இன்றைய அரசியல் போக்கு (2) 20.09.25
ஆயுத இயக்கங்கள் உருவாகுவதற்கு முன்னரும் ஈழ தேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆயுத இயக்கங்கள் இல்லாத இன்றைய காலத்திலும் ஈழ தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாம் உயிருடன் இல்லாத காலத்திலும் ஈழ தேசம் இருந்து கொண்டிருக்கும். அது அரசு கொண்டதா இல்லையா என்பதே அரசியல் நிலைப்பாடாகும்.
அரசியல் நீக்கம் செய்ய அனுமதித்தால் சமூக அசைவியத்தை விளங்கிட முடியாது. தமிழ் சமூகத்திற்கான அரசியல் உரிமையைப் பற்றி பேசாது இருக்கும் படி சமூகமயப்படுத்தப்படுகின்றது. இன்றைய ஆட்சியாளர்கள் ஒற்றையாட்சியில் கலந்து விடு என்ற அரசியலைத் தான் செய்து கொண்டுள்ளார்கள். அவர்களின் அரசியல் இலகுவாக அம்பலப்படுத்த முடியும். இவர்களின் அரசியல் என்பது சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பில் இருந்து தான் அரசியலை முன்னெடுக்கின்றார்.
சமூகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ஆழமான கருத்துப் பரிமாற்றமும், உரையாடலும் இல்லாத சமூகம் தேங்கித்தான் போகும். அரசியல் என்பது அரசியல் பொருளாதார சமூகத்தின் போக்கை வியாபகமாக ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும். இன்றைய அரசியல் போக்கை ஆய்வு செய்யக் கூடிய மார்க்சியர்கள் செயல் வடிவத்தில் இல்லை. இன்று ஓய்வு நிலைக்குச் சென்றுவிட்டார்கள் போலும்
-உரையாடக் கூடிய பலர் மௌனமாக உள்ளார்கள்.
-இனமதகுமற்று சமத்துவம் எனப் பேசி இடதுசாரி கலைப்புவாதிகளாக சீரளிந்துள்ளது.
-அரசியல் புத்தாக்கம் செய்யாத சோம்பேறித்தனம்..... இன்னும் நிறைய எழுதலாம். தேசிய இனப்பிரச்சனையை செயலூக்கமானது (லெனின்) என்ற கோட்பாட்டு நிலையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தம்மை மார்க்சியவாதிகளாகவோ, கட்சியாகவே அமையமுடியாது.
பழைய போலி இடதுசாரிகள் புரட்சியின் பக்கம் நிற்பதாக கூறிக் கொண்டு NPP/JVP செல்கின்றார்கள். சந்தர்ப்பவாதிகளாக கரைந்து விடுவதையும், அழுத்தக் குழுவாக இருப்பதையும் அரசியலாக முன்வைக்கப்படுகின்றது.
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் சுவிஸ்லாந்து நாட்டின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் என 19 உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து கலந்து கொண்டுள்ளார்கள். சுவிஸ்லாந்து அரசியல் யாப்பு முறைமை குறிப்பாக அங்குள்ள சமஸ்டி ஆட்சி முறை உள்ளிட்ட அரசியல் நிர்வாக அமைப்புகள் பற்றிய கலந்துரையாடல் அங்கு இடம்பெறுகின்றது. அநுர அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது ஜெயம்பதி தயாரித்த இனப்பிரச்சினைக்குரிய தீர்வுகளும் முன்வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திலையில் தான் இது நடைபெறுகின்றது. இவ்வாறு பல வகுப்புகள் ஒன்றும் புதியவை இல்லை.
தேசிய இனப்பிரச்சனைக்கு மார்க்சியம் வழிகாட்டுகின்றது. மார்க்சியம் வழிகாட்டாத விடயத்தை விட உயர்ந்த தீர்வு சுவீஸ் இல்லை என்பது மார்க்சிய மூலவர்களே கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள். குறிப்பாக சோவியத் யாப்புவடிவம் இருக்கின்றன. அதுவே தேசிய இனச் சிக்கலை தீர்த்த உயர்ந்த வடிவமாகும்.
