திரைப்படவிழாவின் அரசியல் !!!
கருத்துருவாக்கமும் சமூக
மாற்றமும்
இன்றையக் காலச் சூழலில் கருத்துருவாக்கம் பற்பல கோணங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கருத்துருவாக்கம் என்பது நலன் சார்ந்ததாக தனிமனிதர்கள் தொடங்கி சகல சமூக அலகுகள் எங்கும் மாற்றத்திற்கு
உள்ளாகின்றது. இது ஒரு நாடு அல்லது ஏகாதிபத்திய உறவு வரையில் அவைகள் நலன் சார்ந்ததாக இருக்கும். இங்கு தனிமனிதர்களின் போக்கு என்பதை தீர்மானிப்பதும், தனிமனிதர்கள் உட்பட சமூகத்தை வழிநடத்துவதும் அரசியல் பொருளாதார சக்திகள் என்பதை சமூகத்தின் உறுப்பினர்கள் கவனம் கொள்வதில்லை.
இன்றையக் காலத்தில் Tariq Ramadan போன்றவர்கள் இலங்கை வந்திருப்பதும் கவனத்தில் கொள்ளல்படல் வேண்டும். இங்கு Tariq Ramadan பற்றிய நேரடியான விமர்சனத்திற்கு செல்லப் போவதில்லை. இலங்கை வந்த போது அவரின் விரிவுரையை கேட்காத காரணத்தினால் விமர்சனம் தவிர்க்கப்படுகின்றது மாத்திரம் அல்ல அவரின் எழுத்துக்களில் பரீட்சையம் இல்லை.
எமது சமூக அமைப்பு எவ்வகையான சிந்தனை வடிவத்தினுள் கட்டப்பட்டுள்ளது என்பது மாத்திரம் அல்ல புறவுலகின் அழுத்தங்கள் மனிதர்களை எவ்வாறு மாற்றத்திற்கு உள்ளாக்குகின்றது என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் சில பண்புகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றது.
சிந்தனை பற்றிய தோற்றுவாய் என்ற சிந்தாந்த பிரச்சனை மாத்தரம் அல்ல அது ஒரு கோட்பாட்டு பிரச்சனையும் ஆகும். மனிதர்களின் உணர்வுகள் சிந்தனையை தீர்மானிப்பதில்லை. சமூக உற்பத்தியே
மனிதர்களின் சிந்தனையை தீர்மானிக்கின்றது. இவற்றை அறிவது என்பது நீண்ட படிப்பும், பொறுப்பும், ஆய்வும், தேடல் அவசியமானதாகும். இதன் தொடர்ச்சியாக சிறிய ஆரம்பம் அவ்வளவே.
மிகை உற்பத்தியை சந்தைப்படுத்துவதன் ஒரு அங்கமாக ஏகாதிபத்தியம் நுகர்வுக் கலாச்சாரத்தின் தினிப்புக்கள் வெவ்வேறு வகைகளில் இடம்பெறுகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ்சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் உள்ள கருத்துருவாக்கம் வெவ்வேறு தளங்களில் ஆனவையாகும். சமூக அமைப்பின் சிந்தனைவடிவம்; அதன் மாற்றம் என்பதும் புறநிலைத் தாக்கமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மிகை உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்காய் அலையும்
உலக ஒழுங்கானது அடிப்படையாக சுதேசிய விழுமியங்களை சிதைத்துக் கொண்டு தன்னுடைய சிந்தனை, வாழ்வியல், நுகர்வு, பழக்க வழக்கங்களை மக்கள் மீது திணிப்பதை அடிப்படையாகக் கொண்டது. இதனூடாக கலாச்சாரம் என்பது வரலாற்று ரீதியாக பார்க்கின்ற போது கொலனித்துவத்தின் விளைவும் அதன் தொடர்ச்சியும் உள்ளதால் அது மேற்கு சார்ந்ததாக இருக்கும். மேற்கைப் பார்த்தொழுகும் சிந்தனை வடிவம் என்பது எங்கும் நிறைந்திருக்கும். மறுகொலனித்துவத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப சிந்தனை வடிவம் கொடுப்பதும் சந்தைக்கான நபர்களாகவும், உழைப்பாளிகளை அதற்கேற்ப வளர்த்தெடுக்கும் முறையில் ஆங்கில மொழியை முன்னிறுத்துவம் அடங்குகின்றது.
ஆங்கிலத்தை முன்னிறுத்துவது இரண்டு விடயங்களை தொட்டுச் செல்கின்றது. ஒன்று ஆங்கில மொழியூறாக தேசிய இனப்பிரச்சனையில் மொழிக் கொள்கை பற்றியதை மடைமாற்றுவதும், ஏகாதிபத்திய சந்தைக்கான அடிமை மனிதர்களாக உருவாக்கிக் கொள்வதாகும்.
இதனைக் கூறுகின்ற போது சமூகவிஞ்ஞானப் பார்வையில் பரீட்சையம் அற்றவர்கள் போட்டி பொறமை வஞ்சகம் சூது என்ற சமூகப் பார்வையில் இருந்து முத்திரை குத்திவிட்டுச் செல்கின்றனர். ஈழப் போராளிகளின் அழிப்பிற்குப் பின்னால் இலங்கையில் பிரச்சனை என்பது வர்க்கப் (பொருளாதாரப்) பிரச்சனை மாத்திரம் தான் உள்ளது.
”பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்த போதிலும் அதற்கு பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பிரிவினைவாதம் இன்னுமொரு வடிவத்தில் தலைதூக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அந்த ஆபத்தின் முகட்டிலேயே நிற்கின்றனர்”. எனவே அடுத்த சந்ததிக்காக உழைப்பது என்பதும், தேசிய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, பொறுப்புக் கூறல், மறு சீரமைப்பு என்பதெல்லாம் பெருந்தேசியத்தின் நிழலின் கீழ் தான். தேசிய இனத்தின், தேசங்களின் வளர்ச்சியையும் தனித்துவத்தையும் அங்கீகரிப்பதல்ல.
இந்த நிலையில் இனமோதல்கள் ஏற்படாமல் அல்லது மனக்கசப்பை ஜீவகாரூண்யமாக அணுகுவதன் ஊடாக தீர்க்க முற்படுகின்றது. இதுவேதான் நல்லெண்ணம், எந்தப் படைப்பின்னாலும் நலன்களும், வர்க்கத்தின் செயற்பாடுகளும் உள்ளது. அதேபோல ஒவ்வொரு அங்கீகாரத்திற்குப் பின்னாலும் வர்க்கச் சிந்தனை இருக்கின்றது. இதில் யாழ் திரைப்படவிழாவானது ஐநா உரிமை அமர்வின் போது ஒழுங்குபடுத்தப்பட்டதும் கூட சிந்தனையைக்கு உட்பட்டதாகும். இக்காலத்தில் ஒழுங்குபடுத்தியதன் ஊடாக கவனம் என்பது திசை திருப்பப்படுகின்றது.
இதில் யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் படங்கள் என்பதும் ஒரு அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கின்றது.
