Popular Posts

Thursday, 19 September 2024

சங்கே முழங்கு!!!

   

 May be an illustration of tea strainer

 

              

Open photo

                            சங்கே முழங்கு

 

 *** #தேசிய ஒடுக்குமுறை, சிங்கள பௌத்த பேரகங்காரம் இருக்கும் வரையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெளியே வரும். அவ்வாறு வெளிவரும் குரலை தமிழ் இனவாதப் பேச்சு என்பது அற்பவாதிகளின் கருத்தேயாகும்.
தமிழர்களின் நிலைப்பாடு, எதிர்ப்புணர்வு தமிழினவாதம் அல்ல.

தமிழர் வாக்கு தமிழருக்கு என்பது இனவாதம் அல்ல.

****# 07 ஐப்பசி 24 நடைபெற இருக்கும் ஜெனிவா கூட்டத் தொடர் பற்றிய நிலைப்பாட்டை ரணில், நாமல், அனுர, சஜித் வெளிப்படுத்த வேண்டும் என்பது இயல்பான அரசியல் கோரிக்கையே.

****#we request north to use the election as a referendum (நுவன் போபகே) அது என்ன வடக்கு மட்டும்??
இது என்ன வகை அரசியல் இது? சந்தர்ப்பவாதம் என்பது எவ்வித பலனும் தராது. திரிபுவாதி செந்தில்வேல் போன்றவர்கள் இதன் பின்னால் செல்வது ஆச்சரியம் இல்லை.

 May be a graphic of 2 people and text

 சுயநிர்ணயத்தை இவ்வளவு தரம் தாழ்த்த இவர்களால் மாத்திரம் தான் முடியும். நாவற்குளி குடியேற்றத்தை ஆதரித்தவர்கள் தான் மு.சோ.கட்சியினர்.இவர்கள் பேசுகின்ற சுயாட்சி என்பது சுயநிர்ணயம் இல்லை.

**** # பெருந்தேசியவாதத்தை பவியமாக காக்கும் அனுர, சஜித், நாமல், ரணில் போன்றவர்களுக்கு வாக்கு கேட்பதே கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.

**** #பொருளாதாரவாதம் என்பது மார்க்சியம் அல்ல. பொருளாதாரப் பிரச்சனை தீரவேண்டும் என்றால் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தேசம் தனக்கான பொருளாதார நிதிக்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தனியான கட்டமைப்பு, பொருளாத வாழ்வு, சமூக வாழ்வு கட்டமைக்கப்படும் போதே அந்த மக்கள் வளர்வார்கள். பின்னரே சிங்கள தேசத்து பாட்டாளி வர்க்கம் தனக்கான பிரச்சனை, யார் தன்னை ஒடுக்குகின்றார்கள் என்று தன் சொந்த எதிரிக்கு எதிராக மாறுவார்கள்.
அது வரையில் மற்றவர்களை எதிரியாக்கும் சமூகக் கட்டமைப்பு சிதையப் போவதில்லை.

**** #இரண்டாம் தெரிவு இல்லை என தமிழர் தேசம் வெளிப்படுத்தி விட்டது. இனி எவ்வித தில்லுமுள்ளுச் செய்து பொதுவேட்பாளரின் நம்பகத் தன்மையை தகர்த்தெறிந்திட முடியாது.

 

 May be an image of 10 people and text that says "ஜங்ககு w ரணிறுக்கு p1600 நககுவமா? DIr? บอิปัใ திருவறங்களி் Welidone அரிவழைகன் அலியன் mrfangah எங்களுக்கு இனத்தைக் காட்டிக்குடுத்து எதையும் நக்கிப் பிழை எண்டு சொன்னால், பேரசிரியர், விரிவுரையாளர் பட்டமெல்லாம் வெறுப் காகிதம் தான்! அண்டிப்பிழைக் ழைக்க க்க வந்த தமிழர்கள் 2 ரிமை கேட் பது தேசத் துரோகம் துரே அதை நாங்கள் செய்ய மா"

 

 

”சீழ்பிடித்த மண்டைக்காரர்கள் வெளியிட்டிருக்கும் ” உங்கள் தாராளவாத மனப்பாங்கு தமிழ் மக்களின் நலனுக்கு உதவாது. போலி இடதுகளின் அழிச்சாட்டம், சுயநிர்ணய எதிர்ப்பு, பெருந்தேசிய கட்டமைப்புக்குள் அடங்கிப் போ என்று வகுப்பெடுப்பவர்களை எதிர்க்க வேண்டும். இதற்கு கேலிச் சிந்திந்திரங்களை நாகரீகம் அற்றது என்பது உங்கள் தாராளவாத மனப்பாங்கிற்கு உட்பட்டதே.
கேலிச் சிந்திரம் வரைந்தவர்களுக்கு ”பத்வா” போடும் பிற்போக்கு மனநிலையைத் தான் வெளிப்படுத்துகின்றீர்.
மக்களுக்கு புாியக் கூடிய முறையில் அவர்கள் எதிர் அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கேலிச் சித்திரம் என்பது அரசியல் மொழி.!!!!
 
 

 ஐக்கிய முன்னணி

ஐக்கிய முன்னணியை எவ்வாறு கட்டமைக்க முடியும் என்ற புரிதல் இல்லாமல் பேசுகின்றார்கள்.  சரியான கொள்கை வகுத்துவிட்டால் போதும், பிரகடனங்கள், கருத்துரை தீர்மானங்கள் வரையறுத்து விட்டால் போது என்கின்ற போக்கு இருக்கின்றது. இது தவறானதும், பிரமை கொண்டதாகவும், அதிகார அதிகார வர்க்கத் தோரணை கொண்டவர்கள் தான் இந்தகைய நிலையைக் கொள்வார்கள். சரியான கொள்கை என்பது அமைப்பு வேலைமுறை, கொள்கை வழியை செயற்படுத்துவதும், அமைப்பின் உறுப்பினர்களை உருவாக்கிக் கொள்வது என்பது மாத்திரம் அல்ல. அமைப்பின் செயல்கள் அனைத்தும் செயலூக்கமாக இருக்க வேண்டும். அரசியல் கொள்கையின் வெற்றி தோல்வி அமைப்பின் செயல் திறனைப் பொதுத்தே இருக்கின்றது. 