ஒருங்கிணைப்புக் குழு
அதிகாரத்திற்கு மாற்றாக செயற்படுத்தப்படுகின்றது. ஒருங்கிணைப்புக் குழு என்பது இன்று உருவாக்கப்பட்டது அல்ல. இது 2009 பின்னர் நிகுநெகும என்ற பதாகையின் ஊடாக தமிழர் தாயகத்தில் செயற்படுத்தப்பட்ட நிர்வாக முறையாகும். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என்ற பெயரின் கீழ் சிங்கள தேசம் முன்னெடுத்தனர்.
இலங்கை அரசாங்கம் உள்ளூர் சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதாக்குவதும், அதனை மைய ஆட்சியின் கீழ் கொண்டு வரும் திட்டத்தினை செயற்படுத்த முனைந்துள்ளது. இதன் ஆரம்பமே திவிநெகும (மக்கள் மன்றம், சமவுரிமை இயக்கம் இவற்றையும் சேர்த்து வாசிக்க) திட்டமாகும். மத்திய அமைச்சர் ஊடாக அனைத்துச் சபைகளையும் நிர்வாகம் செய்வதாகும். ஏற்கனவே சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி முறை இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. தமக்கு இருக்கும் அதிகாரத்தின் ஊடாக நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும். பெயரளவிற்கு ஏனும் இருக்கும் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை போன்றவற்றின் அதிகாரத்தை இல்லாதாக்கும் செயலை அரசு ஆரம்பித்து விட்டது.
முதலாளித்துவ கட்டத்தில் ஏற்படுகின்ற அரசியமைப்பு வளர்ச்சியானது புதிய அதிகார நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு மக்களை நிர்வகிக்கின்றது. இங்கு முதலாளித்துவ நிறுவனங்களை உருவாக்குவதன் ஊடாக உள்ளூர் ஜனநாயகத்தை பெயரளவிற்கேனும் வழங்குகின்றது. இன்று அதிகாரம் மையம் கொண்டு செயற்படுவது தேசத்தின் மீதான ஒடுக்குமுறையை உச்சத்து செல்கின்றதை இது காட்டி நிற்கின்றது. முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியானது உள்ளூர் மட்டத்தில் அதிகாரத்தை பகிர்கின்றது. முக்கியமான சட்டம், நிர்வாகம், நீதி, நிதி, இராணுவம், நிலம் தவிர்ந்த பல அதிகாரங்களை பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை போன்றவற்றுடன் பகிர்ந்து கொள்கின்றது. இப்போ அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை உள்ளூர் சபைகள் வெறும் கண்துடைப்பிற்கும், பொம்மையாகவும் மாற்றப்படுகின்றது. உள்ளூர் தேர்தலில் தெரிவு செய்யப்படுபவர்களின் அதிகாரம் பறிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்த நகர்வையே பேரினவாதிகள் செய்கின்றனர்.
வடக்கு மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியாகும். ``வடக்கு மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஜீவனோபாய நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்துவது, முதல் சுற்றிலும், இரண்டாவது சுற்றில், சுகாதாரம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணத்தை மீட்டதன் பின்னர் கிழக்கின் உதயம் திட்டத்தை முன்னெடுத்தது போல், வடக்கு மாகாணத்திற்காக ‘வடக்கின் வசந்தம்’ அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு அரசின் ஒவ்வொரு அமைச்சுகளும் யோசனைகளையும், திட்டங்களையும் கூடிய விரைவில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த திட்டங்களின் முதற்கட்டத்தின் கீழ் 180 நாட்கள் கொண்ட உடனடி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றும், இரண்டாவது கட்டத்தின் கீழ் 2009, 2010 காலப் பகுதிக்குள் அமுல்படுத்தவென மத்தியகால நிகழ்ச்சித் திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அந்த பிரதேசங்களுக்கான பாதுகாப்பு குறித்து, அதிக முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தினர். இது தான் ஆக்கிரமித்த தேசத்தின் நிர்வாக முறையாகும்.
``வடக்கின் வசந்தம்” வேலைத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 97 நீர்த்தேக்கங் களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன என்பதை அவர் அறிவாரா?
