Popular Posts

Friday, 27 February 2026

jathi Jathindra ஒரு பதில் ..!!

 


jathi Jathindra ஒரு பதில் ..!!

 

தமிழ் சமூகமும் அரசியல் ஆய்வும்!!!

தமிழ் சமூகத்தில் முறையான உரையாடல் நடைபெறவில்லை என விமர்சனம் வந்து கொண்டு இருக்கின்றது. இதில் மார்க்சிய ஆய்வு உரையாடல் போக்கு வெகுவாக பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. அதுவும் 30- 40 வருடத்திற்கு முன்னர் படித்தவற்றையே ஒப்பிக்கும் இடதுசாரிகள் என்ற போர்வையில் உள்ளார்கள். இவை பற்றி இங்கு எழுதுவதில் பயனில்லை.

 

இதே போல வலதுசாரிய ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள்.

தீவிர வலதுசாரி எழுத்தாளர்களையும், தேசிய ஜனநாயகத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர்களின் எழுத்துகள் பற்றி இங்கு பார்க்கப்படுகின்றது. அரசியல் எழுதும் எழுத்தாளர்கள் இந்த இரண்டு வகைக்கு உட்பட்டே இருக்கின்றார்கள். இங்கு அனைவரையும் தமிழர்கள் என்ற வட்டத்தினுள் அணுகும் போது சிக்கல் நிறைந்ததாகவே வெளிப்படும்.

இன்றைய நிலையில் தேசிய ஜனநாயகத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர்களின் பணியும், அவசியமும் தேவையுள்ள காலமாகும். குறிப்பாக வலதுசாரிய எழுத்தாளர்கள் சாத்தியமான தீர்வையும் முன்வைக்கும் போக்கையும், இறைமையை விட்டுக் கொடுத்து சென்று விடும் படி கருத்துக் கூறுபவர்களாகவே இருக்கின்றார்கள்.

 

``பொறுப்புவாய்ந்த அரசியல் ஆய்வு முறையொன்றுதான்

(Responsible (conscientious method of) political analysis) இன்று ஈழத் தமிழ் சமூகத்திற்கு தேவை – எவர் எதனைக் கூறுகின்றார் என்பதை தள்ளிவிட்டு, ஒவ்வொன்றையும் சமூகப் பொறுப்புடனும், மனச்சாட்சியுடனும் ஆய்வு செய்யும் பார்வையொன்று தேவை. அதனையே நான் பொறுப்புணர்வுமிக்க அரசியல் ஆய்வு முறைமை என்று வரையறுக்கின்றேன். எனது அனுபவத்தில் என்னால் நிச்சயமாக கூற முடியும் அவ்வாறான ஆய்வுகள் யாழ் குடாநாட்டிலிருந்து அரிதாகவே வரும். விடயங்களை மனச்சாட்சியுடன் நோக்கும் அரசியல் பார்வை இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும், ஒவ்வொரு விடயங்களையும் அறிவுபூர்வமாக ஆராயும் தலைமுறையொன்று வெளியில் வர வேண்டும் - இல்லாவிட்டால் அனைத்தும் வீண்.#’’ (jathi Jathindra)

மனச்சாட்சி என்பது வர்க்கம் சார்ந்ததாகும். அது தனிமனிதர்களின் இருப்பு நிலையில் இருந்து எதனையும் படைத்துவிட முடியாது. யாழ் குடாநாடு மட்டும் தமிழ் மக்களின் அறிவுஜீவிகள் இருக்க வேண்டும் என்பதும் அரசியல் ரீதியாக தப்பெண்ணம் கொண்டதேயாகும். தமிழ் தேசம் என்ற அடிப்படையில் கருத்து எழுத வேண்டுமென்றால் அரசியல் விஞ்ஞானம் அவசியமாகும்.

