கிடைக்கின்றது. நோபல் பரிசு கொடுத்தும் தனிமனிதர்களை விடுதலை வாங்கித் தரும் மனிதர்களாக காட்டப்படும். எடுத்துக் காட்டாக Shimon Peres Yitzhak Rabin (1994- யசீர் அரபாத் பகிர்ந்தார்) போன்ற சியோனிச ஆட்சியாளர்களுக்கு கொடுத்தார்கள். இந்த இனவழிப்பாளர்கள் பலஸ்தீனத்தில் அமைதியைக் கொண்டு வரவில்லை. நோபல் பரிசு என்பதும் இவ்வகையில் தனிநபர்களை நோக்கி மக்கள் கூட்டத்தினை நகர்த்துகின்றது. இதிலும் பர்மிய நோபல் பரிசு பெற்றவர். அங்கு ரொகிங்கியாக மக்களின் இனவழிப்பினை மௌனமாக கடந்தே சென்றார். நோபல் பரிசு  கொடுப்பதன் ஊடாக நபர்களை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்கின்ற வேலையைச் செய்கின்றது. இவ்வாறு பல மனிதர்களை எடுத்துக் காட்ட முடியும்.

சோவியத்தின் வீழ்ச்சியான ஏகாதிபத்தியங்களின் எதேர்ச்சாதிகாரத்தின் உச்சமான காலமாகும். அன்று அடங்கி ஒடுங்கியிருக்க வேண்டி நிலையை பல நாடுகளையும், போராட்டங்களையும் உறங்கு நிலைக்கு செய்ய வைத்தது. இன்றைய உலகப் போக்கு ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய கருத்து நிலையில் இருந்து வெளிவரவில்லை. மேற்கு நாடுகளில் தொழிற் சங்கங்கள், அரசின் உதவி நிறுவனங்கள் (Norad, usaid, Gtz, oxfam) நிதியைக் கொடுக்கின்ற. அவ்நிதியை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகள் ஊடாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறுகின்றன.

ஈழத்திலும் அமெரிக்கன் திருச்சபையின் ஊடாக மேலை நாடுகளுக்கு பட்டப்படிப்பிற்கு உதவித் தொகை (scholarship) பெற்றுச் செல்பவர்கள் உண்டு. இந்தப் பிரிவினர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (UTHR) என்ற பெயரில் நால்வரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மனிதவுரிமை பேசுகின்றார்கள் என்ற போர்வையில் இருந்தவர்கள் ஈழப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களையே பரப்பிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக மனிதவுரிமை அமைப்பு என்பது ஏகாதிபத்தியக் கட்டத்தில் மிக உயர்ந்ததாக காட்டிக் கொள்ளப்படும். இவர்களின் தகவல்களை ஒடுக்குமுறை அரசுகள் பயன்படுத்திக் கொண்டன. ஈழப் போராட்ட ஆரம்பகாலத்தில் முதலாளித்துவ தாராளவாதத்தை பல்கலைக்கழத்தினுள் நுழைத்தார்கள். இவர்களின் வாரிசுகள் இன்று (2023 இல்) ஈழதேச கருத்தியலுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவின் சமூகச் சூழல்களை ஆய்வு செய்த ஃபவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகிய பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும் வர்க்கத்தைத் தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாறாக,  இவர்களிடையே ஆளும் வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.

இதற்காக ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அறிவுஜீவிகளை உருவாக்கும் பணி முதன்மையாக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகழகங்கள் அமெரிக்கப் பல்கலைகழகங்களோடு இணைக்கப்பட்டன. ஃபோர்டு பவுண்டேசனின் தயவில் ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் தலித் மாணவர்களாவர். வேறு வழியில்லாத இவர்கள் இந்த உதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்று அருந்ததிராய் எழுதுகிறார். இம்மாணவர்களில் பலரும் பின்பு எவாஞ்சலிக்கல் திருச்சபை உதவியால் முன்னிறுத்தப்பட்ட தலித் அரசியலின், பின் நவீனத்துவ அரசியலின் மையமாக மாறினர்.”  (keetru.com)

தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தலித்தியம் கட்டமைப்பில் மாற்றத்தையோ அல்லது கட்டமைக்கப்படும் கருத்தியல் தளத்தினையோ மாற்றத்தினைக் கோரி நிற்பதில்லை. தலித்தியம் இருக்கின்ற சமூகக் கட்டமைப்பில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உயர் வர்க்கத்திற்கான ஜனநாயகத்தைக் கோருகின்றது. நவீன வடிகால் அமைப்பு, நவீன திண்ம, திரவக்கழிவு, மறுசுழர்ச்சியை நவீனப்படுத்த ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுக்கப்பட வேண்டும். ஒரு தொழில் முறையை வளர்த்தெடுக்க வேண்டும். ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில்லை.  அரச கட்டமைப்பு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் முரண்பாட்டிற்கு காரணம் இன்னொரு சமூகப் பிரிவே காரணமாக காட்டப்படுகின்றது. இன்னுமொரு படி சென்று அடித்தவனுக்கு அடி என்கின்றது. அடித்தவனுக்கு அடி என்பது மார்க்சியவாதிகளின் முழக்கமாகும். அந்த முழக்கம் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையில் நடைபெற வேண்டிய முழக்கமாகும். ஆனால் இன்று அதனை தலைகீழாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. அதாவது ஒடுக்கப்படும் சாதி அடித்தவனுக்கு அடி என்றால் சாதிய மோதலாக உருவாகும். இதனை விளங்காது திரைப்படம் எடுப்பவர்களும் உள்ளார்கள். அவ்வாறான திரைப்படமும் வந்துள்ளது.

பொதுவுடமைக் கட்சியின் வழிகாட்டலில் இருந்து வழிதவறிய உறுப்பினர்கள் அடையாள அரசியலுக்குள் நுழைந்தார்கள். குட்டி முதலாளிய ஊசலாட்டப் பிரிவினர் சாத்தியமான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். சுயஇருப்பைப் பாதுகாப்பது, தம்மை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராக இல்லாத நிலையும் காரணம். இங்கு இந்த சமூக அமைப்புக் கட்டமைப்புகள் இசைவாக வாழ்வது எவ்வாறு என்று கற்றுக் கொடுக்கின்றது. அமைதிவாதம் சமூகப்போக்காக மாற்றப்படுகின்றது. இதற்கு எதிரான போக்கு வளர்க்கப்பட வேண்டும்.  

அரசியல் நீக்கம் செய்யப்படும் செயற்பாடுகளை முறியடிப்பது இடதுசாரிகளுக்கு உள்ள பெரும் சவாலாகும். லெனின் ”தன்னியல்பான அம்சம் என்பது கருவடிவத்திலே இருக்கும் உணர்வைத் தவிர வேறில்லை.” (ப 47.செ.வே.லெனின்) எமது உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளைச் செயற்படுத்தும் வடிவமாகும். இது சமூகத்தின் கட்டுமானம் எதையும் அசைக்காது. (கட்டுமானம் என்றால் என்ன) மாறாக வெறும் சீர்திருத்தத்தைக் கோருவதாகத் தான் இருக்கும். இதற்கு மாறாக தன்னியல்பைத் தவிர்த்த சரியான அரசியல் வழியில் செல்ல வேண்டும். அனைத்து மக்கள் போராட்டங்களையும் தலைமைப் பாத்திரம் எடுத்து நடத்துவதும், தன்னியல்பாக எழுகின்ற போராட்ட வடிவங்களுக்கு சரியான அரசியல் வழிகாட்டியாக வேண்டியதுடன் அதனை புரட்சிகர அமைப்பிற்குள் உள்வாங்குவதும் ஆகும். அதேவேளை எமது எதிரியை அரசியல்ரீதியாக எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் ஈடாட்டம் கொள்ள வைக்க முடியுமோ அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் அமைப்பைப் பயன்படுத்தி பிரச்சாரம் கிளர்ச்சி நடத்துவது முதன்மையான விடயமாகும். எப்போ ஒரு நடவடிக்கை ஒரு புரட்சிகர ஸ்தாபனக் கோட்பாட்டைக் கொண்டு, மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு நடைபெறாவிடின் தன்னியல்பாகவே இருக்கும்..

இன்றைய உலகம் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதர்களை கொண்டது. அந்த மனிதர்களின் வெளிப்பாடுகள் எவையும் பொதுப்புத்திக்கும், ஏகாதிபத்திய கருத்தாக்கத்திற்கும் உட்பட்டதாகவே அமைந்து விடுகின்றது. இன்றைய மனிதர்களின் அரசியல் புரிதல் என்பது உடனே உருவாக்கப்பட்டது அல்ல. மாறான தொடர்பு சாதனங்கள் ஊடாக வசப்படுத்தப் பட்ட மக்கள் கூட்டமாக இருக்கின்றார்கள். சமூக ஓட்டமானது ஆதிக்க சக்திகளை எதிர்ப்பதற்கு அணிதிரட்டாமல் திசை திருப்பப்பட்டுள்ளார்கள்.

ஏகாதிபத்தியம் என்பது மக்களிடையே அமைதியைப் போதிக்கின்றது. ஆனால் தனது நலன் சார்ந்து அனைத்தையும் ஆயுதரீதியாக எதனையும் நிறைவேற்றிக் கொள்ளும். அதற்காக அனைத்து உலக நிறுவனங்களை தனக்காக வசப்படுத்தியதன் ஊடாக செய்ய முடிந்தது. ஊழியர்கள், எடுபிடிகளைக் கொண்ட கருத்துருவாக்கம் செய்கின்ற கட்டமைப்புகள் நிலையாக இருக்கின்றது.

ஆதிக்க கட்டமைப்பு என்பது பல்திசையில் தனது நலனுக்காக செயற்படுகின்றது. நாம் எந்த எல்லைப் பரப்பை வைத்து பேசுகின்றோம் என்ற வரையறை இல்லை. ஏனெனில் ஏகாதிபத்திய வலைப்பின்னல் என்பது நீண்டு நெடியதாக இருக்கின்றது. அந்த எல்லைப் பரப்பை அறிந்து கொள்வது என்பது ஒவ்வொரு மனிதர்களின் அரசியல் அறிவிற்கு உட்பட்டதாக இருக்கின்றது.

