சாதியக்கட்டமைப்பை விளங்கிக் கொள்வது !!
சாதியை விளங்கிக் கொள்வது என்றால் அரசியல் பொருளாதார கட்டமைப்பை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமாகும். ஆனால் மக்களிடையே உள்ள அகவுணர்வு அணுகுமுறை ஊடாக சாதிய தோற்றப்பாட்டை, சிந்தனைபற்றி விளங்கிட முடியாது. சமூகத்தில் இருக்கும் சிந்தனைக் கண்ணோட்டத்தில் இருந்து சாதியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு அணுகுவது என்பது ஒடுக்குமுறை சமூக அமைப்பைப் பாதுகாத்துக் கொள்பவர்களுக்குப் பயன்படும். ஆனால் சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்களுக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை.
மார்க்சியத்தின் வழியில் சாதியத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? சாதியத்திற்கும் பொருளாதார அமைப்பிற்கும் அதன் மேல் எழுந்த சிந்தனைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பதை சமூகத்திற்கு விளக்க வேண்டியிருக்கின்றது. சமூக அமைப்பு, சமூகத்தின் சிந்தனைக்கட்டமைப்பு, அதன்பால் அமைந்த சமூக உறவு என்பதை விளங்கிக் கொள்ள விஞ்ஞான அணுகுமுறை அவசியமானதாகும். இதுவே அரசியல் பொருளாதார விஞ்ஞானமாகும்.
மார்க்சியம் என்பது சித்தாந்தம் மனித வளர்ச்சியை, முதலாளித்துவப் பொருளாதாரத்தை, சமூகத்தை மாற்ற வழிகாட்டும் தத்துவமாகும். மார்க்சிய வழியில் மூன்று தத்துவக் கூறுகளை முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மார்க்சியம் வழிகாட்டும் அணுகுமுறை முன்னையவர்கள் சமூகத்தை விளங்கியதற்கு மாறுபட்டு சமூகத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் தத்துவப்பார்வையாகும். மார்க்சியம் என்பது அன்னியத் தத்துவம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. காரணம் மனிதவரலாற்றில் அறிவெழுச்சியின் மிக முக்கிய சிந்தனை வளர்ச்சிக் கட்டமே மார்க்சியமாகும்.
உற்பத்தி முறை, அரசியல் அதிகாரம் என்பதைத் தவிர்த்து சீர்த்திருத்தவாதம் மேலோங்கியுள்ளது. இது “பொருளாதாரப் போராட்டத்திற்காக அரசியல் போராட்டத்தை மறுப்பதானது சர்வதேச சமூக சனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகுவதாகும். தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு அனைத்தும் நமக்குப் போதிப்பதை மறப்பதாகிவிடும். (ப.56- லெனின் நூ.தி 1) தலித்தியவாதிகள், இடதுசாரிகள் பலர் பொருளாதாரவாதம் (தொழிற்சங்க, கூலி உயர்வு) மட்டும் தான் வர்க்கப் போராட்டம் என்று குறுக்கிவிட்டார்கள்.
தலித்தியர்கள் இடவொதுக்கீடு, தேர்தல் அரசியல் பகிர்வு என்று சாதிவாரியாக அணிதிரள்கின்றார்கள். அரசியல் அதிகாரம் பெறுவதுதென்பது தேர்தலில் சில சீட்டுக்களை பெற்று நாடாளுமன்றம், சட்டம் மன்றம் செல்வது மட்டுமேயாகாது. அரசியல் அதிகாரம் பற்றி பேசினால் இனவாதம், பிரிவினைவாதம், தேசியவாதிகள் என்று குறுக்கிவிடுகின்றார்கள். அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை வென்று சமத்துவ சமூகத்தைப் படைப்பது. அதற்கான அரசியல் போராட்டம் என்பது நீண்ட நெடியதாகும். ஆனால் சீர்திருத்தல்வாதத்தை தான் முன்வைக்கின்றார்கள்.
மார்க்சியத்தினை உள்ளதை உள்ளபடி சிதைக்காது மார்க்சிய அடிப்படையை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே மார்க்சிய வரலாற்று மாணவர்களின் கடமையாகும். ஆனால் கலாசாலையில் முன்வைக்கப்படும் (thesis) கோட்பாட்டை போல முன்னிறுத்தி ஒப்பிப்புச் செய்துவிட முடியாது.
மார்க்சியம் என்பதை மேலைநாட்டுத் தத்துவம் என்று குறுக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. மார்க்ஸ் எழுதியவற்றை ஏன் தோழர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனின், ஸ்ராலின், மாவோ எழுத்துகளை இயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப் போராட்டம் என்று மூன்று தத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து விளங்கிக் கொள்ள முடியும். பெரியார் பாதை, அம்பேக்கர் பாதை என்று பல பிரிவுகள் சமூகத்தில் செயல்படுகின்றார்கள். இவர்களின் பாதை எத்திசையை நோக்கிப் பயணிக்கின்றது என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து கொள்ள மார்க்சிய திறனாய்வு முறை பயன்படுத்தப்படுகின்றது. அறிவொணாவாதத்தை மார்க்சியமாக முன்வைப்பது மார்க்சியம் அல்ல. ஒவ்வொரு சமூகக் கட்டத்தினையும் கடந்து செல்வதற்கான வழிமுறைகள், போராட்ட யுக்திகள் என்பவை ஒரு புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டல் ஊடாக வெற்றியடைக் கூடிய முறையில் செயற்படுத்த முடியும். அதற்கு கட்சியும் சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
பொருளாதார அமைப்பே மனிதர்களின் சிந்தனை முறையைத் தீர்மானிக்கின்றது. சிந்தனை, சின்னங்களை அகற்றும் போராட்ட வடிவங்கள், அடையாளப் போராட்டங்கள், தன்னியல்புப் போராட்டங்கள் என்பதை சமூகமயப்படுத்துவதில் இருந்து தான் சமூகமாற்றத்தை பற்றிச் சிந்திக்க வைக்க முடியும். புதிய பொருளாதார அமைப்பும், அதன்பாலான சமூக உறவு தோன்றாதவரை முற்றுமுழுதாக சமூகத்தில் இருக்கும் சிந்தனைமுறையும், கருத்தியல் முறையும் மாற்றம் அடைவதில்லை.
2. அணுகுமுறையின் அடிப்படைகள்-
இன்றைய கல்வி முறையில் அணுமுறை அல்லது திறனாய்வு முறை என்பது ஒரு பாடநெறியாக இருக்கின்றது. ஆய்வுமுறைமை என்பது மூன்று கூறுகளை கவனத்தில் கொள்ளத் தயாராக இல்லாது, மூன்று கூறுகளை உதறிவிட்டு மார்க்சியதினை கேள்வி கேட்க முயற்சிக்க முடியாது. மூன்று தத்துவக்கூறுக்கு அப்பால் (விஞ்ஞானம், பொருளாதார முறை, வர்க்கப் போராட்டம்) இருந்து ஒன்றை மட்டும் விலத்தி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தும் ஆய்வுமுறைகளே மற்றைய அணுகுமுறையாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் மார்க்சியம் என்பது தனியே பொருளாதார நிர்ணயவாத திறனாய்வு முறையை மாத்திரம் முதன்மைப்படுத்துவதாகவும், வர்க்கவாதத்தை முன்னிறுத்தி குறுக்கி விடுவதால் போதாமை உள்ளதாக விமர்சிப்பவர்கள் உள்ளார்கள்.
மார்க்சின் படைப்புக்களில் இருந்தும் அதன் குறிப்புக்களில் இருந்தும் மார்க்சிய மானிடவியல் அணுகுமுறையில் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூல் ஏங்கெல்சால் முழுமையாக்கப்பட்டது. இங்கு இனக்குழும சமூக ஒழுங்குமுறை அவர்களின் இரத்த உறவில் அமைந்த வாழ்வு முறையை விளக்கும் ஆய்வு வழிகாட்டியாக இருக்கின்ற அடிப்படை நூலாக கொள்ள முடியும். மற்றைய முதலாளித்துவ- சமூக ஜனநாயகக் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்ட ஆய்வு முறைக்கு மாற்றாக மார்க்சிய லெனினிய அணுகுமுறைப் பார்வையை முன்வைக்கின்ற நூலாகும்.
மார்க்சின் தத்துவார்த்த வளர்ச்சிப் படிநிலையில் மார்க்சியம்- லெனினியம்- மாவோயிசமாக வளர்ந்துள்ளது. இன்று வளர்ந்துள்ள அனைத்துப் படிமுறைப் பாதைகளின் ஊடாகவே மார்க்சியத்தினைப் புரிந்து கொள்ளமுடியும். மார்க்சிய இயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப் போராட்டத்தினை புரிந்து கொண்டால் மட்டுமே நாம் வாழ்கின்ற சமூகத்தினை முழுமையாக ஆராய முடியும். அதற்கு துணைபுரிகின்ற மொத்தத்துவ கோட்பாட்டு அணுகுமுறையே மார்க்சியம் லெனினிய மாவோயிசமே. மொத்தத்துவம் என்னும் போது இயற்கை, பொருளாதாரம், முரண்பாடு- வர்க்கப் போராட்டம் என்பனவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஆய்விற்கு உள்ளாக்குவதாகும். இதற்கு அப்பால் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று ஒன்றில்லை. மூன்று தோற்றுவாய்களை நுணுக்கமாக அறிந்து கொள்வதன் ஊடாகவே புதிய கோட்பாட்டைப் படைக்கமுடியும்.
“எந்த” வகையான முரண்பாடானாலும் அதன் குறித்த தன்மையைப் (தனிஇயல்பு - particurlarity) பற்றி ஆராயும் பொழுது அது பருப்பொருளின் இயக்க வடிவம் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு, அதன் வளர்ச்சிப் போக்குகள் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு, ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கிலுமுள்ள முரண்பாட்டின் இரு கூறுகள், வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலுமுள்ள முரண்பாடு, ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முரண்பாட்டின் இரு கூறுகள் - எனப் பல்வேறு வகையானதாக இருக்கலாம். எந்த வகையான முரண்பாட்டினுடைய தனி இயல்பைப் பற்றி ஆராயும் போதும் இம்முரண்பாடுகள் அனைத்தின் சிறப்பு இயல்புகளைப் பற்றி ஆராயும் போதும், நாம் மனதிற் தோன்றுகிறபடி நடக்கும் அகநிலைப் போக்குடையவர்களாவும் தன்னிச்சைப் போக்குடையவர்களாகவும் இருக்கக் கூடாது. அவற்றை நாம் பருண்மையாக ஆராய்ந்தறிய வேண்டும் பருண்மையான பகுப்பாய்வு இன்றி, எந்தவொரு முரண்பாட்டின் குறிப்பிட்ட தனிஇயல்பு பற்றியும் நாம் அறிந்து கொள்ளமுடியாது. லெனினின் சொற்களை எப்போதும் நாம்நினைவில் கொள்ளுதல் வேண்டும். அவை பருண்மையான நிலைமைகளைப் பருண்மையான முறையில் பகுந்தாய்வு செய்ய வேண்டும் என்பனவாகும். (மாவோ) ஆய்வுகள் பருண்மையானதான அமையவேண்டும். சமூக ஒழுங்கமைவில் வெவ்வேறான முரண்பாடுகள் சமூகத்தில் உள்ளன. பல்வேறு அலகில் முரண்பாடுகள் உள்ளன. ஆய்வுகள் பிரிவுகளுக்குள்ளே பிரிவுகள் உள்ளன. அவற்றின் முரண்பாடுகள், பிரச்சனைகள் கண்டறியப்பட வேண்டும். ஆய்வுகள் புறநிலையாக அமைய அமையவேண்டும்.
பேராசிரியர்கள் நா. வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, கோ கேசவன் போன்றவர்கள் மார்க்சிய அணுகுமுறையைக் கொண்டே சமூக ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். அந்த ஆய்வாளர்கள் கூட மார்க்சியம் மேற்கத்தைய அன்னிய அணுகுமுறை என்று கூறியதில்லை. உலகின் எந்த கடைக்கோடியில் இருந்தாலும் மார்க்சியத்தினை முறையாக விளங்கிக் கொண்டால் எந்த நாட்டையும் ஆராய முடியும். மார்க்சியத்தின் புரிதல் பற்றிய பிரச்சனை என்பது மார்க்சிய முகாமில் உள்ள சிக்கல் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
2.1இயக்கவியல் பொருள்முதல்வாதம் (விஞ்ஞானம்)
இயக்கவியல் (விஞ்ஞானப் பரிசோதனை) என்பது மிகமிக முழுமையான, ஆழமான ஒருதலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சி பெற்ற வண்ணமுள்ள பருப் பொருளை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின்சார்பு நிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்அணுக்கள் தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது, இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல் வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் மார்க்ஸ் விரிவாக்கினார்.
பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவ ஞானமாகும். இதுவே முரணற்ற தத்துவ ஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லா போதனைகளுக்கும் ஏற்புடயதாகும். பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும் ஜனநாயகத்தின் எதிரிகள் முழு மூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞான கருத்துமுதல் வாதத்தின் பல்வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். கருத்துமுதல்வாதம் எதாவது ஒருவழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ, ஆதரிக்கவோ செய்கிறது. மார்க்சின் வரலாற்றுத்துறை பொருள்முதல்வாதம், விஞ்ஞான சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும், அரசியலையும் பற்றிய கருத்துகளில் குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும், உள்ளிணக்கமும் கொண்ட விஞ்ஞான தத்துவம் வந்துவிட்டது. –(28.மூ.த.கூ லெனின்- சுருக்கம்).
2.2 பொருளாதாரம்
பொருளாதார உற்பத்தி முறையானது வெவ்வேறு சமூக ஒழுங்கமைவை வரலாற்றில் உருவாக்கியிருக்கின்றது. இன்றைய குறைவளர்ச்சி முதலாளியத்திலும் பொருளாதாரம் பெரும் பங்காற்றுகின்றது.
“இப்போ புகழ்பெற்ற அடித்தளத்திற்கும் அதை விடக்குறையாத புகழ்பெற்ற மேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலான உறவைக்குறித்து மார்க்சும் ஏங்கெல்ஸ்சும் கொண்டிருந்த கருத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த நாம் விரும்பினால் அது பின்வரும் விதத்திலிருக்கும்.
1. உற்பத்திசக்திகளின் நிலை
2. அது நிர்ணயிக்கும் பொருளாதார உறவுகள்
3. குறிப்பிட்ட பொருளாதார “அடித்தளத்தில்” வளர்ச்சியுற்றிருக்கும் சமூக-அரசியல் அமைப்பு
4. ஓரளவிற்கு நேரடியாகப் பொருளாதாரத்தாலும் ஓரளவிற்கு அதன் அடிப்படையில் எழுந்திருக்கும் சமூக-அரசியல் முறையாலும் நிர்ணயிக்கப்படும் சமூக மனிதனின் மனப்பாங்கு, அந்த மனப்பாங்கின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பலவிதமான சித்தாந்தங்கள். (பிளெக்ஹனவ், பக். 109 மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் -சோவியத் பதிப்பு)
உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின் மீதும் தான் பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்படுகின்றது. இதன் மீதுதான் மேற்கட்டுமானங்களான சமயம் (மதங்கள்) குடும்பம், அரசாங்கம், நீதிமன்றம், சிறை, இராணுவம் என்ற நிறுவனங்கள் அமைகின்றன. .
உபரி உருவாக்கமானது ஒரு தொழிலாளி தன்னுடைய உழைப்புச் சக்தியினை விற்கின்றார். (யார் உற்பத்திச் சாதனங்களை வைத்துக் கொள்வார்களோ அவர்களிடம்) தொழிலாளி குறிப்பிட்ட மணித்தியால உழைப்பை தன்னுடையதும், தனது குடும்பத்திற்கான பரிபாலனச் செலவிற்கும் பாவிக்கின்றார். மீதி நேரத்தை கூலியில்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றார்கள். தொழிலாளியினால் மேலதிக உழைப்புப் பெறப்பட்டதே உபரியாகும். இதனை மிகைவருமானம் என்றும் கூறலாம். இவ்வுபரி மூலமாக தொழிற்சாலையின் ஒருபகுதி ஊழியர்களைத் (படிநிலை அதிகாரிகளைக்) தன்பக்கம் இழுக்கின்றது. மேலதிக வரும்படி அளித்தல் இதன் மூலம் தொழிற்சாலையின் நிர்வாகம், தலைமையை தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது. இவர்களே மேட்டுக் குடியினராக உருவாக்கப்படுகின்றனர்.
உபரியில் ஒரு பகுதியை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து பிரித்து மற்றவர்களுக்கு அதிகமாக ஊதியத்தை வழங்கி அதிகார வர்க்கத்தை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த அதிகார வர்க்கமே உழைக்கும் வர்க்கத்தை அடக்குபவர்களாவும், கண்காணிப்பவர்களாவும் இருக்கின்றார்கள். பாதுகாப்பு நிறுவனத்தை ஆளும் வர்க்கமானது தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு வேலையில்லா இளைஞர்களைத் திரட்டி தன்பாதுகாப்பிற்காக இராணுவத்தை உருவாக்கின்றது. இதன் மூலம் எதிரான எதிர்ப்புகளைக் கையாள்கின்றனர். தொடர்புசாதனங்கள் ஊடாக சிந்தனைச் சிதைவை மேற்கொள்கின்றார்கள்.
உபரியின் விளைவாகத் தோன்றியதே வர்க்க பேதங்கள். வர்க்கத்திற்கு அடிஅத்திவாரம் சொத்தாகும், சொத்து இல்லையெனில் வர்க்கம் இல்லை. வரலாறுகளும் வர்க்கத்தினால் உருவாகின்றதேயன்றி தனிமனிதர்களால் அல்ல. இதையே கம்யூனிசக் கட்சி அறிக்கையில் 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்” என்றனர். பழையவை அழிதலும் புதியவை உருவாகலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொரு வர்க்கத்துக்கு எதிர் வர்க்கம் இருந்து கொண்டே தான் வருகின்றது.
லெனின் வர்க்கங்களைப் பற்றிக் கூறும் போது வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் வகிக்கும் இடத்தாலும் உற்பத்தி சாதனங்களுடன் அவற்றிற்குள்ள உறவாலும், (மிகபெரும்பாலும் இது சட்டத்தால் நிலை நிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது) உழைப்பின் சமூக ஒருங்கமைப்பில் அவற்றிற்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தின் அவற்றின் செயலாட்சிக்கு உட்பட்ட பங்கின் பரிமாணங்களாலும் இந்தப் பங்கை அவை சுவீகரித்துக் கொள்ளும் முறையிலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் போது மக்கள் பகுதிகளாகும். வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஒர் அமைப்பில் தாம் வகிக்கும் வெவ்வேறு இடங்களின் காரணியாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற்றிக் கொள்ள முடியும் படியான மக்கள் பகுதிகளாகும்” உபரியின் இன்னொரு பகுதி மூலதனத் திரட்சியாகின்றது. மூலதனத் திரட்சியானது உற்பத்திச் சாதனங்களை கொள்வனவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன உலகிலே மனித வலுவிற்குப் பதிலாக இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. உபரியை உரிமையாகக் கொள்கின்ற வர்க்கமானது மென்மேலும் தனது சொத்தைத் திரட்டுகின்றது. இதன் காரணமாக சிறுவுடமையாளர்கள் பெரும் மூலதனத்திற்கு இரையாகின்றனர். உலகில் உள்ள 1விதமான பணக்காரர்களே உலகின் 50 வீதமான சொத்தை உரிமையாகக் கொண்டுள்ளார்கள். (https://www.theguardian.com/inequality/2017/nov/14/worlds-richest-wealth-credit-suisse) பொருளாதாரம் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகின்றது. பெரும்பான்மையான மக்கள் தெரிவுச் சுதந்திரம், வேலை வாய்ப்பின்மை, வறுமை, கல்வியின் பின்னடைவு என பல்வேறு பிரச்சனையை எதிர்க் கொள்ளும் மக்கள் கூட்டம் நகர்ப்புறத்தை நோக்கி படையெடுக்கின்றார்கள். உற்பத்திச் சக்தியை விற்க தயாராக இருக்கும் பாட்டாளிகளையும் உருவாக்குகின்றது. அதே வேளை இயற்கையுடனும், நிலத்துடன், சாதிய ஒடுக்குமுறையுடன் பிணைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியேற்றம் அடைகின்றனர்.
2.3வர்க்கப் போராட்டம்
வர்க்கப் போரட்டத்தைப் பற்றிய ஆய்வே மூன்று தத்துவக்கூற்றில் ஒன்றாகும். நீதி, மதம் அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும், பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும், அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு, அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்புமுறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டே இருப்பார்கள். வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன..? பழமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படி படைத்து தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றவையுமான சக்திகளை, நம்மை சூழ்ந்துள்ள இதே சமுதாயதிற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்து அணி திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ---தோழர் லெனின். சமூகக் கட்டமைப்பை உள்வாங்கிவிடாத யுத்த, செயற்பாட்டு கோட்பாடுகள் முன்னிறுத்தப்படுகின்றன. நிலமானிய உடைவில் தனிமனிதர்கள் நிலத்தை விட்டு தூக்கியெறியப்படுகின்றார்கள். பயன்பாட்டுப் பெறுமானங்களின் ஊடாக வாழ்வியலை சமாளித்துக் கொண்டிருந்த சமூகம் தாம் உடமையாகக் கொண்ட இயற்கை நிலத்தைக் கூட விட்டுத் வெளியேறுகின்றார்கள். இவர்களின் உற்பத்திச் சக்தியை அதிமிதமாக வைத்திருப்பதன் ஊடாக குறைந்த கூலியை கொடுக்க முடிகின்றது. எந்த வகையிலும் உற்பத்திச் சக்தியை விற்க வேண்டும் என்ற நிலையில் உழைப்பாளிகளை வைத்திருக்க முடிகின்றது. இது மூளை உழைப்பு, (ஆய்வு, உயர்பதவி, ஆளும் வர்க்க) உடலுழைப்பு என்று எங்கும் இவ்வாறு வைத்திருப்பதன் ஊடாக (கொத்தடிமைகளை) குறிப்பான வட்டத்தில் இருந்து மீறிப் போகாத பெரும் கூட்டத்தை உருவாக்கிவிடுகின்றார்கள்.
வர்க்கச் சமூகத்தில்
-முற்போக்குவாதிகள்-
-நடுநிலையாளர்கள்
-பிற்போக்குவாதிகள்.
“பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்திறகும் இடையே இன்னொரு பிரிவைச் சேர்ந்த மக்கள் இருக்கினறார்கள். அவர்கள் முதலில் இந்தப் பக்கமும் பின்னர் அந்தப் பக்கமும் சாய்வார்கள். எப்போதும் எல்லாப் புரட்சிகளிலும் நிலைமை இதுவே. பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் இரு பகை முகாம்களாக இருக்கும். முதலாளித்துவ சமுதாயத்தில் அவற்றுக்கிடையே இடைத்தட்டுப் பகுதிகள் இருக்கக் கூடாது என்பது அறவே சாத்தியமல்ல. இந்த ஊசலாட்டக்கார்கள் நிலவுவது வரலாற்று வழியில் தவிர்க்க முடியாதது. துரதிருஷ்டவசமாக நாளை யார் பக்கம் நின்று போராடப் போகிறாம் என்பதைத் தாமே அறியாத இந்த நபர்கள் ஓரளவு நீண்ட காலத்துக்கு இருக்கத்தான் செய்வார்கள்.” (189-9 லெ9) வர்க்கங்களின் ஊசலாட்டம் இருக்கும். இதனை நடைமுறையில் பகுத்தாய்வு செய்திட வேண்டும்.
வர்க்கப் போராட்டம் என்கின்ற போது வர்க்கப் பிரிவுகள் பரந்தளவில் (Macro) மூன்று வர்க்கப் போக்குகளும், நுண்ணியல் ரீதியில் பல வர்க்கப் பிரிவுகள் உள்ளன. வர்க்கப் பிரிவுகள் சமூகத்தின் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன. ஒரு சமூகத்தில் முற்போக்குவாதிகள், நடுநிலையாளர்கள், பிற்போக்குவாதிகள் என்ற போக்கை கொண்டவர்கள் இருப்பார்கள். அதில் முற்போக்காளர்களின் கடமையானது நடுநிலையாளர்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நடுநிலையாளர்கள் என்ற பிரிவில் வெவ்வேறு வர்க்க நலனைக் கொண்ட பிரிவினர் இருப்பார்கள். அந்த வர்க்கங்களின் தன்மையை அறிந்து இணைந்து பயணிப்பதன் ஊடாகவே ஒடுக்குமுறையை தீவிரமாக எதிர்க்க முடியும்.
ஒடுக்குமுறையை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் முற்போக்குவாதிகளாகவும் இருக்கின்றார்கள். நடுநிலைவாதிகள் பிற்போக்கை ஆதரிப்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே பிற்போக்குவாதிகளை ஆதரிக்கும் நடுநிலைவாதிகளை ஒடுக்குமுறைக்கு துணை போகின்றவர்கள்.
