பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இராணுவ வேலைத்திட்டம்
இதில் எழுதப்பட்டுள்ளவை தோழர் லெனின் எழுதிய கட்டுரைகளை இன்றைய சமூகப் பொருத்தப்பாட்டுடன் கற்றுக் கொள்ளும் வகையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அமைப்பு வடிவப் பிரச்சனை, கோட்பாட்டுப் பிரச்சனை போன்றவற்றை கற்றுக் கொள்ளவதன் ஊடாகவே போராட்டங்களை முன்னோக்கி நகர்த்த முடியும். இலங்கை, இந்திய கட்சிகளின் அரசியல் வறுமையை லெனின் எழுத்துகளின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
ஏகாதிபத்திய காலகட்டத்தில் எவ்வகையான போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது. போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், இரத்தம் சிந்தா அரசியல் என இரண்டு வகைகள் உண்டு. இவற்றை உள்ளவாங்காது உலகிலேயே சிறந்த அகிம்சைவாதிகளாக இலங்கை, இந்திய பொதுவுடமைக் கட்சியினர் உள்ளார்கள். அவர்களுக்கு நாட்டரசின் மீது உள்ள தேசபக்திக்கு அளவே இல்லை.
இன்று ஈராக்கின் மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தைப் பற்றி மதிப்பீடு செய்வதில் போதிய புரிதல் பொதுத் தளத்தில் இல்லை. ஆனாலும் வலதுசாரிகள், தாராளவாதிகள், நடுநிலைவாதிகள், சமூக ஜனநாயக போக்கை கொண்டவர்கள், மார்க்சியர்கள் என வெவ்வேறு கருத்தை முன்வைக்கின்றார்கள். ஆனால் ஒடுக்கப்படும் சமூகமாகிய எமது நிலையில் இருந்து உலகப் போக்கை அணுகிட வேண்டும். ஒரு நாட்டினுள் இருக்கும் தேசிய ஒடுக்குமுறை, ஏகாதிபத்தின் ஒடுக்குமுறை இவை இரண்டையும் பிரித்து அணுகிட வேண்டும். இலங்கை என்று அணுகும் போது தேசிய ஒடுக்குமுறை உள்ளது போலவே ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும் உள்ளது. ஆனால் அதிகாரம் கொண்ட சிங்கள தேசம் தன்னைத் பாதுகாத்துக் கொள்ள எந்த விட்டுக் கொடுப்பும் செய்யும். ஆனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழ தேசத்தின் அரசியல் நியாயம் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
வரலாற்றில் தவிர்க்க முடியாத வகையில் வெவ்வேறு வர்க்கப் பின்புலம் கொண்டவர்கள் தலைமை ஏற்க முடியும். போராட்டம் யாருக்கு எதிராக நடைபெறுகின்றது என்பது தான் மதிப்பீட்டின் மையப்புள்ளியாக இருக்க முடியும். போராட்டத்தலைமையை இன்னொரு புரட்சியினால் மாற்றிக் கொள்ள முடியும். போராட்ட இலக்கு அடைவதற்கு முன்னரே போராட்டத்தை பலவீனப்படுத்த முடியாது.
போர்களை எவ்வாறு மதிப்பீடு செய்வது?
சோசலிஸ்டுகள் புரட்சிகரப் போர்களை என்றும் எதிர்த்து இல்லை, என்றுமே எதிர்க்கவும் முடியாது. (252) முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியமாக மாறி படுபிற்போக்குத் தனமாக இருக்கின்றது. இந்த முதலாளித்துவ வர்க்கம் நடத்தி வரும் போர்கள் என்பது பிற்போக்கு கொலைகாரப் போர்களாகும். ``இந்த கட்டற்ற ஏகாதிபத்தியத்தின் சகாப்பதத்தில் தேசியப் போர்கள் இனிமேல் சாத்தியமில்லை”- இது வெளிப்படையாயும் தவறாகும்.” இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 1884பேர்லின் மாநாட்டில் கூடிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளை தமக்கிடையில் பங்கு போட்டுக் கொண்டார்கள். முதலாம் உலகப் போரில் ஏகாதிபத்திய பிரிவுகள் தமக்கிடையில் போரிட்டுக் கொண்டன. போரிட்டுக் கொண்டதன் ஊடாக தமது சந்தையை விரிவுபடுத்த முனைந்தன. மறுபக்கத்தே கொலனித்துவ அடிமையாக இருந்த தேசிய இனங்கள், தேசங்கள் அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்திருந்தன. ஏகாதிபத்தியத்தின் பிரதான முனைப்புகூறுகளில் ஒன்று, அது ஆகப்பிற்பட்ட நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியை விரைவுபடுத்தியது; அதன் ஊடாக தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டஙகள் விரிவாக்கப்பட்டது, தீவிரப்படுத்தப்பட்டது.