தமிழ் மக்களிடையே உள்ள வர்க்கப் பிரிவுகளை மதிப்பீடு செய்யாமல் எதுவும் அமைப்பினை கட்டமைக்க முடியாது. தமிழ் தேசத்தில் உள்ள மக்கள் வெவ்வேறு அலகுகளில் கட்சிகளாக பிரிந்துள்ளார்கள். இந்த அமைப்புகளில் உள்ள நபர்களின் வர்க்கம் என்பது ஒரே பண்பில் இருக்கப் போவதில்லை. 

விவசாய, கடல்தொழிலாளி, உழைப்பாளர் வர்க்கம் பல்வேறு கட்சிக்கு உள்ளும் இருக்க முடியும். 

இவர்களுக்கு அப்பால் அரசாங்க வேலை, கல்வித் தகமை, செயற்பாட்டாளர்கள் என்றும் கட்சிகளாக பிரிந்துள்ளார்கள். 

1. தொழிலாள வர்க்கம்

2. தரகுமுதலாளி- விதேசிய வர்க்கப் போக்கு

3. உயர் மத்திய தர வர்க்கப்பிரிவு

4. குட்டிமுதலாளிய இடது மற்றும் ஊசலாட்டப் பிரிவு என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ளார்கள். ஐக்கிய முன்னணி என்பது இந்த அடிப்படையில் தான் உருவாக்கிட முடியும். ஐக்கிய முன்னணியின் இலக்கு கட்சிகளில் பிளவு பட்டிருக்கும் வர்க்கச் சமூகத்தை இணைப்பதே குறிக்கோளாகும். 

 

 

May be an image of 12 people

 பல்கலைக்கழக விரிவுரையாளருடன் உரையாடிய போது.

 

 தேசிய விடுதலைக்கான அணிதிரட்டல் தேர்தலை இலக்காக கொண்டதாக குறுக்கப்பட்டுள்ளது. இது வெகுமக்களின் திரளாகவும் மாறிட முடியவில்லை. தனியே இவ்வாறான அணிதிரட்டல் ஒடுக்குமுறையாளரின் அரசியல் வியூகத்திற்கு இலகுவாக பலியாகிப் போக முடியும்.

 மாணவர், இளைஞர், மகளீர் என பொதுவான மக்கள் முன்னணிக்கான இயக்கம், தொழிலாளர் அமைப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். சமூகத்தில் உள்ள வர்க்கங்களின் ஐக்கியம் உருவாகுவது நடைமுறையுடன் பொருத்திச் செல்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும். அமைப்பு வடிவம் என்பது மரபார்ந்ததாக இருக்க முடியாது. ஏனெனில் அங்கு உறுப்பினர்கள் பங்காளிகளாக ஆக்கவேண்டிய வழிவகையில் அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். அங்கு எண்ணிக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைதல் ஆகாது. 

‘‘கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்களிடையே எதிர்ப்பும் போராட்டமும் இடைவிடாது நிகழ்கின்றன. இவை, சமுதாயத்தில் உள்ள வர்க்கங்களுக்கிடையிலும், புதியவை பழையவை இரண்டுக்குமிடையிலும் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் ஏற்படுத்தும் எதிரொலிப்பாகும். கட்சிக்குள் முரண்பாடுகளே இல்லையென்றால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் எதுவுமே இல்லையென்றால் கட்சியின் வாழ்வு முடிந்துவிடும்.” (மாவோ)

 அமைப்பாக்கம் செய்கின்ற போது நிலமானிய சிந்தனைக் கூறுகள், முதலாளித்துவ தாராளவாதக் கூறுகள், முற்போக்கு ஜனநாயகக் கூறுகளை காண முடியும். இந்தப் போக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்க்கத்தின் நலனுக்கானது. மேட்டுக்குடியும், பூர்சுவா வர்க்கமும் சமரசத்திற்கு உள்ளாகும். சமரசத்தை மேற்கொள்ளும் இந்த சித்தாந்த செல்வாக்குட்படுவதும் இயல்பானதாகும்.இதற்கு எதிரான சித்தாந்தப் போக்கு மக்களிடத்தில் நீண்ட நாட்களாகவே நிலைபெற்றிருக்கின்றது. அந்த நிலையில் இருந்து மக்கள் தானாக வெளிவருவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது. அவர்களிடத்தில் சிந்தனை பிடிப்பில் இருந்து நாம் தான் உதவிட வேண்டும். நமது கோட்பாடுகளையம், வேலைத் திட்டத்தையும் விளக்கி விபரித்துச் சொல்லும் வேலையை செய்ய வேண்டும். 

வெவ்வேறு வர்க்க, சமூகப் பிரிவுகளிடம் தோழமையை ஏற்படுத்துவதன் ஊடாகவே தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். எமது எதிரிகளை எதிர்த்து கூட்டாகக் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் நடைமுறை அனுகூலங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக எழுகதமிழ், பொங்குதமிழ், P2P விடயங்களை ஊழியர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 

 

 



 

 

Monday, 9 September 2024

பல்கலைக்கழகமும் தேச விடுதலைக் கருத்தியலும்

 பல்கலைக்கழகமும் தேச விடுதலைக் கருத்தியலும்

 12.01.21

 No photo description available.