நடுநிலையாளர்களில் சமூகத்தில் கூலி விவசாயிகள், சிறிய நிலவுடமையாளர், நடுத்தர நிலவுடமையாளர், சிறுமுயற்சியாளர்கள் என இருக்கின்றார்கள். இதே போல கடல்தொழிலாளர்களில் சுழியோடிகள், ஆள்கடல் மீன்பிடிப்பவர்கள், இழுவைப் படகு, பிளாஸ்ரிக் படகு, சிறிய தோணிகள் என வைத்திருப்போர் என உள்ளார்கள். இவர்களின் பொருளாதார மாறுபாடு என்பது முரண்பட்டுத் தான் இருக்கின்றது. இந்த மக்களின் சமூக உறவை தெரிந்து கொண்டு தான் இவர்கள் பேசுகின்றார்களா? இவர்களிடையே வர்க்க உறவு என்பது மாறுபட்டிருக்கும். மேட்டுக்குடிகள் சனநாயகம், மனிதவுரிமைப் பெயரில் தம்மை தகவமைத்துக் கொள்கின்றார்கள். இவர்கள் கல்வி, சமூக அந்தஸ்து, சாதி, மொழி அறிவு என்று தம்நிலையை நிலைப்படுத்துபவர்கள். தாராளவாத சனநாயகவாதத்தில் நுழைந்த நபர்கள் தன்னிலையை முதன்மைப்படுத்தி முன்னேற முயற்சிக்கிக்கின்றார்கள். இந்தப் பிரிவினர் ஆளும் வர்க்கத்திற்கு துணையாக கருத்துருவாக்கப்படுகின்றது. இந்தப் பிரிவினர் முதலாளித்துவ ஜனநாயகக்தை முற்று உண்மையான உரிமை கொண்டதாக கருத்துருவாக்கம் செய்யப்பவர்கள்.
2.4பிற அணுகுமுறை-
விஞ்ஞானம், பொருளாதாரம், வர்க்கப் போராட்டம் இவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தாக்கத்திற்கு உட்படுத்துகின்றது. இந்த மொத்தத்துவப் பார்வைக்கு அப்பால் குறிப்பான ஒரு அம்சத்தை வைத்தே சமூகத்தை திறனாய்வு செய்யும் போக்கும் இருக்கின்றது. அவைகள் கலாசாலை பாடநெறிகளுக்குள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கலாசாலையில் பன்முக ஆய்வு முறைமை என்ற அடிப்படையில் அனைத்து திறனாய்வு முறைமைகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறையூடாக பாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்து இருக்கின்றது ஒரு புறமிருக்க) interactional perspective of social anthropology (prof. Fredrik Barth), Sturcturalism (Levi Struss), functionalism (Emil Durkheim), sturctural functionlism, contradiction perspective - marxism. பின்நவீனத்துவம், நவமார்க்சீசம் (அகநிலைவாத) என்று புதிய அணுமுறைகளை புகுத்துவது இன்றைய கலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம். மானிடவியல் கோட்பாட்டில் இருந்து உருவாகியது தான் “விளிம்பு நிலைக்” கோட்பாட்டாகும். விளிம்பு (liminal stage of rites of passage இது பற்றி தனித் தலைப்பில் பார்ப்போம்) நிலைக் கோட்பாடானது மானிடவியலில் ஆன்மா பற்றிய விடயத்தை விளக்கப் படுத்தப்படும்.
பல்வேறு அணுகுமுறைகளை கொண்ட எழுத்தாளர்கள் என்ற சிறிய வட்டத்தினுள்ளே புகுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான கல்வித்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான ஊழியர்களை உருவாக்க வேண்டியதும் அவர்களின் தேவையாகும். அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படுபவர்கள் சமூகத்தளத்தில் தமது புலமைகளை வெளிப்படுத்த நுழைகின்றனர். இவர்களின் கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு.) இவர்கள் கொண்டுள்ள பல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விட மேலாண்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துகளினால் ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையான மக்கள் நலன் கொண்டவர்களிடயேயும் மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அணுகுமுறைகள் ஊடாக அதுவும் இல்லை இதுவும் இல்லை என்ற எண்ணப் போக்கை உருவாக்கிக் கொள்வதும் நிகழ்கின்றது. இங்கு முதலாளிய சமூக அமைப்பின் நலனே முன்னிறுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உருவாக்கப்படும் கல்விமுறையாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் கலாசாலையில் ஒரு கோட்பாட்டை (Thesis) முன்னிறுத்தி ஒப்படைப்புச் செய்வதைப் போலவே தான் மார்க்ஸ் சாதி பற்றிப் பேசவில்லை என்பதாகும். இந்தக் கருத்து கலாசாலை கோட்பாட்டாக்க நெறியைப் பின்பற்றி வர்க்க முகாமைச் சிதைப்பதாகும்.
ஒடுக்கப்படும் சாதியில் பிறந்தால் தான் கற்காலச் சிந்தனை மரபையும், வலி தெரியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. சமூகத்தின் வலி என்பது பிற மக்கள் கூட்டத்தின் வலியை விட அதிகமாக இருக்கும். உணர்விற்கு முன்னுரிமை கொடுப்பதும், பொருளாதார அமைப்பில் பங்கினை பின்னடித்துக் கொள்வது நடைபெறுகின்றது. “சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரம்” இந்தப் போக்கு அடிப்படையில் சாதிய அமைப்பை ஏற்றுக் கொள்வதாகும். குறிப்பிட்ட சாதியில் பிறந்தால் தான் கற்கால/ நிலமானியச் சிந்தனை வடிவத்தினை அறிய முடியும் என்றில்லை. ஆனால் இதையும் மீறி மேற்கத்தைய ஆய்வாளர்கள் சாதி பற்றிய ஆய்வைச் செய்துள்ளார்கள். சமூக வளர்ச்சிக் கட்டத்தைப் பற்றிய அறிவியலைக் கொண்டு புறநிலையாக ஆய்வை செய்ய முடியும்.
ஆனால் கற்கால சிந்தனை மரபில் உள்ள பிற்போக்குத் தனம் என்பது அனைத்து மக்கள் கூட்டத்திற்கு பொதுவானது. அந்த கற்கால சிந்தனை மரபு என்ன? அது மற்றைய உலகப் பிரிவில் வாழ்ந்த மக்களிடத்தில் இருந்து பிரித்து தனித்துவமாக காட்டுவது அகண்ட இஸ்லாமியம், சியோனிசம், சனாதனம். சனாதன சிந்தனை மரபானது உற்பத்தியானது நிலத்துடன் பிணைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் வரலாறு. இதேபோல பின்னைய பௌத்த அறிவெளிர்ச்சி சிந்தனை மரபு சிங்கள பௌத்த பேரங்காரமாக உருமாறியது. வரலாற்றுக் கட்டம் வெவ்வேறு போராட்டங்களின் ஊடாக சிதைவிற்கு உட்பட்டு வந்துள்ளது. கற்கால சிந்தனை மரபு ஆளும் வர்க்கம், மதத்தலைமை, மேடுக்குடிகளால் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. உலக அரசியலை உற்று நோக்கினால் கற்கால சிந்தனை மரபின் வேரை அறிய முடியும்.
இந்தக் கட்டத்தில் தொழிலை தீர்மானிக்கும் நிலையில் இந்தச் சமூகம் உள்ளதா? அவ்வாறு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை அவ்வாறு நிர்ப்பந்தம் செய்ய யாராலும் முடியுமா? கொலனித்துவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார முறை, அரச கட்டமைப்பு சிலமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் இருந்து திணிக்கப்பட்ட முறை என்பதால் அடிக்கட்டுமானத்தில் முழுமையான மாற்றம் ஏற்படவில்லை. முன்னர் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்த மக்கள் உழைப்பை விற்கும் நிலைக்கு வந்துள்னார்கள். இன்னும் நிறையத் தூரம் சமூகம் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
சாதிய உணர்வை முதன்மைப்படுத்தி அடையாள அரசியலைப் புகுத்தும் வாதம் தொடர்ச்சியாக மண்டையில் ஆணியறைந்தது போல ஊட்டப்பட்டுள்ளது. இவற்றிற்கு அப்பால் வர்க்கப் பார்வைக்கு எதிரான (விஞ்ஞானம், சமூகம், பொருளாதாரம்) ஆய்வு முறை இருப்பதாக கற்பிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சாதி என்பதனால் உணர்வை அறிவது வேறு. பொருளாதார தீர்மானிக்கும் சிந்தனை முறையை விளங்கிக் கொள்வது என்பது வேறாகும். ஆய்வுகள் என்பது முன்னைய முடிவுகள், அதற்கு எதிரான வாதங்கள், பிரதிவாதங்களை, புதிய கோட்பாட்டை வந்தடைவதாகும். மார்க்சியம் எப்பவும் சமூகத்தை விஞ்ஞான ரீதியாக விசாரணைக்கு உட்படுத்துகின்றது.
2.5 மார்க்சியம் அன்னியப்பட்ட தத்துவமா?
மார்க்சியமே முழுமையான குறைதீர்க்கும் காரணி எனக் கூறிக் கொண்டே மார்க்சின் ஆய்வின் ஊடாக கண்டடைந்த உண்மைகளை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அடக்கிக் கொள்ளும் சிந்தனைப் போக்கு ஆபத்தானது. மார்க்சியத்தை அன்னியத் தத்துவம் என்று கூறுவது ஆளும் வர்க்கத்தின் கருத்தின் கருத்தாக்கத்தில் விளைவாகும். மார்க்சியம் என்பது என்னவென்ற புரிதலை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. மார்க்சிய அணுகுமுறை (சமூக விஞ்ஞானத்தின்) ஊடாக சமூகத்தினை விளங்க வைப்பதும் கடமையாகும். மார்க்ஸ் வாழ்ந்த ஐரோப்பிய சூழல் என்பதில் இருந்து இன்று முதலாளித்துவ ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் வாழ்கின்றோம். ஏகாதிபத்தியக் காலத்தில் வாழ்ந்தாலும் தொடர்ச்சியான சிந்தனை முறை சமூகத்தில் கடத்தப்பட்டே வந்துள்ளது. இந்தச் சிந்தனைகளை விளங்க வைப்பது முக்கியமான கடமையாக நம்முன் இருக்கின்றது.
உலகை மறுபங்கீடு செய்யும் அரசியல் போக்கில் ஏகாதிபத்தியங்கள் செயற்படுகின்றது. இதற்கு துணையாக மற்றைய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரிக்கின்றது. மக்களுக்கு சேரவேண்டிய வளங்கள், கனிம வளங்கள், நிலம், நீர் என அனைத்தையும் அன்னிய சக்திகளுக்குத் தாரைவார்த்து விடுகின்றது. இதனை மக்கள் கண்டுகொள்ளக் கூடாது என்று போலித் தேசியக் கருத்தையும், (தேசங்களின் அடக்குமுறையை போட்டு குழப்பிடத்தேவையில்லை) பிற்போக்கு கூறுகளான சாத்திரம், சம்பிரதாயம், மூட நம்பிக்கைகள், கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மதங்களின் விஞ்ஞான மறுப்பை முன்னிறுத்துவது என்ற போக்கு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை பற்றிய ஆய்வை செய்தவர் கார்ல் மார்க்ஸ் என்பவரே. அதேபோல ஏகாதிபத்தியம் பற்றிய தெளிந்த பார்வையை முன்வைத்தவர் லெனின். இருவரின் ஆய்வுகள் என்பது மனிதகுலத்திற்கு முன்னேறிய வழியை காண்பிக்கின்றது. அன்னியத் தந்துவம் என்று கூறிக் கொள்பவர்கள் கூட பின்செல்வது அன்னிய பொருள் உற்பத்தி முறையைத் தான். அதில் இருந்து பெற்ற புதிய உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டாளர்கள். புதிய தொழில் நுட்பத்தைப் நுகர்ந்து கொண்டிருக்கும் அடிப்படைவாதிகள்.
சமூக வளர்ச்சிப் போக்கில் முற்போக்குக் கட்டத்தை தாண்டித் வந்தாலும் அரசியல்- பொருளாதார- கருத்தியலாக்கம் என்பது சமூகத்தினை பின்னோக்கிச் சென்ற வரலாறும் உள்ளது. சோவியத் சிதைவில் இருந்து தொடங்கி ஆப்கான் மண்ணில் உயர்ந்த நிலையில் இருந்த பெண்கள் மதவடிப்படைவாத சார்ந்து சமூக உறவில் மாற்றத்திற்கு உள்ளாக்கியதும் நாம் கண்டுவந்துள்ளோம். முதலாளித்துவ ஜனநாயகம் மாத்திரம் அல்ல கற்காலச் சிந்தனை மரபை மீட்டெடுக்கும் போக்கை சாதாரணமாக கடந்து சென்றிட முடியாது. எவ்வாறு கற்காலச் சிந்தனையை மீட்டுருவாக்கம், மறுவுற்பத்தி செய்கின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கற்காலச் சிந்தனைப் போக்கிற்கான கருத்துருவாக்கம் எவ்வாறு சமூக மயப்படுத்தப்படுகின்றது என்பதை வரலாற்று ரீதியாக அறியவேண்டும். உலக முதலாளிய கட்டமைப்பானது தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது. மூலதனம், தொழில்நுட்பம், இரசனை, நுகர்வின் தன்மை என்பனவும் மாறிக் கொண்டு வருகின்றது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், எல்லைகடந்த ஆய்வுகளும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இவ்வாறு அறிவியலும் உள்வாங்கப்படுகின்றது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் அனைத்துவம் மதனித குலத்திற்கு பொதுவாதாகும். எவரும் அந்த தாக்கத்தில் இருந்து இன்றைய உலகில் தனித்துவிடப்படுவதில்லை. இவ்வாறே ஆண்டாண்டு காலமாக சாதியம் என்பது தொடர்ச்சியாக மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாக மனிதரே மனித மலத்தை அள்ளும் நிலையை தொடர்வதும் இந்தியச் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
கார்ல் மார்க்ஸ், லெனின் சாதியைப் பற்றி பேசியிருக்கின்றார்களா என கேள்வி எழுப்புகின்றார்கள். முழுமையாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஏகாதிபத்திய கட்டத்தில் வாழவில்லை என்பதற்காக மார்க்சிசம் முழுமையானது இல்லை என்று கூறமுடியுமா? இவ்வாறே சாதியச் சமூகத்தில் வாழவில்லை, சாதியத்தின் தோற்றம் பற்றி எழுதவில்லை என்பதற்காக மார்க்சியத்தில் போதாமை உள்ளது என்று கூறுவதானது, நமது சிந்தனை வளர்ச்சியில் உள்ள குறைபாடாகும். மாறாக மார்க்சியத்திலும் அதன் அணுகுமுறையிலும் உள்ள குறைபாடு என்பது அர்த்தமற்றதாகும். தோழர் லெனின் ஆசியபாணி கொடுங்கோன்மை என்று முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக அமைப்பை வரையறை செய்கின்றார். ‘‘உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவும், பரிவர்த்தனை செய்வதற்குமான சாதனங்கள் அறவே இல்லாத காரணத்தால், இந்தியாவின் உற்பத்தி சக்திகள் ஸ்தம்பித்துக் கிடப்பது நாடறிந்த அவலமாகும். பரிவர்த்தனைச் சாதனங்கள் இன்மையால், ஏராளமான இயற்கைச் செல்வத்தின் மத்தியில் சமுதாயம் தேவைக்குத் திண்டாடும் வறிய நிலையில் இருக்கும் காட்சியை வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் தான் அதிகமாகக் காணலாம். (208 மார்க்ஸ் தொ3) உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியடையாத நிலை மாத்திரம் அன்று அந்தக் காலச் சமுதாயம் என்பது நிலப்பிரபுத்துவ நிலையில் இருந்து மாற்றம் பெறக் கூடிய வகையில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். மார்க்ஸ் கொலனித்துவ இந்தியாவைப் பற்றிக் கூறுகின்ற போது கொலனித்துவத்தினால் ஏற்படுகின்ற மாற்றம் என்பது மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி விடாது மாறாக ‘‘இந்த சாதனங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மட்டும் அன்றி அவற்றை மக்கள் தமக்கெனச் சுவீகரித்துக் கொள்வதையும் சார்ந்திருக்கின்றன. (212 மார்க்ஸ் தொ3) பரிவர்த்தனை, வணிகம், மூலனத் என்பன பின்தங்கிய நிலையில் இருந்ததை மார்க்சின் எழுத்து வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பற்றி ஆராய்ந்து “மூலதனம்” என்ற ஆய்வை முன்வைக்கின்ற போது முதலாளித்துவத்திற்கு முன்னை சமூகக் கட்டங்களை அவர்கள் ஆராய்ந்துள்ளார்கள். அவர்களுக்கு இருந்த அறிவுப் புலமையைக் கொண்டு ஒரு சமூகத்தின் பின்தங்கிய போக்கை அவர்களால் மதிப்பீடு செய்ய முடிந்தது.
மார்க்ஸ் இந்திய சமுதாய நிர்வாக முறையை பின்வருமாறு விபரிக்கின்றார். ‘‘ஒரு புறத்தில் இதர எல்லாக் கீழ்த்திசை மக்களையும் போலவே இந்தியர் தமது விவசாயத்துக்கும் வாணிகத்துக்கும் இன்றியமையாத் தேவையான மாபெரும் பொது மராமத்துப் பணிகளை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தது, மறுபுறத்தில் நாடு முழுவதிலும் பரவலாக இருந்த இந்தியர்கள் விவசாயத்திற்கும், பட்டறைத் தொழில்களுக்கும் இடையே உள்நாட்டில் நிலவிய ஒற்றுமை காரணமாக சிறிய மையங்களில் சேர்ந்து வாழ்திருந்தது எனும் இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. இந்த இரண்டு நிகழ்வுகள் மிகப் பழைய காலந்தொட்டே பிரத்தியேக இயல்புகளைக் கொண்டதான ஒரு சமுதாய அமைப்பு முறையை உருவாக்கியிருந்தன. இதுவே கிராமச் சமுதாய அமைப்பு எனப்படுவது. இது இந்தச் சிறிய இணைப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் சுயேட்சையான ஸ்தாபனத்தையும் தனிச் சிறப்பான வாழ்வையும் அளித்தது. இந்திய விவகாரங்களைப் பற்றி பிரீட்டிஷ் கொமன்ஸ் சபை வெளியிட்ட ஒரு பழைய அதிகார பூர்வமான அறிக்கையில் உள்ள பின்வரும் விளக்க உரையில் இருந்து இந்த அமைப்பு முறையின் அலாதியான தன்மையை முடிவு செய்ய முடியும்:
‘‘நிலவியல் சார்ந்த முறையில் கருதிப் பார்க்கின், ஒரு கிராமம் என்பது சில நூறு அல்லது ஆயிரம் ஏக்கர்கள் விளை நிலமும் தரிசு நிலமும் கொண்ட நாட்டுப் பிரதேசமாகும். அரசியல் முறையில் நோக்கினால் அது ஒரு மாநகராட்சி அல்லது நகராட்சியை ஒத்திருக்கிறது. அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வழக்கமான அமைவு பின்வரும் விளக்கத்தின் பாற்பட்டதாகும். படேல் அல்லது கிராம நாட்டாண்மைக் காரர், இவர் பொதுவாக கிராம அலுவல்களை மேற்பார்வை செய்கிறார், கிராம வாசிகளிடைடையே எழும் தகறாறுகளை தீர்த்து வைக்கிறார், போலீஸ் பணிகளை கவனிக்கிறார், தனது கிராமத்தின் உள்ளே வரி வசூலிக்கும் கடமையைச் செய்கின்றார். அவருக்குச் சொந்த செல்வாக்கு இருப்பதாலும் மக்களின் நிலமையையும் கவலைகளையும் பற்றி அவருக்கு நுட்பமான பரிச்சயம் இருப்பதாலும் இந்த வரிவசூல் பொறுப்புக்கு ஆகச் சிறந்த தகுதி படைத்தவராக திகழ்கிறார்; கர்ணம் என்பவர் சாகுபடி பற்றிய கணக்குகளை வைத்திருப்பவர், அதன் சம்மந்தப்பட்ட விவரம் எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருப்பவர். தலையாரி என்பவரின் கடமை குற்றங்கள் சட்ட விரோதச் செயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல, ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்குப் பிரயாணம் செல்லும் ஆட்களுக்குத் துணையாகச் சென்று அவர்களைப் பாதுகாப்பது என்பனவாகும். தோட்டி என்பவரின் வேலைகள் நேரடியாயும் கிராமத்துடன் அமைந்து விட்டனவாகும், இவரது இதர கடமைகளில் பயிர்களைப் பாதுகாத்தலும் விளைச்சலை அளப்பதற்கு உதவி செய்வதும் அடங்கும். எல்லைக் காவலர் கிராம எல்லைகளைப் பாதுகாக்கிறார், அவை குறித்துத் தகராறு எழுந்தால் சாட்சியம் அளிப்பார். குளங்களையும் பாசன வாய்க்கால்களையும் மேற்பார்வை செய்பவர் விவசாயத்துக்காகத் தண்ணீரை வினியோகம் செய்வார். பிராமணர் கிராமத்தில் கோயில் பூசை நடத்துவார். பள்ளியாசிரியர் கிராமத்தில் குழந்தைகளுக்குப் படிக்கவும் மணலில் எழுதவும் கற்பிக்கக் காணலாம். மேலும் பஞ்சாங்கப் பிராமணர் அல்லது சோதிடர் முதலியோரும் உண்டு. இந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தான் பொதுவாக கிராம நிர்வாகத்தின் உறுப்பிர்களாக அமைந்துள்ளனர். ஆனால் நாட்டின் சில பிரதேசங்களில் இவர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட சில கடமைகளையும் பணிகளையும் ஒரே நபர் சேர்த்து நிர்வகிப்பார். வேறு சில பிரதேசங்களில் மேலே விவரிக்கப்ட்டதை அதிகமான நபர்கள் நிர்வாக உறுப்பினர்களாக உள்ளனர். இந்த எளிய ஊராட்சி முறையின் கீழ் அந்த நாட்டு மக்கள் தொன்மையான பழங்காலம் முதல் வாழ்ந்து வருகின்றார்கள். கிராமங்களின் எல்லை வரம்புகள் மாற்றப்பட்டதே இல்லை எனலாம். போர், பஞ்சம் அல்லது நோய் சில சமயம் இந்த கிராமங்களுக்கே தீங்கிழைத்துப் பாழாக்கிவிட்ட போதிலும் அதே பெயர், அதே நலன்கள், அதே குடும்பங்கள் கூட கால காலமாகத் தொடர்ந்து நிலவின. அரசுகள் தகர்வதையோ பிளவுறுவதையோ பற்றி அக்குடிமக்கள் கவலைப்பட்டதே இல்லை; கிராமம் முழுமையாக இருக்கும் போது அது எந்த அரசுக்கும் மாற்றப்படுகிறது, எந்த மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கிராமத்தின் பொருளாதார அமைப்பு மாறுதலின்றி அப்படியே இருக்கிறது. படேல் இன்னும் கிராமத் தலைவராகவும் சிறு குற்றங்களை விசாரித்து நீதி வழங்குவோராவும் வரிவசூல் அதிகாரியாகவும் விளங்குகிறார்.‘‘ (ப199-200 மார்க்ஸ், தொ3) இது 1853 இல் எழுதப்பட்ட இந்த குறிப்பானது முதலாளித்துவ புரட்சி ஐரோப்பிய நாடுகளில் முழுமை அடையாத காலம். நிலப்பிரபுத்துவ கட்டத்தை கொண்டதாகிலும் பழைய ஆண்டான் அடிமைப் போக்கைக் கொண்ட சமூக அமைப்பு இருந்திருக்கின்றது. பெரிய, சிறிய அலகுகளைக் கொண்ட நிலப்பகுதிகளைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலத்தோடு கண்டுண்ட அடிமைகளும், சுதந்திர குடிகளும் இருந்திருக்கின்றார்கள். பிற்பட்ட சமூக வளர்ச்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல், தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure) வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பல விடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத் தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்து ஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை, சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடைய சிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும். இங்கு மார்க்ஸ் முதலாளித்துவம் பற்றிப் பேசுகின்றதை தலித்தியம்- அடையாள அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ளத் தயாராக இல்லை. மார்க்சின் சிந்தனை வடிவத்தினை குறுக்கி தட்டையாகப் பார்க்கும் பார்வையானது மார்க்சினை சிதைக்கின்றதையே அவதானிக்கலாம்.
நமது அறியமையை மார்க்சியத்தின் மீதான குறைபாடாக வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றது மாத்திரம் அல்ல. மற்றவர்களை முத்திரை குத்துவதின் ஊடாக தமது குறைபாட்டை மடைமாற்றிக் கொண்டிருப்பது தனிப்பட்ட சிலர் தோழர்களை பாதிப்பதில்லை. இது சமூகத்தில் உள்ள மற்றைய இளந்தலைமுறையையும், ஆர்வலர்களையும் துரத்திவிடுவதில் தான் வந்து முடிகின்றது.
