ஆக்கிரமிப்பும் அடையாள மாற்றமும்
தமிழ் தேசத்தின் ஆட்சியதிகாரம், இருப்பு ஏற்றுக் கொள்ளாத போக்கு இருந்து கொண்டிருக்கின்றது. ஆட்சியதிகாரத்தைக் கொண்ட சக்திகள், இணக்க அரசியல், அடையாள அரசியல் செய்யும் சக்திகளாக இருக்கின்றன. ஆட்சியதிகாரம் கொண்ட சக்திகள் அரசின் முதலீட்டுடன் செயற்படுத்தும், ஆட்சியதிகாரம் அற்ற சக்திகள் அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கை கொண்டதாக இருக்கின்றது. அதிகாரமற்ற பிரிவின் செயற்பாடு உள்முரண்பாடுகளை அதிகரிப்பதாகவும் இருக்கின்றது. இந்த அடிப்படையில் கடந்த 11 வருட காலத்தை அனுகிட வேண்டும்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைந்திருந்த ஆதி ஐயனார் ஆலய சூலம் பிடுங்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டு , தொல்பொருள் ஆய்வுப்பணிகள் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
22.01.2021 அன்று வெடுக்கிநாறிமலை ஆதிலிங்கேஷ்வர ஆலயத்தின் நிர்வாகத்தினரான TJ Thamil ஆலய பூசகர், சசிகுமார் ஆகியோர் தொல்லியல் சின்னங்களுக்கு சிதைவை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
30.01.21 அன்று தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்க இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரை அமைக்க எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டடம் அமைக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அடிக்கல் நாட்டப்பட்டது.
வரலாற்றுப் போக்கை புரிந்து எதிர்க் கருத்துருவாக்கம் செய்யக் கூடிய ( என் அறிவிற்கு உட்பட்ட வகையில்) ஆய்வாளர் அமரர் தங்கேஸ்வரி என்பரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அமரர் தங்கேஸ்வரிக்கு முன்னரோ, பின்னரோ வரலாற்றை கற்றுக் கொண்டவர்கள் அரசியல் பரப்பில் இல்லை.
வரலாற்று ஆசிரியர் சி.கா. சிற்றம்பலம் போன்றவர்கள் சுமந்திரன் போன்ற வெற்றுத் தோட்டாக்களால் ஒதுக்கப்பட்டார்கள். ஒடுக்கப்படும் தேசத்திற்காக குரல் கொடுப்பதற்கு சட்டம் படித்தால் போதாது. அரசியல், சமூக பொருளாதார, வரலாற்றுப் போக்கை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
நீதியரசர் விக்கினேஸ்வரன் வரலாறு பற்றிப் பேசுகின்ற போது சிங்கள தேசத்தவர்கள் பதறுவதை விட தமிழ் ஜீவகாரூண்யவாதிகள் பதட்டமுறுவார்கள். இவைகள் கடந்த வருடங்களில் சுமந்திரன் என்ற ரணிலின் சிறந்த அடிமையின் செயற்பாட்டை அறிந்துள்ளோம்.
தமிழர் மரபை அறியாத மக்கள் கூட்டம் உள்ளது. பௌத்த அடையாளங்களை எதிர்க் கொள்ள வரலாறு அவசியம். தமிழ் சமூகம் தம் வரலாறு தெரியாமலே வளர்க்கப்பட்டிருக்கின்றது. சனாதன (சாதியபடிமுறை) மயப்பட்ட கடவுள்கள், வழிபாட்டிற்கு மாறுபாடு தெரியாத நிலையை தான் எம்சமூகத்தில் உள்ளது. இது ஒரு அறிவுத்தேடலுக்கான அஞ்சலோட்டம்.