21ம் நூற்றாண்டில் 20 போலவே மறுகொலனியாதிக்கத்திற்காக ஏகாதிபத்தியங்கள் அலைந்து திரிகின்றன. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஏகாதியத்தியங்களிடையே பண்புமாற்றம், அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மையே. அதே போல சோவியத் ஒன்றியம் இன்றில்லை. ஆனால் முதலாளித்துவ ருசிய வல்லரசு உள்ளது. அந்த வல்லரசின் பலம் சோவியத் காலத்தைப் போல இருக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது. இரண்டால் உலக யுத்தத்தின் வெற்றியின் அனுபவம், அதன் படைத்திறன், சக்தி போன்றவை உடனடியாக அழிந்து விடப் போவதில்லை.
முதலாளித்துவ புரட்சி ஐரோப்பாவில் நடைபெற்ற காலத்தில் வெவ்வேறு தேசியப் போக்குகள் எழுந்து வந்தன. பெருந்தேசியவாத போக்கைக் கொண்ட செக்கிய, மாரூசிய தேசியவாதம். மத அடையாளம் நிலப்பிரபுத்துவ கூறுகளை முன்னிறுத்திய பண்பாட்டுச் தேசியவாதம் எழுந்து வந்தது. மற்றைய இரண்டாம் அகிலத்தவர்களின் தேசியப் போக்கானது தாய்நாட்டைப் பாதுகாப்போம் என்று ஏகாதிபத்திய யுத்தங்களை ஆதரித்து நின்ற மூன்று போக்குகள் இருந்துள்ளது. மூலவர்களின் எழுத்துகளில் இருந்து இவற்றை அறிந்து கொள்ள முடியம். ஆனால் இவற்றின் போக்கை வரலாற்று ரீதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த மூன்று போக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ ஏகாதிபத்தியப் பிரிவுகளிடையே யுத்தங்கள் நடைபெற்றது. அந்தப் போரில் ஐரோப்பிய தேசிய வெறியுடன் கொலனித்துவப் போர்களை எதிர்த்து வந்துள்ளது. அன்றையப் பொழுது தேசியப் போர்கள் தவிர்க்கமுடியாது இருந்தது. சீனா, இந்தியா, பாரசீகம், இந்தே-சீனப் போர்கள் என்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று ஏகாதிபத்திய முகாம்கள், வல்லரசுகள் என்ற போக்கில் விரிந்துள்ளன.
இந்த நிலையில் இரண்டு போக்குகள் உருவாகும். ஒன்று உள்நாட்டுப் போர்கள் உருவாகுவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நடத்துவது. ஏகாதிபத்திய காலத்தில் தேசியப் போர் (253) தவறென்பவர்கள் ஐரோப்பிய தேசிய வெறியை ஆதரித்தது போலவே தற்காலத்தில் நாடுகளில் உள்ள பெருந்தேசிய வெறியை ஆதரித்து நிற்பதாகும். இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்த ஈரான் மீதான தாக்குதலில் போது தேசிய வெறியை வெளிப்படுத்துவது ஆளும் வர்க்கத்தின் தேவையாகவும் உள்ளது. ஈராக் யுத்தத்தின் போது சதாம், ஈரான் சாத்தானின் (axis of evil) உருவம், இறுதிநாள் தீர்ப்புக்காக (Arnageddan) காத்திருப்பது போன்று இந்த தாக்குதல் என்று கருத்தாக்கம் செய்கின்றார்கள். ஒடுக்குபவரின் முழக்கங்கள் மதபின்புலம் கொண்டதாகவும் இருக்கின்றது.