சமூகத்தைப் பொறுத்தவரை மார்க்சியத்தின் எதிரிகளே அதிகம் ஆகவே நாம் பொறுப்புடன் விவாதிக்கவும் கருத்துகள் கூறவும் வேண்டும். பல புதிய விடயங்களாகவும், வரைவிலக்கணங்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இதனைப் பற்றிய நம் பார்வை சமூக வரலாற்று விஞ்ஞான அடிப்படையில் இருக்க வேண்டும்.
நாம் எந்தச் சமூக அமைப்பில் வாழ்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையால் ஏற்படுகின்ற பிரச்சனைகளை மக்கள் முன் தெளிவு படுத்த வேண்டும். இது பழைய சிந்தனை முறையில் இருந்து மாறுபட்டே இருக்க வேண்டும். பழைய சிந்தனைப் போக்கு எந்த வர்க்கத்தைப் பாதுகாக்கின்றது என்பது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான போக்கை வலியுறுத்துவது வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதற்கு மாற்றாக இருப்பதுதான் கருத்துமுதல்வாதம்.
எனது சிந்தனை மனிதர்கள் உருவாக்கிய கோட்பாடுகளுக்கே முதன்மை கொடுக்கின்றார். இயற்கை எதிர்த்துப் போராட முடியாத காலத்தில் கற்பனைகளால் உருவாகியதே கடவுள் உருவங்கள். சிலையாக்கி வணங்கத் தொடங்கிய பின்தன்தங்கிய நிலையை இன்றைய மனிதர் தொடர்கின்றார்கள். அநாகரிகக் காலத்தின் நாகரீகமாக இருந்தன. எமது சிந்தனை மட்டம் என்பது இன்னும் உயர்ந்து விடவில்லை. இந்தப் போக்கு பண்பாட்டு, மத தேசியவாதத்திற்குப் பின்னால் சமூகம் பின்செல்ல முடிகின்றது.
ஆண்டாண்டு காலமாக மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சில மாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விட மேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்திஜீவியாகவும் பறைசாற்றும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம்.
நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக்காரர்கள் அல்ல. நமது முன்னையோரின் அறிவு குவியப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக எம் முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக எம்மால் நடமாட முடிகின்றது. இதுதான் இன்றைய உலக நிலை.
மார்க்சியம் உச்சரித்தவர்களை எல்லாம் மார்க்சியவாதிகள் என்று பிரகடனப்படுத்தும் உலகில் இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள். எம்மைப் போன்றவர்கள் குட்டி முதலாளிய சிந்தனைக்கு உட்பட்டவர்களாக இருக்க முடியும். ஆனால் பெரும் புரட்சியாளர்கள் என்றும் தம்பட்டம் அடிப்பது தான் இதுவரை வரலாறு.
இங்கு அறிவியல் எழுச்சியில் கியூம், காண்ட், ஹெகல், ஃபாயர்பார்க் என்போர் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தத்துவ அறிஞர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ”என்னுடைய இயக்கவியல் முறை ஹெகலிய முறையில் இருந்து வேறுபட்டு இருப்பது மட்டும் அல்லாமல், நேரடியாகவே அதற்கு எதிரிடையானது ” (ப40 மூலதனம் முதல் பாகம் தொ1 ) இவர்களின் வளர்ச்சியில் இருந்து விஞ்ஞான சோசலிசத்தினை படைத்தவர்கள் தான் கார்ல் மார்க்ஸ், பி. ஏங்கெல்ஸ் ஆவர். இவர்களைத் தொடர்ந்து லெனின், ஸ்ராலின், மாவோ என மார்க்சிய- லெனினிய மாவோ சிந்தனையாக வளர்ச்சியடைந்துள்ளது.
மார்க்ஸ்- அம்பேத்கர் இந்தியாவை புரிந்து வைப்பதைப் பற்றி ஒப்பிடுகின்றார்கள். மார்க்சும் அம்பேத்கரும் ஒன்றல்ல வெவ்வேறு அறிவுத் தளத்தைக் கொண்டவர்கள். அம்பேத்கரின் கோட்பாடு என்பது முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவ சனநாயகத்தை முன்வைக்கத் தூண்டியது என்ற புரிதலைப் பெறாத காரணத்தினால் மார்க்சினை குறைத்து மதிப்பிட முடிகின்றது. தத்துவவாதிக்கும் ((philosopher) கல்வியாளருக்கும் (academic) நிறையவே மாறுபாடு உண்டு. அம்பேத்கர் பெரும் கல்வியாளர் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. புத்திசாலித்தனத்திற்கும் அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் உள்ளது போலவே தான் இதுவுமாகும்.
2.6 கீழைத்தேயவாதம்- Orientalism
உயர்வு தாழ்வு என்று பகுக்கும் போக்கிற்கும், சிந்தனைக்குமான காலத் தொடரை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதன் தொடர்ச்சியில் வெளிவரும் கருத்தாக்கத்திற்கு மார்க்சை தப்பிக்கவிடவில்லை.
மார்க்ஸ் கீழைத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்ததாக கலாசாலை ஆய்வுமுறை படிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள் அல்ல. கலாசாலை ஆய்வு முறைக்குள் பயிற்றுவிக்கப்படும் மாணவர்களின் சிந்தனை முறை மட்டுப்பட்டதாகும். சமூகவாழ்வியலில் குறிப்பிட்ட விடயம் பற்றி ஆராய்வதே மாணவர்களின் நிலையாகும். மார்க்சியம் முதலாளித்துவ பண்பாடு, நாடாளுமன்றம், ஜனநாயகம் என்பது ஆசிய நாடுகளில் பின்தங்கியிருந்தது.
மார்க்சிய வழிமுறை ஊடாக நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல், தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure) வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாகின்றது என்ற விடயங்களை அறிந்து கொள்ள முடியும். ஆசிய பாணி கொண்டுங்கோன்மைக்குள் இருந்த மக்களின் சிந்தனை வடிவம் என்பது உயர்ந்த நிலையில் இருக்கவில்லை. இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத் தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்து ஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை, சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடைய சிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும்.
மார்க்ஸ் வரலாற்று ஓட்டத்தை எழுதுகின்ற போது எழுப்புகின்ற பிரச்சினையும் முக்கியமாகும். மார்க்ஸ் எழுதியவற்றைப் புரிந்து கொள்ளுவதில் உள்ள சிரமத்தைப் பார்க்கின்ற போது மார்க்ஸ் என்ன உண்மையில் விளக்குகின்றார் என்பதை விளங்கிக் கொள்வதற்கு நீண்ட தேடல் அவசியமாகின்றது. முன்னர் வணிகம், வட்டி முறையில் இருந்து பொருளாதாரக் கட்டமைப்பு முதலாளித்துவ பொருள் உற்பத்தியை நோக்கி வளர்ச்சி பெற்ற காலத்தின் பின்னர் ஏற்படுகின்ற மாற்றமாகும். ஏனெனில் ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சி நடைபெற்றது பிரித்தானியாவில் தான். இதன் பின்னர் வருகின்ற மாற்றம் என்பது சந்தையை மையம் கொண்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணித்த காலமாகும். பிரித்தானிய ஆட்சியாளர்கள் 1858 இல் இந்திய அரசுச் சட்டத்தை கொண்டு வந்தனர். அதன் பின்னர் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் தான் கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றி 1853களில் எழுதினார். இங்கு தான் மார்க்சின் மேதமையும், அறிவுத் தேடலின் மகிமையை அறிய முடியும்.
இந்திய அரச கட்டமைப்பு வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததை அறியமுடியும். இந்தியா என்ற அரச கட்டமைப்பு எவ்வாறு மையப்படுத்தப்பட்டதாக இல்லாத நிலையை மார்க்சின் எழுத்தில் அறிய முடிகின்றது.
ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் அரசு என்பது இல்லை. ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவத்தில் அரசு இருந்தது இன்றையப் போல சிக்கலான வடிவத்தில் இருக்கவில்லை. “அரசாங்க அமைப்பில் இந்தியர்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. 1858 விக்டோரியா பேர்ரசியின் அறிக்கை “சாதி, சமய, இன, மொழி, பேதமற்ற வகையில்“ பதவி பொறுப்புகள் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. இதன்பின் இந்தியச் சட்டமன்றச் சட்டம் 1861 (The Indian Councils act of 1861) கொணரப்பட்டது. இது, மாகாணச் சட்டமன்றங்களுக்கு இந்தியர்களும் நியமிக்கப்படலாம் என்பதை வகை செய்தது. சட்டங்களை உருவாக்கும் சபைகளில் முதன்முதலில் இந்தியர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்தது. இதள் பின் 1883 இல் ஸ்தாபன முறையில் சில குறிப்பிட்ட வர்க்கத்தினரால் உறுப்பினர்கள் தேர்வு முறை ஏற்படுத்தப்பட்டது. (129 கோ. கேசவன்) கொலனித்துவ கட்டமைப்பின் கீழ் இயங்கிய அரச கட்டமைப்பாகும். ஆனால் நேருவின் காலத்தில் தான் அரசு கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகின்றது.
சந்தைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது உலகினை கிராமத்தின் நிலைக்கு மாற்றி விட்டது. ஆனால் கொலனித்துவ காலத்தில் எழுந்த கல்விமுறை, சிந்தனை முறை என்பது மாறுபட்டு இருந்தது. கொலனித்துவத்தின் மாற்றம் என்பது எமது தேசங்களில் சுதந்திரமான வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது என ஏங்கெல்ஸ் கூறுகின்றார். மார்க்சின் இச்சிந்தனைக்கு ஆதாரமாக மோர்கனின் (Morgan) ஆய்வும், பாதிரிகளின், கொலனித்துவ ஆட்சியாளர்களின் எழுத்துக்களை படித்தும் இந்தியச் சமூகத்தை படித்துக் கொண்டார்.
மார்க்ஸ் கருத்துக் கூறுவதற்கு முன்னர் 350 வருடங்களுக்கு முன்பாகவே கொலனித்துவத்தின் சுரண்டல் ஆரம்பிக்கப்பட்டு மிருகத்தனமாக கொள்ளைகளில் ஈடுபடதொடங்கி விட்டார்கள். சுரண்டலின் மூலம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, எமது நாடுகளில் சுதந்திரமான வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னரே கொலனித்துவவாதிகளினால் நிர்ப்பந்தமாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னராக மக்களுக்கு விடுதலை ஏற்படுத்தும் நோக்கத்திலான ஆய்வை இடையறாது மேற்கொண்டிருந்தார். அந்த ஆய்வில் எழுந்தவைகள் தான் இந்தக் கோட்பாடுகள். மாறாக தற்போதைய ஆய்வாளர்கள் போல் சடங்கு, சம்பிரதாயத்திற்காக அதன் வழி இருந்து எழுத்தில் ஈடுபட்டவர் அல்ல.
ஆக இவ்வாறு கொலனித்துவத்தின் மிருகத்தனமான சுரண்டலின் ஊடாக மூலதனத்தைப் பெருக்கிக் கொண்ட கொலனித்துவ நாடுகளை அம்பலப்படுத்தும் சிந்தனைச் சக்தி மார்க்சியத்திற்கு இருந்திருக்கின்றது. மார்க்ஸ் எந்த அடிமைப்பட்டிருந்த நாட்டிற்கும் செல்லவில்லை. ஆகவே அடிமைகளின் வாழ்க்கையை எவ்வாறு உணர்ந்திருப்பார்? மார்க்ஸ் அடிமைச் சமூகத்தில் வாழவில்லை எவ்வாறு அடிமைச் சமூகத்தைப் பற்றி எழுதமுடியும் என்று கேட்பது அறிவொணாவாதமாகும்.
இன்றைய காலத்தில் மார்க்சினை அன்னியப்படுத்தும் முயற்சியில் ஆளும் வர்க்கத்தினர் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஈடுபடுகின்றனர். ‘‘இந்தியாவைப் பொறுத்தவரை புரட்சியின் நிறம் நீலமும், கருப்பும் மட்டுமே! சிகப்பிற்கு இங்கு வேலையே இல்லை. காரணம் இந்திய சமூகத்திற்கும் காரல் மார்க்சுக்கும் எந்த வகையிலும் சம்மதம் இல்லை. அவரால் எந்த பயனையும் இந்திய மக்கள் அடையவில்லை. மார்க்ஸ்- அம்பேத்கார் இந்தியாவைப் புரிந்து வைப்பதைப் பற்றிய ஒப்பீடே அபத்தமானது.‘‘ (முகநூல் விசிக அன்பர்) மார்க்சும் அம்பேத்காரும் ஒன்றல்ல. வெவ்வேறு அறிவுத் தளத்தைக் கொண்டவர்கள். அம்பேத்கரின் சட்டங்களை இயற்றினார். அது முதலாளித்துவ ஜனநாயகத்தை வழக்க கோரியதும், முதலாளித்துவ சனநாயகத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் மார்க்ஸ் பேசுவது வேறு. மார்க்ஸ் சமூக வளர்ச்சிப் போக்கில் புரட்சிகர நிலையைப் பற்றி வழிகாட்டினார். இதனால் மார்க்சினைக் குறைத்து மதிப்பிட முடிகின்றது.
அம்பேத்கார் ஒரு கோட்பாட்டுவாதி. மார்க்ஸ் சிந்தாந்த மற்றும் விஞ்ஞான (marxist methodology) ரீதியாக எவ்வாறு சமூகத்தை ஆராயவும், மாற்றவும் முடியும் என கற்பித்த ஆசான். தமிழில் ஆய்வு முறைமையை தமிழ் பேராசிரியர்கள் மார்க்சிய வெற்றிகரமாக வழிகாட்டியுள்ளார்கள். மார்க்சிய விஞ்ஞானம் சமூகத்தை தனிமனிதர்கள் அறிந்து கொள்ள வழிகாட்டும், கற்பிக்கும் ஒரு சித்தாந்த வழிகாட்டியும் கூட. இதன் கூடாக சமூகத்தை ஆய்வு செய்ய வழிகாட்டுகின்றது. மார்க்சியம் என்பது அன்னியக் கோட்பாடு என்பதே அபத்தமான கருத்து. தமிழ்ப் பரப்பில் பொருள்முதல்வாதம் (ஆசீவகம்) தமிழர்களின் சிந்தனை மரபாக இருக்கின்றதை தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியச் சிந்தனை மரபை கொச்சைப் பொருள்முதல்வாதம் என்பார் பேராசிரியர் நா. வானமாமலை.
மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும், பிரதானமாக, ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கே உள்ள கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்ற வாதம் இருக்கின்றது. அதேவேளை மேற்கத்தையவர்கள் நாகரீகமற்றவர்கள், ஐரோப்பிய மையவாத அடிப்படையில் கீழ நாடுகளைப் அணுகுவது கீழைத்தேயவாதத்தின் மையச் சிந்தனையாகும். ஆனால் மார்க்ஸ் அவ்வாறு ஆய்வு செய்யவில்லை. அவர் ஆதிப் பொதுவுடமைச் சமூகம், ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக வளர்ச்சியைக் கொண்டும், அதன் சமூக உறவு எவ்வாறு இருக்க முடியும் என்று ஆய்வு செய்தவர் மார்க்ஸ்.
2.7 பேட்ரனிசம் (அறிவிலிகளாக (Petrinism)
கீழத்தேயவாதம் எவ்வாறு மற்றைய உலகப் பிரிவினரை கருதியது போலவே. அறிவிலிகள், தனியாக சிந்திக்க முடியதாவர்கள் என்ற போக்கு இருக்கின்றது. ஐரோப்பிய கண்டத்திற்கு கிழக்கே உள்ளவர்கள் பற்றிய மதிப்பீடும், குறியீடுகளும், பல ஆண்டுகால வரலாறு கொண்டவையாகும். நாகரீகத்தின் வளர்ச்சியை ஐரோப்பிய மையவாதத்தில் இருந்து அணுகும் போக்கு மேலோங்கியுள்ளது. கற்காலச் சிந்தனை விவிலியத்தில் உண்டு. அதில் இருந்து கடத்தப்பட்ட ஐதீகக் கதைகளை மீளவும் சமூகத்தில் கொலனித்துவ ஆக்கிரமிப்பின் போது விதைத்தார்கள். அவர்களின் பார்வையே பின்தங்கிய நிலையில் இருந்தது. அதன் தொடர்ச்சி என்பது இன்றைய கால கட்டத்திலும் இருக்கின்றது.
பிறயினத்தார்- தாம் மற்றவர்கள்- போன்றவையும் கறுப்பு- வெள்ளை பாகுபாட்டுச் சிந்தனை என்பது விவிலியத்தின் ஊடாக தொடரப்பட்டு வருகின்றது. கறுப்பு, வெள்ளை என்ற பிரிவினை நல்லது – கெட்டது, பேய்- சம்மனசு (engel) துக்கம் என்றால் கறுப்பு போன்ற விடயங்கள் சமூகத்தில் ஊட்டப்பட்டுள்ளது. 1970- 73 இடைப்பபட்ட காலத்தில் விடுமுறையில் யாழ்வந்தபோது கடற்கரையில் உலாவந்த சுவாமியாரைக் கண்ட பொதுமனிதர் முழங்காலில் விழுந்து இருந்து ஆசீர்வாதம் பெற்றார். அவரைத் தொடர்ந்து நானும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். இவை இறைபயம், வழிகாட்டி, உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தலின் விளைவாகும். கற்கால சிந்தனையை மத நிறுவனங்கள் வளர்த்துவிடுகின்றது. இந்தமுறை பிற்பட்ட காலத்தில் கண்டதாகவோ, நான் அவ்வாறு செய்ததைக் கண்டதில்லை. இந்தவித போக்கு சமூகத்தில் இருந்திருக்கின்றது. இந்த வேளையில் மனிதர்களின் வாழ்வியலில் ஏற்படுகின்ற சிந்தனை மாற்றத்தின் ஊடாக அவைகள் இல்லாதொழிந்துள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்னால் உள்ள சிந்தனை வடிவமான (Petrinism - The beliefs or tendencies attributed to the apostle Peter- according to the Tübingen school of theology, the doctrine that Christianity is a phase or development of Judaism, supposed to have been advocated by the followers of Peter: opposed to Paulinism. See Paulinism, and Tübingen school (under school). பேட்ரனிசம்- பாதுகாவலர் (the body of theological doctrine taught by, or attributed to,the apostle Peter.) என்பது தம்மை அறிவார்ந்தவராகவும் மற்றவர்களை ஒன்றும் தெரியாதவராகவும் நடத்துவதாகும். கடவுள் சிந்தம் இல்லாது இயங்க முடியாத மனிதர்கள் என்றும் பொருள் பட முடியும். ஏனெனில் அனைத்திற்கும் கடவுள், ஆன்மா என்ற பொருளை முன்னிறுத்தி மனித சமூகத்தின் அறிவு முதிர்ச்சியை மட்டுப்படுத்தும் ஒரு சிந்தனைப் போக்காகும். சுருக்கமாக சொல்வது என்றால் மக்களுக்கு சுயபுத்தியில்லை. இவர்களுக்கு ஒரு மேய்ப்பர் அல்லது வழிகாட்டி அவசியம் என்கின்றது.
இதேபோல கடல்தொழிலாளர்களுக்கு அணுக்கழிவைப் பற்றி என்ன தெரியும் அல்லது பார்ப்பனர் தான் விஞ்ஞானியாக முடியும் என்ற சிந்தனைப் போக்கையும் கொள்ள முடியும். இங்கு கருத்தியல் மேலாதிக்கவாதம் என்பது ஒரு பொருளாதாரச் சிந்தனையுடன் தொடர்பு பட்டதாகும். மதம் எனபது மக்களை வழிநடத்தப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் செயற்படுகின்றது. மார்க்சியமானது மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்று நம்புகின்றது. ஓரு குறிப்பிட்ட உற்பத்திமுறையின் தொடர்ச்சியின் போக்கை விளங்கிடுவது என்பது வேறாகும்.
மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. மார்க்ஸ் கொலனித்துவாதிகள் போல மற்றைய மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று கருத்தியிருக்க முடியாது. மார்க்ஸ் கீழைத்தேசத்து மக்களைக் கீழானவர்களாகப் பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறை படிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள் அல்லர். பிராமனர்கள் என்றால் அறிவாளிகள், நல்லவர்கள் என்றவாறான சிந்தனை என்பது சமூகத்தில் விதைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பார்வை சனாதனச் சிந்தனையின் திமிர்த்தனம் போக்கின் வெளிப்பாடாகும்.
2.8 தமிழர் வரலாற்றில் அறிவியல்
தத்துவவியலாளர்கள் பலர் உலகைப் பற்றி வியாக்கியானம் செய்துவிட்டார்கள். ஆனால் அதனை எவ்வாறு மாற்றுவது என்று சிந்தித்த சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். ஹெகலியம் போன்ற கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து வெளிப்படுத்தியதே இயங்கியல் பொருள் முதல்வாதமாகும். இத்துடன் கார்ல் மார்க்ஸ் முடிவு விஞ்ஞான அரசியல், பொருளாதாரமாகவும் உபரி மதிப்பின் ஊடாக சொத்துப்படைத்தவர்கள் உருவாகின்றார் என்றும் வெளிப்படுத்தினார்.
தமிழர் அறிவியல் பற்றி ஆராய்வதன் ஊடாகவே எமது சமூகத்தில் இருந்த அறிவியல் பற்றி அறிய முடியும். தொல்பழக்குடி வாழ்வியலுக்குப் பின்னரான சிந்தனை என்பது கொச்சைப் பொருள்முதல்வாதம். அன்றையக் காலம் என்பது ஆய்வு, பரிசோதனை, பரிசோதனையை நிரூபிப்பது சாத்தியமில்லை.
இங்கு வாசிப்பு முறை என்பது இந்த சமூகத்தில் இருக்கின்ற சிந்தனையே தீர்மானிக்கின்றது. அதேவேளை மீள்வாசிப்பு என்பது அன்றைய சமுதாய ஓட்டத்தில் இருந்து வாசிப்பது எவ்வாறு என்பதற்கும் ஒரு பயிற்சி தேவை என்பது மறுப்பதற்கு இல்லை. பரிணாம வளர்ச்சியை புல்லாகிப் பூண்டாகி, புழுவாகி, மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார். இங்கு சிந்தனையானது மதத்துடன் சங்கமிப்பதை அறிய முடிகின்றது. தமிழர்களின் அறிவியல் ஞானம், சிந்தனை என்பது கருத்துமுதல்வாதம் (ஆன்மா) முதன்மைப்படுத்தும் வாழ்வியல் சிதைத்து விட்டது.
மன்னர்கள், அறிஞர்கள், கவிஞர்களிடையே விவாதம் நடைபெற்றதாக வரலாற்றில் அறியமுடிகிறது. அதனை நோக்கும் போது அறிவியல் ரீதியான சிந்திக்கும் நிலை இருந்துள்ளதை அவதானிக்க முடியும். புராண இதிசாசம் சொல்லும் அணுபற்றிய (அணுகுண்டு, விமானம் இருந்தது என்று கருதுவது தவறு) சிந்தனை, பொருள்முதல்வாதக் கூறுகளை ஆராய்ந்து படிப்பது என்பதில் கூட நம்மிடம் பயிற்சி இல்லை என்பதும் உண்மை தான்.
தமிழ்ச் சமூகத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையைப் பற்றி எவரும் ஆராய முயற்சிக்கவில்லை என்று கருதுகின்றார் பேராசிரியர் நா. வானமாமலை. “லோகாயவாதிகள் உடம்பு மாத்திரமே ஆன்மா என்று கூறுகின்றார்கள். உடம்பினின்று தனித்து ஆன்மா ஒன்றுமில்லை. ஐம்பூதச் சேர்க்கையே உடல். மரணத்திற்குப் பின் இது ஐம்பூதங்களாகப் பிரியும். ஆன்மாவும் அழிந்து போகும். பூதச் சேர்க்கையே உணர்வை உண்டாக்கும். உதாரணமாக, மாவையும் வெல்லத்தையும் சில பட்டைகளையும் சேர்த்துக் கொதித்து வடித்தால் மது பிறக்குகிறது. பகுதிகளுக்கு இல்லாத தன்மை அவை கூடிய இக்கூட்டுப் பொருகளுக்கு உள்ளது. அதுபோலவே பூதங்கள் கூடி உணர்வை உண்டாக்கும். உடல் அழியின் உயர் அழியும். உடல் அழிந்த பின் மோட்சத்திற்குச் செல்ல எதுவும் மிஞ்சியிருப்பதில்லை. A, Bயோடு சேர்ந்து வாழ்கிறது. B அழிந்தால் A அழியும். அப்படியானால் Bயின் ஒரு குணமே A. அது போலவே உடலின் ஒரு குணமே உணர்வு.” (ப.51, நா.வா . பண்டைய வேத.)