 

சமூகத்தின் பண்பாட்ட வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்கள் முக்கிய அடையாளமாக இருந்து வருகின்றன. இது ஆசீவக சிந்தனை மரபு, சமண, பௌத்த பள்ளிகளின் உருவாக்கம் கேள்வி கேட்ட சமூகத்தின் அடையாளமே. இவ்வாறு சமூகத்தின் அடையாளமாக விளங்க வேண்டும் என்று கருத்தை ஆதரிப்பவர்கள்கூட குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டே கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த நினைவுச் சின்னம் அழிக்கப்பட்ட பின்னர், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும், வியாபகமான (Holistic approach) அணுகுமுறையில் இருந்து விடயங்களைப் பார்க்க வேண்டும். இங்கு விவாதத்தின் அடிப்படையே தேசவிடுதலைக்காக வீழ்ந்தவர்கள் பற்றியதே. தேசிய சனாநாயகப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே. ஆகவே இது வர்க்கப் போராட்டத்தில் வீழ்ந்தவர்கள் பற்றிய பிரச்சனையாக அணுகப்பட வேண்டும். அங்கு அமைக்கப்பட்ட சின்னமானது தலைவர்களுக்கானது அல்ல.
இந்த இடத்தில் ஒடுக்கப்படுபவர்கள் அமைக்கும் நினைவு வடிவத்திற்கும், ஒடுக்குபவர்கள் வடிவமைக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் மாறுபாடு உண்டு. இங்கு எழும் விவாதம் ஆக்கிரமிப்பாளர்கள் வெற்றிச் சின்னத்தை நிறுவும் போது மௌனமாக கடந்து செல்பவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் சின்னங்களை நிறுவும் சந்தர்ப்பத்தில் தான் திட்டங்கள், ஆலோசனை தெரிவிப்பதில் முதன்மையாக உள்ளார்கள்.

1. சிந்தனை வடிவம் பற்றியது
யுத்த காலத்தில் சமூகத்திற்கு இருந்த சிந்தனை என்பது மாறுபட்டது. அந்தச் சிந்தனையானது யுத்த முடிவிற்குப் பின்னர் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. பல்கலைக்கழகத்தினுள் பன்முகப்படுத்தப்பட்ட கருத்துகள் என்கின்ற போது பற்பல சிந்தனை வடிவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தமிழ்த்தரப்புகளின் கருத்துக்கள் தான் பல்கலைக்கழகத்தில் உள்ளது என்பது அல்ல. அனைத்துச் சிந்தனையும் சிங்கள தேசத்தின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதற்கு அப்பால் சுதந்திரமாக செயற்பட முடியாது.
2009 பின்னர் மனித முகம் கொண்ட முதலாளித்துவ (human face of capitalism) தந்திரோபாயத்தை மேற்கும், பேரினவாதக் அரசாங்கங்களும் பயன்படுத்தியுள்ளன. இராணுவாத நிலைப்பாடுகள் பிராந்திய நலனின் அடிப்படையில் அமைந்து விடுகின்றன. இங்கு ஜனநாயகம், நல்லாட்சி (Democracy, Good Governance) என்பது கட்டமைப்பில் சீர்திருத்தத்தை கோருவதும், உட்கட்டமைப்பை (infrastructure) உருவாக்கிக் கொண்டு சந்தையை மென்மேலும் திறந்து விடவதனைக் குறிக்கோளாகக் கொணடது. இன்றையபோக்கு நிதிநிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்படுகின்றது. இதிலும் இந்தியா அபிவிருத்தி பற்றி கவனம் எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. இங்கு முதலாளித்துவ உற்பத்தி முறை, அது சார்ந்த அரசியல் சந்தையை மையப்படுத்தியே இருக்கின்றது. 2009க்கு முன்னர் இலங்கையில் முழுச் சந்தையும் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆளுகைக்குள் இருக்கவில்லை. கடல்வளம், உள்நாட்டுச் சந்தை என்பது கட்டுப்பட்ட நிலையில் தான் இருந்து. இதற்கு மாற்றான சிந்தனைகளை ஊட்டுவதில் கடந்த 10 வருடத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்கு எதார்த்தவாதம், சமயோசிதம் என்று நிறையவே எல்லோரும் வகுப்பெடுத்துக் கொண்டார்கள்.

2. துறைசார் நிபுணத்துவம்
இங்கு கலாசாலையில் கல்வி கற்கும் போது தெரிவு செய்யும் போது சட்டவாளர், வைத்தியர், கணக்காளர் போன்ற பட்டப்படிப்பே தெரிவு செய்யப்படுகின்றது. இந்தத் துறைகளில் தமிழ் பிரிவினர் திறமையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் உலகம்முழுவதும் செறிந்து தமது திறமையைக் காட்டுகின்றார்கள். ஆனால் இக்கட்டுரை சமூகச் சிந்தனையை எவ்வாறு முற்போக்குச் சிந்தனை சார்பாகவும், ஒடுக்குமுறைக்கு எதிராக கட்டமைப்பது பற்றியதாகும்.
எதார்த்தவாதமும், சமயோசிதவாத்தினை சமூகத்திற்கு ஊட்டுவதில் குறிப்பிட்ட வெற்றியைக் கண்டுள்ளனர். இலங்கைச் சமூகங்கள் நிலப்பிரபுத்துவச் சிந்தனையில் கட்டுண்டுதான் உள்ளாது. சமூகம் கல்வி, அரச வேலை, நிலையான சம்பளம், ஓய்வூதியம், சொந்த ஊரிலேயே வேலை, சீதனம், சொந்த வீடு என்ற வட்டத்தில் உழழும் மத்திய தரவர்க்க மனோபாங்கு கொண்டவர்களின் வர்க்கம் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இதே போல விரைவாக பணத்தை உழைப்பது என்பது பற்றிய பிரச்சனை, நுண்கடன், வேலையில்லாப் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகள் உண்டு.
இந்த வர்க்கப் பிரிவினர் மாத்திரம் தமிழர் தேசத்தவர்கள் அல்ல. கடல்தொழிலாளர், விவசாயிகள், தனிமுயற்சியாளர்கள் என பல்வேறு வர்க்கப் பிரிவினை கொண்டவர்கள் உள்ளாார்கள். சிங்கள தேச அரசியல் பொருளாதார சூழமர்வில் பொருளாதார, தேசிய ஒடுக்குமுறைக்குள் ஆளாகியுள்ள தமிழ் சமூகம் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் பெரும் இடையூறு உள்ளது. இங்கு தேசிய இனப்பிரச்சனை பிரதான முரண்பாடு என்ற ரீதியில் அணுகப்படுகின்றது. இங்கு மதச் சிறுபான்மையினரான முஸ்லீம், மலையகத் தமிழ்த்தேசிய இனம் பற்றிப் வேறு தளத்தில் பேசுவோம். எனினும் தமிழ் தேசத்தில் வாழ்கின்ற மதச் சிறுபான்மையினரின் முதலாளித்துவ சனநாயக உரிமை அங்கீரிப்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

பன்முகத்துவம் பேசுபவர்களின் சிந்தனைப் புள்ளியை கீழே பார்ப்போம்..