ஒரு நாட்டில் உள்நாட்டுப் போரை மறுத்துவிட முடியுமா? அவ்வாறான அரசியல் போக்குத் தான் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரும் கருத்தால் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றது. அமெரிக்கா முன்னைய பலம் தற்பொழுது இழந்துள்ளதாக எண்ணுகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அணிசேர்க்கையை அமெரிக்க திறம்படச் செய்து வந்துள்ளது. உளவுத்துறைறையை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எதிரிமுகாமை சிதைப்பது, புதிய ஆட்சிப் பலத்தை உருவாக்குவது, தளங்களை விரிவுபடுத்துவது, ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித சுதந்திரக் கோட்பாட்டை அனைத்து தளங்களிலும் விரிபுபடுத்துவது என்பதை நுட்பமாக செய்யு வந்தது. இதற்கு இராணுவக் கூட்டு பொருளாதாரக் கூட்டு பின்புலமாக இருந்துள்ளது. பொருளாதாரப் பலம் என்பது தொழில்நுட்பத்தில் உள்ள பலவீனம் என்பதில் இன்று தன்னையே சந்தேகத்திற்கு உட்படுத்தியிருக்கின்றது. சீனா தொழிற்நுட்ப விரிவாக்க சக்தியாக எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
உள்நாட்டுப் போர்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. இது உலகப் போக்கின் வர்க்கச் சமூதாயத்தில் இயல்பானதாகும். உள்நாட்டுப் போரா மறுதலிப்பதோ அதைப் பற்றி மறந்துவிடுவது கடைக்கோடி சந்தர்ப்பவாதத்திற்குள் விழுந்துவிடுவதாகும். ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றியடைவது ஒரே அடியில் பொதுவாக எல்லாப் போர்களையும் அகற்றிவிடாது.
உலகத்தில் மாற்றங்கள் எல்லாம் உடனடியாக நடந்து விடுவதில்லை. ஏதோ ஒரு தொடக்கத்தில் இருந்து தான் விரிவாக்கம் நடபெற முடியும். இதனை லெனின் சரியாகவே வழிகாட்டுகின்றார்கள். சோசலிசம் ஏக காலத்தில் நடைபெற்று விடமுடியாது. இவ்வாறு தொடர்ச்சியான போராட்டமே ஒரு நாட்டில் இருந்து உலகில் உள்ள முதலாளித்துவத்தினை வீழ்த்தி இறுதியாக முறியடித்து உடமை நீக்கம் செய்ய பிறகே போர்கள் எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வரமுடியும்.
இவ்வாறு விஞ்ஞான நோக்கில் இருந்து பார்க்கமால் கடந்து செல்லப்படுகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தை நடுக்குவதை விட்டு தட்டிக் கழிப்பதும், மழுப்புவதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது அறவே புரட்சிகரமற்ற செயலாகும். ``இது மிகவும் கடினமான பணி, சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் பாதையில் மிகப்பெருமளவு போராட்டம் நடத்த வேண்டிய பணி.” (255) அமைதிவாதம் போதிக்கும் ``சமுதாய” பாதிரிகளின் சமூகத்தில் நிறையவே தோற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ``சமுதாய” பாதிரிகளும் சந்தர்ப்பவாதிகளும் எதிர்காலத்தின் சமாதனா பூர்வமான சோசலிசம் பற்றிய கனவுகளை உருவாக்க எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள். (255) குருசேவ் சமாதானம் சகவாழ்வு அரசியல் மேற்கொள்வதற்கு முன்னர் லெனின் எச்சரிக்கை விடுகின்றார். புரட்சிகரப் பாதையை கைவிட்டு அமைதிவழி, நாடாளுமன்றம் என்று சென்றவர்கள் இரண்டாம் அகில பின்புலத்திலும் உண்டு. இதேபோல இன்றைய இலங்கை, இந்தியக் கட்சிகளும் அரசியல் போக்கு உள்ளது. இலங்கை, இந்தியக் கட்சிகள் உள்நாட்டு நிலையை துல்லியமாக ஆராயத் தவறியுள்ளார்கள், தேசிய ஒடுக்குமுறை, சமச்சீரற்ற தேசங்களின் வளர்ச்சி, தேசங்களின் உற்பத்திச் சக்தியின் தேக்கமான வளர்ச்சி, அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய போதிய புரிதல் கொண்டவர்களாக இல்லாது ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதிகளாக சீரளிந்து விட்ட நிலை.
``இந்த சகாப்தமே தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போராட்டதிதின் கொள்கைகளையும், இதன் பின் விளைவாக முதலில் புரட்சிகரமான தேசியக் கலகங்கள் மற்றும் போர்கள், இரண்டாவதாக, பாட்டாளி வர்க்கப் போர்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்த கலகங்கள், மூன்றாவதாக இருவகையிலுமான புரட்சிகரப் போரின் ஓர் இணைப்பு ஆகியவற்றின் சாத்தியப்பாடு மற்றும் தவிர்க்கவியலாத் தன்மையினதுமான கொள்கைகளையும் அவசியமாயும் தோற்றுவித்து ஊட்டி வளர்க்க வேண்டும். (256) இது சமூக அசைவியக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகாட்டலாகும். உள்நாட்டில் மக்கள் திரள அணிதிரட்ட முடியாத நிலையில் சமூகக்கட்டத்தை எவ்வாறு கடக்கப் போகின்றார்கள்.
