பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும்
நெடும் பயணப் போராட்டம் தேர்தல் அரசியல் கட்சிகள் சாரா அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தினை இடையூறு செய்ய காவல்துறை, நீதித்துறை முற்பட்டது. எனினும் தடையை மீறி நெடும்பயணம் தொடர்கின்றது. இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்திய கட்சிசார அமைப்பினருக்கு வாழ்த்துகள். அரசியல்வாதிகள் இது வரை எதிர்த்தவற்றிக்கு மாற்றாக எழுப்பப்பட்ட முழக்கங்கள் நிறையவுண்டு.
கடந்த காலங்களில் வெகுசனப் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஏழுக தமிழை விட இந்தப் போராட்டம் தொடர்ச்சியான நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நெடுந்தூரப் போராட்டம் ஒழுங்குபடுத்துவது இலகுவல்ல. எனினும் ஒவ்வொரு மாவட்டம் எங்கும் சிறப்பாக ஒழுக்குபடுத்தியிருக்கின்றார்கள்.
கடந்த 11 வருடங்களாக வெகுசனப் போராட்டங்களைப் பற்றி எதிர்க் கருத்துக்களே முன்வைக்கப்பட்டு வந்தது. மக்களிடம் ஏற்படும் மாற்றம் என்பது மெதுவாகவே நடைபெறும். மக்கள் தெருவிற்கு வந்தேயாக வேண்டும். போராட்டம் என்கின்ற போதே உணர்ச்சி ஊட்டுகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமூகத்தில் எழுச்சியை ஊட்டுவதற்கு மக்கள் திரள் அமைப்பைக் கட்டக் கூடிய ஒரு அமைப்பு என்பது அவசியமாகின்றது. அரசியல் அவசியம் மாத்திரம் போதாது சித்தாந்த தெளிவுகள் அமைப்பு வடிவம் அவசியமாகும்.
பயணயத்தில் இடம்பெற்ற முழக்கங்கள்
1. தமிழர் ஒரு தேசமென அங்கீகரி
2. ஒற்றையாட்சி வேண்டாம்
3. சிங்கக் கொடி அமைச் சின்னம்
4. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்
5. சிங்களத்திற்கு சுதந்திர நாள் எங்களுக்கு கரிநாள்
6. விழ விழ எழுவோம்
7. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
8. தமிழர் தேசம் மலரட்டும்.
9. மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்
10. தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும்
11. அடக்குமுறைக்கு அடிபணியமாட்டோம்
12. ஆயுத்தத்துக்கு அணிபணியமாட்டோம்
13. அடாவடிக்கு அணிபணியமாட்டோம்
14. இராணுவத்திற்கு அணிபணியமாட்டோம்
15. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி வேண்டும்
16. இனப்படுகொலையை மன்னிக்க மாட்டோம்.
17. தடைகளை உடைப்போம்
18. ஐ.நாவே அழுத்தங்கொடு
19. ஐ.நா வே அழுகைக் குரல் கேட்கவில்லையா
20. எமது நிலம் எமக்கு வேண்டும்
21. எமது கடல் எமக்கு வேண்டும்
22. இராணுவமே வெளியேறு
23. அரசியல் கைதிகளை விடுதலை செய்
24. ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே
25. கேப்பாப்புலவு எங்கள் சொத்து
26. புதுக்குடியிருப்பு எங்கள் சொத்து
27. வெடுக்குநாறி எங்கள் சொத்து
28. முள்ளிவாய்க்கால் எங்கள் சொத்து
29. கிளிநொச்சி மண் எங்கள் சொத்து
30. ஜனாசாவை எரிக்காதே
31. 1000 தேயிலைத் தொழிலாளர்களுக்கு வழங்கு
32. வீரத்தின் விளைநிலம் எழுச்சி கொள்ளட்டும்
33. பண்டாரவன்னியனின் தேசம் எழுச்சி கொள்ளட்டும்
34. பொலிஸ் அராஜகம் ஒழிக
35. முஸ்லீமும் தமிழனும் அண்ணன் தம்பி
36. கொடுங்கோள் ஆட்சி ஒழியட்டும்
37. சிங்களத்தை திணிக்காதே
38. வேண்டாம் ஏக்கராட்சிய
39. தொல்பொருள் திணைக்களமே தமிழர் அடையாளங்களை அழிக்காதே.