இனக்குழும வாழ்வியல் காலத்தில் இயற்கை மீதான பயம் என்பது தன்னால் வெல்ல முடியாத சக்தி என்பதனால் ஆகும். இயற்கையை தன்னால் கண்டுப்படுத்த முடியும் என்ற சக்தி பெற்ற பின்னர், மனிதர்கள் தான் உருவாக்கியவற்றிற்கே அடிமையாகிப் போனார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்த பொருள்முதல்வாதக் கருத்தானது வீரயுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. இந்தக் காலத்தில் இனக்குழும முறையின் சிதைவையும், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தொடர்ச்சியை சுட்டி நிற்கின்ற காலத்தைய பொருள்முதல்வாதத்தினை முன்னிலை உலகாயதம் (proto materialism) என்று வரைவயறைத்துக் கொள்கின்றார்.
தமிழ் இலக்கியத்தின் சுவையை பக்தி இலக்கியங்களை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. அந்த இலக்கியங்களில் உள்ள இலக்கண வளம் போன்றவை மதம் சார்ந்த சிந்தனையைப் பறைசாற்றுகின்றது என்ற காரணத்திற்காக ஒதுக்கிக் கொள்ள முடியாது. ஆனால் அந்த இலக்கியத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையை முன்கொண்டு வருவது கூட பெரும் சவாலே. தமிழ் சமூகத்தில் பொருள்முதல்வாதம் இருந்துள்ளதை நாம் அன்னிய தேசத்தவர்களின் ஆய்வின் ஊடாக அறிய முடிகின்ற அவலம் இருக்கின்றது. இதில் பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த ஆய்வு முறை முன்னோக்கிச் செல்லவேண்டும் என்றால் இயங்கியல்- வரலாற்று பொருள்முதல்வாதத்தில் நீண்ட பரீட்சையம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய பரீட்சையமும் அவசியமாகும்.
இங்கு தமிழ் பரப்பில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை இருந்துள்ளது. அவை கொச்சைப் அல்லது முன்னிலை பொருள்முதவாதமாக கருத முடிகின்றது. இவற்றிற்கு மாற்றாக விஞ்ஞான சமூகவியல் பார்வையைத் தந்தவர் தான் கார்ல் மார்க்ஸ். ஆக பொருள்முதல்வாதம் - மார்க்சியம் என்பது அன்னியச் சிந்தனை என்பது தவறானதாகும். மனிதகுலம் சேமித்த அறிவின் திரட்சியென்பது விஞ்ஞான வகைப்பட்டதாக உருவாகிய சிந்தனை என்பதை மறுப்பதாகும். மனித குலத்தின் சிந்தனை என்பது உலகம் பூராகவும் பரவி புதிய அறிவியற் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறு உருவாகிய சிந்தனை வடிவங்கள் மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கின்றன.
“மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில் சாதி கிடையாது. எனவே மார்க்சியம் சாதியைப் பற்றி அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒரு தத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார்
நிலையிலான தீர்வுகளை (READYMADE SOLUTIONS) வழங்கும் என்ற எதிர்பார்ப்பே அறிவியலற்றது (UNSCIENTIFIC).” மேற்கண்ட கூற்றுக்கு மாறாக மார்க்சிய அணுகுமுறை ஊடாக பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
3 அடையாளம் எதிர் சமூக ஒழுங்கமைவு
இந்தப் பகுதி மிக முக்கியான விடயமாக இருக்கின்றது. வர்க்கத்தைப் பற்றியும், தேசங்கள், தேசிய இனம், பிரதேசம், சாதி, மதம், பிரதேசம், நிறம் என்ற வரையறைக்குள் இருந்து அரசியல் பேசும் நபர்கள் உண்டு. ஆனால் அடிப்படையில் குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், இ. லெனினின் அரசு பற்றி 1919 இல் நிகழ்த்திய விரிவுரையை உள்வாங்கித் தான் பேசுகின்றார்களா என்றால் கேள்விக் குறியே. நாம் எதற்குள் எதனைத் தேடுகின்றோம்? நாம் தேடும் விடயங்கள் எவையும் மனித இருப்புக்கு அப்பால் இருக்க முடியுமா? ஆனால் பொதுவான போக்கு வரையறைகளில் இருந்தே விடயங்களை அணுகும் போக்கு உள்ளது.
மனித குல வரலாறு சமூகக் கூட்டத்தின் வளர்ச்சி பற்றியதாகும். இது மொத்தத்துவ திறனாய்வு (சமூகவியல்) செய்யக் கூடிய தளம் என்பது மக்களிடையே தான். மக்களிடையே தான் சமூகப் பிளவுகளும் இருக்கின்றது. மக்கள் கூட்டம் என்று ஒன்று இருந்த காரணத்தினால் தான் இந்த வளர்ச்சி பெறப்பட்டுள்ளது. அனைத்திற்கும் அடிப்படையாக மனிதர்களும், உழைப்பும், வாழ்வியல் உள்ளது. மனிதகுல வரலாற்றில் பிரிட்டிஸ் இந்தியாவில் இருந்த சாதிய அமைப்பு என்பது மற்றைய நாடுகளை விட மாறுபட்டதாகும். மற்றைய கண்டங்களில் இருந்து விதிவிலக்கான வடிவமாகும். சனாதனம் நிலைநிறுத்தும் சாதியக் கட்டமைப்பு மற்றைய உலகப் பாகங்களில் இருக்கவில்லை.
ஆனால் பெரும்பான்மையான விடயங்கள் எந்தக் கோட்பாடு, சித்தாந்தத்தின் பின்னர் மக்கள் கூட்டம் உள்ளது என்ற அடிப்படையை விட்டே கருத்துப் போக்கு நிகழ்த்தப்படுகின்றது. மக்கள் தான் அனைத்திற்குமான மையம். அந்த மக்கள் கூட்டம் எவ்வாறு மனிதக் குரங்கிலிருந்து மனிதராக மாறிய காலத்தில் இருந்து உழைப்பின் பாத்திரம் முதன்மையானதாகும். மனித கூட்டத்தின் உழைப்பின் வெளிப்பாடே அனைத்தும். இந்த அடிப்படையில் சமூக ஒழுங்கமைவு என்பதை புரிந்து கொள்வது அவசியமானதாகும். ஒரு சமூக ஒழுங்கமைவில் தான் பல்வேறு உட்பிரிவுகளும் முரண்பாடுகளும் இருக்கின்றது. சமூக அமைப்பில் உள்ள ஓரு விடயத்தை அடையாளத்திற்கும், சமூக ஒழுங்கின் வரலாற்றுப் போக்கின் வளர்ச்சிக்கும் இடையே இருக்கும் மாறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும். மனிதர்களின் மூன்று வகை இனங்களின் வகையே ஆபிரிக்க முன்னோர்களில் இருந்து தோன்றியிருக்கின்றது. இந்த இனங்களில் இருந்து காட்டுமிராண்டிச் சமூகத்தில் இருந்து வளர்ந்த மக்கள் இனக்குழும வாழ்விற்கு நுழைகின்றார்கள்.
இரத்த உறவைக் கொண்ட சிறிய அலகுகளாக குடும்பம் என்ற ஒழுங்கமைவு ஏற்படுகின்றது. அங்கு பல தனிநபர்களின் இணைப்பு குடும்பமாகின்றது, பலகுடும்பங்களின் இணைவு குடியாகின்றது. (தூயதமிழ் குடிகள், குடித்தேசியம் என்பது வேறு) சிறிய அலகுகளாக இருந்தவை பொது பண்பைக் கொண்டு சமூகம் இணைந்து வளர்ச்சியடைகின்றது. அடையாளம் என்பது பொதுப் பண்பைக் கொண்ட சமூகத்தில் உள்ள பிரிவுகளை முன்னிறுத்துவதாகும். சமூகத்தினுள் வர்க்கப் பிரிவு என்பது உற்பத்தி முறை மாற்றங்களினால் வளர்ந்து வருவதாகும். தொல்பழங்குடி வாழ்வியலில் வர்க்கமற்ற சமுதாயமும் இருந்திருக்கின்றது. வர்க்கம் என்பது பண்டம் பரிவர்த்தனைக்கு உள்ளாக்கப்படுகின்ற போது வர்க்க சமூதாயம் தோற்றம் பெறுகின்றது.
வர்க்க அடையாளம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு உட்பட்டதும், சமூக ஒழுங்கமைவினுள் உள்ளதாகும். சமூக ஒழுங்கமைவுக் கட்டமைப்பு பொருளாதார முறைக்குள் மாற்றியமைக்கப்படுகின்றது.
இரத்த உறவு உடைகின்ற ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அரசு தோன்றுகின்றன. முன்னர் மக்களுக்கு ஆயுதம் ஏந்துகின்ற உரிமை இருந்தது. மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நவீன அரசியல் ஆயுதம் ஏந்தும் உரிமை மறுக்கப்பட்டது. அரசின் படைகளுக்கு ஆயுதம் ஏந்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. அரசும் அதன் நிறுவனங்களும் நடுநிலையாக கட்டமைக்கப்பட்டது.
சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சி தான் தேசிய இனம் தேசமாக முதலாளித்துவ கட்டத்திற்கான அரசியல் அமைப்பாக உருவாகின்றது. 'சமூகம் என்பதே இந்தியாவில் இல்லை, இங்கு இருப்பதெல்லாம் சாதிகளின் தொகுப்பு தான்' (ரவிக்குமார் - கருத்துப் போர்) இந்தியா என்பதே பல்தேசங்கள், தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டரசாகும். சமூகத்தில் சாதியிருக்கின்றது என்பது உண்மையே. இதனை மார்க்சிய ஆய்வாளர்கள் மறுக்கவில்லை. இதேவேளை சமூக ஒழுங்கமைவில் (குடும்பம்- குடி- இனக்குழுமம் தேசிய இனம்- தேசம் என) வளர்ச்சி முன்னோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கின்றது. மொழி அடிப்படையினான சமூக ஒழுங்கமைவு பல காலங்களுக்கு முன்னரே தோன்றியதாகும்.
சமூகத்தினை முழுமையாக ஆராய்வதன் ஊடாக சமூகத்தை ஆய்வு செய்திட வேண்டும். எனும் போது சமூக ஒழுங்கமைவில் உள்ள பல்வேறு அலகுகளை முழுமையாக ஆராய்வதாகும். அடையாள அரசியல் என்பது ஒரு குறிப்பான விடயத்தை மாத்திரம் முன்னிறுத்துவது- முதன்மைப்படுத்தி பயணிப்பதாகும். சமூகத்தை அதன் ஒழுங்கமைவு, வர்க்கம் என்பதற்கு அப்பால் அகமுரணான பால், பிரதேச, மத, சாதி அடையாளங்கள் ஊடாக அணுகுவதாகும். பெண், சாதி, சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்களை பொருளாதார அமைப்பில் இருந்து விலத்தி ஆராய்ந்திட முடியாது. அவ்வாறு தன்னார்வ நிலையில் இருந்து அணுகும் போக்கும் உள்ளது.
சாதியைப் பற்றிப் பேசுகின்ற போது உணர்ச்சி மேல் இட்ட நிலையில் ஆய்வுகள், உரையாடல்கள் நடைபெறுவது இயல்பாகவே உள்ளது. அவ்வாறே தேசமாக இல்லை சாதியாக இருக்கின்றார்கள் என்பதும் அவ்வாறே. ஒரு சமூக ஒழுங்கமைவை மறுத்து நிற்பதும் ஆளும் வர்க்கத்திற்கான நலனைக் கொண்டதே. மாறாக சாதியை ஒழித்துவிட்டு தமிழ் தேச ஆட்சியுரிமை பற்றிப் பேசுங்கள் என்ற கூற்று குறிப்பான ஏறுதழுவதல் போராட்டத்தின் போது ஒலித்தது. தேசிய இனங்களின் வளர்ச்சியை அடையாள அரசியலாக் குறுக்கிட விடமுடியாது. ஒரு தேசிய இனத்தினுள் உள்ள உட்கூறுகளே அனைத்துமாகும்.
சமூக ஒழுங்கமைவின் உட்கூறுகளில் ஒன்றை எடுத்து அதனை முதன்மைப்படுத்துவது அடையாள அரசியலாகின்றது. அங்கு அகமுரண்பாடுகளை மாத்திரம் முதன்மைப்படுத்துவது சமூக ஒழுங்கமைவை மொத்தத்துவமாக அணுகுவதை மறுக்கின்றது. குறிப்பான நாட்டில் உள்ள தேசிய இனம் என்ற வகையில் பல்வேறு பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் கொண்டிருக்கும். அந்த சமூகத்தின் முரண்பாடுகள் வெவ்வேறு தன்மையில் இருக்கும். சில முரண்பாடுகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். சில முரண்பாடுகள் பிரதானமற்றதாகவும் மாறும். சில முரண்பாடுகள் தீர்க்க தேவையில்லாத விடயமாகவும் அவை வேறு காரணங்களால் இல்லாது போய்விடும். பின்னவீனத்துவக் கோட்பாடு குறிப்பான விடயங்களை கவனம் செலுத்தவே வழிகாட்டுகின்றது. இது உற்பத்தி- பொருளாதார அமைப்பு, வர்க்கப் போராட்டம், விஞ்ஞான பரிசோதனை (இயற்கையின் இயங்கியல்) என்பன சமூக அமைப்பை ஆராயும் மொத்தத்துவப் பார்வையாகும். இதனுள் தான் வர்க்கம், பால், சாதி, பிரதேச அடையாளங்களைக் கொண்ட சமூக ஒழுங்கமைப்பை ஆராய முடியும். அடையாளப்படுத்தலும், அடையாள அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. வலிந்த வரையறைகள் அவசியமற்றதாகும். சமூகம் அடையாளமாகத் தான் பிளந்து கிடக்கின்றது. எனவே அந்த அடையாளங்களை முன்னிறுத்துவது தவறில்லை என்பதோ அல்லது அதனை முன்னிறுத்திச் செல்ல முடியும் என்ற சிந்தனை வடிவம் என்பது இயங்கியல் பார்வையில் அமைந்த மொத்தத்துவ அணுகுமுறையாக இருக்க முடியாது.
அதாவது சமூகத்தில் இருக்கும் உள்முரண்பாடுகள், சமூகங்களுக்கிடையே உள்ள மோதல்கள், முரண்பாடுகள் பற்றியதானது. ஒரு சமூகத்தில்- சமூக ஒழுங்கமைவு பால், சாதி மதம், பிரதேசமென சார்ந்திருக்கும். பிரதான முரண்பாட்டை மறுத்து அகமுரண்பாட்டை முன்னிறுத்துவது நடைபெறுகின்றது. தேசிய இன அடையாளத்தை மறுத்து அடையாள அரசியலுடன் சுருக்கிக் கொள்வது நடைபெறுகின்றது.
சமூகங்களிடையே ஏற்படுகின்ற சமூக உறவினை அவதானிப்பதன் ஊடாக சமூகத்தினை விளங்கிட முடியும். சமூக ஒழுங்கமைவில் சாதியம் என்பது வேலைப்பிரிவினை என்று மாத்திரம் ஒப்புவிக்கப்படுகின்றது. இதற்கு உதாரணமாக தீண்டாமை யப்பான் (புறக்குமின் burakumin மக்கள்) போன்ற நாடுகளில் https://www.thoughtco.com/who-are-the-burakumin-195318 இருந்ததாக உதாரணம் காட்டுவார்கள். ஆனால் அங்கு வர்ண அடிப்படையில் அல்ல. வேலைப் பிரிவினையை சாதியத்துடன் ஒப்பிட்டுப் பேசுவது பொதுப்புத்தியில் உள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு இருப்பை நிலைபெற, அறிவாளர்களாக காட்டுவார்கள். இதன் அவலம் பல்வேறு தளங்களில் தொடர்கின்றது. சமூகம் அரை குறை ஆய்வாளர்களையும் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கின்றது.
ஆனால் பொருளாதார அடிப்படையில் பலநூற்றாண்டுகளாக கீழ்நிலையில் வாழ்பவர்கள் இருந்திருக்கின்றார்கள். அந்த நிலை முதலாளித்துவ வளர்ச்சிக்கு முன்னர் அவ்வாறாக சமூக அமைப்பு நீண்ட காலம் தொடர்ந்தால் சாத்தியமே. யூதர்கள் கூட பல நூற்றாண்டு கூட்டு வாழ்க்கைப் பிணைவுக்கு (getto) உட்பட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். யூதர்களின் சிந்தனைக் கட்டமைப்பு கற்காலச் சிந்தனையின் இறுகிய வடிவம். வர்க்க அடிப்படையும் சனாதன அடிப்படையும் ஒன்றல்ல. இன்றைய காலத்தில் burakumi மக்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக சமூக இருப்பு என்பது மாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றது. சமூக ஒழுங்கமைவு என்பது மனிதர்களின் வளர்ச்சிப் போக்கின் கட்டங்களை உள்ளடக்கியதாகும். அடையாள அரசியல்- பின்னவீனத்துவம் தேசிய இனங்களின் முதலாளித்துவ சனநாயகக் கட்டத்தைப் பற்றிய புரிதல் அற்று அடையாளம் என கருத்தினை உருவாக்கி விட்டுள்ளார்கள்.
நிலப்பிரபுத்துவத்தின் சிதைவு முதலாளித்துவத்திற்கு இட்டுச் செல்கின்றது. மொழி வழியில் உருவாகும் சமூக ஒழுங்கமைவு வளர்ந்து செல்கின்ற கட்டமாகும். ஏனெனில் “வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப்பிரச்சனையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று- தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா விதமான தேசிய இன ஒடுக்குறைக்கும் எதிராய் போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும், இரண்டாவது - எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப்பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின் பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல் விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும் இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகம் தழுவிய விதியாகும்.” (ப.32-தே.இ.பா.வ.சர்) சமூக ஒழுங்கமைவின் உயர்ந்த வடிவம் தேசமாகின்றது. இன்னும் உலகப் பரப்பில் முதலாளித்துவ கட்டத்தை அடையாத நாடுகள் பெரும்பான்மையானவை. உடைந்து வரும் ஒற்றைத் துருவ அரசியல் போக்கில் எதிர்க் கொள்ளப் போகின்ற இயக்கப் போக்கு இருக்கின்றது. ஆக இரண்டு பிரச்சனைகள் ஒன்று சமூக ஒழுங்கமைவும், திறனாய்வு முறையும். இது தான் முக்கிய புள்ளியாகும். சமூக ஒழுங்கமைவு அடுத்த கட்டத்திற்கு நரக வேண்டிய நிலையில் உள்ள கோட்பாட்டுப் பிரச்சனையாகும்.
4. சாதியம்- கருத்தியல்
உலகின் பாகங்களில் உருவாரும் கருத்தியல் அறியாது. குறிப்பான ஆசிய நிலப்பரப்பை வைத்தே பொதுவான உரையாடல் நடைபெறுகின்றது. செவ்விந்தியர்கள் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? அவர்களின் உலகக் கண்ணோட்டம் என்று அறியவில்லை. உலகப்பரப்பில் வாழ்ந்த மக்களின் உலகக் கண்ணோட்டம் மாறு பட்டு இருந்திருக்கின்றது. ஐரோப்பிய, சனாதன, ஆபிரகாமிய மையச் சிந்தனையில் இருந்தே அணுகும் போக்கு இருக்கின்றது.
ஒவ்வொரு சமூகக் கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதைப் பொறுத்தே சிந்தனை, கருத்தியல் தீர்மானிக்கின்றது. 5000 வருடங்களுக்கு முன் இருந்த கருத்துக்களும், சிந்தனைகளும் முழுமையான வடிவில் இன்றில்லை. அன்று இன்றைய காலத்தைப் போல மதங்களும், கடவுகளும் இருந்திருக்கவில்லை. அந்த மக்களால் இயற்கையை எளிதில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியவில்லை. அந்த மக்களின் அச்சம், இயலாமை போன்றவற்றுடன் போராடி வாழ்ந்த மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கும் முறைகள் ஏற்படுத்தப்பட்டன. தொல்பழங்குடி வாழ்வியல் சடங்குகள் அதிகமாக ஆட்பட்டிருந்த காலம். அந்தச் சமூகத்தின் சிந்தனைப் போக்கு அன்றைய சமூகக் கட்டத்தில் வலிமையானதாகவும் இருந்திருக்கும். மனித வர்க்கத்தின் வளர்ச்சியின் ஊடாக உருவாக்கப்படும் சின்னங்கள், கட்டுக்கதைகள், வரலாற்றுப் புனைவுகள், இயற்கையை கட்டுப்படுத்த முடியாத மனிதர் தனக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாக எண்ணுகின்ற எண்ணவோட்டம் போன்றவற்றால் கட்டமைக்கப்படுவதாகும். உழைப்பினை வழங்காது உருவாகும் மூளை உழைப்புப் பிரிவினரின் உருவாக்கம் என்பதன் வழி அறிவு வர்க்கம் உருவாக்கப்படுகின்றது. முதலில் ஆண்பெண் பிள்ளை பெறும் நிலையே முதல் முதலாக தோன்றிய வேலைப்பிரிவினை என்றார் ஏங்கெல்ஸ். உழைப்புப் பிரிவினைகள் அதிகரித்த பின்னர் அன்றைய சமூகப் பொருளாதார நலனை தொடர்ச்சியாக வைக்கப்பட கருத்தியல்கள் உருவாக்கப்படும். அந்த வகையில் உருவாக கருத்தமைவுகள் என்ற அடிப்படையில் விளங்கிட வேண்டும்.
சாதியம் என்பது இறைக்கோட்பாடு, சமயக் கோட்பாடுகள் போல் கருத்தியலே. வர்ணாசிரம நீதிநெறியானது பொருளாதார நியதிக்கு ஏற்ப பணிந்து செல் என்று போதிக்கின்றது. மக்களைக் கூறாகப் பிரிந்துக் கொண்டு உழைப்புச் சக்தியை விற்காது கோயில் உண்டியலையும், கோயில் கருவறையையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். அதாவது சமூகக் கட்டமைப்பினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் உழைப்பை வழங்காமலே மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சுவது மாத்திரம் அல்ல, மனிதர்களின் உழைப்பை பெறுவதற்காக ஆண்டான் அடிமைகளாக தமது குடும்ப உற்பத்தி வட்டத்தினுள் சமூக உறுப்பினர்களை வதைக்கின்ற பொருளாதாரச் சிந்தனையைக் கொண்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கூலி கொடுக்காமலே அவர்களின் உழைப்பை உறுஞ்சும் சமூக அமைப்பாக இருந்திருக்கின்றது. ஆண்டைகள் தமது ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பில் இருந்து பயன்பாட்டுப் பெறுமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப் பெறுமானத்தைப் பெருக்கிக் கொள்வதன் ஊடாகவும் பரிவர்த்தனைக்கு செய்வதன் ஊடாகவும் மூலதனத்தினை ஆண்டைகள் பெருக்கிக் கொள்கின்றார்கள்.
சோழ இராட்சியமானது ஆக்கிரமிப்பு அரசியல் பொருளாதார உற்பத்தி முறையைக் கொண்ட சமூகக் கட்டம். இந்தக் கட்டத்தின் விளைவான நிலப்பிரபுத்துவ வர்க்கமானது பயன்பாட்டுப் பெறுமானத்தை அதியுச்சமாக பெற்று சமூக பொருளாதார அமைப்பை உருவாக்கிக் கொண்டது. இந்தச் சுரண்டலில் பெறப்படுபவை ஆட்சியாளர்களுக்கே செல்ல முடியும். சோழரின் பின்னரான சமூக பொருளாதாரத்தில் மக்களை இணைத்துக் கொள்ள ஆசிய கொடுங்கோண்மை எனும் வர்ணாசிரமத் தீண்டாமையைக் கொண்டு சமூகத்தை இறுக்கமாகக் கட்டமைத்து விட்டது. இதனால் சுதந்திரமான தொழிலாளிகளால் உழைப்பை விற்றுக் கொள்ளும் தொழிலாளிகளாக முழுமையாக வெளியேற முடியவில்லை. இதனால் இன்னும் மலம் அள்ளுபவர்கள், கூலி, கொத்தடிமைகளாக குறிப்பிட்ட சமூகமே அடிமைகளாக இருக்கின்றார்கள். ஆனாலும் ஈழத்தில் தமிழகத்திலும் பார்க்க மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.
இதில் நகர்ப்புறமயமாதலில், முதலாளித்துவ உற்பத்தியில் சுதந்திரமான தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்ற போதும் சாதியச் சிந்தனை தொடர்வதும் நடைபெறுகின்றது. இது பண்பாட்டுப் புரட்சியுடனேயே சாத்தியமாகும். பண்பாட்டுப் புரட்சிக்குச் சாத்தியமான உற்பத்தி முறை தான் உள்ளதா? ஈழத்தில் தொழிலை தெரிவு செய்வதில் (சுத்திகரிப்பு தொழிலாளிகளைத் தவிர்ந்த) முழுச் சுதந்திரம் உள்ளது. சிந்தனை என்பது அதற்குரிய உற்பத்தி முறை பொருத்தமாக வளரும் வரையில் சிந்தனை மாற்றத்திற்கு உள்ளாகப் போவதில்லை.