1. தென் ஈழம்
தென் ஈழத்தில் சமூக முறுகல் என்பது பன்முகம் கொண்டதாக இருக்கின்றது. மதச் சிறுபான்மையினரான முஸ்லீம்கள், பழக்குடிகள், தமிழ் தேசிய இனத்தினுள் ஐக்கியமான பழக்குடிப் பின்புலம் கொண்டவர்கள், தமிழ், சிங்கள மக்களைக் கொண்டதாக இருக்கின்றது. இந்தப் பகுதியை தமிழர்களின் இணைந்த தாயகப்பகுதியாக இல்லாது சிதைப்பதில் முதலிடம் பெரும் பகுதியாகும். வடக்கு கிழக்குத் தாயகம் பெருந்தேசியவாதிகளால் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முறுகு நிலை அதிகரித்தே வந்துள்ளது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு, அடையாளமாற்றம் பற்றிய ஒரு மொத்தத்துவ பார்வையை கொடுக்க முயற்சிக்கப்படுகின்றது.
கல்லோயா திட்டத்துடன் தொடங்கியது, பின்னர் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது. சேருவலைத் தொகுதி தனியாக பிரித்து எடுத்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை தமிழ் அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. அவர்களுக்கு அன்று முல்லைத்தீவு தனிமாவட்டமாக வரும் போது இன்னொரு தொகுதி கிடைக்கும் என்று நம்பினார்ளேயன்றி. தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்படுகின்ற என்ற புரிதல் அறவேயில்லை. இவ்வாறாக தீர்க்கதரிசனம் அற்ற பூர்சுவாத் தலைமைகளைக் கொண்டதாக தமிழ் அரசியல் சமூகம் இருந்து வருகின்றது.
தோப்பூர், கணோசபுரம், சாலையூர், சந்தோசபுரம், இளக்கந்தை, பாட்டாளிபுரம் வீரமாநகர், மலைமுந்தல், நீனாக்கேணி, நல்லூர், உப்பூறல், சந்தனவெட்டை, சீனன்வெளி மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம், வாகரை, கிளிவெட்டி
அதியமான் கேணி, அகஸ்தியர் ஸ்தாபனம், மல்லிகைத் தீவு, மணச்சேனை, சிவபுரம், மேம்காமம் போன்ற பகுதிகளின் நிலையை அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக தேர்தல் காலங்களில் மாத்திரம் அந்த மக்களிடம் சென்று வாக்குப் பெறுவதற்காக போவார்கள். இந்தப் பகுதி மக்கள் பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்கின்றார்கள்.
இலங்கைத் துறைமுகப் பட்டினம், திருமலை பச்சணூர், கின்னியா வெண்ணீர் ஊற்று என பல இடங்கள் ஏற்கனவே சிங்கள பௌத்த அடையாள மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. சேருவலைப் பகுதியில் உள்ள அகஸ்திக ஸ்தாபனம் போன்ற தொன்மையாக இடங்களை ஏற்கனவே காட்டு இலாகாக தன்வசப்படுத்தி வைத்திருக்கின்றது. அந்தப் பகுதியில் உள்ள 150- 200 ஏக்கர் இவ்வாறு பறிபோயுள்ளது. இவை அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு செல்லும் வழியில் உள்ள இடத்தில் இருந்து ஆற்று மணல் அள்ளப்படுகின்றது. இதன் பின்னால் உள்ள மண்மாபியாக்கள் பற்றி எவையும் அரசியல்வாதிகள் கவனத்திற்கு வரவில்லை.
நீலாப்பளை பத்தினி அம்மன் கோவில் அண்டிய பகுதியானது சிங்கள குடியேற்றத்திற்கு உட்பட்டுள்ளது. நிலப்பகுதியின் குடியேற்றம் மக்களின் குடிப்பரம்பலை மாற்றுகின்றது. யுத்த காலத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து செய்த அடாவடித்தனங்கள் கண்டவர்கள். தாம் இரண்டாம் தரக் குடிகளாகவே அந்தப் பகுதி மக்கள் உணர்கின்றனர்.
இந்தப் பகுதியில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு சமூக முரண்பாடுகளை உருவாக்கத் துணைநிற்கின்றது என்பதை களஅனுபவத்தையும் இணைக்கப்படுகின்றது. இது தமிழ் அரசியல்வாதிகள் கவனத்திற்கு செல்லும் என நம்புவோம்.
2.