40. இந்த மண் எம் தலைவன் பிறந்த மண்
இவைகளில் பெரும்பான்மையான விடயங்களில் மென்வலு என்று சொல்லப்படுகின்ற சக்திகள் மலினப்படுத்தியே வந்துள்ளார்கள். ஆனால் சமூகத்தின் தேவை என்பது இருப்பதையே காட்டுகின்றது. சமூக அவசியம் இருக்கும் வரை மக்கள் தெருவிற்கு வருவார்கள். மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள்.
மேல் உள்ள முழக்கங்கள் 0.99 விழுக்காடு கோரிக்கையை மார்க்சிய சிந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ள முடியும். அனைத்தும் ஒடுக்கப்படும் தேசத்தின், மதச் சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கையாகும்.
பொருளாதாரமும் அரசியல் அதிகாரமும்
இலங்கையில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவதன் ஊடாகவே உண்மையாக மக்களுக்காக நிற்க முடியும் என ஒப்பிக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைக் கட்டமைப்புகள் இருக்கின்ற மக்களை சிங்கள தேசத்தின் இடதுசாரிகள் தான் அமைப்பு வடிவம் கொடுக்க வேண்டும். இந்த உழைக்கும் வர்க்கம் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பின்னால் இல்லை. பெரும்பான்மை சிங்கள தேசத்தவர்கள் பேரினவாத, தரகு முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் தான் திரண்டுள்ளார்கள். .இந்த நிலையில் சிங்கள மக்களை தயார் படுத்தும் மட்டும் தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது சர்வதேசிய கடமையை நிறைவேற்றப் போராட வேண்டும். ஆனால் இங்கு சர்வதேசக் கடமையை தீர்க்கவல்லை அணிதிரட்டல் எந்தத் தேசிய இனங்களிடமும் இல்லை.
ஏகாதிபத்தியங்கள் சந்தைக்காக அலைகின்றன. இந்தக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைக்க வேண்டும் என்கின்றார்கள். “தேசிய வளங்களை அந்நிய முதலாளிகளுக்கு விற்காதே!'' தென்னிலங்கை சக்திகள் இணைந்திருப்பார்கள் என சோதிடம் பேசுகின்றார்கள். சிங்கள தேசத்தின் பிரதான முரண்பாடும் தமிழ் தேசத்தின் பிரதான முரண்பாடும் ஒன்றல்ல. நாட்டரசையும் (அரசியல் அதிகாரம் உள்ளது) தேசத்தின் அரசியல் அதிகாரத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். மார்க்சியம் பேசுபவர்கள் இது ஏகாதிபத்திய பொருளாதாரவாதம் என்ற அடிப்படைப் பாடமாகும். இதிலும் தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் என்பது ஜேவிபி, மு.சோ.க என்பன முக்கியமானது எனினும் இவர்கள் வெளிப்படையாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரப் போவதில்லை. இவர்கள் உழைப்பாளர் தினத்தையே மாற்றிக் கொண்டவர்கள். மார்க்சியம் மதங்களை தனிப்பட்டவர்களின் விடயமாக கருதுகின்றது. கட்சி கூட மதவிடயத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென்று வழிகாட்டுகின்றது. ஆனால் இந்தக் கட்சிகள் பௌத்தத்திற்கு முன்னிடம் கொடுப்பவர்கள். இவகளாலும் சிங்கள பௌத்த பேரினவாத (நிலமானிய) சிந்தனை மேல் தான் கட்சி கட்டப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் அழிவிற்கு துணை போயிருக்க மாட்டார்கள். ஒடுக்குமுறை இயந்திரத்தில் அங்கமான அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர், இராணுவத்திற்கு பதுங்குழி அமைத்துக் கொடுத்தார்கள்.
ஒடுக்கப்படும் தேசத்துடன் இணைந்து போராடியிருப்பார்கள். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் வரையில் தமிழ் நிலப்பகுதி அன்னியச் சந்தைக்கு இடமில்லாமல் இருந்து. ஆனால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அன்னிய சந்தைக்கானதாகியது. இதனை இட்டு இன்றுவரையில் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை.