(i) அவ்வாறு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீன் குஞ்சுகளின் பண ரீதியிலான பெறுமதி யாது என்பதையும்,
(ii) குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீனினங்கள் யாவையென்பதையும்,
(iii) இதிலிருந்து வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன்வளம் எவ்வளவு என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?” (parliament lk note 1)
இவ்வாறான திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செய்யப்பட்ட ஊழல் என்பது ஒரு போக்கு உள்ளது. இதே வேளை நிதிவிடயத்தில் எவ்வாறு மத்திய அரச நிர்வாகம் இருக்கின்றது என்பதையும் இவை உணர்த்துகின்றன.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பும் அதன் சட்டங்களைக் கொண்டும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற கருத்தினை வலியுறுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் அமைகின்றன. முதலமைச்சர் வினைத்திறன் அற்றவர் என்று கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அரச அதிகாரகள் மீதான குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள சதி அரசியல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மீளவும் அதிகாரம் அற்ற சபையின் நடைபெறும் முறையை, முதிர்ச்சியற்ற நிலையைக் காட்டி தமிழர்கள் நாகரிகமற்றவர்கள், ஊழல் நிறைந்த சமூகம் என்பதை பரப்பி, அரசியல் கோரிக்கையை மலினப்படுத்தும் இருக்கின்றது. தமிழர் தேசம் ஒரு நிழல் அரசை கட்டியிருந்தது. அவ்வாறு கட்டமைப்பை நிலைநிறுத்திக் காட்டிய ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் வரலாற்றை மறைத்துக் கொண்டு கடந்துவிட முடியாது.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் தொடர்பில், தமிழ்பகுதி பிரதானப்படுகின்றது. எவ்வித நிர்வாக அதிகாரமற்ற நாடாளுமன்ற உறுப்பினர். சில அமைச்சர்கள் என்பவர்கள். தலைமை தாங்குகின்றார்கள். இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பும் அதன் சட்டங்களும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் சிங்கள தேச அரசியல் அமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் பணியாற்றும் அரச தமிழ் அதிகாரிகள் தங்களால் இயன்ற காரியங்களை மாத்திரமே செய்ய முடியும். அதேவேளை சாத்தியமானதை செய்ய வேண்டும் என்ற அதிகாரியின் விருப்பம் கூட கட்டுப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சாத்தியமானதைச் செய்ய விரும்பும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
யாழில் மைதானம், குடிவரசு-குடியகல்வு திணைக்கள ஆரம்ப நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது அரச வழமையாகும். ஏன் இங்கு மீறப்படுவதை ஏன் ஆச்சரியமாக பார்க்கப்பட வேண்டும்? அல்லது தவறான போக்கா என்ற விவாதம் உள்ளது. இது அடிப்படையில் பிரிவினைவாத சக்திகளை புறக்கணிப்பது என்பதேயாகும். இதேவேளை NPP-JVP பொறுத்தவரையில் லங்கா என்ற கட்டமைப்பை ஏற்காத சக்திகள். மக்கள் மன்றம் என்ற அடிப்படையில் ஒற்றை லங்காவின் கீழ் ஆட்சியை வலியுறுத்தும் அரசியல் போக்கில் அமைந்ததாகும். தமிழ் பகுதியில் இருந்த நிர்வாக அலகுகளை கவனத்தில் கொள்ளாது, நிகுநெகும வழியில் இவர்களும் ஆட்சி செய்கின்ற போக்கைத் தான் இது வெளிப்படுத்துகின்றது.
1995களில் தொடங்கி டக்கிளஸ் என்ற பண்ணையார் 2009 வரையில் செயற்பட்டார். அரசை மறுத்த சிறிய நிர்வாக அலகுகளைக் அழித்துவிடுவது தான் 2009 பின்னர் ராஜபக்சை ஆட்சியின் போக்காக இருந்தது. 2009 இருந்து 2016 வரையில் பசில் பண்ணையாராக இருந்தார். இன்று சந்திரசேகர் ‘‘சிவப்பு” பண்ணையாராக இன்று வலம் வருகின்றார். நிகுநெகும என்பதன் இன்னொரு வடிவம் தான் ‘‘மக்கள் மன்றம்” இதனை இன்று நடைமுறைப்படுத்துகின்றார்கள்.