இன்றைக்கு வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு முரண்பாடு கொண்ட போக்குகளும், மோதல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. உலகம் தழுவிய ஒடுக்குமுறை கட்டமைப்பையும், சமூக ஓட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதே இலக்காக கொண்டுள்ளது. இதில் ஏகாதிபத்தியங்களின் கொள்கை முடிவை நிறைவேற்றும் நபர்கள், அதிகாரிகள், கட்டமைப்புகள், கருத்துருவாக்கிகள் என்று வலைப்பின்னல் உள்ளது. அந்த வலைப்பின்னல்களைக் கொண்டே ஏகாதிபத்திய பொருளாதார நிறுவனக் கட்டமைப்புகள் இயங்குகின்றன. இந்த வலையமைப்பிற்கு அப்பால் இடும் கூக்குரல்கள் எதுவும் நியாயமானவை அல்லாததாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியங்களின் துருவப் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பல்துருவ நிலையில் போட்டியும், யுத்தங்களும் தவிர்க்க முடியாது. இசுரேலை பாதுகாக்க முற்படும் பிற்போக்கு சுரண்டல் பிரிவுகளின், செயற்பாடுகளும் மும்முரமாக இருக்கின்றது. (07.10.2023 ஹமாசின் தாக்குதலின் பின்னர்) இந்த நிபந்தனைக்கு உட்பட்டே நாடுகளின் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். ஈழத்தைப் பொறுத்தவரையில் இன்றைய போக்கு இதுவாகவே உள்ளது. இன்று தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். 2009 பின்னர் ஆண் துணை அற்ற குடும்பத் தலைவிகளுக்கு உதவுதல், பெண்களை ஆளுமை (women empowerment) உள்ளவர்களாக மாற்றுதல், குழந்தை வளர்ப்பு, உரிமைபோன்றும், இனங்களுக்கிடையே உரையாடல் என்று உருவாக்கப்பட்டன. இதிலும் குறிப்பாக இன்றைய தன்னார்வத் தொண்டு நிறுவன அறிவாளிகள் என்பவர்கள் ஆளும் வர்க்கத்திற்கும், ஒடுக்குமுறை அரச கட்டமைப்பிற்கும் துணைபோகின்றவர்களாக இருக்கின்றார்கள். கல்விப் புலமை உள்ளவர்கள் புலமைப் பரிசு பெற்று கல்வி கற்றவர்களே. தாம் பெற்ற உதவிக்காக இன்றைக்கு ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இடதுசாரியமும் சாதியும்

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளின் வர்க்கப் பின்புலம் என்பது  நிலமானியப் பின்னணியைக் கொண்ட மேட்டுக்குடியாகவே இருந்து வந்துள்ளது. இதில் குறிப்பாக  சட்டம் பயின்றவர்களே அதிகம் அரசியலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்களே நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.  இன்றும் சட்டத்  தொழில் செய்பவர்கள் தான் அரசியல் தெரிந்தவர்களாக  விம்பம் கொடுக்கப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் புத்திஜீவிகளாக இருப்பார்கள் என்பதில் எவ்வித உறுதிப்பாடும் இல்லை. புத்திஜீவிகளாக இருப்பதற்கும் தொழில்முறை நிபுணத்திற்கும் இடையே வித்தியாசம் உண்டு. தொழில்முறை நிபுணத்துவம் கொண்டவர்கள் புத்திஜீவிகளாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தமிழ் பொதுப்புத்தியும் தேர்தல் அரசியல் சுற்றியும், சட்டவாளர்களின் தகமை மீதான பிரம்மையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்தேசிய அரசியலில் பற்கேற்ற தேர்தல் அரசியல்வாதிகள் சாதியப் பற்றுடையவர்களாக இருந்துள்ளார்கள். இவர்களில் அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் சாதிவெறியர் தான். அன்றைய தமிழ் அரசியல்வாதிகளும் 1966களில் பிற்போக்காக நிலைப்பாடு எடுத்தவர்கள். பழைய உற்பத்தியின் சிந்தனை வடிவம் என்பது தொடர்வது ஆச்சரியமில்லை. தேசியவாதத்தினை முன்வைப்பவர்கள் வெவ்வேறு சமூகப்பிரிவில் இருந்து பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள்.  ஆறுமுகநாவலரின் தமிழ்- சைவம்- வேளாளம் என்பதும் பிற்போக்குச் சிந்தனையாகும். இவரின் சிந்தனை வடிவம் சிங்கள தேசியத்தை கட்டியெழுப்பிய  அனகாரிக தர்மபாலாவை விட மாற்றானதாகும். ஏனெனில் அனகாரிக தர்மபாலா சிங்கள தேசியத்தினை வளர்த்தும், கொலனித்துவத்தினையும் எதிர்த்து நின்றார்.  “"காட்டுமிராண்டிக் கொள்ளையரால் அழிவு உண்டாகும் முன்னர் இந்த அழகான இலங்கைத்தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சொர்க்கமாக ஆக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவரும் பல தெய்வ வணக்கமுமே உயிர்க்கொலைஇ களவு, விபச்சாரம், பொய், மதுப்பழக்கம் யாவற்றுக்கும் காலாக இருந்தன. பண்டைப் பெருமைமிக்க நாகரிகமடைந்த சிங்கள மக்கள் பிரித்தானிய நிர்வாகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சதித் திட்டங்களினால் வீழ்ச்சியடைகின்றனர். உயர் அதிகாரிகள் தேயிலைச் செய்கைக்காகக் காடுகளை அழிக்கின்றனர். அபின், கஞ்சா, விஸ்கி, சாராயம் போன்ற மதுசார்ந்த நஞ்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சாராயக் கடைகளையும் சிகையலங்கார நிலையங்களையும் திறந்துள்ளனர். பழைய கைத்தொழில்களை அழித்து மக்களைச் சோம்பலாக்கினர்." (குமாரி ஜெயவாத்தனா, 'இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்'

1883 இல் கிறிஸ்தவகளின் மீதான தாக்குதல் நடைபெற்றது. கிறித்தவர்கள், இசுலாமியர் போன்ற மதப்பிரிவினர் மீதும், வணிகர்களின் மீதும் எதிர்ப்புணர்வு விதைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சி 1915 கண்டியில் வணிகர்களின் மீதான தாக்குதலாகும். இதை தொடர்ந்து மலையாளி தொழிலாளர்களுக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட்டது. இவர்களின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மலையாளிகள் ஒரு பதிகுதியினர் கேரளா சென்றார்கள். இன்னொரு பகுதியினர் சிங்களவருள்ளும், தமிழருள்ளும் கரைந்து போயினர். சிலர் தமது அடையாளத்தை தொடர்கின்றார்கள்.

தேசியத்தை முன்னிறுத்துவதும் நிலமானிய எச்சத்தை முன்னிறுத்துவம் வெவ்வேறானது. ஆறுமுகநாவலர் நிலமானியச் கூற்றில் சமூகத்திற்கு பாதை வகுப்பை செய்தார். கிறிஸ்தவமும் ஆங்கிலக் கல்வியை அவர் அதிர்ப்தி கொண்டார். இதனால் சைவத்திற்கும், சமூக படிநிலை குலைவதை விரும்பவில்லை. கிறிஸ்தவ திருச்சபைகள் உருவாக்கிய கல்வி முறையில் பல சமூகத்தவர்களும் உயர் கல்வி கற்றார்கள். கல்வி என்பது அனைத்து மக்களுக்கும் உரியதல்ல என்ற நிலைப்பாடு கொண்டவராக இருந்தார். ”சைவமும் தமிழும்“ என்ற கருத்தாக்கம் என்பது அடிப்படையில் அனைத்து மக்களையும் இணைத்து முன்வைக்கப்படவில்லை. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார். அதன் சாதிகள் கடைப்பிடிக்க வேண்டி பல பிற்போக்கு கூறுகளைக் கொண்ட பாடநெறியை எழுதினார். எந்த திசையில் அமர்ந்து மலம் கழிக்க வேண்டும் என எழுதும் அளவிற்கு அவரின் சிந்தனை இருந்தது. படுபிற்போக்குத் தனமான சிந்தனையை மேலும் விபரிக்க வேண்டியதில்லை. இவரால் சைவப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே பல மேட்டுக்குடி கனவான்கள் சைவப் பாடசாலைகளை நிறுவினர். மதமரபினையும், மொழிப் பண்பாட்டையும் கொண்ட புதிய உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கினார். அது தான் யாழ் சைவ உயர்வாக்கம். ஏனெனில் அவரால் தொழிற்புரட்சி, முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் கற்கால சிந்தனை மரபில் தமிழ் சமூகத்தை கொண்டு செல்ல முற்பட்டார். ஆறுமுகநாவலரின் போக்கை நிறுத்தி தமிழ் தேசிய இயக்கத்தின் மீதான அடையாள, வாய்ப்பாட்டு மார்க்சியர்கள், தலித்தியர்கள் தேசிய இனங்களின் ஜனநாயகக் கட்டத்தை மறுக்கின்றார்கள். தேசிய இயக்கங்களைப் பற்றிய புரிதலைப் பெறாத நிலையில் மார்க்சியத்தினை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அகமுரண்பாட்டையும், பிரதான முரண்பாட்டையும் போட்டுக் குழப்புகின்றார்கள்.

சாதி உள்ளது என்று பேசுபவர்கள் அதனை எவ்வாறு ஒழிப்பது என்ற புரிதல் இல்லாதவர்கள். உண்மையில் சாதியத்தை உற்பத்தியில், தொழிலில் (சுத்திகரிப்பு தொழிலாளிகள் நீங்கலாக) ஈழத்தில் உடைக்கப்பட்டது. சிந்தனையில் உள்ளதையும் உற்பத்தி- தொழில் ஆகியவற்றையும் போட்டுக் குழுப்புவார்கள்- குழப்புகின்றார்கள். உண்மையில் உற்பத்தி முறை மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் என்ற மார்க்சிய அடிப்படை தெரியாது திட்டித் தீர்ப்பதில் திருப்திகொள்கின்றார்கள். சிந்னையில் மாற்றம் வேண்டுமென்றால் பண்பாட்டுப் புரட்சிதான் தீர்வு. ஆனால் பண்பாட்டுப் புரட்சி நடத்தப்பெற வேண்டுமென்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேசம் விடுதலை அடைய வேண்டும், பொருளாதாரம் உழைக்கும் மக்களுக்கானதாக கட்டமைக்கப்பட வேண்டும். இந்த முறையில் தான் பண்பாட்டுப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திட முடியும்.

