Popular Posts

Thursday, 6 November 2025

இன்றைய அரசியல் போக்கு 6

 

 

 

                 (ஏகாதிபத்தியத்திடம் ஆலோசனை பெறல்)

                    இன்றைய அரசியல் போக்கு 6

  (முன்னைய பகுதியில் நிகுநெகும, மக்கள் மன்றம், சமவுரிமை போன்றவற்றைப் பற்றிப் எழுதப்பட்டுள்ளது. சுயநிர்ணயம் என்பதே அரசு பற்றியது. அரசு பற்றியும் முன்னைய பகுதியில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் பழையகால சிந்தனை மரபை வைத்தே அரசியல் செய்கின்றார்கள். இதனையும் முன்னைய பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் மக்களின் அரசியல் நியாயம் என்பதை தீர்மானிப்பது தனிமனிதராக இருக்க முடியாது. அந்த தனிமனிதரின் அரசியல் புரிதல் என்பது சட்டவாதத்தினுள் இருக்க முடியாது. சட்டவாதம் என்பது சாதாரண மக்களுக்கு பயன்படும், அவர்களின் மனிதவுரிமையை உறுதிபடுத்தக் வேண்டுமென்றால் பயன்படும். மாறாக தேசத்தின் உரிமையை சட்டவாதம் உதவிடாது.)

 

 ஒரு நாடு இரு தேசம்

ஒரு நாடு இரு தேசம் என்பது முன்னணி (TNPF)யின் கண்டுபிடிப்பு அல்ல. அது 1972/3களில் தொடுக்கப்பட்ட வழக்கின் (Trial-ad bar) மூலப் பிரச்சனையாகும். இலங்கை தேசம் என்பதில்லை என்ற அடிப்படையை வைத்தே முன்வைக்கப்பட்ட வழக்காகும். தமிழர்கள் தேசிய இனமாக அடங்குவார்கள் என்ற அடிப்படையாகும். இதில் வழக்காடி வெற்றியும் பெற்றார்கள். 1833இல் தேசமாகும் ஆற்றல் வளம் கொண்ட இரண்டு தேசிய இனங்கள் நிர்வாகத்திற்காக இணைக்கப்பட்டதே. ஆக ஆயுத இயக்கங்கள் தொடங்குவதற்கு முன்னரே ஈழ தேசம் இருந்துள்ளது.  

இதில் பல வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஏன் அந்த வழக்கின் சாரத்தை பொதுவெளியில் கொண்டு வரத் தயங்குகின்றார்கள்? ஏக்கராச்சியப் பிரிவு இந்த முக்கியத்துவம் கொண்ட வழக்கையும், வரலாற்றையும் தவிர்த்துவிட்டு அரசியல் பேசுகின்றார்கள். வரலாற்றைத் தவிர்த்துவிட்டு பிரச்சனையை தீர்க்க முடியம் என்று கருதுவது தனிமனித சுதந்திரம். ஆனால் அது மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது. இலங்கை அரசியல் அமைப்பில் உள்ளதை மீளச் சொல்வதில் என்ன பிரச்சனை உள்ளது? ஏன் தயங்குகின்றார்கள். எமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள் என்றே சொல்ல வேண்டும். சட்டப் புத்தகத்தைத் தவிர எதுவும் தெரியாது என்றால் தனிநபர் பிரச்சனை. ஆனால் அரசியல் வரலாறு பொருளாதாரம் சார்ந்து ஆராய முடியவில்லை என்றால் அது ஒடுக்கப்படும் தேசத்திற்கு பயனில்லாத சக்திகளே.

ஒரு நாடு இரு தேசம் என்பது முன்னணி (TNPF)யின் கண்டுபிடிப்பு என்று அரசியல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கயவர்களே.

 பண்பாட்டுத் தேசியவாதம் பேசும் JVP இதை விளங்கிக் கொள்ளாதவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியாது. இவர்கள் பேசும் முற்போக்கு, இடதுசாரியம் எதுவும் மார்க்சியம் அல்ல.

`அரசில் இணைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் கலாச்சார வளர்ச்சிக்கான முழுச் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்யும் நிறுவனங்கள்” (154) என சுயநிர்ணயத்திற்கு பதிலாக இந்த பிரேரனை சேர்ப்பது என்பது ரோசா லுக்சம்பர்க்கின் ஆதரவாளர்கள் (1903 பின்னர்) முன்வைத்ததாகும். இது ஒன்றும் புதியது அல்ல. 110 ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்த அரசியல் போக்காகும். இதன் அடிப்படை தான் இனமதகுலமற்று இலங்கையராக இணைவோம் என்பது. இது தான் பண்பாட்டுத் தேசியவாதம். இது மொழி வழி தேசங்களின் ஜனநாயக உரிமையை ஏற்கப்படாத அரசியல் போக்கு. இதன் தொடர்ச்சியே இன்றைய சியோனிச -இசுரவேலின் ஆட்டம். இது மொழி அடிப்படையில் இணைவதை  ஏற்கவில்லை. தன் மதத்தின் அடையாளமே பெரிதென அன்று தொடக்கம இன்று வரையில் பேசியும், எழுதியும், மார்க்சியம் என்ற போர்வைக்குள் இருந்து புந்து கட்சி, அதன் பிதாமகன்கள் பௌவர், ஸ்பிரிங்கிலர் பேசியதாகும்.