3. ஒப்பாரி
இந்தவிடயத்தில் முக்கியமாக ஒரு பதிலை முதலே கொடுத்துவிட்டு விரிவாக எழுதுவது பொருத்தமாகும்.
இயக்கங்கள் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்வர்கள் மற்றைய ஊசலாட்ட வர்க்கப் பிரிவுளையும், இடதுசாரி அமைப்புக்களையும் தடைசெய்தார்கள். இதன் விழைவு பல பின்னடைவுகளைக் கொடுத்தது.
2009 பின்னர் ஈழப் போராட்டத்திற்கான திடமான த தலைமை இல்லாமல் இருப்பதுதான் இன்றைய நிலைமை. நீங்கள் நம்பிய கொள்கையை தொடர இன்று வெற்றிடம் உள்ளது.
நீங்கள் நடைமுறையில் செயற்பட வி.புகள் இல்லை. அவர்களின் ஆயுதமும் இல்லை. உங்களை போராட்டக் களத்திற்கு தடையாக இருப்பது யார்?
நீங்கள் என்ன செய்து செய்து கொண்டிருக்கின்றீர்கள். இனக்குழும, சாதிய சிந்தனைச் சமூகங்கள் தங்களிடையோன பகையை எத்தனை வருடங்கள் சென்றாலும் பழிதீர்த்துக் கொள்ளும் மனப்பாங்கில் இருக்கும். இந்த வகையான பழிவாங்கும் சிந்தனை வடிவத்திற்கு அப்பால் முதிர்ந்த சனநாயக, முற்போக்குச் சிந்தனை கொண்ட போக்கு அவற்றிடம் இல்லை.
இன்று கருத்துக் கூறுபவர்கள் தாங்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்றார்கள். சமூகம் செல்ல வேண்டிய பாதையை ஆராய்ந்து உணராமல் நுனிப்புல் மேய்ந்து வெளித்தோற்றத்தை மாத்திரம் கண்டவர்களுக்கு சமூகப் போக்கில் அநேக முரண்பாடுகள் தோன்றலாம். ஒரு நிலையில் இல்லாமல் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளதாக தோன்றலாம். சமூகத்தின் போக்கை ஆராய்ந்து வியூகம் அமைக்கப்பட வேண்டும்.
அனுபவங்களை ஒப்பித்துக் கொண்டிருப்பதும் வெட்டரிவாள், வேல்கம்பை தூக்கிக் கொண்டு பழிவாங்குவது போன்ற பிற்போக்குக் கருத்தியலை விதைப்பது அல்ல. காட்டுமிராண்டித்தனமான மனநிலையை (savage mindset). புலம்பெயர்ந்த நாடுகளில் வசித்தால் கூட பழைய சிந்தனையைத் தொடர்கின்றார்கள். இவ்வாறான மனிதர்கள் தான் புதிய சமூகச் சிந்தனை உருவாக்கப் போகின்றார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இயங்கியல் போக்கு அற்ற ஆய்வுகள், கருத்துக்கள் என்பன வெறும் கருத்துக்களாக சுருங்கி விடுகின்றன. சமூகப் போக்கின் தேவையை அறிதல் வேண்டும். சமூகப் போக்கின் அறிதலை விடுத்து தமது அகவிருப்பு கொண்டு சமூகத்திற்கு கருத்துக் கொடுத்துவிட முடியாது.

4. புது இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பது
2009 வைகாசி17 பின்னர் மக்கள் எவரையும் முள்ளிவாய்க்கால் சுற்றாடல் வரையில் எவரும் நுழையாத வகையில் தடைசெய்திருந்தனர். இந்தக் காலத்தில் இறந்தவர்களின் எச்சங்கள் இல்லாது ஆக்கப்பட்டன, மிச்ச மீதியாக இருந்த மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இனவழிப்புக்கான அடையாளங்கள் இல்லாமல் ஆக்கப்பட்ட பின்னரே வரையறைக்குட்ட காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய அனுமதித்தனர். இதன் பிறகும் தொடர்ச்சியாக கேப்பாப்புலவு மக்கள் நிலமீட்புக் கோரிக்கைக்காக போராட தொடங்கினார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்களை 2009 வைகாசியின் பின்னர் தரைமட்டமாக்கினர். பிற்பட்ட காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு, மாவீரர் நாள் போன்றவற்றை நனைவு கூர்வதில் பல இடையூறுகள் செய்து வந்துள்ளார்கள்.
இங்கு ஒரு தேசிய இனத்தின் சின்னங்கள், அடையாளங்களை இல்லாது ஒழிப்பது சிங்கள தேசத்திற்கு அவசியமானது ஒன்றுதான். ஆனால் புலியெதிர்ப்புவாதிகளை ஆளும் வர்க்கத்திற்கு துணை நிற்பதைத் தான் இவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள். எனவே புலிக்காய்ச்சலுக்கு எவராலும் மருந்து கொடுக்க முடியாது.
தமிழ் தரப்பின் சிறிய குழுக்களில் இருந்து வரும் எதிர்ப்புணர்வை அலசிட வேண்டியுள்ளது. இந்தத் தரப்பல் பல சாத்தியவாத, அனுபவவாத, எதார்த்தவாத, மிதவாத, சாதியவாத, மேட்டுக்குடி ஜீவகாரூண்யவாதிகளின் பிரிவுகளையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள். இந்தச் சக்திகளின் தன்னலம் சார்ந்த இலக்குகளைக் கொண்டு இருக்கின்றார்கள். தன்னலம் சார்ந்த இலக்கு, தேவையைக் கொண்டவர்களுக்கு இடையே வியாபகமான அணுகுமுறையில் ஒரு பார்வையை அவர்களிடம் இருந்து பெற்றுவிட முடியாது. சிங்கள அரச கட்டமைப்பில் வி.பு தலைமைகளுக்கு எவ்வித அடையாளச் சின்னங்கள் எழுப்பிட முடியாது. அதற்கு சிங்கள தேச அரச கட்டுமானம் அனுமதிக்காது என்பது சாதாரண மக்களுக்குத் தெரியும்.

பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் சின்னங்கள் யாரை அடையாளப்படுத்துகின்றன என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உண்டு. தேசவிடுதலைக்கான போராட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள், பல்லாயிரம் தேசபக்தர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஈழ தேசமானது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் இன்று அன்னிய மூலதனத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கும் தேச அரசிற்கும் வித்தியாசம் தெரியாவிடின் ஒதுங்கிருந்து நேர்மையாக சிங்கள தேசத்தின் மகிமையைப் போற்றுங்கள். அது தான் உங்களுக்கான இடம்.
தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் இருக்கும் குறியீடுகள் வர்க்கப் போராட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றதாம். வடக்கில் உள்ளது புலிப் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதாம்.
இதையே சிலவருடங்களுக்கு முன்னர் மகிந்தவும் சொன்னார். மகிந்தவிற்கும், புலியெதிர்ப்புவாதிகளுக்கும் வர்க்கப் போராட்டம் என்றால் என்னவெனத் தெரியவில்லை.
அடிப்படையில் பொருளாதாரப் போராட்டம், தேசிய சனநாயகப் புரட்சியும் வர்க்கப் போராட்டங்களே என்ற மார்க்சிய அடிப்படை விளங்கிடாத பண்டிதர்களைக் கொண்டவர்களே கட்சிகள், அரசியல் நடாத்துகின்றார்கள். இவர்களுடன் லக்ஸ்மன் கதிர்காமரின் வாரிசுகள் மறுபுறத்தே களமாடுகின்றார்கள்.

தனிநபர்களே முக்கியம் ஒரு சமூக ஒழுங்கமைவு முக்கியமில்லை என்பதும், தனிநபர்களை முதன்மைப்படுத்துவதோ இணையாக நிறுத்துவது பற்றியதில் தான் மாறுபாடு உண்டு.
செல்வி, ராஜினி, மனோகரன் என்ற தனிநபர்களின் இழப்பு இழப்புத் தான். யாரும் யாருக்கும் சிலை வைப்பதாயின் வைத்துவிட்டு செல்லுங்கள். தனிநபரை நினைவு கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம் இழப்புக்களை நினைவு கூர உரிமை உண்டு.
இங்கு தமிழ் தேசத்தின் அடையாளத்தை, இருப்பை, இனவழிப்பை, மறுத்துக் கொண்டல்ல. பல்கலைக்கழகத்தில் அமையக் கூடியது வி.பு தலைவர்களின் அல்ல. தேசபக்தர்கள், ஈழ தேசமக்களின் நினைவுச் சின்னமே.

5.பன்முகத் தன்மை சமூகத்தில் இல்லையா?

யாழ் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரை பல அரசியல் போக்கு உள்ளவர்கள் இயங்குகின்றார்கள்.
1. தமிழ் தேசிய சிந்தனை – இந்தப் பிரிவு வெளிப்படையாக தம்மை நிலை நிறுத்தி வேலை செய்ய முடியாத நிலை. எனினும் தமது செயற்பாட்டை ஏதோ ஒரு வகையில் செயற்படுத்தியே வருகின்றனர். இந்தச் சிறுபிரிவினரே தமிழ் மக்கள் சார் அரசியலை சிறிதளவேனும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

2. கதிர்காமர் கும்பல்களின் வழித் தோன்றல்களின் (ரொட்க்சிய) இவர்கள் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை சிந்தனைக் குருடர்களாக மாற்றுவதில் பல்கலைக்கழகத்தில் செயற்படுகின்றார்கள். இது ஒரு புகைச்சலாக இருக்கின்ற விடயம். பல்கலைக்கழத்தில் உள்ள செயற்பாட்டார்களுக்கு இந்த விடயம் தெரியும். ஆனால் இது வெளியே பேசப்படுவதில்லை. இந்தப் பிரிவினர் பொதுவுடமைவாதிகள் எனப்படுபவர்களுக்கும் ஆலோசகர்களாக இருக்கின்றார்கள்.

3. மார்க்சிய வழியில் பயணிப்பவர்கள் ஆளுமையில் இல்லை. (மார்க்சிய திறனாய்வு முறையில் கைலாசபதி, சிவத்தம்பியின் வழியில் அவர்களின் மாணவர்கள் எவரும் இல்லை. சமூக அடையாளம் – இருப்கைக்கருதி அவர்களின் மாணவர்கள் என்று பிரகடனப்படுத்துவார்கள். இதற்கு மாற்றாக தமிழகத்தில் மார்க்சிய கல்வியாளர்கள் பலர் ஆய்வுலகில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இதில் பேராசிரியர்கள் கோ. கேசவன், ஆர் சிவசுப்பிரமணியன், . வெ. கிருஸ்ணமூர்த்தி, மருதையன், தோத்தாத்திரி, போன்ற ஆளுமைகள் உள்ளார்கள்) ஆனால் சூல்கெயிமினுடன் புகைப்படம் எடுக்கும் தமிழ் பூர்சுவா வர்க்கத்தினர் போல தாம் கைலாசபதி, சிவத்தம்பியின் மாணவர் என்று சுயதம்பட்டம் அடிப்பதுடன் நிறுத்திவிடுவார்கள்.
இதில் மிஞ்சியிருப்து இலங்கையைப் பொறுத்தவரையில் பேராசிரியர் சண்முகரத்தினம் என்ற சமுத்திரன். இவரின் மாணவர் எவரும் அடுத்த நிலையை எடுத்துச் செல்வார் இல்லை. பேரா. சிவசேகரம் மார்க்சிய பின்புலம் கொண்டவர் என்றாலும் அவர் திரிபுவாத அணியில் தான் உள்ளார் என்பதை தத்துவார்த்த ரீதியாக நம்மால் நிறுவிட முடியும்.
பன்முகச் சிந்தனை என்பது புலியெதிர்ப்புவாத – ரிம்மர் மண்டப வாரிசுகளால் காயடிக்கப்படுவதை இந்த மேட்டுக்குடிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தம்மீதான விமர்சனத்தை மதவர்மம் கக்குவதாக மடைமாற்றுவார்கள்.

தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை இலக்காக கொண்டே பன்முகச் சிந்தனை என்ற தாக்குதல் நடைபெறுகின்றது. இதற்கு இன்னொரு சமூகப் போக்கும் உள்ளது. 1990 பின்னர் வர்க்கமற்ற மேட்டுக்குடி மனப் போக்கு இணைவு என்பதும் முன்னர் அணிகளாகச் (மு. தலையசிங்கம்- கைலாசபதி அணி) செயற்பட்டவர்கள். பின்னரான காலத்தில் தாராளவாதத்தினுள் நுழைந்து கொண்டார்கள். இவர்களின் தாராளவாத சிந்தனைப் போக்கினை சமூகமயப்படுத்தினார்கள். இவர்களின் தொடர்ச்சியாக அங்கீகாரத்திற்காக ஏங்கும் இளையோரை உருவாக்கி விட்டுள்ளார்கள்.
இதிலும் பெயருக்காக
1.முற்போக்கு என்ற பெயரில் இயங்கும் புதிய வகை இலக்கியம் என அகநிலையை முன்னிறுத்தும் பிரிவு. இந்தப் பிரிவு அங்கீகாரத்திற்காக பிரமுகர்களின் பின்னால் செல்கின்றனர். இந்த பிரிவினர் அரசியல் பொருளாதாரம் இரண்டாம் நிலையாக இருக்கின்றது. இது அவர்களின் இலக்கியத்தில் இருந்து பெறப்பட்ட மதிப்பீடு அல்ல. மாறான அவர்கள் வெளிப்படுத்தும் அரசியல் கருத்துக்களில் இருந்து வந்த முடிவாகும்.

2.முற்போக்கு முகாம் என்ற போர்வையில் எழுத்தை தொழில் முறையாகக் கொண்டவர்கள். இந்தப் பிரிவிற்கு கட்சியும் இலக்கியமும் ஒன்றுதான்.

3. இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழகத்தில் உள்ள சந்தைக்காக முற்போக்கு பேசும் நபர்கள். தமிழக முற்போக்கு எழுத்தாளர்களுடன் தம்மை இணைத்துக் கொள்வார்கள். இலங்கை எனும் போது தம்மை அன்னியப்படுத்தக் கூடாது என்ற மனப்பாங்கில் சிந்திப்பவர்கள், செயற்படுபவர்கள் உண்டு. அவர்களை நாம் நொந்துவிட முடியாது. ஏனெனில் தமிழகமும், இலங்கையும் ஒன்றல்ல. இதேவேளை தமிழகத்தில் உறவை பேணுகின்ற போது அங்கு தமிழர்கள். இங்குஇலங்கை என்று வரும் போது மத அடையாளம் பேணுவார்கள். இந்தப் போது ஒற்றைப் போக்காக இல்லை. இதில் பெரும்பான்மை காலச்சுவடு, ஜெயமோகனுடன் அணிகோர்ப்பார்கள்.

6.போராட்டத்தில் மதச் சிறுபான்மையினரின் இணைவு
ஈழப் போராட்ட காலத்தில் மதச் சிறுபான்மையினர் சிங்கள தேசத்தின் அச்சுறுத்தலுக்கு குறிப்பிட்ட அளவில் அச்சத்தில் இருக்கவில்லை. யுத்த முடிவின் பின்னர் இஸ்லாமிய எதிர்ப்பு சிங்கள தேசத்தில் பரவியது. பல இடங்களில் மோசமான தாக்குதல் இடம் பெற்றது.
வெள்ளைத்துணிப் போராட்டத்தை பிரதான முஸ்லீம் கட்சிகள் வெளிப்படையாக போராட்டக் களத்தில் இல்லை என்ற விமர்சனம் செயற்பாட்டார்களால் முன்வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை சாதாரண மட்டத்தில் இருந்து வெளிப்பட்ட வேளையில் அரசியல்வாதிகள் நேரடியாகவே அச்சுறுத்தல், இது தேவையில்லாத போராட்டம், அபிவிருத்தி முக்கியம் என்ற கருத்தை முன்வைத்ததாக செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தினார்கள். (ஊடறு செயற்பாட்டார்கள் நடத்திய Zoom meeting) அரசியல் உரிமை இல்லாத அபிவிருத்தி எதற்கு என்றும் அந்தச் செயற்பாட்டார்கள் கேள்வி கேட்டார்கள். இதில் அவர்கள் சொன்ன முக்கியவிடயம் என்னவெனில் தம்முடன் மற்றைய மதத்தவர்களே இணைந்து கொண்டதாகவும், ஆதரவு தருவதாகவும் கூறினர்.
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இணக்க அரசியல் என்பது இலக்கு என்பதை மீளவும் அரசியல்வாதிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். சாதாரண மக்களின் போராட்டத்தை அறுவடை செய்ய பல நாட்கள் கழிந்த பின்னர் ஒப்புக்கு பதாதைகளை கொண்டு தெருவில் இறங்கியதாக விமர்சிக்கப்பட்டார்கள்.
வர்க்கச் சமூகத்தில் மதம் பிரதான முரண்பாடாக இருப்பதில்லை. பொருளாதாரச் சுரண்டல், தேசிய இன ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை என விரிந்துள்ளது. இந்த நிலையில் முரண்பாடுகளை களைவது என்பது அந்தக் கட்டத்திற்கு தேவையான இங்கு மதம் அரசியலுக்குள் நுழைகின்றது.
1.கத்தோலிக்கள்- புரட்டஸ்தாந்து
2. இஸ்லாமியர்கள்
3. சைவர்கள் (சிறுவர்களை எரிப்பதில்லை)