மிகை உற்பத்தியை சந்தையின் அவசியம் என்பது ஏகாதிபத்திய பொருளுற்பத்திற்கான சிந்தனை என்பது அவசியமானது. அதில் உள்ள திரைப்படங்களைப் பார், அதில் உள்ள ரசனையைப் பார், அது கூறும் கருத்தைக் கேள் என்று போதிக்கும், கருத்துருவாக்கச் சிந்தனைகள் மேலோங்கியிருந்திருக்கின்றது அல்லது அது கருத்து மேலாதிக்கம் செலுத்துகின்றது என்ற சிந்தனை வடிவத்தை அறியாதவர்களாக ஏனோ தானோ என இரு என்பதும் வெளிப்படுகின்றது.
தம்மை நாகரீக மனிதர்களாவும், சமூக விஞ்ஞானப் பார்வையில் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களுக்கு ஒன்றும் புரியாது என்ற ”ஒன்றுமறியதாவர் (Petranism)” என்று முத்திரை குத்தப்படுகின்றது. இது அடிப்படையில் நிலமானியத்தின் எச்சத்தின் தொடர்ச்சிதான். அறிவுத் துறையை தனியுடமையாக வைத்துக் கொண்டு மற்றையவர்களை அடிக்கியாளும் சிந்தனை வடிவமேயாகும்.
தம்மை நாகரீக மனிதர்களாவும் உயர் குழாத்தினுள் (Global elites) நுழைகின்ற வேகத்தில் சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் கருத்தியல் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை அல்லது ஆர்வம் இல்லை (வர்க்கப் பண்புமாற்றம் நடைபெறுகின்றது). குறிப்பான விடயங்களில் இருந்து திசைதிருப்பிக் கொள்ளவும் இசைந்து போகும் மேட்டுக்குடி நிலைப்பாடுகள் திரைப்படவிழாவின் காலத்தில் (தனிநபர்கள் மீதான விமர்சனம் தவிர்க்கப்படுகின்றது) வெளிப்பட்டது.
இலங்கை போன்ற குறைவிருத்தி முதலாளித்துவம் கொண்ட நாடுகளில் சமூக நிறுவனங்களின் வளர்ச்சி என்பது முழுமையடையாத நிலையில் உள்ளது. நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கு துணைபோவர்கள் முதலில் நுனிநாக்கில் ஆங்கிலத்தினை உச்சரிக்கும் ஒரு பகுதியினராவர். இந்தப் பகுதியினர் பல்வேறு துறைகளில் பங்காங்றுபவர்களாக உள்ளனர்.
இவர்கள் ஊடகம், பல்வேறு திணைக்களங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பங்காற்றுபவர்களாக உள்ளார்கள். இவர்களின் மேட்டுக்குடியினர் அதிகமான இவ்வாறான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதும் கருத்துருவாக்கிகளாக அமைவது இயல்பானது. இன்று இங்கு திரைப்படச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறவர்க்ள பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகம் பங்கு கொள்ளும் இடத்தில் அந்த செயற்பாட்டை நசுக்கி தம் கையில் அந்த ஆளுமையை எடுப்பது அல்லது அவ்வாறு ஒன்று நிகழாமல் தடுப்பது யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதி (சிந்தனையில் சாதியம் தொடர்வது என்பது குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியில் பிறக்க
வேண்டிய தேவையில்லை) புத்திஜீவிகளின் நோக்கமாகவும் இருந்தாலும் எவ்வித ஆச்சரியும் இல்லை.
இவர்கள் சமூக மாற்றம், பொருளாதார அமைப்பு பற்றி அக்கறை அற்றவர்களாக இருப்பதுடன் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் சிந்தனை கொண்டவர்களா இருப்பதை பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றது. சமூகத்தின் தேவை சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்கு, மக்களின் அடிப்படைத் தேவை அது சார்ந்த மாற்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கம் அற்றவையாக அதாவது அரசு தனது கடமையில் இருந்து தவறிக் கொண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் - அரசு ஒப்படைத்து விட்டு தனது இருப்பை மாத்திரம் அரசு காப்பாற்றிக் கொள்கின்றது.
உழைப்பவர் அல்லது உற்பத்தி சக்தியை விற்பவர் அதனை வாங்குபவர் என்ற பொருளாதார அமைப்பை கட்டிக்காக்கும் சித்தாந்தம் அடிப்படையில் தொடர்வது, தேவையான வகையில் மாற்றுவது, சீர்படுத்துவது இவற்றை தீர்மானிக்கும் சக்திகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
சிந்தனைமாற்றம், கட்டமைப்புமாற்றம், கொள்கை திசைமாற்றம் என்பது அலசியாராயப்பட வேண்டும். அரைநிலப்பிரபுத்துவத்தின் மீது தான் கொலனித்துவத்தின் ஆட்சியமைப்பும்- அரசியலமைப்பும் விட்டுச் சென்றது. அரைநிலப்பிரபுத்துவ சமூக உறவில் முதலாளித்துவத்திற்கு ஏற்ப சிந்தனைவடிவம் வளர்ந்து அல்லது தன்மை தகவமைத்துக் கொண்டிருக்கின்றது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திய கட்டத்திற்கு வந்தடைந்த போதும் அதற்கேற்ப சிந்தனை வடிவத்தை தொடர்ந்தும் ஏற்படுத்துகின்றது. சிந்தனை வளர்ச்சிப் போக்கினை அறிந்து கொள்வது நல்லது. குறிப்பாக இலங்கை முழுவதும் ஏகாதிபத்தியத்தின் கீழ் வந்துள்ள நிலையில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ்- சிங்க தரகு வர்க்கம் இணைந்து செயற்படுகின்றன.
ஏகாதிபத்திய கருத்துருவாக்கம்
நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு அதுதான் சொந்த மேளத்திற்கு சொந்த ஊரில் மதிப்பிராது என்று இந்தப் பழமொழியைப் போலவே தன்னையே சுரண்டும் சிந்தனைக்கு இடம் கொடுத்து, தமது உயர்வை மற்றவர்களின் தயவிலும், தமது உழைப்பை அன்னியர் பிடுங்கிச் செல்ல அனுமதிப்பதாகும். தனித்துவவாதச் சிந்தனை என்பது ஏகாதிபத்திய கட்டத்திற்கான சமூக உறவாகும். இன்று இருக்கும் மேற்கின் சிந்தனை வடிவமும் கிரேக்கத் தத்துவாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களைக் கடந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது தான். கால்வினும் லூதரும் மதத்தினை தனிமனிதத் தேர்விற்கு உட்பட்டதாக மாத்திரம் அல்லாது கத்தோலிக்க மதத்தில் உள்ள நிலப்பிரபுத்துவக் கூறுகளுக்கு ஏதிரான போராட்டத்தினை மேற்கொண்டார்கள். முதலாளித்துவத்திற்குரிய சிந்தனை முறையாக பிரெட்டஸ்தாந்து மதத்தினை பொருத்திக் கொண்டார்கள்.
தமிழ் பரப்பில் மதங்களும் அரசிற்குப் பின்னால் துணைநின்ற வரலாறுகளும் இருக்கின்றது, தொடர்கின்றது. பக்தி இலக்கிய காலத்தில் சைவம் விவசாயத் தொழில்துறையை மேற்கொண்ட நிலப்பிரபுக்களுக்கும், சமணம் என்பது வணிக வர்க்கத்திற்கு துணையாக நின்றுள்ளது. பௌத்தமும் அரசின் பின்னால் செயற்பட்டதையும் வரலாற்றாசிரியர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறே கொலனித்துவ காலத்தில் கொலனித்துவத்துக்குரிய கருத்துருவாக்கிகளாக கிறிஸ்தவ சமயம் இருந்திருந்திருக்கின்றது.