முற்போக்கு முகம் போட்டு தேசத்தின் ஆட்சியதிகாரத்தை மறுக்கும் சிங்கள பௌத்த சமூக தேசிய வெறியர்களின் அரசியல் உள்ளது. புகாரியம் மார்க்சிய லெனினியமாக முடியாது.

Undivided- indivisible ``பிளவு படாத பிரிக்கப்பட முடியாத நாடு என்று பேசுகின்ற போது சிங்கள பௌத்தை பேரினவாதக் கட்டமைப்பை ஏற்றுக் கொள் என்பதே அர்த்தமாகும்.  இது இடதுசந்தர்ப்பவாத அரசியல்.  JVP கருதுவது போல இனமதகுலஅற்று என்பதே ஒரு மோசடி அரசியல். தேசங்கள் பொருளாதார, பண்பாடு, மொழியை வளர்த்துக் கொள்ளும் சுதந்திரத்தினை JVP மறுக்கின்றார்கள்.

இதனை மார்க்சியம் பேசியவர்கள் இன்று மௌனமாக கடந்து போகின்றார்கள்.

 


NPP தேர்தல் முன்னர்

"மாகாண சபை முறைமை அதன் உடம்பு பூராகவும் விஷம் நிறைந்த ஒரு மிருகம். அதனது பல்லைக் கழட்டியோ வாலை நறுக்கியோ காலை உடைத்தோ பிரயோசனமில்லை. மாகாண சபை முறைமையை நாங்கள் முழுமையாக அகற்ற வேண்டும்." - அன்றைய அனுரகுமாராவின் இன்றைய முகமும் இதுவே.

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான ஒரு ராஜதந்திரமாகவே எந்த ஒரு அதிகாரமும் அற்ற மாகாண சபைக்கு அதிகாரங்கள் இருப்பதாக பிரதிமை பண்ணி அதனை நீக்க வேண்டும் எனக் கூறுகிறார் அனுரகுமார திசாநாயகா. (பதவிக்கு முன்னர் அதாவது 2022 ற்கு முன்னர் பேசிய தீவிர தமிழ் எதிர்ப்பு பேச்சு)

முற்போக்கு முகத்தின் இனிமையான பேச்சுகள் என்பது அரசியல் உள்ளடக்கமாக இருக்கப் போவில்லை. அவர்களின் கவர்ச்சிவாத சொல்லாடலில் மயங்கிய சமூகமாகவும் இருக்க முடியாது. யுத்தத் வெற்றி என்பது சிங்கள தேசத்தின் வெற்றியாக அனுசரிக்கும் இந்த போல முற்போக்கு அரசியலை அம்பலப்படுத்தியாக வேண்டும்.

 

 

எந்த வர்க்கம் தலைமை தாங்க வேண்டும்

தேசிய இனம் சார்ந்த நிலையில் உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள் தான் தலைமை தாங்க வேண்டும். அதற்கான சூழல் என்பது இல்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளிகள் என்கின்ற போது ஓரு பொதுவுடமைக் கட்சியே போராட்டத் தலைமை ஏற்க வேண்டும். இந்தப் புரிதல் தமிழ் மார்க்சியம் படித்தவர்களுக்கு இல்லை. அவர்கள் திருந்தப் போவதும் இல்லை.

சமூகம் பல்வேறு கட்டத்தை கடக்க வேண்டும் என்பது இயங்கியல் விதி. சமூக இயக்கப் போக்கை தடுத்து நிறுத்திவிட முடியும் என்று நம்பவைத்து, இணங்கிப் போதல் என்பது அடிப்படையில் சரணாகதி அரசியலை வலதுசாரிகள் முன்னெடுக்கின்றார்கள். ஆனால் சமூகத்தை முன்னோக்கிச் செல்லும் கடமை கொண்ட பொதுவுடமை சிந்தனை கொண்டோர் தூக்கத்தில் உள்ளார்கள். சமூக் கட்டம் பற்றி தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். இதனால் அவர்களால் இலக்கியவாதிகளாக, சடங்கிற்கு அரசியல் வகுப்பு நடத்துபவர்களாக மாறிவிட்டார்கள். இதில் ஒரு பகுதி JVP  பின்னால் சென்றுள்ளனர். தமது பிரமுகத் தனத்தை காப்பாற்றிக் கொண்டுள்ளார்கள். இரண்டைத்தேசியம் என்ற திரிபுவாதக் கருத்தோட்டத்தை அம்பலப்படுத்தியிருந்தால் இவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் அம்பலப்பட்டிருக்கும்.  