கிழக்கில் திருகோணமலை 1900 இருந்த சிங்கள மக்களின் தொகை என்பது இன்று சுமார் 33 வீதமாக இருக்கின்றது. 1977 பின்னர் வேகமாக சிங்கள குடியேற்றம் நடைபெற்ற இடமாக அம்பாறைக்குப் பிறகு இப்பகுதிய ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும், தமிழ் தேசிய இனத்துடன் ஒன்று கலந்த பழங்குடிச் சமூகம், தனித்துவத்தை பேணுகின்ற பழங்குடிகள் எனப்பட்ட பிரிவுகள் உள்ளன.
தென்னமரவாவடியில் கரைவலை இழுக்கும் போது உழவு இயந்திரம் பாவிப்பது அனுமதிக்கப்படுகின்றது. இதுவே தமிழர்கள் செய்திருந்தால் சட்டம் பாயும். இதே போல கிண்ணியாவில் வெடி போட்டு மீன்பிடிப்பது என்பன சமூகத்தின் பிரச்சனையே. முல்லைத்தீவில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு. உழைப்பாளிகள் தானே அவர்கள் எங்கும் சென்றும் உழைக்க முடியும் என்பது நியாயமானதே. ஆனால் ஆட்சியதிகார கட்டமைப்பை கொண்டவர்களின் அதிகாரம் செலுத்துவது பற்றியதே.
முதலாளித்துவ தாராளவாத சந்தையின் வழிகாட்டலை வைத்துக் கொண்டு கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது.
2.2 மூதூரில் நிலப்பிரச்சனை
மூதூரில் நிலமென்பது திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இதில் நிலம் உட்பட மதமாற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றது.
அதில் வடக்கே நோக்கிய பார்வையில் (புல்மோட்டை, இறவக்கண்டி, குச்சைவெளி, திரியாய், தென்னமரவாடி போன்ற பாராம்பரிய நிலங்களில்
விலைக்கு வாங்கும் முறையிலும்,
குத்தகை முறை, தொழில்வாய்ப்பு (உப்பளம்)
மீள் குடியேற்றம்
குடியேற்றம் என்ற போர்வையிலும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு நோக்கிய பார்வையில் திருமலையில் இருந்து கிண்ணியா, உப்பாறு, கெங்கத்துறை, இரால்குழி, 64, பச்சைநூர், பாலதோப்பூர், வட்டம், அறபா நகர் (இது இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே பெயரில் உள்ளது) நகர்,தேவத்தீவு, ஒட்டு (தமது காணியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையில் எப்பொழுதும் காட்டுப் பகுதியாக இருந்து வந்துள்ளது)
தமிழ் தேசிய இனத்துடன் கலந்துவிட்ட பழங்குடிகளின் இடத்தில் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்கள் பின்வருமாறு
அறபா நகர் - சாய நகர், -பிடித்து உருவாக்கப்பட்ட கிராமம்
உள்ளக்குளம், நல்லூர் பகுதியில் சில பகுதிகள், உப்புரலில் சிலபகுதிகள் பிடித்து கிராமாக்கி குடியேறியுள்ளார்கள். அங்கு இரண்டு பள்ளிவாசலையும் கட்டியுள்ளனர். அண்மையில் அந்தப் பகுதியில் உள்ள மக்களை அடித்து துன்புறுத்தியும், மண்வெட்டியால் வெட்டியும் உள்ளார்கள். இதில் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி பிள்ளைகளுக்கும் தாங்கியுள்ளனர், அந்தப் பகுதியில் இருந்த பாலர் பாடசாலையை ஆக்கிரமிக்க முற்பட்ட வேளையில் அதனை எதிர்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. (உப்புரல்கிராமத்தில்) இந்தப் பகுதியில் முந்திரிகைத் தோட்டம், தென்னைத் தோட்டம், ஆடுமாடுகளையும் அந்த நிலங்களில் விவசாயகம் செய்து கொண்டும் உள்ளார்கள். இதற்கு அங்குள்ள அரச அதிகாரிகள், தமக்குச் சாதகமான கிராமசபை, உதவி அரச அதிபர், பொலீஸ் அதிகாரிகளை அந்த இடத்தில் அதிகாரத்தில் இருந்தியே தமக்குச் சாதகமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.
1200 ஏக்கர் வயல் காணிகளை தமது பெயருக்கு மாற்றியுள்ளார்கள். இவைகள் அனைத்தும் மோசடியின் ஊடாகவே மாற்றப்பட்டுள்ளது. (நல்லூருக்கும் - பாட்டாளி புரத்திற்கும் தோப்பூர் (முக்கோண வடிவத்தில் அமைந்த இடப்பகுதி) இடைப்பட்ட பகுதியில் அபகரித்துள்ளார், (உள்ளக்குளம்) - டிஎஸ் செனநாயகக்க காலத்தில் வேட்டைக்கு போகதா காலத்தில் விவசாயம் செய்து பிழைப்பதற்கு குளத்தை வெட்டி சீரமைத்துக் கொடுத்ததே இந்தக் காணியாகும். இவைகள் இன்று பழங்குடிகளிடம் இருந்து பறிபோய் உள்ளது.
2.3 இராணுவத்தின் ஆக்கிரமிப்பு
பழங்குடிகளின் சொந்த ஊர்களில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பும் உள்ளது.
இழக்கந்த, பாட்டாளி புரம், நல்லூர், உப்புரல், சீனன்வெளி போன்ற இடங்களில் கடற்படை முகாம்கள் உள்ளது. இதே நேரத்தில் இவர்களின் முக்கியமான பழம்பெரும் கோவில்களான முகத்துவாரம் பெரியசாமி கோவில், கல்லடி ஈலிஅம்மன் அழிக்கப்பட்டு பெரிய புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது. முகத்துவாரத்தில் உள்ள பெரியசாமி கோவில் திருமலையில் பெரிய பௌத்த விகாரை கட்டியும் இந்த இடத்தின் பெயரை லங்கா பட்டினம் என்றும் பெயர் மாற்றியுள்ளார்கள்.
பெரியசாமி கோவில் என்பது மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டதாகும். முழுமையான கிராமத்து மக்களை அகற்றி அதனை புனித பூமியாக்கியுள்ளனர்,
அ) லங்கா பட்டினவாக மாற்றப்பட்டுள்ள தமிழ் பிரதேச- வழிபாட்டுத் தலம்
குஞ்சுமாப்பா கோவில் இன்று பௌத்த விகாரை அமைக்கப்பட்டு பௌத்த யாத்திரிகைத் தலமாக மாற்றப்படுகின்றது. இந்தப் பகுதிக்கு வந்து போவதற்கு உரியவகையில் பாலம் அமைக்கப்படுகின்றது. அதனை சுற்றிய இராணுவ முகாம், பொதுமக்களின் காணியில் காவல் துறையும் பாதுகாப்புக்கு உள்ளது. இந்தப் பகுதி ஒரு குடியேற்றத்திற்கான முன்னேற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்படை முகாமில் உள்ள படையினர் கடல்தொழிலாளர்களை கடற்கரையில் குடியிருக்க அனுமதிப்பதில்லை.
குஞ்சுமாப்பா கோவில் இருக்கும் இடம் சீனம்வெளி என்று அழைக்கப்பட்டது. இது இலங்கைத் துறைமுகம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. கதிர்காமத்திற்குச் செல்லும் பழக்குடிகள் இந்த கோவிலுக்கும் பின்னர் வெருகல் கோவிலுக்கும் தரித்தே செல்வார்கள். குஞ்சுமாப்பா என்ற பாதுகாப்பு வைரவர் பழங்குடிகளுக்குச் சொந்தமான கோவிலாகும்.
குலதெய்வம் எங்கும் வைத்து வழிபட முடியும் ஆனால் பத்திரக்காளியை துடக்கு காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருக்க முடியாது என்ற ஐதீகமும் உண்டு.