தாய்நாட்டைக் காப்பது
இன்றைய ஆட்சித் தலைவர் தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றார். ஊழல் அற்ற சமூகத்தையும், தூய்மையான நாட்டை உருவாக்குவார்களாம். ஆனால் அரசியல் என்பது பழைய போக்கில் தான் அமைந்திருக்கின்றது. ஜேவிபியினர் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து ஈகியாகிய திலீபனின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் யாழில் (19.09.25) முகாமிட்டிருந்த வேளையில் திருகோணமலையில் திலீபனின் படங்கள் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. வவுனியாவில் நினைவஞ்சலியை ஏற்பாடு செய்தவர்களை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருபுறம் ஒரு முகம் இன்னொரு இடத்தில் இன்னொரு முகம் காட்டப்படுகின்றது. ஒரு நிலையான கொள்கை நிலைப்பாடு எடுக்கப்பட வேண்டும்.
திலீபனின் கோரிக்கைகள்:
*மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
*சிறைக் கூடங்களிலும் இராணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
*அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
*தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இவைகள் இன்றுவரை வடிவங்கள் மாறுபட்டாலும் பண்புநிலை இன்றும் தொடர்கின்றது. பௌத்தமயமாக்கம், இராணுவ முகாம்கள், கைதிகள், மனிதவுரிமை மீறல் சட்டங்கள் தொடர்கின்றன. இன்று அதிகாரத்தில் இருப்பர்கள் செய்ய வேண்டியவை பல உள்ளன.
குறிப்பாக இந்திய எதிர்ப்புக் குறியீடாக திலீபன், பூபதி அம்மாவை முன்னெடுப்பதாக இருந்தால் இந்தியாவின் நலன் சார்ந்த அரசியலை தமிழ் பகுதியில் அனுமதிக்காது இருக்க வேண்டும். குறிப்பாக தமிழர் பகுதிகளில் இந்திய நிறுவனங்களின் செயற்பாட்டினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இலங்கை தேசியம் ஒன்றைக் கட்டமைக்க தமிழ் தேசியவீரர்களை தவறாக பயன்படுத்த முனைகின்றார்கள். இவ்வாறு உள்ளவாங்கப்படுத்தலின் மூலம் தமிழ் சமூகத்தில் உள்ள வலது குட்டிமுதலாளித்துவ பிரிவினரை நோக்கிய அமைகின்றது. அரசியல் மயப்படுத்தப்படாத பிரிவினர், சமூக சந்தர்ப்பத்தை நோக்கி முன்னேறிட முயற்சிக்கும் மக்கள் பிரிவு எப்பவும் இருப்பார்கள். அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பின்னால் செல்வார்கள்.
அஞ்சலி செய்ய சென்றவர்களை தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் தடுத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழினத்தின் மிக கேவலமான அரசியல் நிலைப்பாடு இது, திலீபனின் நினைவிடத்திற்குச் செல்ல தமிழீழ விசா எடுக்க வேண்டுமாம். வாய்ப்புகளை எப்படி தமிழர் சாதகமாக பயன்படுத்துவது என்ற அறிவில்லை, எங்கடையதுகள் எப்பவும் திருந்தாது, உணர்ச்சி அரசியல் செய்யும் தலைமைகளால் சரியான கட்சி தொண்டர்களை வளர்க்க முடியாது. இவ்வாறான கருத்துகள் சமூகத் தளத்தில் வெளிவந்துள்ளது. இங்கு கட்சிகளிடையே உள்ள முரண்பாட்டை வைத்து அரசியல் நிலைப்பாடு எடுப்பதும், ஜீவகாரூண்யவாத அடிப்படையில் அணுக வேண்டுமென்பவர்கள், தாராளவாத அடிப்படையில் அணுகுபவர்கள், பொதுப்புத்தியில் எடுக்கப்படும் நிலைப்பாடு என வெவ்வேறு போக்கு இருந்துள்ளது.