சாதியம் உற்பத்திக் சக்திகளுக்கு உற்பத்தி உறவு என்ற அடிக்கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டதே. மதம், சாதியச் சிந்தனை, அரசு, குடும்பம், நீதிமுறை அனைத்தும் மேல்கட்டுமானமாகும். சாதியமானது புராதன காலத்திலும் சரி, இனக்குழும வாழ்வியலிலும் இருந்திருக்க முடியாது. சாதியச் சிந்தனை பொருளாதார அமைப்புச் சார்ந்த சிந்தனை வடிவமாகும். அன்றைய கால கட்டத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு துணைசெய்கின்றது. ஆனால் சிந்தனை வடிவம் அடிக்கட்டுமானமாக காண்பது என்பது தவறானதாகும். அவ்வாறு சிந்திப்பது அல்லது விளக்கம் கொடுப்பது மார்க்சியத்தினை விளங்கிக் கொள்வதில் உள்ள குறைபாடாகும். இவ்வாறே இரட்டைத்தேசியமும், சாதியத்தை அடிக்கட்டுமானமாகப் பார்ப்பதானது மார்க்சியத்தின் புரிதல் இன்மையே. அது மார்க்சியத்தின் குறைபாடு அல்ல. வர்க்கப் பிரிவற்ற சமூகம் இருந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரட்டத் தேசியம் என திணை என்ற ஒன்றை திணித்து அதனை இரட்டைத் தேசியம் என்கின்றது. இது தலித்தியம் போல அடையாள அரசியல் போக்குத் தான். அதனை மார்க்சியமாக நிலை நிறுத்த முயற்சி எடுக்கப்படுகின்றது. திணை என்ற கருத்தாக்கம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை பழைய முறையில் நீடிப்பதாக சங்க காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. இரட்டைத் தேசியம் என்ற திரிபுவாத கருத்தாக்கத்தை பிரமுகத் தனத்தை பாதுகாப்பதற்காக விமர்சிக்காது கடந்து செல்லப்படுகின்றது.
சாதிய அடையாளம், மதத்தின் அடையாளத்தினைக் கொண்டு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கைக் கணிப்பது மார்க்சியப் பார்வையல்ல. இது குறிப்பான தன்னியல்பான - அடையாள அரசியல் ஊடாக உருவாக்கப்பட்ட சிதைப்பு அரசியல் சிந்தனைவடிவமாகும். சாதியமானது பல்லவர்கள், சோழர், நாயக்கர் கால வரலாற்றின் ஊடாகவே விளங்கிக் கொள்ள முடியும்.
4.1 சிந்தனை மாற்றம் பற்றி
இன்றும் நாம் முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக அமைப்பு வடிவத்தினுள் இருந்து உரையாடிக் கொள்கின்றோம். மேற்குலக கருத்தியலாக்கம் ஆளமானதும், அதுவே பொது உண்மையாக 1990 பின்னர் உருவாக்கியுள்ளது. அதனையும் தாண்டிய சிந்தனை முறை இருக்க முடியா என்பது மட்டுமல்ல. உலக வரலாற்று அனுபவங்களும், வரலாற்றுப் போக்குகளும் எம் முன்னே உள்ளது. அவற்றை தொகுத்து அறிய முடியும். ஏனெனில் சமூகத்தின் அமைப்பு முறை மாற்றத்திற்கு உள்ளாகியே வந்துள்ளது. சாதியைக் கடந்த சிந்தனை முறை ஒப்பந்தக் கூலியாக கொண்டு சென்ற மக்களிடம் மாற்றமடைந்துள்ளது. அந்த சிந்தனை முறை எவ்வாறு மாற்றம் அடைந்தது பற்றி ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இதனை பல்வேறு சமூக உறவுகளின் பண்பு நிலையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
சாதியம் பற்றி விவாதிக்கின்ற போது இலங்கைச் சமூகம் சாதிய உணர்வில் (தொழிலைத் தீர்மானிப்பது சிதைக்கப்பட்டுள்ளது) இருக்கின்றது. சாதியம் அழியவில்லை என்ற வாதம் முன்னிறுத்த வேண்டியுள்ளது. இன்னொரு படி சென்று உணர்வில் சாதியம் இருப்பதால் தேசமாக வளரவில்லை என்ற கருத்தும் இருக்கின்றது. தலித்திய அரசியலை முன்னெடுப்பவர்கள் வைக்கும் வாதமாகும். சிந்தனையைத் தீர்மானிப்பது பற்றி மார்க்ஸ் கற்பிப்பவற்றை மறுத்தே கருத்தை முன்னிறுத்துகின்றார்கள். "முதலாளித்துவப் பொருளுற்பத்தி கோலோச்சுகிற சமூக அமைப்பில், முதலாளித்துவமல்லாத உற்பத்தியாளரையும் கூட முதலாளித்துவக் கண்ணோட்டங்களே ஆட்டிப் படைக்கின்றன" (ப44 மார்க்ஸ் மூலதனம் 3பாகம்) அதாவது முதலாளித்துவம் முழுமையடையாத நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. அது தவிர்க்க முடியாத போக்காக இருக்கின்றது. நவீன ஊடகங்கள், மேற்கத்தை சினிமாவில் இருந்து கற்றுக் கொள்ளும் நுகர்வுப் பண்பாட்டியில் அடிப்படையில் உரையாடல் நடைபெறுகின்றது.
முதலாளித்துவ உற்பத்தி, சமூக உறவு மாறக் கூடிய சமூகக் கட்டம் பற்றிய புரிதல் இன்றி பேசப்படுபவையாகும். சிந்தனை மாற்றம் என்பது உடனடியாக ஏற்படுபவை அல்ல. மேற்கின் கருத்தாடலை உள்வாங்கி ஜனநாயகம், முற்போக்கு, தனிமனித சுதந்திரம் என பேசிவிட்டுப் போகலாம். அவை சுயஇருப்பை தக்கவைக்க போதுமானதாகும். அதைத் தான் இன்றைய கட்சிகள், செயற்பாட்டாளர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
சிந்தனை மாற்றம் என்பதை பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கின்றது. முதலாளித்துவம் நிலமானியச் எச்சங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. நிலமானிய அரசவம்ச முறையை ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கால்வின், லூதரின் சிந்தனைப் போக்கிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட வத்திக்கான் தனது திருச்சபை ஊடாக நிலமானிய சிந்தனை வடிவத்தையும், சமூக உறவையுமே விதைக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கால்வின், லூதரின் சிந்தனை போக்கு புரட்டஸ்தாந்து மதத்தின் ஊடாக மதத்தை தனிமனித தெரிவிற்கு உட்பட்டதாக கருதிக் கொண்டார்கள். மதக் கட்டுப்பாடுகளை எதிர்த்ததன் ஊடாக நிலப்பிரபுக்களுடன் பிணைத்திருந்த தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து கிளர்ச்சியை ஏற்படுத்தினார்கள். எனவே முதலாளித்துவம் என்பது தமது சுரண்டலுக்கு ஏற்ப சிந்தனையை சுவீகரித்துக் கொள்கின்றது. கால்வின், லூதரின் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் மீதான சிந்தனைப் போராட்டம் என்பது முதலாளித்து நலனை ஆதரித்து தொழிற் புரட்சிக்குத் துணைபுரிந்தது. ஏகாதிபத்திய சமூக உறவில் மதத்தை விலத்தி வைத்துள்ளது. இன்றைய தனித்துவவாத சமூக உறவில் ”ஜனநாயகம்” இருப்பதற்கும் அடித்தளம் இட்டது.
சாதியப் போராட்டத்தின் விளைவுகளையும் அதே வழியில் ஆய்வு செய்திட முடியும். மாவோவின் பண்பாட்டுப் புரட்சியில் தேடுவது சரியானதாக இருக்கும். பண்பாட்டுப் புரட்சியை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதில் இன்னும் சிக்கல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கின்றது.
புரட்சியின் பின்னர் உருவாகிய புதிய உற்பத்தி உறவிற்கு ஏற்ப சமூக உறவுகளை கட்டியமைக்கும் நோக்குடன் வெளிப்பட்டதே பண்பாட்டுப் புரட்சி. பண்பாட்டுப் புரட்சியின் பின்னரான தாக்கத்தையும், தவறுகளையும் தோழர் நா. சண்முகதாசன் தனது கம்யூனிசப் போராளியின் நினைவுகள், வில்லியம் கிண்டன் - சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்- மாவோவின் பாத்திரம் போன்ற வரலாற்று ஆவணங்களின் ஊடாக வெளிப்படும் ஆய்வுமுடிவுகள் இயங்கியலுடன் இணைந்ததாக உள்ளது. இவர்கள் உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்து வெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றது.
உற்பத்திச் சாதனங்களைக் கைப்பற்றுவதும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும் மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது. உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களைத் தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்குப் பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனை அறிவுறுத்தியும் இருந்தனர். சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தின் அவசியத்தை ரஸ்யப், சீனப் புரட்சியின் பின்னரான பண்பாட்டுப் புரட்சி என்பன நம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும். வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் சுட்டி நிற்கின்றது.
4.1.1 முதலாளித்துவ வாழ்வியல் முறை
கூட்டுக் குடும்ப வாழ்க்கை அதன் மகத்துவம் பற்றிப் பேசப்படுவது உண்டு. அந்த வாழ்வியல் என்பது சுகமானதாக தோன்ற முடியும். அங்கு பெண்களின் இருப்பும், குடும்பப் பொறுப்பும் அதிகமாக சுமப்பவர்களாக இருப்பார்கள். இந்த வாழ்வு முறையை புனிதமானதாக கட்டமைக்கப்படும்.
சமூக உற்பத்திமுறை, உறவுமுறை என்பது மாறப்படுகின்றது. மனிதகுலத்தினால் உருவாக்கப்படுகின்ற சாத்திரம், சம்பிரதாயம், ஒழுங்கு, அறம், சொத்துரிமை பாதுகாத்தல், உற்பத்தி சக்தியை பாதுகாத்தல் என்ற பரிமாணங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் சமூக அமைப்பே தீர்மானிக்கின்றது.
கூடிவாழ்வதை நிலைப்படுத்துவது தனிமனிதர்களின் (emotional, sensitive) உணர்வு, பரிவு, தேவை சார்ந்தல்ல. அது குடும்ப பொருளாதாரத்தினைச் சார்ந்ததாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதற்கான பொருளாதார நிலையை அடைகின்ற போது ஏற்படவும் சாத்தியம் உண்டு.
தனித்துவவாத சமூக உறவைக் கொண்ட சமூகத்திலேயே சாத்தியமானதாகும். இலங்கை, இந்தியச் சமூகங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த தனிமனிதர்களாக உதிரிகளாக சமூகமயப்படுத்தப்படவில்லை. அவர்கள் பாசம், அன்பு, பழமை, குடும்பத்தை முதன்மையாகக் கொண்ட முடிவெடுக்கும் முறை, கூடிவாழும் முறை போன்றவற்றினுள் தான் வாழ்கின்றார்கள். தனிமனிதர்களாக வாழக்கூடிய சமூக அமைப்பு என்பது வெகுசிறிய விழுக்காட்டினருக்கே சாத்தியமாகும். ஆனாலும் அவர்கள் வாழ்வதும் சாத்திர சம்பிரதாயத்திற்கு உட்பட்ட சமூக அமைப்பாகும்.
நாம் கூட்டுக் குடும்பச் சிந்தனை முறையில் இருந்து வெளியேறி மேற்கில் தனித்துவவாத மனிதர்களாக வாழ்கின்றோம். தனித்துவவாத அணுகுமுறையே தனிநபர் தொடங்கி அமைப்பு வரை இருக்கின்றது. மாற்றம் என்பது அனைத்து தளங்களிலும் இடம்பெற வேண்டும்.
மேற்கத்தைய சமூக உறவு தனித்துவவாத சிந்தனை முறையில் அமைந்த அன்றாட வாழ்வியலுக்கும் அமைப்பின் கூட்டுச் செயற்பாடுகளுக்கும் இடையேயான உறவை தவிர்த்துப் பார்க்க முடியாது. ஆனால் தனித்துவமான அன்றாடச் சீவியத்தில் இருந்து மட்டும் பார்க்கின்ற போது மனித வாழக்கையே ஓடும் புளியம்பழமும் போல உறவுகள் உதிர்ந்து செல்கின்றது. பொருளாதார ரீதியாக எவரும் எவரை தங்கியிருக்கும் கட்டாயம் என்பது இல்லை. சமூக நலத்திட்டங்கள், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் என்ற அடிப்படையில் வாழ்வதற்கான நிதி என்பதை சட்டரீதியாக உறுதி செய்யப்பட்ட சமூகமாகும். தனித்துவவாத வாழ்க்கையை சீவியத்திற்கான அணுகுமுறையை பின்பற்றிக் கொண்டிருக்கும் போது உறவுகளின் சிதைவு தவிர்க்க முடியாது போகின்றது. ஆனால் குடிபெயர்ந்தவர்கள் தனித்துவவாதத்தை பாவித்து விட்டு போதல் என்று தான் கொச்சையாக விளங்கி வைத்திருக்கின்றார்கள் எனலாம். எமது பிள்ளைகளே தமக்குத் தேவையானவற்றை அடைவதில் காட்டும் ஆர்வர். எமது பழைய பண்பாட்டை பயன்படுத்திக் கொள்வார்கள். எமது சமூகத்தன்மையை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எம்முடைய பழைய சமூக விழுமியங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இங்கு எமது பிள்ளைகளும் தனித்துவவாதத்தை ஆரம்பத்தில் இருந்து தவறாகவே புரிந்து கொள்கின்றார்கள்.
இங்கு முதலாளித்துவ உற்பத்தி முறை அறிமுகப்படுத்தல், சட்ட உரிமை, முழுமையடையாத தொழில் தெரிவு இருந்தாலும் சாதியம் அழியப்படவில்லை. சாதியம் குடும்ப உறவில் தொடங்கி அன்றான சமூக வாழ்விலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. சாதியச் சிந்தனைச் சீழ் நகரவாழ்விலும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.
மனித குலம் வெவ்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது. அதில் வெவ்வேறு சமூக உறவுகளை கொண்டதாக இருந்து வந்துள்ளது. அரச ஆட்சிமுறையும், அரசுகளும் மாறுபட்டு வந்துள்ளது. அனைத்திற்கும் முதலாளித்துவ மாதிரிப் படிவத்தைத் தான் ஒப்பித்துக் கொள்கின்றார்கள். குறிப்பாக சனநாயக மத்தியத்துவம் என்பது உழைக்கும் மக்களுக்கான அமைப்பு வடிவம். புதிய முறையானது உறவு, வயது, பதவி, பரம்பரை, கல்வி என்பதற்கு அப்பால் அனைவரையும் சமமான இருப்பை கொடுப்பதாகும். இவ்வளவு கால வரலாறுகள் பழைய வடிவத்தை தான் ஒப்பித்து வந்துள்ளார்கள். ஆனால் லெனின் அனைத்து இலக்கியங்களை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார். புதிய முறையை அறிமுகப்படுத்தியதே சோசலிச அரச கட்டமைப்பு, ஆட்சி முறை, சமூக உறவு என்பது பழைய பிற்போக்குத் தனங்களை முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். மக்கள் பிரிவினருக்கான சட்ட உரிமைகளும் இதன் அடிப்படையில் இருந்து தான் உருவாக்கப்படுகின்றன.
பழைய உறவு முறையும், சாதிய மரபும், உழைப்புப் பிரிவினையையும், பயன்பாட்டுப் பெறுமானத்தினால் பெறும் சுரண்டல் வடிவம் கொண்டதே. இன்றும் பயன்பாட்டுப் பெறுமானத்தைப் பெறும் சமூக உறவு தொடர்கின்றது. அது முகம் முறிக்கக் கூடாது என்ற போக்கில் தொடர்கின்றது. முகம் முறித்தல் தவறு என சமூகத்தில் கருதும் போக்காக இருக்கின்றது. இவ்வாறான தன்மையை சிதைத்துக் கொண்டு சமூகம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். இரத்த உறவு குடும்பம் சார்ந்த உழைப்பு முறைக்குள் வாழும் சமூகமாகவே தொடர்கின்றது. அதற்கான உற்பத்தி முறை இன்னும் முன்னேறி விடவில்லை.
ஏகாதிபத்திய சமூக உறவில் உறவு, நட்பு, பிரதேச உறவு இவைகளைக் கடந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறே விவசாயம், கடல் தொழில்களில் கூட்டுப் பண்ணைகளை உருவாக்குவதும், தொழிற்துறை சார்ந்த கூட்டுச் சொத்துடமை முறையிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். குறிப்பாக மதநிறுவனங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிகப் பெரிய சவாலுக்கான விடயமாகும். மத நிறுவனங்கள் மனிதர்களின் உழைப்பை இனாமாக பெறுவதும், தானம், நன்கொடை, சேவை என்ற அடிப்படையில் உழைப்பை கொடுக்காமலே வாழும் மக்கள் கூட்டத்தை எதிர்ப்பது அல்லது மாற்றுவது என்பது இலகுவான காரியம் அல்ல. மதம், கடவுள், பண்பாடு, வழமை, வாழ்வியல் முறை என்றும் தமது அடையாளத்தைப் பாதுகாக்க என்ற கூக்குரலும் வரும். இது மதஅடிப்படைவாதமாகவும், பண்பாட்டுத் தேசியவாதமாகவும், பிற்போக்குத் தனம் உருவாகும். அனைத்துச் சாதிகளிலும் உள்ள பின்தங்கிய சிந்தனை உடையவர்கள், இன்றைய காலத்தில் அடிப்படைவாதத்தின் பக்கம் செல்கின்றனர்.
புதிய சமூக உறவு எவ்வகையான சனநாயக விழுமியங்களை கொண்டதாக இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும். சமூக உறவில் ஏற்படுகின்ற மாற்றம் என்பது மந்திரத்தினால் நடந்துவிடுவதில்லை. உற்பத்தி முறையை மாற்றியமைக்கும் போராட்டத்திற்கு ஒடுக்கப்படும் மக்கள் விடுதலைப் பாதைதான் தீர்வைக் கொடுக்கும். ஈழத்தில் நடைபெற்ற போராட்டம் சாதியம் தொழிலைத் தீர்மானிப்பதை உடைத்ததே பெரும் வெற்றி என்று விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சி என்பது அடுத்த கட்டத்திற்கு நகர்வதில் தேக்கமேற்பட்டுள்ளது.
4.2 உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவு
உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவை அறிந்து கொள்வது அவசியமானதாகும். பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறையானது சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. சாதியம் உணர்வில் இருப்பது என்பது நிலமானிய எச்சமேயாகும். இங்கு முதலாளித்துவம்- ஏகாதிபத்திய கட்டத்தில் வாழ்கின்ற போதும் பழைய உற்பத்தி உறவே மறுபடியும் மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்திலும் நிலவியது. அன்றைய சமூக வாழ்வியல் உற்பத்தியானது சமூகத்திற்கானதாக இருந்தது. இன்றைய பொருளாதார உறவில் அவை முழுமையாக சிதைவடையவில்லை. இன்றைய சமூகவாழ்விலும் அதன் எச்சங்கள் வெவ்வேறு அளவிலும், பண்பிலும் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது. இன்றைக்கு மேற்கு நாடுங்களில் உள்ள கிராமங்களுக்குச் சென்றால் அவர்களின் வாழ்வு முறையில் இருக்கின்ற சமூகப் பண்புகள் முழுமையான தனித்துவவாத முழுமையான வளர்ச்சி கொண்ட பண்பாக இல்லை.
மேற்கு நாடுகளில் கத்தோலிக்க மதபீடத்தின் ஊடாக நிலமானியம் அழுத்தமாகப் பாதுகாக்கப்பட்டது. கால்வின், லூதரின் மதத்தை தனிமனிதத் தெரிவாக முன்வைத்தார்கள். இவர்களின் சிந்தனை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஆதரவாகவும் (உழவர்களுக்கும் வணிகர்களுக்கும் இடம்பெற்ற போரே பக்தி இலக்கியம் என்பர்) அதுபோல அடிமைகளை விடுவித்த ஆபிரகாம் லிங்கனின் செயல் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஏற்றதாகும். “ஆனால் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ”சுதந்திரமான” ”சமத்துவமான” மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.” (ப 130 கு.அ.த தோற்றம்) இவ்வாறு தத்துவப் போக்கு இருந்த போதிலும் கால்வினுடைய சிந்தனைப் போக்கு நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனை வடிவத்தை முற்றாக அழிக்கவில்லை.
முதலாளித்துவ வளர்ச்சி என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முழுமையடையவில்லை. முதலாளித்துவ உறவு என்பது கீழைநாடுகளில் சீர்திருத்தத்தின் ஊடாகவே நடைபெற்று வந்துள்ளது. ஆனால் மேற்கு ஐரோப்பாவில் 1789- 1871 இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற பல புரட்சியின் ஊடாக நிறைவேற்றப்பட்டது. இந்திய, இலங்கை வாழ்க்கை முறை மேற்கை பின்பற்றியதாக இருக்க முயற்சிக்கின்றார்கள். மேற்கத்தைய முறையில் இங்கு முதலாளித்துவப் புரட்சி நடந்துவிட வில்லை. “முதலாளித்துவத்தின் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சியைத் தடங்கல் செய்யும் பழைய அமைப்பு முறையின் மிச்சசொச்சங்கள் அனைத்தையும் அகற்றிவிடுவது தொழிலாளி வர்க்கத்துக்கு முற்றிலும் அனுகூலமானதாகும். முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் (இதில் எதேச்சிகார முறை மட்டுமின்றி முடியரசு முறையும் அடங்கும்) மீதமிச்சங்களை மிகவும் உறுதியாக துடைத்தெறிந்துவிட்டு முதலாளித்துவத்தின் மிகவும் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சிக்கு மிக முழுமையாக உத்தரவாதம் செய்கிற புரட்சியெழுச்சியாகும். (லெனின் நூல் திரட்டு 1 பக்கம் 138)
இங்கு பழைய உற்பத்திமுறையில் அமைந்த நிறுவனக் கட்டமைப்பிற்கு மாற்றாக புதிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும். சமூக விடுதலை என்பது கட்டம் கட்டமாக நடைபெறுவதாகும். சாதியத்தினை ஒழிப்பதற்கு அடிக்கட்டுமானத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பாக மதம் சம்பந்தப் பட்ட விடயத்தில் மதம் பிரதான முரண்பாடாக கொள்வதில்லை. ஆனால் சாதியம் சமூகத்தில் அகமுரண்பாட்டை தோற்றுவிக்கும். சமூகத்தை இலகுவாக பிரித்து விடவும் முடியும். நவீன தொழில் நுட்பம் கொடுக்கின்ற திறந்த உரையாடல் வெளியானது. சமூகத்திற்கு முன்னோக்கிய சிந்தனை வடிவத்தைக் கொடுப்பதில்லை. அனைத்தும் பொதுப்புத்திக்கு உட்பட்டதாகவே உட்படுகின்றன.
சாதியச் சிந்தனை தொடர்ச்சியாக உயிர் வாழ்வதற்கான பொருளாதார அடிப்படை எது என்பதை அறிவது மாத்திரம் அல்ல. மாறாக அதனை மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் உழைப்புடன் பிணைக்கபட்ட சமூகம் இன்று உள்ளதா? அது எவ்வாறு இன்றுள்ளது? இதனைப் பற்றிப்பேசுபவர்கள் மார்க்சியர்களைத் தவிர்ந்த எவரும் இல்லை.
முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையாத நாடுகளில் நிலமானிய மேட்டுக் குடிவாதமானது முதலாளித்துவ சமூக உறவைக் கொண்டதாக இருப்பதில்லை. நிலமானிய மேட்டுக் குடிவாதம் என்பது பழைய சிந்தனையை கட்டிக் காத்துக் கொண்டு முதலாளித்துவ சமூக பொருளாதார உறவிற்கேற்ப தகவமைத்துக் கொள்கின்றது. நிலமானிய மேட்டுக் குடிவாதம் சமூகத்தில் தீங்கை விளைவிக்கக் கூடியது. இந்தச் சிந்தனைக் கட்டமைப்பை நவபிராமணியப் (சமஸ்கிருதமயமாக்கம்) போக்கு என்பார்கள். இது அனைத்துச் சாதிகளிலும் வெளிப்படக் கூடியதே. சமூகத்தில் இருந்து முன்னேறிய பிரவினரின் செயற்பாடுகள் சமூகத்தை பிரிப்பதற்கு துணைபோகின்றது. குறுக்குழுவாதம் செயற்பாடு சமூகத்தில் விதைக்கப்படுகின்றது என்ற புரிதல் கொள்பவர்களாக இல்லை.