தனிமனித உரிமையை நிலைநிறுத்தும் சிந்தனை என்பது பிரெஞ்சுப் புரட்சியின் ஊடாக முதலாளித்துவ ஜனநாயக வழிவகையானதாக வளர்ந்துள்ளது. இன்று பொருளாதார வளர்ச்சி ஊடாக தனிமனித துருவமாக ஏகாதிபத்திய சமூக உறவு வளர்ந்துள்ளது. தனித்துவவாதச் சமூகச் சிந்தனையை உலகெங்கும் ஏற்றுமதி செய்வதில் வெற்றி கண்டுள்ளது. மனிதர்களை கூட்டாக சிந்திக்கவிடாது தனிமனித துருவங்களாக மாற்றுவதில் வெற்றிகண்டுள்ளது. ஏகாதிபத்தியப் பொருளுற்பத்திக்கு சார்பான சிந்தனை வடிவத்தை சிரமேற்கொண்டு சமூகத்தில் சேர்ப்பதற்கு பல
சமூகக் கூறுகள் தமது கடமையைச் செய்துள்ளார்கள். இது எவ்வாறென்று வரலாற்று ரீதியாக பார்ப்போம்.
முதலாளித்துவத்தின் உச்சமான ஏகாதிபத்திய கட்டத்திற்கான சமூக உறவில் வாழ்கின்ற போதும் அரைநிலமானியச் சிந்தனைகளை தொடர்ச்சியான பேணும் வடிவங்களாக இஸ்லாம், பௌத்தம், வைணவம், சைவம் ஆகிய மதங்கள் இருப்பதும் நிலமானியத்தினை பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருக்கின்றதையும் அவதானிக்க முடியும். இவற்றையும் மீறி ஏகாதிபத்திய நலன் சார் கருத்துருவாக்கம் நடைபெறுகின்றது.
மிகை உற்பத்தியை சந்தைபடுத்தல் காரணமாக ஏற்பட்ட நுகர்வுக் கலாச்சாரம், உணவு, உடை, சிந்தனை வடிவம் என
சமூகத்தின் அனைத்து தளத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவ்வாறு கோட்டு சூட்டுப் போட்டவர்களின் கதையைக் கேட்டு அழிந்தது தான் எமது தமிழ் சமூகம். கோட்டுச் சூட்டுப் போட்ட வக்கீல்களை அரசியல்வாதிகளை தமிழ் அரசியல் தலைவர்களாக்கி அவர்களின் வழிநடத்தலின் ஊடாக பெற்றுக் கொண்ட மேற்கத்தைய சிந்தனை விசுவாசம் எமது சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ளது.
அன்னியச் சக்திகளின் தயவினை நம்பியிருக்கும் சிந்தனை கீழத்தேய மக்கள் மத்தியில் புரையோடிப் போய்யுள்ளது. இந்தச் சிந்தனையை வெற்றி கொள்வதன் ஊடாக கீழத்தேசத்தவர்கள் சுயகௌரத்தை கொண்டவர்களாக தம்மை வளர்த்துக் கொள்ள முடியும். மேற்கின் சிந்தனை வளர்ச்சியே மேன்மையானதென்ற கருத்தியல் மேலாதிக்கச் சிந்தனையானது மனிதர்களின் அனைத்துச் செயற்பாட்டுத் தளங்களிலும் காணப்படுகின்றது. மேற்கின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும் மனவோட்டமானது அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளும் சிந்தனை முறையை ஏற்படுத்துகின்றது. இதனை வரலாற்றுப் போக்கில் இருந்து இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். இங்கு மேற்குலகின் சிந்தனை வடிவம் என்பது ( இங்கு மார்க்சியமும் மேற்கத்தைய சிந்தனை என்பதால் அது மேலான்மைச் சிந்தனை என்பதோ அல்லது அன்னியத் தத்துவம் என்று கருதுவது தவறாகும். ) ஏகாதிபத்திய பொருளாதாரத்தினை நிலைநிறுத்தும் சிந்தனைவடிவமேயாகும்.
அண்ணார்ந்து பார்க்கும் சிந்தனை
வௌ்ளையர்கள் என்றால் தமக்கு ஏதாவது செய்வார்கள், அவர்களினால் ஏதாவது மீட்சி கிடைக்கும் என்று நம்புகின்றார்கள். இந்தப் போக்கு என்பது சமூகத்தில் நீண்ட நாட்களாக உள்ள ஒரு கருத்தியல். நடிகர்களில் பகுத்தறிவாளர் என்று கருதப்படும் கமலகாசனின் அன்பே சிவத்தில் கூட கிறிஸ்தவர்கள் என்றால் அன்பு செய்பவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள் என்ற கருத்தியலை நிலை நிறுத்துகின்றது. இவ்வாறான சிந்தனை ஏற்பட வரலாற்றுக் காலத்தினை பின்னோக்கிப் பார்ப்பது அவசியமாகும்.
தமிழக தென்கடலோர சமூகத்தவர்கள் முத்துக்குளிப்பதற்கான உரிமை கோரி போராடிய போது மூர்கள், வெட்டுப்பெருமாள், நாயக்க மன்னர்களாலும் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலையும், பெண்கள் மார்பினை மறைப்பதற்கு உதவி புரியும் படியும் கேட்டே மதமாற்றத்தில் மேற்கொண்டனர். இவர்கள் இறைவனையும் மனிதர்களுக்குமான உறவிற்கு நேரான தொடர்பினை கண்டு கொண்டனர். சைவசமய குருக்களின் அன்றாட நடைமுறை பழக்கங்களும் புதிய மதத்தவர்களின் பழக்கங்களும் நேர் எதிரே மாறுபட்டவையாகவும், ஜனநாயகப்படுத்தப்பட்டதாகவும் அன்றைய மக்களிடையே நல்மதிப்பை பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். இன்னும் மேலே தென்னிந்தியாவில் வறுமை தலைவிரித்தாடியபோது மக்களுக்கு பசியை போக்கியவர்கள். இவர்கள் வரலாற்றில் கஞ்சித் தொட்டிகளை உருவாக்கி மக்களுக்கு உணவழித்துள்ளார்கள். இந்த மக்கள் வளர்ச்சி நிலை தொண்டர்களாகவே எண்ணினர்.
கிறிஸ்தவ சிந்தனையில் இருந்து உதிர்த்த உன்அயலானை நேசி என்ற சிந்தனையில் கீழும், யேசுவின் சிந்தனை ஊடாக விடுதலை என்ற விவிலியச் சிந்தனையின் ஊடாக இரச்சனிய சபை (salvation army) ஊடாக வறிய மக்களுக்கு உதவிட ஞாயிறு, தபக்காலங்களில் (Easter month) கோவில்களின் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு பெறும் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டதே தொண்டு நிறுவனங்களாகும். இந்த தொண்டு நிறுவனங்களின் முறைமை ஏகாதிபத்தியங்களும் பயன்படுத்திக் கொண்டன. இந்த தொண்டு நிறுவனங்கள் ஊடாக தன்னார்வ வேலைமுறை, அடையாள அரசியல் ஏற்றுமதி செய்தது.