பல்தேசிய மக்களைக் கொண்ட நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ அரசியல் போக்கு வழமையாக எல்லைகளை தமதாக்கி வைத்திருக்கும். ஜேவிபியின் அரசியல் நிலைப்பாடும் அந்த அடிப்படையில் அமைந்ததாகும். இந்தப் போக்கு இரண்டாம் அகிலத்தில் இருந்து தொடர்வதாகும்.
பிரதேசங்களை பிடித்தல், பிற தேசங்களை அடிமை செய்தல், போட்டியிடும் தேசங்களை நாசத்திற்கு உட்படுத்தி வெகுஜனங்களின் கவனத்தை திருப்புதல் ஆளும் வர்க்கங்களின் போக்காகும். இவை அடிப்படையில் தொழிலாளர் வர்க்க நிலைக்கு மாற்றான நிலைப்பாடு. தொழிலாளர்களை தேசியமயக்கத்தில் ஊட்டிய வேலையை அன்று இரண்டாம் அகிலத்தினர் செய்தார்கள்.
இரண்டாம் அகிலத்தின் “சோசலிஸ்டுகள்’’ போருக்காதரவு அளித்தது சோசலிசத்தையே நேரடியாகக் காட்டிக் கொடுத்தது ஆகும் என்கிறார் லெனின். அவர்களின் கொள்கையை குறிக்க சமூகவெறி (Social Chavunism) என்ற சொல்லை உருவாக்கினார். சமூக வெறி என்பது நியாயமற்ற போரில் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் வாதம். சந்தர்ப்பவாதம், சமூக வெறி (Social Chavunism) இரண்டுடனும் சர்வதேசிய அளவில் தொடர்புகளை முறித்துக் கொண்டு மூன்றாம் அகிலம் புரட்சிகர அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். சந்தர்ப்பவாதத் தலைவர்களைப் பொறுத்தவரையில் சொல்லில் சோசலிசம் நடைமுறையில் முதலாளித்துவக் கூட்டாகும். ள்.
``தற்போதைய ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாய் மாற்றுவது ஒன்று தான் பிழையற்ற பாட்டாளி வர்க்க கோசமாகும்.” ``இந்தப் பாதையில் செல்வதன் மூலம் மட்டும்தான் பாட்டாளி வர்க்கம் தேசியவெறி கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின்மீதான தனது சாபு நிலையை உதறித்தள்ள முடியும்; தேசிய இனங்களது மெய்யான சுதந்திரத்தையும் சோஷலிசத்தையுமு நோக்கி ஏதேனும் ஒரு வழியில், ஓரளவு விரைவான கதியில் தீர்கமானகரமான நடவடிக்கைகளை எடுக்க முடியும். (146திருத்தல்வாதம் லெ)
"ஒரு நாட்டை ஆள்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழி ஒரு குழுவின் தலைமையிலோ, ஒரு மனிதரின் தலைமையிலோ, ஆளுநர்கள் வடிவில் வட்டாரங்களில் கரங்களும் கண்களும் கொண்ட, ஒரு "எளிமைப்படுத்தப்பட்ட" கருவியை வைத்துக் கொள்வதாகும். இது மிகவும் எளிய ஓர் அரசாங்க வடிவம் ஆகும், இதில் நாட்டை ஆள்வதில் ஆட்சியாளர், ஆளுநர்களிடமிருந்து வரக்கூடிய வகையிலான தகவல்களைப் பெற்று, தாம் நேர்மையுடனும் நன்றாகவும் ஆட்சி செய்து கொண்டிருப்பதாக நம்பி தன்னைத் தேற்றிக்கொள்கிறார். தற்போது உரசல் தோன்றுகிறது, உரசல் மோதல்களாக, மோதல்கள் கலகங்களாக வளர்கின்றன. பின்னர் கலகங்கள் நசுக்கப்படுகிறன. இந்த அரசாங்க அமைப்பு முறை நம்முடைய அமைப்பு முறை அல்ல. மேலும் கூடுதலாக, அது எளிமையான ஒன்றாக இருந்தாலும் மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும். ஆனால் இன்னொரு அரசாங்க அமைப்பு முறை இருக்கிறது, சோவியத் அமைப்பு முறை. நமது சோவியத் நாட்டில் நாம் இந்த அரசாங்க அமைப்பு முறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கொலனித்துவம் அகன்ற பின்னரும் ஆளுனர் நியமிக்கப்பட்டார். அந்த ஆளுனர் கொலனித்துவத்தின் நலனை மறைமுகமாக நிறைவேற்றி வந்தார். இவற்றின் இன்னொரு வடிவம் தான் ஈழத்தமிழர் பிரச்சனையிலும் ஆளுனருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆளுனர் தமிழ் மக்களின் விருப்பில் இருந்து செயற்படவில்லை என்பதே வரலாறாகும். இன்று முதலாளித்துவ ஆட்சிமுறையை புனிதப்படுத்தப்படுகின்றது. முதலாளித்துவ முறைமைக்குள் தீர்வும் முன்வைக்கப்படுகின்றது. இதில் மாகாணசபை ஆளுனர் என்ற வேண்டாத பிரதிநிதியை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றுகின்றார்கள். சமமான அரசு என்பதற்கு அப்பால் நாகரீகமான வார்த்தைகளினால் அலங்கரிக்கப்படுகின்றது. அரசு அற்ற 13 என்றும், மக்கள் மன்றம், நிகுநெகும என்றும் முன்வைக்கப்படுகின்றது.