இந்த வழிபாட்டு முறையாக தேங்காய் உடைத்தல், சாம்பிரானி, கற்பூரம் ஏற்றுவது, காத்தவராயனுக்கு (எல்லைத் தெய்வம்) கோழியை கழுவேற்றல்.
வேப்பம் இலை, தென்னம் குருத்துக் கட்டி பூசாரி (shaman) முன்னோர்களுடன் உரையாடும் மந்திரம் உச்சரிப்பார்.
ஆ)மூதூரில் இருந்து இலங்கைத் துறைமுகப் பட்டணம் வரை
மூதூரில் இருந்து இலங்கைத் துறைமுகப் பட்டணம் வரையில் இருக்கும் கடலை அண்டிய பகுதியில் பல இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த முகாம்கள் இருக்கும் இடங்கள் முன்னர் பொதுமக்களுக்குச் சொந்தமானதாகும். அந்த நிலப்பரப்பு கடலில் இருந்து 100 மீற்றர் வரையிலேயே இருந்துள்ளது. அந்த நிலத்தில் நன்னீர் கிடைக்கின்ற வசதியும் உண்டு. இன்று குடியேறியிருக்கும் பகுதி நன்னீருக்கு தட்டுபாடு உள்ளது. அந்த மக்கள் நன்னீருக்கு சிரமப்பட்டுக் கொண்ட இருக்கி்ன்றார்கள்.
இராணுவமுகாம் இருக்கும் நிலப்பகுதி கமத்தொழில் செய்வதற்குரிய நிலத்தைக் கொண்டவர்களும் உள்ளார்கள். கடல்தொழில் செய்கின்ற வேளையில் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
இன்று இவர்கள் பயர்செய்கை மறுக்கப்பட்டு வரண்ட பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளார்கள். அதிலும் சுமார் 1-2 கிலோமீற்றர் கடலில் இருந்து தொலைவில் குடியேற்றப்பட்டுள்ளார்கள். கடல்தொழில் செய்பவர்களுக்கு அடிப்படையானது கடலுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் உரிமையாகும்.
இவர்கள் புதிதாக குடியேற்றப்பட்ட இடத்திற்கு பழைய குடியிருப்புப் பெயரையே சூட்டியுள்ளார்கள். உதாரணத்திற்கு மலர்முந்தல் என்ற கிராமத்தில் பெயர்.
இதில் ஒரு சுவாரசியமானது என்னவெனில் சிந்துவெளிப் பெயர்களை ஆராந்த ஆய்வாளர் பாலக்கிருஸ்ணன் மக்கள் இடம் பெயரும் போது தமது பழைய இடத்தின் பெயரை சூட்டிக் கொள்வதை வழமையாகக் கொண்டுள்ளார்கள் என.
3.மதமாற்றம்-
மதமாற்றம் என்பது சமூகத்தின் உள்ளேயே பல மோதல்கள், கசப்புணர்வுகள் என்பன ஏற்படுத்தப்படுகின்றன. மதமாற்றம் என்பது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக சமூகத்தின் அடையாளத்தை சிதைப்பதை நோக்காக இருக்கின்றது. இவ்வகையான மதமாற்றம் என்பது நிறுத்தப்பட வேண்டும்.
4.1மட்டக்களப்பு-
ஓட்டமாடியில் இருந்து வாகரையில் நோக்கிய ஆக்கிரமிப்பு நகர்வுகள் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியாகும். இதுவும் அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தமிழ் மக்களின் வாழ்க்கை முறையைப் பாதித்துள்ளது. அவர்களின் பயிர் செய்கை, மதமாற்றம், ஆடுமாடு வளர்ப்பு போன்ற விடயங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வழமையாக சேனப்பயிர் செய்கைக்கு உட்பட்டே இருந்து வந்துள்ளது. இங்கு தரிசு நிலங்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்புச் செய்யப்படுகின்றது.
ஆரம்யப்பதி போன்ற பகுதிகளிலும் திட்டமிட்டு எல்லைக் கிராமங்கள் தமிழ் மக்கள் மீது அன்றாடம் நச்சரிப்புக்கள், தொல்லைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு நச்சரிப்புக்களும், தொல்லைகளும் கொடுத்து அந்த இடத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவது நடைபெற்று வருகின்றது.