சமூகத்தில் தம்மை உயர் குடியாக்கம் (சமஸ்கிருதமயமாதல்) செய்வது நடைபெறுகின்றது. இதற்குத் துணையாக அகமுரண்பாட்டை முதன்மைப்படுத்திப் பேசுவதில் காலத்தைக் கழிக்கின்றார்கள். ஆனால் இவர்கள் தேசியத்திற்கு மாற்றாக அடையாள அரசியலை மீட்டெடுத்து தம்மைத் ஜீவகாரூண்யவாதிகளாக பிரகடனப்படுத்துகின்றனர். மற்றைய தேசிய இனத்தவர்களுக்கும் தாம் தேசியவாதம் பற்றிப் பேசுவதில்லை, நாமும் நீங்களும் இன, மத, குலபேதம் கடந்து ஒன்றித்தவர்கள், சகோதரத்திற்கு முன்னோடி என்று பிரகடனப்படுத்துகின்றனர். இந்தப் பிரிவினரின் அடையாளச் சிக்கலாகும். வர்க்கப் போராட்டம் பற்றிய புரிதல் இல்லாமலே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திலிருந்து விலகிய பின்னர். யாழ்மையவாதத்தால் வாழ்க்கையை இழந்தோம், இளமையை இழந்தோம் என்று சலித்துக் கொள்கின்றார்கள். சீர்திருத்தவாதிகளாக சீரளிந்த பின்னர். அவர்களிடம் எதனை எதிர்பார்க்க முடியும்?

இவர்கள் அடையாள, தலித்திய, அரச ஒத்தோடிகள், போலி இடதுசாரிகள் ஆவர். தம்மை கடந்த காலத்தில் இருத்திக் கொண்டு இன்றைய சமூக ஓட்டத்தை எழுதி புலம்பிக்கொண்டே இருக்கின்றார்கள். இயற்கையே கால மாற்றத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கின்றது. அதாவது கோடை, பனிக்காலம் இதில் இலையுதிர்வது, செழித்து வளர்வது என்று மாறுகின்றது. இவ்வாறே சமூகமும் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. சமூகத்தின் மாற்றம் மெதுவாகத் தான் நடைபெறும் இவ்வாறே முதலாளித்துவ சகாப்த்தில் தேசிய இயக்கக் கோரிக்கைகள் முன்னெழுகின்ற. இதனை மடைமாற்றி கருத்துருவாக்கம் செய்கின்றார்கள்.  இவர்கள் ஒடுக்குமுறை அரசிற்கும், மக்களுக்கும் எதிராக செயற்படுகின்றார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் ஆதரிப்பதே மக்கள் நலன்சார்ந்தவர்களின்  முன்னேறிய நிலைப்பாடாக இருக்க முடியும்.

அகமுரண்பாட்டை முன்னிறுத்தி சமூகத்தின் சிந்தனை சிதைப்பது வேலைப்பிரிவினையாகும். அன்றாட வாழ்வில் அவர்கள் தான் தம்மை மார்க்சியர்கள், முற்போக்கு, சனநாயகவாதிகள் என்று பிரகடனப்படுத்துகின்றார்கள். இவர்களைப் போன்றவர்களே மார்க்சிய லெனினியத்தின் அளவுகோளாகவும், முன்னுதாரணமாகவும் சமூகத்தில் முன்னிறுத்தப்படுகின்றனர். இவர்களின் ஊடாக மார்க்சிய சிந்தாந்தம் (திருத்தல்வாதம்- corrupt-ஊழல்) ஒழுங்காக பயிலப்படாமலேயே ஒப்பிக்கப்படுகின்றது. மார்க்சிய பொதுவான வழிகாட்டலை கொண்டது. அதில் இருந்து குறிப்பான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதற்கான மாறுபாடும், புரிதலும் இல்லை. இவர்களால் நேர்மையான சிந்தனை கொண்ட சமூகத்தை படைக்க முடியாத அவலம் தொடர்கின்றது.  

மேற்குலகில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் தனிக் குடும்பங்களாக வாழ்கின்றனர்.  கூட்டுக்குடும்ப உறவு சிதைந்த நிலையில் தன் வாழ்வதும், குடும்ப உறுப்பினர் தனித்துவவாத வாழ்வியலைக் கொண்டுள்ளார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் சாதிய உணர்வை வெளிப்படுத்துகின்ற போது சாதிய மனப்பான்மையை வெளிப்படுத்தும் நபர்தான் அன்னியப்படுகின்றார், அன்னியப்படுத்த முடிகின்றது. மேற்கின் சமூக உறவானது சாதிய வன்கொடுமையை இன்னொரு மனிதர்கள் மீது தொடுக்க முடியாது. அவ்வாறு உறவு வைக்க வேண்டிய கட்டாய நிலையில் சமூகம் என்பது இல்லை. மேற்கில் பெரும்பகுதியினர் உதிரிகளாக (குடும்பம், நண்பர்கள் என்ற வட்டத்தினுள்) வாழ்கின்றனர் என்பதை உள்வாங்க முடியாத பரிதாபமான சிந்தனையில் தான் சீர்திருத்தவாதிகளும், புலியெதிர்ப்புவாதிகளும் இருக்கின்றார்கள்.

 லெனின் ஆசியக் கொடுங்கோன்மை, கற்காலச் சிந்தனை மரபு எனவும், மார்க்ஸ் கொலனித்துவ நாடுகளின் நிலைபற்றி எழுதியுள்ளார். எனவே நிச்சயம் இந்திய சூழல் பற்றிய அறியாமல் இருக்க முடியாது. இந்திய விடுதலைப் போளிராளிகளுக்கும் லெனினுக்கும் நெருக்கமான உறவு இருந்துள்ளது. எம். என். ராய் போன்றவர்கள் அகிலத்திற்கு தமது ஆய்வை முன்வைத்தும் உள்ளார். தேசிய இயக்கங்களின் வரலாற்றுக் கட்டத்தை உள்வாங்காது அரைகுறையாக விமர்சிப்பது மாத்திரம் அல்ல, மார்க்சிய இயங்கியலை விளங்கிக் கொள்வதுமில்லை. பொதுப்புத்தியில் பேசிக் கொள்பவர்கள். இன்னொன்று தம்மை இடதுசாரியாக கருதிக் கொள்பவர்கள். தேசிய எழுச்சிக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களும் உள்ளார்கள். பலர் அடிப்படையில் சமூக வளர்ச்சிப் போக்கை இலகுவாக கடந்து செல்ல முடியாது. ஒரு சமூகப் போக்கில் உள்ளவர்களை மார்க்சிய லெனினியம் என்ற சிந்தனைத் தளத்திற்கு கொண்டு வருவதற்கு நிறையப் போராட வேண்டியுள்ளது.

உற்பத்திக் கட்டமைப்பு மாறுகின்ற போது இதற்கு மார்க்சின் கூற்றினை முழுமையாக உள்வாங்க வேண்டும். லுத்விக்ஃபாயர்பக், ஜேர்மன் சித்தந்தம் என்ற நூலில் தனிமனிதர்களின் பாத்திரம் பிளெக்னேவ் கூற்றுக்களை அறிந்திருக்க வேண்டும். சமூக உறவுகளை பற்றிய போதிய புரிதல் இலங்கையில் இடதுசாரிகளிடம் இல்லாது இருப்பது துயரமே.

 

குறைவிருத்தி முதலாளித்துவ ஜனநாயக உரிமை

இலங்கையைப் பொறுத்தவரை மன்னர்கள் கொண்டிருந்த வழக்கங்களும், கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு சட்டவாக்கம் கொலனித்துவவாதிகளினால் உருவாக்கப்படுகின்றது. சட்ட உருவாக்கத்தில் பழைய வழமைகளையும், ஆதிக்கத்தில் இருந்த சொத்துரிமை வர்க்கம் தமது சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கும் கொலனித்துவத்தின் ஆட்சியில் அதிகாரத்தை உறுதி செய்யவும் வரையப்பட்ட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், முக்குவ தேசவழமைச் சட்டம், புத்தளத்தில் முக்குவ தேசவழமைச் சட்டமும் கொலனித்துவ காலத்துச் சட்டத்துடன் இணைத்து பயன்பாட்டில் வந்தது. ஆனாலும் முதலாளித்துவ வளர்ச்சி என்பது குடிகளின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் ஊடாக சுதந்திரமான (எவரின் கட்டுப்பாட்டினுள்ளும் இல்லாது) பிரஜைகளை உருவாக்குவது முதலாளித்துவத்திற்கு அவசியமானதாகும். இந்த வகையில் பல்வேறு சட்டங்களை உருவாக்கி வந்திருக்கின்றது.

சமத்துவம் பற்றிப் பேசும் போது முதலாளியம் வழிகாட்டும் ஜனநாயகத்தை முன் உதாரணமாக காட்டப்படுகின்றது. பொதுப்பட தனிநபர் உரிமை என்ற வேடத்தில் இருக்கின்றது. தனிமனிதர்களின் சொத்துடமை, பேச்சுரிமை, வாக்களிக்கும் உரிமை என பிரகடனப்படுத்துகின்றது. இந்த உரையாடல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் விளைவானதாகும்.

1789- 1871 இந்தக் காலத்தில் முதலாளித்துவ சனநாயகப் புரட்சி நடைபெற்றுவிட்டது. பழைமையை உடைந்து நவீன காலத்துக்கான சிந்தனை வளர்ச்சி பெற்றது. பெண்களுக்குக்கான வாக்குரிமை எனவும் பண்பாட்டில் பழைமை உடைத்தெறியப்பட்டது. உதாரணத்திற்கு Isadora Duncan Angela  நடனத்தில் பல புதுமையை நிலைநாட்டினார். முதலாளித்துவ பண்பாட்டு மாற்றங்கள் உருவாக்கப்பட்டன.

கூட்டுக்குடும்பம் உடைந்துள்ளது. தனிக்குடும்ப முறை (nuclear family), தனித்துவவாத சமூக உறவு வளர்ந்துள்ளது. வளர்ச்சியடையாத நாடுகளில் கட்டற்ற உறவு, சேர்ந்து வாழல் (free sex, living together) போன்ற சிக்கலுக்குள்ளானதே. தனித்துவாத உறவை முதலாளித்துவம் வளர்ச்சி அடையாத நாடுகளில் பிரதியிடும் போது சுரண்டலுக்கு உள்ளாகின்றது. மேற்கில் பயன்படுத்திவிட்டு (பரஸ்பரம்) செல்வதற்கும், வளர்ச்சி அடையாத நாடுகளில் ஏற்படும் விளைவுகளும் ஒன்றல்ல.