அரசை மறுக்கின்ற NPP/JVP அரசாங்கம் முரணற்ற ஜனநாயகத்தை முன்வைக்காது என்பது வெளிப்படையான அரசியல் போக்காகும். இன்றைய ஆட்சியாளர்கள் மாகாண சபையில் அதிக எண்ணிக்கை ஆசனங்களைப் பெறுவதும், தமிழ் மக்கள் அபிவிருத்தியை நோக்கி நகர்கின்றார்கள், அமைதியை விரும்புகின்றார்கள், சுயநிர்ணயத்தை அவர்கள் தவிர்த்து விட்டு இலங்கையராக வாழ விரும்புகின்றார்கள் என்பதை நிறுவ முற்படுகின்றார்கள்.
ரில்வின் சில்வாவின் காலைக்கதிரில் வந்த பேட்டியை வாசித்தாலே NPP/JVP அரசாங்கத்தின் போக்காகும். இன்று கட்சி அரசியல் செய்வதே NPP/JVP அரசியலாக உள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சனை என்பதே அடிப்படையில் அரசு பற்றி பிரச்சனையாகும். அரசு பற்றிய வியடத்தில் சரியான புரிதலைப் பெறவில்லையாயின் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள முடியாது.
இது பற்றி விளங்கிக் கொள்வதில் முரண்பாடு கட்சிகளிடையேயும் உள்ளது. சிங்கள தேச ஆட்சியாளர்களிடமும் இந்த முரண்பாடு உள்ளது.
அரசு என்ற விடயத்தை வலியுறுத்துவதே ஒரு நாடு இருதேசம் என்ற அரசியல் நிலைப்பாடு.
அரசு பற்றித் தெளிவில்லாத அரசியல்வாதிகள், கட்சிகளினால் இந்தக் குழப்பம் ஏற்படுகின்றது.
இதில் குறிப்பாக அரசு பற்றிய விடயத்தில் மார்க்சியவாதிகள் முரண்படுவாார்கள் ஆகின் அவர்கள் மார்க்சியத்தினை படிக்காதவர்கள், திரிபுவாதிகள், போலிகள் என்பதே அதன் பொருளாகும்.
அரசு பற்றிய லெனின் போதனை உள்ளது. அரசின் அவசியத்தை மூலவர்களை விட யாரும் விளக்கிவிட வில்லை.
தேசிய இனப்பிரச்சனையில் அரசு பற்றிய நிலைப்பாட்டை அராஜகவாதிகள் (Anarchists) மறுப்பார்கள். இடதுசாரியத்தினுள்ளும் அராஜகவாதம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதையும் மறுத்துவிட முடியாது. சுயநிர்ணயம் பற்றிய விடயத்தில் ரொட்டஸ்கியர்கள், புகாரிவாதிகளும் எதிர்க்கின்றார்கள்.