பிலிப்பைந்து நாட்டில் மோறோ முஸ்லீம் அமைப்பும் புதிய மக்கள் இராணுவதும் ஐக்கிய முன்னணி அமைத்து பொது எதிரிக்கு எதிராக போராடுகின்றார்கள். இந்த இனவாதிகளின் போலி முற்போக்கு வேடத்திற்கு தமிழ் மக்கள் பலியாக மாட்டார்கள்.
இந்தப் போராட்டத்தில் பொருளாதார வாதத்தை முன்னிறுத்தப்படுகின்றது. பொருளாதாரத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அறியாது பேசுகின்றார்கள்.
போராட்டங்களின் அடிப்படைப் பிரச்சனை (கூலி, வறுமை, விலைவாசி) மக்கள் சார்ந்து இருத்தல் அவசியம் என்று புதுக்கதை விடுகின்றார்கள். அரசியல் அதிகாரம் என்பதே தனது சொந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்குத் தான் என்ற புரிதல் இல்லை. மக்கள் கூட்டத்தின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க சிங்கள தேசம் தயாராக இல்லை என்பதும், உற்பத்திச் சக்திகள் சிறப்புச் தேர்ச்சி கொண்ட உழைப்பாளர்களை உருவாக்க முடியாது இருப்பதற்கு காரணம் தேசிய இன ஒடுக்குமுறையே.
ஒரு தேசத்தின் பொருளாதாரம், மொழி, நிலம், பண்பாடு அனைத்துத் தளங்களிலும் பாதிப்பு ஏற்படுகின்ற போது ஒன்றை ஒன்று பாதிக்கின்றது.
நிலத்தை கொடு வீட்டுத் தோட்டம் வைத்தாவது வாழ்ந்துவிட்டுப் போவார்கள். ஆனால் எங்கு அரசமரம், தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றதே அந்த நிலங்களில் பௌத்த சின்னங்களை அமைத்துக் கொள்கின்றார்கள். இது அபகரிப்பு என்பதை இந்த ஜீவகாரூண்யவாதிகள் புரிந்து கொள்ளவில்லை.
ஐ. நா
கட்சி சாராத அமைப்புகளினால் ஒழுங்கு படுத்தப்பட்டது. ஆனாலும் தேர்தல் கட்சிகளின் வேலையாகவும், மக்களை உசுப்பேத்துவதாகவும், மக்களை பலியிடப் போவதாகவும் அதிகார ஒத்தோடிகள், புலம்பிக்கொண்டே இருக்கின்றார்கள். 1989 சோவியத் உடைவின் பின்னர் துருவ அரசியல் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. ஒற்றைத் துருவ அரசியல் ஒரு போராட்டம் 20 வருடங்கள் தாங்கிப் பிடித்தது. இரட்டைத் துருவ அரசியல் காலத்தில் வர்க்கப் போராட்டங்களை ஆதரிப்பதற்கு ஒரு முகாம் இருந்தது. அந்த முகாம் சிதைந்தது மனிதகுல வரலாற்றில் பெரும் பின்னடைவே.
ஐநாவால் மக்களுக்கு நன்மை உண்டா இல்லையா? சரி நன்மை இல்லை எனவே போராடக் கூடாதா? மேற்கு நாடுகளை நம்புவதை விட சொந்த நாட்டில் உள்ள மக்களை நம்பலாமே என கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கலாம். 2009 பின்னர் போலி இடதுசாரிகளால் ஒப்புக்கு போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் போலி இடதுசாரிகள் அமைதியாக ஓய்ந்து விட்டார்கள்.
இங்கு ஐ.நா முக்கியம் இல்ல. ஆனால் போராடும் தேசத்தின் அவசியம் உலகிற்கு அறிவிக்கப்படுகின்றது. எனக்கு பசித்தால் அம்மா பசிக்கிறது என்று கேட்போம், இல்லை சமைத்துச் சாப்பிடுவோம்.