6.1 ஆழிப் பேரலை- சுனாமி
இதனால் தான் வெள்ளை துணி கட்டுவது பல மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கு ஆழிப் பேரலைகாலத்தில் மனிதர்களின் இயல்பாக உள்ள ஜீவகாரூண்யத்தைப் பற்றி நிறையவே பேசப்பட்டது. அப்போதும் மக்களிடையே ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி அரசியல்வாதிகள், முற்போக்காளர்கள் என எழுதித் தள்ளினார்கள். அப்போ நானும் பெரிய கட்டுரை எழுதியுள்ளேன். அன்று ஒரு பொது உளவியலை எல்லா மக்களிடமும் ஏற்படுத்தியதே. தென்கிழக்காசியாவில் இறப்பு- பிறப்பு என்பது முக்கிய சடங்காக இருந்து வந்துள்ளது. இது தொல்பழங்காலமாக தொடர்ந்து வரும் தொடர்ச்சி என்பதால் இழப்பின் வேளையில் தன்னியல்பாக மனிதர்களின் மனது இரக்க உணர்விற்கு வந்துவிடுகின்றன. ஆனால் அந்த மாற்றம் என்பது எவ்விதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடவில்லை. ஆழிப் பேரலையால் இறந்தவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள் வெறும் சொற்பம்.
ஆழிப் பேரலை மொத்தமாக (230,000 lives in a matter of hours.) வும், இலங்கையில் 30000 பேரைக் காவு கொண்டது.
2004-2009 சரியாக நான்கரை வருடத்தினுள் 149000 மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். இதை இனவழிப்பா, போர்க்குற்றமா என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். யுத்த முடிவு எதனைக் காட்டியது. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு வெற்றிச் சின்னங்களை தமிழர் தேசமெங்கும் அமைத்துக் கொண்டது. பொங்கல் பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

மதம் என்பது அரசியல் இருந்து தனிப்பட்ட விடயமாக இல்லை என்பது தான் தற்போதையை நிலை. சிங்கள தேசம் மதத்தை அரசியலில் இருந்து பிரிக்கத் தயாராக இல்லை. இன்று தொற்றுக் காலத்தில் பிணங்களை எரிப்பது தானத மதச் சிறுபான்மையினரின் உள்மனதை தாக்கியுள்ளது. மதம் எப்பொழுதும் உயிர்த்துடிப்புள்ள விடயமாகவே இருக்கும். ஒரு சமூகத்தின் உலகக் கண்ணோட்டம் முற்போக்கானதாக இருப்பதில்லை. மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தாலும் பழைய சிந்தனை முறை தொடர்வதையும் கவனத்தில் கொள்ளலாம். கத்தோலிக்கர்கள் இங்கு வ்நத பின்னர் கோவில்கள் கட்டவேண்டிய தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் உட்கட்டுமானங்கள் அவர்களை உள்வாங்கி விடுகின்றன.
பிறமதத்தவர்கள் தமக்கான கோவில்கள், பள்ளிவாசல்களை கட்டுகின்றார்கள். இது மேற்கில் மதத்திற்கு அப்பால் சிந்திப்பவர்களை உருவாக்கியுள்ள நிலையில் இருந்து மாறுபட்டதாக இருக்கின்றது.
பழைய சிந்தனை முறையில்‘‘ அடிமைப்பட்ட மக்கள் தங்கள் தங்கள் மனிதத் தன்மையை முற்றிலும் மறந்து, நாகரீகமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற எண்ணம் சிறிதுமின்றி உழலச் செய்யும் வழியே சமயமாகும்‘‘ (மதமாகும்) என்றும் கூறியுள்ளார். (18) சுரண்டப்படுவதை அரசியல் ரீதியாக உணர்வினைப் பெறாது போலியுணர்வில் மூழ்கியிருப்பதை குறிப்பிட அபினுக்கு சமப்படுத்துகின்றார்.

பிணங்களின் எரிப்பிற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் இல்லை. அதே போல புதைப்பதனால் எவ்வித தீங்கும் இல்லை என்பதற்கு விஞ்ஞான முடிவுகள் இல்லை. கிருமியானது உருமாற்றமடைந்த நிலையில் தான் புதிய வகையானதாக தொற்றுப் பரவுகின்றது. இதற்கான விஞ்ஞான முடிவுகள் உடனடியாக கிடைத்துவிடாது. 10 மாதத்தினுள்ளேயே மறுவார்ப்பாக இங்கிலாந்தில் பரவுகின்றது. மரபணுமாற்றம் பற்றியும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதில் இஸ்லாமியரின், கிறிஸ்தவர்களின் மதநம்பிக்கையை மீறிய செயல் என்பது. சமூக வழமைக்கு மாற்றாக வெளியில் இருந்து திணிக்கப்பட்ட முறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது பழைய விடயங்களை மறைத்து உளபோக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்தப் புள்ளியில் தான் இணைகின்றார்கள். ஆனால் இவர்கள் பொருளாதார, அரசியல் அதிகாரம் பற்றிய புரிதலில் இருந்து இணையவில்லை.
ஒடுக்கப்படும் சமூகங்கள் இணைத்து வேலை செய்வது முக்கியமே. ஆனால் இது மதம் என்ற அடையாளத்தினுள் சுருக்கிவிடக் கூடாது. தமிழ் தேசிய இனத்தின் அங்கமாக வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் உள்ள இஸ்லாமிய மதச் சிறுபான்மையினர் தமிழ் தேசிய இனத்துடன் போராட்டத்தில் ஐக்கியமாவது அவசியமே. முதலாளித்துச சனநாயகத்தை ஏற்றுக் இருவரும் பயணிப்பது எதிர் காலத்திற்கு அவசியமே.
முஸ்லீம் அடையாள அரசியல் என்பது வணிக, மேட்டுக்குடி வர்க்கத்தினரால் வழிநடத்தப் படுவர்கள். இணக்க அரசியல்வாதிகளை முஸ்லீம் சமூகம் இனம் கண்டுள்ளது. ஆனால் அரசியல் பொருளாதாரம் சார்ந்த அரசியல் வளர்த்தெடுக்கப்படவில்லை.
இங்கு தொல்பழங்காலமாக மதமாறிய வடக்கு கிழக்கு இஸ்லாமியர்களும், தமிழ் மக்களும் மதத்தினை ஒதுக்கிவைத்து விட்டு அரசியலில் மதத்தை இணைக்காது ஐக்கியமாக வேலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும். மதம் கட்சி விடயத்தில் தனிப்பட்ட விடயமாகக் கொள்ள வேண்டும். மதங்கள் அரசியல் பொருளாதாரப் போராட்டத்திற்கு இடையூறாக இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