 

இதற்கு மாற்றாக தேசிய சக்திகள் தான் இந்த தலைமை ஏற்க வேண்டும். தேசியத் தலைமை என்கின்ற போது கட்சி சார்ந்து அணுகிட முடியாது. கட்சியில் உள்ளவர்கள் வெவ்வேறு வர்க்கப் பிரிவினராக இருக்கின்றார்கள். இதில் இரண்டு பிரதான போக்கு இருக்கின்றது.  ஏக்கராட்சியத் தரப்பு, இரண்டு தேசங்கள் என்ற பிரிவு.  இவை இரண்டும் தமிழ் பிரிவு என்றாலும் அவர்கள் தமிழ் மக்களின் இறையாண்மை விடயத்தில் நேர்மையாக யாரு இருக்கின்றார்கள் என்பதே அளவு கோளாகும். ஒற்றையாட்சி- ஏக்கராட்சியத்தின் கீழ் என்பவர்கள் எப்பவும் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்க மாட்டார்கள். இவர்கள் யாரென்றாலும் சொற்சிலம்பத்தின் ஊடாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் அது அரசியல் உண்மை  அல்ல.

தமிழரசுக் கட்சி பெரிய கட்சி, பல நாடாளுமன்றம், மாநகர, நகர, கிராமசபை உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம். அது மட்டும் தலைமையை தீர்மானிக்க முடியாது. தலைமை என்பது தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை வலியுறுத்தும் சக்தியே அதற்கு தகமை கொண்டவர்கள். தமிழ் தேசத்தின் இறையாண்மையை விட்டு ஏக்கராட்சியத்தினுள் சரணடைய முடியாது. இவ்வாறு எழுதுவது தவறான செய்தியைப் பரப்பப்படுகின்றது என்றும் சொல்ல முடியும்.

 

 

DTNAயும் சந்தர்ப்பவாத அரசியலும்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நேர் கோட்டில் பயணிப்பதாக இல்லை. த.தே.கூ 2010 பின்னர் மெதுமெதுவாக சிதைந்து போயின. தமிழ் தேசிய நிலைப்பாடு கொண்ட TNPF அமைப்பினர் வெளியேறினர். அவர்கள் கொள்கை அடிப்படையில் வெளியேறிய போது, அதனை மடைமாற்றி பதவி வெறியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.

விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அவருக்கும் அரசியல் நெருக்கடி கொடுக்கப்பட்டது.  அந்த நெருக்கடியை தொடங்கியவர் இரணில். அதனை தொடர்ந்து கையில் எடுத்தவர் சுமந்திரன். ஏனெனில் தமிழ் தேச இறைமை என்ற அடிப்படையில் மாகாணசபையில் தீர்மானம் இயற்றினார், முதலமைச்சர் என்ற நிதியத்தை முன்மொழிந்தார். இரணில் என்ற சகுனியில் இருந்து பொம்மையே சுமந்திரன்.

இதை இன்று சுமந்திரன் மறுக்க முடியும். இவ்வாறு சொல்லும் எம்மை அறிவிலி, ஒன்றும் தெரியாதவர்கள், யதார்த்தம் தெரியாதவர்கள் என்று எதுவும் சொல்லி விட்டு சுமந்திரனால் செல்ல முடியும்.

இதன் பின்னர் EPRLF இனர் வெளியேறுகின்றார்கள். பின்னர் ரொலோவினர் வெளியேறுகின்றார்கள். ஆக இந்தக் காலப்போக்கில் நடைபெற்றது என்னவெனில் ஏக்கராச்சிய எதிர் திம்பு அடிப்படைதான். சில நீக்குப்போக்குள் முரண்பாடுகள் கொண்ட EPRLF, ரெலோ வினரிடமும் TNPF ஒருமைப்பாடு இருந்து வந்தே இருந்துள்ளது. சிலவேளைகளில் திம்பிற்கு நேர்மையாகவும், 13 இற்கும் என்று ஊசலாடுகின்றார்கள். இந்த ஊசலாட்டம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு விரோதமானவையே. 13 என்பது அரசு என்பதை ஏற்றுக் கொள்ளாத ஒரு தீர்வாகும். இதில் TNPF இனர் மிகத் தெளிவாக ஒரே போக்கில் இருந்துள்ளார்கள். இந்த அரசியல் போக்கை தொடர்ச்சிய அவதானிப்பதன் ஊடாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