சுயசிந்தனை, மூடநம்பிக்கை மறுப்பு, கற்பு என்ற விடயங்கள் முதலாளித்துவத்தால் சாத்தியமாயிற்று.  மேற்கு நாடுகளில் மதங்களின் இருப்பு மிகவும் தளர்ந்துள்ளதும் பொருளாதார வளர்ச்சியே காரணம்.பல கிறிஸ்தவக் கோவில்கள் இயங்க முடியாமல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  கட்டுடைத்தல் என்பதை முதலாளித்துவப் புரட்சியில் சாத்தியமாயிற்று. ஆனால் முதலாளித்துவப் புரட்சியை நடத்தில் முடிக்காமலே கட்டுடைக்கு முடியும் என்று பின்நவீனத்தும் கற்பித்தது. கட்டுடைப்பது என்பது நிலப்பிரபுத்துவ எச்சங்கள் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதாகும்.

இதேவேளை 1917 முதலாவது உழைப்பாளிகளின் தாயகம் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா எங்கும் சமூக கொடுப்பவனவு திட்டத்தை உருவாக்கி கொடுப்பனவுகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் பழைமையை உடைத்து நிலமானிய கட்டமைப்பிற்கு மாற்றாக முதலில் மேற்கு நாடுகளில் தான் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயப் புரட்சிக்குப் பதிலாக சமூகத்தில் கட்டுடைப்பதன் ஊடாக சமூகத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று கற்பிதம் செய்யப்பட்டது.

இங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு முதலாளித்துவ உற்பத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் கிடைக்காது இருந்துள்ளார்கள். அந்த உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ள. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை, சமூகத்தில் சமமாக பங்குபற்றுவதற்கான உரிமையையும், அவர்களை சமூக மட்டத்தில் உயர்த்தி விடுதவற்கான சலுகைகள்,  இடவொதுக்கீடு போன்றவற்றையும் அறிமுகப்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களை மற்றைய சமூகத்தவர்களுடன் சமானமாக வாழ வைக்க முதலாளித்துவ சட்டங்களை உருவாக்கி கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் ஒடுக்கப்பட்டவர்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

குட்டி முதலாளித்துவ வர்க்கப் பிரிவில் சிலர் பெயர் புகழ் பெறவேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும். பிரபல்யமாக வேண்டும். இவர்களில் பலர் பேச்சு எழுத்து, வசீகர உடைநடையைக் கொண்ட மேன்மைத்துவ போக்கு கொண்டிருப்பார்கள். ஈழத்தில் கௌரவம், பதவி, சலுகை பெறத்துடிக்கும் இந்த வர்க்கப் பிரிவு தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வர். இந்தப் பிரிவினரை இலகுவாக சீர்திருத்தவாதம் தம்வசப்படுத்தும்.  தலித்தியர்கள் தம்மை முற்போக்காளர்கள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு முதலாளித்துவ கட்சியில் இடவொதுக்கீடு கேட்கின்றார்கள்.  இதுதான் இவர்களின் புரட்சிகர கோசமாக தோன்றுகின்றது. ஆனால் இது முதலாளித்துவ நிறுவன அமைப்பு விதியை முன்வைக்கப்படுகின்றது. ஆனால் மார்க்சிய கட்சியில் வொதுக்கீடு கோருவது பிற்போக்காகும். ஏலவே சமூகத்தில் இருக்கின்ற பிற்போக்கு சிந்தனையைக் கொண்டிருக்கின்ற சக்திகளிடம் இடவெதுக்கீட்டின் ஊடாக பிற்போக்கு முகாமிற்குள் நுழைத்து விடுவது புரட்சியாகின்றது.

அரசியல் சொல்லாடலில் அடையாள (தன்னியல்பு) அரசியலை முன்னிறுத்துகின்றது. ஒரு பிரச்சனைக்கான தீர்வினை யார் வைக்கின்றனர், இது எவ்வாறு அமைகின்றது. சமூகத்தின் பொருளாதார அமைப்பு என்ன என்ற புரிதல் இல்லாத நிலையில் அல்லது அரசியல் மயப்படுத்தப்படாத நிலையில் இருந்து தோற்றம் பெறுகின்றது. கோட்பாடுகள் முன்னோக்கிச் செல்லும் சமூக அமைப்பின் தேவையில் இருந்து அமைய வேண்டும்.

இவ்வாறே தமிழ் தேசிய போராட்டத்தின் ஆரம்பத்திலும் சரி சாதிய எதிர்ப்புப் போராட்டதிலும் சரி அடிப்படை உரிமையை உறுதிப்படுத்த என்ற நிலைப்பாடில் இருந்து இடதுசாரிகள் போராடி இருக்கின்றார்கள்.

பின்நவீனத்துவவாதிகளின் நடைமுறை பற்றி சமூகத்தின் அதிகார மையத்தில் முதலாளிகளும் தொழிலாளர்களும் பதவிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் இவர்களது இப்போராட்டத்திற்கும் விளிம்பு நிலையில் உள்ள தலித்துக்களுக்கும் தொடர்பேதும் இல்லை என்றும் தலித்துகள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக கலகம் விளைவிக்க வேண்டும் என்று இவர்களிடம் போதிக்கிறார்கள்.” (வெ கிருஸ்ணமூர்த்தி - ஆய்வுவட்ட வெளியீடு5) உழைப்பாளிகளை வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலத்தி வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

இந்தச் சமூகத்தில் சாதிப்பிரச்சனை அக முரண்பாடாகும். தேசிய இனப்பிரச்சனைக்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதில் இருந்து தவிர்ப்பதற்காக மூடு திரையாக பயன்படுத்துகின்றார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கான முதலாளித்துவ சமூக உற்பத்தியில் கிடைக்காத உரிமைகளை பெறவே போராட்டதை நடத்திக் கொண்டனர். சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் அடுத்த கட்டம் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். தேசிய விடுதலையுடன் கூடிய அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இருந்து விலத்தியே இவர்கள் வந்துள்ளார்கள்.

தமிழக தலித்தியத்தின் கருத்தாக்கம் என்பது சலுகை மூலம் மாற்றத்தினைக் கொண்டு வந்துவிட முடியும் என்பதேயாகும். உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா உழைக்கும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும், பாதுகாக்க இயலும் என்பதற்கு எதிரான கோட்பாடு. மற்றையது சமூகத்தை தலைகீழாக மாற்றுவது, அதன் ஊடாக தீர்வினைப் பெறுவது என்றும், இடைக்காலத்தில் சட்டப் பாதுகாப்பை பெறமுடியும் என்றதாகவும் உள்ளது.  இந்த போக்குகளுக்குள்ள மாறுபாட்டை அறிதல் அவசியம்.

இவ்வாறே இடதுசாரிகளை அரசியல் அரங்கில் மலினப்படுத்தும் புத்திஜீவிகளின் போக்கு இருக்கின்றது. மேலும் வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சனையைப்  பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும்” என சாதிய எதிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டது போன்ற கருத்தாக்கம் செய்யப்படுகின்றது. பொருளாதாரவாதத்தை முன்வைத்து செயற்படும் கட்சிகள் தான் இருக்கின்றன. கட்சிகளின் போதைமையும், தலித்துக்களின் விமர்சனமும் ஒன்றல்ல.

மார்க்சியத்தின் பொதுவான அறிவுறுத்தல்கள், வழிகாட்டல், சமூகப் போக்கு என்பதை அறியாது பொதுப்புத்தியில் இவ்வாறு பேசப்படுகின்றது. இங்குதான் புரிதல் பற்றி பார்வை மாறுபடுகின்றது. தேசிய, சாதியப் பிரச்சனையாகட்டும் அவர்களுக்கான முதலாளித்துவ ஜனநாயகத்தை வழங்குவதன் (அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய நோயாளிக்கு நோவைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் மருந்து போல) மூலமே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை  வெற்றி கொள்ள முடியாது. சட்டப் பாதுகாப்பு என்பது மாற்றத்தை கொடுத்து விடுவதில்லை. பொருளாதார அமைப்பு முறையை ஏற்படுத்தல், பழைய மிச்ச சொச்சங்களை அழித்தல், கல்வியமைப்பை மாற்றியமைப்பது பண்பாட்டுப் புரட்சியை கொண்டு வருதல், அரச நிறுவனக் கட்டமைப்பில் மாற்றம் உருவாக்கல் என பல கட்டங்கள் உள்ளன. இவ்வாறு விமர்சனம் அடையாள அரசியலில் செயற்படுபவர்களிடம் இருந்து வருகின்றது.

சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறுவிட்டு கடந்து போக முடியாது. சட்டங்களை நிறைவேற்றுவது மட்டும் போதாது அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். சட்டங்கள் ஊடாகவும் சாதியத்தை ஒழித்துவிட முடியாது.

ஈழத்தில் சாதியம் இருக்கின்றது என்று வாய்ப்பாட்டை உச்சரிப்பவர்களிடம் போதிய புரிதல் இல்லை. சாதியத்திற்கு காரணமான உற்பத்திமுறை, சிந்தனை பற்றி கொச்சைப் புரிதல் கொண்டிருப்பதையும், அதனை வாய்ப்பாடாக உச்சரிப்பதிலும் பிழைத்துக் கொள்கின்றார்கள்.

சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியின் பாடங்கள் அவசியமானது. இதுவரை வெற்றிபெற்ற புரட்சிகளின் பின்னர் முதலாளித்துவம் எவ்வாறு அதிகாரத்தை மீளவும் கைப்பற்றிக் கொண்டது என்ற படிப்பினையைப் பெற்றுக் கொள்ளும் இடத்தில் மார்க்சின் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை கற்றிந்து கொள்ள முடியும். உற்பத்தி முறையை மாற்றாது. சீர்திருத்தங்களின் மூலம் மாற்றத்தை விரைவில் கொண்டுவர முடியும் என்று கருதும் போக்கு குட்டிமுதலாளிய அவசரப்போக்காகும். சமூகத்திற்குத் தேவையான உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாத வரை சமூக மாற்றம் சாத்தியமில்லை.

தேசியஇன, மத, சாதிகளுக்கு இடையேயான கசப்புணர்வுகள்  எவையும் உடனடியாக மாற்றம் ஏற்படப்போவதில்லை. அனைத்துப் பிற்போக்கு கருத்தமைப்புகளை புதிய பண்பாட்டுப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்கள் திடீரென கொண்டு வர முடியும் என்று நம்புகின்றார்கள். சமூக மாற்றங்கள்  எதனையும் குறுக்குவழியில் அடைந்திட முடியாது. 