இறுதியாக
இலங்கை இரண்டு தேசங்களைக் கொண்டதாகும். தமிழர் தேசத்தில் உள்ள மக்களின் தேவைகள் நலன்கள் என்பதும் சிங்கள தேசத்தில் வாழ்கின்ற மதச் சிறுபான்மை, மலைய தேசிய இனத்தின் தேவைகள் மாறுபட்டவை. ஒரு போராட்டத்தில் ஐக்கிய முன்னணி வேலை முறை என்பது ஒன்று. அதேவேளை அரசியல் சார்ந்த விடயங்கள் வேறுபடும். மேல் உள்ள எழுத்துக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் ஈழ தேசத்தின் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் அடையாளம் (symbols/totem) என்பது பண்டைய காலத்தின் தொடர்ச்சி. தனிமனிதர்களின் அடையாளங்களை விட ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளம் முக்கியமானது. தனிநபர்கள் எங்கும் உங்கள் நினைவுகளை நிறுவுங்கள். வரலாறு எங்கும் தனிநபர்களும் நடுகற்கள் ஊடாக நினைவு கொள்ளப்பட்டே வந்துள்ளார்கள். இங்கு தனிநபர் இருப்பு மறுக்கவில்லை.
விடுதலை அமைப்பைப் பற்றிய விமர்சனங்களை தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் விமர்சனத்திற்கும், சுய ஆய்விற்கும் உட்பட்டவை தான். இதனை இங்கு எவரும் மறுக்கவில்லை. மக்கள் கூட்டத்தை விடுத்து தாராளவாதம் பேசுவது வேடிக்கையாகும். ஒரு மக்கள் கூட்டத்தை தனிநபர்களுக்கு இணையாக நிறுத்தி அரசியல் நீக்கம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனிதர்களின் கழிவிரக்கம் என்பது நீண்ட காலத்திற்கு நிலைக்கப் போவதில்லை.
தமிழ் பேசும் சக்திகளிடையே, பல்கலைக்கழகத்தில் பன்முக சிந்தனைப் போக்கு உள்ளது. இங்கு அபாயச் சங்கு என்பது தமிழ் தேசத்தின் ஆட்சியுரிமையை பேசுபவர்களையும், தேச சிந்தனை நீக்கம் பற்றிய தாக்குதலே அடிப்படையாக இருக்கின்றது.

பிகு-யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரால் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இருந்த இடத்தில் மீண்டும் கட்டப்படப்போவது சமாதானத்தூபியாம் என துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார்.
https://www.history.com/.../deadliest-tsunami-2004-indian...

See less
12.01.21

Tuesday, 3 September 2024

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்

 

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்

 

 image

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்படது.
ஜனாதிபதித் தேர்தல் 2024
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை
தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும்.
தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள், தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும்.
ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம்.
இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும்.
தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும்.
இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது.
கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான Bobigny, Sevran, Choisy-Le-Roi, Vitry-Sur-Seine என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில் (Congress) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது.
எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை. இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக,
01. திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால்; ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன.
மேலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் இது.
02. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன.
03. வாகரை. கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவை.
03. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு மாவட்டம் இது.
04. வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.
முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி அகழ்வானது பன்னாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
05. வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ;;கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
06. மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது.
மன்னார் புதைகுழி தொடர்பான உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை
07. கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சொத்துகளை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது.
08. யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன.
நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது.
09. தமிழர் தாயகம் எங்கும் தனியார் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதாக அரச புள்ளி விபரங்கள் பொய் கூறுகின்றன.
தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவு நிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
10. புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
11. தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
12. அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்படவும் இல்லை.
13. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்;, அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.
14. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவி விடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது.
இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்;பது, அங்கே சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களே.
இந்த நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன. பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள்.
நிலப்பறிப்பு, சிங்களபௌத்தமயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமான அரசைப்போல செயற்படுகின்றது. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது
இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்ப வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமறுத்து இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு கடனாளியாகியது. எனவே, இப்பொழுது நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காகப் வாங்கிய கடன் சுமைதான்.
இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.
யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு சிறப்பு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை.
யுத்தத்துக்காகப் படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதி படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்கு கிழக்கில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான இராணுவ பொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்பட்டமாடடார்கள். அண்மைக் காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள்: சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே. இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறான இராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம்.
தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒரு பின்னணியில் இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பாஅரியநேத்திரன் அவர்களை முன் நிறுத்துகிறோம்.
கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்;. 2009க்குப் பின் 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைத் தரவும் இல்லை; இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை.
கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார்.
இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது.
01 => இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
02 => தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
03 => ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.
04 => இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.
05=> தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது.
06 => மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.
07 => ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள்;, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.
08 => அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும  நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.
இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும்.
09 => ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று (Protective Mechanism)உருவாக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.
பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார்.
ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம்.