அன்றாடம் அயலவர்களுடன் சண்டை என்பது அந்த மக்களை விரக்திக்கு உள்ளாக்கின்றது. இது அன்றாடம் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பினும் நச்சரிப்பும், மிரட்டலை தாங்க முடியாது அகன்று செல்கின்றார்கள்.
(2017 சிலவாரங்கள் திருமலையில் தங்கியிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.)
4.2
-மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகோதரர் நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் இன்று சுடப்பட்டுள்ளார். (2017)
-குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு அதிகாரி.
-எத்தனையோ அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். தொடர்ந்தும் நிற்பவர்.
-நிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். (Janathan Alfred)
-மறுபடியும் தமிழ் எல்லைக்கிராமம் ஒன்றில் காணி அபகரிப்பு. ஏற்கனவே ஆட்சி உறுதியுடன் ஒருவர் இருக்க வேறு ஒரு சகோதர சமுகத்தவர் புதிய ஆட்சி உறுதியுடன் வருகின்றார்....
"எப்படி இந்த ஆட்சி உறுதி வந்தது.?"
வினா எழுந்ததும்., பிரதிவாதியின்
கை கிராம சேவகரை சுட்டியது...
கி.சேவகரோ, காணி அலுவலரை சுட்ட, அவர் பிரதேச செயலாளரை சுட்ட
இறுதியில் அரசாங்க அதிபரிடம் வந்து நிற்கின்றது...
சம்மந்தப்பட்ட அனைவரையும் மாவட்டத்தை விட்டே தூக்கனும்னு வீரவசனம் பேசி மூக்குடையிரத விட..... (Janathan Alfred என்ற மூகநூல் நண்பரின் குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
கிராமசபை உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர், திணைக்களங்களின் உதவியுடன் ஏற்படும் பிரச்சனைகளை அரசியல்வாதிகள் பார்வைக்கு வருவதில்லை. இணக்க அரசியல் - அடையாள அரசியல் செய்யும் போக்கு செலுத்தும் அதிகார துஸ்பிரயோகம் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்ட வருகின்றது. மேல் குறிப்பட்ட விடயங்களை மூதூர் பகுதியில் அறிய முடிந்தது. பதவி, சமூக இருப்பு, பணம், சந்தஸ்து போன்றவற்றை கொண்ட அதிகார வர்க்கத்தின் போக்காகும்.
காட்டு இலாகாத் திணைக்களம் என்பது தன்னிச்சையாக முடிவெடுப்பதில்ல. முன்னர் சேனைப் பயிர் செய்கை செய்தவர்கள், ஆடு, மாடு மேய்க்கும் நிலங்களுக்கான முரண்பாடுகள் தேசிய இனச் சிக்கலில் இருந்து அணுகிட வேண்டும் வளத்தினை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகின்ற பிரச்சனை சமூகத்தில் எப்பவும் நீறுபூர்த்த நெருப்பாகவே இருக்கின்றது.
திருமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் நிலப்பிரச்சனை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியுள்ளது. (https://www.ibctamil.com/srilanka/80/158331?ref=imp-news&fbclid=IwAR0XFcuOPd6pObOTlDmO-VS4oiATsFrWkoWaHHM0IREG5m1WS2uJFlSZJZE) இது அண்மையச் செய்தி நிலஅபகரிப்பு ஒருபுறம் என்றால் கால்நடைகளை கொல்வது, களவு எடுப்பது என்ற பிரச்சனை சமூகப் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த நிலையில் புத்த பிக்குகள் தமிழர்கள் சார்பாக களமிறங்குவார்கள். பின்னர் அவர்களே இன்னொரு இடத்தில் விகாரை அமைப்பார்கள். இவ்வாறான போக்கை எதிர்க் கொள்வதற்கான ஒரு பொறிமுறையை தமிழ் சமூகம் உருவாக்கிவிட வில்லை.
5.