வளர்ந்த நாடுகளில் தொண்டர் நிறுவனங்ள் ஊடாக சிரமதானம் என்பது ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சிரமதானத்தினை சமூகத்தின் மீதான பிரசைகளின் அக்கறையைக் காண்பிப்பதாகவும், சமூகத்தின் மத்தியில் கருத்தியல் அழுத்தத்தை கொடுக்கின்றது.வளர்ந்த நாடுகளில் புற்றுநோய் ஆராய்ச்சி, சிறுவர் துஸ்பிரயோம் அல்லது இருதய, வான்னூர்தி அவசரதேவை போன்ற தொண்டு நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இத்தொண்டு நிறுவனங்கள் ஊடாக நிதி சேகரிக்கப்படும். நிதியினைக் கொண்டு உள்ளுர் நிறுவனப்பற்றாக்குறையைத் தீர்த்துக் கொள்கின்றனர். சிலநிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் ஊடாகப் பெறும் நிதியைக் கொண்டே இயங்குகின்றது. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை கொண்டதாக இந்த தொண்டு நிறுவனங்களைப் பார்க்க முடியாது. இந்த கொண்டு நிறுவனத்தின் ஊடாக மக்களின் மக்களின் மீது மறைமுக சுமையையும், அரசின் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் தொண்டர்களாகவும், பற்றாக்குறையின் காரணத்தினை அறிய விடாது முக்கிய பங்காற்றுகின்றது
மேற்கு நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் வளர்ந்து வரும் தேசங்களிலும் இவ்வாறான தன்னியல்பான அமைப்புக்களை உருவாக்கி அரசின் கடமையில் இருந்து அரசினை தப்பிக்கும் வழிகளை காட்டுகின்றது. புரட்சிகர சக்திகளுக்கு இடைய+றாக இவ்வாறான தன்னார்வு நிறுவனங்கள் செயற்பாடுகள் இடையூறாக இருக்கின்றது.
சமூகமாற்றத்திற்கான அமைப்பானது சமூகத்தின் தேவையினை முன்னோக்கியதான வேலைமுறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். மக்களின் தேவைகள், அரசியல் உரிமைகளின் தேவைகளில் இருந்தும் அமைப்பின் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.
இதே போல கிராமங்களுக்கு வரும் நோக்கமே தானதர்மங்களைச் செய்வதற்குத்தான் என்றும் கருதுகின்றனர். வெள்ளைக்காரர் என்றால் நல்லது செய்யவருபவர்கள் எண்ணமும் கொண்டுள்ளதை அனுபவத்தில் இருந்து அறியலாம். சிறு சிறு உதவித் திட்டங்களை அமைத்து செயற்படுத்துவதன் மூலம் சாதனை படைப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மாயை உருவாக்கப்படுகின்றது. சந்தை மறுபங்கீட்டினாலும், நிதிமூலதனத்தினால் உருவாக்கப்படுகின்ற திட்டங்கள் பெரும் தொழில் முனைப்புக்களினால் விழுங்கப்படுவதை ஏற்க மறுக்கின்றது. கட்டமைப்பினை மாற்றங் கொண்டு வருவதன் மூலமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதை ஏற்க மறுக்கின்றது. சுயசார்பு நிலையை சிதைக்கின்றனர், சுயசார்பு நிலையில் நின்று செயற்படும் சிந்தனையை மழுங்கடித்து, மலடாக்கின்றது. எனவே போராட்டம் என்பது தனியே ஆயுதப் போராட்டம் மாத்திரம் அல்ல. மாறாக சிந்தனைத் தளத்திலும் மனிதர்களிடையே விரிசலை ஏற்படுத்துவதும் கூட்டுச் சிந்தனையை சிதைப்பதற்கு எதிரான போராட்டமும் தவிர்க்க முடியாது தொடர வேண்டியதே.
முள்ளிவாய்க்காலின் இறுதி முடிவிற்கு முன்னர் எம்மக்கள் ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினை மூடக்கூடாது என்று வேண்டிக் கொண்டார்கள். அன்றைய நிர்க்கதியற்ற நிலையில் வௌ்ளைக்காரர்கள் தம்மை காப்பாற்றுவார்கள் என்றும், அவர்களே தமது ஆபத்தாண்டவர்களாக எண்ணிக் கொண்டு கண்ணீருடன் வேண்டி நின்றார்கள்.
இவ்வாறான வெளிப்பாடுகே மக்களிடத்தில் தோற்றம் பெற்றுள்ளதுள்ளதின் வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் மக்களின் மரணஓலக்காட்சியாகும். இதனை (Cargo Cult) வானத்தில் இருந்து விழும் என்று எதிர்பார்ப்பது போல அன்னியரின் உதவியை இன்றையக் காலத்தில் யுத்தத்தின் பின்னரான மக்கள் இலங்கையில் எதிர்பார்க்கின்றார்கள். ஏகாதிபத்திய பொருளுறவிற்கு ஏற்ப சிந்தனைகளை ஏற்றுமதி செய்து கொள்கின்ற நிலையில் கருத்துருவாக்கிகளை இட்டும், கருத்துக்களையும் இட்டு அவதானமாக இருக்க வேண்டும். உலக மறுபங்கீட்டிற்காய் அலையும் ஏகாதிபத்தியங்களின்
உலக அரசியல் போக்கே தீர்மானிக்கின்றது.
சமூகத்தில் மேற்குப் பற்றிய ஐதீகம் என்பது இருந்துள்ளது. மேற்கில் தேனும், பாலும் கிடைப்பதாகவும், சொர்க்க பூமி என்று எண்ணும் சிந்தனை என்பது விதைக்கப்பட்டுள்ளது. இந்த ஐதீகத்தின் நிலை என்பது சமூகத்தில் முதலாளித்துவம் பற்றிய கருதுகோள் வளரவும், சமூகத்தின் சிந்தனையும் துணைசெய்ய பொதுவுடமைச் சிந்தனைக்கான எதிர்ப்பாக ஒரு கருத்துருவம் கொள்ளவைத்திருக்கின்றது.
திரைப்படவிழாவின் அரசியல் !!!
கல்வி:
முதலாளித்துவ பொருளுற்பத்தியும் அதனுடன் இணைந்த தொழிற்நுட்ப வளர்ச்சி ஐரோப்பாவை மையமாகக் கொண்டே இருந்திருக்கின்றது. முதலாளித்துவ பொருளுற்பத்திக்கு தேவையான அறிவைப் பெற்றுக் கொள்ள இலகுவாக தெரிவாகவுள்ளதும் மேற்குலமாகும். மேற்குல நாடுகளே கொலனித்துவ ஆட்சியையும், பொருள் ஏற்றுமதியையும் கொண்டு இருந்திருக்கின்றது.
