
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்
மூன்று உள்ளடக்கக் கூறுகளும் -
Vladimir Ilyich Lenin
மார்க்சின்
போதனை, நாகரிக உலகெங்கிலும் அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு
வகையான பூர்க்ஷுவா விஞ்ஞானம் அனைத்திட மிருந்தும் அளவற்ற பகைமையையும்
வெறுப்பையும் கிளப்பி விடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான “நச்சுத் தன்மை
கொண்ட குறுங்குழுவாதம்” ஆகுமென அவை கருதுகின்றன. அவற்றிடமிருந்து வேறு
எந்தவிதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப்
போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் ”பாரபட்சமற்ற”
சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த
விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும், ஏதாவதொரு விதத்தில்
கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை
ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக்
கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா
என்ற பிரச்சனையில் முதலாளிகள் பாரபட்சமற்றவர்களாய் இருப்பார்களென
எதிர்பார்ப்பது எவ்வளவு அசட்டுத்தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித் தான்
கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் பாரபட்சமற்றதாக இருக்குமென
எதிர்பார்பது அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.
அது
மட்டுமல்ல. தத்துவவியலின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும்
சரி, மார்க்சியத்தில் “குறுங்குழுவாதம்” போன்றதெதுவும் கிடையாது என்பதைத்
தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப் போன வரட்டுத்
தத்துவமல்ல; உலக நாகரிக வளர்ச்சியினது ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று
விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச்
சிந்தனையாளர்கள் ஏற்கனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள்
தந்தார் என்பதில்தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது.
தத்துவவியல், அரசியல் பொருளாதாரம், சோக்ஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த
பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத்தான்
மார்க்சின் போதனை எழுந்தது.
மார்க்சின்
போதனை மெய்யானது, பிழையற்றது; அதனால் தான் அது சர்வவல்லமைப்
பெற்றிருக்கிறது, அது பரிபூரணமான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஒரு
சர்வாங்கமான உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த
வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ
ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது.
ஜெர்மானியத் தத்துவவியல், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரஞ்சு
சோக்ஷலிசம் என்ற வடிவத்தில் 19 ம் நூற்றாண்டில் மனிதகுலம் சிருக்ஷ்டித்த
தலைசிறந்த சிருக்ஷ்டிகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.
இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றை சுருக்கமாக கவனிப்போம்.
1
பொருள்முதல்வாதம்தான்
(materialism) மார்க்சியத்தின் தத்துவவியலாகும். பொருள்முதல்வாதம்
ஒன்றுதான் முரணற்ற தத்துவவியலாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப்
போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும்
பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப் பகையாகும் என்பது ஐரோப்பாவின்
நவீனகால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்தியகாலக்
குப்பைக்கூளங்களையும் நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த
பிரபுத்துவத்தையும் எதிர்த்து நடைபெற்ற முடிவான கடும் போரின் களனாயிருந்த
பிரஞ்சு நாட்டில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக நிரூபணமாகியது.
ஆகவே பொருள்முதல்வாதத்தை “மறுப்பதற்கும்” பலவீனப்படுத்துவதற்கும்,
பழிப்பதற்கும் ஜனநாயக வைரிகள் முழுமூச்சாக முயன்று பார்த்தார்கள்.
தத்துவவியல் கருத்துமுதல்வாதத்தின் (idealism) பல வகைப்பட்ட வடிவங்களை
இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைப்பட்ட கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில்
எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோ செய்கிறது.
மார்க்சும்
எங்கெல்சும் தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு
ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும்
ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி
வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் பாயர்பாக், டூரிங்குக்கு மறுப்பு1 என்ற
நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள், மிகத் தெளிவாகவும் முழுமையாகவும்
விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக்கு அறிக்கை என்ற நூலைப் போலவே
இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளருக்கும்
அவசியமான கைப்புத்தகங்களாகும்.
18ம்
நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்கஸ் நின்றுவிடவில்லை. அவர்
தத்துவவியலை முன்னேறச் செய்தார். முதுபெரும் ஜெர்மன் தத்துவவியல் திரட்டிய
செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவமுறை – இதிலிருந்தே
பாயர்பாகின் பொருள்முதல்வாதம் தோன்றியது.- திரட்டிய செல்வங்களைக் கொண்டு,
அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்த செல்வங்களில் பிரதானமாக
விளக்குவது இயக்கவியல்தான்
(dialecties). இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான,
ஒருதலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும்
போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப்
பிரதிப;லித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும்
போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது
– இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புக்களெல்லாம்
மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்பதை வியக்கத்தக்க
முறையில் ஊர்ஜிதம் செய்துள்ளன. அழுகிப் போன பழைய கருத்துமுதல்வாதத்தைப்
பற்றிய “புதிய” மறுவியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவ
தத்துவவியலாளர்கள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.
தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்துப் பூர்ணமாக்கினார். இயற்கை பற்றிய அதன் ஞானத்தை மனித சமுதாயம் பற்றிய ஞானமாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறை பொருள்முதல்வாதம் விஞ்ஞானச்
சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன் பெல்லாம்
வரலாற்றைப் பற்றிய கருத்துக்களிலும் அரசியலைப் பற்றிய கருத்துக்களிலும்
குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய்,
ஒருமித்த முழுமையும், உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்து
விட்டது. வரலாற்றுத்துறை பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம்
காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய
அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்புமுறை
எப்படி வளர்கிறது என்பதை – உதாரணமாக, நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு
முறையிலிருந்து முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை –
அது காட்டுகிறது.
இயற்கை
என்பது – அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது –
மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு
பிரதிபலிக்கிறது. அதே போலத்தான் மனித சமுதாய அறிவு
எனப்படுவதும் (அதாவது தத்துவவியல், மதம். அரசியல் முதலானவை சம்பந்தமாக
மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப்
பிரதிபலிக்கிறது. அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொருளாதார
அஸ்திவாரத்தின் மீது நிறுவப்பட்ட மேல்கட்டுமானமேயாகும். உதாரணமாக நவீன
ஐரேப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி
வர்க்கத்தின்மேல் முதலாளித்துவ வர்க்கம் செலுத்திவரும் ஆதிக்கத்தைப்
பலப்படுத்தப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.
மார்க்சின்
தத்துவவியல் பூரணத்துவம் பெற்ற தத்துவவியல் பொருள்முதல் வாதமாகும். இந்த
பொருள்முதல்வாதம் மனிதகுலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு,
மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
2
பொருளாதார
அமைப்புமுறை என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம்
கட்டப்படுகிறது என்று தெளிந்து ஏற்றுக்கொண்டவுடன், மார்க்ஸ் தனது
பெரும்பாலான கவனத்தை இந்த பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார்.
மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய – அதாவது முதலாளித்துவ –
சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.
மார்க்சுக்கு
முற்பட்டதான முதுபெரும் அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகள்
எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம்
ஸ்மித்தும் டேவிட் ரிகார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து உழைப்பின் அளவைக் கொண்டு பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் தத்துவத்துக்கு (Labour
theory of value) அஸ்திவாரமிட்டார்கள். அவர்களுடைய பணியை மார்க்ஸ்
தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவை திட்டமாக நிரூபித்து முரணற்ற
வகையில் விபரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில்
செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக்
கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்.
முதலாளித்துவ
பொருளாதாரவாதிகள், பண்டங்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றாகப்
பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விபரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு
நிலவுவதை மார்க்ஸ் புலப்படு த்தினார். பண்டப் பரிவர்த்தனை தனித்தனியான
உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம்,
இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை
முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும்
நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம்,
இந்த பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது: அதாவது மனிதனின்
உழைப்புச் சக்தியே பரிவர்த்தனைப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி
பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின்
சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி நாளின்
ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு
வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் செலவிடுகிறான்.
மறுபகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பைச்
சிருக்ஷ்டித்துத் தருகிறான். இந்த உபரி மதிப்புத்தான் லாபத்துக்குத்
தோற்றுவாய். அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.
உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு மூலைக்கல் ஆகும்.
தொழிலாளியின்
உழைப்பால் சிருக்ஷ்டிக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை நாசம்
செய்து வேலையில்லாதோர் பட்டாளத்தை சிருக்ஷ்டிப்பதின் மூலமாகத் தொழிலாளியை
நெருக்குகிறது. தொழில்துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி
பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம்
பார்க்க முடியும்.பெருவீத முதலாளித்துவ விவசாயத்தின் சிறப்பு
அதிகமாகிக்கொண்டே போகிறது; விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும்
அதிகரிக்கிறது; ரொக்க மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப்
பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில்நுட்பத்தின்
சுமையால் அழித்தப்பட்டு நாசமடைகிறது. விவசாயத்துறையில் சிறுவீத
உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு
ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மூலதனமானது,
சிறுவீத உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன்
அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலை
படைப்பிக்கப்படுவதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத்
தன்மையைப் பெறுகிறது; ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே
லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர் பிணைக்கப் பட்டு விடுகின்றனர்.