இங்கு பலர் தமக்கு தெரிந்த விடயங்கள், அறிந்தவை, கலாசாலையில் கற்றவை, அரசியல் கட்சிகளில் கற்றுக் கொண்டவை என்பவையே அரசியல் விஞ்ஞானம் என்று நம்புகின்றார்கள். அரசியல் விஞ்ஞானமும் தமது புலனுக்கு உட்பட்டதே உண்மை என்று நம்புகின்றார்கள். தம்முடைய மூளைகளில் ஏற்படும் பிம்பங்களும், கருத்தமைவுகளுக்கு அப்பால் நிறையவே நடைபெறுகின்றது. அதாவது புலனறிவிற்கு அப்பால் இயங்கும் பொருள் இயக்கம், உற்பத்தி முறை எவை பற்றியும் தேவையற்றது என நம்புகின்றார்கள். சுருக்கமாக கூறுவது எனில் மனிதர்களின் அனுபவங்களின் வெளிப்பாடு என்று நம்புகின்றார்கள். தனிநபர்களின் எண்ணப் பாடு என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் உட்பட்டதை ஏற்றுக் கொள்வதில்லை.

அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

என்ற புரிதல் கொண்ட கருத்தாளர்கள் இருக்க வேண்டும். அதனை விடுத்து அனுபவாத விமர்சனம் (empirical criticism) என்ற  நேர்க்காட்சி வாத விமர்சனப் போக்கு என்பது முழுமையான ஆய்வு முறை இல்லை. உற்பத்தியும் மறுவுற்பத்தியும் சமூகத்தின் அவசியமான போக்காக இருக்கின்றது. இந்த பொருளாதார அமைப்பு என்ன? அது ஏற்படுத்தும் முரண்பாடுகள், விளைவுகள் பற்றிய புரிதல் கொண்டே ஆய்வுகள் அமையப்பெற வேண்டும்.

 


ஏழைத் தமிழ் மக்களை எவ்வாறு நிர்மூலமாக்குவது?

இந்த தலைப்பின் பின்னால் உள்ள அரசியலை உற்றுநோக்க வேண்டும். அபிவிருத்தி அரசியல் என்று 1980க்கு முதலும் அரசியல் செய்தார்கள். பின்னர் தமிழ் கட்சியில் இருந்து பிரிந்தும் அபிவிருத்தி அரசியல் செய்தார்கள். ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் அபிவிருத்தி அரசியல் என்று முன்னைய ஆயுத இயக்கத்தவர்கள் அரசியல் செய்தார்கள்.  அபிவிருத்தி அரசியல் என்று இன்று மட்டும் பேசப்படவில்லை. கடந்த 78 வருடமாக பேசப்பட்டு வருகின்ற விடயமாகும். அதிலும் குறிப்பாக 2009 க்குப் பின்னரும் அபிவிருத்தி அரசியல் எனப் பேசிக் கொண்டார்கள். அவைகள் தமிழர் தேசத்தினை பொருளாதார ரீதீயாக கட்ட முடிந்து?

யுத்தம் முடிந்த பின்னர் தமிழர் தேசத்திற்கான பொருளாதார வளர்ச்சி பற்றி அக்கறை காட்டவேண்டும். மீளக் கட்டமைப்பு பற்றி சிங்கள தேசம் கவனம் கொள்ளவில்லை. மாறாக நிகுநெகும திட்டத்தை நடைமுறைப்படுத்தவே கவனம் செலுத்தினர். இதேபோல முதலமைச்சர் நிதியம் மறுக்கப்பட்டது. பல பொருளாதார திட்டங்களுக்கு சிங்கள தேசம் அனுமதி கொடுக்கவில்லை. தேசம் என்பது இன்னொரு தேசத்தின் சேமிப்புச் சக்தியாக தொடர்வதை விளங்கிக் கொள்ள வேண்டும். (இதுவிரிவாக எனது நூலில் உள்ளதால் தவிர்க்கின்றேன்)

அபிவிருத்திக்கும் அரசியல் அதிகாரத்திற்குமான தொடர்பும் அதன் முக்கியத்துவதும் உள்ளது. ஒரு பக்கம் அபிவிருத்தி என்கின்றார்கள். அவ்வாறு அபிவிருத்தியை மாத்திரம் கவனம் கொள்ள வேண்டும், பொருளாதாரப் பிரச்சனை மாத்திரமே உள்ளது. அதனை தாமே செய்து விடமுடியும் என்கின்ற பண்ணையார் (jvp/npp) தனத்தில் இன்றைய போக்கு உள்ளது.