கொலனித்துவ காலத்திற்கு தேவையான ஊழியர்களை உற்பத்தி செய்வதில் ஆரம்பித்த கல்வி முறையானது தொடர்ச்சியாக உள்ளது. கல்வியமைப்பு கொலனித்துவ கால தேவைகளையொட்டி உருவாக்கப்பட்டவைகளை அடிமைத் நாடுகள் பின்பற்றி வந்தன. பின்னர் ஆளும் வர்க்கம் தத்தம் நலன் கொண்டு கல்வித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டன. இத்துடன் நம்மீது திணிக்கப்பட்ட சம்பிரதாயங்கள், சிந்தனைகள், கடவுள்கள், சாதிய ஆச்சாரங்கள் போன்ற மேற்கட்டுமானத்தில் அமைந்த விழுமியங்கள் சமூகத்தை ஆளுமை செலுத்துகின்றன. நம்மீது திணிக்கப்பட்ட சம்பிரதாயங்கள், சிந்தனைகள், கடவுள்கள், சாதிய ஆச்சாரங்கள் எமது சமூகத்திற்கும் பண்பாட்டிற்கும் வரலாற்றிற்கும் உரிய கூறுகளை அறிய முடியாது எம்மீது அணியப்பட்ட அங்கிகளை தொடர்ந்தும் அணிந்து கொண்டே இருக்கின்றோம். இதிலிருந்து மீண்டும் சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் ஆராய்ந்து அறிந்து கொள்வது அவசியமாகும். ஆனால் பழைய சமூக பண்பாட்டு விழுமியங்களை ஜனநாயகமயப்படுத்துவது என்பது புதிய கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமாகும்.
கொலனித்துவ காலத்தில் இருந்து உயர் வர்க்கம் கல்வியைக் கற்க மேலைநாடுகளுக்கு சென்று கல்வி கற்றும் இருந்திருக்கின்றார்கள். அங்கு சென்று கல்வி கற்ற உயர்குடிகளின் சிந்தனையாதிக்கமும், மேற்கத்தைய கலாச்சாரத்தை பார்த்தொழுகும் தன்மையும் ஏற்பட்டது.
பண்டங்களின் மிகையுற்பத்திக்கு தேவையான சந்தையால் மேற்கத்தைய உணவுவகை, உடை என்று நுகர்வுப் பொருட்களின் அறிமுகம் என்பது அறிமுகப்படுத்துகின்றது. இதன் ஊடாக தனது நுகர் பொருளுக்கான சந்தையையும் அந்தப் பொருளிற்கான கிராக்கியினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மனித வர்க்கத்தையே ஏகாதிபத்திய பொருளுற்பத்தியை சார்ந்து இயங்க வைக்கின்றது.
பிரதேசங்களில் உள்ள உயர்வர்க்கத்தவர்களின்
வளர்ச்சி இருக்கும். அதேவேளை பிரதேசங்களில்
உள்ளவர்களின் வளர்ச்சி என்பது சில பிரதேசங்களில் அதிகமாகவும், நலிந்ததாகவும் இருக்கும்.
சமூகத்தில் உள்ள குட்டிமுதலாளிகளின் அளவின் பண்பு மாறுபட்டிருக்கும். கொலனித்துவ காலத்தில்
குறிப்பிட்ட சமூகத்தையும், வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் தான் உயர் கல்வி பெற முடிந்தது.
சமூகத்தில் உள்ள உயர் வர்க்கம் என்பது சாதிகளைக் கடந்தும் உருவாகின்றது. இது முதலாளித்துவ
கால கட்டம் வளர்கின்ற போது அதன் வேகமும் அதிகமாக இருக்கும் எனினும் அவை சக சந்தர்ப்பதைக் கொடுக்கும் நிலை தோற்றுவிக்கின்றது.
சாதியே உற்பத்தியை தீர்மானிக்கின்ற போது அந்தத் தெரிவு சாத்தியமில்லை. ஆனால் 1966 பின்னர் மூளை உழைப்பை வழங்குகின்ற அறிவுப்
பிரிவு எல்லாச் சமூகத்தவர்களிடம் இருந்து தோன்றுவது
புரட்சிகரமான நிகழ்வு நடக்கின்றது. இங்கு குறிப்பிட
வருவது என்னவெனில் தமிழ் தேசத்தில் அறிவு வர்க்கம் வெவ்வேறு அளவில் வளர்ந்து வரும்
என்பதாகும். ஆக தமிழ் சமூக அமைவுருவாக்கத்தில் பிரதேசங்களின் வளர்ச்சி
என்பது ஏற்ற இறக்கமாக இருக்க முடியும். இதன்
வளர்ச்சியையும், சமூக பொருளாதார, புவியியல்
நிலையையும் கவனத்தில் எடுக்காது சமூக ஆய்வையும் அரசியல் மதிப்பீட்டையும் செய்துவிடமுடியாது.
சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சி என்பது மொழியை
அடிப்படையாகக் கொண்டதே நியதியானதாகும். வரலாற்றில்
யூதர்கள், இஸ்லாமியர்கள் மதத்தினை முன்னிலைப்படுத்தி தேசியஇன அடையாளத்தை முன்னிறுத்தியதையும்
கவனத்தில் கொள்ள முடியும். சமூக ஒழுங்கமைவு என்ன என்பதை பின்னவீனத்துவம் தவறாக சுரண்டும்
பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப வியாக்கியானம் செய்யும். சமூகவியல் சிந்தனையில் அடையாள அரசியல் சிந்தனைப் போக்கில் அமைந்த செயற்பாடுகளை முகவர்களின் ஊடாக செயற்படுத்தப்படுகின்றது.
ஆனால் ஆங்கிலேயர் காலங்களில் உருவான அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோர் சமூகத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தவர்களாகவும் அவர்களின் பிள்ளைகளே உயர்கல்வியைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவர்களே பொருளாதார அமைப்பிற்கு ஏற்ரவாறான சிந்தனையையும், அறிவையும் பெற்று மறுவுற்பத்தி செய்தவர்கள். கொலனித்துவ காலத்தின் நிர்வாக அலகுகளில் பங்களித்தவர்களாகவும், அரச இயந்திரத்தில் அங்கம் பெற்றவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.
இத்துடன் முறையீட்டு அரச அலகுகள் பிரித்தானியாவில் இ ருந்ததும், மேல்முறையீடுகள் சம்பந்தப்பட்ட அலவல்களுக்கு செல்ல வேண்டிய தேவைகளும் அன்றைய சூழலில் இருந்தது. உதாரணத்திற்கு 1915களில் முஸ்லீம் -சிங்கள தேசிய இனத்தவர்களின் வழக்கிற்கு பேசவென பொன். இராமநாதன் சென்றிருந்தார். அவர் அந்த வழக்கை சிங்கள மக்களுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றிருந்தார். இவரின் இந்த வழக்கின் மீதான வெற்றியானது ஒரு புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது. (இதில் இராமநாதனை தரகுவர்க்கத்தின் பிரதிநிதியாகவும், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் கொள்ள முடியுமேயன்றி அவரை தமிழ் தேசிய இனத்தவர் என்பதற்காக தமிழர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் என்று வரையறுப்பது தவறாகும்.)
அரச நிறுவனக் கட்டமைப்புக்கு ஏற்ப அதிகாரிகள்,
(நீதி, அரசாங்க, பொதுநிர்வாகம் என சட்டத்தரணிகள்)
உருவாக்கம் என்பது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடனும், அதன் நிர்வாக அலகுகளுடனும் ஆரம்பிக்கப்படுகின்றது. (பிற்காலத்தில் மொழிக்கொள்கை ஊடாக சிங்கள தேசம் தன்தேசிய இனத்தின் அதிகார வர்க்கத்தை இருந்தியது என்பது கவனிக்கத்தக்கதாகும்) இவர்கள் ஊடாக அதிகாரமையமானது ஐரோப்பாவை நோக்கியதாக கருத்தமைவையும், கருத்தியலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இவர்கள் கற்ற கல்விக்கு பின்னால் பிரித்தானியாவில் படித்தவர்கள் என்ற அந்தஸ்தும், ஆங்கிலத்தில் பேசும் பேச்சும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆங்கிலத்தினை வீட்டில் பேசியும், ஆங்கிலத்துடனான தொடர்பாடல்களும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலம் தெரிந்து வைத்திருப்பது பிழைப்புக்கான ஒரு வழிமாத்திரம்; அல்லாது. சமூகத்தில் அந்தஸ்துக்குக்கு உரிய ஒன்றாக கருத்தியல் மேலாதிக்கமும் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக உருவாக்கப்படும் அதிகார வர்க்கம் என்பதும் அவர்கள் சார்ந்த நலனும்
தான் தேசியமாக கற்பிக்கப்படும் அவலமும் உள்ளது. அண்மையில் நலின் டி சில்வா என்ற சிங்கள
பௌத்த பேரினவாத கோட்பாட்டு வாதி தேசியக் கோசம் என்பது ஆங்கிலம் படித்தவர்களின் உருவாக்கியதாக
கூறியிருந்தார். ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல புறவயமான அம்சம் (Objective aspect); அதாவது தன்னிகழ்வான அம்சம் (Spontaneous aspect) முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கும் இது தூண்டும் விடயங்களை பற்றிய தெளிவு
அவசியமானது. சமூக ஒழுங்கமைவு பற்றிய புரிதல்
இல்லாத இடத்தில் இவ்வாறான பெருந்தேசிய வெறி தவிர்க்க இயலாது வெளிவரும்.
உலகின் ஆதிக்கத்தில் உள்ள தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதும் அது சமூகத்தின் சிந்தனையில் சுயாதிபத்தியச் சிந்தனையை சிதைப்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில மூலப்பாடசாலைகள் ஊழியர்களை உருவாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது எனினும் பிற்பட்ட காலத்தில் அது மற்றவர்களை தம் தாழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தின் மூலம் பேசுவதும் பேசமுடியாதவர்களை ஏளனமாகவும், தரம் குறைவாகவும் பார்க்கும் சமூகப் பார்வை உற்பத்தி செய்யப்பட்டடிருந்தது. ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களை உளவியல் ரீதியாக பாதிப்படைய வைத்தது. சொந்த மொழியில் பேசுவதே தரக்குறைவானது என்ற உளவியல் நோயை சமூகத்தில் உருவாக்கியிருந்தது. அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில் ஆங்கிலக்கலப்பைக் கொண்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு மொழி என்பது ஊடகமாகவும், கருவியாக (toolbox) வரையறுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆங்கிலம் தெரிந்தாலே சமூக அந்தஸ்தாகவும், அறிவாகவும் பார்க்கப்படும் சமூகமாகவே இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளது. ஆங்கில வழி கல்வி கற்காதவர்கள், அல்லது ஆங்கிலம் பேசவராது அல்லது தெரியாது என்ற காரணத்தினாலே சமூகச் செயற்பாடுகளில் இருந்து பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டார்கள்.
தந்தை பெரியாரிடம் கூட மேற்கத்தை கலாச்சாரம், பண்பாடு, மொழியினை பின்பற்றுவதன் ஊடாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற முடியும் என்ற கருத்தமைவு இருந்ததையும் கவனத்தில் கொள்தல் நலம். இங்கு ஒரு புதிய சமூகத்தினை படைக்க முற்படுகின்றோம் ஆனால் புதிய சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய தீர்க்கமான ஒரு பார்வையை கொண்டிருத்தல் அவசியமாகும். தந்தை பெரியார் முன்வைத்தது போன்று எம்கண்முன்னால் இருந்த பண்பாடு, கலாச்சாரம், மொழியை பின்பற்றக் கோர முடியாது. புதிய சமூகத்திற்கான தேடல் என்பது பாரம்பாரிய தமிழ் சமூகத்தில் இருந்தே ஆய்வுசெய்து முன்கொண்டு வரமுடியும். புதிய சமூகத்திற்கான அளவுகோள் என்பது உழுந்துப் போன அரைநிலமானிய, முதலாளித்துவ (ஏகாதிபத்திய ) சமூக விழுமியங்களாக இருக்க முடியாது. அவை எமது நாட்டின் பண்பாட்டை ஒட்டியதாகவும் புதிய பண்பாட்டைக் கொண்டதாகவும் இருக்கமுடியும்.
கறுப்புத்தான்:
கறுப்புத் தான் எனக்குப் பிடித்த நிறம் என்று வெறும் பேச்சிலேயே பேசும் சமூகச் சிந்தனை தான் மேலோங்கியருக்கின்றது. பெற்றோர் குழந்தை நிறமாக பிறக்க வேண்டி குங்குமப்பூவினை பாலில் கலந்து குடிக்கும் சமூகச் சிந்தனை சமூகத்தில் ஆழப்பதிந்துள்ளது. திருமணத்தின் போது நிறந்தினையும், அழகிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும். நிறத்தின் மீதான கருத்தியல் பார்வையில் வெளிப்படையாக சிக்கியதாகவே இந்தச் சமூகம் இருக்கின்றது.
ஏனெனில் கறுப்பு - வௌ்ளை என்ற பிரிவினைகள் விவிலியத்தில் இருந்து வெளிவரும் சிந்தனையை கவனத்தில் கொள்ள வேண்டும். கறுப்பு என்பது பேய், பசாசு, அசுத்த ஆவீக்கு குறியீடாகவும், வௌ்ளை சமாதானம், அன்பு, நல்லது போன்ற சிந்தனையை சின்னத்தின் ஊடாக வெளிப்படுத்துகின்றது. வௌ்ளையே அழகானது என்று கல்வி, சினிமா, அன்றாடவாழ்வு என்று எமது அன்றாடவாழ்வின் எதிரொலிக்கின்றது.
வௌ்ளை என்பதே (Superior ) மேன்மைகொண்டது என்ற கருத்துருவாக்கம் சமூகமயப்படுத்தலின் ஊடாக சமூகத்தின் உறுப்பினர்களிடையே சமூக நிறுவனங்கள் ஊடாகவும், குடும்பத்தின் ஊடாக மனிதர்களிடையே புரையோடுகின்றது. இந்தவகையில் மேற்கு நாடுகளின் கலாச்சார விழுமியங்களே அளவுகோளாக கருதப்படுகின்றது. இந்த கருத்தியலைக் கொண்டு தன்னுடைய உற்பத்திப் பொருளான நிறக்கூட்டல் என்ற பொருளை விற்பனை செய்கின்றது.