சிறிய அலகைக் கொண்ட நிர்வாக அலகும், சமூக உறவும் என்ற சிறிய வட்டத்தினுள் இல்லை. மாறாக சிக்கலான வலையமைப்பைக் கொண்டதாக இருக்கின்றது. சாதிய எதிர்ப்புநிலை என்று கூறிக் கொண்டு தனியே வகுப்புவாத அரசியலை முன்வைப்பவர்கள். கடந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களே தமிழ் தேசமாக சிந்திக்கும் மனப்பாங்கிற்கான அடித்தளத்தை இட்டது என்பதை மறந்து விட்டனர். இவர்கள் இன்று முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலைக்கு எதிராக சாதி என்ற குறுகிய வட்டத்தினுள் காரியமாற்ற முற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சாதியத்தை ஒழிப்பதில்லை, மாறாக சாதி ரீதியாக செயற்படுவதன் மூலம் முதலாளித்துவ ஜனநாயத்தை அடைந்து விட முடியும் என நம்பிக் கொள்கின்றனர்.

சாதியத்தினைப் புரிந்து கொள்வதற்கு பற்பல அணுகுமுறைகள், சாதியை வெற்றி கொள்வதற்கு பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ள. ஆனாலும் மார்க்சியம் சாதியத்தைப் பற்றி முன்னேறிய புரிதலைக் கொடுத்துள்ளது.  ஆனாலும் வரலாற்ரோட்டத்தில் பல  புதியபுதிய கோட்பாடுகளை முன்வைத்து சாதியத்திற்கு எதிராக போராடுவதாகவும் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இது தலித்தியம் என்றும் விளிம்பு நிலை என்றும் கோட்பாடுகளை சாதிய அமைப்புகள் பின்பற்றியிருக்கின்ற.

ஆனாலும் சாதியத்தினை  எந்தக் கோட்பாட்டாலும் இதுவரை வெற்றி கொள்ள முடியவில்லை.

உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே” என்பதோடு தலித் மக்களே” என்பதை இணைத்து ஒன்று சேருங்கள்” என முழங்க அவசியமுள்ளது?  இங்கே ”தலித்” என்பது தனியே சாதியத்தில்  சகல அடக்கி-ஒடுக்கல்களையும் உட்கொண்டதாகும் எனக் கொள்ளல் வேண்டும். “சாதியம் என்பது ஒரு கருத்தியல் அது மதவுணர்வுபோல போலியா விதைக்கப்பட்ட சிந்தனை முறையாகும். தலித் மக்களே ஒன்று சேருங்கள் என்பது கூட அடிக்கட்டுமானம் என்ற  மார்க்சின் சிந்தாந்தத்திற்கு முரண்பாடானதாகும். தலித்தியம் என்பதே மார்க்சிய வர்க்கப் பகுப்பாய்வை மீறியிருக்கின்றது. தலித்தியம் என்பது அடக்கி- ஒடுக்கப்படுதல் என்று வரையறுத்துக் கொண்டாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்ந்த, ஒடுக்கும் சாதிகளில் உள்ள உழைக்கும் வர்க்கத்தைக் குறித்து நிற்பதில்லை. 

மொழி, நிலம், பண்பாடு, பொருளாதார வாழ்விற்கு அப்பால் உள்ளவற்றை தேசியத்திற்குள் கொண்டு வரமுடியாது. இங்கு தான் இரட்டைத் தேசியம் என்று சாதியத்தினையும், தலித்தியத்தினை தேசியத்துடன் ஒப்பிடுவதும் அடிக்கட்டுமானத்தினை மறுப்பதன் விளைவாகும். சாதியத்தினை வியாக்கியானம் செய்பவர்கள் இரட்டைத் தேசியம், தலித்தியம் என்று பேசுகின்றார்கள். தாம் புதியதாக ஒரு கோட்பாட்டை படைப்பதாக எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு முரணாக கருத்து முதல்வாதத்தை வைத்திட முடியாது.

இந்தச் சமூகக் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தச் சிந்தனைகளையும், சலுகைகளையும் முன்னிறுத்தும் போராட்ட முறை முன்னிறுத்தப்படுகின்றது. தலித்தியம் ஒடுக்கப்படும் மக்களில் உள்ள உயர் வர்க்கத்தவர்களின் நலனை முன்னிறுத்துக் கொள்ளும் கோட்பாடாகும். இங்கு அடிக்கட்டுமானம் தீர்க்கமானதாகும். ஏனெனில் சமூக பொருளாதார உறவில் மேல் உருவாகும் கட்டமைப்பான சாதி என்ற கருத்துமுதல்வாதத்திற்கு உட்பட்டதாகும். தலித்தியம் என்ற இரட்டைத் தேசியம் என்பது மேற்கட்டுமானத்தில் அமைந்தது என்பதை மறுத்து அடிக்கட்டுமானமாக பார்க்கும் பார்வையே கருத்துமுதல்வாதமாகும். (பொருளாதார நிர்ணயவாதம் என்ற தலைப்பினையும் சேர்ந்து வாசிக்கவும்) ஏனெனில் சிந்தனை, செயற்பாடுகள், சமூக உறவுகள் என்பன மாறிக் கொண்டே இருக்கும். உற்பத்தி சக்தி சமசந்தர்ப்பம், பின்தங்கிய தொழில் நுட்பம் போன்றவற்றில் பின்தங்கியிருக்கின்றது. உற்பத்திச் சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான முரண்பாடே. உற்பத்தி சக்தி பின்தங்கி நிற்பதற்கான காரணமாகும்.

இதேபோலதான் “பிராமணியம், யாழ்சைவவேளாளம்” என்ற சிந்தனை உழைக்கும் வர்க்கத்தினை சுரண்டுவதை நியாயப்படுத்துகின்றது. ஆனால் “யாழ் சைவவேளாளத்தின் மீதான பகைமையும், அதனை அம்பலப்படுத்துவதில் உள்ள ஆவலும் எதிர்நிலைக்குத் தள்ளிவிட்டிருகிக்கின்றது “பிராமணியம், சைவவேளாளம்” என்ப நிலப்பிரபுத்துவச் சிந்தனையில் தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்ற ஒடுக்குமுறைச் சிந்தனையாகும். இது இன்றைய பொருளாதாரச் சிந்தனையை உள்வாங்கியதாகவும், அரைநிலப்பிரபுத்துவச் சிந்தனைகளாக தொடர்ந்தும் சமூகத்தில் ஆளுமை செலுத்துகின்றது.

இங்கு “யாழ்சைவவேளாளம், பிராமணியம்” என்பது கூட குறிப்பிட்ட சாதியத்தை குறித்து நிற்பதாகவே வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இது சமூகப் புரிதலில் உள்ள குறைபாடாகும். வெள்ளாளர்களும், தமிழகத்தில் பிராமணர்களும் தம்மைக் குறிப்பதாக சுருக்கிவிடுகின்றார்கள்.  அரைநிலமானியச் சிந்தனை என்பது சாதிகளைக் கடந்து அன்றாட வாழ்வின் சிந்தனை முறையாகும். அந்தச் சிந்தனை முறைக்கு உட்பட்டுத் தான் சமூக உறவுகள் தொடர்கின்றது.

சாதியம் என்பது ஒரு ஒடுக்குமுறைச் சிந்தனை எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும். மார்க்சின் சித்தாந்த வெளிச்சத்தில் அணுகும் போது எந்தப் பொருளாதார அமைப்பு இருக்கின்றதோ அதன் உற்பத்தியாகிய சிந்தனையும் இருக்கும். இதேவேளை முழுமையாக பழைய உற்பத்தி முறையில் மாற்றம் அடையாவிடின் பழைய சிந்தனை தொடர்ச்சியாக உயிர் வாழும். இந்தச் சமூக அமைப்பை மாற்றியமைப்பதன் ஊடாகவே அழுகிய சமூகச் சிந்தனையை மாற்றியமைக்க முடியும்.

இந்த ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்து கொண்டு செயற்படுவதே அனைவருக்குமுள்ள பெரும் சவாலாகும். மார்க்சின் இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்கிடமற்று இருக்கின்றது. சமூக இயக்கம் என்பது அதன் எல்லைக்குள் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும், அதற்குள் மனிதர்களுக்கு இடையேயான சமூக உறவு, இயக்கம் எவ்வாறு இருக்கின்றது என்பதையும் தீர்க்கதரிசனமாகவே மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சமூக அமைப்பை மாற்றிய போராட்டங்கள் வெற்றியையும், தோல்விகளையும் மார்க்சின் இக்கூற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆகவே வெறும் வரைவிலக்கணங்களை வலதுசாரியத்தின் அழுத்தம் காரணமாக (குட்டிமுதலாளிய சிந்தனைவாதிகளின்) இணைத்துக் கொள்வதோ அல்லது இசைவாகோட்பாட்டை உருவாக்கிக் கொள்வதில்லை. ஆனால் இந்தச் சமூக அமைப்பை மாற்றுவதற்கான வேலைமுறைகளை அரசியல், சிந்தனைத் தளத்தில் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களைத் திருப்திபடுத்துவதற்காக தமிழகத்தில் “தலித்திய, விளிம்பு” நிலை மக்கள் என்று புதிய வரைவிலக்கணங்களை உருவாக்கித் திருப்திப்படுத்தியது போன்று இலங்கையிலும் அவ்வாறான நிலை தோற்றுவிக்கப்படுவதாகக் கருத இடமுண்டு.

பொருளாதார அமைப்பின் ஒரு விளைவாக மதம், சாதியச் சிந்தனை அமைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாத மார்க்சிய விரோத அணுமுறையை அறிவிஜீவிகள் பயன்படுத்துவதும் கவனிக்கத் தக்கதாகும். மார்க்சியம் போதிக்கும் மேற்கட்டுமானத்தில் அமைந்த சிந்தனைப் போக்கினைப் புரிந்து கொள்ளதாத குறைபாடு அறிவியல் தளத்தில் தவறான முடிவுகளை முன்கொண்டுவந்து நிறுத்துகின்றது.