அரசியல் அதிகாரம் என்பது தேசத்தின் வளர்ச்சியை அடிப்படையில் அமைந்து. தேசமும் சுயமான வளர்ச்சியை ஏற்படும் இலக்கை கொண்டது. தனக்குத் தேவையான உற்பத்திச் சக்தியை வளர்த்துக் கொள்வது என்ற அடிப்படையாகும்.

இவைகள் பொதுப்புத்தியில் விளங்கிட முடியாது. அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கமும், சிங்கள பௌத்த பேரினவாதமும் கவனமாக இருக்கின்றார்கள். முன்னர் பசில் எவ்வாறு பண்ணையாராக செயற்பட்டாரே. அதற்கு ஈடாக இன்றைய ``முற்போக்கு” ஆட்சியாளரும் பண்ணையாராக உள்ளார்.

அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் மீது கைகாட்ட இவர்களால் முடிவதில்லை. இதன் பின்னால் ஆளும் வர்க்கத்தின், பெரும் அதிகார பீடங்களின் நலனும் வழிகாட்டலும் உள்ளது.

Rubio Marco ஒரு செவ்வியில் அணுஎரிசக்தி தேவையில்லை, அந்த நாட்டில் இயற்கை எரிசக்தி உள்ளது. இயற்கை எரிசக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று முடிவெடுக்கும் அதிகாரத்தின் பின்னால் உள்ள வர்க்கத்தின் நலன் உள்ளது. அவை இந்த ஆதிக்க சக்தியின் குரலாகவும் உள்ளாட்டில் ஒலிக்கும். அந்தச் சக்திகள் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களாக, அரசியல்வாதிகளாக, கருத்தாளர்களாக, படையில் உள்ள அதிகாரிகளாக இருப்பார்கள்.

 

Thimpu/வட்டுக்கோட்டை/ சமஸ்ரி/மக்கள் திரள் போராட்டம்

இவற்றின் மீதான சலிப்பைக் காட்டும் பந்தி எழுத்தாளர் முன்வைக்கும் அரசியல் என்ன? போராட்டம் என்பது தொடர்ச்சியானது. சமூகம் ஒரே இடத்தில் தரிந்து நிற்பதில்லை. சமூகம் வெவ்வேறு கட்டத்தை நோக்கி நகரும். திம்பு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய தேவை இன்று உள்ளது.

சமூகக் கட்டத்தை கடப்பது போராட்டத்தின் ஊடாகவே. அந்தப் போராட்டம் ஆயுதமாகவோ/இரத்தம் சிந்தியதாகவோ அல்லது இரத்தம் சிந்தாப் போராட்டமாகவோ இருக்க முடியும்.

இரத்தம் சிந்தும் போராட்டம் வீழ்த்தப்பட்டது. அதன் பொருள் என்பது இலக்கை அடைவதற்கான எந்தப் போராட்டங்களும் இருக்கக் கூடாது என்பதா? ஆயுதமே வேண்டாமல் என்றால் உலகில் உள்ள ஆதிக்க சக்திகள் ஆயுதம் கொண்டு தான் அடக்குகின்றார்கள். பலாத்காரத்தை அரசு மட்டுமே தனியுரிமை கொண்டுள்ளது. அதிகாரம் என்ற தனியுரிமையை கொண்டு மக்களை அடக்குகின்றது. அரசு கொண்ட அதிகாரத்தின் தனியுரிமையின் வெளிப்பாடு தான் ஆயுதப் போராட்டம்.