தமிழ் மக்களின் தொன்மையான சின்னங்கள் அழிக்கப்பட்டே வருகின்றது. வரலாற்றுச் சின்னங்களை அழிப்பது பெருந்தேசிய இனங்களுக்கு உரிய சகிப்புத் தன்மை இல்லாத போக்காகும். தமிழா- சிங்களமா என்பது கலாசாலை ஆய்வு மட்டத்தில் கூட பல குளறுபடி நடைபெற்றுக் கொண்டே வருகின்றது.
மொழி பற்றிய விடயத்திலும் சிங்கள ஆய்வாளர்களுக்கும் சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி தாவீது அடிகள் போன்றவர்கள் வாதங்கள் நடத்தியுள்ளனர். தனியாக மொழி, தேசிய இனங்களின் பிரிவுகள் உருவாகுவது வரலாறு எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் சில தேசிய இனங்கள் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை தாமும் கடன் வாங்கியே தம்மகப்படுத்துகின்றன.
சிங்கள - பௌத்த - ஆரிய மேலான்மை சிந்தனைக் கட்டமைப்பு பற்றிய பிரச்சனையை மடைமாற்றும் பொருட்டு கருத்துருவாக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள மக்களை கோபப் படுத்தக் கூடாது என்கின்ற சுரேன், சுமந்திரம் நம்மிடையே இருக்கின்றார்கள்.
தேசிய இனப்பிரச்சனை என்பது வெள்ளாளம், யாழ் மையவாதம், மேட்டுக் குடி என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளார்கள்.
இறுதியாக
சமூகப் போக்கில் பல்வேறு நிகழ்வுகள் பரந்து நடைபெறும் அந்த நிகழ்வுகளை ஒருங்கிணைந்து, தொகுத்துக் கொடுப்பது தேவையாக இருக்கின்றது. சமூக போக்குக்கினை அரசியல்வாதிகள் புரிந்து கொள்கின்றார்களா எனத் தெரியவில்லை. தமிழர் தாயகத்தில் எழுகின்ற பிரச்சனைகளை கையாள்வதற்கான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.
சமூகங்களுக்கிடையே உட்பகையை உருவாக்கிக் கொள்ளவது சிங்கள தேசத்திற்கு தேவையானதாகும். அரசியல் ரீதியாக தமிழ் தேசத்தில் உள்ள போக்கை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான புரிதல் அவசியமானதாகும். இன்றையப் அரசியலில் அடையாள, இணக்க, மதவாத அரசியல் போக்கில் இருந்து உள்சமூகத்தில் பிரச்சனைகளை தூண்ட முடியும். அவைகள் வளங்களை பகிர்ந்து கொள்வதில் இருந்தே ஏற்படுகின்றது. சொத்துடமைச் சமூகச் சிந்தனை, சுயநலப் போக்கு, சமயோசிதமாக தப்பித்துக் கொள்வது சமூகப் போக்காகும்.
சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு தமிழர் தாயகப்பகுதிகளில் எவ்வாறான முரண்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்தல் வேண்டும்.
மறுபுறத்தே இனவழிப்பு இல்லை. போர்க்குற்றமே நடைபெற்றுள்ளது என்பதாக கூறிக் கொண்டிருப்பதும் அரசியலாக முன்னெடுக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாத அரசை கட்டமைப்பு அனைத்து விடயங்களிலும் இராணுவத்தின் ஊடாக தனது கட்டமைப்பின் ஊடாக நிர்வகிக்கின்றது. குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் பொருளாதாரம் நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கினறது. இந்த நிலையை சாதகமாகக் கொண்டு பேரினவாதக் கட்டமைப்பை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்பது வாய்ப்பாட்டு வாதமாகும். அரச கட்டமைப்பில் பேரினவாதச் சிந்தனை நிறுவனமயப்பட்டே உள்ளது தான். அரச கட்டமைப்பு பேரினவாதக் கட்டமைப்பே சிந்தனைக்கு உட்பட்டதாகும்.