எங்களை ஒடுக்குகின்றார்கள் அதனை வெளிப்படுத்துவது கூட தவறாக கற்பிதம் செய்யப்படுகின்றது. இங்கு இங்கு வறுமையில் மக்கள் வாடுகின்றார்கள், சாதியாய் பிரிந்துள்ளார்கள், விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் அவசியமா? சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கக் கூடியதே தமிழ் தேசம். 1985-2009 வரையில் பொருளாதாரத் தடையை சந்தித்தே வந்துள்ளது. அந்தக் காலங்களில் துன்பத்தைக் கடந்தே வந்துள்ளார்கள்.
எனவே பொருளாதாரவாதம் பேசுவது வேடிக்கையானது ஒன்று. தேனும் பாலும் கிடைத்த பின்னர் தான் போராட வேண்டும் என்பது பசிக்கிறது ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடு என்பதற்கு சமானமாகும். மேட்டுக்குடிவாதத்தின் சிந்தனைப் போக்கு என்பதை ஒடுக்கப்படும் மக்களின் நலனில் இருந்து வருவதாக கொள்ளத் தேவையில்லை.
வர்க்கங்கள் கடந்த மனிதர்களாக கவனிக்கப்படும் போது தான் சிக்கல் வருகின்றது. அதிகாரத்துடம் சேர்ந்து பயணிப்பவர்களின் கருத்துக்களை அரசிற்கு இடையூறு கொடுக்காதீர்கள் என்பதே பின்னால் உள்ள விடயமாகும்.
ஐநா நோக்கியது என்பது தனியே அரசியல் (VETO power) மயப்பட்டதற்கு அப்பால் வெவ்வேறு நிறுனவக் கட்டமைப்புகள் சர்வதேசமெங்கும் உள்ளது. இதனைச் சுற்றித் தான் உலக ஒழுங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்னர் புரட்சியை நடத்த ஆதரவான நாடுகள் இருந்தன. ஆனால் இன்று அவ்வாறாக புரட்சிக்கு ஆதரவளிக்கும் நாடுகள் இல்லை. இன்று ஒவ்வொரு நாடுகளும் தத்தம் நலனின் இருந்து செயற்படுகின்றன. இந்தக் காலத்தில் காலத்தில் எதனையும் வெளியே சொல்வது உதவிட முடியாது என்பது மானம் போகும் வெளியே சொல்லாதே என்பதைப் போன்றதேயன்றி வேறொன்றுமில்லை.
எழுக தமிழும் சுமந்திரனும்
சுமந்திரன் என்ற தனிநபரைச் சுற்றிய எதிர்ப்பாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறு பார்க்கப்படுவது அரசியல் முதிர்ச்சியின்மையேயாகும். இந்தப் போராட்டத்தில் அரச காவலர்களின் துணையுடன் தான் கலந்து கொண்டார். சுமந்திரனின் வர்க்கப் பின்புலத்தை ஆராய்வது அவசியமாகும். கடந்த காலங்களில் தரகு வர்க்கத்தின் அரசியல் என்பது விதேசிய சிந்தனை கொண்டதாகவே இருக்கும். இதிலும் petranist (மற்றவர்கள் மொக்கு மோடுகள், வழிநடத்தை மேய்ப்பர் தேவை) என்ற மனப் போக்கிலேயே இவ்வளவு காலமும் பேசிவந்தார். சுமந்திரன் உள்ளிருந்து அரிக்கும் விசம்.
தமிழ் மக்கள் எந்தப் போராட்டத்தை தொடங்கினாலும் உணர்ச்சி அரசியல் ஊட்டபடுகின்றது என்ற வாய்ப்பாடே சுமந்திரன் பேசிவந்தார். இன்று திடீரென மக்கள் போராட்டக் காரனாக மறுபுறப்பு எடுத்துள்ளார். எழுக தமிழ் நடத்தப்பட்ட போது ரணினிலின் சேவகர் சுமந்திரன் மலினப்படுத்தினார். கரகாட்டக் காரர்களுக்கு இரசிகர்கள் மாலை போடுவது போல மாலை போட்டு தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்.
ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நிற்பவர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார்கள். சுமந்திரனின் செயற்பாடுகள் இந்தக் தேர்தலில் தோல்வியை ஏற்படுத்தியிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் சுத்துமாத்துச் செய்து பதவியைப் பெற்றார்.