வலதுசாரிகள் அரசு பற்றிய வியாக்கியானம் என்பது மக்களை அடிமைவாழ்வில் வைத்திருக்கும் கருவி. அதன் ஊடாக மக்களை அடக்கி வைத்திருப்பதுடன், சுரண்டல் சமூகத்தை கட்டிக் காப்பதாகும்.
தமிழர் தரப்பில் உள்ள வலதுசாரிப் பிரிவு ``ஏக்கராச்சிய” என்பதை ஏற்கின்றார்கள். இந்தப் பிரிவிற்கும் அரசு என்ற விடயத்தில் தெளிவாக அரசியல் முதலாளித்துவ போக்கை கொண்ட இருக்கின்றார்கள்.
தமிழர்கள் என்பதால் தமிழர்களுக்கு சார்பாக இருப்பார்கள் என்பதில்லை. இடதுசாரி என்கின்ற இன்றைய ஆட்சியாளர்கள் அரசு என்ற விடயத்தை தெளிவாகவே எதிர்க்கின்றார்கள். அந்த தரப்பிற்கு ``ஏக்கராச்சிய `` தமிழ் தரப்பு ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்த பிரிவு இணையும் புள்ளி என்பது தேசிய இனங்களின் அரச பற்றிய விடயத்தில் சந்தர்ப்பவாத நடவடிக்கையோகும்.
அரசு பற்றிய விடயத்தை வலியுறுத்தும் பிரிவை மக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள், இனவாதம் பேசுகின்றார்கள், இவ்வாறு பேசுவதன் ஊடாகவே அரசியல் செய்யலாம் என்ற அர்ப்பத்தனமாக கருத்தை முன்வைக்கின்றார்கள்.
சிங்கள பௌத்த சமூகவெறியர்களும், தமிழ் விதேசியத் தரப்பும் ஒன்றிணையும் புள்ளி என்பது தமிழ், சிங்கள மக்களிடையே உள்ள கசப்புணர்வை தீர்க்க முடியாது. தமிழ் மக்கள் விடுதலைபெறுவதன் ஊடாகவே சிங்கள மக்களும் விடுதலை அடைவார்கள். அதாவது சொந்த சுரண்டல்வாதிகளை ஒழித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வார்கள்.
தேசிய இன அரசுகளை உருவாக்குவதற்கான அவாவினைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்த பொருளாதாரக் காரணிகளை மார்க்சியவாதிகள் காணத் தவறிவிடக் கூடாது என்பதே இதன் பொருளாகும். மார்க்சிய வேலைத் திட்டத்திலுள்ள ``தேசிய இனங்களின் சுயநிர்ணயம்” என்பதை வரலாற்று-பொருளாதாரக் கருத்துப்படிப் பார்த்தால் அது அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
நல்லெண்ணம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் குறிப்பான நாட்டின் சூழலை கவனத்தில் எடுத்தே ஆய்வுகளை செய்ய வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சியும், வரலாறும் வேறு வகையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ சமூக உற்பத்திப் போக்கில் தேச அரசுகளின் வளர்ச்சியையும், அவசியத்தையும் ஏற்றுக் கொள்கின்றது. இது முதலாளித்துவத்தில் அரசு மாதிரிப்படிவமானது, சகஜமானது.
சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு உட்பட்டதே இன்றைய ஆட்சியாளர்களின் போக்காகும். இதனை விளங்கிக் கொள்ளாது தமிழ் சமூகத்தின் முன்னேறிய பிரிவு இருக்க முடியாது.
சிங்கள பௌத்த சமூக தேசிய வெறியர்களின் அரசியல் போக்கை உள்வாங்க முடியாத துருப்பிடித்த மூளைகள் ஒதுங்கி நில்லுங்கள்.
கழிவிரக்கம் பெறும் இனவழிப்பின் பங்காளி ``சமூக தேசிய வெறியர்களை” அரசியல் ரீதியாக தமிழ் மக்களிடம அம்பலப்படுத்த வேண்டும்.
சுயநிர்ணயத்தை ஏற்று, தனியரசை npp/jvp ஏற்றுக்
கொள்ளும் போதே
திலீபனின் தியாகத்தினை npp/jvp மதிப்பது உண்மையானதாக அமையும்.







No comments:
Post a Comment