அன்னியக் கடனை பெற்றுக் கொண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்படும் பற்றாக் குறையை தீர்த்துக் கொள்ளும். அதே வேளை 72களில் முயற்சி செய்யப்பட்ட பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்தி கீழ் நிலை மக்களை திருப்திப்படுத்த முற்படலாம். அது ஒப்பிட்ட ரீதியாக அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை விட குறைந்த நிதியில் செயற்படுத்தி விட முடியும். கிராமப் புற மக்களின் தேவை, நுகர்வு என்பது மட்டுப்பட்ட நிலையில் தான் உள்ளது. கிளர்ச்சி செய்யக் கூடிய மத்தியதர வர்க்கம் போராட்டக் களத்திற்கு வரமாட்டார்கள். கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு புத்த விகாரையும் அது சார்ந்த பொருளுற்பத்தி குறிப்பிட்ட காலத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பௌத்த சிலைகள் தமிழ் தேசமெங்கும் முளைப்பது பெருந்தேசியத்தின் ஆக்கிரமிப்பின் ஒரு அங்கம். தமிழ் தேசங்களில் மற்றைய மத சின்னங்கள் முளைப்பது மதஅடிப்படைவாதம்- மத வெறி- பிற்போக்குச் சிந்தனை வெளிப்பாடு- பகுத்தறிவு அற்ற நிலை-
இந்துத்துவ- இஸ்லாமிய வெறி- கிறிஸ்தவ- அல்லோலூயா வெறி
இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் என்ற போக்கை கொண்டது.
ஆக தமிழ் தேசமெங்கும் பௌத்த சிலை எழுப்புவதும் மற்றைய மத அடையாளங்கள் எழுப்பப்படுவதும் ஒன்றல்ல.
இதேபோல தமிழர்களின் வாழ்வியல் பற்றிய வரலாற்றுப் பார்வை சமூகத்தில் அவலமாக தொடர்கின்றது. தொல்பழங்குடிவாழ்வியலின் பின்னரான ஆசீவக சிந்தனை மரபும், பௌத்த, சமணத்தின் போன்ற சிந்தனை மரபு இருந்திருக்கின்றது. ஆட்சிகளின் மாற்றம் பொருளாதார அமைப்பு மக்களின் வழிபாட்டு முறையை மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. மதங்கள் எவையும் வரலாற்றில் மாற்றத்திற்கு உட்பட்டே வந்துள்ளது.
ஈழம், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பௌத்தத்தினை கிழக்கு ஆசியா எங்கும் பரப்புவதில் முதன்மையானவர்களாக காஞ்சிபுரம் பௌத்த பள்ளிக்கு முக்கிய இடமுண்டு். ஈழத் தமிழ் சமூகம் தமது வரலாற்றை கற்க முயற்சி எடுக்க வேண்டும். சனாதன- (சாதிய) பிராமண வேதங்களை முன்னிறுத்தி அடையாளத்தை மாற்றும் அரசியலில் வீழ்ந்துள்ளார்கள். தொல்பழங்குடி வழிபாட்டு எச்சங்களை ஒழிக்கும் சிவசேனையின் (இந்துத்துவா நிகழ்ச்சி நிரல்) பின்னால் செல்கின்றார்கள். மாறாக தமிழ் சமூகத்தின் வரலாற்றை அறிதல் வெண்டும். மதச் சிந்தனையை முன்னிறுத்திய சமூகக் கட்டமைப்பில் தான் வாழ்ந்து கொண்டிருக்கி்ன்றோம். மதம் என்பதை அரசியலுள் நுழையவிடக் கூடாது. அரசியல் என்பது தனிமனிதர்களின் உரிமை சார்ந்தது.
இங்கு தமிழ் தேசிய இனத்தின் மீதான அழிப்பினை தடுப்பது அவ்வளவு இலகுவான போராட்டமில்லை.
பிகு. நிறைய ஆய்வுத் தரவுகள் தேவையானது. இது முற்றானது அல்ல.
https://noolaham.net/project/55/5467/5467.pdf 5ம் பக்கத்தில் தமிழர்களின் தலைநகர் வெறும் கனவா என்ற கட்டுரையை வாசிக்கவும்.

No comments:
Post a Comment