04.02. தினத்தை கரிநாளாக தந்தை செல்வா (1957) வினால் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் கரிநாள் என்பதை சுமந்திரன் ஏற்க மறுத்து வியாக்கியானம் செய்தார். இதேபோல சிங்கள மக்களை கோபம் கொள்ளவைக்கக் கூடாது என்றார். ஈழப் போராட்டத்தை மாத்திரம் அல்ல. (//that it was disillusioned youth – often unemployed and angry – who have resorted to violence against the State, whether in the North East or in the South.// https://island.lk/?page_cat=article-details&page=article-details&code_title=44922 ) தென்னிலங்கையில் நடைபெற்ற போராட்டங்களையும் சேர்த்தே கொச்சைப்படுத்தினார். இலங்கையில் நடைபெற்ற போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமேயாகும்.
முன்னர் போராட்டங்களை மலினப்படுத்திய சுமந்திரன் தனது வீழ்ச்சியை சரிக்கட்டவே அம்பாறைக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் அரசியல்வாதிகளை தவிர மற்றவர்களால் முடியாது என்ற கருத்தை கட்டமைப்பது எதிர்க் காலப் போராட்டங்களுக்கு நல்ல வழிகாட்டல் அல்ல. சாணக்கியனின் எதிர்கால அரசியலுக்கு இது புது பொலிவு கொடுத்துள்ளது. இவரை வைத்து தமிழரசுக் கட்சியை சுமந்திரன் காய் நகர்த்துவார்.
இறுதியாக
2009 பின்னர் அரசியல் என்றால் சட்டவாளர்களை மையமாக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களை அணிதிரட்டுவது என்பது அன்றாட வாழ்வியலை உயர்த்துவதன் ஊடாகவும் நடைபெறமுடியும். ஆனால் கட்சிகள் அதற்கான கொள்கைத் திட்டம் எதுவும் இல்லை. பழைய தமது கட்சிகளின் யாப்பை வைத்துக் கொண்டே காலத்தைக் கடத்துகின்றார்கள்.
1.இன்றைய சமூக அமைப்பு என்ன? அதற்கான தேவை என்ன? எவ்வகையான பிரச்சனைகள் உண்டு. இதிலும் ஒடுக்கப்படும் தேசம் என்ற வகையில் ஆய்வு என்பது அவசியமாகும்.
2. அமைப்பு வடிவத்தை எவ்வாறு தொய்வில்லாது கட்டமைப்பது என்ற செயல்திறன் அவசிமாகும்.
3. உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி, மக்களைத் திரட்டல் என்ற வேலை முறையில் கவனம் கொள்ளாது.
ஒவ்வொருவரும் தேர்தலை மையமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். ஒருவரின் கருத்திற்கு மாற்றாக மாற்றுக் கருத்தினை வைக்காது தனிமனித பிடிப்பு நிலைக்கு அரசியல் அமைப்பை கொண்டு செல்கின்றார்கள். ஒவ்வொருவரின் பின்னாலும் ஒவ்வொரு நலன்கள் இருக்கின்றது. இங்கு மக்கள் நலன் என்ற நிலையில் எவரும் சிந்திப்பதில்லை.
நாம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்பவர்கள் சிங்கள தேசத்தின் சேவகர்களாக மாறி ஒடுக்கும் தேசத்தவர்கள் மீதே சவாரி செய்கின்றார்கள். இந்த அவலம் தீர்க்கப்பட வேண்டும்.
தன்னியல்பான எழுச்சியை எவ்வாறு அமைப்பாக்கி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது பற்றி ஆராயவேண்டும். தன்னியல்பான எழுச்சிகளில் உள்ள குறைபாட்டை வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி எழுதிக் தள்ளுவது அல்ல. தத்துவாதிகள் இந்தச் சமூகத்தைப் பற்றி வியாக்கியானம் செய்து விட்டார்கள். இந்த சமூகத்தை மாற்றுவதைப் பற்றி முடிந்தால் பேசுங்கள். சித்தாந்தத் தெளிவற்ற எந்தப் போராட்டமும் முன்னோக்கி நகர்ந்திட முடியாது. குறிப்பாக புலியெதிர்ப்பு விண்ணர்களின் சிந்தனை சமூகத்திற்கு உதவாது.!

No comments:
Post a Comment