இன்னொரு பிரிவினர் சமூகத்தின் பழமைவாதச் சிந்தனையை சுமக்கின்றவர்கள். நிலவளம், ஆதிக்கவளம், சமூக உயர்வு என்பவற்றைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இந்தப் பிரிவினர் கட்சிகளிடையே ஆதிக்கம் செலுத்தும் பிரமுகத் தன்மை உள்ளவர்கள். சமூக இருப்பு என்பது அரசியலில் தேர்தல் அரசியலில் அவசியமான ஒன்று. இந்த சிந்தனைப் பிரிவே தமது நலன்களுக்காக இஸ்லாமியவாதம், இந்துத்துவா, சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பின் சிந்தனைக்குப் பின்னால் செல்லும் பகுதியினராவர். இதை இந்துத்துவாவின் வளர்ச்சியை ஒப்பு நோக்கினால் விளங்கிட முடியும். மரபு ரீதியான கட்சிகளின் தெரிவை விட்டு தமது அகவுணர்வினை (விருப்பு) பிரதிபலிக்கும் கொள்கைக்கு பின்னால் செல்கின்றார்கள்.
மதஅடிப்படையைக் ஒற்றுமையைக் கொண்ட மக்களைக் கூடி இணைத்துப் பேசும் பேச்சுகள் வலுப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையை வைத்தே ஒருங்கிணையும் போக்கும் உள்ளது. இந்துத்துவா, பௌத்த பேரினவாத, இசுலாமிய மத அடிப்படைவாதத்தின் பின்னால் வாக்குச் செலுத்திய மக்களின் சிந்தனை வடிவத்தை ஆராய முயலவேண்டும். எவ்வாறு மக்கள் பிற்போக்கு சக்திகளின் பின்னால் அணிதிரட்டப்படுகின்றார்கள் என்பதையும் அவதானிக்க வேண்டும்.
4.3 சாதியும், தொழில் நுட்பத்தப் பயன்படுத்துதலும்
மலத்தைக் கையால் அள்ளுவதை நிறுத்த முடியுமா என்றால் முடியும். முதலாளித்துவ- ஏகாதிபத்தியக் கட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது அபாரமாக உள்ளது. இந்த வளர்ச்சி அடிமட்ட மக்களுக்குக் கிடைக்கப்பட வேண்டும். ஆனால் சுரண்டும் சமூக அமைப்பின் காரணமாக அடிமட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இந்திய, இலங்கை மக்களின் வாழ்வியல் அரசியல் அடக்குமுறைக்குள் இருக்கின்றது. இந்த வகையில் அரசியல் உரிமை, சனநாயக உரிமை என்பது தொழிலில் கூட சனநாயகம் இருக்கப்பட வேண்டும். மக்கள் இன்னொரு மனிதரின் மலத்தைக் கையால் அகற்றுவதே சனநாயக மீறலாகும். இதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. இவற்றைச் செய்யாது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு ஏற்ற வகையாக உட்கட்டுமானம், கட்டமைப்பில் மறுசீரமைப்பு, வளங்களை பணத்திற்குரிய பண்டமாக்கல், தனியார் மயமாக்கலின் ஊடாக அரச நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கின்றது. இவைகள் எல்லாம் சமச்சீரற்ற ஒப்பந்தங்கள் ஊடாக நடைபெறுகின்றது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி கோலோச்சுகிற சமூக அமைப்பில், முதலாளித்துவமல்லாத உற்பத்தியாளரையும் கூட முதலாளித்துவக் கண்ணோட்டங்களே ஆட்டிப் படைக்கின்றன.
இரண்டாம் உலக யுத்தத்தின் ஏற்பட்ட ஏகாதிபத்தியங்களின் பண்பு மாற்றமே அதற்கு காரணமாகும். சமூக உறவில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. அவை ஒப்புவிப்பது போன்றே சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவையே முதலாளித்துவ வளராத நாடுகளில் நடைபெறுகின்றது. தனிமனித மையச் (தாராளவாதம்) அறிமுகம் செய்யப்படுகின்றது. இதனால் சீர்திருத்தங்களும் ஏற்படுகின்றன. அந்த சீர்திருத்தங்களுடன் சமரசம் செய்யவும், முதலாளித்துவ ஜனநாயகமே உண்மையானது என்று கற்பிக்கின்றது.
நாட்டைச் சுத்தமாக வைப்பது என்பது தெருவில் இருக்கின்ற குப்பைகளை கூட்டி விடுவது என்பது வெறும் அடையாள அரசியல் பூச்சேயன்றி அது பெரும் மாற்றத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொடுக்கக் கூடியது என்றால் அடிப்படையில் திட்டமிட்ட சுகாதார அமைப்பு முறை அவசியமாகும். நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக மலத்தினை அள்ளும் மக்களை விடுவிக்க முடியும். அந்த மக்களை நவீன தொழில் நுட்பத்தினை, திட்டமிட்ட கழிவகற்றல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் கோசத்தினை முன்னிறுத்தச் செய்ய வேண்டும்.
கொலனித்துவத்தின் பிடியிலும், முதலாளித்துவ வளர்சியடையாத நாடுகளில் நகர கட்டமைப்பு வடிவத்தில் பெரும் குறைகள் இருக்கின்றன. முதலாளித்துவ நிறுவனக் கட்டமைப்பில் இருக்கின்ற ஊழலானது முழு நிர்வாகத்திலும் ஊழலை ஏற்படுத்தி விடுகின்றது. கட்டடங்கள் திட்டமிடல் முறையில் பெரும் சீர்கேட்டைக் கொண்டுள்ளது. தமிழக, (ஈழத்தில்) சாக்கடை வடிவமைப்பு உயர் தரத்தில் இல்லை. வடிகால் அமைப்பு நவீனமயப்படுத்தப்பட வேண்டும். பழைய நகரங்களை மீள கட்டமைப்பது என்பது பெரும் சிரமான விடயமே. பல நாடுகளில் வீடமைப்பு திட்டம் அமைக்கப்படும் போது போதுமான மரங்கள் எனவும், வடிகால் அமைப்பு, மின்சார வினியோகம், தொடர்பு பாதைகள், விளையாட்டு மைதானம், போன்ற உட்கட்டுமானங்களை கவனத்தில் எடுக்கின்றார்கள். இவைகளை நிர்வாக அலகுகள் கவனத்தில் கொள்ளவில்லை அல்லது திட்டமிடலில் பின்தங்கே உள்ளார்கள்.
வளர்ந்து வரும் நகரங்களில் பயணிகள் விடுதிகள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றது. அதில் உண்டாகும் கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது தெரியாது. பாவனையாளர்களின் கழிவு நீர், குப்பை எல்லாம் பாதுகாப்பின்றி ஒரு இடத்தில் கொட்டப்படுகின்றது. இவ்வகையான குப்பை மேடுகளை வளர்ந்து வரும் நாடு முழுவதிலும் பார்க்க முடியும். சென்னையில் பள்ளிக்கரணை சரணாலயத்தின் பக்கத்திலேயே குப்பை மேடு இருக்கும் அவலம். இந்த முறைகேடுகளும் வடிகால் அமைப்பு, மனிதக் கழிவு, பாவனைப் பொருட்களின் கழிவுகள் தெருவெங்கும் உள்ளது. இதனால் குப்பை குவியலில் பழைய பொருட்கள் சேகரிப்பவர்கள், காகிதம் சேகரிப்பவர்கள், சுகாதாரத் தொழிலாளிகள் பாதிக்கப்படுகின்றார்கள். ஏற்றத் தாழ்வான சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. இந்த மக்கள் தான் மிகவும் பின்தங்கிய வதிவிடங்களில் வசிக்கின்றார்கள். இந்த மக்களே கொசுக்கடி, துர்நாற்றம் கொண்ட சேரிப்பகுதிகளில் வசிக்க நிர்ப்பந்திக்கப்டுகின்றார்கள். நோய் நொடியால் பாதிக்கப்படுபவர்களும், மருத்துவச் செலவும் அவர்களுக்கு சுமையாகின்றது.
திண்ம, திரவக் கழிவுகள் பற்றி மேற்கு நாடுகளில் இப்பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. வளரும் நாடுகளில் பிளாஸ்ரிக் கழிவுகள் என்பது பெரும் பிரச்சனையே. மக்களே அந்தக் கழிவுகளை அகற்றிச் சேவை செய்கின்றார்கள். இவர்களின் உழைப்பு நாடு என்ற அலகில் மதிக்கப்படுவதில்லை. அந்த மனிதர்களின் சேவை மதிப்பிடப்பட வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து கொண்டு விண்ணானம் பேசிக் கொண்டிருக்க முடியாது. கழிவு அகற்றும் தொழிலாளர்களின் நோய் தொற்றுப் பாதுகாப்புக் கவகசம், உரிய பாதுகாப்பு முன்னேற்பாடு எதுவும் இல்லாது அந்த மக்களை பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பல உயிர்களையும், தொற்றுநோய், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் மோசமாக பாதித்து உள்ளது. தொழிலாளி வர்க்கம் நோய் நொடி, வறுமை, கல்வி, தரமான ஓய்வு (quality time) நேரம் கிடைக்காமல் வாழ்கின்றார்கள். தரமான ஓய்வு நேரம் என்பது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தியில் முக்கிய பேசுபொருள். அந்த உரையாடல் வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் அந்த உரையாடல் ஆரம்பிக்கப்படவில்லை.
வளரும் நாடுகள் பெரும்பான்மையானவை கழிவுப் பொருட்களினால் சுற்றாடல் மாறுபட்டுள்ளது. நதிகள், நீரோடைகள், கால்வாய்கள், வடிகால் எங்கும் நிரப்பியுள்ளது. இந்தப் போக்கு ஒப்பந்தங்களின் ஊடாக சந்தையை திறந்து விட நிர்ப்பந்தம் பெற்றப்பட்டது. அதன் ஏற்பட்ட பெரும் விளைவே. முதலாளித்துவ ஜனநாயகம் பேசும் விடயங்களை இட்டு உரையாடல் நடத்தப்படவில்லை. இதில் இருந்து தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்ற சிந்தனைப் போக்கும் வளரவில்லை.
ஏகாதிபத்தியத்தின் பண்பு, அளவு மாற்றம் என்பது 1990 பின்னர் ஏற்பட்டது. அன்று முதலாளித்துவத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்ற அகங்காரப் போக்கு வளர்ந்த காலத்திற்கு பின்னரானது. இந்தச் சிக்கலுக்குள்ளாகிய ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது.
இங்கு கழிவுளை அகற்றும் முறையை நவீனப்படுத்துவது ஊடாக மக்களை அந்த தாழ்வான நிலையில் இருந்து மீட்க வேண்டும். அதனைச் செய்யாது சாதிய எதிர்ப்பு, இடவொதுக்கீடு என்று அடையாள அரசியலில் மாத்திரம் கவனத்தைக் குவிப்பதால் உயர்ந்த உற்பத்தி சக்திகளை (அறிவார்ந்த உழைப்பாளிகளை, தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள) உருவாக்கிக் கொள்ள முடியாது.
உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை மக்களின் அழுத்தத்தின் ஊடாக ஆட்சியாளர்களை நிர்ப்பந்திக்க வேண்டும். ஆனால் இதற்கான போராட்டத்தினைக் கூட பரந்துபட்ட ரீதியாக முன்னெடுப்பதில் சாதியத்தினை எதிர்ப்பவர்கள் தயாராக இல்லை. தலித்தியவாதிகள் தமது வர்க்கத்தவர்களின், தமது பிரிவினரின் தேவையுடன் திருப்தி கொள்கின்றனர்.
தேர்தலில் பங்கெடுத்து பதவி கிடைப்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் உடையவர்களாக மாட்டார்கள். முதலாளித்துவக் கட்சிகளில் உள்ள பிற்போக்குதனம் சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கின்றது. தேர்தலுக்காக நபர்களைத் தெரிவு செய்வதிலும் சாதி முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. எனினும் ஒடுக்கப்படும் மக்களை இழிநிலையில் இருந்து விடுவிக்காமல் தனியே அடையாள அரசியலுடன் சுருக்கிக் கொண்டுவிட முடியாது. அதற்கு அடிப்படையாக உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரச இயந்திரத்தினை அசைக்கும் போராட்டம் என்பது தனியே ஒரு பிரிவு ஒடுக்கப்பட்டவர்கள் போராடினால் மாத்திரம் போதாது. அனைத்து ஒடுக்கப்படும் பிரிவினரும் சேர்ந்தே போராடி வெற்றி பெறவேண்டும். அமைப்பு வடிவத்திலும், செயற்பாடுகளிலும் புரட்சிகர நிலைப்பாடு பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. மையப்பட்ட மறுசுழச்சி, கழிவு அகற்றும் இயந்திரம், வடிகால் அமைப்பு போன்றவற்றை உருவாக்கப் போராட வேண்டியிருக்கின்றது. முதலாளித்துவப் புரட்சி வரும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை.
.இந்த பொருளாதார அமைப்பில் கூட பல சீர்திருத்தங்களை கொண்டுவர முடியும். மலத்தினை கையால் அகற்றும் கொடிய நிலையைக் குறைந்தபட்சம் தீர்க்க முடியும். இதனைச் செய்யாதது மட்டுமல்ல இதற்கான வேலைத்திட்டத்தில் பற்றாக்குறையை நிறையவே காணமுடிகின்றது.
தேர்தலில் பங்கு கொள்ளும் சாதிய, தலியத்தியக் கட்சிகள் பதவிக்காக அமைப்புகள் நடத்துபவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு பதில் கிடைத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்கின்றார்கள். இதனால் நவீனமயமாக்கலுக்கு செயல்பூர்வமாக போராட முடிவதில்லை. 1980களில் இருந்து தலித்திய கட்சிகள் என அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகளானவை வடிகாலமைப்பு, கழிவு, மலத்தினை அகற்றல் என நவீன மயப்படுத்தபடுத்தலுக்கான போராட்டங்கள், வேலைத்திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள பிரபுகுலத்தவர் (வசதிபடைத்தவர்) நலன் பேணும் அமைப்புகளாகவே தலித்திய அமைப்புகள் இருக்கின்றது.
நவீனமயப்படுத்தத் தூண்டுவதற்கான போராட்டங்களையும் போராட்டத்திற்கான முனைப்பையும் செய்யமுடியவில்லை. இங்கு மார்க்ஸ் உற்பத்தி முறையின் மீதான மேற்கட்டுமானத்தில் மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்துக்கின்றார். மாற்றங்கள் உடனடியாக நடைபெறுவதில்லை. அதற்கான கட்டமைப்பு அவசியமாகும். ஆனாலும் இந்தச் சமூகத்தில் தொழில் ரீதியாக ஒடுக்கப்படுபவர்களின் விடுதலை என்பது அவசியமாகின்றது. உற்பத்திச் சக்தியினை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்கு உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது மிக அவசியமானதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை சுதந்திரத் தொழிலாளர்களை உருவாக்கும் என்பதை அடையாள அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ளவில்லை.
இன்று ஒடுக்கப்படுபவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சமூக அமைப்பில் ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். முதலாளித்துவ உற்பத்திக்குரிய உட்கட்டுமான அமைப்பு என்பதும் அவசியமாகின்றது. முதலாளித்துவ உற்பத்தியை ஏற்றுக் கொண்டு இன்றைய அரசுகள் தனியார் மயமாக்கல், வளங்களை பணப்பண்டமாக்கல் என உட்கட்டுமானங்களை நிதிமூலதனத்திற்கு சாதகமாக மட்டுமே அமைந்திருக்க வழிவகைக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்களின் நலன்பேனும் உட்கட்டுமானம் என்பது அவசியமானதாகும்.
4.4 தலித்தியமும் ஈழ அரசியலும்
ஈழப் போராட்டம் என்பது சாதியை முழுமையாக அழித்துவிட்டதா என்றால் இல்லை என்பதே ஒற்றைப் பதிலாகும். ஆனால் சாதிய முரண்பாடுதான் பிரதான முரண்பாடாக இருக்கின்றதா? இல்லையா என்ற முடிவிற்கு வருவதற்கு சமூக ஆய்வு என்பது முக்கியமானதாகும்.
ஈழச் சாதியப் போராட்டமானது சொந்தக் கோட்பாட்டைப் படைக்கவில்லையா? ஈழத்தின் சாதிய எதிர்ப்புப் போராட்ட முறையானது எதனையும் சாதித்துவிடவில்லையா என்ற கேள்விகளுக்கான பதிலை விஞ்ஞான ரீதியாக தேடவேண்டும். சாதியத்தில் பண்பு, அளவு மாற்றம் ஏற்படவில்லையா? சாதியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஈழத்தின் சூழலில் பயன்படுத்தக் கூடிய சொந்தக் கோட்பாட்டை வந்தடைதல் என்பது, கடந்து வந்த பாதையில் இருந்து முன்னோக்கி நகரும் வகையில் உருவாக்கப்படுவதாகும்.
மேற்கண்ட விடயங்களை சமூக அக்கறை கொண்டவர்கள் சிந்தித்து செயற்பாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பது இல்லை. ஆனால் ஏற்கனவே உள்ள கோட்பாடுகளும், தனிமனித புரிதல், தன்விருப்பு, வெறுப்பு என்பவற்றைத் திணிக்கும் நிலைகளுக்கு அப்பால் முன்னேறியதாக இருப்பதில்லை. இவர்களிடம் தலித்தியம், அம்பேத்காரியம், பெரியாரியம் என்ற சொற்சிலம்பத்திற்கு அப்பால் இயங்கியல் பொருள்முதல்லாத அணுகுமுறைக் கண்ணோட்டத்தின் பற்றாக்குறை உள்ளது. அம்பேத்காரியம், பெரியாரியம் என்பனவற்றில் அந்தந்தக் காலத்தின் பிரச்சனை சம்பந்தமான கோட்பாடுகள் (Thesis) தான் இருக்கின்றன. இந்தியம் என்ற நாட்டரசிற்காக அரசியல் அமைப்பு முறையை 1947 முதலே பரீட்சாத்தம் இடம் பெற்றது. அந்தக் காலத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பும் இடம் பெற்றது. இதன் தொடர்ச்சியான முக்கிய சட்டவாளராக அம்பேத்கர் அரங்கிற்கு வருகின்றார். முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆரம்ப வளர்ச்சிக்காலத்திற்கான சட்டங்கள் இயற்றப்பட்டது. மார்க்சியர்கள் முன்னிறுத்திய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி, முதலாளித்துவ தேசிய ஜனநாயகப் புரட்சி போன்ற விடயங்களை அம்பேத்கரிடம் காணமுடிவதில்லை.
பெரியார், அம்பேத்கார் ஆகியோர் சமூக சீர்திருத்தத்தைக் கோரியவர்கள். முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்தவேளை நிலமானிய- பிராமணியச் சிந்தனை என்பது இறுக்கமாகவே இருந்தது. மார்க்சியம் அரசியல் அதிகாரம் பற்றிப் போதிக்கின்றது. இந்த இரண்டு மாறுபாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் அகவிருப்பின் நிலைப்பாட்டை எப்படியாவது திணித்துவிடும் சிந்தனைப் போக்கும், முயற்சியும் தான் மேலோங்கியுள்ளது. சமூகத்தின் போக்கைக் கணிப்பதும், அதன் நிமிர்த்தம் எதிர்க் காரியமாற்றுவதும் அவசியம்.
சாதியம் உற்பத்தியில் தீர்க்கமாக இருப்பது, சிந்தனைத் தளத்தில் தீர்க்கமாக இருப்பது என
இரண்டும் வெவ்வேறான விடயங்களாகும். பொருள் உற்பத்தி முறை தீர்மானிக்கும் சிந்தனை வடிவம் பற்றிய புரிதலைப் பெறுவது அவசியமாகும். உற்பத்தியில் தீர்க்கமாக இருப்பது அடிமைத்தனமாக தொழிற்படும் சாதிய, சிந்தனை வடிவம் என்ற வடிவில் அன்றாட வாழ்வில் மற்றவர்களை கீழ்மையாக நடத்துதல், சிந்தனையை வெளிப்படுத்தி மற்றவர்களை நிந்திப்பது என்ற வடிவில் மாற்றமடையும்.
சிந்தனை வடிவத்தையும் அதன் வேரையும் சமூகக் கட்டமைப்பில் தொடர்ச்சியாக அனுமதித்துக் கொண்டிருப்பது உற்பத்தி முறையாகும். அனைத்துவித பழைய உற்பத்தி முறைக்கேற்ற சிந்தனை முறை என்பது தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்படுகின்றது. இவற்றையும் இணைத்து அனைத்தும் தழுவிய முறையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
4.5தலித்திய அரசியலை எதிர்ப்பவர்கள்?
தலித்திய கோட்பாட்டை எதிர்ப்பது என்பது மேட்டுக்குடி அல்லது சாதியவெறியை வெளிப்படுத்துபவர்களின் ஆதிக்க வடிவமா? அவ்வாறு பார்ப்பது சரியா? சாதியத்தினை விளங்கிக் கொள்வதற்கு சமூக அமைப்பு, பொருளாதாரம் பற்றிய புரிதல் அவசியமாகின்றது. அடையாள அரசியல் கோட்பாடுகளை முன்னிறுத்துவதானது பிரச்சனையை ஆராயும் செயலை மறுக்கும் சோம்பேறித்தனமான கருத்துகளில் இருந்தும், தன் உணர்வை மிகைப்படுத்திய கருத்துகள் மேலோங்கி இருப்பதில் இருந்தும் எழுகின்றது.
1980களின் அடையாள அரசியல் என்பது தலித்துக்களின் உணர்வை, வலியை, தலித்தாக இருந்தால் தான் வலியை உணர முடியும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தப் போக்கு ஒரு கோட்பாட்டுச் சமரத்தில் இன்று வரையில் சிக்கித்தவிக்கின்றது. சீர்திருத்தம், அரசியல் அதிகாரம் என்பவற்றில் குழப்பம் இன்றும் தொடர்கின்றது.
“தோழர் நந்தினி சேவியரை பேட்டியெடுத்த போது இற்றைக்கு 16 வருடங்களுக்கு முன் ”தலித்” இதழ் ஆசிரியர். ரவிக்குமார்: - அதே கால கட்டத்தில்தான் இந்தியாவில் நக்சல்பாரிப் போராட்டம் நடந்தது. ஆனால் அது சாதிப் பிரச்சனையைக் கையில் எடுக்கவில்லை. மாவோயிசத்தை உயர்த்திபிடித்த நீங்களோ சாதிப்பிரச்சனையை எடுத்திருக்கிறீர்கள். இதற்கு அம்பேத்காரது சிந்தனைகளின் தாக்கம் உங்களுக்கு இருந்ததா..?
நான் (நந்தினி சேவியர்):- அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் என்று கேள்விப்பட்டிருந்தோமே தவிர அவரது சிந்தனைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்கள் மக்கள் படும் துன்பங்களைப் பார்த்துத்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டோம். எங்களுக்குப் பாடசாலைகளில் கல்வி கற்கும் போது ஏற்பட்ட தாக்குதல்களும் சாதி ரீதியாக உயர் சமுகத்தவரால் பட்ட ஒதுக்கல் போன்ற நெருக்குவாரங்கள் தான் எங்களைப் போராட வைத்தது. ---- 2000 இல் எடுத்த நேர்காணல் பிரசுரமானது ”தலித்” இதழ் ஜூன் - 2003. “அம்பேத்காரது சிந்தனைகளின் தாக்கம்“ என்ற கேள்வியை முன்னெடுக்கின்ற போதே மார்க்சியம் பற்றிய புரிதல் அற்ற கலாநிதி ரவிக்குமாரின் அரசியலை விளங்கிட முடியும். ஏனெனில் மார்க்சியர்கள் வெவ்வேறு சமூக கட்டத்தை உள்வாங்கியே இருப்பார்கள். வர்க்கப் போராட்டம் பற்றிய கல்வியாளர் என்பதை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இங்கு அம்பேத்கர் தான் சாதியத்திற்கு எதிராக போராடக் கூடிய சிந்தாந்தம் என்று சிறுபிள்ளைத்தனமாக எண்ணும் இலங்கைத் தலித்தியவாதிகள் கிளிப்பிள்ளைகளாக அம்பேத்கர், பெரியார் பற்றி ஒப்பிக்கின்றார்கள். தமிழகத்தில் அடையாள அரசியலைப் புகுத்திய கருத்தியலாளரின் மேலாண்மை கொண்ட கேள்வியை அவதானத்தில் கொள்ளப்பட வேண்டும். ஈழத்தவர்களுக்கு இந்திய சாதனையாளர்களை அறிமுகப்படுத்துவதாக பெருமை கொள்கின்றனர். நிலமானியச் சிந்தனை முறை முழுமையாக சிதைவடையாமலும், முதலாளித்துவப் புரட்சி நிறைவேற்றப்படாத இந்தியாவில் குரல் கொடுத்தவர்கள் என்ற புரிதல் ஈழ தலித்தியவாதிகளுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
1966ம் ஆண்டு போராட்ட வடிவத்தை தமிழகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது ஒரு அவலமே. தோழர் டானியலை தலித்திய எழுத்தாளராக சுவீகரித்துக் கொள்கின்றார்கள். தலித்திய இலக்கியத்தின் ஆரம்ப காலங்களில் வாழ்ந்த தோழரின் எழுத்துகள் என்பது ஒடுக்குமுறையின் சிந்தனை வடிவம், வர்க்க அடக்குமுறை இவற்றின் ஊடாக சாதியத்தினை அணுகிய எழுத்தாளர். ஒடுக்குமுறைக்கு உட்பட்ட சமூக உறுப்பினர் தான். ஒடுக்குமுறைச் சமூகத்தைப் பற்றி துல்லியமாக எழுத முடியும் என்ற சிந்தனை வடிவத்தின் சொந்தக் காரர் அல்லர். தோழர் டானியல் அணியில் வந்த தோழர் நந்தினி சேவியர் ”கண்டனம்! -
”அது என்ன தலித் எழுத்தாளர் என்னும் பதம்? நீங்களே சாதியை எழுத்தாளர்களுக்கும் சூட்டி விட்டீர்களா? இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். எழுத்தாளர் எனப்பாவியுங்கள்! என இன்னொரு எழுத்தாளர் பிரகடனப்படுத்துகின்றதை முகப்புத்தகத்தில் வாசிக்க முடிந்தது. இவ்வாறே ஒடுக்கப்பட்ட மக்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடும் சொற்பதமும் ஆகும்.