கொலம்பியா, பிலிப்பீன் நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள். 1990களின் பின்னர் குவத்மாலா, எல்சல்வடோர், பேரு போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களை ``பேச்சுவார்த்தை” என்ற முலாம் பூசி ஆயுதங்களை கீழேபோட வைத்தார்கள். இந்த வஞ்சகத் தன்மையை அங்குள்ள அமைப்புகள் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அவர்களும் அந்த் சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மூழ்கிவிட்டார்கள்.
ஆயுதப் போராட்டத்தினை இட்டு அச்சப்படும் இலங்கை, இந்திய கட்சிகளுக்கு லெனின் கூறுவது. ``இந்த மெய் விபரம் காரணமாக புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகள் படைக்குறைப்பைக்”`கோருமாறு” தூண்டப்படுகின்றனர்! இது வர்க்கப் போராட்டக் கருத்தோட்தத்தை முற்றாக் கைவிடுவதற்கும், புரட்சி பற்றிய சிந்தனை அனைத்தையும் துறந்து விடுவதற்கும் சமானமாகும். நமது கோஷம்: முதலாளி வர்க்கத்தை முறியடிக்கவும், உடைமை நீக்கம் செய்யவும், நிராயுதராக்கவும் வேண்டிப் பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கவது என்பதாக இருக்க வேண்டும். ஒரு புரட்சிகர வர்க்கத்துக்குச் சாத்தியமான ஒரே போர்த்தந்திரம் இதுவே” (257)
இன்று புரட்சி நெருங்கிவிட்டதா என்றுதான் கேட்பார்கள். இங்கு பிரச்சனை ஆயுதப் போராட்டத்தை மறுத்து நிற்பதாக இல்லையா என்பது தான். ஆயுதப் போராட்டத்தை மறுத்த நிலையில் தான் கட்சி பின்செல்கின்றது. அதற்கு பல காரணம் சொல்வார்கள். ஆயுதப் போராட்டம் பலன் தராது. இன்றைய உலகப் போக்கைப் பாருங்கள். புத்தகவாதத்தில் மூழ்கிக் கொண்டு லெனின் வரிகளை ஒப்பித்துக் கொண்டிருக்கின்றதாக விமர்சனம் செய்வார்கள்.
``முதலாளித்துவ சமுதாயம் எல்லையற்ற பயங்கரமாக இருக்கிறது.” இந்தக் கூற்று முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னைய சமூகத்திற்கு மாத்திரம் பொருத்தமானது என்றால் இல்லை. இன்று பல்வேறு வகையில் முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. பலநாடுகளில் முதலாளித்துவ சார்பு கருத்துருவாக்கிகள், கலைபண்பாட்டில் புல்லுருவித் தனம், உள்நாட்டு ஆட்சியாளர்களின் உதவி உள்ளன. அணுவாயுதம், விண்வெளி ஆய்வும்- தொழில்நுட்பம், மின்னணுவேக ஏவுகணைகள் என முன்னேற்றம் கொண்டு உலகை ஆயுதத்தினால் அடக்கிவைத்துள்ளது.