 

முதலாளித்துவ- தேசிய- ஜனநாயகக் கட்டம்

தமிழ் சமூக உருவாக்கமானது மாற்றங்களைக் கடந்தே வந்திருக்கின்றது. இந்த சமூகத்தில் வெவ்வேறு மாற்றங்களைக் கடக்கின்ற போது பலநூற்றாண்டுகளை கடந்துதான் மாற்றங்களை அடைகின்றது. இவ்வாறான மாற்றங்களை ஒரே பருமனில் சென்றடைய முடியாது. இன்று வெவ்வேறு சமூகக் குழுக்கள் ஒன்று கலக்கின்ற. இவ்வாறு ஒன்று கலக்கும் சமூகங்கள் மொழி, பண்பாட்டு விழுமியங்களினால் ஒரே மனப்பாங்கு கொண்டவர்களாக வளர்கின்றார்கள். இன்றைய தேசிய ஜனநாயக இயக்கங்களின் காலத்தில் தூயகுருதி கொண்ட சமூகமோ அல்லது வர்ண பாகுபாடு அங்கீகரித்த சமூகமோ முற்போக்காக இருக்கமுடியாது. அவ்வாறு இருக்குமானால் அது ஜனநாயக வடிவத்தில் உயர்ந்த நிலையில் இருக்க முடியாது.

முதலாளிய உற்பத்திக்குள் செல்ல முற்படுகையில் சாதியம் சிதைந்து கொண்டே செல்கின்றது. முதலாளித்துவம் சில சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பொருளாதாரச் சீர்திருத்தங்களும் பழைய நிலையில் இருந்து இன்னொரு படி முன்னே செல்ல முடிகின்றது. தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது இன்றும் ஆழமாக உற்பத்திக் கட்டமைப்பைச் சிதைத்து தனிமனிதர்களின் தெரிவு என்பது சாதியை கொண்டதாக இல்லாது, தனிமனிதர்கள் தங்கள் தொழிலை தேர்வு செய்யும் நிலை இலங்கையில் உள்ளது.

உற்பத்தி உறவிற்கும், உற்பத்தி சக்திக்கு மேல் கட்டப்படும் பழைய உற்பத்தி முறை சிதைக்கப்பட்டும் ஆனால் அதன் பழைய சிந்தனை வடிவம் தொடர்ந்து கொண்டிருக்கும். இதனை அகமுரண்பாடு எனலாம் இது எம்மிடம் உள்ள மனக்கசப்பு கருத்துமுதல்வாதம் - மனிதர்களில் இருக்கும் போலியுணர்வு (சிந்தனை, மனக்கசப்பு, உலகம் பற்றி புரிதல் இது இனக்குழும வாழ்வியல், நிலமானிய வாழ்வியல் சிந்தனைகளின் தொடர்ச்சியாக இருப்பது- சாதியுணர்வு, மத உணர்வு, பிரதேச உணர்வு என விரிந்து செல்கின்றது. இவ்வாறு பல விடயங்களை உள்ளாகியிருப்பதை பொதுப்புத்தியின் ஊடாக அணுகிடும் போக்கின் இன்னொரு வெளிப்பாடு பிரதேசவாதமாகும். இது centric- மையவாதம்-  யாழ்மையவாதம் என்பது நிலமானிய சிந்தனை அடித்தளமாக இருக்கின்றது. மையவாதத்தை முன்னிறுத்தி தேசிய இயங்கங்களின் வளர்ச்சிப் போக்கைத் கணித்திட முடியாது. குறிப்பிட்ட சூழலில் எந்த வர்க்கம் தலைமைச் சக்தியாக இருக்கின்றதோ அது தலைமை தாங்கும். ஆனால் போன வண்டிக்கு கைகாட்டும் வேலைதான் 2009 ஆயுதப் போராட்ட வீழ்ச்சிக்குப் பின்னரும் தொடர்கின்றது. தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தினை மதிப்பீடு செய்வதில் தவறு விடப்படுகின்றது. “கம்யூனிசத்துக்கான மாற்றத்தினை முன்னணிப் படையினால் மட்டும் சாதித்துவிட விடமுடியாது என்பதை நாம் உணந்து கொள்ள வேண்டும்.  (102-10 லெ.) இங்கு அமைப்பு பற்றி பேசப்படுகின்றது. எம்மிடம் ஒரு கட்சியே இல்லை. ஒரு கட்சி முன்னணிப் படையை, செயற்பாடுகளையும் செய்யும் பொறுப்பு உள்ளது.

ஆனால் தேசிய ஜனநாயகக் கட்டத்தை மறுத்த சாதியப் போராட்டத்தை அல்லது வர்க்க (பொருளாதாரப்) விடுதலையை மழுங்கடிக்கவே இனவிடுதலைப் போராட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்கின்றனர். ஆகையினால் சாதி வெறியர்களுக்கு எதிராக போராடுவதும் பெருமைக்குரியதே என்பது தவறான வாதமாகும். இது சமூக வளர்ச்சிப் போக்கை சமூகவிஞ்ஞானப் பார்வையில் அணுகாது பொதுப்புத்தியில் அமைந்த சிந்தனை வடிவமாகும். பழைய சமூக உறவுகளையும் பழைய போக்குக்களையும் உடைத்துக் கொண்டே தேசிய இயக்கங்கள் வளர்கின்ற. இதனை விளங்கிக் கொள்ள விடாது தடுப்பது மாத்திரம் அல்ல, சமூகத்தை ஜனநாயகப் போக்கிற்குச் சென்றுவிடாமலும் பாதுகாத்துக் கொள்கின்றது.

முதலாளித்துவ- தேசிய - ஜனநாயகப் புரட்சிக்கான நிலையில் தலித்தியம், அம்பேத்காரியம் போன்றவை போதைமை உள்ள சித்தாந்தங்கள். தலித்தியம் இன்றைய சிந்தனை வடிவம்

டேய் நீ பள்ளன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் நீ நளவன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் நீ பறையன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையாமா?

டேய் நீ தலித்து தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் நீ சக்கிலியன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் எங்களை ஒடுக்கிறார்கள் அவர்களுடன் எவ்வாறு வேலை செய்வாய்?

டேய் அவங்களுக்கு நாம் சமமானவர்கள் என்று மனிதரை சிந்திக்கவிடாது வைத்திருக்கும் சிந்தனைத் தளம் தொடர்கின்றது. இது சலுகை, இலவசம், சமூக நீதி என்பதை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றது. உற்பத்தி முறையை மாற்றுவது அல்ல என்ற சிந்தனை வடிவம் கொண்டதாகும். இந்தப்  போக்கானது பழைய அடையாளங்களைத்  தொடர்ந்து கட்டிக் காப்பதாகும்.

முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தில் 'சமூக விடுதலை இல்லாமல் தேசிய இனவிடுதலை; இல்லை என்பது அகநிலைவாதமாகும். அரசியல் அதிகாரமே சமூக விடுதலையையும் கொடுக்கும். அம்பேத்கர் லெனின் இந்தியாவில் பிறந்திருந்தால் சாதியைத் ஒழித்து விட்டுத் தான் வர்க்கப் புரட்சியை மேற்கொண்டிருப்பார் என்கின்றார். ("Had Lenin been born in India he would have buried the caste system and the practice of untouchability first, and without doing this, he would not have thought of the workers’ revolution in the country”) இவ்வாறு கருதுவது கருத்துமுதல்வாதம், அகநிலை அணுகுமுறையாகும். தோழர் லெனின் வழிகாட்டல் தேசிய ஜனநாயகப் புரட்சியே. கீழ்திசை மக்களுக்கு வழிகாட்டல் என 1919 அகிலத்தில் அறிவுறுத்தியுள்ளார். அதன் ஆழத்தை அன்று பொதுவுடமைவாதிகளும் அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இதனை அம்பேத்கர் விளங்கியிருப்பார் என்பது ஐயமே.

தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்து தான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது.“ மேற்கண்ட கருத்துவாக்கம் என்பது பொதுவெளியில் உரையாடப்படுபவை.

1789-1871 காலங்களில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்றதாக தோழர் லெனின் மதிப்பீடு செய்கின்றார். ஆனால் தென்கிழக்காசியாவில் முதலாளித்துவப் புரட்சி நடைபெற்று முடிவடையவில்லை. எனவே நாம் வாழ்கின்ற சமூக பொருளாதார உற்பத்தி முறையை விளங்கிக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சியடையாத நாடுகளின் நிலையை மேற்கின் மையவாத நிலையில் இருந்து எந்த மதிப்பீட்டையும் செய்யமுடியாது. பொதுவாகவே மேற்கின் தாராளவாதச் கருத்தோட்டமே மேலோங்கியிருக்கின்றது. அதன் அடிப்படையிலும், தனிமனித இருப்பை உறுதி செய்யும் கருத்தாக்கம் எங்கும் நிறைந்துள்ளது. முன்பு “ஆசை கோபம் களவு கொள்பவன்” என்பது சமூக ஒழுங்கமாக இருந்தது. ஆனால் இன்றில்லை. பண்பாடு என்ற வகையில் கல்மனம் கொண்ட மனிதர்களை உருவாக்கி விட்டுள்ளது. அதையும் மீறி மனித கூட்டம் வெளியே வரும் போதும் அமைதி மயப்படுத்தப்படும் போக்கும் இருக்கும். சினிமாவின் பின்னால், சாகச வடிவத்தில் பின்னால், பிரபல்யங்களின் பின்னால், குடும்பச் சுமை என்று மனிதர்களை பம்பரமாக சுற்றி விடும். சாதியம் மாற்றமடையவில்லை, சாதிதான் முதன்மை என்கிறவர்கள் உள்ளார்கள். அவ்வாறாயின் தொழிற்துறை வளர்ச்சியடையாத நிலையில் பாட்டாளி வர்க்கமும் அதிகமாக உருவாகியிருக்க முடியாது.

இன்றிருக்கும் சூழல் தேசிய முதலாளித்துவ வர்க்கம் அதன் தலைமையை எடுக்கும். “நீங்கள் முதலாளித்துவ தேசியவாதத்தை உங்களுக்கு அடித்தளமாய்க் கொள்ள வேண்டியிருக்கும் இந்த முதலாளித்துவத் தேசியவாதம் இம் மக்களிடையே விழிப்பூட்டி வருகிறது, விழிப்பூட்டியே ஆக வேண்டும். இது வரலாற்று வழிபட்பட்ட நியாயமுடையதாகும்.” (103-10லெ) ஆனால் இயங்கியல் விதிக்கு மாற்றான கருத்தாடல்கள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அகிலத்தின் வழிகாட்டலை மாத்திரம் அல்ல மார்க்சியத்தையே புரிந்து கொள்வில்லை என்றால் இன்னும் பல பத்து ஆண்டுகள் பின்னேதான் நிற்க முடியும்.  

நிலப்பிரபுத்துவ (முழுமையான வளர்ச்சி கொண்டதாக இல்லாத போதும்) முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நுழைகின்ற போது தேசிய (இயக்கங்கள் உருவாகியே ஆகின்றது. முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது. இங்கு தேசிய இனங்கள் தேசத்திற்கான பண்பைக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது அல்லது வளரும் இதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதம் . இதுதான் அடிப்படை.. ஆபீரிக்காவில் எழுந்து வரும் தேசிய உணர்வை இவ்வாறுதான் விளங்கிக் கொள்ள முடியும். 

மந்திரத்தில் மாங்காய் காய்பது போல “பிரெஞ்சு தேசியம் என்பது நிலப்பிரபுத்துவத்தினை சமரசம் செய்யாது. நிலப்பிரபுத்துவக் கூறாக அரச வம்சத்தினை அழித்து முதலாளித்துவ கட்டத்தை அடைந்தது. ஆனால் பல ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் சமரசம் கொண்டு புரட்சிக் கட்டத்தை அடைந்தது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்பது நிறைவேற்றப்பட்டது. ஆனால் பல மேற்கு ரோப்பிய நாடுகளில் அரசவம்ச ஆட்சி முறை என்பது நாடாளுமன்றத்திற்கு உட்பட்டதாகத் தொடர்ந்தும் இருக்கின்றது. கத்தோலிக்க மதத்தின் நிலமானிய உறவின் எச்சங்கள் தொடர்வதையும் மேற்கு நாடுகளில் அடையாளங் காணமுடியும். குறிப்பாக கத்தோலிக்க நாடுகளில் உள்ள குடும்ப அமைப்பு, உறவுமுறை என்ப தனித்துவவாத சமூக உறவின் உச்சத்தில் இருக்கும் நாடுகளைவிட  மாறுபட்டதாக கிராமத்திற்கும் பெரும் நகரத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

எனவே லூயி உடன் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முதலாளித்துவக் கட்டத்தை அடைந்ததும் அதற்கு மாற்றாக அரசவம்சங்கள் சமரசம் செய்து முதலாளித்துவக் கட்டத்தை அடையவில்லை என்று கொள்ள முடியாது. பழைய உற்பத்தி முறைகள் தொடர்ச்சியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு சமூக உறவுமுறை தொடரும். ஐரோப்பிய வரலாற்றில் இருந்து அறிய முடியும். இது சாதிக்கும் பொருந்தும். முதலாளித்துவத்திற்கு முன்னைய ஒடுக்குமுறை எச்சங்கள் என்பது உற்பத்தி மாற்றம் அடையாத வரையில் மாற்றமடையப் போவதில்லை. சாதியச் சமூகத்தில் வாழும் அனைவரிடமும் சாதியச் சிந்தனை உள்ளது. இவர்கள் யார் வேண்டுமென்றாலும் தம்மிடம் சாதி உணர்வு இல்லை என்று வெளிப்பாட்டிற்கு சொல்லி விட்டுப்போகலாம். தனிமனிதர்கள் தம்மைப் புனிதர்களாக கட்டமைத்துக் கொள்ளலாம். சாதியக் கட்டமைப்பை எதிர்ப்பவர்கள் தம்மை சனநாயகச் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கின்றார்கள். எனினும் வாழ்கின்ற சமூகம் என்பது அதன் படைப்பு என்பது அந்த சமூகச் சிந்தனையின் வெளிப்பாடுகள் தான். சமூக சிந்தனை மாறுவது என்பது சமூக பொருளாதார உற்பத்தி உறவில் மாற்றங்களின் ஊடாக நடைபெறுவதாகும்.

மனிதர்கள் சாதியை விட்டுச் சிந்திக்க முடியும். மனிதர்கள் தமது சிந்தனையை ஜனநாயக ரீதியாக வளர்த்துக் கொள்வதன் ஊடாக அதிக பட்சமாக குறைக்க முடியும். ஆனால் அந்தச் சிந்தனை முற்றுமுழுதாக அழிந்து விடுவதில்லை. அவ்வாறு அழிந்து விடும் என்றும் அகன்றுவிட்டது என்றும் பிரகடப்படுத்துவது வெறும் பாசாங்குதான்.

சாதியத்திற்கான பொருளாதார உற்பத்தித் தளம் என்பது தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்டு விட்டது. சிந்தனைத் தளத்தில் இயங்குவது என்பது தவிர்க்க முடியாததே. சிந்தனையில் சாதியம் தொடர்வது என்பது தற்பெருமைக்கும் வரட்டுக் கௌரவத்திற்குமானது. இது பூர்சுவா சமூக அமைப்பில் தொடரவே செய்யும். இதற்குப் புதியகலாச்சாரப் புரட்சி அவசியம் அதன் ஊடாகவே சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

சமூக விஞ்ஞானப் போக்கில் உலக மறுபங்கீட்டின் அடிப்படையில் இயங்கும் உலக பொருளாதார அசைவியத்தினை அறிய முடியும். அது அரசியல் பொருளாதாரம் சார்ந்து உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் முரண்பாடுகள், பிளவுகள், மாற்றங்கள் அவற்றிற்கான தீர்வுகள் என்பது இருக்கின்றது. அவை தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்களின், தனிமனிதர்களின் அனுபவத்தில் அமைய முடியாது. மனிதர்கள் விரும்பியோ விரும்பாமலோ நிலப்பிரபுத்துவம் சிதைய முதலாளித்துவம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கின்றது. அங்கு தேசிய இயக்கங்கள், கோரிக்கைகள் உருவாகிக் தான் ஆகும்.

 

இறுதியாக

 

1980களில் உருவாகிய அடையாள அரசியலை முன்னிறுத்திய தலித்திய, சாதியக் கட்சிகளின் பின்னால் சமூகம் என்பது சாதிய ரீதியாக அணிதிரட்டப்பட்டுள்ளது. சொறி சிரங்கினை சொறிந்து புண்ணாக்கி சீழ் வடிய வைப்பது போல தலித்திய- சாதிய - அடையாள அரசியல் அமைப்புகள் சமூகத்தைப் பிரித்துள்ள. தலித்தியம் அடையாள அரசியல் ஊடாக தேர்தலை மையமாக் கொண்ட அரசியலின் ஊடாக திருப்தி கொள்கின்றது. தேசிய இயக்க வளர்ச்சி என்பது பழைய சிந்தனை முறையை உடைத்துக் கொண்டு முன்னகர்வதும், கடந்த காலத்துடன் கடன் தீர்த்து முன்செல்வதுமாகும். முதலாளித்துவத்திற்கு முன்னைய கருத்தாங்கங்களை கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் கொடுத்த தலைவர்களின் கருத்துகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது தவறாக பார்க்கப்படுகின்றது. இன்னொரு அடி முன்னே சென்று விமர்சிப்பவர்களை சாதி வெறியர்கள் என்று முத்திரை குத்தும் போக்கும் உள்ளது.

தேசிய இயக்கம் என்பது பழைய உற்பத்தியை உடைத்துக் கொண்டு தான் முன்னேறுகின்றதை அடித்தவனுக்கு அடிஎன்று வெற்றி கொண்ட போராட்ட வரலாறு நம்மிடம் உள்ளது. அது உற்பத்தியில் தீர்மானிக்கும் நிலையை உடைத்து முன்னேறியது. அதனை  அடையாள- தலித்திய அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆயுதப் போராட்டம் என்றாலே அழிவைத் தான் கொண்டு வரும் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்துருவாக்கத்தால் உருவாகியது. மனித குலம் வரலாறு குல உறுப்பினர்கள் வயது வேறுபாடு இன்றி இணைந்து போராடினர். போராட்டங்களே மனிதகுலத்தை முன்னேற்றி வைத்துள்ளது.

சாதிய உற்பத்திக் கட்டமைப்பு பெரும்விதிதத்தில் உடைந்துள்ளதும் அதன் வெளிப்பாடுதான் தேசத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தேசத்திற்கான போராட்டம் என்பது அடித்தளம் இல்லாது முன்னேறியிருக்க முடியாது. சமூகத்தின் எழுச்சி என்பது அதற்கான சூழல் இல்லாவிடின் எவையும் முன்னேற முடியாது. தமிழ்தேசியம் என்பதை தமிழ் சாதிய நிலவுடைமையின் சிந்தனை-- தமிழ்தேசியம் நேரடியான சாதி-நிலவுடமைச் சமூகத்திற்கானது” இவ்வகையான கருத்துக்கள் பிற்போக்குத் தனம் மாத்திரம் அல்ல. இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் ஆளுமை உள்ளவர்களிடத்தில் இருந்து வருகின்றது. இவை அகமுரண்பாடுகளை தங்கவைத்துக் கொள்ளும் சிந்தனை வடிவத்தில் இருந்து வருவதாகும். சீர்திருத்தம், பகுத்தறிவு, இடவொதுக்கீ, என்பதை நிறுவுவதற்கு தந்தை பெரியார் முன்னிறுத்தப்படுகின்றார். ஆனால்  பெரியாரின் காலத்தில் தேவையாக இருந்த முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கை அதன் பாலான செயற்பாடுகள் என்பது மட்டுப்பட்டதாக இருந்துள்ளது. இதனால் பெரியாரிடம் தேசிய இனம், தேசத்தின் இறைமை பற்றிய தேடலை பெற்றிட முடியாது. சமூகம் அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்பத் தான் நிகழ்வுகள் முன்னோக்கிச் செல்கின்றன. எனவே தேசியம் பற்றி லெனின், ஸ்ராலினிடம் தேடவேண்டியுள்ளது.

பண்பாட்டுத் தளத்தில் நிலவுவது ஆபத்துத் தான். ஆனால் அதிலும் விட கொடியது உற்பத்திக் கட்டமைப்பில் சாதியம் உடைக்கபடாமல் இருக்கும் நிலையாகும். ஈழத்தில் உற்பத்திக் கட்டமைப்பின் சிதைவு தமிழ் தேசியத்தினை வளர்த்தது. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படும் மனிதர்கள். அடையாள அரசியலை புதுப்பிக்கும் போக்கைக் கொண்டு செயற்படுவதும், மனிதர்களின் சிந்தனையை சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரம் (குணம் குலத்தளவே) என்ற கருத்துமுதல்வாத சிந்தனையில் தேடுவதாக உள்ளார்கள்.