இவ்வாறான குரல்கள் எழுவதற்கான காரணம் சமூகத்தை சாதிய அடையாளங்களைக் கொண்டு விளிப்பதால் ஆகும். இங்கு சமூக விஞ்ஞானப் பார்வையற்றவர்களின் சிந்தனை வடிவம், மேலாதிக்க கருத்து திணிப்பில் இருந்து கருத்துருவாக்கம் நடைபெறுவதையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆம் ”ஆயிரம் காலம் அடிமை என்றாயே அரிசனர் என்று பெயர் வைக்க யாராடா நாயே” என்ற பாடலை பொருத்திப் பார்ப்பது பொருந்தும். புதிய சொல்லாடல்களைப் பொருத்தி அழைத்துக் கொள்வதன் ஊடாக சாதியத்தை இல்லாதாக்கிவிட முடியாது. தலித், அரிசனர், பஞ்சமர் புதிய பெயர்கள் சூட்ட வேண்டியது சமரசவாதமே.
இந்திய மாநிலங்களில் சமச்சீரான முதலாளித்துவ வளர்ச்சி இல்லை. முன்னணி மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா, வங்காளம், டில்லி, ஆந்திரா போன்றவற்றை விட தமிழ் நாட்டில் பழைய சிந்தனை முறைக்கு எதிரான குரல்வலுவாக இருந்தது. பகுத்தறிவு, சமூகநீதி, பிராமணிய -சனாதன (மனுநீதி) எதிர்ப்பில் முன்னணியில் இருக்கின்ற மாநிலம் தமிழ் நாடு ஆகும்.
வளர்ந்து வருகின்ற முதலாளித்துவம் நிறுவனமயப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்துகின்றது. சமூக ஒழுங்கமைவில் நிறுவனமயமாக்கம் என்பது சமூகமயமாக்கல் சமூக உறவின் ஊடாக ஏற்படுகின்றது. நிறுவனமயப்பட்ட உரிமைகள் முதலாளித்துவம் வளர்ச்சியடையாத - புரட்சிகள் நடைபெற்று விடாத நாட்டில் தந்தை பெரியார், நாராயண குரு (கேரள ஈழவர்) ஆகியோர் முன்னெடுத்த சீர்திருத்தப் போராட்டம் சமூகநீதி பற்றிய விடயத்தில் முன்னேற்றம் கண்டது. இந்த வரலாற்றுப் போக்கை விளங்காது தந்தை பெரியாரை புரிந்து கொள்ள முடியாது.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்கள் சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள். முதலாளித்துவம் வளர்ந்து வருகின்ற போது நிலப்பிரபுத்துவத்தில் உள்ள கூறுகளைத் தீர்க்கமாக எதிர்த்தார்கள். பெரியார் பரந்த தளத்தில் செயற்பாட்டாராக இருந்தார். இதில் அவர்கள் சமரசம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அம்பேத்கர் சட்டவாதத்தினுள் செயற்பட்டார். இருவரும் கொலனித்துவ ஆட்சியை எதிர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியவர்கள் அல்லர்.
முதலாளித்துவப் புரட்சியை இவர்கள் எவரும் நிறைவு செய்யவில்லை. முதலாளித்துவ பொருளாதார அமைப்பை மாற்றிக் கொள்ளக்கூட பெரியார், அம்பேத்கர் முயலவில்லை. பெரியார் முதலாளித்துவ கட்டத்தில் எவ்வாறு நிலமானிய - சனாதனதை எதிர்க்கொள்வது என்றும், அம்பேத்கர் சனாதனத்தில் இருந்து உயர் வாக்கம் செய்வது பற்றி போராடியுள்ளார்கள். மாறாக பெரியார் சனாதனத்தை சிதைப்பதில் முன்னிலை வகிக்கின்றார். ஆனால் அம்பேத்கர் உயர்குடியாக்க நிலைக்குச் செல்கின்றார். இதுவே பௌத்த மதத்திற்கு மாறும் சிந்தனையை முன்வைக்கின்றார்.
4.6 அம்பேத்தகரியர்கள் சமூக ஒழுங்கமைவை மறுப்பது
சமூக ஒழுங்கமைவு என்பது வரலாற்று பொருள்முதல் ரீதியாக வளர்ந்து வரும் மக்கள் கூட்டத்தை குறிப்பிடுகின்றது. இது உளவியல் ரீதியான உணர்வு நிலையில் இருந்து மாறுபட்டதாகும். இது பொதுவாக மொழி அடிப்படையில் அமைந்து கொள்வதாகும். சமூக ஒழுங்கமைவு என்பது மத, நிற, பிரதேசம், சாதி போன்றவற்றைக் குறிப்பிடுவதில்லை. சமூக ஒழுங்கமைவு சனநாயக வடிவமானதையே அதற்குள் உட்படுத்தப்படுகின்றது. சமூக ஒழுங்கமைவு சர்வம் தழுவிய வளர்ச்சிப் போக்காகும். பல தனிநபர்கள் குடும்பமாகின்றார்கள், பலகுடும்பங்கள் குடிகளாகின்றன, பலகுடிகள் இனக்குழுமமாகின்றது. பல இனக்குழுமங்களின் சிதைவு தேசிய இனமாகின்றது. இது உலகம் முழுவதும் இந்த வடிவத்தில் தான் சமூக ஒழுங்கமைவு இருக்கின்றது.
அடையாள அரசியலை பின்பற்றுபவர்கள் 'சமூகம் என்பதே இந்தியாவில் இல்லை, இங்கு இருப்பதெல்லாம் சாதிகளின் தொகுப்பு தான்' என்கின்றனர். ஆனால் இந்தியாவின் வரலாற்றையும், இந்திய தேசியத்தின் தோற்றம், இந்திய தேசிய கொங்கிரசின் தோற்றம் போன்றவற்றை உள்வாங்கிக் கொள்ளாத உரையாடலாக அமைகின்றது. “இந்திய தேசியம் உண்மையில் சொல்லப் போனால் பிரிட்டன் அரசு பெற்றெடுத்த குழந்தையாகும்; பிரிட்டன் அதிகாரிகள் தொட்டிலிலேயே வாழ்த்தினர்.” (கோ. கேசவன் ப167 இ.தே.தோ) இந்திய கொங்கிரஸ் தரகு வர்க்கத் தன்மை கொண்ட கட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் பிரித்தானியரால் ஆட்சி மாற்றம் கொள்ளப்பட்டது. எந்தக் காலத்திலும் தேசங்களின் சுயநிர்ணயம் என்ற விடயத்தில் அக்கறை கொண்டதாக இருக்கவில்லை. அம்பேத்கர் வழியை பின்பற்றுபவர்கள் இந்தியா என்பது ஒரு நாட்டரசு என்ற புரிதல் அவர்களுக்கு இல்லை அல்லது அந்த உரையாடலுக்குத் தயாராக இல்லை. 1947 கொலனித்துவவாதிகள் நாட்டை உள்நாட்டு ஆட்சியாளர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். குறிப்பாக கொலனித்துவ காலத்தின் பின்னராக அரசியல் போக்கையும், ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக மூலங்களையும் அறிதல் வேண்டும்.
சமூக ஒழுங்கமைவில் தேசமாக பொது அடையாளத்தை நோக்கி நகர்கின்றதை மறுக்கின்றனர். சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சியில் தேசம் என்பது உயர்ந்த சனநாயக வளர்ச்சியாகும். இது மதம், சாதி, பிரதேசம் என்ற அடையாள அரசியலுக்கு மாற்றானதாகும். (பொதுவெளியில் தமிழ்த் தேசியம் எனச் சொல்கின்ற போது எதிர்க்கும் கருத்தியலின் பின்னணி). இந்தியப் பிரிவினையின் பின்னர் பாக்கிஸ்தான் சென்ற மக்கள் திரும்பி வந்தனர். அந்த மக்களின் மொழியும் அந்த நாட்டின் மொழியும் மாறுபாடும் ஒரு காரணம். மொழிவழித் தேசிய உணர்வு அங்கு வெளிப்பட்டது. தேச வளர்ச்சிப் போக்கை மறைக்க வேண்டிய தேவை அடையாள அரசியலை மேற்கொள்பவர்களுக்கு உண்டு. கிந்திய தேசியத்தின் வார்ப்புகள் என்பதே பின்னால் உள்ள அரசியலாகும்.
அம்பேத்கர் முன்வைத்த தேசியம் என்பது பல்மொழிகளையும், பல தேசங்களையும், பல தேசிய இனங்களையும் கொண்ட நவ இந்தியா என்ற நாட்டை உருவாக்குவதற்கு இந்தியே சிறந்தது என்றும் முன்மொழிகின்றார். ‘‘பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது. இதுவே இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கான ஒரே மார்க்கம் என்பது என் கருத்து. இந்தியே மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். (ப212 அம்பேத்கர் நூல். தொ.1 1955 மொழிபெயர்ப்பு)
இன்றைய காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த பல சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது. அதனை மைய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு இந்துத்துவா பண்பாடே இந்திய தேசியமாக கட்டமைக்கின்றது. “நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி” மேலும் அவர்கள் தங்களது அரசியல் நோக்கத்திற்காக தொழிலாளர்களை சுரண்டுபவர்கள். பொதுவுடமை தத்துவம் பன்றிகளின் தத்துவம். புரட்சி வேலைக்காகாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை விட புத்தமே சிறந்தது. மதம் மக்களுக்கு அபின் இல்லை. மதம் சமுதாய புத்தெழுச்சிக்கு வழிவகுக்கும். (அம்பேத்கர் நூல் தொகுப்பு- 7. பக்402-433 மற்றும் தொகுதி:37-பக்212) இங்கு மார்க்சியத்தை ஏற்பது ஏற்காதது விடயமல்ல.
தேசிய இனப்பிரச்சனை, அரசு, சமூக மாற்றம், மதம் பற்றி, சிந்தனைக்கும் உற்பத்திக்கும் உள்ள உறவு பற்றிவிடயங்களில் முரண்பாடு உண்டு. அவ்வாறு முரண்படுவது அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தார் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர் எந்தனையோ பல்கலைக் கழகப் பட்டங்களை பெற்றார் என்ற காரணத்திற்காக அல்ல. மார்க்சியர் முரண்படும் இடங்கள் கோட்பாடு சம்பந்தமானமாகும்.
இன்றைய தலித்தியர்கள், பெரியாரியர்கள் கட்டமைப்பில் மாற்றத்தை கோரவில்லை. இன்று இருக்கின்ற சமூகக் கட்டுமானத்தை தகர்ப்பது நோக்கமல்ல.தேர்தல் கட்சியானது தமக்கு தேர்தலில் இடம் கிடைக்க வேண்டும், அந்தப் பதவியை வைத்துக் கொண்டு ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகின்றார்கள். தனிநபர்கள் பதவியில் இருப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம், அதிகாரம் என கருத்தாக்கம் செய்யப்படுகின்றது. முதலாளித்துவ கட்டமைப்பில் இவ்வாறு கருதுவதை நாம் தவிர்க்க முடியாது. இங்கு முரண் என்னவெனில் இடதுசாரியம் என்ற பெயரில் செய்யும் மோசடியான நிலைப்பாடு பற்றியதே.
அடையாள அரசியல், சலுகை அரசியலுக்குள் மக்களைக் கொண்டு செல்கின்றது. முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பில் மக்களை வாழ நிர்ப்பந்திக்கின்றது. சீர்திருத்தமும் சமூக மாற்றமும் ஒன்றல்ல. சோவியத் புரட்சியின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சமூக அமைப்பைக் காப்பாற்றுவதற்காக சமூகக் கொடுப்பனவுகள், சிறுவர் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு என சமூகச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் பெண்களுக்கான உரிமையை நிர்வாக கட்டமைப்பு ரீதியாக உறுதியும் செய்தது. சோவியத் ஒன்றியத்தில் பெண்கள் தெரிவு செய்யும் தொழிலாக வைத்தியத் தொழில் இருந்தது என்று சோவியத் ஒன்றிய பொதுவுடமை உறுப்பினர் சொல்லக் கேட்டுள்ளேன். இன்றைய இலங்கை, இந்திய சமூகம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. முதலாளித்துவ நிறுவனக் கட்டமைப்புகள் உயர்ந்த ஜனநாயக மரபில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இது சமூகச் சிக்கலை தோற்றுவித்தே வருகின்றது.
சமூக அமைப்பில் அரசியல் உரிமையை முன்னிறுத்தியவர்களையும் (பெரியாரிய, அம்பேத்கரிய) மார்க்சியத்தினையும் ஒப்பிட முடியாது. இவர்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்தாது. சீர்திருத்தப் பாதையை தொடரும் தேர்தல் அரசியலுக்குள் இருப்பதால் மார்க்சியத்தை அன்னியப்படுத்தும் வேலையைத் தான் அடையாள அரசியல் 1980களின் பின்னர் செய்துள்ளது. அம்பேத்கரியர்களின் சமூகப் போராட்டங்கள் என்பன உற்பத்தி முறையை மாற்றக் கூடிய போராட்டங்கள் அல்ல. பௌத்தத மதத்தைப் பின்பற்றும் படி அம்பேத்கர் வேண்டிக் கொண்டார். மதம் என்பது இந்தச் சமூக அமைப்பையும், பொருளாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் ஒரு நிறுவனமாகும். மத நிறுவனங்கள் அனைத்துமே மற்றவர்களின் உழைப்பில் சொகுசாக வாழும் உறுப்பினர்களால் (பூசாரி, குருக்கள், முல்லாக்கள், ஐயர்) வழிநடத்தப்படுபவை தான். இதேவேளை மதம் மாறுவதால் சிந்தனை மாறுவதில்லை. மதம் சார்ந்த சமூகப் போக்கு என்பது பழைய முறையில் அமைந்த சிந்தனைக் கட்டமைப்பைத் தொடர்வதாகும். இது கற்காலச் சிந்தனை மரபையும், சாதியையும் காப்பாற்றிக் கொள்ளுகின்றதை அறியக் கூடிய அரசியல் புரிதல் இல்லை. இது கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்கும் இடையேயான சிந்தாந்த முரணாகும்.
மார்க்ஸ் - அம்பேத்கர் இருவரின் சித்தாந்தம், கோட்பாடுகள் வெவ்வேறு துருவங்களைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த மாறுபாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். அம்பேத்கர் முதலாளித்துவ புரட்சியைக் கூட நடத்திட வழிகாட்டவில்லை. மாறாக மார்க்ஸ் புரட்சிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். பரீஸ் கம்யூன் புரட்சியின் போது வழிகாட்டினார். பழைய சமூக அமைப்பு முறையைத் தூக்கியெறிய வழிகாட்டினார். பரீஸ் புரட்சி தோல்வியடைந்த பின்னர் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்தார். அவர் பழைய உற்பத்தி மாத்திரம் அல்ல ஆட்சியதிகார கட்டமைப்பை பழைய முறையில் தொடர முடியாது என்ற நிலைப்பாட்டை வந்தடைந்தார். முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக உறவில் முன்னேறிய உரிமை வழங்குவாத இல்லை. முன்னேறிய ஜனநாயகப் பண்பை நோக்கி வளரவேண்டும்.
மார்க்ஸ் பரீஸ் கம்யூன் புரட்சியின் படிப்பினைகளை உலகிற்குத் தந்துள்ளார். புரட்சிகர முதலாளித்துவ புரட்சியை ஐரோப்பாவில் நடத்தி முடிந்திட வழிகாட்டியது. வரலாற்றில் ருசிய, சீனப் புரட்சி, கியூபா என எண்ணற்ற நாடுகளை விடுதலைக்கு வழிகாட்டிய தத்துவமே மார்க்சியம். சீனாவில் நடைபெற்ற பண்பாட்டுப் புரட்சி, கியூபப் புரட்சிக்கு பின்னர் கட்சி கட்டப்பட்டு, முதலாளித்துவ கடமை முடிக்கப்பட்டதும், தொழிலாளர்களின் அரசு அமைக்கப்பட்டதாகும்.
தந்தை பெரியார் முன்வைத்த தமிழ்நாடு தமிழருக்கு என்பது பிரித்தானிய கொலனித்துத்தின் கீழாகும். தமிழ் நாட்டு விடுதலை ஏகாதிபத்தியத்தின் கீழாக இருக்க முடியாது. சனாதன சிந்தனைக்கு (பிராணிய) அடிமையாக இருப்பதை விட கொலனித்துவத்தின் கீழ் இருக்கலாம் என்றார். சுதந்திர தேசங்களின் கூட்டமைப்பு என்பது சுயநிர்ணய உரிமை கொண்ட தேசத்தின் பின்னரே சாத்தியமாகும். முதலாளித்துவ வளர்ச்சியில் ஆட்சியதிகாரத்திற்காகப் போராடும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஜனநாயக உரிமையையும், அடுத்த உயர்ந்த ஜனநாயக வடிவத்தை முன்னேறிச் செல்கின்றது. வரலாற்றுப் போக்கில் ஜனநாயக உரிமை எவ்வாறு வளர்ந்து வருகின்றது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.
5.கட்டமைப்பு மாற்றம் என்றால் என்ன?
இந்தியாவைப் பொறுத்த வரையில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தினை மறுத்துவிட முடியாது. ஆனால் இவர்களின் வரலாற்றுப் பாத்திரம் என்பது இலங்கையைத் தொடவில்லை. அதேவேளை அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரை இலங்கையில் இறக்குமதி செய்ய முற்பாடுகின்றார்கள். ஏற்கனவே ஈழத்தில் உள்ள பிரச்சனைக்கான கோட்பாட்டுப் பிரச்சனை 70களில் முன்வைக்கப்பட்டு விட்டது. இன்றைக்குப் பொருத்த நினைப்பது வரலாற்றுக் குருட்டு சிந்தனையாகும். காரணம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோர் சீர்திருத்தவாதிகள் என்பதற்கு அப்பால் இயங்கியல் பொருள்முதல்வாதிகள் அல்லர் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும். தந்தை பெரியார் தமிழகத்தில் தமிழ்த்தேசியம் பேசுபவர்களால் விமர்சிக்கப்படுகின்றார். 1932 பொதுவுடமைக் கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர் அவர் நிலைப்பாடு மாறியிருக்கின்றது. தமிழ்நாடு தமிழருக்கே என்பதும், ஏகாதிபத்தியத்தின் கீழ் இருப்பது மேலானது, பிராமணியச் சாதியைத் தவிர்த்த நிலப்பிரபுக்களின் பக்கமாக சார்ந்திருந்தார் என்ற விமர்சனமும் அவர்மீது இருக்கின்றது. இதேவேளை இந்தியாவிற்குள் இருப்பது பிராமணியத்தின் பிடியில் இருப்பதாகவும் பெரியார் கருதினார். கீழ்வெண்மணி படுகொலையில் தந்தை பெரியார் மௌமாக இருந்தார், தமிழ் காட்டுமிராண்டி மொழியென்றார் என்ற விமர்சனங்கள் உள்ளன. மொழி பற்றிய அவரின் நிலைப்பாட்டில் ஆங்கிலத்தினை முன்னிறுத்தினார். பண்பாட்டு விடயத்திலும் மேற்கின் போக்கையை முன்னிறுத்தினார். அவைகள் தவறான அரசியல் நிலைப்பாடு என்பது உண்மையே. ஆனால் வரலாற்றோட்டத்தில் மிகையான அசைவியக்கத்தில் பங்களிப்புப் பற்றிய மதிப்பீடுகள் தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தோழர் ப ஜீவானந்தம் ஈரோட்டுப் பாதை சரியா? என கேள்வியெழுப்பினார். 47- 48 இடையில் பல கட்டுரையில் எவ்வாறு சீர்திருத்தவாதத்தை நோக்கி அணிதிரட்டினார் என்று எழுதியுள்ளார். ‘‘பொதுவுடமையிலும், புதிய வாழ்விலும் புரட்சியிலும் நேர்மையும் உறுதியும் கொண்டுள்ள அன்பார்ந்த திராவிட கழக வாலிபத் தோழனே! உனக்குரிய பாதை எது? ஈரோட்டுப் பாதையா? எங்கள் பாதையா? (ப58 ப.ஜீவானந்தம்) இந்த கோட்பாட்டுப் பிரச்சனையில் இன்றைக்கும் உள்ளது. தந்தை பெரியாரை எவ்வாறு அணுகுவது என்ற உரையாடல் இன்றும் தொடர்கின்றது. நீதிக் கட்சி, திராவிட கழகம் போன்றவற்றிச் செயற்பாடுகளை இரசிக மனப்பாங்குடன் மதிப்பிடப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்கவராக தந்தை பெரியார் உள்ளார்.
“தனிநபர்கள் தமது குணத்தின் குறிப்பிட்ட அம்சங்களின் சிறப்பால் சமுதாயத்தின் தலைவிதியைப் பாதிக்க முடிகிறது என்று ஆகிறது. சில சமயங்களில் இந்தச் செல்வாக்கு மிகவும் கணிசமாகவே இருக்கிறது. ஆனால் இந்தச் செல்வாக்கைச் செலுத்துவதற்குரிய வாய்ப்பும் அந்தச் செல்வாக்கின் அளவும் சமுதாயத்தின் நிறுவன வடிவத்தாலும் அந்தச் சமுதாயத்துள் நிலவும் சக்திகளின் உறவு நிலையாலும் நிர்ணயம் பெறுகின்றது. (பக். 34 வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் பிளெஹனவ் 2007 பாரதி புத்தகாலயம்) தனிமனிதரின் பாத்திரம் என்ற வகையில் தந்தை பெரியாரை மறுத்துவிட முடியாது.
ஜீவா வைக்கும் விமர்சனத்தை இன்று வைக்க முடிவதில்லை. விமர்சனங்கள் சீர்படுத்துவதற்காக செய்யப்படுகின்றது. அரசியல், சிந்தனை தேர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜீவானந்தத்தின் விமர்சனம் அரசியல் காலத்தில் செய்யப்பட்டவையாகும். “சமூகப் புரட்சிக்கு விஞ்ஞானியாகப் பாதை காட்டியதில்லை. தொழிலாளி - விவசாயப் பொதுமக்களிடையில் வேரூன்றி நிற்கிற எந்த போக்குக்கட்சியோடும், ஸ்தாபனத்தோடும் கூட்டணிக்கு முயன்றதுமில்லை. நெருங்கி உறவாடி, படிப்பினை பெற்றதுமில்லை. போகட்டும், தனித்து நின்று பொது மக்களுக்கும் புரட்சி கட்சிகளுக்கும் வழிகாட்டும் வடிவத்தில் உருப்படியான எந்த முன்னேற்றத்தையாவது கண்டாரா? அதுவுமில்லை. நேர்மாறாக, புரட்சி கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார். ஜனநாயக ஸ்தாபனங்களை திருத்துவதற்குப் பதிலாக அழிக்க முற்பட்டிருக்கிறார்.“ (57 ஜீவானந்தம் ) கீழ் வெண்மணி படுகொலை நடந்த போது என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பது தெரிந்ததே. இங்கு தோழர் ஜீவா தொடுப்பது கோட்பாட்டுப் பிரச்சனையாகும்.