மேற்கு நாட்டு இராதந்திரிகள் சமாதான (2002-2004) காலத்தில் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்த போது நம்மவர் பௌவியமாக பழகியதை காணனொளிகளில் காணமுடியும். பௌயத்திற்கு அடிப்படையாக நம்முன்னோர் பார்வையில் மற்றவர்களை மதிப்பது என்று குறுக்கிப் பார்த்துவிட முடியாது. மாறான பௌவியம் என்பது நிலமானியம் சிந்தனை சார்ந்ததாகும். அவ்வித பௌயத்தன்மையை
முதலாளித்துவ ஜனநாயகத் தன்மையைக் கூடக் காணமுடியாது. (பெயர் சொல்லி அழைப்பது, தாழ்வுச் என்ற நிலையை
வெளிப்படுத்த தேவையில்லை)
இவ்வாறே வெள்ளையர்கள் என்றால் உயர்வானவர்கள், தானம் தருமம் தருவான், முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் ஐநா முன் கதறிஅழுதார்கள் . முள்ளிவாய்க்கால் காலத்தில் கடமையில் இருந்து வெள்ளை அதிகாரிகளிடம் வேண்டி நின்றது கூட அவலத்துடன் கூடிய பௌயம். எமது மக்கள் கதறியழுத சத்தத்தினை கேட்காது இருந்த ‘சர்வதேச‘ சமூகம் நீதி தரும் என்று அரசியல்வாதிகள் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஏன் தீவிரமாக இருப்பதைக் காட்டிலும், அமைதியாகவும், பணிந்தும், பௌயமாகவும் இருக்க வேண்டும் என்று போதிக்கும் இணக்க அரசியல் பாதையும் நம்மிடம் உண்டு.
சர்வதேச திரைப்பட வாரம்
சர்வதேச திரைப்பட விழாவின் பின்னுள்ள அரசியலும்
தமிழ் தேசத்திற்கு இடையே நடைபெறும் கருத்தியல் யுத்தம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதற்குப் பின்னால் மாரடிக்கும் கூட்டம் என்பது சமூகத்தில் இறக்கப்பட்டது. மிகையுற்பத்திக்கான சந்தை ஒரு அங்கமாக ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரத்தின் திணிப்பே யாழ் சர்வதே திரைப்படவிழாவாகும்.
உலகமயமாதல் (மிகையுற்பத்திக்கான
சந்தை ) என்பது
அடிப்படையாக சுதேசிய விழுமியங்களை சிதைத்துக் கொண்டு தன்னுடைய சிந்தனா, வாழ்வியல், நுகர்வு, பழக்கவழக்கங்களை மக்கள் மீது திணிப்பதை அடிப்படையாக கொண்டது. இதனுடைய நுகர்வுக் கலாச்சாரம் என்பது மேற்கு சார்ந்ததாக இருக்கப்படும். இந்த அடிப்படையில் இருந்து திரைப்பட விழா பார்க்கப்படுகின்றது. இதனை கூறுகின்ற போது சமூக விஞ்ஞானப் பார்வையில் பரீட்சையம் அற்ற நிலையில் போட்டி பொறாமை வஞ்சகம் என்ற சமூகப் பித்தலாட்டச் சிந்தனையுள் முடக்கிவிடும் அவலமும் இருக்கின்றது. எந்தப் படைப்பிற்கும் பின்னால் வர்க்கம் இருக்கின்றது. அதேபோல ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் பின்னாலும் வர்க்கநலன்- வர்க்கச்சிந்தனை உண்டு. இதில் யாழ் சர்வதேச திரைப்படவிழா என்பது ஐநா.மனிதவுரிமை அமர்வின் போது நடத்தப்படுவது தற்செயலானது அல்ல. அங்கு திரையிடப்படும் படங்கள் என்பது ஒரு அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கின்றது. எனவே இதனை விமர்சிக்கக் கூடாது என்று கூறுவது ஜனநாயக மறுப்பாகும்.
ஏகாதிபத்திய பொருளுற்பத்திற்கான சிந்தனை என்பதை அலசிப்பார்க்காதே, அதில் உள்ள திரைப்படங்களில் உள்ள அலகியலைப் பார், அதன் வெளிப்பாட்டு முறையைப் பார், அது கூறும் கருத்தைக் கேள் என்று போதிக்கும், கருத்துருவாக்கம் சிந்தனைகளே மேலோங்கியிருக்கின்றது அல்லது அது கருத்து மேலாதிக்கம் செலுத்தப்படுகின்றது என்ற சிந்தனை வடிவத்தை அறியாதவர்களாக ஏனோ தானோ இருக்கவும், தம்மை நாகரீகமனிதர்களாகவும், உயர் குழாத்தினுள் (Global elites) நுழைகின்ற வேகத்தில் சமூகத்திற்கு எதிராக தொடுக்கும் கருத்தியல்பற்றி கதைப்பதை விரும்புவதில்லை அல்லது ஆர்வம் இல்லை.
குறிப்பான விடயத்தில் இருந்து திசைதிருப்பிக் கொள்ளப்பட வேண்டிய நிலையில் ஆளும் வர்க்கம் இருக்கின்றது. அதனை விளங்கிச் செய்கின்றார்கள். ஆனால் ஒடுக்கப்படும் மக்கள் அதற்குப் பின்னால் செல்ல முடியாது. அது ஈழ
தேசத்தின் தேவையில் இருந்தும், புரட்சிகர நடைமுறையில் இருந்து விலகவைப்பதாகும்.
Care
international என்ற அமைப்பு சில ஆதங்கங்களை முன்வைத்திருத்தது. அதாவது ஈழ சினிமாவானது அமைப்பு வடிவம் அற்று உதிரியாக இருக்கின்ற நபர்களைக் கொண்டே திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றது என்பதாகும். திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு அமைப்புக் கூட இல்லை என்பதாகும். இந்த நிலையில் பிரபல்யமான பௌத்யன் முக்கர்ஜி, எடிட்டர் லெனின் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இவர்கள் மாத்திரம் அல்ல ஈழத்தமிழ் பிரபல்யங்களும் இந்த திரைப்படவிழாவை வரவேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் இந்த முயற்சி யுத்தத்தின் பின்னால் வளர்ந்து வரும் உயர், மத்திய தரவர்க்கத்திற்கும், மேட்டுக்குடியினருக்குமான ஒரு தீனியாக இந்த முயற்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சமூகத்தில் படித்த, பணம் படைத்த பிரிவினர் எப்பவும் அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சி எடுத்துக் கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் கலை மக்களுக்கானதா அல்லது கலை கலைக்கானதான என்ற வாதத்தினை முன்வைத்தால் கேட்பவர் அர்ப்பத் தனமானதாக தோன்றக் கூடும். இங்கு வர்க்கமற்ற சிந்தனைவடிவம் என்பது எழுத்தாளர்கள், புத்திஜீவிகளிடையே இருக்கின்றது. இதனால் வளரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பிரமுகர்களுக்குப் பின்னால் சென்று தம் அந்தஸ்தை நிலைப்படுத்துகின்றார்கள். இந்த அந்தஸ்து என்பது கொள்கை பின்தள்ளப்படுகின்றது.