இனக்குழும- நிலமானிய சிந்தனை முறைகளின் எச்சங்கள் என்ப சமூகத்தின் தீங்கான பொதுவுண்மையாக அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -socially stigmatized) வழக்காடு போல் அல்லாது வர்ண அடிப்படையில் மனிதர்களை பிரிக்கின்றது, அடக்குகின்றது, வளர்ச்சியைத் தடுக்கின்றது. பண்டைய சமூகப் போக்கையும், நம்பிக்கையையும், போக்குகளையும் கொண்டு இந்தக் காலத்தில் ஒப்பிட முடியாது. இவற்றை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ கட்டத்திற்கு தேசிய இயக்கங்கள் வளருகின்ற காலமாகும்.

பழையவை உடைந்து செல்லும் காலம் என்பதை விளங்காது யாழ் சைவவேளாளம், யாப்பாணி- யாழ்ப்பாணத்தவர்களின் கோரிக்கை என்று சொல்லிக் கொள்கின்றார்கள். ஆனால் வரலாறு என்பது அவ்வாறு இல்லை. கொலனித்துவ காலத்தின் முன்னரே தேசமாக வளரக் கூடிய ஆற்றல் வளம் கொண்ட தேசிய இனங்கள் இருந்து வருகின்றன, இருந்த போதிலும் எண்கணக்கில் அமைந்த நிலையில் சிங்கள தேசத்திடம் முழு நாட்டின் ஆட்சியதிகாரமும் கொலனித்துவாதிகளால் கொடுத்துவிட்டுச் செல்லப்பட்டது. இங்கு தமிழர்கள் சிறுபான்மை என்றும்- தேசிய இனம் என்றும் வரையறுத்துவிட்டுச் செல்கின்றார்கள். இங்கு நாட்டிற்கும் தேசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளார்கள்.

மக்கள் கூட்டத்தில் முற்போக்குவாதிகள், நடுநிலையாளர்கள், பிற்போக்குவாதிகள் என்றிருப்பார்கள். இவர்களுக்குள்ளும் பல்வேறு வர்க்கங்களைக் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் இருப்பார்கள். ”நமது நாட்டில் தொழிலாளர் வர்க்கத்துக்கும் தேசிய பூர்சுவா வர்க்கத்துக்கும் இடையில் நிலவும் முரண்பாடு மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடு வகையைச் சேர்ந்தது.  இவை இரண்டுக்கும்  இடையில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் பொதுவாக மக்கள் மத்தியில் நிகழும் வர்க்கப் போராட்டமே. இதற்குக் காரணம் சீன தேசிய பூர்சுவா வர்க்கம் ஒரு இரட்டைத் தன்மையை உடையது. பூர்சுவா- சனநாயகப் புரட்சிக் காலகட்டத்தில், அது ஒரு புறம் புரட்சிகர இயல்பு உடையதாகவும் மறுபுறம் சமரச இயல்புடையதாகவும் இருந்தது. சோசலிசப் புரட்சிக் காலகட்டத்தில், அதற்கு ஒரு புறம், லாபத்துக்காகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் இயல்பும், மறுபுறம், அரசியல் சட்டத்தை ஆதரித்து சோசலிச மாற்றத்தை ஏற்கும் இயல்பும் இருக்கின்றன. தேசிய பூர்சுவா வர்க்கமும், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவ வர்க்கம், அதிகார முதலாளித்துவ வர்க்கம் ஆகியவையும் ஒரே தன்மையானவை அல்ல. தொழிலாளர் வர்க்கத்துக்கும் தேசிய பூர்சுவா வர்க்கத்துக்கும் இடையிலுள்ள முரண்பாடு சுரண்டுவதற்கும் சுரண்டப்படுவதற்கும் இடையிலுள்ள ஒரு முரண்பாடு.  அது இயல்பில் பகை உடையது. ஆனால் சீனாவின் ஸ்தூலமான நிலைமைகளில், இந்தப் பகையுடைய வர்க்க முரண்பாடு சரியான முறையில்  கையாளப்பட்டால், பகையற்ற முரண்பாடாக மாற்றப்பட்டு, சமாதான முறைகளில் தீர்க்கப்பட முடியும். இருந்தும், இதைச் சரியான முறையில் கையாளாமல், தேசிய பூர்சுவா வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு, அதை விமர்சனம், செய்து, அதற்குப் போதனையளிக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்காவிட்டால், அல்லது தேசிய பூர்சுவா வர்க்கம் நமது இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அம்முரண்பாடு எதிரிக்கும் நமக்கும் இடையிலுள்ள முரண்படாக மாறிவிடும். (மாவோ மேற்கோள்கள் ப.82-83) இங்கு சொல்ல வரும் விடயம் என்னவெனில் நடுநிலை, முற்போக்காளர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்தப் பகுப்பாய்வில் இருந்து புரிந்து கொள்ள முடியும். சமூக உறுப்பினர்கள் வெவ்வேறு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற போது சாதியைக் கடந்தே சிந்திப்பார்கள். சாதிய அடையாளத்தை முன்னிறுத்தும் அமைப்புகள் எந்தக் காலத்திலும் தன் சமூகத்திற்கு  நேர்மையாக இருந்து விடுவர் என்பதில்லை. ஏனெனில் அந்த வர்க்கத்தின் போக்கு அவ்வாறு தான் இருக்கும். ஒடுக்கும்சாதியை, ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்த பிற்போக்காளர்கள், சந்தர்ப்பவாதிகள் இருப்பார்கள். அவர்களை சாதிய அடிப்படையில் அணுக முடியாது. 

சலுகை அரசியலை இலங்கையில் புகுத்த முனைபவர்கள் சமூக அமைப்பை  உள்வாங்கவில்லை. ஏற்கனவே தமிழ்த்தேசம் தனக்கான ஆட்சியதிகாரத்திற்காக போராடுகின்றது.  தேசிய இனத்துவ அடையாளத்தை  முன்னிறுத்துகின்ற பௌத்த - பேரினவாத சிந்தனையில் தன்னை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் அரசமைப்பு யாருக்கும் உரிமை கொடுக்கப்போவதில்லை.

 இலங்கையில் தன்னியல்பு (அடையாள) அரசியல் முன்னெடுக்கும் சக்திகள் தமிழ் பேசும் இஸ்லாமிய, மலையக அரசியல்வாதிகளிடம் இருக்கின்றது. இவர்களுடன் தற்பொழுது தன்னியல்பு (அடையாள) அரசியலை மேற்கொள்ள முள்ளிவாய்க்காலின் பின்னர் வேகமாக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள். இவர்கள் தமிழ் தேச (nation) அடையாளத்தை அழிக்கும் நிலைப்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இந்தச் சக்திகள் அபிவிருத்தியுடன் (சலுகை - உரிமை) அரசியல் உரிமையை ஒப்பிடுகின்றார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற ஜனநாயக உரிமையை மிக மலிந்த நிலைக்கு  இன்றைய அரசியல்வாதிகளை இட்டுச் செல்கின்றனர். தலித்தியவாதிகள் அடையாள அரசியலை மேற்கொள்ளும் அல்லது தலைமை தாங்கும் அரசியல்வாதிகளின் நலன் வேண்டுமென்றால் பூர்த்தி செய்யப்படும். ஒடுக்கப்பட்டவர்களில் உள்ள உழைக்கும் வர்க்கத்தவர்கள் மீளவும் அடக்கியொடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

“சோசலிஸ்டுகளின் இன்னொரு தத்துவார்த்த அரசியல் தவறு என்னவென்றால், தொல்பழமைக் காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறு முதலில் தோன்றி காலம் முதலே, ஓர் ஆளும் வர்க்கம் இன்னொன்றால் மாற்றீடு செய்யப்பட்டு முறையில், இந்த பல நூற்றாண்டுகளில் அதன் வடிவங்கள் தவிர்க்க முடியாத வகையில் மாற்றமடைந்தன என்பதை என்பதை

அவர்கள் புரிந்து கொள்ளத் தவறியதேயாகும்.“ (178-லெ9)  சமூக வளர்ச்சிப் போக்கினை உள்வாங்க வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகின்றார்.  ஒரு மரத்தை வைத்தால் உடனே பலன் கிடைக்கப் போதில்லை. அதற்கான காலம் வரும் வரையில் பொறுத்திருக்க வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாமல் ஈழப் போராட்டத்தை தவறாக மதிப்பீடு செய்யப்படுகின்றது.

இலங்கையில் தேசிய இனப் போராட்டம் என்பது உழைக்கும் மக்களைப் பிரிப்பதாக வரையறுப்பவர்களும் உண்டு. ஆனால் நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து  அடுத்த கட்டத்திற்கு நகர்வதும், தேசிய ஒடுக்குமுறையில் இருந்து தன்னை மீட்பது மாத்திரம் அல்ல ஒடுக்கும் தேசத்தின்  உழைப்பாளிகளின் விடுதலைக்கு உதவுவதும், தன்னை ஏகாதிபத்திய நுகர்தடியில்   இருந்து விடுவிப்பததையும் நோக்காகக் கொண்டது. கருத்துமுதல்வாதம் என்ற வர்ணாசிரச் சிந்தனை என்பதும் தேசியமும் ஒன்றல்ல. சலுகை அரசியலை இலங்கையில் புகுத்த முனைபவர்கள் சமூக அமைப்பை உள்வாங்கவில்லை. ஏற்கனவே தமிழ்த்தேசம் தனக்கான ஆட்சியதிகாரத்திற்காக போராடுகின்றது.  தேசிய இனத்துவ அடையாளத்தை  முன்னிறுத்துகின்ற பௌத்த - பேரினவாத சிந்தனையில் தன்மை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் அரசமைப்பு யாருக்கும் உரிமை கொடுக்கப்போவதில்லை.

திருத்தம் 18.11.23

2 comments:

  1. எந்தவித வேலைவெட்டிக்கும் போகாம, மக்களை அணிதிரட்ட மக்களை சந்திக்காம , பக்கம் பக்கமாக எழுதியே பழக்கப்பட்ட நபரின் வெற்று பொலம்பல் வாந்தி தான் இது.

    ReplyDelete
  2. அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாவிடின் இவ்வாறு தான் தனிப்பட்ட ரீதியாக எதையும் எழுதுவது.

    ReplyDelete