ஆயுதப் போராட்டம் பற்றிய எதிர்நிலையான கருத்தை தான் இலங்கை, இந்திய கட்சிகள் வளர்த்துவிட்டுள்ளார்கள். இதன் பொருள் உடனடியாக ஆயுத ஏந்தவேண்டுமா என்பது அல்ல. சமூகக்கட்டத்தில் எந்த ஆயுதம் ஏந்த வேண்டியது என்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றார். ஆயுதம் என்பது மக்கள் திரளுக்கு துணிச்சனைக் கொடுக்கின்றது. முதலாளித்துவ அமைதிவாதிகளாக அல்லது சந்தர்ப்பவாதிகளாக வாழ்ந்து வருகின்ற நிலையில் இருந்து மீளவேண்டும். ஏனெனில் ஒடுக்கும் வர்க்கம் எப்பொழுதும் ஆயுதமேந்தியதாகவே இருந்து வந்துள்ளது. அரசு என்பது ஆயுதம் வைத்திருக்கும் தனியுரிமையைக் கொண்டு அடக்குகின்றது. ஆனால் அரசிற்கு முன்னைய சமூகத்தில் மக்கள் ஆயுதம் வைத்திருந்தனர். மக்களின் பிறப்புரிமையாகவும், வாழ்வியல், உற்பத்தி, பாதுகாப்பு அனைத்திற்குமானதாக இருந்துள்ளது. தேசிய இனங்களை, பாட்டாளி வர்க்கத்தை சுட்டு வீழ்த்தும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்தப் படிப்பனைகள் தான் 1871முதலில் ஆயுதத்தை ஏந்தினார்கள். ``சமுதாய வாழ்வு முழுவதும் இப்போ ராணுவமயமாக்கப்படுகிறது. ஏகாதிபத்தியம் என்பது உலகைப் பங்கு போட்டு கொள்ள மற்றும் மறுபங்கு போட்டுக் கொள்ள மகா- வல்லரசுகள் நடத்தும் மூர்க்கமான போராட்டமாகும்.” (260)
போராட்ட வடிவங்கள் பற்றிப் பேசுகின்ற போது அமைதிவாதத்தின் பாதிரிகளின் பேச்சை அவதானிக்க முடியும். ஈழத்தில் அழிந்த மக்கள் போதாது என்றா இனியும் ஆயுதம் பற்றிப் பேசுவாக கூறுவார்கள். ஆயுதம் என்பது ஒரு போராட்ட முறை அவ்வளவு தான். ``ஒத்துக் கொள்ளப்பட்டதான சந்தர்ப்பவாதம், புரட்சிக்கும் முளைப் பருவத்திலுள்ள புரட்சிகர இயக்கங்கள் திடீர் எழுச்சிகள் ஆகியவற்றையும் பகிரங்கமாகயும் நேரடியாகவும் எதிர்க்கிறது” இவ்வாறு எதிர்த்துக் கொண்டு ஆளும் வர்க்கத்துடன் இணைந்து கொள்கின்றது. இந்த பிரிவு தாய்நாட்டைக் காப்போம் என்று முதலாளித்துவத்திற்கு துணைபோன வரலாறு உண்டு.
இங்கு படைக்குறைப்பு என்கின்ற போது புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கையும், நாட்டு அரசுகளின் அரசியல் நிலைப்பாடும் பற்றிப் பேசுகின்றது. இன்றைய நிலையில் புரட்சிகர இயக்கங்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதாகும். புரட்சிகரப் படையை வைத்திருக்க வேண்டும், அதேவேளை வெகுஜன அமைப்புகள் இருக்கப்பட வேண்டும். ஏனெனின் சட்டரீதியான வரையறைக்குள் இருந்து போராடுவதும், சட்டத்திற்கு முரணாக வழியில் போராவது புரட்சிகர இயக்கத்தின் வழிமுறையாக இருக்க வேண்டும்.
``மார்க்சிய” சுலோகங்கள் மற்றும் அமைதிவாத கோஷசங்ளின் போர்வையில் மறைத்துக் கொள்கிறார்கள். நடப்பிலிருக்கும் இந்த சந்தர்ப்பவாதத்தின் இந்த இருவடிவங்களையும் எதிர்த்த போராட்டம் பாட்டாளிகளின் அரசியலின் அனைத்துத் துறைகளிலும்: நாடாளுமன்றம், தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்க், ஆயுதப்படைகள் ஆகியவற்றில் நடத்தப்படவேண்டும்.” (163) ``இன்றையப் போருக்கும் புரட்சிக்கும் இடையிலான தொடர் பற்றி ஸ்தூலமான பிரச்சனையும் புரட்சி பற்றிய இத ஸ்தூலமான பிரச்சனைகளும் அரவமின்றி அடக்கப்படுகின்றன, மூடிமறைக்கப்படுகின்றன. ``புதுவகையான புரட்சியை ஆயுதமேந்தாத புரட்சியை நாடி நிற்கிறார்களா? ”(163) இரண்டாம் உலகப்போரை அனுபவிக்கும் துயரை ஏற்படுத்தக் கூடாது என்கின்றார். ஆனால் ``முதலாளித்துவ பொய்மைகளால் ஊழல்படுத்துவதாகும்” ஆம் லெனின் எதிர்பார்த்தது போலவே இன்று ஏகாதிபத்தியம் கட்டுமீறி உள்ளது. இதனை ஈரான் மீதான தாக்குதலை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஏகாதிபத்தியத்தின் போராட்டத்தை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டுமென்றால் என்ன? இன்று ஏகாதிபத்தியம் யுத்தம் தொடுக்கின்ற போது பொதுமக்கள் வெகுஜனப் போராட்டத்தின் ஊடாக இன்றைக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும்.