தமிழ்- சிங்கள- முஸ்லீம்- மலைய மேட்டுக்குடிகளுக்கான பொதுச் சந்தையாகவும், கருத்துருவாக்கத்திற்கான மையப் புள்ளிக்கான ஊடகமாகவும் இந்த திரைப்படவிழா ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு பிரபல்யமானவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புவடிவம், கொண்ட ஈழதமிழ் திரைப்படத்துறையில் வளர்ச்சி நிலை என்பது பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. சிங்கள, வங்காளம், மலையாளப் படங்கள் என்ற தரத்திற்கு இல்லை என்பது கவனிக்கப்படவேண்டும். (இதன் பொருள் ஈழ தமிழ் சினிமான வளரக் கூடாது என்பதல்ல) சினிமாவில் வளர்ச்சியடைந்த கொழும்பை என்ற மையத்தை விட்டு தமிழ் பகுதியில் நடத்த தாராளமனம் காட்டுவது என்பது அரசியல் சார்ந்ததாகும். இந்த தாராள அரசியல் என்பது தெரிவிற்கு உட்பட்டதாக இருப்பது தான் அரசியல் கபடத்திற்கு உட்பட்டதாகும்.
திரைப்பட வளர்ச்சிதானா வடக்கு கிழக்கில் முக்கிய பிரச்சனை? அதனை விட பிரச்சனை இல்லையா? அப்போ சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை தீர்ந்து விட்டதா? படைக்குறைப்பு ஏற்பட்டுள்ளதா?
ஏகாதிபத்திய சிந்தனை என்பது பொருளாதார நலன் சார்ந்ததாகும். அது தன் பொருளாதார நலன் சார்ந்ததாகும். இந்த வகையில் தான் ஈழதேசத்திற்கான போராட்டத்தில் ஆயுத ரீதியாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தில் எழும் எதிர்ப்புக்குரல்களை திசைதிருப்புவது இன்றைய தேவையாகின்றது.
ஈழதேசத்தின் மீதான இராணுவ வெற்றியின் பின்னரான காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்து, அதில் இருந்து இலங்கையில் சிங்கள தேசம் என்ற சிந்தனையில் சிறுபான்மையினரை ஒற்றைத் தேசத்தின் குடிகள் என்ற அடிப்படையில் சலுகைகளை வழங்கி தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. (not constitutional right but only institutional rights
–SOVEREIGNTY Vs Right of Self Determination of NATIONS- இறைமை என்பது ஆளும் வர்க்க அரசியல் அதிகாரம்) உரிமைக்கான சிந்தனைக்குள் அனைத்தையும் அடக்கும் சிந்தனை போக்கை கொண்டதாக இருக்கின்றது.
இந்த அடிப்படையில் இருந்து சமூகத்தின் போக்கை மடைமாற்ற வெவ்வேறு வழிகளில் சிறிலங்கா ஆளும் வர்க்கம் செயற்படுகின்றது. இதனை சர்வதேச துருவ அரசியல் போக்கில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படுகின்றது. சிங்கள பெருந்தேசியவாதத்தின் அடிக்கட்டமைப்பு என்பது தொடர்ச்சியாக பாதுகாத்து வருவதில் இரண்டு பெருந்தேசியவாதக் கட்சிகள் மாத்திரம் அல்ல சிங்கள பௌத்த மையவாதத்தினுள் சிந்திக்கும் போலி இடதுசாரிகளும் துணையாக நிற்கின்றார்கள். இந்த வகையில் இருந்துதான் கருத்துருவாக்கங்கள் அணுகப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசிய இனமக்களுக்கு சலுகைகளை கொடுக்கத் தயாராக இருக்கும் அன்பு உள்ளத்தை போற்றிக் கொள்ளவும், மக்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கும் யுக்திகளை மேற்கொள்கின்றது.
சிந்தனை மரபு ஒரு பொருளாதார நலனுக்குரியதாக செயற்படுவதும், கட்டமைக்கப்படுவதும் அச்சிந்தனைகளை இருக்கின்ற பொருளாதார அமைப்பு தகவமைத்துக் கொள்வதும் நடக்கின்றது. இந்தச் சிந்தனை என்பது ஏதோ இன்று தோன்றியதில்லை. இது ஆண்டாண்டு காலமாக கடத்தப்படும் சிந்தனைவடிவமாகும். மரபு ரீதியாக கடத்தப்படும் சிந்தனை வடிவங்கள் பொருளாதார நலன் சார்ந்ததாக இருப்பதும் அந்தந்த சிந்தனை என்பது பொருளாதார அமைப்பின் வடிவத்தையும் அதன் காலத்தையும் சார்ந்தாக இருக்கின்றது.
சிந்தனைகளை சுயேட்சையானவையாப் பார்க்க முடியாது. ஏனெனில் ஒரு சிந்தனைக்கான நியாயம் என்பது அந்த பொருளாதார அமைப்பைச் சார்ந்ததாக இருக்கின்றது. ஒரு சமூக வரலாற்று நீதி முறை என்பது வளர்ந்து மாறிக் கொண்ட அரசியல் பொருளாதார அமைப்பிற்கு பொருத்தமாக இருக்கப் போவதில்லை. இதனால் சிந்தனைகள் நீதி நெறி, அறம், வரையறைகள் என்பன ஒரு பொருளாதார உற்பத்தி முறைக்கு ஏற்பவே இருக்கின்றது.
இங்கு மனிதர்களின் சிந்தனை வடிவம் அது சார்ந்த அறம் என்பது இந்த பொருளாதார அமைப்பில் இருக்கின்ற அனைத்துப் பரிமாணங்களின் இருந்து பெறப்படும் சிந்தனைகளில் வெளிபடுபவைகளே. இங்கு மனிதர்களின் சிந்தனைப் போக்கு மதச் சிந்தனையும் உள்ளடக்கி இருப்பதும் மதங்களின் சிந்தனையும் கலந்திருப்பதும் இயல்பானது.
இறுதியாக சமூகத்தில் விதைக்கப்படும் விடுதலைக்கெதிரான சிந்தனை வடிவங்கள் எதுவென அடையாளம் காணப்பட்டு நிராகரிப்பதன் ஊடாகவே வெற்றி கொள்ள முடியும். இந்த உலகத்தினை இயற்கை பற்றிய அறிவு, சிந்தனை பற்றிய அறிவு, சமூகம் பற்றிய அறிவை விஞ்ஞான ரீதியாகவே ஆராய்ந்து அறிவதன் ஊடாகவே சாத்தியமாகும்.
சமூகத்தின் பிரபல்யங்கள் கருத்துருவாக்கத்தின் பின்னால் செல்கின்ற நிலையில் சமூகம், இயற்கை, சிந்தனை ஆகியவற்றை கற்றுத் தரும் ஒரே ஒரு சித்தாந்தம் மார்க்சியமேயாகும். மார்க்சிய சிந்தனையை வளர்த்துக் கொள்வதன் ஊடாக அடிமையாக வைத்துக் கொள்வதை நியாயப்படுத்தும் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
Tholar Velan
17 sep 2015
Shared with Public
---------------------Jaffna is one of the major epicentres of Tamil culture with its own beauty and complexity. An International Film festival in Jaffna is long overdue and this is the beginning of a new and innovative film culture for Tamils all over the world.”
Dr. Cheran Rudramoorthy
University of Windsor, Canada