ஆனால் அந்தக் கூட்டு அமைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க
ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கி றார்கள். உற்பத்தியில் அராஜகம்
வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக்
கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது; வெகுஜனங்களது வாழ்வின்
நிலையின்மையும் அபாயமும் அதிகரிக்கின்றன.
முதலாளித்துவ
முறை, தொழிலாளர்கள் மூலதனதை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையைத்
தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுதரண்ட தொழிலாளர்களின் மாபெரும்
பலத்தையும் சிருக்ஷ்டித்துவிடுகிறது.
பரிவர்த்தனைப்
பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரண
பரிவர்த்தனையிலிருந்து தொடங்கி, பரிவர்த்தனையின் மிக உயர்ந்த வடிவங்கள்
வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவதின் வளர்ச்சியை மார்க்ஸ்
ஆராய்ந்து காட்டினார்.
பழையவையும்
புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த
மார்க்சியத் தத்துவம் பிழையற்றதாகும் என்பதை ஆண்டுதோறும் மேலும் மேலும்
கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிரூபித்திக் காட்டிவருகிறது.
உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி
மூலதனத்தின்மீது உழைப்புக் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.
3
பிரபுத்துவ
அமைப்பு வீழ்த்தப்பட்டு ”சுதந்திரமான” முதலாளித்துவ சமுதாயம் இப்பூவுலகில்
தோன்றிய பொழுது இந்த சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும்
அமைந்த புதியதோர் அமைப்பையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்களாயிற்று.
இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு
சோக்ஷலிசப் போதனைகள் உடனே தலைதூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்பகாலத்திய
சோக்ஷலிசம் கற்பனா சோக்ஷலிசமாகத் தான் இருந்தது. அது முதலாளித்துவ
சமுதாயத்தை விமர்சித்தது, கண்டித்தது, சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க
வேண்டும் என்று கனாக் கண்டது; அதை விட மேலான ஒரு அமைப்பு முறையைப் பற்றி
ஆகாயக்கோட்டைக் கட்டி வந்தது; சுரண்டுவது ஒழிக்கக் கேடான செயலாகுமெனப்
பணக்காரர்களுக்கு உணர்த்த அது முயற்சித்தது.
ஆனால்
கற்பனா சோக்ஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை.
முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாரம்சத்தை அதனால் விளக்க
முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால்
கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் சிருக்ஷ்டிகர்த்தாவாக
அமையவல்ல சமுதாய சக்தியை அதனால் சுட்டிக்காட்டவும் முடியவில்லை.
இதற்கிடையில்,பிரபுத்துவ
வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா
முழுவதிலும்,குறிப்பாக பிரான்சிலும் ஏற்பட்ட புயல் போன்ற .புரட்சிகள்,
வர்க்கங்களின் போராட்டம்தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்திஉ
விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.
பிரபுத்துவ
வர்க்கத்திற்கெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக் கிடைத்த எந்த
ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து
விடவில்லை.முதலாளித்துவ சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரண
போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான,ஜனநாயக
அடிப்படையில் வளர்ச்சியுற்றுவிடவில்லை.
வேறு
எவருக்கும் முன்பு மார்க்ஸ் உலக வரலாறு போதிக்கும் முடிபை இதிலிருந்து
கண்டறியவும், அந்த முடிபை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது
என்பதில்தான் அவருடைய மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது. வர்க்கப்
போரட்டத்தைப் பற்றிய போதனைதான் அதன் முடிபாகும்.
நீதி,
மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்கு களுக்கும்
பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின்
நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில்
அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே
ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு
ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும்
தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது
நிலைந்றுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள்
ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின்
பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டளாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான்
உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச்
சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும்
ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய
நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை
நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச்
சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட
வேண்டும். இது ஒன்றேதான் வழி.
மார்க்சின்
தத்துவவியல் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம்
அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத் தனத்திலிருந்து வெளியேறும்
வழியைப் பாட்டாளிவர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதார தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து
ஜப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாபிரிக்கா வரை, உலகமெங்கும் பாட்டாளி
வர்க்கத்தின் சுயேச்சையான ஸ்தாபனங்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. தமது
வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாய்ப் பாட்டாளி வர்க்கம்
ஞானமும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவ சமுதாயத்தின்
தப்பெண்ணங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது; தன் அணிகளை
நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை
அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி
வருகிறது; தடை செய்யமுடியாதபடி வளர்ந்து வருகிறது.
https://www.marxists.org/tamil/marx/1886/feuerbach.htm
https://www.marxists.org/archive/lenin/works/1913/mar/x01.htm