1)போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம்;
2)சமாதானம் பற்றிய பிரச்சனையில் பாட்டாளி வர்க்கதின் போக்கு;
3)கிளர்ச்சியும் பிரச்சாரமும் ;
4)நாடாளுமன்றச் செயல்பாடுகள்;
5)மக்கள் திரளின் போராட்டம்;
6)சர்வதேச சோஷலிஸ்டு குழுமத்தைக் கூட்டுவது. (290/4)
இந்த அடிப்படையில் உரையாடப் பட்டுள்ளது. லெனின் வழிகாட்டியும் உள்ளார். இன்றைக்கு அமைதிவாதத்திற்கு பலியாகிப் போய் உள்ள நிலைதான் இன்றுள்ளது.
``ஏதாவது ஒரு வழியில் ஏகாதிபத்தியம் சிறிய நாடுகளை உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலின் மையச் சுழிக்குள் இழுக்கிறது.” (267)
``சட்டத்துக்குட்பட்ட மார்க்சிசம்” என்று கூறப்பட்ட தத்துவம், அல்லது ஸ்டுரூவிசம்”. அது எந்த விதமான புரட்சித் துடிப்புமில்லாததான ஒரு ``மார்க்சிசம்”, மிதவாத முற்போக்குப் பூர்சுவாக்களுடைய தேவைகளுக்குதம் தக்கபடி மாற்றி சரி செய்யப்பட்ட ஒரு ``மார்க்சிஸசம்” ருஷ்யாவிலுள்ள தொழிலாளர்களுடைய பின்தங்கிய நிலையினை ஒரு காரணமாக வைத்து, ``பாமரமக்களுடன்” சேர்ந்து நடைபோடுவதற்கு விரும்பி, பொருளாதாரவாதிகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முன்னுள்ள பணிகளையும் அந்த இயக்கத்தின் இயங்குதுறையையும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான ...” (66சோசலிசமும் போரும்)
தேசியவாதம், சமூக தேசிய வெறி
இங்கு தேசியவாதம், சமூக தேசிய வெறி போன்றவற்றை கோட்பாட்டுத் தளத்தில் போதிய புரிதல் இல்லை. இவைகள் பிற்போக்கு கூறுகளைக் கொண்டதாகும். இந்தப் போக்கு சமூக வளர்ச்சிக் கட்டத்தை மறுத்து நின்று ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதாகும். இரண்டாம் அகிலத்தவர்களின் சமூகத் தேசியவெறியும், புந்த் கட்சியினரின் பண்பாட்டுத் தேசியவாதமும் ஒரே போக்கைக் கொண்டதாகும். முதலாளித்துவ தேசிய வெறியை எதிர்த்துக் போராட (16/4லெ) வேண்டும். இவை நிலமானியச் சிந்தனையையும், வாழ்வியலையும், நாடுகளைப் பிடிக்கும் கொள்கை, இனச் தூய்மைவாதம் போன்றவற்றை பாதுகாத்து நிற்பதாகும்.
``ஒரு குடியரசின் உருவாக்கமே ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளின் உடனடியான அரசியல் கோசமாக இருக்க வேண்டும்.” (16/4லெ) தேசிய வெறியின் பிரதான நீரோட்டத்துக்குள் பாட்டாளி வர்க்கத்தை இழுப்பது தவறான போக்காகும். இது அன்றைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத காலத்தின் நிலையாகும். அந்தக் காலத்தில் முடியாட்சியை பாதுகாக்கும் அரசியல்போக்கு இருந்த காலத்தில் எழுந்த தேசியவாதமாகும். முதலாளித்துவப் புரட்சி முழுமையடையவில்லை, நிலம் பறிமுதல் செய்யப்படவில்லை, 8 மணி நேரம் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னொரு தேசத்தை ஒடுக்கிக் கொண்டு ``தாய்நாட்டைக் காப்பாற்றுவோம்” என்கின்றவர்கள் வெட்கங்கெட்ட இழிபிறவியே ஆவான்; (23/4லெ) நியாயமாகவே இவன் மீது ஆத்திரமும் அருவருப்பும் வெறுப்புமே உண்டாகின்றது.
சமூகத் தேசிய வெறி- தாய்நாட்டை காப்பது என்ற அரசியல் நிலைப்பாடு என்பதை பிற்போக்குத் தனமானது. இன்று எழும் தேசியப் போராட்டத்தையும் அன்று எழுந்த தேசிய வெறியையும் ஒன்றித்து பார்க்க முடியாது. Georgiaவில் மன்னரும், நிலப்பிரபுக்களும் இழந்த பெருமையை மீட்ட தேசியத்தை கையில் எடுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் முடியாட்சியைப் பாதுகாப்பது, நிலப்பிரபுக்கள், மதகுருமாரின் நலனைப் பாதுகாப்பதாக அமைந்திருந்தது. பாட்டாளிவர்க்கத்தைப் பொறுத்தவரையிலோ அல்லது ஜோர்ஜிய தேசத்தைப் பொறுத்தவரையில் மன்னராட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை.
உழைப்பாளிகளுக்கு நாடு இல்லை என்பது நீண்ட கால அரசியல் இலக்காகும். அந்த இலக்கை அடைய முன்னர் அதாவது முரண்பாடுகளை வெவ்வேறு தளத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும். அந்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளாமல் சமூகம் அடுத்த பாச்சலை மேற்கொள்ள முடியும். இதேபோல உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம் என்கின்ற போக்கும் உள்ளது. இது புகாரின் முன்வைத்த கருத்தாடலாகும். இவர்களைப் பொறுத்த வரையில் சமூகக் கட்டத்தினை அடையும் முன்னரே நிலைப்பாட்டை வந்தடைகின்றார்கள்.
குடியரசுவாதம், முதலாளித்துவப் போக்கு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாகும். கொலனித்துவ காலத்தில் எழுந்த தேசியவாதம் முதலாளித்துவ தேசியவாதமாகவ இருந்தது. அன்றைக் காலத்தில் மக்களை விழிப்பட்டிருந்தது. அதனையே அன்னியருக்கு எதிரான போராட்டத்தில் கட்சி பின்தொடர்ந்தது. (103/10)
உலகத்தின் போக்கை வெவ்வேறு கட்டமாக அணுகிட முடியும்.
ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ புரட்சியடைந்த காலகட்டத்தின் பின்னர் இரண்டாம் அகிலகத்தின் அரசியல் நிலைப்பாடுகள். அந்த நிலைப்பாடு எவ்வாறு புரட்சிப் போக்கை மாற்றியதை அறியமுடியும். 1885களில் பேர்லின் மாநாட்டில் ஆபிரிக்க கட்டத்தை வெவ்வேறு எல்லையாக பிரித்துக் கொண்டு கொலனித்துவ சுரண்டலை தொடர்ந்தன. (கொலனித்துவம் வெளியேறி பின்னரும் தமது பிரதிநிதிகளை (தரகு வர்க்கம்) வைத்து ஆட்சி செய்கின்றார்கள்.) சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் பாட்டாளி வர்க்க கடமையை நிலைவேற்றுவதை விட்டு தேசியவாதத்தை (11/4லெ) மாற்றீடு செய்தார்கள். 1889-1914 வரையில் புரட்சிகர போக்கை திசைமாற்றிக் கொண்டார்கள். அன்றைய ஏடுகள் சோசலிசக் கருத்துகளைக் கொண்டதாக இல்லை. சோசலிசக் கருத்துகளை இழிபடுத்தும் நிலைக்கு காரணமும் சமூக சனநாயகக் கட்சியே என்கின்றர் லெனின். அன்றையக் காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சிகள் வலிமையாக இருந்தது. பரீஸ் கம்யூன் புரட்சியை நசுக்கிய முதலாளித்துவ சக்திகளும் சேர்ந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டார்கள். பிற்போக்கு அரச அமைப்பு முறையை ஆதரித்து நின்றார்கள். ``அகிலத்தின் வீழ்ச்சி புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகளுக்குப் புண்படும் மானக்கேட்டை விளைத்துள்ளது.” (13/4லெ)
மக்கள் திரள் அமைப்பு
இன்றைய உலகப் போக்கு என்பது சந்தைக்காக நாடுகளை அடக்கி ஆழ்வது என்ற நிலையில் தான் தொடர்கின்றது. முன்னர் கூட்டாக சென்று நாடுகளை ஆக்கிரமித்தார்கள், குண்டுமழை பொழிந்தார்கள், ஆட்சியாளர்களை மாற்றினார்கள். அந்த பண்புருவம் இன்று மாறியுள்ளது. இன்று வெளிப்படையான பண்பு மாற்றம் திடீரென நடைபெறவில்லை. ஆனால் எப்பவும் அமெரிக்காதான் அனைத்து நடவடிக்கைகளில் முன்நிலை வகிக்கும். ஏதோ ஒன்றும் புதிதாக வெளிப்படவில்லை. வங்கிகள், தொழிற்துறை நிறுவனங்கள், மூலப்பொருளுக்கான போட்டி, குறைந்த கூலி-நுகர்வோர் சந்தை, தமக்குத் தேவையான ஆட்சியாளர்களை தெரிவு செய்வதாகும்.