சீர்திருத்தம் என்பது வளர்ந்து வருகின்ற முதலாளித்துவ உற்பத்தி முறைக்கான சீர்திருத்தமே. திராவிடக் கட்சிகள் எனப்படுபவை முதலாளித்துவ சீர்திருத்தத்தை மேற்கொண்டனர். கலைஞர் மு. கருணாதிநி இறந்த பின்னர் தோழர் பிடல் காஸ்ரோவிற்கு இணையாகப் பேசப்பட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கை என்பது 1990 பின்னர் கைவிட்ட நிலையில் பெரும் முதலாளிய கட்சிகளுடனும், மதவாதக் கட்சியுடனும் அவரால் சமரசம் செய்ய முடிந்தது.
ஆனால் தோழர் பிடஸ் காஸ்ரோ 1959 இல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருகின்றார். சுமார் பத்தாண்டுகள் உள்நாட்டு வளர்ச்சியில் ஈடுபட்டார்கள். 1968களில் பல சிறிய அமைப்புக்களை இணைத்துக் கொண்டு பொதுவுடமைக்கட்சி கட்டப்படுகின்றது. 1990களின் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் உதவி இல்லாத காலத்தில் சுயபொருளாதாரத்தை கட்டமைத்ததினால் பொருளாதாரத் தடையைத் தாக்குப்பிடித்து கியூபாவை அன்னியச் சக்திகளிடம் இருந்து காப்பாற்றினார்.
ஆனால் இதற்கு மாறாக முதலாளித்துவப் புரட்சியை திராவிடக் கட்சிகளால் நடத்திவிட முடியவில்லை. சீர்திருத்தவாதத்தின் குறைபாடு அடையாள, பெரும்முதலாளிய சக்திகளாக சீரழிந்துள்ளதை வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். தனிமனிதர்களின் வரலாற்றுப் பாத்திரம் அந்த பொருளாதார முறைமைக்கு ஏற்பதாக அமைந்து விடுகின்றது. திராவிட இயக்க வளர்ச்சியானது இடைநிலைச் சாதிகளுக்கு அதிகாரத்தையும், மூலதன வளர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பொருளாதாரம் அதன் உற்பத்தி முறை பற்றிய புரிதல், சாதியம் என்பதே பிராமணியத்தின் காரணம் என பிராமணிய எதிர்ப்பு, சமயம் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்ற புரிதல் இன்மை, பிராமண சாதிக்கு அப்பால் இருந்த நிலப்பிரபுக்களுடனான உறவு, தேசம் பற்றிய புரிதல் இன்மை என்பவற்றை கவனத்தில் கொண்டு ஆராய்வதற்கு விஞ்ஞான அணுகுமுறை அவசியமாகின்றது. விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லாத காரணத்தினால் சமூகத்தை பெரியாரியத்தால் ஆராய முடியாது.
முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையே சாதியத்தின் கட்டமைப்பை உடைக்கின்றது. இதில் அம்பேத்கர் முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கோரியவர். அவர் கோரிய முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சீர்திருத்தத்தைக் கொண்டு வரும். ஆனால் சமூகத்தை மாற்றிவிடாது. ஆனால் சிந்தனைத் தளத்தில் மாற்றம் கொண்டுவர மதம் மாற வேண்டும் என்ற சிந்தனை வடிவம் அவரிடம் இருந்தது. இதனால் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஈழத்தில் கன்பொல்லக் கிராமத்திலும் பௌத்தத்திற்கு சிலர் மாறினர். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் சிங்கள பௌத்த பேரினவாதம் பற்றிய புரிதலை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் மதம் மாறிய சிந்தனை முன்வைத்தவர்கள் அன்று தோழர் சண்முகதாசனின் தலைமையில் இருந்து விலகி நின்று செயற்பட்டவர்கள். ஆனால் வரலாறு எழுதுகின்ற போது இவைகள் விடுபட்டு தனியே மதமாற்றமே புரட்சிகரமாக அன்று நடைபெற்றதாக இன்று எழுதப்படுகின்றது. மதமாற்றத்தை அன்று தலைமை தாங்கிய தீண்டாமை ஒழிப்பு இயக்கம் முரண்பட்டிருந்தார்கள். மதம் மாறுவதால் சிந்தனை மாற்றம், சமூக அமைப்பு மாற்றம் ஏற்படும் என்பது தவறானகருத்தாகும். ஆனால் கூட்டாக மதம் மாறுவது அடையாள எதிர்ப்பு என்பதற்கு அப்பால் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை.
அடிப்படையில் தலித்தியம் என்பது மேற்கட்டுமானத்தில் சீர்திருத்தத்தைக் கோருவதாகவே இருக்கின்றது. மேல் கட்டுமானம் என்பது பொருளாதார அமைப்பின் மேல் இருக்கின்ற அரசு, இராணுவம், நீதி நிர்வாகம், சிந்தனை வடிவங்கள், நிறுவன அமைப்புக்களில் உள்ளவற்றில் சீர்திருத்தத்தை முன்னிறுத்துவதாகும். தலித்தியவாதிகள் மேற்கண்டவற்றுடன் தத்துவவிசாரணை நடத்துவதற்கு தயாராக இல்லை. தேசியத்தின் இறையாண்மைக்கான போராட்டம் என்பதைப் புறநிலை தான் தீர்மானிக்கின்றது. புறநிலை தாக்கம் சமூக ஒழுங்கமைவை கட்டமைக்கின்றது. குறிப்பாக பொருளாதாரக் கட்டமைப்பில் உருவாகும் சமூக ஒழுங்கமைவு என்ன? அதன் படியே சமூகப் பொருளாதாரப் போராட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் உற்பத்திக் கட்டமைப்புச் (சிதையாமல்) சமூகத்தின் ஜனநாயக வலியுறுத்தப்பட்டது, மனித பண்புகள் விதைக்கப்பட்டது, தேசிய இயக்கங்களின் போராட்டம் என்பது வளர்ச்சியை அடைந்தது. சாதியக் கட்டமைப்பு உடைவிற்கு உள்ளாகியதால் தான் தேசியக- முதலாளித்துவக் கட்டத்தை நோக்கிப் பயணித்தது. இங்கு தேசிய- முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை நோக்கிய நகர்வினை மடைமாற்றுவதற்கு பிரதேச, சாதிய, மத உணர்வை ஊட்டுவது, பிளவுகளை உண்டாக்குவது அவசியமாகின்றது. இந்தப் பிளவு வேலை முறையின் ஊடாகவே தேசிய- முதலாளித்துவ ஜனநாயப் போராட்டங்களை சிதைக்கப்படுகின்றன.
“புறக்காரணங்கள் என்பவை மாற்றத்திற்கான சூழ்நிலையை உருவாக்குவதாகவும், அகக் காரணங்கள் அம்மாற்றத்திற்கான அடிப்படையை உருவாக்குவதாகவும் புறக் காரணங்கள் அகக் காரணங்கள் மூலம் தொழிற்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது. பொருத்தமான ஒரு வெப்ப நிலையில் ஒரு முட் டை குஞ்சாக மாறுகின்றது. ஆனால் எந்த வெப்ப நிலையும் கல்லை குஞ்சாக மாற்ற முடியாது, காரணம் ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட அடிப்படை உண்டு.”(மாவோ)
புறநிலைகள் தான் எம்மக்களை யுத்தத்தை நோக்கி நகர்த்தியது, புறநிலை தான் எம்மை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது. ஆனால் பொதுவெளிக்கு வராதவர்கள் (தேசத்தின் ஆட்சியதிகாரம் பற்றி) முதலில் உள்வீட்டுப் பிரச்சனை இருக்கு அந்த வேலையைப் பார் என்று புத்தி சொல்கின்றார்கள். தேச இறைமையின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளத்துடன் ஜனநாயக ரீதியாக கலக்கக் கூடாது என்று சாதிகளாகப் பிரிப்பது தான் தலித்தியம்,என்ற அடையாள அரசியலாகும். இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடக்குமுறைக்கு எதிராக போராடுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இங்கு தேர்தல் அரசியலுக்குள் சீரழிந்துள்ளது தான் தமிழக நிலையாகும். தலித்தியம் என்பது தமிழகத்தில் சமூகத்தை சாதிய ரீதியாகப் பிரித்து வைத்துள்ளது. அதனைத் தான் ஈழதேசத்திலும் செய்யத் துடிக்கின்றார்கள்.
தலித்திய அரசியல் கோட்பாட்டை எதிர்ப்பது என்பது ஒடுக்கப்படும் மக்களையோ அல்லது அவர்களின் அவலநிலையை மறுப்பதோ அல்ல. மாறாக அரசியல் அதிகாரத்திற்கான, சமூக மாற்றத்திற்கான இலக்கை நோக்கிய பயணத்தில் சமூகத்தில் சீர்திருத்தத்தை முன்வைப்பதை எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அனைத்து ஒடுக்குமுறை வடிவங்களையும் எதிர்த்து போராடுவதை மறுக்கும் போக்கையே விமர்சிக்கப்படுகின்றது. .
இங்கு சிக்கல் சாதி ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டுமா அல்லது வர்க்க ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டுமா என்பது பற்றியதேயாகும். வர்க்க ரீதியான அணிதிரட்டல், அரசியல் மயப்படுத்தல் என்பது பண்பாட்டுத் தளத்தில், சிந்தனைத் தளத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அடையாள அரசியலை நம்புபவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதன் தாற்பரியத்தினையும் முக்கியத்துவத்தினையும் உள்வாங்கிக் கொள்வதில்லை. இது ஒரு சமூக அவலம் தான்.
கருத்துருவாக்கிகள் எப்பவும் இருக்கின்ற சமூக அமைப்பையும், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் தமது கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
அடித்தவனுக்குத் திருப்பி அடி என்ற செயற்பாதை வெல்வதற்கு வர்க்க அணிதிரட்டல் முக்கிய பாத்திரம் வகித்தது. சாதியம் இலங்கையில் உற்பத்திக் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இல்லாது உடைக்கப்பட்டது (உணர்வு வேறாக தொடர்கின்றது) இதுதான் ஜனநாயக சக்திகளின் வெற்றி. இதனை விளங்கிக்கொள்ள மார்க்சியப் பார்வையில் இருந்துதான் விடையை பெற முடியும்.
ஒடுக்கும் தேசத்தில் இருந்து விடுதலை பெற்று, புதிய பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டும். இவற்றைச் செய்யாது சாதியையும் அதன் சிந்தனைக் கட்டமைப்பையும் வீழ்த்த முடியாது.
புரட்சி நிறைவு பெறாத நிலையில் தமிழ் தேசியத்தினை முழுமையாக உயர்ந்த ஜனநாயகத்தைக் கொண்டதாக வளர்த்தெடுக்க முடியாது. ஏனெனில் சாதியின் தோற்றமே உழைப்பவர், உழைப்பை வழங்காது நலனை அடையும் பிரிவு என்ற நிலையில் வளர்ச்சி பெறுகின்றது. ஈழத்தில் உற்பத்தியைத் தீர்மானிப்பதில் (சுத்திகரிப்புத் தொழிலாளிகளைத் தவிர்த்த தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக நலிந்துள்ள நிலையில்.) சாதியின் பங்களிப்பில்லை. அதேவேளை உற்பத்திக் கட்டமைப்பு என்பது கிராமப் புறங்களில் மாற்றங் கொள்ளாமல் வைத்திருப்பதில் ஆளும் வர்க்கத்துடன் இணைந்து அடையாள, சாதிய சிந்தனையாளர்கள் பங்காற்றியிருக்கின்றார்கள். இவர்கள் மாத்திரம் அல்ல பெரும் நீரோட்ட கருத்துருவாக்கிகளும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர். மனிதர்களில் உள்ள உணர்விற்கும், சிந்தனைக்கும், உழைப்பை தீர்மானிப்பதற்கும் இடையே உள்ள சமூகப் போக்கில் தூய்மைவாதம் கொண்டு அறிந்திட முடியாது. சமூக இயக்கப் போக்கில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்யும். ஆனால் மனிதர்களை சனநாயக வடிவில் சிந்திக்க வைக்க மார்க்சிய லெனினிய சிந்தனை வழிகாட்டும்.
கருத்துருவாக்கிகள் எப்பவும் இருக்கின்ற சமூக அமைப்பையும், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் தமது கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள். முதலாளித்துவ- தேசிய - ஜனநாயகப் புரட்சிக்கான நிலையில் தலித்திய அடையாள அரசியலில் போதாமை உள்ளது. இது சிந்தாந்தம் இல்லை மாறாக அன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளாகும்.
தலித்தியத்தின் இன்றைய சிந்தனை வடிவம் குறுகிய அடையாளப் போக்கின் அடிப்படையில் சிந்திப்பதைத் தொடர்வதாகும். புதிதாக குட்டி முதலாளியப் பிரிவு வளர்ந்து வருகின்றது. குறிப்பான சினிமாத்துறை, இலக்கியப் பரப்பில் இருந்து வருபவர்களின் செயற்பாடு புதிய போக்கை எட்டியுள்ளது. இந்தப் பிரிவு அடையாள அரசியலுக்கு உட்பட்டுத் தான் சமூகத்தில் கருத்துருவாக்கம் நடைபெறுகின்றது. ஈழப் பிரச்சனை, கம்யூனிசம், தமிழ் தேசியத்தின் மீது ஒவ்வாமையை காட்டுகின்றார்கள். இன்று சாதிய ரீதியாக அணிதிரட்டப் பயன்பட்ட கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்துத்துவாவின் ஏவலாளர்களாக மாறியுள்ளனர்.
தமிழ்த் தேசத்தின் ஆட்சியதிகாரத்திற்கான போராட்டம் என்பது புறக்காரணிகளால் தொடர் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி, பெருந்தேசிய இனத்தின் ஒடுக்குமுறை இவைகளே புறநிலைத் தாக்குதல். ஆக சாதியம் என்பது பிரதான முரண்பாடு என்ற நிலையில் இல்லை. சாதியம் என்பது அகத்தில் உள்ள வர்க்க (அக) முரண்பாடாகும். உற்பத்தியில் சாதியத்தை உடைப்பது என்பது முக்கியமானதாகும். இந்தியாவில் அம்பேத்கர், பெரியாரியத்தினால் கூட முழுமையாக உற்பத்தியில், தொழிலில் சாதியம் தீர்மானிப்பதைச் சிதைக்க முடியவில்லை. சாதிகளற்ற தமிழ்த்தேசத்தின் போராட்டத்தினை பண்பாட்டு மாற்றத்தின் ஊடாக வழிநடத்தும் தேசியமே முன்னேறிய ஜனநாயகத்தின் போராட்டத்திற்கான அழைப்பாகும். தமிழகத்தில் 1980களின் பின்னர் அடையாள அரசியல் நுழைந்து மேலும் சமூகத்தைக் கூர்மையாக பிளவுபடுத்தியிருக்கின்றது. இதில் தமிழகத்தின் பொதுவுடமைப் போராளி தோழர் தமிழரசனின் செயற்பாட்டுச் சிந்தனையை மழுங்கடித்தார்கள். அன்றைய அடையாள அரசியல் என்பது அந்தப் புரட்சிகரப் போக்கை மடைமாற்றியது.
தலித்திய - தன்னியல்புப் போக்கானது மனித உடம்பில் உள்ள ஒவ்வாமையை சரியான முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாது சொறிந்து புண்ணாக்கி சீழ் வடிய வைப்பது போல தலித்திய- சாதிய - அடையாள அரசியல் அமைப்புகள் சமூகத்தைப் பிரித்துள்ளது. சீழை நுகர்ந்து திருப்தி கொள்வதானது சுயநல அரசியல் போக்காகும்.
தலித் என்று முத்திரை குத்தி சுரண்டலுக்கு உள்ளாக்குவதும், உபரி தொழிலாளி வர்க்கமாக வைத்திருப்பதற்கான செயற்பாடாகும். முதலாளித்துவத்திற்கு வேண்டிய மிகை (உபரி) தொழிலாளியாக வைத்திருப்பதாகும். அதன் தொகையை பெருமளவில் வைத்திருப்பது சுரண்டும் வர்க்கத்தின் அவசியமும் கூடவாகும். சந்தையில் விரும்பியவாறு உழைப்பாளியின் உற்பத்திச் சக்தியை உறிஞ்சிக் கொள்ள முடியும். உழைப்பாளி தனக்குப் போட்டியாக பலர் வெளியில் உள்ளார்கள் என்ற பயத்தின் காரணமாகத் தானே அந்த தொழிற்சாலையில் அடிமையாக இருந்திடும் உளவியலை ஏற்படுத்துகின்றது. முதலாளி - வேலைகொடுப்பவர் என்ற ரீதியில் உழைப்புச் சக்தியை இனாமாக வழங்கி உற்பத்தி சக்தி மேலும் சிறப்புத் தேர்ச்சி பெறுவதோ அல்லது முன்னேற முடியாது. அவர்கள் தொடர்ந்தும் ஒடுக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் சேரிக்குள்ளும், ஒடுக்கப்பட்ட சாதியாகவும் பிரித்து வைத்திருப்பதன் பின்னால் உள்ள சதியாகும்.
தேசிய இயக்க எழுச்சிக் காலத்தில் அகமுரண்பாட்டை சீர்செய்வதன் ஊடாக முன்னேற முடியும். தேசிய இயக்கமும் பழைய உற்பத்திமுறையை உடைத்துக் கொண்டு தான் முன்னேறுகின்றதை அடித்தவனுக்கு அடிஎன்று வெற்றி கொண்ட போராட்ட வரலாறு ஈழத்தில் உள்ளது. அது உற்பத்தியில் சாதியை தீர்மானிக்கும் நிலையை உடைத்து முன்னேறியது. அதை அடையாள- தலித்திய அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழகச் சூழலில் உற்பத்தியிலும், தொழிலிலும் சாதியத்தை உடைக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட சாதிகளின் அணிதிரட்டல் பொருத்தமற்றதாகும். வர்க்க அடிப்படையில் புரட்சிகர சனநாயக, இடதுசாரிகளின் கூட்டே சாத்தியமான ஒரே வழியாகும். சாதியெதிர்ப்பு போராட்டத்திற்காய் ஈழ அனுபவம் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
சாதிய உற்பத்திக் கட்டமைப்பு பெரும் விகிதத்தில் ஈழத்தில் உடைத்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் ஈழதேசத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தேசத்திற்கான போராட்டம் என்பது அடித்தளம் இல்லாது முன்னேறியிருக்க முடியாது. சமூகத்தின் எழுச்சி என்பது அதற்கு அமைவான சூழல் இல்லாவிடின் எவையும் முன்னேற முடியாது. ”தமிழ்தேசியம் என்பதை தமிழ் சாதிய நிலவுடைமையின் சிந்தனை, தமிழ்த்தேசியம் நேரடியான சாதி -நிலவுடமைச் சமூகத்திற்கானது” என்னும் கூக்குரல்கள் அகமுரண்பாடுகளை தக்கவைத்துக் கொள்ளும் சிந்தனை வடிவத்தில் இருந்து வருவதாகும். மேலும் தலித்தியம் என்பதை நிறுவுவதற்கு தந்தை பெரியார் முன்னிறுத்தப்படுகின்றார். ஆனால் தந்தை பெரியாரின் காலத்தில் தேவையாக இருந்த முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கை அதன் பாலான செயற்பாடுகள் என்பது மட்டுப்பட்டதாக இருந்துள்ளது. இதனால் தந்தை பெரியாரிடம் தேசிய இனம், தேசத்தின் இறைமை பற்றிய தேடலைப் பெற்றிட முடியாது. வரலாற்றுப் பொருள் உற்பத்தி வளர்ச்சி நிலைக்கு ஏற்பவே நிகழ்வுகள் முன்னோக்சிச் செல்கின்றன.
”தேசியம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும். அது சுயநலவாதிகளின் வயிற்றுப் பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள்முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசியவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்புடன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேடங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். பாமரமக்களைப் பல வகையிலும் ஏமாற்றி அவர்களைத் தன்னைப் பின்பற்றுமாறு செய்துகொள்ள முடியாத எவனும் தேசியத் தலைவனாக இருக்க முடியாது. பாமர மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு பித்தலாட்டங்களும் அயோக்கியத்தனங்களும் செய்தாக வேண்டுமோ அவ்வளவும் செய்துதான் ஆகவேண்டும். அன்றியும் ஒரு நிலையான கொள்கையும், நேர்மையான நடத்தையும் இல்லாதவனே தேசியவாதியாக இருக்க முடியும். அல்லாமலும் பாமரமக்கள் எவ்வளவு பிற்போக்கான கொள்கையும், பழக்கவழக்கமும் உடையவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு பிற்போக்கான கொள்கையையும் பழக்கவழக்கங்களையும் பாராட்டுகின்றவனே தேசியத் தலைவனாகப் புகழ் பெற்று விளங்கமுடியும். காலத்திற்குத் தகுந்த வகையில் நாட்டிற்கு நன்மை தரும் கொள்கையை யாருடைய நன்மதிப்பையும் இகழ்ச்சியையும் பாராட்டாமல் எடுத்துக் கூறும் ஒருவன் தேசியவாதியாக விளங்க முடியாது. அவன் தேசத் துரோகியாகவும், புரட்சிக்காரனாகவும், நாஸ்திகன் என்று வைதீகர்களால் பழி சுமத்தப்படுபவனாகத்தான் விளங்க முடியும். ஆகையால் தான் நமது தேசத்திலும் மற்றும் நமது நாட்டைப் போல மூட நம்பிக்கையுடைய மக்கள் வாழ்கின்ற தேசங்களிலுமுள்ள ஒருவன் தேசியத்தின் பெயரால் புகழ் பெறுவதும், பாமர மக்களின் நன்மதிப்பைப் பெறுவதும், தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாக இருந்து வருகின்றது.” (பெரியார், குடிஅரசு, தலையங்கம்,13.03.1932) பிற்காலத்தில் தந்தை பெரியார் நிலைப்பாட்டை மாற்றி தமிழ் நாடு தமிருக்குகே என்றும் கூறினார்.
லெனினியம் கற்பிக்கும் தேசிய இயக்கம் பற்றிய புரிதல் பெரியாரிடம் இருந்திருக்க முடியாது. இதனால் அவரால் உறுதியாக இருக்க முடியாது. பெரியாரிடம் அதிகாரம் செலுத்தியது பிராமணர் அல்லாத ஆளும் வர்க்கத்தின் நலன். தேசம் பற்றிய புரிதல் இல்லாததால் தான் திராவிட நாடு பற்றி எல்லாம் முன்வைக்க முடிந்தது.
தேசியம் பற்றிய கோட்பாட்டை லெனின், ஸ்ராலினிடம் தேடவேண்டியுள்ளது. சாதியம் பண்பாட்டுத் தளத்தில் நிலவுவது ஆபத்துத் தான். இதிலும் தோழர்கள் கலியப்பெருமாள், தமிழரசனிடமே தமிழ்த் தேசியத்திற்கான போராட்ட வழியை அறியமுடியும்.
ஆனால் அதிலும் விட ஆபத்து உற்பத்திக் கட்டமைப்பில் சாதியம் உடைக்கபடாமல் இருக்கும் நிலையாகும். இங்கு உற்பத்திக் கட்டமைப்பில் சாதியம் உடைக்கப்படாத காரணத்தினால் தமிழ்த் தேசியத்தின் மீதான தாக்குதல் தமிழகத்தில் இலகுவாக அமைகின்றது. உற்பத்திக் கட்டமைப்பின் சிதைவு தமிழ் தேசியத்தினை வளர்த்தது. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படும் மனிதர்கள் அடையாள அரசியலைப் புதுப்பிக்கும் போக்கை கொண்டு செயற்படுவதும், மனிதர்களின் சிந்தனையை சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரம் என்ற கருத்துமுதல்வாத சிந்தனையில் தேடுவதாக உள்ளார்கள்.
இறுதியாக தேசிய இனப் போராட்டமானது வர்க்க அடிப்படையில், சமூகத்தை அணிதிரட்டுவது, சமூக மாற்றத்தினை முன்னிபந்தனையைக் கொண்டு, புதிய பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்ற அடிப்படையில் இருத்தல் வேண்டும். இது அடித்தவனுக்கு அடி என்பது புரட்சிகர ஜனநாயக, இடதுசாரி, தேசிய, புரட்சிகர சக்திகளால் மாத்திரமே போராட்டத்தை முன்னெடுக்க முடியும். சமூகமாற்றம்- சாதியெதிர்ப்பு- தேசிய இனவிடுதலை புதிய சனநாயகப் போராட்ட வழிமுறையே இறுதிப் பாதையை வெற்றியை நோக்கி வழிநடத்தும்.
திருத்தியது 30.102023

http://www.hystericalfeminisms.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/
ReplyDeleteஅகநிலை ஆய்வுமுறைக்கான உதாரணமாக இந்தப் பார்வை http://theeraanathi.blogspot.no/2012/02/blog-post.html?m=0
ReplyDeleteசிறப்பு தோழர். உங்கள் உழைப்பிற்கு நன்றி. இதையே அதிகமான கேள்விகள் பதில்கள் வடிவத்தில் மாற்றுங்கள்.கூடுதல் பலனுண்டு.
ReplyDelete