 

தமிழ் தேசத்தின் அரசியல் போராட்டத்தை வலுப்படுத்த ஒரு ஐக்கிய முன்னணி தேவைப்பட்டது. அவ்வாறு ஒரு ஐக்கிய முன்னணியாக சங்கு அணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் அரசியல் அவ்வாறான ஐக்கியத்தை ஏற்படுத்திவிடவில்லை. இனியும் தேர்தல் கூட்டுக்கு அப்பால் மக்கள் திரள் அமைப்பை நோக்கி நகரவேண்டும். தாயகம்- தேசியம்- சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் முன்னேற வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரிக்க முடிந்தது. அந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து செல்லக் கூடிய உறுதிப் பாட்டை DTNA தொடரவில்லை. இதை ஏமாற்றம் என்று சொல்ல முடியாது. இது அப்பட்டமான துரோகத் தனமே. ஒரு கொள்கை வரையறை இருக்கும் போது குறுகிய கால, நீண்ட கால வேலைத் திட்டம் என்ற புரிதல் இருக்க வேண்டும். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடாகவே கொள்ள முடிகின்றது.

DTNAஇனருக்கு இந்திய ஒப்பந்த கால அனுபவமும் உள்ளது. திம்புக் கோரிக்கைக்கு எதிராகவே அந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திம்பு அடிப்படையில் அரசு பற்றிப் பேசுகின்றது. ஆகவே 13 ற்றும் ஏற்பு, சமஸ்ரிக்கும் ஏற்பு என்று இரண்டை அரசியல் செய்ய முடியாது. இவர்கள் கடந்த காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றார்கள். அதில் திம்பு அடிப்படை வலியிறுத்திருந்தனர் முன்னணயினர். இதனை கீழ் உள்ள பகுதியில் அறிய முடியும். DTNA சந்தர்ப்பவாத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி

ஜனாதிபதி தேர்தலின் போது எடுத்த நிலைப்பாட்டினை DTNA முன்வைத்திருந்தது. அதன் பின்னர் NPP மற்றும் அரசியல் லும்பன் தெரிவான பின்னர் ஏற்பட்ட நிலையில் முன்னணி (TNPF) வைத்த முன்வரைவு ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

 

1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில்இ ஒரு பூரணமான சம்ஸ்டி ஆட்சி முறை அரசியல்சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்.

மேலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையும் வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

2. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.

3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை இருதரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய சக்திகளும் நேர்மையாகவும்இ விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம் ஒத்துழைப்பையும்இ பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம்.

7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயல்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும் ஒருங்கிணைந்துஇ மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளமுடியும் என நாம் கருதுகின்றோம்.

8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும்இமக்கள் எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி ஒரு பரந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பாகவும் இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவினை நாடிநிற்கின்றோம்.

9. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (2.6.25)

                                                           

முன்னணியில் வரைவை ஏற்க தயக்கமேன்?

இன்று ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பயம் கொள்ளும் சக்திகள் யார்?

ஏக்கராட்சியக் குழு

போலி இடதுசாரிகள்

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள்

முதலாளித்துவ தாராளவாதிகள் இப்போ இவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

NPP சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையில் முற்போக்கான கட்சி என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அதேவேளை சிங்கள தேசத்தின் நலனை முன்னெடுக்கும் பிரதான சக்தியாக தொடர்ந்து செயற்படும்.

சிங்கள் தேசத்தில் தனது இருப்பை நிலைநிறுத்த அது தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுக்கும்.

தமிழ் மக்களைப் பொதுத்த வரையில் அவர்களுக்கு மாற்றாக அணி உருவாகுவதி தவிர்க்க முடியாது.

இன்று தமிழ் மக்கள் முன்னால் உள்ள முன்னேறிய ஐக்கிய முன்னணி வரைவு என்பது TNPF வைத்ததேயாகும்.  இதற்கு அப்பால் முன்வைப்பது தமிழர் தேசத்தின் இறைமையை இழந்தவையாகும்.

 

சுமந்திரன் தமிழ்க் கட்சிகளிடையேயான ஐக்கியத்தை கோருகின்றார். கடந்த 16 வருடத்தின் சுமந்திரன் செய்த அரசியலைப் பற்றி சுயவிமர்சனம் செய்யும் எவ்வித அறிகுறியும் காண முடியவில்லை. ஏன் சுமந்திரனால் TNPF வரைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

 

தொடரும் .. . .. .

அடுத்த பகுதியில் ``வரதராஜபெருமாளின் அரசியல் நிலைப்பாடு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது”. இந்த கற்பிதத்திற்கு பதில் 

No comments:

Post a Comment