இவற்றைச் சுற்றிய வலைப்பின்னல்கள் கொண்டதாகும். இந்த வலைப்பின்னல் தொடர்ச்சியாக சமூகத்தில் நிதியைக் கொண்டு கையாளப்படுவதாகும். இதற்கு மேட்டுக்குடிகள், கருத்துருவாக்கிகள், ஊடகங்கள் என வலைப்பின்னல் கொண்டது. சில விடயங்கள் தற்செயலானது என சாதாரண மக்களுக்கு தோற்றம் அளிக்கும். ஆனால் அவை உண்மை அல்ல. Ford Foundation, Epstein உருவாக்கிய வலைப்பின்னல், the International Visitor Leadership Program (IVLP) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்பது தொடர்ச்சியான வலைப்பின்னலை ஏற்படுத்தி வந்துள்ளது. இது பற்றி இணையத்தில் தேடினால் விபரங்கள் கிடைக்கும். சமூகத்தில் வளர்ந்து வரும் உயர்வர்க்கப் பிரிவினர் பிரபல்யத்திற்காக ஓடி அலைவர்கள் என்பது தனிப்பட்ட குணம் அல்ல. மாறாக வர்க்கத்தின் நிலைப்பாடு அவ்வாறு தான் அமைகின்றது. உயர் வர்க்கப் பிரிவினர் காலப் போக்கில் அதிகார வர்க்கமாகவோ, மேட்டுக்குடிகளாகவே உருவாகிட முடியும். இவ்வாறு உருவாகும் அதிகார வர்க்க, மேட்டுக்குடிகளை நோக்கி சர்வதேச வலைப்பின்னல் வலைவிரித்துக் கொண்டே இருக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்மூடிக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் ஆதரித்தன. ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் போது பிரித்தானிய ரொணி பிளையர் கூறிய பொய்களை பிற்காலத்தில் தான் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. யுத்தத்திற்கு எதிரானவர்கள் ஏகாதிபத்தியங்களின் பொய்களை அம்பலப்படுத்திய போது யுத்த வெறியே கோலோஞ்சியது. எந்த அரசியல் முடிவிற்குப் முன்னர் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் அறிவித்துவிட்டே எதனையும் செய்வார்கள். அதேவேளை அமெரிக்கா எடுக்கும் முடிவுகளுக்கும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளிப்பார்கள். ஆங்காங்கே சில விமர்சனம், முரண்பாடுகள் வந்தாலும் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
ஏகாதிபத்தியக் கட்டத்தில் நாடுகளின் இறைமை, தேசங்களின் ஆட்சியதிகாரத்திற்காக போராடங்கள் தவிர்க்க முடியாதவையாகும். பெரும்பான்மையான நாடுகளில் ஏகாதிபத்தியப் எதிர்ப்புணவு முடங்கியே உள்ளது. முதலாளித்துவ புரட்சி முழுமையடையான நாடுகளுக்காக கோட்பாட்டுப் பிரச்சனை இருந்து கொண்டே உள்ளது.
சட்டவிரோதமான அரசியலை மறுத்து நாடாளுமன்ற அரசியலை தேர்ந்தெடுத்தார்கள். இந்த அமைதிவாதப் போக்கை கொண்ட கட்சிகளாக உருவாகினர்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கட்டமைத்த புரட்சிகர அரசியல் தொடராது முதலாளித்துவ நலனுக்கு ஏற்ப அரசியலை கொண்டனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான் சோசலிசப் புரட்சி ஏற்படும் என்று கூறினார்கள். ஏன் நடைபெறவில்லை என்ற கேள்வி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. புரட்சிகர எழுச்சியைக் காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகக் கட்டத்தில் இருந்து புதிய சமூகக் கட்டத்தை லெனினால் தான் அடைய முடிந்தது. சமூக ஜனநாயகக் கட்சியானது இரண்டாம் அகிலம், பேபியன் கழகத்தின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் இருக்கின்றன. இந்த பிரிவினரே தாய்நாட்டைக் காப்போம் என உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தை திசை திருப்பினர். உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைத்து, தொடர்ச்சியான சந்தேகத்தை ஏற்படுத்தினர். முதலாம் உலகப் போர் என்பது ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவை என்பதும், அவை நாடுகளைப் பிடிக்கின்ற போராட்டமாக இருந்தது.


No comments:
Post a Comment