அதற்கு முதல் அகிம்சை வழியில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஏமாற்றம், அடக்குமுறை, தெற்கில் நடந்த இனவழிப்பு ஆயுதப் போராட்ட பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது.  எனினும் வட்டுக்கோட்டை/ திம்பு இவை இரண்டும் அரசு பற்றிய பிரக்ஞை கொண்டதாகும். தேசத்திற்கான சுயநிர்ணயம் என்பது அரசு பற்றிய பிரச்சனையே. அரசு வடிவத்தில் ஒரு அரைவடிவம் சமஸ்ரி. அரசு முழுமையான வடிவம் இருக்கின்ற போது சுயநிர்ணயம் கொண்டதாகவும், இறைமை கொண்டதாகவும் அமையும். இந்த விடயத்தில் த.தே.ம.முன்னணி சரியான நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அரசு வடிவம் பற்றிய பிரச்சனை ஆயுதப் போராட்டத்துடன் நின்றுவிடுவதில்லை. அதனை அடைய மக்கள் திரள் போராட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மக்கள் திரள் போராட்டங்களின் ஊடாகவே தொடர முடியும். மக்கள் திரள் போராட்டங்களையும், மக்களை அணிதிரட்டுவதிலும் கட்சிகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மையே. ஆனால் சிலவருட இடைவெளியில் நடைபெறும் போராட்டங்களை மலினப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

அரசு பற்றிய பிரக்ஞை கொண்ட அமைப்பின் செயற்பாட்டை மலினப்படுத்தும் பந்தி எழுத்தாளருக்கு தேவை இருக்கலாம். இராசதந்திரி (தூதுவர்) மட்டத்தில் பாராட்டைப் பெறலாம். தமிழ் மக்களின் நலனில் இருந்து எழுதுகள் படைக்கப்பட வேண்டுமா? தூதரகங்களின் தேவை கருதி எழுத வேண்டுமா? ஆமாம் குறிப்பிட்ட நபர் இசுரேல் சென்றதும், அங்கு பயிற்சி பெற்றதும் கருத்துருவாக்கம் செய்யவே. அவ்வாறான ஒரு நபர் கருத்து எழுதுகின்ற போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  தூதரகங்கள் வரவேற்கின்றது என்றால் பந்தி எழுத்தாளர் யாருக்கு நேர்மையாக இருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.

 

NGO network 

வலைப்பின்னல் தொடர்ச்சியாக சமூகத்தில் நிதியைக் கொண்டு கையாளப்படுவதாகும். இதற்கு மேட்டுக்குடிகள், கருத்துருவாக்கிகள், ஊடகங்கள் என வலைப்பின்னல் கொண்டது. சில விடயங்கள் தற்செயலானது என சாதாரண மக்களுக்கு தோற்றம் அளிக்கும். ஆனால் அவை உண்மை அல்ல. Ford Foundation, Epstein உருவாக்கிய வலைப்பின்னல், the International Visitor Leadership Program (IVLP) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்பது தொடர்ச்சியான வலைப்பின்னலை ஏற்படுத்தி வந்துள்ளது. இது பற்றி இணையத்தில் தேடினால் விபரங்கள் கிடைக்கும். சமூகத்தில் வளர்ந்து வரும் உயர்வர்க்கப் பிரிவினர் பிரபல்யத்திற்காக ஓடி அலைவர்கள் என்பது தனிப்பட்ட குணம் அல்ல. மாறாக வர்க்கத்தின் நிலைப்பாடு அவ்வாறு தான் அமைகின்றது. உயர் வர்க்கப் பிரிவினர் காலப் போக்கில் அதிகார வர்க்கமாகவோ, மேட்டுக்குடிகளாகவே உருவாகிட முடியும். இவ்வாறு உருவாகும் அதிகார வர்க்க, மேட்டுக்குடிகளை நோக்கி சர்வதேச வலைப்பின்னல் வலைவிரித்துக் கொண்டே இருக்கும்.

 

தமிழர் என்பதற்காக தமிழ் தேசத்தின் நலனுக்காக எழுதுவார்கள் என்பதில்லை. வலதுசாரி எழுத்தாளர்கள், ஏக்கராச்சிய இடதுசாரிப் பிரிவு இவர்களுக்கு அப்பால் தேசிய ஜனநாயக சக்தியை தமிழ் மக்கள் கவனம் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment